போபோகாடேபெல் மெக்ஸிகோவின் கம்பீரமான, நடுங்கவைக்கும் எரிமலை
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அழகான, ஆனால் நடுங்கவைக்கும் ஓர் எரிமலைக்கு அருகாமையில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? ஒருவேளை நீங்கள் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்கள். இருந்தபோதிலும், மெக்ஸிகோவிலுள்ள கம்பீரமான எரிமலையான போபோகாடேபெலைச் சுற்றியிருக்கும் பட்டணங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை உண்மையில் இப்படித்தான் இருக்கிறது.
அந்த எரிமலையின் சரித்திரம்
நாவாட்டில் என்ற மொழியில் அதன் பெயரின் அர்த்தம் “மலை” அல்லது “புகையும் குன்று.” அது 5,452 மீட்டர் உயரத்திலிருக்கிறது; மெக்ஸிகோ மற்றும் மரேலஸ் நகரங்களின் எல்லைக்குப் பக்கத்திலுள்ள ப்வெப்லா நகரத்தில் சியெர்ரா நிவாடா மலைகளில் அது அமைந்திருக்கிறது. அது அழகான, கம்பீரமான கூம்பு வடிவை உடையது; வருடம் முழுவதும் அதன் உச்சியில் பனி காணப்படுகிறது. மனதில் பதியத்தக்க இந்த எரிமலை, 1347-ம் வருடத்திலிருந்து 1927-ம் வருடம்வரை சுமார் 16 தடவை வெடிப்பதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கையைப் பாழ்ப்படுத்தியிருக்கிறது. எனினும், இந்த வெடிப்புகள் எவையும் குறிப்பிடத்தக்கவையாய் இல்லை.
இந்த எரிமலை இரு பெரிய நகர்ப்பகுதிகளுக்கிடையே—கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ப்வெப்லா நகரத்திற்கும், வடமேற்கில் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மெக்ஸிகோ நகரத்திற்கும் இடையே—அமைந்திருக்கிறது. மேலும், ப்வெப்லா நகரத்தில், மொத்தம் 4,00,000 மக்கள் வாழும் 307 பட்டணங்கள் அந்த எரிமலைக்கு அருகாமையில் இருக்கின்றன. இங்கு மக்கள் அனைவருமே மிகவும் ஆபத்தான இடங்களில் குடியிருக்கவில்லை என்பது உண்மையென்றாலும், போபோகாடேபெல் பயங்கரமாக வெடித்தால், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பார்த்தால் அந்தப் பகுதியினரை அது படு மோசமாக பாதிக்கும்.
1994-ம் ஆண்டு முடிவில், எரிமலை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டதால் அபாய அறிவிப்பு செய்து, மக்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேற்ற ஆரம்பித்தனர். டிசம்பர் 21, 1994-ல் அந்த எரிமலை வாயின் அடிப்பாகத்தில் குறைந்தபட்சம் மூன்று துளைகள் காணப்பட்டன; அவற்றின் வழியே வாயுவும் நீராவியும் பீறிட்டு வெளியேறின. ப்வெப்லா நகர் வரை பாய்ந்து சென்ற சாம்பலின் அளவு கிட்டத்தட்ட 5,000 டன்னாக இருந்தது. அதன்பின் சுமார் 50,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஒரு திட்டத்தை அரசு செயற்படுத்தியது; அம்மக்களில் 30,000 பேரை பாதுகாப்பிடங்களில் தங்கவைத்தது.
