நீங்கள் தரமான பொழுதுபோக்கைக் கண்டடையலாம்
பொழுதுபோக்கிலிருந்து இன்பம் பெறுவதை பைபிள் தடைசெய்வதில்லை; அல்லது இன்பப் பொழுதுபோக்குக்குச் செலவிடும் நேரம் வீண் என்பதாகவும் சொல்வதில்லை. அதற்கு மாறாக, “நகைக்க ஒரு காலமுண்டு” என்றும், “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்றும் பிரசங்கி 3:4 சொல்கிறது. a பண்டைய இஸ்ரவேலில், கடவுளின் ஜனங்கள் இசை, நடனம், விளையாட்டு ஆகியவை உள்ளிட்ட வெவ்வேறு விதமான பொழுதுபோக்கிலிருந்து இன்பம் அனுபவித்தனர். இயேசுவே, ஒரு பெரிய திருமண விருந்துக்கும், மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘பெரிய விருந்துக்கும்’ சென்றிருந்தார். (லூக்கா 5:29; யோவான் 2:1, 2) ஆகவே, ஓர் இனிய பொழுதைக் கழிப்பதைத் தவறு என்பதாக பைபிள் கூறுவதில்லை.
என்றபோதிலும், இன்றைய பொழுதுபோக்கின் பெரும்பகுதி, கடவுளுக்குப் பிரியமில்லாத நடத்தையை மேன்மைப்படுத்துவதால், பொழுதுபோக்கைத் தெரிந்தெடுப்பதற்கான உங்கள் தராதரங்கள் தரமானவையாய் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
தெரிந்தெடுப்பவராயிருங்கள்
பொழுதுபோக்கைத் தெரிந்தெடுப்பதில், கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களால் வழிநடத்தப்பட விரும்புகின்றனர். உதாரணமாக, சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினதாவது: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” (சங்கீதம் 11:5) மேலும் பவுல் கொலோசெயருக்கு எழுதினதாவது: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். . . . கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.”—கொலோசெயர் 3:5, 8.
இன்றைய பொழுதுபோக்குகள் பெரும்பாலும், ஏவப்பட்ட இந்தப் புத்திமதியை மீறுவது தெளிவாய் இருக்கிறது. ‘ஆனால் நான் திரைப்படக் காட்சிகளில் பார்ப்பதை எல்லாம் ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று சிலர் மறுத்துக்கூறலாம். அவர்கள் அப்படிப்பட்டவர்களாயும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எப்படிப்பட்ட ஆளாகப்போகிறீர்கள் என்பதை பொழுதுபோக்கு குறிப்பிட்டுக்காட்டாதபோதிலும்கூட, நீங்கள் ஏற்கெனவே எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய விஷயத்தை அது வெளிப்படுத்தலாம். உதாரணமாக, “வன்முறையை விரும்பும்” ஆட்களில், அல்லது ‘விபசாரம், மோகம், விக்கிரகாராதனையான பொருளாசை, தூஷணமும் வம்பு வார்த்தைகளும் பேசும்’ ஆட்களில் ஒருவராக இருக்கிறீர்களா, அல்லது உண்மையிலேயே ‘தீமையை வெறுத்துவிடும்’ ஆட்களில் ஒருவராக இருக்கிறீர்களா என்பதை அது காட்டிவிடக்கூடும்.—சங்கீதம் 97:10.
பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதினதாவது: “உண்மையுள்ளவைகளெவைகளோ, முக்கிய அக்கறைக்குரியவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8, NW.
