‘எங்களுக்காக உயிர்வாழவில்லை’
ஜாக் யோஹான்சன் கூறியது
மலாவியைச் சேர்ந்த அந்த ஆப்பிரிக்க சிப்பாய், ஆற்றங்கரை ஓரத்தில் கார் ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் நிற்கும்படி என்னிடம் கூறினான். குறிபார்த்து என்னை சுடுவதற்காக அவன் தன் துப்பாக்கியை உயர்த்தினான். அப்போது லாயிட் லீக்வீட் தலைதெறிக்க ஓடி வந்து எனக்கு முன்பாக நின்றுகொண்டு, இவ்வாறு கூறினார்: “ஐயோ! என்ன வேணுன்னா சுடு! அவரை சுட்டுடாதே! எந்தத் தப்புமே செய்யாத இந்த வெள்ளைக்காரரை ஒண்ணும் செய்யாத!” ஐரோப்பியனான எனக்காக ஒரு ஆப்பிரிக்கன் தன் உயிரைக் கொடுக்க ஏன் முன்வரவேண்டும்? இதைத் தெரிந்துகொள்ள, சுமார் 40 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் நான் ஒரு மிஷனரியாக இருந்த கதையை சொல்கிறேன்.
வருடம் 1942. அப்போது எனக்கு வயது ஒன்பது. அப்பாவையும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு அம்மா கண்ணை மூடினார். நான்தான் கடைக்குட்டி. அம்மா இறந்து நான்கு மாதங்களுக்கு பிறகு அப்பாவும் நீரில் மூழ்கி இறந்துபோனார். பின்லாந்தில் முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளாக ஆனவர்களுள் அப்பாவும் ஒருவர். என்னுடைய பெரிய அக்கா மாயாதான் எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கினார். நாங்கள் எல்லாருமாக சேர்ந்து எங்களுடைய பண்ணையில் வேலைசெய்து வந்தோம். ஆன்மீக விஷயங்களில் மாயா அக்காதான் முன்னின்று எங்களுக்கு வழிகாட்டினார். அப்பா இறந்து ஒரு வருடத்திற்குள் மாயா அக்காவும், என்னுடைய ஒரு அண்ணனும் யெகோவா தேவனுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்தினார்கள். அதற்கடுத்த வருடம் எனக்கு 11 வயதாக இருந்தபோது நானும் முழுக்காட்டுதல் பெற்றேன்.
ஒரு முக்கிய தீர்மானம்
1951-ல் வணிக கல்லூரி ஒன்றில் பட்டம்பெற்று, பின்லாந்தில் இருந்த ஃபோர்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆறு மாதம் கழித்து, யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணிகளில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மகா புத்திசாலி. பயனியர் அல்லது முழுநேர ஊழியத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி ஒரு மாநாட்டில் பேச்சு கொடுக்கும்படி அவர் என்னிடத்தில் கேட்டபோது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. உலகப்பிரகாரமான வேலையை முழுநேரம் செய்துவருகிற என்னால் எப்படி முழுநேர ஊழியத்தைப் பற்றி மனசார பேச முடியும்? இதை நினைக்கையில் எனக்கு சங்கோஜமாக இருந்தது. இதற்காக யெகோவாவிடம் ஜெபித்தேன். கிறிஸ்தவர்கள் ‘இனித் தங்களுக்காக உயிர்வாழாமல் தங்களுக்காக இறந்தவருக்கென்று உயிர் வாழவேண்டும்’ என்பதை உணர்ந்தேன். ஆகவே, பயனியராய் சேவிப்பதற்காக என் வாழ்க்கை இலட்சியத்தையே மாற்றிக் கொண்டேன்.—2 கொரிந்தியர் 5:15, NW.
வேலையை ராஜினாமா செய்யாமல் இருந்தால் என் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக என் சூப்பர்வைசர் உறுதி கூறினார். ஆனால் வேலையை விட்டுவிடுவதென தீர்மானித்து விட்டேன் என்பதை உணர்ந்துகொண்டதும் இவ்வாறு கூறினார்: “நீ எடுத்தது சரியான தீர்மானம். என் வாழ்க்கைபூரா இந்த ஆபிஸ்லேயே போயிடுச்சு; ஆனா மக்களுக்கு எந்த விதத்திலேயும் உபயோகமா இருந்ததா எனக்கு தோணல.” ஆகவே, மே 1952-ல் பயனியர் ஆனேன். சில வாரங்கள் கழித்து, பயனியர் ஊழியத்தைப் பற்றிய அந்தப் பேச்சை முழு மனதோடு என்னால் கொடுக்க முடிந்தது.
