உலகத்தைக் கவனித்தல்
பிள்ளை விபசாரம் பரவுகிறது
“பிள்ளைகளும் வளரிளமைப் பருவத்தினரும் விபசாரிகளாக அதிகம் தேவைப்படுகின்றனர். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அவர்களைப் ‘பாதுகாப்பானவர்களாகவும்’ எய்ட்ஸ் இல்லாதிருக்க வாய்ப்புள்ளவர்களாயும் காண்கின்றனர் என்று மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் . . . அறிக்கை செய்துகொண்டிருக்கின்றனர்” என்று பாரிஸின் இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் கூறுகிறது. UNESCO (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு) சமீபத்தில் “பாலுறவு வர்த்தகமும் மனித உரிமைகளும்” என்பதன்பேரில் பெல்ஜியத்தில் உள்ள ப்ருஸ்ஸெல்ஸில் ஒரு மாநாடு நடத்திற்று. கன்னிமை உடையவர்களாக கருதப்படும் பிள்ளைகளுக்கு மிக அதிக விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்று நிபுணர்கள் அந்த மாநாட்டில் உறுதிப்படுத்தினர். உலகளாவிய எய்ட்ஸ் கொள்ளைநோய் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்று ஒப்புக்கொண்டாலும், பேரளவு லாபகரமான பாலுறவு வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்கள் “பாலுறவை வெளிப்படையாக வாங்குவதையும் விற்பதையும் சாதாரணமாக்கி விட்டு, பிள்ளைகளைப் பாலுறவுக்காக பயன்படுத்துவதற்கு எதிரான சமூகத் தடைகளை அரித்துவிட்டிருக்கிறது” என்றும்கூட நிபுணர்கள் சுட்டிக் காட்டினர். இந்தப் பிரச்னை குறிப்பாக பெனின், பிரேஸில், கொலம்பியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தலைவிரித்தாடுவதாக UNESCO ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. தாய்லாந்தைச் சேர்ந்த 20 லட்சம் பெண் விபசாரிகளில் கணக்கிடப்பட்ட 8,00,000 பேர் பிள்ளைகளும் வளரிளமைப் பருவத்தினருமாக இருக்கின்றனர். 6 முதல் 14 வயதுவரையுள்ள 10,000-க்கும் அதிகமான பையன்கள் இலங்கையில் விபசாரர்களாக வேலைசெய்வதாக சொல்லப்படுகின்றனர். (g93 11/22)
குப்பையின் நீண்ட ஆயுள்
பொதுவான குப்பை மக்குவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? ஃபோகஸ் என்ற இத்தாலிய இதழில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, காகிதக் கைக்குட்டைகள் அல்லது காய்கறி கழிவுகள் அழிக்கப்படுவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்களும், சிகரெட்டின் ஃபில்ட்டர்களுக்கு 1 முதல் 2 வருடங்களும், மெல்லும் சவ்வுக்கு (chewing gum) 5 வருடங்களும், அலுமினியம் டப்பாக்களுக்கு 10 முதல் 100 வருடங்களும் தேவைப்படுகின்றன. ஆனால் சில பிளாஸ்டிக் பொருட்கள் “நூற்றாண்டுகளாக மாற்றமொன்றும் ஏற்படாமல் இருக்கின்றன . . . அவை தண்ணீரில் கரைவது கிடையாது . . . , எந்த நுண்ணுயிரிகளும் அவற்றை உண்ணத் தயாராக இருப்பதில்லை.” அடைத்து வைக்கும் பாத்திரங்களுக்கும் உணவு மற்றும் பானங்களை அடைத்து வைக்கும் பாத்திரங்களுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாலிஸ்டைரீன், ஒருவேளை ஓர் ஆயிரவருட காலப்போக்கில் மட்டுமே சிதைக்கப்படும். கண்ணாடி பாட்டில்கள் இயற்கைச் சுழற்சியில் அவற்றின் நிலையைத் திரும்ப சென்றடையுமுன் 4,000 வருடங்கள் கடந்துபோக வேண்டும். (g93 11/22)
மனித உரிமைகள் அர்த்தமற்றவை