யெகோவாவின் சாட்சிகளும்கூட தேவையிலிருப்போருக்கு தங்களது வீட்டில் இடம் கொடுத்தனர். (அப்போஸ்தலர் 4:32-35-ஐ ஒப்பிடுக.) நிவாரணப் பணிக்கான சாட்சிகளின் ஆலோசனைக் குழுவிடமிருந்த வந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “காலம் கடந்துவிட்ட, மிக அவசரமாக செயல்பட வேண்டிய நிலையிலும்கூட, ப்வெப்லா நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த சகோதரர்களின் பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்கது. 600-க்கும் அதிகமான மக்களுக்கு இடவசதியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு தொலைக்காட்சி நிலையம் இவ்வாறு அறிவித்தது: ‘யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக செயல்பட்டனர். ஆபத்தான அவ்விடத்திலிருந்து தங்களது சகோதரர்களை உடனடியாக வெளியேற்றினர்.’ ”
அந்த எரிமலை மீண்டும் எழும்புகிறது
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, செவ்வாய்க்கிழமை, மார்ச் 5, 1996, காலை 3:50 மணிக்கு, எரிமலையின் அதிர்வு திடீரென அதிகரித்தது கவனிக்கப்பட்டது; இது ஒருவேளை டிசம்பர் 21, 1994-ல் நிகழ்ந்த எரிமலை செயல்பாட்டில் வாயுவும் நீராவியும் பெரும் குழாய்போன்ற துளைகளில் பீறிட்டு வெளியேறியதோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். இந்தக் குழாய்கள் சாம்பலினால் அடைபட்டு, இவ்வாறு எரிமலையின் உள் அழுத்தத்தை அதிகரித்ததென்பதை புகைப்படங்களும் கிடைத்த தகவலும் உறுதிசெய்தன. இந்த அழுத்தத்தினால் கடைசியில் அந்தக் குழாய்கள் மறுபடியும் திறந்தன.
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 9, 1996-ன் எல் யூனிவர்ஸல் செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “போபோகாடேபெல் எரிமலை வாய் எரிமலைக்குழம்பைக் கக்கியது; ஆகவே அறிவியல் குழுமமும் சமூக பாதுகாப்பு ஏஜென்ஸியைச் சேர்ந்த அதிகாரிகளும், எரிமலை குமுறல் தீவிரமடைந்திருப்பதை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாய் இருக்கிறார்கள்.” ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் “ ‘குவிமாடம்’ போன்ற உருவத்தை உண்டாக்கியிருக்கின்றன; இது போபோகாடேபெலின் ‘குழாய்த்துளைகள்’ சில மாதங்களில் எரிமலைக்குழம்பால் நிரம்பி, வெளியே பீறிட்டு வழிந்தோடுவதில் விளைவடையும்,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வியாழன், மே 2, 1996, ப்வெப்லா நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், போபோகாபேடெல் தற்போது செயல்படும் விதத்தை கருத்தில் கொண்டு அதன் தன்மைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. மெக்ஸிகோவிலுள்ள நாஷனல் ஆடோனாமஸ் யூனிவர்ஸிட்டியின் புவி இயற்பியல் நிறுவன அங்கத்தினரான டாக்டர் செர்வான்டோ டெ லா க்ரூஸ் ரேனா இவ்வாறு குறிப்பிட்டார்: “இயல்பாகவே, இது அதிக கவலை தருகிறது . . . இந்த எரிமலை இன்னும் பயங்கரமாக வெடிப்பதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கிறது. இது நடக்கும், இதை நாங்கள் துளியும் மறுக்கவில்லை.”
