ஒரு கழுகுக் ‘கூட்டில்’ நட்சத்திரத்தின் பிறப்பு
● நட்சத்திரங்கள் எவ்வாறு பிறக்கின்றன? ஏன் அவற்றில் சில மற்றவற்றைக் காட்டிலும் பெரியவையாகவும் அதிக பிரகாசமானவையாகவும் இருக்கின்றன? ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை வைத்து ஆச்சரியமான விதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நட்சத்திரம் எவ்வாறு பிறக்கிறதென்பதை நமக்கு வெளிப்படுத்தலாம். இந்த அசாதாரண செயல் கழுகு நிபுலாவின் (Eagle Nebula) நடுவே நடைபெறுகிறது; கழுகு நிபுலா என்பது நமது பால்வீதி மண்டலத்திலுள்ள வாயுவும் தூசியும் நிறைந்த மேகமாகும்.
பூமியிலிருந்து நட்சத்திரத்தை நோக்குவோருக்கு, இந்தக் கழுகு நெபுலா, இறக்கைகளை விரித்துக்கொண்டும் நகம் தெரியும்படியும் இருக்கும் கழுகைப் போன்று காட்சியளிக்கிறது. வானவியல் நிபுணரான ஜெஃப் ஹெஸ்டரும் அரிஜோனா நகர பல்கலைக்கழகத்தில் அவருடன் வேலைசெய்பவர்களும் நகம்போன்ற பகுதிகளைப் படம்பிடிக்க விரும்பினர்; நகம்போன்ற ஒவ்வொரு பகுதியும் யானைத் தும்பிக்கையைப்போன்ற தூண்களாகும். அங்கே, புறஊதாக் கதிர் ஹைட்ரஜன் மூலக்கூறுகளை அயனிகளாக்குகிறது, அதாவது அவற்றின் எலக்ட்ரான்களை நீக்கிவிடுகிறது.
ஹபிள் புகைப்படத் தொகுப்பு, தூண்களின் முனைகளிலிருந்து டஜன் கணக்கான சிறு விரல்கள் நீண்டுகொண்டிருப்பதைக் காட்டுகிறது. விரல்நுனிகளில், அடர்த்தியான வாயுவானது வட்டமான துளிகளாகிறது; இதில்தான் நட்சத்திரங்களும், சில வானவியல் நிபுணர்களின்படி கிரகங்களும்கூட ஒருவேளை பிறக்கலாம். எனினும், இந்தத் துளிகளின் வளர்ச்சி, இதற்குமுன் நெபுலாவில் உருவாகியிருக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் அடர்த்தியான வாயுக்களால் தடைசெய்யப்படுகிறது. இவற்றினுள் மிகவும் பிரகாசமாயிருக்கும் நட்சத்திரம், நமது சூரியனைக் காட்டிலும் 1,00,000 மடங்கு அதிக பிரகாசமாகவும் எட்டு மடங்குக்குமேல் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கலாம். அவற்றின் கதிர்வீச்சு ஏற்கெனவே நெபுலாவில் குறைவான செறிவுள்ள பகுதிகளை அரித்துவிட்டிருக்கிறது. ஃபோடோ இவாப்பரேஷன் என அழைக்கப்படும் இந்தச் செயல், புதிதாய் உருவான நட்சத்திரங்களால் விழுங்கப்படும் பொருட்களை அகற்றுவதன் மூலம் நட்சத்திரம் உருவாவதைத் தடைசெய்யலாம். கரைந்துபோகும் வாயுவானது, வாயு-மற்றும்-தூசியின் தூண்களிலிருந்து எழும்பும் நீராவிபோல் புகைப்படங்களில் காட்சியளிக்கிறது.
