அஞ்சல் தலை சேகரிப்பு—கருத்தைக் கவரும் ஓய்வுநேர விருப்பவேலை மற்றும் பெரும் வாணிகம்
பிரிட்டனில் உள்ள விழித்தெழு! நிருபர்
அஞ்சல் தலை சேகரிப்பு, “உலகின் மிகப் பெரிய ஓய்வுநேர விருப்பவேலை” என்பதாகச் சொல்லப்படுகிறது. பிரிட்டனின் அஞ்சல் துறை சீர்திருத்தவாதி சர் ரோலண்ட் ஹில் (1795-1879) பிரகாரம், ஆரம்ப கால அஞ்சல் தலைகள் வெறுமனே ‘பின்புறத்தில் காய்ந்த பசை தடவப்பட்டிருந்த சிறு காகிதத் துண்டுகளாக இருந்தன, இவற்றை உபயோகிப்பவர் அவற்றின் மேல் சிறிது ஈரத்தைத் தடவி கடிதத்தின் பின்புறத்தில் ஒட்டிவிட முடியும்.’ அவருடைய ‘சிறு காகிதத் துண்டுகள்’ அத்தனை பிரபலமாகி இன்றைக்கு அஞ்சல் தலைகள் உலகமுழுவதுமுள்ள தகவல் துறையின் போக்கையே மாற்றிய கண்டுபிடிப்பாக போற்றப்படுகின்றன.
சேகரிப்பவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தபால் தலைகளின் மதிப்பு பூஜியத்திலிருந்து மலைத்துப் போகச் செய்யும் இலட்சக்கணக்கான டாலர் வரை வித்தியாசப்படும். அஞ்சல் தலைகள் சர்வ சாதாரணமான பொருட்களாக இருக்கையில் இது எப்படி நேரிடக்கூடும்? அவற்றிற்குக் கவர்ச்சியையும் மதிப்பையும் அளிப்பது எது?
தனிச்சிறப்பு வாய்ந்த கருமை நிறப் பென்னி
முன்பணமாக செலுத்தப்பட்ட அஞ்சல் கட்டணத்தைக் குறிப்பிடுவதற்கு முதலாவது கையினால் முத்தரிக்கப்பட்ட அஞ்சல் தலைகள், வணிகர் வில்லியம் டாக்ராவின் கண்டுபிடிப்பு ஆகும். அவர் 1680-ல் லண்டன் பென்னி அஞ்சலை ஆரம்பித்தார். பெறப்படும் அலுவலகத்தில் சேர்க்கப்பட்ட தபாலின் மீது பென்னி அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்டது என்ற வார்த்தைகள் கொண்ட ஒன்றினுள் ஒன்று அடங்கிய இரு முக்கோணங்கள் கொண்ட அஞ்சல் குறி பொறிக்கப்பட்டது. பிறகு அது டாக்ராவின் தூதுவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் பிற தூதுவர்களும் அஞ்சல் கொண்டு செல்பவர்களும் மும்முரமாக இந்த ஏற்பாட்டை எதிர்த்தனர், ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழில் ஆபத்தில் இருந்ததாக உணர்ந்தனர். அரசாங்க அஞ்சலகமும் டாக்ராவின் அஞ்சல் தங்கள் தனி உரிமைகளை மீறுவதாகக் கண்டது.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தான் பென்னி அஞ்சல் கட்டணம் தேசம் முழுவதும் கிடைக்கும்படி அஞ்சல் துறை சீர்திருத்தங்கள் செய்ய முடிந்தன. மே 1840-ல் ஒட்டப்படக்கூடிய அஞ்சல் தலைகள் பிரிட்டனில் முதலாவதாக விற்க ஆரம்பிக்கப்பட்டன, அவை சீக்கிரத்தில் கருமை நிறப் பென்னி என பிரபலமாயின. (புகைப்படத்தைப் பாருங்கள்.) அது துளைகளின்றி ஒவ்வொரு அஞ்சல் தலையும் ஒரு தாளிலிருந்து வெட்டி எடுக்கப்பட வேண்டியதாக இருந்தது.
