அருகிவரும்—உயிரினங்கள் பிரச்சினையின்
பரப்பெல்லை டோடோக்கள் அற்றுப்போதலின் ஒரு சின்னமாகிவிட்டன. பறக்க இயலா இப் பறவைகளில் கடைசியாய் இருந்தவை, மாரிஷியஸ் தீவில் 1680 வாக்கில் மறைந்தன. தற்போது அபாயத்தில் இருக்கும் இனங்களில் பலவும் தீவுகளில் வாழ்பவை. கடந்த 400 ஆண்டுகளில், மறைந்து போனவையாகத் தெரிய வந்திருக்கும் 94 பறவையினங்களில் 85, தீவில் வாழும் பறவைகளாய் இருந்துவந்திருக்கின்றன.
பெரிய கண்டங்களில் வாழும் விலங்குகளும்கூட அற்றுப்போகும் அபாயத்தில் உள்ளன. முன்பு ரஷ்யா முழுவதிலும் சுற்றித்திரிந்த புலிகளை எண்ணிப்பாருங்கள். இப்பொழுது ஏமர் என்ற உள்வகை மட்டும் சைபீரியாவில் மீந்திருக்கிறது, அதன் எண்ணிக்கைகள் வெறும் 180 முதல் 200 வரையாகக் குறைந்துவிட்டன. தென் சீனாவிலுள்ள புலிகள் 30 முதல் 80 வரையாக மட்டுமே இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்தோசீனாவில் இவ் விலங்குகள் “பத்து ஆண்டுகளுக்குள்” அற்றுப்போவதை எதிர்ப்படுகின்றன என்பதாக லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அதேவிதமாக, உலகில் வாழும் சுமார் மூன்றில் இரண்டு பங்கு புலிகளுக்கு வீடாயிருக்கும் இந்தியாவில், இக் கம்பீரமான பிராணிகள் ஒரு பத்தாண்டில் அற்றுப்போகக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பீடு செய்கின்றனர்.
காண்டாமிருகங்களும் சீட்டாக்களும் (சிவிங்கிப்புலி, வேட்டைச் சிறுத்தை) குறைந்துகொண்டே வருகின்றன. சீனாவில் ராட்சத பாண்டாக்கள் (pandas) பத்து மட்டுமே இருக்கும் சிறு தொகுதிகளாக சுற்றித்திரிகின்றன. வேல்ஸில் பைன் மார்ட்டன் கிட்டத்தட்ட அற்றுப்போயின, சிவப்பு அணில்கள் (red squirrels) “இங்கிலாந்தின் முக்கிய நிலப்பகுதியிலிருந்தும் வேல்ஸிலிருந்தும் அடுத்த பத்து முதல் 20 ஆண்டுகளில் மறையலாம்” என்று தி டைம்ஸ் உறுதியுடன் கூறுகிறது. அங்கிருந்து அட்லான்டிக்கைக் கடந்துசென்றால், ஐக்கிய மாகாணங்களில், வௌவால்கள் மிகுந்தளவு அருகிவரும் நிலவாழ் பாலூட்டியாகும்.
உலகின் பெருங்கடல்களிலும் எதிர்கால வாய்ப்பு வளம் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை. கடல் பிராணிகளிலேயே “ஒருவேளை மிக அதிகளவில் அருகிவரும் தொகுதி” என்பதாகக் கடல் ஆமைகளை தி அட்லஸ் ஆஃப் என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ் குறிப்பிட்டுக் காட்டியது. இருவாழ்விகளைப் பொறுத்தமட்டில் பரவாயில்லை; என்றாலும், நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையின்படி, கடந்த 25 ஆண்டுகளில் 89 இருவாழ்விச் சிறப்பினங்கள் “அற்றுப்போகும் அபாயத்துக்கு” வந்துவிட்டன. உலகின் பறவையினங்களில் சுமார் 11 சதவீதமும்கூட அற்றுப்போவதை எதிர்ப்படுகின்றன. a
ஆனால் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்ற சிறு பிராணிகளைப் பற்றியென்ன? சூழ்நிலை அதைப்போலவே உள்ளது. ஐரோப்பாவின் 400 வண்ணத்துப்பூச்சி வகைகளில் கால் பாகத்திற்கும் மேலானவை ஆபத்தில் இருக்கின்றன—19 வகைகள் சமீபத்தில் அற்றுப்போவதாக அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன. பிரிட்டனின் பெரிய ஆமையோட்டு வண்ணத்துப்பூச்சி டோடோவைப் போன்றே 1993-ல் அற்றுப்போனது.