ஆனால், திரைப்படம், புத்தகம், அல்லது டிவி காட்சி ஆகியவற்றில் வரும் கதையில், அநியாயத்தைப் பற்றியோ, ஒருவேளை ஒரு குற்றச்செயலைப் பற்றியோ ஓரளவுக்கு சித்தரிப்பவையாய் இருந்துவிட்டாலே, அவை யாவும் கெட்டவை என்று இந்த வேதவசனம் அர்த்தப்படுத்துகிறதா? அல்லது நகைச்சுவை விஷயங்கள், ‘முக்கிய அக்கறைக்குரியவையாய்’ இராததால், அவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவையா? இல்லை, ஏனெனில் இந்தச் சூழமைவு காட்டுவதென்னவென்றால், பவுல் பொழுதுபோக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கவில்லை; ஆனால் யெகோவாவை மகிழ்விப்பதாய் இருக்கும் காரியங்களின்மீது ஒருமுகப்படுத்தப்பட்டவையாய் இருக்க வேண்டிய இருதயத்தின் தியானங்களைப் பற்றிப் பேசுகிறார். (சங்கீதம் 19:14) இருந்தபோதிலும், பவுல் கூறினவை, பொழுதுபோக்கைத் தெரிவு செய்யும் சூழ்நிலை வரும்போது, நமக்கு உதவலாம். பிலிப்பியர் 4:8-ல் உள்ள நியமத்தைப் பயன்படுத்தி, ‘நான் தெரிவு செய்திருக்கும் பொழுதுபோக்கு, கற்புள்ளவைகளல்லாத விஷயங்களை தியானிக்கும்படி செய்கிறதா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். அப்படியிருந்தால், நாம் சரிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
என்றாலும், பொழுதுபோக்கை மதிப்பிட்டுப் பார்ப்பதில், கிறிஸ்தவர்கள், ‘தங்கள் நியாயத்தன்மையை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருக்கச் செய்ய’ வேண்டும். (பிலிப்பியர் 4:5, NW) மெய்க் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமானவையாய் இராத, மிதமிஞ்சிய பொழுதுபோக்குகள் இருப்பதும் தெளிவாய் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தனி நபரும் காரியங்களை கவனமாய் மதிப்பிட்டுப் பார்த்து, கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக ஒரு சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ளும்படியான தீர்மானங்களைச் செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 10:31-33; 1 பேதுரு 3:21) சிறுசிறு விஷயங்களிலெல்லாம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதோ, அல்லது மற்றவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைக் கட்டுப்படுத்தும் தன்னிச்சையான சட்டங்களை ஏற்படுத்துவதோ சரியல்ல. b—ரோமர் 14:4; 1 கொரிந்தியர் 4:6.
பெற்றோரின் பங்கு
பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு முக்கியமான பங்கை பெற்றோர் வகிக்கின்றனர். பவுல் எழுதினதாவது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) இவ்வாறு, பொருள் சம்பந்தமாக மட்டுமல்லாமல் ஆவிக்குரிய வகையிலும், உணர்ச்சிப்பூர்வமாகவும்கூட குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. இது, தரமான ஓய்வு நடவடிக்கை அளிப்பதையும் உட்படுத்தும்.—நீதிமொழிகள் 24:27.
சில சமயங்களில், குடும்ப வாழ்வின் இந்த அம்சம் புறக்கணிக்கப்படுகிறது. நைஜீரியாவிலுள்ள ஒரு மிஷனரி இவ்வாறு கூறுகிறார்: “எதிர்பாராவிதமாக, சில பெற்றோர், இன்பப் பொழுதுபோக்குக்குச் செலவிடும் நேரம் வீண் என்பதாக எண்ணுகின்றனர். அதன் விளைவாக, சில பிள்ளைகள், தங்கள் போக்கில் விட்டுவிடப்படுகின்றனர்; அவர்கள் தவறான நண்பர்களையும் தவறான பொழுதுபோக்கு வகையையும் கண்டடைகிறார்கள்.” பெற்றோரே, இவ்வாறு நடக்க அனுமதிக்காதீர்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு நிஜமாகவே புத்துயிரளிக்கும் பொழுதுபோக்கை அளிக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்” இருக்கும் இன்றுள்ள பலரைப்போல், கிறிஸ்தவர்கள் ஆகிவிடக்கூடாது. (2 தீமோத்தேயு 3:1-4) ஆம், பொழுதுபோக்கு, அதற்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். அது புத்துயிரளிக்க வேண்டுமே தவிர, ஒருவருடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக்கூடாது. ஆகவே, பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும், சரியான வகையில் மட்டுமல்லாமல், சரியான அளவிலும் பொழுதுபோக்கு இருக்கவேண்டியது அவசியம்.—எபேசியர் 5:15, 16.
