தலைப் பேன் அதைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை
பிள்ளைகளின் தலைகளில் பேன் காணும் பெற்றோர் அதிர்ச்சியடைகிறார்கள், வெட்கப்படுகிறார்கள், குற்றஉணர்வும் கொள்கிறார்கள். “அது எனக்கு ஒரே சங்கடமாக இருக்கிறது,” என்றாள் ஒரு தாய், “ஏனென்றால் உங்களிடம் சுத்தம் இல்லை என்று மற்றவர்கள் நினைத்துவிடுகிறார்கள்.”
ஆனால் உங்களுடைய வீட்டாரின் தலைகளில் பேன் காணப்படுவதுதானே உங்களுக்குச் சங்கடமாக இருக்கவேண்டுமா?
மூன்று வகைகள்
பேன்கள் சிறிய, சிறகற்ற பூச்சிகள். அவை பொதுவாக எள்ளளவாக, ஓர் அங்குலத்தில் பதினாறில் ஒரு பாகமானவை. அவை மங்கிய நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரையிலும் காணப்படுகின்றன. தனிப்பட்ட விதத்தில் நல்ல சுத்தத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு மட்டுமே பேன் உண்டாகிறது என்ற தவறான எண்ணம்தான் அவற்றைக் கொண்டிருப்பவர்களுக்குக் கெட்டப் பெயரை சம்பந்தப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பேன்கள் சுத்தமான சூழலைத்தான் விரும்புகின்றன. எனவே தவறாமல் குளிப்பவர்களுக்கும்கூட பேன் உண்டாகலாம்.
தலையில் உண்டாகும் பேனைத் தவிர மனிதனில் இன்னும் இரண்டு வகைப் பேன்கள் உண்டாகின்றன: உடல் பேன் மற்றும் இனஉறுப்புப் பேன். இன உறுப்புப் பேன் பாலுறுப்பு மூலம் கடத்தப்படுகிறது. இவை இனஉறுப்பு பகுதிகளிலும் அக்குளிலும் காணப்படும் முடிகளிலும் தாடி, மீசைகளிலும், சில சமயங்களில் கண் புருவங்களிலும் காணப்படுகின்றன. சற்று சிறியவையாயும் சிறிய நண்டு போன்ற உருவிலும் இருப்பதால் நண்டு பேன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உடற்பேன், தலைப்பேன் மற்றும் இனஉறுப்புப் பேன்களைப் போன்று மனிதர் மேல் வாழ்வதில்லை. அவை சருமத்துக்கு நெருங்க இருக்கும் உடைகளில் வாழ்பவை. உணவுக்காக உடற்பகுதிக்கு நகர்ந்து செல்கின்றன. உடற்பேன்கள் மக்கள் நெருக்கடி மிகுந்த அசுத்தமான சூழ்நிலைகளில் அதிகமாக காணப்படுகின்றன. கடந்த காலங்களில் பல நோய்களைக் கடத்தும் ஏதுக்களாக இருந்திருக்கின்றன. உதாரணமாக டைஃபஸ் ஜுரம், ட்ரென்ச் ஜுரம், மீண்டும் வரும் ஜுரம் உட்பட பல விஷ ஜுரங்களும் நோய்களும் தொற்றுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த நோய்கள் இன்று இப்பேன்களால் கடத்தப்படுவது அரிது.
இது எந்தளவுக்குப் பரவியிருக்கும் ஒரு பிரச்னை?
ஆர்க்கைவ்ஸ் ஆஃப் டெர்மடாலஜி என்ற மருத்துவ பத்திரிகை பின்வருமாறு சொன்னது: “ஐக்கிய மாகாணங்களில் பெடிக்குலோசிஸ் [தலைப்பேன்] எங்கும் பரவிய ஒரு பெரும் பிரச்னையாகியிருக்கிறது, சில பிராந்தியங்களில் அது கொள்ளைநோயளவில் பரவியிருக்கிறது.” ஐக்கிய மாகாணங்களில் ஆண்டுதோறும் அறுபது இலட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.
ஐ.மா. நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள் நடத்திய ஆய்வுகளின்படி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மாணவர்களுக்குத் தலைப்பேன் இருந்தது. உண்மையென்னவெனில், மியாமி பள்ளி மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரசிரியர் டேவிட் டேப்லின் கூறுகிறார்: “சில பகுதிகளில் இது 40 சதவீதமாக உயர்ந்து காணப்படுகிறது.”
