பைபிளின் கருத்து
நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியை உங்கள் வழிகாட்டியாக இருக்க அனுமதிக்கவேண்டுமா?
சுறுசுறுப்பான தெரு ஒன்றில் நீங்கள் போய்க்கொண்டிருக்கும்போது, பகட்டாக உடையணிந்திருக்கும் ஒரு பெண்மணியைக் கடந்து செல்கிறீர்கள். அப்போது அவள் அறியாமல் ஒரு பணக் கத்தையைக் கீழே நழுவவிடுகிறாள். நீங்கள் அதை எடுக்கக் குனியும்போது, அவள் ஒரு பொறிவண்டியில் வேகமாக ஏறுவதைக் காண்கிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள்? சப்தமிட்டு அவளைக் கூப்பிடுவீர்களா அல்லது அந்தப் பணத்தைச் சட்டென்று உங்களுடைய பாக்கெட்டில் துருத்திக் கொள்வீர்களா?
பதில் உங்கள் மனச்சாட்சியின்பேரில் சார்ந்திருக்கிறது. நீங்கள் என்ன செய்யும்படி அது சொல்லும்? மிக முக்கியமாக, அது உங்களிடம் சொல்வதை நீங்கள் நம்பலாமா? நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியை உங்கள் வழிகாட்டியாக இருக்கும்படி பாதுகாப்பாக அனுமதிக்கலாமா?
அது என்ன
எது சரி எது தவறு, எது நீதி எது அநீதி, எது ஒழுக்கம் எது ஒழுக்கக்கேடு என்பதைப்பற்றிய இயல்பான அறிவு மனச்சாட்சி என விவரிக்கப்பட்டிருக்கிறது. மனச்சாட்சி வேலைசெய்யும் விதத்தை பைபிள் ரோமர் 2:14, 15-ல் விவரிக்கிறது: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” இவ்வாறு, சூழ்நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சரியான தெரிவுகளைச் செய்யும்படியும், நீங்கள் செய்யும் தெரிவுகளின்பேரில் உங்களையே தீர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் மனச்சாட்சி திட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதை நம்பலாமா?
பதில் சூழ்நிலைகளைப் பொறுத்திருக்கிறது. தவறக்கூடிய மனச்சாட்சி ஒரு நபரைத் தவறான நடத்தைக்குள் வழிநடத்தக்கூடும் என நிரூபிக்க போதுமான அத்தாட்சி இருந்தேயிருக்கிறது. ஒருவருடைய மனச்சாட்சி குறிப்பிட்ட நடத்தையை அனுமதிக்கிறது என்ற உண்மைதானே கடவுள் அந்நடத்தையைப் பொறுத்துக்கொள்கிறார் என்ற உத்தரவாதம் இல்லை. உதாரணமாக, ஒரு கிறிஸ்தவனாவதற்கு முன்பு தர்சு பட்டணத்தானாகிய சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில் தலைமை வகித்தான். இரத்த சாட்சியாக மரித்த ஸ்தேவானைக் கொலைசெய்ததன் குற்றப்பொறுப்பில்கூட அவன் பங்கெடுத்து அதை அங்கீகரித்தான். இவையெல்லாவற்றிலும், அவனுடைய மனச்சாட்சி அவனைக் கண்டனம் செய்யவேயில்லை.—அப்போஸ்தலர் 7:58, 59; கலாத்தியர் 1:13, 14; 1 தீமோத்தேயு 1:12-16.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாஸி ஜெர்மனியில், ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் (concentration camps) லட்சக்கணக்கானோரைத் துன்புறுத்தி கொலைசெய்த SS பாதுகாப்புப் படையினரில் அநேகர் வெறுமனே தாங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிந்ததாகக் கூறினர். அதைச் செய்யும்படி அவர்களுடைய மனச்சாட்சிகள் அவர்களை அனுமதித்தன. ஆனால் உலகத்தின் தீர்ப்பு—மிக முக்கியமாகக் கடவுளுடைய தீர்ப்பு—அவர்களுடைய செய்கைகளைப் பொறுத்துக்கொள்ளவில்லை. சரியாகவே, அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.
