இளைஞர் கேட்கின்றனர்
குடிப்பழக்கம் என்னை உண்மையிலேயே அதற்கு அடிமையாக்கிவிடுமா?
ஜெரோம் ஒன்பது வயதாயிருக்கையிலேயே இதெல்லாம் துவங்கியது. “வீட்டில் நடைபெற்ற ஒரு விருந்துக்குப் பின்னர் மீந்திருந்த மதுபானங்கள் சிலவற்றை நான் ருசித்துப் பார்த்தேன், குடிபோதையில் இறங்கினேன், இப்படி உணர்வதை நான் விரும்பினேன்,” என்று அவன் விளக்குகிறான். சீக்கிரத்தில், தினந்தோறும் மதுபானத்தை வாங்கி, ஒளித்துவைத்து, குடிப்பது ஜெரோமுக்கு எப்போதும் செய்யும் காரியமாக ஆனது. எனினும், அவன் ஒத்துக்கொள்கிறான்: “நான் 17 வயதை எட்டும் வரையில் எனக்கு இப்பேர்ப்பட்ட ஒரு பிரச்னை இருந்தது என்பதை அறியாதவனாக இருந்தேன். மற்றவர்கள் காலையுணவு கொள்ளும்போது நான் 1/4 லிட்டர் வாடுகா என்ற சாராயத்தைக் குடித்துக்கொண்டிருந்தேன்!”
உலகமுழுவதும் இருக்கிற இளைஞர் மத்தியில் மதுபான உபயோகமும் துர்ப்பிரயோகமும் பீதியடையக்கூடிய விகிதத்தில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, கடந்த வருடம் அமெரிக்காவிலுள்ள 13- முதல் 18-வயதுள்ள மாணாக்கரில், ஒரு கோடிக்கும் மேலானவர்கள்—பாதிபேர்—ஒருமுறையாவது மதுபானத்தை அருந்தியிருக்கின்றனர். சுமார் எண்பது லட்சம் பேர் வாராவாரம் குடிக்கின்றனர். உண்மையில் பார்த்தால், ஒரு வருடத்திற்கு, ஐ.மா.-வின் பருவவயதினர் நூறு கோடிக்கும் மேலான டப்பிகள் பீரைக் குடிக்கின்றனர், 30 கோடிக்கும் மேலான பாட்டில்கள் குளிர்ந்த ஒய்னைக், கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவுப்படுத்தப்பட்ட ஒய்னைக் குடிக்கின்றனர்!
பைபிள் மதுபானத்தைப் பற்றி இப்படிச் சொல்லுகிறது: “அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” (நீதிமொழிகள் 20:1) எனினும், ஜெரோமைப் போன்றிருக்கும் லட்சக்கணக்கான வாலிபர் மதுபானத்தைக் கண்டு மயங்கிவிடுகின்றனர். மதுபான துர்ப்பிரயோகத்தினால் வரும் ஆபத்துகள் என்ன? நீ அதற்கு அடிமையாகிறாயா என்று நீயே எப்படிச் சொல்ல முடியும்?
குடியும் குடிப்பழக்கமும்
மதுபானம், தெளிந்த நிறமுள்ள குளிர்ந்த ஒய்னாகவோ நுரையடங்கிய பீராகவோ அடைத்து வைக்கப்பட்டிருக்கையில், எந்தக் கேடும் செய்யாதது போல தோன்றுகிறது. என்றாலும், ருசியும் தோற்றங்களும் ஏமாற்றமடையச் செய்யலாம். மதுபானம் ஒரு போதைப்பொருள்—சக்திவாய்ந்த ஒன்று.