என்றபோதிலும், இந்தளவுக்கு அதிகமாகக் காணப்படும் இந்தப் பேன் பீடிப்பு ஐக்கிய மாகாணங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. டிஸ்கவர் என்ற அறிவியல் பத்திரிகை இப்படியாக அறிக்கைச் செய்கிறது: “பள்ளிகளிலுள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமான பிள்ளைகள் தலைப்பேனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கானடா, சில்லி, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அறிக்கைகள் வருகின்றன.”
அவை எவ்வாறு கடத்தப்படுகின்றன?
பேன் பறக்கவோ அல்லது தாவிடவோ முடியாததால், அவை ஏறியிருக்கும் நபருடன் கொள்ளும் நேரடியான தொடர்பு மூலமே, பெரும்பாலும் தலைக்குத் தலை தொடர்பின் மூலமே கடத்தப்படுகின்றன. பென்சில்வேனியா வகுப்பறைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இம்முறையில்தான், 73 சதவீதத்தினருக்குப் பேன்கள் கடத்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்பட்டது. இந்த எண்ணிக்கை சற்று அதிகமானது என்று சிலர் உணருகின்றனர். நியு யார்க் சுகாதார துறையின் விலங்கினம் மூலம் கடத்தப்படும் நோய்த் தடுப்புத் திட்டத்தின் இயக்குநர் டெனிஸ் வைட் பின்வருமாறு கூறுகிறார்: “பேன் கடத்தப்படும் அனைத்து முறைகளிலும் 90 சதவீதத்திற்கு நேரடியான தொடர்பே காரணம் என்று ஆய்வு காண்பிக்கிறது.”
பேன் இருக்கும் ஒருவருடைய தலையிலிருந்து உங்கள் தலைக்குப் பேன் கடத்தப்படும் மற்ற வழிகள் யாதெனில், மற்றவர்களுடைய சீப்பு, தலைக்குட்டை, தொப்பி, தலைப்பட்டி, துவால், தலையில் மாட்டப்படும் ஸ்டீரியோ ஃபோன்கள், நீச்சல் தொப்பிகள் அல்லது மற்ற தனிப்பட்ட பொருட்கள் மூலமாகும். இதற்குக் காரணம், பேன்கள் ஒரு நபரைவிட்டு 20 மணிநேரத்துக்கு (48 மணிநேரத்துக்கு என்று சிலர் சொல்லுகின்றனர்) உயிரோடிருக்கக்கூடியவை.
பேன்கள் இந்தளவுக்குப் பரவுவதற்குக் காரணம், அநேகப் பெற்றோர் இந்தப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை. நேஷனல் பெடிக்குலோசிஸ் அசோசியேஷனின் செயல் இயக்குநர் டெபோரா ஆல்ட்ஷுலர் கூறுவதாவது: “தங்களுடைய பிள்ளைகளின் தலைகளில் ‘ஈர்களைக்’ [பேனின் முட்டைகள்] கவனித்துப் போக்கிட மக்கள் முயற்சி செய்யவும் நேரம் எடுத்துக்கொள்ளவும் அதிக வேலையாக இருக்கிறார்கள்.” வருத்தத்துக்குரிய உண்மை என்னவென்றால், 1980-களில் பேன்கள் பாதிப்புக்கு காரணம் அறியாமையும் அசட்டையுமே.
உங்களுடைய குடும்பத்தைப் பாதுகாத்தல்
பேன் இருக்கிறது என்பதற்குரிய அடைப்படை அறிகுறி அரிப்பு ஏற்படுவதாகும். தலைப்பேன் கடிப்பது தலையில் அரிப்பை ஏற்படுத்தி சில சமயங்களில் தலையின் மேல் தோல் சிவந்துவிடும். உங்களுடைய பிள்ளை தன் தலையை அடிக்கடி சொரிவதை நீங்கள் கண்டால், பேன் ஏறியிருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. மிகக் கவனமாகப் பார்ப்பதற்கு நல்ல வெளிச்சமும் பூதக்கண்ணாடியும் தேவைப்படுகிறது. பேன் வேகமாக நகர்ந்துவிடக்கூடியதும் பார்வையிலிருந்து மறைந்துவிடக்கூடியதுமாய் இருப்பதால், அவற்றின் முட்டைக்காக [ஈர்களுக்காக] தேடுங்கள். அவை மண்டைக்கு அண்மையிலுள்ள முடியின் பகுதியில் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கும். அந்த ஈர்கள் மங்கிய மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரையாக இருக்கின்றன. தலையில் ஈர்கள் நிரம்பியிருக்கின்றன என்று பொதுவாகக் கணிக்கப்படும் 12 நிலைமைகளைக் குறித்து சருமநோய் நிபுணர்கள் அடையாளங்காட்டியிருக்கின்றனர். எனவே, உங்கள் தலையை நன்கு சோதித்துப்பார்க்க பூதக்கண்ணாடியைப் பயன்படுத்துங்கள். காதுகளைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியும் கவனமாகப் பாருங்கள்.