பயனியராக ஒருசில மாதங்கள்தான் சேவித்திருப்பேன், அதற்குள் கிறிஸ்தவ நடுநிலையின் காரணமாக ஆறு மாதம் என்னை சிறையில் அடைத்தார்கள். அதற்கு பிறகு, பின்லாந்து வளைகுடாவிலுள்ள ஹாஸ்டோ பூசோ தீவிலுள்ள சிறையில் மற்ற இளம் சாட்சிகளோடு இன்னும் எட்டு மாதங்கள் அடைக்கப்பட்டேன். எங்கள் மத்தியிலேயே முனைப்பான பைபிள் படிப்பு திட்டம் ஒன்றை ஏற்படுத்தி நடத்திவந்ததன் காரணமாக அந்தத் தீவை சிறிய கிலியட் பள்ளி என்றே அழைத்தோம். ஆனாலும், உண்மையான உவாட்ச்டவர் கிலியட் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதே என் இலக்கு. அது நியூ யார்க்கிலுள்ள சௌத் லான்சிங்கிற்கு அருகில் அமைந்திருக்கிறது.
அந்தத் தீவு-சிறையில் அடைபட்டிருந்த சமயத்தில் உவாட்ச்டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணியாக சேவிக்கும்படி எனக்கு அழைப்பு விடுத்தனர். விடுதலை ஆனப்பிறகு, பின்லாந்திலுள்ள சுவீடிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் இருந்த சபைகளை நான் சந்திக்க வேண்டும். அப்போது எனக்கு 20 வயதுதான். இவ்வளவு பெரிய பொறுப்பை நிறைவேற்ற தகுதியற்றவன் என்று உணர்ந்தேன். ஆனாலும் யெகோவாவை முழுமையாக நம்பி, காரியத்தில் இறங்கினேன். (பிலிப்பியர் 4:13) நான் சந்தித்த சபைகளில் இருந்த சாட்சிகள் மிகவும் அருமையானவர்கள். “சிறு பையன்”தானே என்று அவர்கள் என்னை அசட்டை செய்யவில்லை.—எரேமியா 1:7, NW.
அதற்கடுத்த வருடம் ஒரு சபைக்குச் சென்றபோது லின்டாவைச் சந்தித்தேன். ஐக்கிய மாகாணத்தில் வசிக்கும் அவள் லீவுக்காக பின்லாந்து வந்திருந்தாள். லீவு முடிந்து ஐக்கிய மாகாணத்திற்கு திரும்பியதும், அவள் ஆவிக்குரிய காரியங்களில் படுவேகமாக முன்னேற்றம் அடைந்து முழுக்காட்டுதல் பெற்றாள். ஜூன் 1957-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். பிறகு செப்டம்பர் 1958-ல், 32-வது கிலியட் பள்ளியில் சேர எங்களுக்கு அழைப்பு வந்தது. அடுத்த பிப்ரவரியில் பட்டம்பெற்ற பிறகு, தென்மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நியாஸாலாந்தில் ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்டோம். இப்போது அது மலாவி என்று அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் எங்கள் ஊழியம்
ஆப்பிரிக்க சகோதரர்களுடன் ஊழியம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அப்போது 14,000-க்கும் அதிகமான சாட்சிகள் நியாஸாலாந்தில் இருந்தனர். சில சமயங்களில், ஒரு காரில் எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்தோம். அதுவரை எந்த ஒரு வெள்ளைக்காரனுமே நுழைந்திராத கிராமங்களில் எல்லாம் தங்கினோம். எப்போதுமே தடபுடலான வரவேற்புதான். எங்களை வரவேற்க முழு கிராமமே திரண்டுவிடும். அன்பாக வணக்கம் கூறிய பிறகு எல்லாரும் கப்சிப்பென்று தரையில் அமர்ந்து கண்களாலேயே எங்களை ஆராய்வார்கள்.
பல சந்தர்ப்பங்களில், கிராமவாசிகள் எங்களுக்காகவே ஸ்பெஷலாக ஒரு குடிசையைக் கட்டினார்கள். மண் அல்லது கோரைப் புல் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அக்குடிசையில் ஒரு கட்டில் போடுவதற்கு மட்டும்தான் இடம் இருக்கும். இரவு நேரத்தில் கழுதைப் புலிகள் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அந்தக் குடிசைக்கு அருகே ஓடும்போது எங்கள் காதுகள் கிழிந்துவிடுவதைப்போல் இருக்கும். ஆனால் நியாஸாலாந்தில் இருந்த சாட்சிகளுக்கு இந்தக் காட்டு விலங்குகளைவிட பயங்கரமான ஆபத்துக்கள் காத்திருந்தன.