மதுபானம் நரம்புமண்டலத்தின் மையப்பகுதியில் செயற்பட்டு, மூளையைப் பாதிக்கிற, ஊக்கமிழக்கச்செய்கிற ஒன்று என்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். ஓர் ஆள் அதை அளவாக குடிக்கும்போது, கெடுதல் விளைவிக்காத, இன்பமயமான பாதிப்பை அது உண்டுபண்ணும். “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசம்” என்று சங்கீதம் 104:15 சொல்கிறது. என்றாலும், மதுபானத்தை அதிக அளவில் குடிப்பது, போதையை உண்டுபண்ணும்—சரீர, மன கட்டுப்பாடு கணிசமான அளவு பலவீனம் அடையும் ஒரு நிலையாகும். ஜெரோமைப் போல, ஓர் ஆள் அதற்கு அடிமையாகிவிடக்கூடும், வேண்டும்போது குடிக்கலாம் என்றில்லாமல் அதற்கான ஆசையை அல்லது ஏக்கத்தை கொண்டிருக்கும் ஆபத்திற்கு அவரைக் கொண்டுச்செல்லும். ஏன் அப்படி ஆகிறது? மதுபானம் அதிகமாக உபயோகிக்கப்படும்போது சரீரம் அதற்கு இடங்கொடுக்கத் துவங்குகிறது. ஆகையால் குடிப்பவர் அதன் பாதிப்புகளை அனுபவிக்க இன்னும் அதிகமான அளவு குடிக்கவேண்டும். ஆனால் அவர் அதை உணருவதற்குள், அவர் அடிமையாகிவிட்டார். ஓர் ஆள் அதற்கு அடிமையாகிவிட்ட பின்னர் அவருடைய வாழ்க்கை விசனகரமான விதத்தில் மாற்றத்தை அனுபவிக்கும். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ஐ.மா. இளைஞரிடம் குடிப்பழக்க பிரச்னை இருக்கிறது.
ஏன் அவர்கள் குடிக்கின்றனர்
சாதாரணமாக, ஐ.மா.-வில் பருவவயதிலுள்ளவன், 1930-களில், சுமார் 18 வயதாயிருக்கும்போது மதுபானத்தை முதலில் ருசித்துப் பார்ப்பான். இன்று, 13 வயதுக்கு முன்பாகவே அவன் குடிக்கிறான். சிலர் இன்னும் இளைய வயதிலேயே குடிக்கத் துவங்குகின்றனர். “எனக்கு ஆறு வயது, . . . நான் தாத்தாவுடைய கிளாஸிலிருந்து கொஞ்சம் பீர் குடித்தேன். . . . எனக்கு மிகவும் மயக்கமாக இருந்தது!” இப்படி ஞாபகப்படுத்திச் சொல்கிறாள், கர்லாட்டா—குடிப்பழக்கத்திலிருந்து மீண்டுவரும் ஒரு பெண். இளம் வயதிலேயே துவங்குவாயென்றால், பெரும்பாலும் அதற்கு நீ அடிமையாகிவிடுவாய்.
சகாக்கள் இந்தப் போக்கில் அதிக அழுத்தம் கொடுப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் சிலவேளைகளில் பெற்றோருங்கூட ஒருவாறு இதற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர். சிலர் முழுவதுமாக இதில் மூழ்கிவிடுகின்றனர், மனக்கிளர்ச்சிக்கு ஆதரவாக இதை உபயோகிக்கின்றனர், அல்லது தங்களால் எவ்வளவு மதுபானத்தைக் குடிக்கமுடியும் என்பதைக் குறித்து பெருமையாக பேசிக்கொள்ளவும் செய்கின்றனர். குடிப்பழக்கத்தைப்பற்றிய ஒரு சிறிய புத்தகம் சொல்கிறது: “பெரியவர்களாகும் வரை குடிக்கக்கூடிய பிள்ளைகள், மதுபானத்தை உணர்ச்சியைத் தூண்டுவதற்கென்றில்லாமல், வழக்கமாக அருந்தக்கூடிய குடும்பங்களிலிருந்து வருகின்றனர் . . . குடிப்பது அதற்குரிய இடத்தில் வைக்கப்படுகிறது.”a
இளைஞரைப் பலமாகச் செல்வாக்குச் செலுத்தும் மற்றொன்று டெலிவிஷன். ஒரு சாதாரண அமெரிக்க வாலிபன் 18 வயதுக்குள், 75,000 குடி சம்பந்தப்பட்ட காட்சிகளை டிவியில் பார்த்திருக்கிறான்—ஒரு நாளுக்கு 11. குடிப்பதே கேளிக்கைக்கும் காதலுக்கும் வழிவகையாக இருப்பதுபோல தோன்றச்செய்ய தந்திரத்தோடு, கவனமாகத் தயாரிக்கப்பட்ட நயம் நிறைந்த விளம்பரங்கள், போக்கிரி கும்பல் மேடை அமைப்புகளில் குடிக்கக்கூடிய, பாலினக் கவர்ச்சியைத் தூண்டும் மாதிரி ஆட்களைச் சித்தரித்துக் காட்டுகின்றன. மதுபானங்களுக்குப் பழ ரசனைகளும் கண்ணைக் கவரும் பொருட்களுடைய பெயர்களும் கொடுக்கப்படுகின்றன. விளம்பரங்கள் கவரவே செய்கின்றன. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள 4,54,000 வாலிபர் குடித்துவெறித்திருக்கின்றனர், இதுவே ஐ.மா. அறுவை மருத்துவ முதல்வரை, இவர்களில் அநேகர் “முன்னமே குடிகாரராயிருக்கின்றனர், மீதிபேரும் குடிகாரராகிவிடுவர்,” என்று சொல்ல தூண்டியது.