1843-ல் தேசம் முழுவதும் செல்லுபடியான ஒட்டப்படக்கூடிய அஞ்சல் தலைகளை வெளியிடுவதில் பிரிட்டனுக்கு அடுத்த தேசமாக பிரேஸில் ஆனது. நாளடைவில் பிற தேசங்களும் இவற்றைத் தங்கள் உள்நாட்டு அஞ்சலுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தன. பின்பு கடல் கடந்து அஞ்சல் அனுப்புவதற்கு ஏதுவாக ஒரு சர்வதேச அஞ்சல் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இன்று ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள பெர்ன்-ல் தலைமைக் காரியாலயத்தைக் கொண்ட சர்வதேச அஞ்சல் துறை ஒன்றியம் ஐக்கிய நாடுகளின் விசேஷித்த முகமையாக உள்ளது.
சேகரிப்புகள் ஒரு கதை சொல்கின்றன
சர்வதேச செய்தித் தொடர்புகள் அதிகரித்த போது ஒவ்வொரு தேசமும் தனிமாதிரியான அஞ்சல் தலைகளை உருவமைத்து அச்சடித்தன. சில அஞ்சல் தலைகள் சிறப்பான நிகழ்ச்சிகளையும் நபர்களையும் குறிப்பிடுபவையாக நினைவு அஞ்சல் வில்லைகள் என அழைக்கப்பட்டன. மற்றவை பலதரப்பட்ட அஞ்சலகத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்காக உபயோகிக்கப்படக்கூடிய வித்தியாசப்பட்ட மதிப்புகளிலிருந்ததால், வரையறுக்கப்பட்ட அஞ்சல் வில்லைகள் என்று அழைக்கப்பட்டன. ஆண்டுக்கணக்கில் சுமார் 600 அஞ்சலக நிர்வாகங்கள் ஆண்டுதோறும் 10,000 புதிய அஞ்சல் தலைகளை வெளியிட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன. இம்மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் இரண்டரை இலட்சம் விதவிதமான அஞ்சல் தலைகளில் தங்கள் தனிவிருப்பங்களுக்கு ஏற்றவற்றை அஞ்சல் தலை சேர்ப்பவரும் (அஞ்சல் தலை ஆராய்ச்சியாளரும்) வெறுமனே ஓய்வு நேரத்தில் தபால் தலைகளை சேர்க்கும் நபரும் காண முடியும்!
தெளிவாகவே, அஞ்சல் தலைகள் இத்தனை அதிக அளவிலும் விதங்களிலும் கிடைக்கக்கூடியதாயிருக்க எந்த ஒரு தனி சேகரிப்பாளரும் இதுவரை அச்சிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் ஒவ்வொன்றையும் வைத்திருக்கும்படி எதிர்பார்க்கப்பட முடியாது. அதற்கு மாறாக, அநேகர் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் அஞ்சல் தலைகளைச் சேகரிக்கத் தெரிந்து கொள்கின்றனர். அஞ்சல் துறை, அன்ட்டார்ட்டிக்கா, எஸ்பரான்டோ, ஐ.நா., ஐரோப்பா, ஒலிம்பிக் விளையாட்டுக்கள், குகைகள், சினிமா, செஞ்சிலுவை, தீ, தேசங்கள், தொழிற்சாலை, நிலக்கரி, பறத்தல், பறவைகள், பாலங்கள், புகைப்படங்கள், புவியியல், பூக்கள், பைபிள், போக்குவரத்து, மதம், மிருகங்கள், மருந்து, வண்டுகள், வானிலை, விண்வெளி, விவசாயம், விளையாட்டுக்கள் இவை யாவுமே சேகரிக்கப்படக்கூடிய தலைப்புகள். நீங்கள் யோசிக்கக்கூடிய எந்தத் தலைப்பின் கீழும் அஞ்சல் தலைகள் உள்ளன.