மற்ற நடவடிக்கைகளை அனுபவியுங்கள்
பிரசித்திபெற்ற பொழுதுபோக்கு, பெரும்பாலும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாறாக, சோம்பேறித்தனமாய் இருக்கும்படியே ஜனங்களைப் பழக்குவிக்கிறது. உதாரணமாக, தொலைக்காட்சியை எடுத்துக்கொள்வோம். டிவியை அமர்த்திய பிறகு என்ன செய்வது (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இயல்பாகவே, [தொலைக்காட்சி] நாம் சோம்பேறித்தனமுள்ளவர்களாய் இருக்கும்படி நம்மைப் பழக்குவிக்கிறது; பொழுதுபோக்கு, ஏன், கல்வியும்கூட, நாம் அதிக முயற்சி எதுவும் எடுக்காமலே பெறும் ஏதோவொன்றாக ஆகிறது; அவை நாம் உருவாக்கும் புதிய படைப்புகளாய் இல்லை.” சோம்பேறித்தனமான பொழுதுபோக்குக்கும் ஓர் இடம் இருக்கிறது என்பது மெய்யே. ஆனால் அது ஒருவருடைய ஓய்வு நேரத்தை அளவுக்கு அதிகமாய் எடுக்கிறதென்றால், ஆர்வமூட்டும் அநேக வாய்ப்புகளை அவர் இழந்துவிடுவார்.
தன்னை, “தொலைக்காட்சி பிரபலமாவதற்கு முந்திய காலத்தவர்” என்று கூறும் ஆசிரியர் ஜெரீ மான்டர், தன்னுடைய சிறுபிராயத்தில் தன் பொறுமையைச் சோதித்த சலிப்பான நேரங்கள் அவ்வப்போது வந்ததையும், “அந்தச் சலிப்போடு ஒருவித கவலையும் இருந்தது” என்றும் விளக்குகிறார்; “அது சொல்ல முடியாதளவுக்கு விரும்பத்தகாததாய் இருந்தது; அது அவ்வளவு விரும்பத்தகாததாய் இருந்ததால் கடைசியில் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட—எதையாவது செய்ய—தீர்மானிப்பேன். ஒரு நண்பனை ஃபோனில் அழைப்பேன். வீட்டைவிட்டு சற்றுநேரம் வெளியே சென்றுவருவேன். பந்து விளையாடப் போவேன். எதையாவது வாசிப்பேன். எதையாவது செய்வேன். அவ்வாறு செய்தபிறகு, ‘செய்வதற்கு ஒன்றுமே இராத’ அந்தச் சலிப்பான நேரத்தை அப்படியே கற்பனை செய்து பார்க்கையில், அது எப்படி இருக்கிறதென்றால், அந்த உதவாக்கரைச் சூழ்நிலையிலிருந்து புதிய படைப்புத் திறனை உருவாக்கும் சூழ்நிலைக்கு மாறியதுபோல் தெரிகிறது” என்றும் கூறுகிறார். இன்று, பிள்ளைகள், சலிப்புக்கான ஓர் எளிய தீர்வாக டிவியைப் பயன்படுத்துகின்றனர் என்று மான்டர் குறிப்பிடுகிறார். “டிவி, சலிப்பினால் ஏற்படக்கூடிய கவலை, அதன் விளைவாக இருக்கும் படைப்புத் திறன் ஆகிய இவ்விரண்டையுமே இல்லாமற்போகும்படி செய்கிறது” என்றும் அவர் கூறுகிறார்.
