பொய் சொல்லுதல் பற்றிய உண்மை
“புளுகுணி!” இந்தக் குத்தலான வார்த்தை எப்போதாவது உங்களை நோக்கி எய்யப்பட்டிருக்கிறதா? அப்படியானால், அதன் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்பை நீங்கள் சந்தேகமின்றி புரிந்துகொள்வீர்கள்.
மிகவும் அருமையாக வைத்துப் பாதுகாக்கும் பூஞ்சாடி ஒன்று தரையில் தட்டி விடப்பட்டால் நொறுங்கிவிடலாம்; அதைப் போலவே ஓர் அருமையான உறவும் பொய் சொல்லுதலால் நொறுங்கிவிடலாம். காலப்போக்கில், அந்தச் சேதத்தை நீங்கள் சரிசெய்யக்கூடும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த உறவு மீண்டும் ஒருபோதும் பழைய நிலைமைக்கு திரும்பாது.
“தங்களிடம் பொய் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தவர்கள் மீண்டுமாக அந்த நட்பை புதுப்பிக்க பொய் சொன்னவர் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து முன்ஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள். மேலும் அவர்கள், கண்டுபிடிக்கப்பட்ட பொய்களைக் கருத்தில் கொண்டு, பழைய நம்பிக்கைகளையும் செயல்களையும் மீண்டும் சிந்தித்துப் பார்க்கிறார்கள்,” என்பதாக பொய் சொல்லுதல்—பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கப்பூர்வமான தெரிவு (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்லுகிறது. ஏமாற்றியது வெளிப்படையாகத் தெரிய வந்ததும், நல்ல பேச்சுத் தொடர்புடனும் நம்பிக்கையுடனும் செழித்துவந்த உறவு, சந்தேகத்தாலும் அவநம்பிக்கையாலும் திணறுகிறது.
பொய் சொல்லுதலுடன் இத்தனை சாதகமற்ற உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், நாம் கேட்க வேண்டியது என்னவென்றால், ‘அப்பேர்ப்பட்ட தவறான பழக்கம் எப்படி ஆரம்பித்தது?’
முதல் பொய்
யெகோவா தேவன் முதல் மனித ஜோடியாகிய ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, அவர்களை ஓர் அழகிய தோட்ட வீட்டில் வைத்தார். அவர்களுடைய வீட்டில் எந்த வகையான ஏமாற்றம் அல்லது வஞ்சிப்பும் இல்லாமல் இருந்தது. அது உண்மையிலேயே ஒரு பரதீஸாக இருந்தது!
என்றபோதிலும், ஏவாளைப் படைத்து சில காலத்திற்குப்பின், பிசாசாகிய சாத்தான் ஆசைகாட்டி மயக்கும் ஒரு அளிப்புடன் அவளை அணுகினான். கடவுள் விலக்கி வைத்திருந்த ‘விருட்சத்தின் கனியை’ புசித்தால் கடவுள் சொன்னபடி அவள் சாகமாட்டாள் என்று ஏவாளிடம் சொல்லப்பட்டது. மாறாக, அவள் ‘நன்மை தீமை அறிந்து தேவனைப் போல்’ இருப்பாள். (ஆதியாகமம் 2:17; 3:1-5) ஏவாள் சாத்தானை நம்பினாள். அவள் அந்தப் பழத்தை எடுத்து, சாப்பிட்டுவிட்டு, பின்னர் கொஞ்சத்தைத் தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆனால் சாத்தான் வாக்களித்தபடி கடவுளைப்போல் ஆவதற்குப் பதிலாக, ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிதலற்ற பாவிகளாக, கேட்டுக்கு அடிமைகளாக ஆனார்கள். (2 பேதுரு 2:19) அந்த முதல் பொய்யைச் சொல்வதன் மூலம், சாத்தான் “எல்லா பொய்களுக்கும் தந்தையாக” ஆனான். (யோவான் 8:44, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) பொய் சொல்லுகையில் அல்லது சொன்ன பொய்யில் நம்பிக்கை வைக்கையில் எவருமே வெற்றி பெறுவதில்லை என்பதை காலப்போக்கில் இந்தப் பாவிகளான மூவரும் கற்றுக்கொண்டார்கள்.
