எப்படித்தான் அவர்களால் இதை செய்யமுடிந்தது?
அடிமை வாணிபத்தை மக்கள் எப்படி நியாயமென்று காட்டினர்? 18-ம் நூற்றாண்டுவரை அடிமைத்தனத்தின் தார்மீக நெறியைப் பற்றி ஒருசிலரே கேள்வி எழுப்பினர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கறுப்பர் அடிமைத்தனத்தின் தோற்றமும் வீழ்ச்சியும் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுவதாவது: “கொலம்பஸ் எதிர்பாராதவிதமாக மேற்கிந்தியத் தீவுகளில் காலடி எடுத்து வைத்தபோது, வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதைப் பற்றிய சந்தேகத்தை இங்கொருவரும் அங்கொருவருமாக சர்ச் அங்கத்தினர்கள் பட்டும் படாததுமாய் சொன்னார்களேதவிர, அது ஒழுக்கக்கேடாகக் கருதப்படலாம் என்று சர்ச்சோ அல்லது எழுதப்பட்டு சர்ச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையோ, எதிர்காலத்தில் வந்து குடியேறியவர்களுக்கு எவ்விதத்திலும் சுட்டிக்காட்டவில்லை. . . . முழு ஐரோப்பிய சமுதாயத்தோடும் பின்னிப்பிணைந்து கிடந்த அடிமைத்தன ஏற்பாடு எதிர்க்கப்படவேண்டும் என்பதற்கான அறிகுறி எங்கும் காணப்படவில்லை.”
அட்லான்டிக்கின் வழியாக நடத்தப்பட்ட வாணிபம் மும்முரமாக ஆன பிறகு, அநேக குருமார்கள் அடிமைத்தனத்தை ஆதரிக்க மதப்பிரகாரமான தர்க்கங்களை உபயோகித்தனர். அமெரிக்கன் ஸ்லேவரி என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “[அமெரிக்காவில் இருந்த] புராட்டஸ்டன்ட் ஊழியர்கள் அடிமைமுறையைப் பாதுகாப்பதில் முன்னணியில் நின்று செயலாற்றினர். . . . அடிமைத்தனம் என்பது, இதுவரை புறமதத்தினராக இருந்துவந்த மக்களுக்கு கிறிஸ்தவத்தின் ஆசீர்வாதங்களை அறிமுகப்படுத்துவதற்குரிய கடவுளுடைய திட்டத்தின் பாகமாக இருந்தது என்ற எளிய யோசனையே ஒருவேளை மிக விரிவாக பயன்படுத்தப்பட்ட, மிகத் திறம்பட்ட மதப்பிரகாரமான தர்க்கமாக இருந்தது.”
ஆனால் அடிக்கடி அடிமைகளைக் கொடூரமாகவும் தரக்குறைவாகவும் நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு ‘கிறிஸ்தவத்தின் ஆசீர்வாதம்’ என்ற பாவனையைவிட அதிகம் தேவையாய் இருந்தது. ஆகவே கறுப்பர்கள் வெள்ளையர்களாகிய தங்களைப்போலல்ல என்று குடியேற்றத் தலைவர்களும், ஐரோப்பாவில் உள்ள எழுத்தாளர்களும் தத்துவ ஞானிகளும் தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டனர். “இந்த மனிதர்களின் சுபாவத்தைப் பற்றியும், இவர்களுக்கும் மீதமுள்ள மனிதவர்க்கத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றியும் நாம் சிந்திக்கையில், அவர்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டாமா?” என்கிறார் ஹிஸ்டரி ஆஃப் ஜமைகா என்ற புத்தகத்தை எழுதவிருந்த எட்வர்ட் லாங் என்ற பண்ணையார். அப்படிப்பட்ட எண்ணத்தின் விளைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில், மார்ட்டினிக்கின் ஆளுநர், “மிருகங்களை நடத்துவதைப்போன்று ஒருவர் நீக்ரோக்களை நடத்தவேண்டும் என்று உறுதியாக நம்பும் நிலையை நான் அடைந்திருக்கிறேன்,” என்று சொன்னார்.
