இளைஞர் கேட்கின்றனர் . . .
என் உடலுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது?
அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் உங்களுடைய உடலில் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
அனால் இப்போது அவைகள் அதிசயிக்கத்தக்கவையாய் தோன்றாது. உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருப்பவைகளைப் பார்த்து நீங்கள் குழப்பமடைந்தவர்களாக, சங்கோஜப்படுகிறவர்களாக அல்லது திகிலடைந்தவர்களாகவுங்கூட ஒருவேளை உணரலாம். “நான் அதற்கு தயாராயில்லை,” என்று ஒரு பெண் சொன்னாள். “ஓ, இது எனக்கு ஏற்பட ஆரம்பிக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன்.” “நான் இயல்பான நிலையில் இகுக்கிறேனா அல்லது விசித்திரமாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு வயது 13, என்னுடைய உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன, நான் சில சமயங்களில் தனிமையாகவும் வித்தியாசமாகவும் உணருகிறேன், என்னைப் பார்த்து யாராவது கேலி செய்யப் போகிறார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”
நீங்கள் இவ்வாறு உணருவது புரிந்து கொள்ளத்தக்கதே. “என் உடல் பித்துப்பிடிக்க ஆரம்பித்தது,” என்று ஒரு பருவ வயது பெண் இக்காலப் பகுதியை விவரித்த அப்படிப்பட்ட காலப் பகுதியைத் தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால் அப்போது “பித்து” பிடித்தது போல் தோன்றிய அக்காலப் பகுதி உண்மையில் உங்களை ஒரு பிள்ளைப்பருவத்திலிருந்து ஒரு பெரியவனாக மாற்றும் ஒரு ஒழுங்கான வளர்ச்சியாகும். அது பூப்புப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இப்பெயர் பயமூட்டுவது போல் தொனித்தாலும், பூப்புப்பருவம் என்பது ஏதோவொரு வியாதியல்ல. மேலும் நீங்கள் மட்டும்தான் முதலாவதாக இதை அனுபவிக்கவில்லை. உங்களுடைய தாயும், தகப்பனும் இதை அனுபவித்திருக்கின்றனர். உங்களுடைய பள்ளி தோழர்களும் உங்கள் வயதையுடைய மற்ற நண்பர்களும் ஒருவேளை இதை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று நிச்சயமாயிருங்கள்.
ஆனால், உங்களுடைய உடலை மேற்கொள்ளும் இந்த விசித்திரமான வளர்ச்சி என்ன?
பூப்புப் பருவத்தின் வேதியியல்
பன்னிரண்டு வயதை அடைந்த பிறகு “இயேசுவானவர் . . . வளர்த்தியிலும் . . . அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” (லூக்கா 2:52) ஆம், இயேசு கிறிஸ்துவும்கூட பூப்புப் பருவத்தை அனுபவித்தார். பூப்புப் பருவத்தின் போது, சரீரம் படிப்படியாக வளர்ச்சியடையும் ஒரு காலப்பகுதியை நீங்கள் அனுபவிப்பீர்கள். எது இந்த வளர்ச்சி ஏற்படும்படிச் செய்கிறது என்பது ஒரு மெய்யான புதிராக, ஒரு அற்புதமாக இருக்கிறது! நிலத்தில் விதையை விதைத்த ஒரு மனுஷனைப் பற்றி இயேசு சொன்ன உவமையைப் பற்றி நினைப்பூட்டப்படுகிறோம். “அவனுக்குத் தெரியாத விதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது,” என்று இயேசு சொன்னார். (மாற்கு 4:27) அதே போன்று பூப்புப் பருவத்தின் போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மருத்துவர்கள் நமக்கு ஒரு தோரயமான சுருக்கத்தை மட்டும்தான் கொடுக்க முடியும்.