அதிகரித்துவரும் கவலை
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பிராணிகளின் இனங்கள் அற்றுப்போகின்றன? அதற்கான விடை, நீங்கள் கேட்கும் நிபுணரைப் பொறுத்தது. விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்ளாதபோதிலும், பல இனங்கள் அற்றுப்போகும் அபாயத்தில் இருக்கின்றன என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வர். “எவ்வளவு வேகமாக [உயிரினங்களை] நாம் இழக்கிறோம் என்பதைப் பற்றிய வாக்குவாதம், அடிப்படையில் நம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு விவாதமாயுள்ளது” என்று சூழலியலாளர் ஸ்டூயர்ட் பிம் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “சென்ற நூற்றாண்டுகளாக, உயிரினங்கள் அற்றுப்போகும் வீதத்தை இயற்கை வீதத்துக்கும் அப்பால் நாம் அதிகப்படுத்தியுள்ளோம். அதன் விளைவாக நம் எதிர்காலம் தரக்குறைவாகியுள்ளது.”
நம் கிரகமாகிய பூமி, ஒரு வீட்டைப் போன்றது. அருகிவரும் உயிரினங்களைப் பற்றி கவலைகொள்ளும் சிலர் சூழலியலைக் கற்கின்றனர்; அது ஓய்க்காஸ் (oi ʹkos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சொல்லாகும், அது “ஒரு வீடு” என்று அழைக்கப்பட்டது. அக்கறையூட்டும் இத்துறை உயிர்வாழ்பவற்றிற்கும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கும் இடையேயுள்ள உறவுகளின்மீது கவனம் செலுத்துகிறது. அற்றுப்போனவை பற்றிய அறிக்கைகளை வைத்து, 19-ம் நூற்றாண்டின்போது அவற்றைப் பாதுகாப்பதில் அக்கறை அதிகரித்துவந்தது. ஐக்கிய மாகாணங்களில், பிராணிகளுக்கு சரணாலயங்களை அளிக்கும் தேசியப் பூங்காக்களையும் பாதுகாப்பான பகுதிகளையும் நிறுவுவதற்கு இது வழிநடத்தினது. தற்போது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 8,000 வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகள் உலகளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன. வாழிடத்தைப் பராமரிக்க உதவும்படியான 40,000 மனைகளைச் சேர்க்கையில், அவை கிட்டத்தட்ட உலகின் நிலப்பகுதியின் பரப்பளவில் 10 சதவீதமாக இருக்கின்றன.
அற்றுப்போகும் அச்சுறுத்தலை விளம்பரப்படுத்திக் காட்டும் இயக்கங்களின் வாயிலாகவோ, ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது பற்றி வெறுமனே மக்களுக்குக் கல்வி புகட்டுவதன் வாயிலாகவோ, பசுமை இயக்கங்கள் என்றழைக்கப்படுபவற்றை கவலைகொள்ளும் மக்கள் பலர் இப்போது ஆதரிக்கின்றனர். மேலும் 1992 ரியோ பூமி மாநாடு முதற்கொண்டு, சுற்றுச்சூழலியல் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிய அதிகரிக்கப்பட்ட முன்னுணர்வு அரசாங்கத்தின் எண்ணத்தைப் பொதுவாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான பிரச்சினை பூகோள அளவானதும் அதிகரித்துவருவதுமான ஒன்றாகும். ஏன்? உயிரினங்கள் அற்றுப்போவதைத் தடுக்க எடுக்கும் முயற்சிகள் எவையேனும் தற்போது வெற்றிகரமானவையாய் உள்ளனவா? எதிர்காலத்தைப் பற்றியென்ன? நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்? எமது அடுத்த கட்டுரைகள் விடையளிக்கின்றன.
[அடிக்குறிப்பு]
a அற்றுப்போன இனம் என்பது, 50 ஆண்டுகளாக இயற்கைச் சூழலில் காணப்படாமல் இருக்கும் ஒன்று என்பதாக வரையறுக்கப்படுகிறது; அருகிவரும் இனம் என்பது, அவற்றின் தற்போதைய சூழ்நிலைகளில் மாற்றம் இல்லாவிட்டால் அற்றுப்போகும் அபாயத்தில் இருப்பவற்றைக் குறிக்கிறது.