“தலைசிறந்த கலைஞரைத் தேடி”
அதுவே நவம்பர் 8, 1995 விழித்தெழு!-வின் தலைப்பாய் இருந்தது. அந்தப் பொருள், உலக முழுவதிலுமுள்ள வாசகரிடமிருந்து சாதகமான பிரதிபலிப்பைக் கொண்டுவந்தது.
காமரூனைச் சேர்ந்த டுயாலா நகரிலிருந்து ஆமான் இவ்வாறு எழுதினார்: “கலையை, விசேஷமாக நேர்த்தியான ஓவியங்களை நான் விரும்புவதால், அக் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேன் காக், ரெம்ப்ராண்ட், டா வின்ஸி, இன்னும் பிறரைவிட தலைசிறந்த ஒரு கலைஞர் இருக்கிறார்—அவர் யெகோவா தேவன் தாமே—என்பதை இப்போது மதித்துணருகிறேன்.”
பிரான்ஸுக்குரிய மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சான்பார்டேல்மியிலிருந்து ஃபிரெட்ரிக் இவ்வாறு கூறினார்: “நான் அதை நான்கு தடவை வாசித்தேன்; ஒவ்வொரு தடவையும் நம் படைப்பாளர் கொடுத்த அழகிய பொருட்களுக்கான நன்றியுணர்வால் என் உள்ளம் நிறைந்தது.”
இத்தாலியிலிருந்து ஆசுன்ட்டா இவ்வாறு எழுதினார்: “ஓவியம் தீட்டுவதற்கான ஆவலை அது என்னுள் தூண்டுவித்தது. கடவுளுடைய புதிய உலகுக்கான என் ஆர்வத்தை அது ஆழப்படுத்தியது.” செக் குடியரசிலிருந்து இரேனா இவ்வாறு கூறினார்: “அருங்காட்சியகங்களுக்குச் செல்கையில், கலைப்பொருட்களைப் பார்க்க நாம் கட்டணம் செலுத்த வேண்டும்; ஆனால் இயற்கை அழகு அனைத்தையும் படைத்தவர் ஒவ்வொரு நாளும் அவற்றை நமக்கு இலவசமாய் அளிக்கிறார்.” பிரேஸிலிலிருந்து ஆலின் இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் குணாதிசயங்களை நாம் மதித்துணரும்படி நமக்கு உதவும் கட்டுரைகளை நாம் அடிக்கடி பெறுகிறபோதிலும், இவை என் இதயத்தைக் கவர்ந்தன. யெகோவாவின் அன்புக்கான நம் போற்றுதலை வளர்க்கும் படைப்பைப் பற்றிய பல விவரங்களை அவை அளித்தன.”
பனிக்கால குளிரில் அ.ஐ.மா.-வின் விஸ்கான்ஸினிலிருந்து ஆன் இவ்வாறு எழுதினார்: “படைப்பின் அழகை மதித்துணர அது உண்மையிலேயே எனக்கு உதவியது. சில சமயங்களில், பனிக்காலத்தில் அதைக் காண்பது கடினமாயிருக்கிறது. நான் அக் கட்டுரையை வாசித்த அதே நாளில், வெளியே சென்று, ஒரு கிளையின் மேல் உறைபனி படிந்திருந்ததையும், பனியால் மூடப்பட்ட ஓர் இலையையும், பனிப்பாதையில் விலங்கின் கால்தடங்களையும் கவனித்தேன். ‘தலைசிறந்த கலைஞரை’ நாம் எவ்வாறு மதித்துணரலாம் என்பதைப் பற்றிய நினைப்பூட்டுதலுக்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.”
இப் பத்திரிகையைத் தொடர்ச்சியான முறையில் நீங்கள் பெற விரும்பினால், உங்களுக்கு அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்புகொள்ளுங்கள்; அல்லது பக்கம் 5-ல் உள்ள விலாசங்களில் மிக அருகிலுள்ள ஒன்றுக்கு எழுதுங்கள்.