சுமார் 9 வயதிலிருந்து 16 வயதுக்கு இடையே உள்ள காலப்பகுதியில் பூப்புப் பருவம் ஆரம்பிக்கிறது. (இந்த வயது நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது, பெண்களுக்கு இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து விடுகிறது.) உங்களுடைய வாய்க்கு மேல் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி என்றழைக்கப்படும் ஒரு சிறிய சுரப்பி உங்களுடைய மூளை தொடர்பு படுத்துவதன் மூலம் வியக்கத்தக்க எதிர்விளைவு உண்டாக்கும் சங்கிலித் தொடரான விளைவுகளை ஆரம்பிக்கிறது. இயக்கு நீர் என்றழைக்கப்படும் வேதியியல் சார்ந்த தகவல்களை உருவாக்குவதன் மூலம் பிட்யூட்டரி சுரப்பி பிரதிபலிக்கிறது. இவைகள் உங்களுடைய உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தின் வழியாய் நீந்திச் சென்று இன்னும் மற்ற இயக்கு நீர்களை உற்பத்தி செய்ய ஆரம்பிப்பதற்கு உங்களுடைய இனப் பெருக்க உறுப்புக்களுக்கு செய்தி அனுப்புகிறது. ஒரு பையனின் விதை டெஸ்டோஸ்டெரோன் போன்ற ஆண் இயக்குநீர்களை முக்கியமாக உற்பத்தி செய்கிறது; ஒரு பெண்ணின் கருப்பை எஸ்ட்ரோஜன் போன்ற பெண் இயக்குநீர்களை உற்பத்தி செய்கிறது.
இப்படிப்பட்ட இயக்குநீர்கள், நீங்கள் தோற்றமளிக்கும் விதத்தை மாற்ற ஆரம்பிப்பதற்கு இப்போது இன்னும் மற்ற சுரப்பிகளுக்கும் உறுப்புகளுக்கும் செய்தி அனுப்புகிறது.
பெண்கள் அனுபவிக்கும் மாற்றங்கள்
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுடைய மார்புகள் படிப்படியாக பெரிதாக ஆவதை நீங்கள் முதலாவதாக ஒருவேளை கவனிப்பீர்கள். உங்களுடைய பால் பொடுக்கும் சுரப்பிகள் வளர்ச்சியடைவதற்கு உங்களுடைய இயக்குநீர்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. (இப்படிப்பட்ட பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் திறனை அளிக்கிறது.) உங்களுடைய இயக்குநீர்கள் கொழுப்பு உற்பத்தி செய்வதையும் செயல்படுத்துகின்றன, அது உங்களுடைய மார்புகளுக்கு அதன் வடிவத்தைக் கொடுக்கிறது. உங்களுடைய இடுப்புகள், தொடகள், பிட்டங்கள் ஆகியவைகளிலும் கொழுப்பு சேமித்து வைக்கப்படும். உங்களுடைய எடை அதிகரிக்கும். நீங்கள் திடீரென வேகமாக வளர்ச்சியடையலாம்.
அநேக பெண்கள் இப்படிப்பட்ட சரீர மாற்றங்களை வரவேற்ற போதிலும், எல்லாப் பெண்களும் அவைகளில் எல்லாவற்றையும் வரவேற்பதில்லை. உதாரணமாக, உங்களுடைய கைகள், கால்கள், கைகளுக்குக் கீழே இருக்கும் முடி அடர்த்தியாகவும், கறுப்பாகவும் ஆகலாம். இப்போது, சில தேசங்களில், உடலில் இருக்கும் அப்படிப்பட்ட முடி நாகரிகமற்றதாகவே அல்லது பெண்ணியல்பற்றதாகவே கருதப்படலாம். நாகரிமான பாணி எப்படியிருந்தாலும், நீங்கள் பெண்மையை நோக்கி வளருகிறீர்கள் என்பதற்கு இது ஓர் ஆரோக்கியமான அடையாளமாக இருக்கிறது.
உங்களுடைய வியர்வை சுரப்பிகள் அதிகமாக வேலை செய்வது மற்றொரு வரவேற்கத்தகாத மாற்றம்—நீங்கள் அகிமாக வியர்க்க ஆரம்பிப்பீர்கள். அதோடு சேர்ந்து வரும் வாடை உங்களை சங்கோஜப்படச் செய்யலாம். ஆனால், நீங்கள் அடிக்கடி குளித்து சுத்தமான உடை அணிந்தால், அப்படிப்பட்ட பிரச்னைகள் இருக்காது. சில இளைஞர்கள் அப்படிப்பட்ட வாடையை அகற்றும் பொருட்களை உபயோகிக்கின்றனர்.
தனிப்பட்ட வளர்ச்சியில் உட்பட்டிருக்கும் ஒரு காரியம் உங்களுடைய பிறப்புறுப்பு இருக்கும் இடத்தைச் சுற்றி மூடி வளருவது ஆகும். இது பூப்புப்பருவ முடி என்றழைக்கப்படுகிறது. இதைக் குறித்து நீங்கள் முன்னமே அறியாதிருந்தால், நீங்கள் அதைக் கண்டு சிறிது பயப்படலாம். ஆனால், அது இயல்பானதுதான். அதைக் குறித்து சங்கோஜப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை.