“மனிதவர்க்கத்தின் பாதிபேர் முக்கியமான மனித உரிமைகளை மீறுதலுக்கு பலியானவர்கள்” என்பதாக ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் மையம் கணக்கீடு செய்கிறது என்று ஜெர்மானிய செய்தித்தாள் சூட்யட்ஷெ ட்ஸைட்டுங் அறிவிக்கிறது. இந்த மீறுதல்கள் துன்புறுத்துதல், கற்பழிப்பு, தூக்கிலிடுதல் ஆகியவற்றிலிருந்து அடிமையாக்குதல், பட்டினிபோடுதல், குழந்தைத் துர்ப்பிரயோகம் ஆகியவையாக இருக்கின்றன. 50-க்கும் அதிகமான நாடுகளில் 15 முதல் 20 கோடி வரையிலான பிள்ளைகள் குழந்தைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதாக அந்த மையம் கணக்கிடுகிறது. கூடுதலாக லட்சக்கணக்கான ஆட்கள் இனவெறிக்கும் அந்நியர்களிடம் காண்பிக்கப்படும் பகைமையுணர்ச்சிக்கும் பலியாகியிருக்கின்றனர். “வறுமை மற்றும் இழப்பு சூழமைவில், மனித உரிமைகள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன” என்று கூறினார் அம்மையத்தின் தலைவராயிருக்கும் இப்ராஹிம் ஃபால். “நாம் ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்பியிருக்கிறோம் என்பது உண்மையே, ஆனால் நாம் வாழ்கிற உலகம் கஷ்டங்கள் நிறைந்ததாயும் அபாயகரமானதாயும், அடிக்கடி சாவுக்குரியதாயும் இருந்துவருகிறது.” (g93 11/22)
குழிகள் தொற்றுபவை
“பல்சொத்தை தொற்றக்கூடியது.” ஒரு ஸ்விஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் ஆழன்ஸ் ஃப்ரான்ஸ்-ப்ரெஸ் செய்தி சேவையின் அறிக்கை ஒன்று அவ்வாறு சொல்கிறது. பல்சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களாகிய ஸ்ட்ரெப்டோக்காக்கஸ் ம்யூட்டன்ஸ், அடிக்கடி ஒரு குடும்ப அங்கத்தினரின் வாயிலிருந்து மற்றொருவரின் வாய்க்குக் கடத்தப்படுகிறது. உதாரணமாக பெற்றோர் தங்களுடைய பிள்ளையோடு ஒரு ஸ்பூனைப் பகிர்ந்து உபயோகிக்கும்போது அல்லது பாலூட்டும் நேரத்திற்கு முன்பு குழந்தையின் புட்டிப்பாலை ருசி பார்க்கும்போது இவ்வாறு கடத்தப்படுகிறது. ஒரு நபரின் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் அபாயம் அதிகரிக்கிறது. பற்களைத் தாக்கும் ஓர் அமிலமாக சர்க்கரைகளை மாற்றும் அந்த பாக்டீரியாக்கள், குறிப்பாக ஒன்று முதல் நான்கு வயதுள்ள பிள்ளைகளின் வாய்களில் செழித்து வளர்வதாகத் தோன்றுகிறது. இவ்வயதில் பிள்ளைகளின் பற்கள் முக்கியமாக பல்சொத்தைக்கு ஆளாகின்றன. (g93 11/22)
நேராக நில்லுங்கள்
கூனிநடவுங்கள், உங்களுடைய முதுகு அவதிப்படுகிறது. இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூனில் வந்த ஓர் அறிக்கையின்படி, நேராக நிற்பதைவிட கூனிக்கொண்டு நிற்பது முதுகின் கீழ் பாகத்திற்கு 15 மடங்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. கூனுதல் குறைவான சுவாசத்திலும் விளைவடைகிறது, அது உடல் ஊட்டம்பெறுவதற்கு குறைந்த ஆக்ஸிஜனை அர்த்தப்படுத்துகிறது. அது உங்கள் சக்தியை இழக்கச்செய்து, முக்கியமாக கழுத்திலும் முதுகிலும், வலி, வேதனை ஆகியவற்றில் விளைவடைகிறது. அது உங்களை வயதானவராகவும், குண்டானவராகவும், நீங்கள் நேராக நிற்கும்போது உள்ளதைவிட நம்பிக்கை குறைந்தவராகவும் காண்பிக்கும். நன்கு நிற்பது என்றால், உங்களுடைய செவிமடல்கள், தோள்கள், இடுப்புகளின் மையம், முழங்கால் சில்லுகள், கணுக்கால் எலும்புகள் ஆகியவை செங்குத்தான நிலையில் பொருந்தியமைய வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், அது நெருக்கிய முழங்கால்களோடும் பின்னோக்கித் தள்ளப்பட்ட தோள்களோடும் உள்ள ஒரு விறைப்பான இராணுவ நிற்பு நிலையை அர்த்தப்படுத்துவதில்லை. இது தண்டுவடத்திற்கு அதிக பளுவைக் கொடுக்கும். நேராக நிற்காதது வழக்கமாகவே சரிசெய்யப்படக்கூடிய ஒரு கெட்ட பழக்கம் என்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். (g93 11/22)
ஆசியாவில் மகிழ்ச்சி