இவ்வாறு, சோம்பேறித்தனமாய் இருப்பதற்கு மாறாக சுறுசுறுப்பாய் பங்கேற்பதைத் தேவைப்படுத்தும் நடவடிக்கைகள், தாங்கள் கற்பனை செய்திருந்ததைவிட அதிக திருப்தியளிப்பவையாய் இருக்கலாம் என்பதைப் பலர் கண்டுபிடித்திருக்கின்றனர். சிலர், மற்றவர்களோடு சேர்ந்து சத்தம்போட்டு வாசிப்பதை அனுபவிக்கத்தக்கதாய் இருப்பதாகக் கண்டிருக்கின்றனர். மற்றவர்கள், ஓர் இசைக்கருவியை இசைப்பது, அல்லது ஒரு சித்திரம் வரைவது போன்ற ஏதாவது ஹாபிகளைத் தொடருகின்றனர். தரமான விருந்துக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. c (லூக்கா 14:12-14) வீட்டுக்கு வெளியே அனுபவிக்கப்படும் இன்பப் பொழுதுபோக்கினாலும் பயன்கள் கிடைக்கின்றன. ஸ்வீடனிலிருந்து ஒரு விழித்தெழு! நிருபர் அறிக்கை செய்வதாவது: “சில குடும்பங்கள் மீன்பிடிக்கச் சேர்ந்து செல்கின்றன; அல்லது காட்டுப் பகுதிக்கு உல்லாசப்பயணம் செல்கின்றன; படகுப் பயணங்கள் செய்கின்றன; மலைப்பாங்கான பகுதிகளில் நடக்கின்றன; இன்னும் அதுபோன்ற நடவடிக்கைகளில் பங்குகொள்கின்றன. இதனால், இளைஞர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.”
பொழுதுபோக்கில், மோசம்போக்கும் அம்சங்களும் அடங்கியிருக்கின்றன என்பது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை. புறஜாதிகள், ‘தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறார்கள்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபேசியர் 4:17) ஆகவே, அவர்களுக்குப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளாகத் தென்படுபவற்றில் மிகுதியானவை, ‘மாம்சத்தின் கிரியைகளைச்’ செய்ய வைக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. (கலாத்தியர் 5:19-21) என்றபோதிலும், கிறிஸ்தவர்கள் தங்களுடைய பொழுதுபோக்கின் தரத்தையும் அளவையும் குறித்து சரியான தீர்மானங்களைச் செய்யத் தங்களைப் பழக்கிக்கொள்ளலாம். அவர்கள் இன்பப் பொழுதுபோக்கை, ஒரு குடும்பமாகச் சேர்ந்து அனுபவிக்கும் ஒன்றாக ஆக்கலாம்; புத்துயிரளிப்பதாயும், ஆண்டாண்டு காலமாக இனிய நினைவலைகளை அளிக்கப்போவதாயும் இருக்கும் புதுப்புது நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முயலவும் செய்யலாம். ஆம், தரமான பொழுதுபோக்கை நீங்கள் கண்டடையலாம்!
[அடிக்குறிப்புகள்]
a “நகைக்க” என்பதற்கான எபிரெய வார்த்தை, “விளையாட,” “கொஞ்சம் வேடிக்கை காட்ட,” “கொண்டாட,” அல்லது “ஜாலியாய் இருக்க” என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படலாம்.
b கூடுதலான தகவலுக்கு, விழித்தெழு!, ஆங்கிலத்தில் மார்ச் 22, 1978, பக்கங்கள் 16-21-ஐயும், தமிழில் டிசம்பர் 8, 1995, பக்கங்கள் 6-8-ஐயும் காண்க.
c விருந்துக் கூட்டங்களைப் பற்றிய வேதப்பூர்வமான வழிகாட்டுக் குறிப்புகளுக்கு, காவற்கோபுரம் நவம்பர் 15, 1992, பக்கங்கள் 15-20-ஐயும், அக்டோபர் 1, 1996, பக்கங்கள் 18-19-ஐயும் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
தரமான இன்பப் பொழுதுபோக்கு திருப்தியளிப்பதாய் இருக்கலாம்