என்றாலும், வாலிபரில் சிலர் மனக்கவலைகளின் காரணமாகக் குடிப்பதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். கிம் என்ற பெண், தான் ஏன் பீரை அதிக ஆசையோடு குடித்தாள் என்று வெளிப்படுத்துகிறாள்: “நான் என் மனதை மாற்றிக்கொள்வதற்கும் என்னில் நானே நன்றாக உணருவதற்கும் [மதுபானத்தை] உபயோகித்தேன்.” வெட்கத்தினாலோ தன்மதிப்பிழந்தோ ஒரு வாலிபன் தவிக்கும்போது அவனுக்குக் குடிப்பது ஒரு கவர்ச்சிகரமான பரிகாரமாக தோன்றக்கூடும். இன்னும் மற்றவர்கள் பெற்றோர் அவர்களைத் துர்ப்பிரயோகம் செய்தது அல்லது அவர்களைக் கைவிட்டது போன்று வாழ்க்கையில் நடந்த சில வேதனைதரும் உண்மைகளை மனதில் வராது தடை செய்ய குடிக்கின்றனர். ஆனா ஏன் குடிக்கத் துவங்கினாள்? “நான் எனக்குத் தேவையான பாசத்தை எப்போதுமே பெறவில்லை.”
ஒரு வாலிபன் எந்தக் காரணத்தை முன்னிட்டுத் துவங்கினாலுஞ்சரி, காலப்போக்கில் அவனால் குடிப்பதைக் கட்டுப்படுத்தவே முடியாது. அந்தக் கட்டத்தில்தானே, அவன் குடிப்பழக்கத்தை நேரில் எதிர்ப்படவேண்டியதாயிருக்கும். நீ குடிக்கத் துவங்கிவிட்டாயா? அவ்வாறெனில், “நீ குடிக்கத் துவங்கியது முதல்” என்ற தலைப்பைக்கொண்ட வினாவிடையைப் பார். விடைகள் மிகவும் உன்னை வெளிக்காட்டுவதாக நீ காண்பாய்.
குடி—வாலிபருக்கு ஆபத்தானது!
“மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கு,” பைபிள் எச்சரிக்கிறது, “முடிவிலே அது விரியனைப்போல தீண்டும்.” (நீதிமொழிகள் 23:29-32) ஒரு விஷ பாம்பின் நஞ்சு உட்சென்றதென்றால், மெதுவாக அவர் தவிக்குமளவுக்கு வேதனையைத் தரும் அல்லது கொல்லவுங்கூடும். (அப்போஸ்தலர் 28:3, 6 ஒத்துப்பாருங்கள்.) அதேபோல, மதுபானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி அதிகளவு அதைக் குடித்து துர்ப்பிரயோகிப்பது மெதுவாக உன்னைக் கொன்றுபோடும். அது உன்னுடைய ஈரல், கணையம், மூளை, இருதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் சிதையவோ அழிந்துவிடவோ செய்யும். அப்படிச் சிதைவதற்கு விசேஷமாக வளர்ந்துவரும் இளம் சரீரங்களும் மனங்களும் பலியாகும், சிலவேளைகளில் ஒன்றுமே செய்ய இயலாது.
மதுபான துர்ப்பிரயோகம் உன் சரீரத்தைவிட உணர்ச்சியையே பெருமளவுக்கு சிதையச்செய்யும். குடிப்பது உன்னுடைய நம்பிக்கையைத் தற்காலிகமாக ஊக்குவிக்கும். ஆனால் அது கொடுக்கும் நம்பிக்கை போலியானது—அதன் பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவிடும். அதற்குள் நீ உன்னுடைய உணர்ச்சியையும் மனதையும் வளர்ச்சியடையாதபடி செய்கிறாய். உணர்ச்சிகளை அடக்கி வாழ்க்கையின் உண்மைநிலையை எதிர்ப்படுவதற்கு மாறாக நீ இனியும் குடிக்க நினைக்கிறாய். ஆனால் பதினெட்டு வயதுள்ள பீட்டர் என்பவன் 11 மாதங்களுக்குத் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கிய பின்பு சொல்கிறான்: “என்னுடைய உணர்ச்சிகளை எப்படி எதிர்ப்படுவது என்றும் முன்பு மதுபானம் மேற்கொள்ளச்செய்த சூழ்நிலைமைகளைச் சமாளிப்பதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதற்கும் நான் கற்றறிந்து வருகிறேன். உணர்ச்சி சம்பந்தமாகவும் சமூக ரீதியிலும் பார்த்தால் எனக்குச் சுமார் பதின்மூன்று வயதே ஆகிறது என்று நான் நினைக்கிறேன்.”