தைவானிலும், கொரிய குடியரசிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் ஏழைகளாகவும் தங்களுடைய 30-களிலும் இருக்கின்றனர் என்று சர்வே ரிசர்ச் ஹாங் காங் லிமிடெட் நடத்திய ஒரு கணக்கெடுப்பு கண்டுபிடித்தது. வெறுமனே தலைக்கு $500-ஐ (ஐ.மா.) மொத்த தேசிய உற்பத்தியாகக் (GNP) கொண்ட பிலிப்பைன்ஸில் மக்களின் 41 சதவீதம் வறுமையில் வாழ்கின்றனர், 94 சதவீதம் மகிழ்ச்சியாய் இருப்பதாக வலியுறுத்திக் கூறுகின்றனர். ஆசியாவில் உள்ள அவற்றின் அண்டை நாடுகளில் ஒன்றைத் தவிர பெரும்பாலானவற்றால் வாழ்க்கையைப்பற்றிய இதே மனநிலைத்தான் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. “பொதுவாக மகிழ்ச்சித் ததும்பும் ஒரு மண்டலத்தில்,” ஆசியாவின் மிகவும் பணக்கார நாடு “மிகக் குறைந்த சந்தோஷத்தை உடைய இடமாக காணப்படுகிறது,” என்று சொன்னது மைனிச்சி டெய்லி நியூஸ். தலைக்கு $27,000-க்கும் (ஐ.மா.) அதிகமாக இருக்கும் GNP உள்ள, 40 சதவீத ஜப்பானியர்கள் தாங்கள் மகிழ்ச்சியாய் இல்லை என்று மனம்திறந்து கூறுகின்றனர். (g93 12/8)
பேச்சுத்தொடர்பு கொள்ளத் தவறுதல்
“ஜெர்மனியிலுள்ள சராசரி மணமான தம்பதி ஒரு நாளில் ஒருவருக்கொருவர் பேசுவதில் 10 நிமிடங்கள் செலவழிப்பதே அரிது,” என்று ஜெர்மானிய செய்தித்தாள் நாஸவ்விஷ்ஷெ நோய்ய ப்ரஸ்ஸ அறிக்கை செய்கிறது. ஆகவே பெரும்பாலான தம்பதிகள் தங்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மிகக் குறைந்த நேரத்தையே செலவழிக்கின்றனர். கூடுதலாக, இளம் தம்பதிகள் குறிப்பாக தங்களுடைய கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாளுவது என்றே தெரியாமலிருக்கின்றனர் என்று ஜெர்மனியிலுள்ள குடும்ப ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர். குடும்ப உறவு விரைவில் முறிவடைவதற்கான ஒரு முக்கிய காரணமாக இது இருக்கிறது; ஐந்தில் இரண்டு திருமணங்கள் முதல் நான்கு வருடங்களிலேயே தோற்றுப் போகின்றன. “முரண்பாடுகளைத் தீர்ப்பது எவ்வாறு என்று முன்மாதிரியினால் காட்டும் எடுத்துக்காட்டுகள் எவரும் இல்லை,” என்று ஆலோசகர் ரோஸ்மேரி பிரின்டல் சொல்வதாக அந்தச் செய்தித்தாள் மேற்கோள்காட்டுகிறது. “ஆகவே, வெறுமனே திருமணப்பிரிவினால் திருமணப் பிரச்னைகளைப் போக்குவதற்கான விருப்பத்தில் ஓர் அதிகரிப்பு இருக்கிறது,” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. (g93 12/8)
வேலையை அதன் இடத்தில் வையுங்கள்
புண், இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, அடிக்கடி வேலைக்கு வராதிருத்தல், விபத்துகள்—இவைதான் பேரழுத்தத்தின் விலை. அது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் நஷ்டத்தில் விளைவடைகிறது. தொழிலாளரின் பிரெஞ்சு சர்வதேசிய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, வேலை-சம்பந்தமான அழுத்தம் “நம்முடைய காலத்தின் அதிக வினைமையான பிரச்னைகளில் ஒன்று,” என ஆகிவிட்டிருக்கிறது. ஐரோப்பாவில், பணியாளர் குறைப்புகளும் பணியாளரின் பொறுப்புகள் அதிகரிப்பும், அதிக உற்பத்தி மற்றும் லாபத்திற்கான ஆசையோடு சேர்ந்து, வேலைசெய்யும் இடத்தில் அழுத்தத்தைப் பேரளவில் அதிகரித்துள்ளன என்று குறிப்பிடுகிறது பிரெஞ்சு மருத்துவ பத்திரிகை லா கான்கூர் மேடிகல். பிரான்ஸில் சிலர் அளவுக்குமீறின வேலையினால் மரிக்கிறார்கள் என்றுகூட அது மேலும் கூறுகிறது. ஆர்வத்தைத் தூண்டும் வகையில், தனிநபர் ஒருவர் தன்னைச் சுற்றியிருப்பவர்களோடு அனலான, அன்பான நட்பை வளர்க்கும்போது அழுத்தத்தைத் திறம்பட்ட வகையில் எதிர்க்கிறார் என்று அநேக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. தளர்ந்த ஓய்வுநேரங்களைக் கொண்டிருத்தல், உடற்பயிற்சி, சரிவிகித திட்ட உணவு, வேலையை அதன் இடத்தில் வைத்தல்—குடும்பத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் நேரம் ஒதுக்கிவைத்தல்—ஆகியவற்றை மருத்துவர்களும் சிபாரிசு செய்கின்றனர். (g93 12/8)