இந்த வாயுத் துளிகளில் ஒன்று பிரகாசிக்க ஆரம்பிக்க வேண்டுமென்றால், அணுவியல் சார்ந்த மாற்றங்களை உண்டாக்கும் அளவிற்கு அது மிகப் பெரியதாய் இருக்க வேண்டும். அதன் அளவு சூரியனின் அளவில் குறைந்தபட்சம் 8 சதவீதமாவது இருக்க வேண்டுமென அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், ஒளி வெளியே பாய்ந்து செல்வதற்கு, அதைச் சுற்றியுள்ள தூசி போதுமானளவு அகற்றப்பட வேண்டும். எனினும், ஒளி வீசும் அளவிற்கு அந்தத் துளி பெரியதாகாவிட்டால், அது வெறுமனே ப்ரௌன் டுவார்ஃப் என அறியப்பட்டிருக்கும் இருண்ட வாயு பந்தாக ஆகிவிடுகிறது. சமீபத்தில், வானவியல் நிபுணர்கள் ப்ரௌன் டுவார்ஃப் ஒன்றை முதன்முதலில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கழுகு நெபுலாவிலிருக்கும் தூசி மேகங்கள், புயல் வீசும் நாட்களில் காணப்படும் இடிமேகங்களைப் போன்றே இருப்பதால், அத்தூசி மேகங்களொன்றும் அந்தளவுக்கு பெரியவையல்ல என்று நினைத்து நீங்கள் ஏமாந்துவிடலாம். உண்மையில், ஒவ்வொரு தூண்போன்ற மேகமும் அவ்வளவு நீளமாக இருப்பதன் காரணமாக ஒரு முனையில் திடீரென உருவாகும் ஒளி மறுமுனைக்குச் செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பயணம் செய்ய வேண்டும். மேலும், உருவத்திலுள்ள ஒவ்வொரு “சின்னஞ்சிறு” துளியும் நமது சூரிய மண்டலத்தின் அளவுக்கு ஒப்பாக இருக்கிறது. மேலும், இந்த நெபுலா அந்தளவுக்கு வெகுதொலைவில் இருப்பதன் காரணமாக, நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்த அதன் ஒளி நம்மிடம் வந்துசேர சுமார் 7,000 வருடங்கள் எடுத்தது. அப்படியென்றால் நாம் கழுகு நெபுலாவை மனிதன் உண்டாக்கப்படுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் நோக்குகிறோம்.
ஓரியன் நெபுலாவைப் போன்ற மற்ற நெபுலாக்களில்கூட நட்சத்திரங்கள் உருவாவதாக வானவியல் நிபுணர்கள் கவனித்திருக்கிறார்கள். எனினும், மற்ற நெபுலாக்கள் தென்படும் கோணம் அந்தச் செயல் நடைபெறுவதை தெளிவாக பார்க்க முடியாதபடி தடைசெய்கிறது. நட்சத்திரங்கள், வெறுமனே எரிந்துவிடுவதன் மூலமாகவோ பயங்கரமாக வெடிப்பதன் மூலமாகவோ ஈர்ப்பு விசையால் சிதைந்துபோய் அளவுக்கதிகமான ஈர்ப்பு விசை நிறைந்த இடமாவதன் மூலமாகவோ அழிந்துவிடலாம். இப்பிரபஞ்சத்தை உண்டாக்கியிருக்கும் யெகோவா தேவன் நட்சத்திரங்களைக் குறித்து கணக்குவைத்திருக்கிறார், ஏனெனில் அவை அனைத்தும் அவரால் எண்ணப்பட்டு பெயரிடப்பட்டிருக்கின்றன. (ஏசாயா 40:26) இந்த நட்சத்திர கழுகுக் “கூடு,” கடவுள் “ஒளியைப் படைத்து” மகிமையில் வித்தியாசப்படும் நட்சத்திரங்களை உண்டாக்கியிருக்கிற சில விதங்களை நமக்கு மெய்ப்பித்துக் காண்பிக்கலாம்.—ஏசாயா 45:7; 1 கொரிந்தியர் 15:41.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 15-ன் படம்]
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]
J. Hester and P. Scowen, (AZ State Univ.), NASA