இறுதியில் பொருளாதார சுயநலமும் மனிதாபிமான அக்கறைகளும் அட்லான்டிக்கின் வழியாக நடத்தப்பட்ட அடிமை வாணிபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குக் காரணமாக இருந்தன. தங்களை அடிமைப்படுத்துவதை ஆப்பிரிக்கர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்த்துதான் வந்தனர்; 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்த்தெழுவது மிகவும் சர்வசாதாரணமாகிவிட்டது. பயந்துபோன முதலாளிகள் தங்களுடைய நிலைமை அதிக ஆட்டம்காண்பதை உணர்ந்தனர். அடிமைகளை நிரந்தரமாக வைத்துப் பராமரிப்பதைவிட தேவையானபோது மட்டும் பணியாளர்களை அமர்த்திக்கொள்வது சிக்கனமாக இருக்குமோ என்ற கேள்வியும் அவர்கள் மனதில் எழுந்தது.
அதே சமயத்தில், ஐரோப்பாவிலும் அமெரிக்கக் கண்டங்களிலும் அடிமைத்தனத்திற்கு எதிராக தார்மீக நெறி சம்பந்தமான, மத சம்பந்தமான, மற்றும் மனிதாபிமான சர்ச்சைகள் அதிகரித்துவந்தன. அடிமைத்தன ஒழிப்பு இயக்கங்கள் வலுவடைந்து வந்தன. 1807-ல் இருந்து பல நாடுகளில் அடிமை வாணிபம் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், அடிமைத்தனத்தின் விளைவுகள் தொடர்ந்து இருந்தன.
தி ஆஃப்ரிக்கன்ஸ்: எ ட்ரிப்பிள் ஹெரிட்டேஜ் என்ற ஒரு தொலைக்காட்சி தொடர் இவ்வாறு சொல்லி ஆப்பிரிக்க புத்திரர்களுக்காக கடுப்பான, கசப்பு தோய்ந்த குரலெழுப்பியது: “அடிமை வாணிபம் தொடங்குவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, நாங்கள் . . . ஆப்பிரிக்காவில் வாழ்ந்தோம். பின்னர் அந்நியர்கள் வந்து எங்களில் சிலரைக் கொண்டு போனார்கள். இன்றோ, ஆப்பிரிக்க சந்ததியின்மேல் சூரியன் அஸ்தமிப்பதில்லை. அந்தளவுக்கு விஸ்தாரமாக நாங்கள் சிதறிப்போய் கிடக்கிறோம்.” ஆப்பிரிக்க சந்ததியில் தோன்றிய லட்சக்கணக்கான மக்கள் வட மற்றும் தென் அமெரிக்காவிலும், கரீபியன் தீவுகளிலும் ஐரோப்பாவிலும் இருப்பது அடிமைத்தனத்தின் தெளிவான விளைவேயாகும்.
அட்லான்டிக்கின் வழியாக நடந்த அடிமை வாணிபத்திற்குப் பொறுப்பான குற்றவாளி யார் என்பதைக் குறித்து மக்கள் இன்னும் சர்ச்சை செய்கின்றனர். ஆப்பிரிக்கர்களின் வரலாற்றில் நிபுணரான பாஸில் டேவட்சன், ஆப்பிரிக்க அடிமை வாணிபம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில்: “ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் கூட்டுச்சேர்ந்து இதில் ஈடுபட்டிருந்தன,” என்று எழுதுகிறார்.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக”
மனித ஆட்சியைப்பற்றி கற்றுக்கொள்ளப்பட வேண்டியது ஒன்று உண்டு. ஞானி எழுதினார்: “நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது.”—பிரசங்கி 4:1.
விசனகரமாக, ஆப்பிரிக்க அடிமை வாணிபம் தொடங்கியதற்கு வெகு காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட அந்த வார்த்தைகள், இன்றும் உண்மையாகவே இருந்துவருகின்றன. ஒடுக்கப்படுகிறவர்களும் ஒடுக்குபவர்களும் இன்றும் நம்மோடு இருக்கின்றனர். இதைப்போலவே சில நாடுகளில் அடிமைகளும் அவர்களுடைய எஜமானர்களும் இன்றும் இருக்கிறார்கள். விரைவில் கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின்மூலம், யெகோவா, “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் . . . விடுவிப்பார்,” என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 72:12) இந்தக் காரணத்திற்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் அவர்கள், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று ஜெபம் செய்கின்றனர்.—மத்தேயு 6:10.