தோற்றங்களால் ஏமாற்றப்படாதீர்
நாங்கள் காட்டுப்பகுதியிலிருந்த ஒரு சிநேகிதியின் சொகுசான வீட்டில் தங்கியிருந்தோம், அவர்களுடைய அடுக்குமாடி வீட்டில் தரைமட்டத்திற்குக் கீழ்த்தளத்தில் தூங்கினோம். இப்படியாக, அதன் ஜன்னல்கள், உள்பக்கத்திலிருந்து எங்களுக்கு கண் மட்டத்திலும், வெளிப்பக்கத்திலிருந்து தரை மட்டத்திலும் இருந்தன. முதல் நாள் காலையில், ஆறு மணியளவில், கதவைத் தட்டுவது போன்ற இரட்டையொலி அவ்வீட்டின் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவதுபோல் தோன்றியதால் நான் விழித்துவிட்டேன். அவ்வொலி, ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து வருகிறதா அல்லது ஹீட்டரிலிருந்து வருகிறதா என்பதை அறிந்துகொள்ளும் ஆவலுடன், நான் எழுந்து சமையலறையை நோக்கி நடமாடினேன். இரண்டிலிருந்தும் அவ்வொலி வரவில்லை. குழப்பத்துடன் இருக்கையில், நடு அறையிலிருந்து திடீரென அவ்வொலி வருவதை நான் கேட்டேன். அமைதியாய் உள்ளே நடந்து சென்றேன்; வெளிப்பக்கத்தில், பளபளப்பான சிவப்புநிற கார்டனல் பறவையொன்று ஜன்னல் கதவுகளைத் தாக்கிக்கொண்டிருந்ததைக் கண்டபோது, ஆச்சரியமடைந்தேன்! அது காற்றில் பறந்துதிரிந்தது. அது வீட்டைச் சுற்றிலும் உள்ள—படுக்கையறை, குளியலறை, டிவி அறை ஆகியவற்றிலுள்ள—ஜன்னலுக்கு ஜன்னல்—எங்கெல்லாம் தரை மட்டத்தில் ஜன்னல் இருந்ததோ, அங்கெல்லாம்—வேகமாய்ப் பறந்தது. நான் குழப்பமடைந்தேன்.
நான் அமைதியாக ஜன்னலுக்குப் பக்கத்தில் சென்றபோது, அந்த மர்மத்துக்கான துப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்—பெண் கார்டனல் பறவையொன்று, வெளிப்பக்கத்தில் வெறுமனே ஒருசில அங்குலம் தள்ளி திருப்தியுடன் விதைகளைக் கொத்திக்கொண்டிருந்தது. ஆனால் அந்த ஆண் பறவை ஏன் ஜன்னல்களைத் தாக்கிக் கொண்டிருந்தது? கண்ணாடி ஜன்னலில் தோன்றிய அதனுடைய சொந்த உருவத்தின் பிரதிபலிப்பைப் பார்த்துக்கொண்டேயிருந்து, தனக்குப் போட்டியான கார்டனல் பறவை என்று தவறாக புரிந்துகொண்டிருந்தது. அதைப் பயமுறுத்தி விரட்ட முயன்றுகொண்டிருந்தது! தோற்றங்களால் அது ஏமாற்றப்பட்டது.
அப் பறவையின் வினோதமான நடத்தைக்கான உள்நோக்கம் இதுவே என்பதாக நான் பிறகு உறுதி செய்தேன். ஜூன் ஆஸ்போர்ன், தி கார்டனல் என்ற தன்னுடைய புத்தகத்தில், ஆண் கார்டனல் “தன் இனத்தைச் சேர்ந்த, ஆணின வேற்றுப் பறவைகள் அனைத்திலிருந்தும் தனக்குரிய நிலப்பகுதி பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்வதற்காக தேவைப்படும் அனைத்தையும் செய்கிறது. . . . இவ் வேற்றுப் பறவைகளைப் பயமுறுத்தி விரட்டுவது மட்டுமின்றி, வாகனங்களில் ஹப்பை மூடியிருக்கும் உலோகத்தட்டுகள், கார் கண்ணாடிகள், அல்லது வெளிப்புறத்தில் படங்களைக் கொண்ட ஜன்னல் கதவுகள், மற்றும் பக்கவாட்டில் இழுக்கப்படக்கூடிய கண்ணாடி கதவுகள் ஆகியவற்றில் பிரதிபலிக்கப்படும் தன் சொந்த உருவத்தையே பார்த்து அதற்கெதிராக மோதுவதாய் அறியப்பட்டுள்ளன” என்று கூறுகிறார். பிறகு அவர், நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு குறிப்பை இவ்வாறாக மேலும் கூறுகிறார்: “ஒரு வீட்டாருடைய வாழ்வில் அமைதியையே இது குலைப்பதாய் இருக்கலாம்.” அதுவே உண்மையென்பதை நாங்கள் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் கண்டோம்.
ஆண் பறவையின் கட்டுப்படுத்த முடியாத இந்த நடத்தையை நிறுத்துவதற்கு என்ன செய்யப்படலாம்? எழுத்தாளர் ஆஸ்போர்ன் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “நிம்மதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக, பளபளப்பான பரப்புகளை சில சமயங்களில் மூடுவது அவசியமாகிறது . . . , அதோடு, தற்கொலை செய்வதற்குச் சமமான இத் தாக்குதல்களால் அப் பறவை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் தீங்கிலிருந்து காப்பாற்ற இது உதவும்.”—அளிக்கப்பட்டது.