அது ஏன் சரியாக வேலைசெய்வதில்லை?
கடவுளால் படைக்கப்பட்ட ஏதோவொன்று ஏன் சரியாக வேலைசெய்வதில்லை? பைபிள் விவரிக்கிறது. ஆதாமின் கீழ்ப்படியாமையினால் மனிதன் பாவத்திற்குள் விழுந்த காரணத்தால், அதனுடைய இச்சைகளுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படி மனிதனைக் கட்டாயப்படுத்தி பாவம் அவன்மேல் “அரசாளுவதாக” கூறப்படுகிறது. (ரோமர் 5:12; 6:12) தொடக்கத்தில் பரிபூரணமாக இருந்த மனிதனின் மனச்சாட்சி வழிவிலகிற்று; பாவத்தின் தூண்டுவிக்கும் சக்தி இப்போது அதனுடன் போட்டியிடுகிறது. (ரோமர் 7:18-20) நாம் நன்கு அறிந்திருக்கும் முரண்பாட்டை இது ஏற்படுத்துகிறது: “நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். . . . ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.”—ரோமர் 7:21-23.
சுதந்தரித்துக்கொண்ட இந்தப் பலவீனம் மட்டுமல்லாமல், புறத் தூண்டுதல்களாலும்கூட நம்முடைய மனச்சாட்சிகள் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, இதற்குமுன் குறிப்பிடப்பட்ட நாஸி SS பாதுகாப்புப் படையினரின் மனச்சாட்சிகளைத் தெளிவாகவே உடனாட்களின் செல்வாக்கு வழிவிலகச்செய்தது அல்லது அடக்கிவைத்தது. (நீதிமொழிகள் 29:25-ஐ ஒப்பிடவும்.) மேலும், தொலைக்காட்சி, திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் காணப்படும் ஒழுக்கக்கேடு, வன்முறை போன்ற ஒழுக்கத்திற்கு ஒவ்வாத காரியங்களால் மனதை நிரப்புவதும், அதேபோல ஒரு பாதிப்பைக் கொண்டிருக்கிறது. அத்தகைய காரியங்களில் நாம் அடிக்கடி ஈடுபடுத்தப்பட்டால், இறுதியில் அவை நமக்கு அவ்வளவு தவறானவையாகவே தோன்றாமல், நம்முடைய மனச்சாட்சியும் பலவீனப்படுத்தப்படும். அதை வித்தியாசமாகச் சொன்னால், ‘ஆகாத கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.’—1 கொரிந்தியர் 15:33.
கடவுளுடைய சட்டங்களை அறிந்து அவற்றை மதிக்கும்படி ஓர் ஆள் பழக்கப்படுத்தப்பட்டால், அவனுடைய மனச்சாட்சி சந்தேகமின்றி அவன் அவ்வாறு பழக்கப்படுத்தப்படாதவனாய் இருந்ததைக்காட்டிலும் நன்கு நம்பத்தக்க ஒரு வழிகாட்டியாக இருக்கும். இருந்தபோதிலும், கடவுளுடைய வழிகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு ஆர்வத்தோடுகூடிய மதித்துணருதலைக் காண்பிக்கும் ஓர் ஆளும்கூட, சில சமயங்களில் தான் சுதந்தரித்த பாவத்தாலும் அபூரணத்தாலும், அல்லது ஒருவேளை புறத் தூண்டுதல்களாலும், அவனுடைய மனச்சாட்சி நம்பத்தக்க ஒரு வழிகாட்டியாக இல்லாதிருப்பதைக் காண்கிறான்.
நாம் என்ன செய்யலாம்?