“பருவ வயதினர்களுக்கிடையே இருக்கும் முதலாவது கவலை [தோற்றம்]—தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என்று புதிய பருவவயது உடல் நூல் (The New Teenage Body Book) அழைத்தது. பூப்புப்பருவம் இந்தப் பிரச்னையைக் கூட ஆரம்பித்து வைக்கலாம். உங்களுடைய உடல் வேதியியலின் மாற்றங்கள் எண்ணெய் தோய்ந்த தோல் ஏற்படச் செய்யும். பருக்களும், கறுப்பு வகை பருக்களும் முளைத்திடும். (ஓர் ஆய்வின்படி, பருவ வயதினர்களில் ஏறக்குறைய 90 சதவீதத்தினருக்கு முகப்பரு பிரச்னைகள் தொல்லைப்படுத்தியது.) தோல நன்றாகக் கவனித்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம்.—“என்றுடைய முகப்பருக்களைக் குறித்து நான் ஏதாவது செய்ய முடியுமா?” பிப்ரவரி 22, 1987 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் தோன்றும் கட்டுரையைப் பாருங்கள்.
பையன்கள் அனுபவிக்கும் மாற்றங்கள்
நீங்கள் ஒரு பையனாக இருந்தால், பூப்புப் பருவத்தின் ஆரம்ப பாதிப்புகள், ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் போல் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. உங்களுடைய பிறப்பு உறுப்பு அமைப்பு செயல்படத் தொடங்குகையில், உங்களுடைய பிறப்புறுப்புகள் படிப்படியாக பெரிதாக ஆகின்றன. உங்களுடைய பிறப்புறுப்புகளைச் சுற்றி முடி வளர ஆரம்பிக்கிறது. இதுவும் இயல்பாக நிகழக்கூடியதே.
அதே சமயத்தில், நீங்கள் திடீரென வேகமாக வளரலாம். கொழுப்பு இழைமமும், தசை இழைமமும், உங்களுடைய உடலோடு கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. நீங்கள் பெரியவர்ளாகவும், பலமுள்ளவர்களாகவும், ஆகிறீர்கள், உங்களுடைய தோள்கள் அகலமாக ஆகின்றன, உங்களுடைய உடலமைப்பு படிப்படியாக மனிதனைப் போன்று தோற்றமளிக்க ஆரம்பிக்கிறது.
உங்களுடைய கால்கள், மார்பு, முகம், மேலும் உங்கள் கைகளுக்குக் கீழ் முடி வளருவது மற்றொரு அக்கறைக்குரிய மாற்றமாகும். இதுவுங்கூட டெஸ்டோஸ்டெரோன் என்ற இயக்குநீரால் தூண்டுவிக்கப்படுகிறது. ரூத் பெல் என்பரால் எழுதப்பட்ட மாறுகின்ற உடல்கள், மாறுகின்ற வாழ்க்கைகள் (Changing Bodies, Changing Lives) என்ற புத்தகம், ஒரு இளைஞன் இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிடுகிறது: “நான் பதினான்கு வயதாக இருந்த போது, என்னுடைய மேல் உதட்டின்மீது, இந்த அழுக்குத் தடத்தோடு சுற்றிக் கொண்டிருந்தேன். அதைக் கழுவி எடுக்க நான் தொடர்ந்து முயற்சி செய்தேன், ஆனால் அது அப்படியே இருந்தது. பிறகு நான் அதை நன்றாக உற்றுப் பார்த்தபோது, அது மீசை என்று கண்டுபிடித்தேன்.”
உங்களுடைய உடலில் எவ்வளவு முடி இருக்கிறது என்பதற்கும் நீங்கள் எவ்வளவு ஆண்மையுடையவராக இருக்கிறீர்கள் என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் அதைச் சொன்னால், உங்களுடைய தந்தைக்கு முடியால் மூடிய மார்பு இருந்தால், உங்களுக்கும் அப்படிப்பட்ட மார்பு இருப்பது சாத்தியம். அதே போன்று தான் முகத்தில் இருக்கும் முடியும்கூட, பருவ வயதின் பிற்பட்ட வருடங்களில் அல்லது 20-வது வயது ஆரம்ப வருடங்களில் தான் நீங்கள் ஒழுங்காகச் சவரம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கும்.