சாவுக்கேதுவான விளைவுகள்
வேண்டுமென்றே கீழ்ப்படியாமலிருப்பது தண்டனைக்குத் தப்பாது என்பதை பரலோகத்திலும் பூமியிலும் உள்ள தம் படைப்புகள் அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்பினார். கலகத்தனமான அந்த ஆவி சிருஷ்டியை மீதமுள்ள நாளெல்லாம் தம்முடைய பரிசுத்த அமைப்பிற்கு வெளியே வாழும்படி கண்டனம் செய்வதன் மூலம் கடவுள் உடனடியாகச் செயல்பட்டார். மேலுமாக, முடிவில் சாத்தான் முழுமையாக அழிக்கப்படும்படி யெகோவா பார்த்துக்கொள்வார். கடவுள் வாக்களித்த “வித்து” சாவுக்கேதுவான தலைக் காயத்தை ஏற்படுத்தும்போது இது சம்பவிக்கும்.—ஆதியாகமம் 3:14, 15; கலாத்தியர் 3:16.
ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய பங்கில் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். இவ்வாறு சொல்லி கடவுள் ஆதாமுக்குத் தீர்ப்பளித்தார்: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” கடவுள் முன்னறிவித்திருந்தபடியே, காலப்போக்கில் அவனும் ஏவாளும் இறந்தனர்.—ஆதியாகமம் 3:19.
ஆதாமின் சந்ததியாராக, மனித குடும்பம் முழுவதும் ‘பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டிருக்கிறது.’ எல்லா மனிதரும் அபூரணத்தைச் சுதந்தரித்திருக்கிறார்கள்; அது மரணத்துக்கு வழிநடத்துகிறது. (ரோமர் 5:12; 6:23; 7:14) முதல் பொய்யின் விளைவுகள் எவ்வளவு திடுக்கிட வைப்பவையாய் இருக்கின்றன!—ரோமர் 8:22.
ஆழமாகப் பதிந்துள்ள பழக்கம்
சாத்தானும் கடவுளுக்கு எதிரான கலகத்தில் அவனுடன் சேர்ந்துகொண்ட தூதர்களும் இன்னும் அழிக்கப்படாததால், அவர்கள் ‘பொய் பேசும்படி’ மனிதரைத் தூண்டுகிறார்கள் என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படக் கூடாது. (1 தீமோத்தேயு 4:1-3) அதன் விளைவாக, பொய் சொல்லுதல் மனித சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. “பொய் சொல்லுதலைக் குறித்து சமுதாயம் இப்போதும் மரத்துப்போகுமளவுக்கு அது சமுதாயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது” என்று லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. இன்று அநேகர் அரசியலையும் அரசியல்வாதிகளையும் பொய் சொல்லுதலுடன் நெருங்க சம்பந்தப்படுத்துகிறார்கள்; ஆனால் மிகவும் இழிவான பொய்யர்களில் மதத் தலைவர்களும் அடங்கியுள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின்போது மத விரோதிகள் அவரைக் குறித்து பொய்யைப் பரப்பினார்கள். (யோவான் 8:48, 54, 55) இவ்வாறு சொல்லி, அவர் அவர்களை வெளிப்படையாக கண்டனம் செய்தார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; . . . அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”—யோவான் 8:44.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், அவருடைய கல்லறை காலியாக இருந்ததைக் கண்டு, என்ன பொய் பரப்பப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிரதான ஆசாரியர்கள், “சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்,” என்று சொன்னதாக பைபிள் கூறுகிறது. இந்தப் பொய் விரிவாகப் பரவியது; அநேகர் அதால் ஏமாற்றப்பட்டனர். அந்த மதத் தலைவர்கள் எவ்வளவு பொல்லாதவர்களாய் இருந்தனர்!—மத்தேயு 28:11-15.
இன்றைய மத பொய்கள்
இன்று மதத் தலைவர்களால் சொல்லப்படுகிற பிரதானமான பொய் என்ன? சாத்தான் ஏவாளிடம் சொன்னதற்கு ஒப்பான ஒன்றாகும்: ‘நீங்கள் சாகவே சாவதில்லை.’ (ஆதியாகமம் 3:4) ஆனால் ஏவாள் உண்மையில் செத்துப்போனாள்; பூமிக்கு, தான் உண்டாக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பினாள்.