ஒரு மனச்சாட்சி மாற்றப்படக்கூடுமா, சரியான நியமங்களுக்கு அதிக கூருணர்ச்சி காட்டும்படி செய்யப்பட முடியுமா? முடியும். “நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களா”கும்படி பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (எபிரெயர் 5:11-14) அப்படிப்பட்ட உபயோகம் மற்றும் பயிற்சி பைபிளைப் படிப்பதையும், நமக்காக இயேசு கிறிஸ்து விட்டுச்சென்ற பரிபூரண முன்மாதிரிக்கு விசேஷித்த கவனம் செலுத்துவதையும் உள்ளடக்குகிறது. (1 பேதுரு 2:21, 22) அதன்பிறகு, நாம் நம்முடைய பகுத்தறியத்தக்க ஞானேந்திரியங்களைத் தீர்மானங்கள் எடுப்பதில் உபயோகிக்கும்போது, நம்முடைய மனச்சாட்சிகள் நம்மைத் தவறான நினைவுகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் அதிகமதிகம் விலகிப்போகச்செய்யும். மற்றும் மதிப்புள்ளவற்றையும் சரியானவற்றையும் செய்யும்படி நம்மைக் குத்தித் தூண்டும்.
என்றாலும், நாம் ஒருபோதும் சுய-நீதியுள்ளவர்களாக ஆகிவிடக்கூடாது அல்லது ஏதோவொரு காரியம் “என் மனச்சாட்சியை உறுத்தவில்லை”யெனில் அது பரவாயில்லை என்று சொல்லக்கூடாது. அபூரண மனிதர்களில் மனச்சாட்சியின் தகுந்த மற்றும் பாதுகாப்பான உபயோகத்தை, ஒரு பாதுகாப்பான ஓட்டுநரின் எச்சரிக்கையான பழக்கங்களைக் கொண்டு விளக்கலாம். ஓர் ஓட்டுநர் பாதைகளை மாற்றும்போது, முதலில் இயல்பாகவே காரின் பின்புறக் காட்சியைக் காண்பிக்கும் கண்ணாடியை (rearview mirror) பார்க்கிறார். ஒரு கார் வருவதைப் பார்ப்பாராகில், மற்ற சாலைக்கு மாறுவது ஆபத்தானது என அறிந்துகொள்கிறார். எனினும், அவர் எதையும் காணாவிட்டாலும்கூட அறிவுத்திறனுள்ள அந்த ஓட்டுநர், காணமுடியாத சில இடங்கள் உள்ளன—கண்ணாடியை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா சமயங்களிலும் எல்லாவற்றையும் காணமுடியாது என்பதை உணருகிறார். எனவே, வெறுமனே கண்ணாடியில் மட்டும் பார்ப்பது கிடையாது. தன்னுடைய தலையைத் திருப்பி பார்ப்பதன் மூலம், அந்தச் சாலைக்கு மாறுவதற்கு முன் அது காலியாகத்தான் இருக்கிறதென்பதை நிச்சயப்படுத்திக்கொள்கிறார். மனச்சாட்சியைப் பொறுத்தளவிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. அது உங்களை எச்சரிக்குமானால் செவிசாயுங்கள்! ஆனால் தொடக்கத்தில் எச்சரிக்கையின் குரல் கொடுக்கவில்லையென்றாலும், அந்த அறிவுத்திறனுடைய ஓட்டுநரைப்போல நடந்துகொள்ளுங்கள்—மென்மேலும் நிதானித்து ஆபத்து இல்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களுடைய நினைவுகள் கடவுளுடைய நினைவுகளோடு ஒத்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய மனச்சாட்சியைச் சீர்தூக்கிப் பார்க்க அவருடைய வார்த்தையை ஓர் ஒலித்தடைத் தட்டியாக (sounding board) பயன்படுத்துங்கள். நீதிமொழிகள் 3:5, 6 ஞானமாகக் கூறுகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
எனவே உங்களுடைய மனச்சாட்சிக்குச் செவிகொடுப்பது ஞானமானதே. ஆனால் நாம் செய்கிற எல்லாவற்றையும் கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அவருடைய சித்தத்தோடு ஒத்துப்பார்ப்பது இன்னும் ஞானமான காரியமாக இருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே, “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய்” இருக்கிறோம் என்று நிச்சயத்தோடு சொல்லமுடியும்.—எபிரெயர் 13:18; 2 கொரிந்தியர் 1:12. (g93 7/8)
[பக்கம் 26-ன் படம்]
“செயின்ட் பவுலின் மனமாற்றம்”