விபத்துகள் சம்பவிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றன
“சம்பவிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் மிதக்கும் அழிவுகளின் ஒரு கப்பல்தொகுதி”—இன்டர்நேஷனல் என்வைரன்மென்டல் அப்டேட் சொல்லுகிறபடி, உலகின் எண்ணெய்க் கப்பல்களை சில திறனாய்வாளர்கள் இவ்வாறுதான் அழைத்திருக்கின்றனர். “இந்த உலகம் அதன் மிக அபாயகரமான எரிபொருளை ஏற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான, துருப்பிடித்துக்கொண்டிருக்கும், வயதாகிக்கொண்டிருக்கும், சரிவர பராமரிக்கப்படாத கப்பல்கள்மீது இன்னும் சார்ந்திருக்கிறது” என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுக் காட்டுகிறது. பெரிய கப்பல் ஒன்று சுமார் 15 வருடங்களுக்கு உழைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உலக கப்பல் தொகுதியில் சுமார் 65 சதவீதம் அந்தளவுக்காவது பழமைப்பட்டுப்போய் இருக்கிறது. பழமைப்பட்டுப்போன இந்தக் கப்பல்களில் அநேகம் ஒதுக்கித் தள்ளப்படவேண்டும் என்று எண்ணெய் தொழிற்சாலை அதிகாரிகளில் சிலரும்கூட ஒப்புக்கொள்கின்றனர். இந்தக் கப்பல்களை ஒதுக்கித் தள்ளும்படி ஆணையிடுவதற்கான அதிகாரம் எந்தவொரு அமைப்புக்கும் இல்லைபோலிருக்கிறது. எனினும், பிரச்னை இந்தக் கப்பல்களில்தானே அல்ல, ஆனால் அதைவிட இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதிலேயே அதிகம் இருக்கலாம். “கப்பல் விபத்துக்களில் பெரும்பாலானவை மனித தவற்றினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன,” என்று எண்ணெய் மாசுப்படுத்தலை ஆராயும் நிபுணர் ஒருவர் கூறியதாக அந்தப் பத்திரிகை மேற்கோள் காட்டுகிறது. (g93 12/8)
சாவுக்கேதுவான வாணிபம் திரும்பிவருகிறது
சமீப ஆண்டுகளில் ஓரளவு லாபம் கிடைத்திருந்த போதிலும், இந்தியாவில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள் திருடுபவர்களால் பின்னடையச் செய்யப்பட்டிருக்கின்றன என்று இந்தியா டுடே அறிவிக்கிறது. இந்தியக் காடுகளில் 1988-ல், கணக்கிடப்பட்ட 4,500 புலிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை 1992-ல் 1,500-க்கு குறைக்கப்பட்டிருந்தது. புலியானது அதன் தோல், அதன் இரத்தம், அதன் எலும்புகள் (இவை நாட்டுவைத்தியத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன), அதன் நகங்கள் ஆகியவற்றுக்காகவும், அதன் இனப்பெருக்க உறுப்புக்களுக்காகவும்கூட விற்கப்படுகிறது. ஆனால் திருடுபவர்களின் கூட்டத்திற்கு புலி மட்டும் பலியாவதில்லை. 1992-ல் கொம்புகளுக்காக நாற்பத்தெட்டு இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன. இது பல பத்தாண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்திய யானைகள் எண்ணிக்கையில் பத்து வருடங்களுக்குமுன் இருந்த 5,000-லிருந்து இன்று சுமார் 1,500-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வனப் பாதுகாவலர்கள் அதிக ஆயுதம் தரித்துவரும் இன்றைய திருடுபவர்களுக்கு எந்தளவுக்குப் பயப்படுகிறார்கள் என்றால், சிலர் தங்களுடைய அலுவலக சீருடைகளை இனிமேலும் அணிவதில்லை; மற்றவர்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ள தகுந்த முறையில் ஆயுதம் தரிக்கச்செய்யும்வரை தங்களுடைய வேலையைச் செய்ய வெளிப்படையாகவே மறுக்கின்றனர். (g93 12/8)