பிற சேகரிப்பாளர்கள் அஞ்சல் தலை மாற்றங்களின் பேரில் கவனம் செலுத்துகின்றனர். இதில் அடங்கியிருப்பது என்ன? கருமை நிற பென்னியை மறுபடியும் பாருங்கள். அஞ்சல் தலையின் கீழ் மூலைகளில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களை உங்களால் பார்க்க முடிகிறதா? ஆரம்பத்தில் இந்த அஞ்சல் தலைகள் 240 தனித்தனி அஞ்சல் தலைகள் அடங்கிய ஒரே தாளில் அச்சிடப்பட்டன. இருபது வரிசைகளாகவும் ஒவ்வொரு வரிசையிலும் 12 அஞ்சல் தலைகள் காணப்பட்டன. மேல் வரிசையில் முதல் அஞ்சல் தலையில் AA என்ற எழுத்துக்கள் இருந்தன. அந்த வரிசையில் இருந்த கடைசி அஞ்சல் தலையில் AL என்பதாகவும், இவ்விதமாகவே அகர வரிசையில் பொறிக்கப்பட்டு இருபதாவது வரிசையில் TA என ஆரம்பித்து TL என முடிந்தது. அஞ்சல் தலைகள் அச்சிடப்படுகையில் அவற்றின் மூலையிலிருந்த சதுரங்களுக்குள் இந்த எழுத்துக்கள் கையினால் அச்சுப் பதிக்கப்பட்டன. அஞ்சலக ஊழியர் தான் கையாளும் அநேக கடிதங்களில் உள்ள அஞ்சல் தலைகளில் ஒரே விதமான இரண்டு எழுத்துக்கள் காணப்பட்டால் அவை போலி என சந்தேகிப்பார்.
சுமார் 6 கோடி 80 இலட்சம் கருமை நிற பென்னி அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டபோதிலும் அவற்றில் உபயோகிக்கப்படாத அஞ்சல் தலை ஒன்றை இன்று வைத்திருக்கும் எவரும் அரிய அதிக மதிப்புள்ள—4,200 டாலர் முதல் 6,800 டாலர் வரை மதிப்புள்ள—ஒன்றை வைத்திருக்கிறார்.
தோற்றத்தில் நுட்பமான மாற்றங்கள் மட்டுமன்றி, வித்தியாசமான அச்சுத்தகடுகளில் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் வித்தியாசமான நீர்வரிக்குறிகள் (காகிதத்தை வெளிச்சத்துக்கு எதிராக வைத்துப் பார்க்கும் போது அதில் காணப்படும் மங்கலான உருவத்தோற்றங்கள்) கொண்ட காகிதத்தில் அச்சிடப்பட்டவை, வித்தியாசமான எண்ணிக்கையுள்ள துளைகளை (ஓரங்களில் உள்ள துவாரங்கள்) கொண்டவை போன்ற அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஆட்கொள்கின்றன. இதில் தேர்ச்சி பெற இந்த நிபுணர்களுக்கு இடுக்கி முள்ளும் (உங்கள் விரல்களால் ஒருபோதும் தொடக்கூடாது!) உருபெருக்குக் கண்ணாடியும் மட்டுமன்றி இன்னுமதிகம் தேவை. துளைகளில் உள்ள மாற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொறிகள் உள்ளன; சேதங்களையும் மறைந்துள்ள ஒளிமினுக்கத்தையும் பிற நுணுக்கங்களையும் புற-ஊதா விளக்குகள் வெளிப்படுத்துகின்றன.
சில சேகரிப்பாளர்கள் அஞ்சல் தலை உருவமைப்பிலும் அச்சடிப்பிலும் உள்ள தவறுகளின் பேரில் விசேஷ கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்குப் பிற சேகரிப்பாளர்கள் கவனிக்கத் தவறிய ஒன்றை வைத்திருப்பது ஒரு பெரிய காரியம். அவற்றின் மதிப்பில் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். 1990-ல் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, A என்ற எழுத்து பொறிக்கப்படத் தவறிய 1841-ஐச் சேர்ந்த சிகப்பு நிற பென்னி ஒன்று, தாளின் இரண்டாவது வரிசையின் முதல் அஞ்சல் தலையில் உள்ள தவறைக் கொண்டது, இந்தக் குறை இல்லாத அஞ்சல் தலையை விட சுமார் 1,300 தடவை அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது!