நீங்கள் சந்தோஷப்பட வேண்டிய நேரங்கள் இருக்கும் என்பது நிச்சயம். பையன்களும்கூட தங்கள் வியர்வை சுரப்பிகள் அதிகமாக வேலை செய்வதைக் காண்பார்கள். வியர்வை வாடைப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தனிப்பட்ட சுத்தத்தைப் பற்றி குறிப்பாக அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். எண்ணெய் தோய்ந்த தோலின் காரணமாக உங்களுக்குங்கூட முகப்பருக்கள் வரும்.
உங்களுடைய மத்திப-பருவ வயதின் போது, உங்களுடைய குரல்வளை பெரிதாக ஆகும்; குரல்வளை அதிர்வு நாளங்கள் தடிப்பாகவும், நீளமாகவும் ஆகும். இதன் விளைவாக, உங்களுடைய குரல் முழு நிறைவுடையதாகும். சில பையன்களின் குரல் உச்சக்குரலிலிருந்து, வீறார்ந்த ஆண்குரலுக்கு வியக்கத்தக்க விதத்தில் விரைவாக மாறிவிடும். ஆனால் மற்றவர்களுக்கோ, குரல் படிப்படியாக மாறுவதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் அடங்கிய நீண்ட காலப்பகுதி எடுக்கும். ஆழமான குரல், திடீர் வெடிப்போசை, கீச்சொலி ஆகியவை மாறி மாறி வரும். அதைக் குறித்துக் கவலைப் படாதீர்கள். உங்களுடைய குரல் காலப் போக்கில் சரியாகிவிடும். இடைக் காலத்தில் நீங்கள் உங்களைப் பார்த்தே சிரித்துக் கொள்ள முடிந்தால், அவ்வாறு செய்யுங்கள், அது சங்கோஜத்தைக் குறைவுபடுத்த உதவி செய்யும்.
அதிமுக்கியமான வளர்ச்சி
வளர்ச்சி அடைவது அதிசயிக்கத்தக்கதாகவும், கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. அது சங்கோஜமானதாகவும், பயமூட்டுவதாகவும் கூட இருக்கக்கூடும். ஒரு காரியம் நிச்சயமாயிருக்கிறது: வளர்ச்சி அடையும் வழிமுறையின் வேகத்தை நீங்கள் அதிகரிக்கவும் முடியாது. தாமதப்படுத்தவும் முடியாது. ஆகையால், பூப்புப்பருவத்தின் போது வரும் மாற்றங்களை எதிர்ப்பு மற்றும் பகையால் வரவேற்பதற்குப் பதிலாக, அவைகளைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள். நகைச்சுவை காணும் திறனோடு அவைகளைக் கனிவாக ஏற்றுக்கொள்ளுங்கள். இளமைப் பருவம் முடிவான விளைவு அல்ல, ஆனால், வெறுமென ஒரு வளர்ச்சிப்படியாக இருக்கிறது. பூப்புப் பருவத்தின் சீற்றம் முடிந்த பின்பு, நீங்கள் ஒரு முழு வளர்ச்சியடைந்த, ஆணாக அல்லது பெண்ணாக வெளிப்படுவீர்கள்!
உங்களுடைய அதிமுக்கியமான வளர்ச்சி உங்களுடைய உயரம், வடிவம் அல்லது முகத்தோற்றத்தை உட்படுத்துவதாய் இல்லை என்பதையும், ஆனால் உங்களுடைய வளர்ச்சி ஒரு நபராக மனம், உணர்ச்சி, ஆவி ஆகியவை சம்பந்தப்பட்ட வளர்ச்சியை உட்படுத்துகிறது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன். நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்.” (1 கொரிந்தியர் 13:11) பார்வைக்கு முழு வளர்ச்சியடைந்தவனைப் போன்று இருப்பது மட்டும் போதுமானதல்ல. முழு வளர்ச்சியடைந்தவனைப் போன்று செயல்படவும், பேசவும், யோசிக்கவும் நீங்கள் படிப்படியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய உடலுக்கு என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அதிக கவலையுள்ளவர்களாகி “உள்ளான மனுஷனைக்” கவனித்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.—2 கொரிந்தியர் 4:16.
பூப்புப் பருவத்தின் இன்னும் சில அம்சங்கள் குறிப்பாக வருத்தந்தருபவையாய் இருக்கலாம். அவைகளை எவ்வாறு கையாளுவது என்பது வரப்போகும் கட்டுரைகளின் பொருள்களாக இருக்கும். (g90 1/22)
[பக்கம் 12-ன் படம்]
திடீர் வளர்ச்சி கோட் கைகளின் நீளத்தை மிகவும் குறுக்கிவிடுகிறது