அடுத்து குடித்துக்கொண்டு ஓட்டுவதன் அபாயங்கள் இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் உள்ள வாலிபர் மாளுவதற்கு முதற்காரணம் குடி-சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை இறப்பாகும். ஆட்கொலைகள், தற்கொலைகள், மூழ்க்கடிப்புகள் ஆகியவற்றோடுங்கூட குடிப்பழக்கம் சம்பந்தப்பட்டிருக்கிறது—வாலிபர் இறப்பதற்குரிய மற்ற தலையாய காரணங்கள்.
மேலும், மதுபான துர்ப்பிரயோகம் உங்களுடைய குடும்ப வாழ்க்கை, தோழமை, பள்ளிவேலை, ஆவிக்குரிய காரியங்கள் ஆகியவைமீது மோசமான பாதிப்புகளை உண்டுபண்ணும். பைபிள் இப்படியாக அதைச் சொல்லுகிறது: “அதிகம் குடிக்கும் ஒருவனை எனக்குக் காண்பி, . . . துக்கித்து, தன்னைக் குறித்தே வருந்துகிற ஒருவனை நான் உனக்கு காண்பிப்பேன், எப்போதும் தொந்தரவை உண்டாக்கி, எப்போதும் குற்றங்கூறுகிறான். அவனுடைய கண்கள் இரத்தக்கரை படிந்துள்ளன, அவனிடத்தில் காணப்படும் காயங்களை அவன் தவிர்த்திருக்கலாம். . . . ஏதோ ஒரு பெருங்கடலிலே இருப்பதுபோல, குமட்டல் நோயோடு, முன்னும் பின்னும் அலைந்தாடுகிற கப்பற்தளவாடத்தின் மேலே ஊசலாடுவதுபோல நீ உணருவாய்.” (நீதிமொழிகள் 23:29-34, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு [Today’s English Version]) கவர்ந்திழுக்கக்கூடிய டிவி விளம்பரங்களில் ஒருக்காலும் காட்டப்படாத குடிப்பழக்கத்தின் ஓர் அம்சமாக இது இருக்கிறது.
ஏன் துவங்கவேண்டும்?
ஆகவே அநேக நாடுகள் வாலிபர் மதுபானம் குடிப்பதைத் தடைசெய்கின்றன. நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்தாயென்றால், இத்தகைய சட்டங்களுக்குக் கட்டாயமாகக் கீழ்ப்படிவதற்கான ஒரு காரணம் உனக்கு இருக்கிறது, ஏனெனில், “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்” என்று கடவுள் உனக்குக் கட்டளைக் கொடுக்கிறார். (ரோமர் 13:1, 2) உள்ளூர் பண்பாட்டின் காரணமாக வாலிபருக்கிடையில் மதுபானம் உபயோகிப்பது சட்டப்பூர்வமாயிருந்தாலும், வாழ்க்கையின் இந்தப் பிராயத்தில் குடிக்கத் துவங்குவது உண்மையிலேயே உன்னுடைய சிறந்த நலனுக்காக இருக்குமா? “எல்லாவற்றையும் அநுபவிக்க . . . அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது,” என்று 1 கொரிந்தியர் 6:12 சொல்கிறது. மதுபானங்களைக் கையாள உண்மையிலேயே நீ தயாராயிருக்கிறாயா?