அஞ்சல் தலைகள் ஒரு பெரும் வாணிகம்
இந்நாட்களில் அஞ்சல் தலை சேகரிக்கும் ஓய்வுநேர விருப்பவேலை பலதரப்பட்ட முதலீட்டாளர்களைக் கவருகிறது. ஒரு உண்மையான முதலீட்டாளர் விற்பனையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதிப்பில் உயரும் என நம்பும் அரிய அஞ்சல் தலை தொகுதிகளை வாங்குகிறார்கள். முதலீடு முதிர்வடையும் போது விற்பனையாளர் தன் வாடிக்கையாளர் வைத்திருப்பவற்றைக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த விலைக்கு விற்க பொறுப்பேற்றுக் கொள்கிறார். “அஞ்சலில் உபயோகிக்கப்பட்ட அஞ்சல் தலைகளுக்கு இலேசான தெளிவான அச்சுமுத்திரைகள் ஒரு அத்தியாவசியமான தேவை—அதிசாதாரணமான அஞ்சல் தலைகள் குறைவற்ற அல்லது அசாதாரணமான அச்சுமுத்திரைகளோடு காணப்படுகையில் அவை அரியவையாயும் அதற்கேற்ற கூடுதல் மதிப்புள்ளவையாயும் ஆகின்றன. அஞ்சல் தலையின் சிறந்த நிலை அதன் மதிப்புக்கு அதிமுக்கியமானது,” என்பதாக அஞ்சல் தலை அதிகாரியான ஜேம்ஸ் வாட்சன் எழுதுகிறார்.
1979-ல் லண்டன் டெய்லி மெய்ல் “கடந்த ஐந்து ஆண்டுகளில், இலக்கிய அஞ்சல் தலைகள் (1840 முதல் 1870 ஆண்டுகளைச் சேர்ந்தவற்றின்) பங்கீடுகளைக் காட்டிலும், பிற முதலீடுகளைக் காட்டிலும், அநேக விஷயங்களில் வீட்டு விலைகளைக் காட்டிலும் அதிகமாக மதிப்பில் உயர்ந்திருக்கின்றன” என்று அறிக்கை செய்தது. 1974-ல் 84,700 டாலர் மதிப்புள்ளதாக இருந்த ஏழு அரிய அஞ்சல் தலைகளைக் கொண்ட ஒரு தொகுதி 3,06,000 டாலர் மதிப்புள்ளதாக உயர்ந்தது.
1990-ல் டைம் இன்டர்நேஷனல் விளம்பரம் அறிவித்தது: “ஒரு முதலீடாக அஞ்சல் தலைகள் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வான காலங்களைக் கண்டிருக்கின்றன. 1970-களில் அரிய அஞ்சல் தலைகளின் மூலம் இலாபங்களை எதிர்பார்த்து ஊக வணிகர்கள் முதலீட்டுத் தொகுதிகளைச் சேர்த்ததன் விளைவாக விலைகள் வேகமாக உயர்ந்தன. ஆனால் 1980-ல் லண்டன் அதன் உலக அஞ்சல் தலைக் கண்காட்சியை நடத்தியபோது அவர்களுடைய நம்பிக்கைகள் சீர்குலைந்தன. மார்க்கெட்டை தாங்குவதற்கு தயாராக இருந்த ஒரே நபர்கள் சேகரிப்பாளர்களே, அவர்களும் புத்திசாலித்தனமாக பின்வாங்கி விட்டிருந்தனர் என்பதாக ஊக வணிகர்கள் கண்டனர். ‘முதலீட்டாளர்கள் தங்கள் சேகரிப்புகளைப் பணமாக மாற்ற முயன்ற போது அநேக அஞ்சல் தலைகள் அவர்கள் நினைத்ததைப் போன்று அவ்வளவு அரியவையாக இல்லை என்று கண்டு இழப்புற்றனர்.‘” அஞ்சல் தலைகளின் பேரில் முதலீடு செய்பவர்களுக்கு இது எத்தகைய எச்சரிப்பாக உள்ளது!
அப்படியானால் ஒரு சேகரிப்பாளராக அல்லது அஞ்சல் தலை ஆய்வாளராகவும்கூட, சமநிலையோடிருக்க நாடுங்கள். உங்கள் அஞ்சல் தலைகளை அனுபவித்து மகிழுங்கள். அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்—உலகத்தையும் அதன் புவியியல், மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். அஞ்சல் தலைகளைச் சேகரிப்பது உங்களை ஆட்டிப் படைக்கும்படி விட்டுவிடாதீர்கள். அவற்றின் பேரில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் கவனமாக மதிப்பிடுங்கள். இதை வாழ்க்கையில் உள்ள அதிமுக்கியமான காரியங்களோடு அளவிட்டுப் பாருங்கள்.
[பக்கம் 17-ன் படம்]
கருமை நிறப் பென்னி
[பக்கம் 18-ன் படங்கள்]
ஆஸ்திரியா, பிரிட்டன், ஸ்பெய்ன் ஆகியவற்றின் அஞ்சல் தலைகள்