பேன்களோ அல்லது ஈர்களோ காணப்பட்டால் விசேஷமான ஷாம்புக்களை அல்லது தலைக்குப் பயன்படுத்தும் மருந்துகளை உபயோகியுங்கள், அவைப் பேன்களைக் கொன்றுவிடும். அவை பரவுவதைத் தடுக்க, பேன் ஏறியிருக்கும் எல்லாருமே, அந்தச் சிகிச்சையை ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னால் முழு குடும்பத்தையும் பரிசோதியுங்கள்.
பேன் மருந்துகள் பொதுவாக முடியில் பற்றிக்கொண்டிருக்கும் ஈர்களைக் கொல்வதில்லை. எஞ்சியிருக்கும் முட்டைகளுக்குப் பொறித்திட ஏழு முதல் பத்து நாட்கள் தேவைப்படக்கூடும். எனவே எஞ்சிய ஈர்களைக் கொல்ல இரண்டாவது படி சிகிச்சைத் தேவைப்படலாம். ஆனால் ஓர் எச்சரிப்பு: எல்லாப் பேன் மருந்துகளுமே, சிறிதளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்தவையாதலால், தவறாகப் பயன்படுத்தப்பட்டால் பயங்கரமான பக்கப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே பேன் மருந்து தயாரிப்பாளர்கள் கொடுக்கும் வழிமுறைகளையும் அறிவுரைகளையும் கவனமாகப் பின்பற்றுங்கள்.
நீங்கள் வாழும் பகுதியில் பேன் மருந்துகள் கிடைக்கப்பெறாவிட்டால், மாற்றுச் சிகிச்சை முறைகளைக் கையாளலாம். ஈர்களை எடுத்துவிட பேன் சீப்புகளைப் பயன்படுத்தும்படி பல நிபுணர்கள் சிபாரிசு செய்கின்றனர். சரும நோய் மருத்துவ சிகிச்சை: நோய்க் கணிப்புக்கும் சிகிச்சைக்குமான ஒரு வண்ண வழிகாட்டி மருத்துவ புத்தகம் கூடுதலாக கொடுக்கும் ஆலோசனை பின்வருமாறு: “ஈர்களை முடியுடன் பிணைத்திருக்கும் அந்தப் பசை, தலைமுடியில் 15 நிமிடங்கள் தேய்த்துவிடப்படும் காடி நீர்க்கலவையில் கரைந்துவிடக்கூடும்.”
அதைவிட மிகத் திறமையாகச் செயல்படக்கூடிய முறைதான் மொட்டையடித்தல். இன்னும் சிலர் மண்ணெண்ணையைத் தலையில் 15 முதல் 20 நிமிடத்துக்குத் தேய்ப்பது பேன்களையும் ஈர்களையும் கொன்றுவிடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் மண்ணெண்ணை உடலரிப்பை ஏற்படுத்தக்கூடும், விசேஷமாக கண்களில் பட்டுவிட்டால் அதிக வேதனையையும் ஏற்படுத்தக்கூடும், எனவே கவனம் தேவை. மண்ணெண்ணை சுவாசிக்கப்பட்டாலும் விஷம், அதுவும் நெருப்புக்குப் பக்கத்திலிருந்தால் தீ பற்றிக்கொள்ளும்.