என்றாலும், அவள் இறப்பது போன்ற தோற்றத்தை மட்டும் அளித்துவிட்டு, வேறு ஏதாவது உருவில் உண்மையில் தொடர்ந்து உயிர்வாழ்ந்தாளா? மரணம் என்பது, வேறொரு வாழ்க்கைக்கு வெறுமனே ஒரு நுழைவாயிலாக இருக்கிறதா? ஏவாளின் உணர்வுள்ள ஏதாவதொரு பகுதி தொடர்ந்து வாழ்வதாக பைபிள் எவ்வித அறிகுறியும் அளிப்பதில்லை. அவளுடைய ஆத்துமா தொடர்ந்து பிழைத்திருக்கவில்லை. அவள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததன்மூலம் பாவம் செய்திருந்தாள்; பைபிள் சொல்கிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) ஏவாளும் அவளுடைய கணவனைப் போலவே உயிருள்ள ஓர் ஆத்துமாவாக படைக்கப்பட்டாள்; ஆகவே உயிருள்ள ஓர் ஆத்துமாவாக அவளுடைய வாழ்க்கை முடிவடைந்தது. (ஆதியாகமம் 2:7) இறந்தவர்களின் நிலையைக் குறித்து பைபிள் சொல்கிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) என்றாலும், சர்ச்சுகள் பொதுவாக என்ன போதிக்கின்றன?
மனிதர்கள் அழியாத ஆத்துமா ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், வேறொரு வாழ்க்கையை—பேரின்பமான அல்லது வேதனைக்குரிய வாழ்க்கையை—அனுபவிக்கும்படி மரணம் அவர்களை விடுவிக்கிறது என்றும் சர்ச்சுகள் பெரும்பாலும் போதிக்கின்றன. உதாரணமாக, தி காத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “நரக வேதனைகளின் நித்தியதன்மையை மத நம்பிக்கையின் ஓர் உண்மையாக சர்ச் வெளிப்படையாகப் போதிக்கிறது; தெளிவான முரண் கருத்தின்றி எவரும் அதை மறுக்கவோ அதைக் குறித்து கேள்வி எழுப்பவோ முடியாது.”—தொகுதி 7, பக்கம் 209, 1913-ன் பதிப்பு.
பைபிள் தெளிவாக என்ன சொல்லுகிறதோ அதிலிருந்து அந்தப் போதனை எவ்வளவு வித்தியாசப்பட்டதாக இருக்கிறது! ஒரு மனிதன் இறக்கும்போது, “அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்பதாக பைபிள் போதிக்கிறது. (சங்கீதம் 146:4) ஆகவே, பைபிள் சொல்லுகிறபடி, இறந்தவர்கள் எவ்வித வேதனையையும் அனுபவிக்க முடியாது, ஏனென்றால் என்னவாயினும் அவர்கள் எதைக் குறித்தும் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே, பைபிள் இவ்வாறு உந்துவிக்கிறது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழி] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:10.
கவனமாக இருப்பதன் அவசியம்
இயேசுவின் காலத்தில் ஆசாரியர்களின் பொய்களால் அநேகர் தவறாக வழிநடத்தப்பட்டதுபோலவே, இன்றைய மதத் தலைவர்களின் பொய் போதகங்களால் ஏமாற்றப்படும் அபாயமும் இருக்கிறது. இவர்கள் ‘தேவனுடைய சத்தியத்தை பொய்யாக மாற்றி,’ மனித ஆத்துமா அழியாது, நரக அக்கினியில் மனித ஆத்துமாக்கள் வாதிக்கப்படும் போன்ற பொய் போதனைகளை முன்னேற்றுவிக்கிறார்கள்.—ரோமர் 1:25.
மேலுமாக, மனித பாரம்பரியத்தையும் தத்துவ ஞானத்தையும் பைபிள் சத்தியத்துக்கு சமமான இடத்தில் இன்றைய மதங்கள் சாதாரணமாக வைத்துவிடுகின்றன. (கொலோசெயர் 2:8) இவ்வாறாக, ஒழுக்கத்தைப் பற்றிய கடவுளுடைய சட்டங்கள்—நேர்மை, பாலின நடத்தை சம்பந்தப்பட்ட சட்டங்கள் உட்பட—தீர்மானமான சட்டங்களாக இல்லாமல் சம்பந்தப்பட்டவையாகவே கருதப்படுகின்றன. டைம் பத்திரிகையில் விளக்கப்பட்டவிதமாகவே அதன் விளைவு இருக்கிறது: “சமுதாயத்தில் நம்பிக்கையற்ற நிலை நிலவுகையில், ஒருவரோடொருவர் நடந்துகொள்ளும் விதத்தை ஆட்கொள்ளும் நியமங்களை மக்கள் இனிமேலும் புரிந்துகொள்ளாமலோ அவற்றிற்கு ஒத்திசைந்து செல்லாமலோ இருக்கையில், பொய்கள் செழித்தோங்குகின்றன.”—ஒப்பிடுக: ஏசாயா 59:14, 15; எரேமியா 9:5.