வண்ணம் நிறைந்த குளிர்ந்த ஒயினை அருந்தும்படி சகாக்கள் உனக்குத் தரும்போது அது எவ்வாறு ருசிக்கிறது என்று பார்க்க ஆசையாகத்தான் இருக்கும். என்றாலும், அளிக்கப்படுவது உன்னைப் பின்னர் அதற்கு அடிமைப்படுத்தக்கூடிய ஒரு போதைப்பொருள் என்பதை நீ உணரவேண்டும். பைபிள் காலத்தில் வாழ்ந்த தெய்வபயமுள்ள வாலிபராகிய தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ ஆகியோர் பாபிலோனிய அதிகாரிகளைத் துணிவோடு எதிர்ப்படுவதற்குத் தைரியத்தைக் கொண்டிருந்தனர், பொய்மத பாபிலோனிய அரசர் அவர்களுக்கென்று வைத்திருந்த அசுசியான ஆகாரங்களையும் ஒய்னையும் ஏற்க மறுத்தனர். நீயுங்கூட வேண்டாம் என்று தைரியமாக சொல்லலாம்!—தானியேல் 1:3-17.
காலப்போக்கில், மதுபானம் அருந்துவதை நீ தெரிந்துகொண்டாயானால்—சட்டப்பூர்வமாகவும், மனப்பிரகாரமாகவும், உணர்ச்சி சம்பந்தமாகவும், சரீரப்பிரகாரமாகவும்—நீ முதிர்ச்சிபெற்றவனாயிருப்பாய். அப்போதுங்கூட, மிதமாக குடிக்கவும் அதற்கு அடிமையாகிவிடாதபடி நீ ஞானமாயிருக்கவேண்டும். அநேக வாலிபர் முன்பே அதற்கு அடிமையாகிவிட்டிருக்கின்றனர், அப்பேர்ப்பட்டவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு என்ன செய்யலாம் என்பதை அடுத்தக் கட்டுரை சிந்திக்கும். (g93 1/8)
[அடிக்குறிப்புகள்]
a சில பண்பாடுகளில் வாலிபர் சாதாரணமாக உணவோடுகூட மதுபானங்களை அருந்துவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். என்றாலுங்கூட, பெற்றோர் ஞானமாய், தங்கள் பிள்ளைகளுக்கு எது சிறந்தது என்று ஆழ்ந்து யோசித்து, ஏற்றுக்கொள்ளப்படும் பண்பாடு தங்களுடைய எல்லா தீர்மானங்களையும் வழிநடத்தாதபடி பார்த்துக்கொள்கின்றனர்.
[பக்கம் 24-ன் பெட்டி]
நீ குடிக்கத் துவங்கியது முதல்:
□ உனக்கு வித்தியாசமான, ஒருசில நண்பர்களே இருக்கின்றனரா?
□ வீட்டில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறதா?
□ தூங்குவது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அல்லது நீ சோர்வாகவும் கவலையாகவும் உணருகிறாயா?
□ மற்றவர்களோடு சகஜமாக இருப்பதற்கு உன்னால் குடித்தால்தான் முடியுமா?
□ குடித்தப் பிறகு, உனக்குள்ளாகவே நீ பூரிப்பில்லாதவனாக அல்லது மனக்கசப்படைந்தவனாக இருக்கிறாயா?
□ நீ குடிப்பதைக்குறித்து பொய் சொல்கிறாயா? அல்லது அவ்வுண்மையை நீ மறைக்கப்பார்க்கிறாயா?
□ யாராவது ஒருவர் உன்னுடைய குடிப்பழக்கங்களைப்பற்றி பேசும்போது, நீ சங்கோஜமோ எரிச்சலோ அடைகிறாயா?
□ நீ மதுபானம் உபயோகிப்பதைக்குறித்து யாராவது உனக்கு எப்போதாவது ஆலோசனை கொடுத்திருக்கிறார்களா? அல்லது உன்னைக் கேலிசெய்திருக்கிறார்களா?
□ குளிர்ந்த ஒய்னும் பீரும் வெறிக்கவைக்கும் மதுபானமாக இல்லாததால், அவற்றைக் குடிப்பது பரவாயில்லை என்று நீ நினைக்கிறாயா?
□ ஒரு சமயம் நீ அனுபவித்து மகிழ்ந்துவந்த விருப்ப வேலைகளிலும் விளையாட்டுகளிலும் அக்கறையை இழந்திருக்கிறாயா?
இரண்டுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று நீ பதிலளித்திருந்தாயானால், உனக்கு உண்மையிலேயே குடி சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டும். அவ்வாறெனில், நீ உடனே உதவியை நாடுவது ஞானமாயிருக்கும்.
மூலம்: ரீஜன்ட் மருத்துவச்சாலை, நியூ யார்க், நி.யா.
[பக்கம் 23-ன் படம்]
குடிப்பவர்கள் அநேகர் இள வயதிலேயே குடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றனர்