படுக்கை, உடை மற்றும் தனிப்பட்ட பொருட்களும் சுத்தம்படுத்தும் முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவற்றை துவைத்து பேன்களையும் ஈர்களையும் கொல்லுவதற்குக் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது வெயிலில் அல்லது துணிதுவைக்கும் இயந்திரத்தின் உஷ்ணப்பகுதியில் உலறவிடுங்கள். காற்றடைத்த படுக்கைகள், நாற்காலிகள் மற்றும் மற்ற பொருட்கள் முற்றிலும் பேன்களை நீக்க கழுவமுடியாதவைகள். சிகிச்சை என்பது சிரமத்தை உட்படுத்துகிறது என்றாலும் உங்கள் குடும்பத்தில் பேன் குடியேற்றம் தொடருவதை தடை செய்வது அதிக அவசியம்.
பேன் உண்டாகாமலிருக்கச் செய்வது கூடாத காரியம் என்றாலும் சில சாதாரண வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதை வெகுவாக தவிர்க்கலாம். ஈர்களை எளிதில் கடத்தக்கூடிய தலைச்சீப்புகளை, புருசுகளை மற்றும் சில தனிப்பட்ட பொருட்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். கூடுமானவரை உங்கள் பிள்ளைகளைத் தனித்தனி படுக்கைகளில் உறங்கச் செய்யுங்கள். நீண்ட கேசத்தை ஜடையாகப் பின்னிக்கொள்வது அல்லது குதிரைவாலாகக் கட்டிக்கொள்வது தலையோடு தலை தொடர்புக் கொள்வதைத் தவிர்த்திடும். கடைசியில் உங்கள் பிள்ளையின் தலையில் பேன் உண்டானால், குழம்பிட வேண்டம். பேன் பிடிப்பது ஒரு கவலைக்குரிய நோய் அல்ல, அது பொதுவாக இருக்கும் ஒன்று, நகரில் நன்கு காக்கப்படும் இரகசியங்களில் ஒன்று. (g89 8/22)
[பக்கம் 28-ன் பெட்டி]
ஒரு பழங்காலப் பிரச்னை
தலைப்பேன்கள் மனிதரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாதித்து வந்திருக்கின்றன. நவம்பர் 15, 1988 தி மெடிக்கல் போஸ்ட் அறிக்கை செய்வதாவது: “எகிப்திய மம்மிகள், பெருவிலிருந்து வந்த கொலம்பிய இந்தியருக்கு முற்பட்டவர்கள், மற்றும் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வந்த சரித்திரத்துக்கு முன்னான இந்தியர்களின் கேசத்தில் பேன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
“இப்பொழுதுபோலவே அப்பொழுதும் பேன்கள் அரச பரம்பரை, அந்தஸ்து அல்லது மதம் ஆகியவற்றை மதித்து செயல்பட்டதில்லை.
“ஏரோதின் அரண்மனையிலிருந்தும், மசாதாவைச் சுற்றியமைந்த பூர்வீகக் குடியிருப்புகளிலிருந்தும், பைபிளின் மிகப் பழமையான சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் குகைகளிலிருந்தும் கிடைத்த சீப்புகளிலும் கேசத்திலும் அவை காணப்பட்டன.”
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட ஈர் எடுக்கும் பேன் சீப்புகள் இன்று பயன்படுத்தப்படுவது போன்று இருக்கிறது. அந்தச் சீப்புகள் பொதுவாக மரக்கட்டையில் செய்யப்பட்டன. ஆனால் மெகிதோவிலுள்ள பூர்வீக அரண்மனையில் தந்தச் சீப்புகள் காணப்பட்டன. அருங்காட்சியகங்களில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் ஈர் சீப்புகள் நெருங்க ஆராய்ந்து பார்க்கப்பட்டபோது, அவற்றில் அநேக பேன்களும் ஈர்களும் காணப்பட்டன.
எபிரெய பல்கலைக்கழக ஹதாசா மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் கோஸ்டா முக்குவாகுலு கூறினார்: “சீப்புகளில் காணப்பட்ட பேன்கள் மற்றும் ஈர்களின் எண்ணிக்கையை கவனிக்குமிடத்து அவை இவற்றைப் போக்குவதற்கான மிகத் திறம்பட்ட ஏதுக்களாக இருந்தன.”
[பக்கம் 29-ன் படம்]
தலைப்பேன் (பெரிதாக்கப்பட்ட படம்)
[படத்திற்கான நன்றி]
Photo by courtesy of Beecham Products U.S.A.