சத்தியத்தைக் குறைவாக எடைபோடும் ஒரு சூழலில் வாழ்வது, பொய் சொல்லக் கூடாதென்ற கடவுளுடைய கட்டளைக்கு இசைந்து செல்வதைக் கடினமாக்குகிறது. எப்போதுமே உண்மையாக இருப்பதற்கு எது நமக்கு உதவலாம்?
உண்மைக்காக நிலைநிற்கை எடுத்தல்
நம்முடைய படைப்பாளரை மகிமைப்படுத்துவதற்கான நம் விருப்பம், உண்மையான பேச்சை வளர்த்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த தூண்டுதலை அளிக்கிறது. குறிப்பிடத்தக்கவண்ணம், பைபிள் அவரை ‘சத்தியபரர்’ என்று அழைக்கிறது. (சங்கீதம் 31:5) ஆகவே, ‘பொய்நாவை’ வெறுக்கும் நம் படைப்பாளரை பிரியப்படுத்த நாம் விரும்பினால், நாம் அவரைப் பின்பற்றும்படி தூண்டப்படுவோம். (நீதிமொழிகள் 6:17) இதை நாம் எவ்வாறு செய்யலாம்?
ஆர்வத்துடன் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதானது, ‘அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசுவதற்கான’ பலத்தை நமக்குக் கொடுக்கும். (எபேசியர் 4:25) என்றாலும், கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று அறிந்திருப்பது மட்டுமே போதுமானதல்ல. இன்று உலகிலுள்ள அநேகரைப் போல, எப்போதும் உண்மை பேசுவதற்கான மனச்சாய்வு நமக்கு இல்லையென்றால், அவ்வாறு செய்வதற்கு உண்மையான முயற்சியை நாம் எடுப்பது அவசியம். நாம் அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தைப் பின்பற்றி நம்மிடமே நாம் கண்டிப்பாக இருக்க வேண்டும். “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்,” என்று பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 9:27.
எப்போதுமே உண்மை பேசுவதற்கான போராட்டத்தில் மற்றுமோர் உதவி ஜெபம். யெகோவாவின் உதவிக்காக மன்றாடுவதன்மூலம், “இயல்புக்கு மீறிய வல்லமையை” நாம் பெறலாம். (2 கொரிந்தியர் 4:7, NW) ‘சத்திய உதடை’ காத்துக்கொண்டு, ‘பொய்நாவை’ விலக்கிவிடுவது உண்மையில் ஒரு நிஜ போராட்டமாக இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 12:19) ஆனால் யெகோவாவின் உதவியுடன் அதைச் செய்ய முடியும்.—பிலிப்பியர் 4:13.
பொய்சொல்லுதலை இயல்பான காரியம் என தோன்றச் செய்வது பிசாசாகிய சாத்தான் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். முதல் மனுஷியாகிய ஏவாளிடம் தீய எண்ணத்துடன் பொய் சொல்லி அவளை அவன் ஏமாற்றினான். என்றபோதிலும், சாத்தானின் பொய்யான வழிகளின் அழிவுக்குரிய விளைவுகளை நாம் மிக நன்றாக அறிந்திருக்கிறோம். தன்னலமுள்ள ஒரு பொய்யின் காரணமாகவும் தன்னலமுள்ள மூன்று நபர்களாகிய ஆதாம், ஏவாள் மற்றும் சாத்தானின் காரணமாகவும் சொல்லொண்ணா துயர் மனித குடும்பத்தின்மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.
ஆம், பொய் சொல்லுதலைப் பற்றிய உண்மை என்னவென்றால், அது சாவுக்கேதுவான ஒரு விஷத்துக்கு ஒப்பாக இருக்கிறது என்பதே. என்றாலும், மகிழ்ச்சிக்குரியவிதத்தில், நாம் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியும். பொய் சொல்லும் பழக்கத்தை நாம் நிறுத்திவிட்டு, “மகா தயையும், சத்தியமுமுள்ள” கடவுளாகிய யெகோவாவின் ஆதரவை நித்தியத்திற்கும் அனுபவிக்கலாம்.—யாத்திராகமம் 34:6.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
பொய் சொல்லுதல் சாவுக்கேதுவான விஷத்திற்கு ஒப்பாயிருக்கிறது
[பக்கம் 17-ன் படம்]
பொய் சொல்லுதலின் விளைவு, ஒரு பூஞ்சாடி சிதைந்து நொறுங்குவதைப் போன்றிருக்கிறது