அரசாங்கமானது வீட்டுவசதி செய்துதருவதைப் பற்றியும் மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டு, மக்களுக்கு வழிகாட்ட கூட்டங்கள் நடத்தினாலும், உண்மையில், அந்த எரிமலை வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்பதைப் பற்றி எந்தவொரு தெளிவான ஆலோசனைகளும் கொடுக்கப்படவில்லை என அந்தப் பகுதியில் வாழும் மக்கள் நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, முன்பு குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில், ஆபத்திலிருக்கும்போது எந்தப் பாதுகாப்பிடத்திற்கு அல்லது பாதுகாப்பிடங்களுக்கு செல்ல வேண்டுமென்பது தங்களுக்குத் தெளிவாக தெரியவில்லை என்பதாக சொல்லி அந்த எரிமலைக்கு அருகாமையிலிருக்கும் பட்டணங்களின் பிரதிநிதிகள் அநேகர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்த எரிமலை அளித்திருக்கும் எச்சரிப்புகளுக்கு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். விவேகமுள்ள ஆட்கள் பொருளுடைமைகளை இழக்கவேண்டியிருந்தாலும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தங்களால் முடிந்ததையெல்லாம் சந்தேகமில்லாமல் செய்வார்கள். அந்தப் பகுதியில் வாழும் யெகோவாவின் சாட்சிகள், தேவை எழும்பும்போது அங்கிருந்து வெளியேற தயாராகிவருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த சாட்சிகளை காலந்தவறாமல் சென்று சந்தித்து, ஆபத்தின்போது என்ன செய்யலாம் என்பதன்பேரில் ஆலோசனை அளிக்க நிவாரணப் பணிக்கான ஓர் ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எரிமலை ஆய்வாளர்கள் அந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் ஆபத்துண்டாக்கலாம் என சொல்லி தெளிவாகவே எச்சரித்திருப்பதன் காரணமாக, ஆபத்தான பகுதிக்கு அருகாமையில் வாழ்வோர் அவகாசம் இருக்கும்போதே வெளியேறும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். அந்தத் தீர்மானம் ஒவ்வொரு குடும்பத்தினுடையது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இப்போது, எரிமலைக்கு அருகாமையில் வாழும் மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனாலும், அம்மக்களுக்கு உள்ள அறிவு, எரிமலையோ அதிகாரங்களோ அவசர நிலையை அறிவிக்கும்படி கொடுக்கும் எந்தவித எச்சரிப்பைக் குறித்தும் விழிப்புடனிருக்கச் செய்யும். கம்பீரமான ஆனால் நடுங்கவைக்கும் போபோகாடேபெல் எரிமலை தரும் எச்சரிப்புகளை தொடர்ந்து அலட்சியம் செய்வது ஞானமானதல்ல.
[பக்கம் 20-ன் பெட்டி]
ஆபத்து நேரிடுவதற்குமுன் செய்ய வேண்டியவை
பேராபத்துகளைத் தடுப்பதற்கான நாஷனல் சென்டர், ஆபத்து நேரிடுவதற்குமுன் செய்ய வேண்டிய காரியங்களின் ஒரு பட்டியலை அளித்திருக்கிறது:
• தப்பித்துச்செல்வதற்கான வழியை அறிந்துவைத்திருங்கள். (எரிமலைக் குழம்போ, தண்ணீரோ அல்லது சேறோ பாய்ந்தோடுவதற்கு வசதியாயிருக்கும் தாழ்வான பகுதிகளை அல்ல ஆனால் உயரமான இடங்களைப் பார்த்துவைத்துக்கொள்ளுங்கள்)
• சொந்த பத்திரங்கள், மருந்துகள், தண்ணீர், மாற்றிக்கொள்வதற்கு உடை (உடம்பை முழுமையாக மூடும் கெட்டியான உடை விரும்பத்தக்கது), ஒரு தொப்பி, மூக்கையும் வாயையும் மூடுவதற்கு ஒரு கைக்குட்டை, டார்ச் லைட்டுகள், ஒரு ரேடியோ, பாட்டரிகள், ஒரு கம்பளி ஆகியவற்றை ஒரு சூட்கேஸில் தயாராக வைத்திருங்கள்
• இடமளிக்க முடிந்த உறவினர்களிடம் பேசி முன்னேற்பாடுகள் செய்து, இவ்வாறு பொது இடங்களில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்
• அவசியமானவற்றை மாத்திரம் எடுத்துச்செல்லுங்கள். செல்லப்பிராணிகளை அல்லது மிருகங்களை எடுத்துச்செல்லாதீர்கள்
• பொது பாதுகாப்பிடங்களைக் கண்டுபிடிப்பதெப்படி என்பதை தெரிந்து வைத்திருங்கள்
• மின்சாரம், காஸ், தண்ணீர் ஆகியவற்றின் சப்ளையை துண்டியுங்கள்
• அமைதியாய் இருங்கள்