தேசபக்தி பிரச்சினை
ஆப்பிரிக்கா முழுவதும் சுதந்திர போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. நியாஸாலாந்திலிருந்த அனைவருமே அங்கிருந்த ஓர் அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்று வலுக்கட்டாயம் செய்யப்பட்டனர். அரசியல் விவகாரங்களில் நாங்கள் வகித்துவந்த நடுநிலை திடீரென்று தேசிய பிரச்சினையாக உருவானது. கிளை அலுவலக கண்காணியான மால்கம் வைக்கோ அப்போது விடுப்பில் இருந்ததால் அலுவலக வேலைகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது நியாஸாலாந்தின் பிரதமராக இருந்த டாக்டர் ஹேஸ்டிங்ஸ் காமுஸு பாண்டாவைச் சந்திக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தேன். அவரைச் சந்தித்தபோது நானும் இன்னும் இரண்டு கிறிஸ்தவ மூப்பர்களும் எங்களுடைய அரசியல் நடுநிலையை அவரிடம் விளக்கினோம். அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. ஆனாலும்கூட சுமார் ஒரு மாதம் கழித்து, பிப்ரவரி 1964-ல் ஏல்டன் ம்வாச்சான்டே என்பவரே வன்முறைத் தாக்குதலுக்கு பலியான முதல் சாட்சியாவார். ஒரு கலகக்கார கும்பல் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றது. அந்தக் கிராமத்தில் இருந்த மற்ற சாட்சிகள் தப்பியோட வேண்டியதாயிற்று.
டாக்டர் பாண்டா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வன்முறை கும்பலின் தாக்குதல்களை நிறுத்தும்படி கோரி அவருக்கு ஒரு தந்தி அனுப்பினோம். சீக்கிரத்திலேயே, பிரதமரை வந்து சந்திக்கும்படி அவருடைய அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஹேரால்ட் கை என்ற மற்றொரு மிஷனரியுடனும் அலெக்ஸான்டர் மஃபாம்பானா என்ற உள்ளூர் சாட்சியுடனும் சென்று பிரதமரைச் சந்தித்தேன். இரண்டு மந்திரிகளும் அங்கிருந்தனர்.
நாங்கள் அமர்ந்ததும், டாக்டர் பாண்டா ஒரு வார்த்தையும் சொல்லாமல் அந்தத் தந்தியைத் தன் தலைக்கு மேலே முன்னும் பின்னுமாக அசைத்தார். கடைசியில், “மிஸ்டர் யோஹான்சன், இப்படியொரு தந்தியை அனுப்புனா என்ன அர்த்தம்?” என்று கேட்டார். அப்போது, அரசியல் விஷயங்களில் நடுநிலை வகிப்பதை அவருக்கு மறுபடியும் விளக்கினோம். பிறகு, “ஏல்டன் ம்வாச்சான்டே கொல்லப்பட்டார்; இந்த இக்கட்டான நிலையில் இப்போ நீங்க மட்டும்தான் எங்களுக்கு உதவ முடியும்” என்று கூறினேன். அதைக் கேட்ட பிறகுதான் டாக்டர் பாண்டா கொஞ்சம் சாந்தமானார்.
ஆனால் அவருடன் இருந்த மந்திரிகளில் ஒருவர், எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். பிறகு, தூரத்தில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் வாழும் சாட்சிகள் டாக்டர் பாண்டாவைப் பற்றி தரக்குறைவாக பேசினார்கள் என அடுத்த மந்திரி கூறினார். ஆனாலும், அவ்விதமாக நடந்துகொண்டவர்கள் என ஒருவருடைய பெயரையும் அவர்களால் சொல்லமுடியவில்லை. எப்போதுமே அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதைக் காட்டவேண்டும் என யெகோவாவின் சாட்சிகளுக்கு போதிக்கப்படுகிறது என்று விளக்கினோம். இருந்தாலும், டாக்டர் பாண்டா மற்றும் அவருடனிருந்த மந்திரிகளின் தவறான எண்ணங்களை நீக்குவதற்காக நாங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாய்போயின.
எங்கள் உயிர் ஆபத்தில்
1964-ல் நியாஸாலாந்து சுதந்திரம் அடைந்து பின்னர் மலாவி குடியரசானது. ஓரளவுக்குத்தான் இயல்பான சூழ்நிலை நிலவியது; இருந்தாலும் ஊழியம் செய்து வந்தோம். ஆனால் மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அதிகரித்தன. இதற்கிடையில், நாட்டின் தெற்கு பகுதியில் வசித்த சாட்சிகள் அங்கு ஓர் அரசியல் புரட்சி வெடித்திருக்கிறது என தொலைபேசி மூலம் தெரிவித்தனர். உடனடியாக யாராவது ஒருவர் அங்கு சென்று சாட்சிகளின் நிலைமையை கண்டறிந்து, அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். இதற்கு முந்தைய சமயங்களில் அந்தக் காட்டுப் பகுதிக்குள் நான் தனியாக சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் லின்டாவும் என்னை தைரியமாக அனுப்பிவைத்தாள். ஆனாலும் இந்தச் சமயம், உள்ளூர் சாட்சியான இளம் லாயிட் லீக்வீட்டை என்னுடன் அழைத்துச் செல்லும்படி மன்றாடினாள். ‘அதுதான் அவளுக்கு சந்தோஷம்னா அதையே செய்யலாம்’ என்று நினைத்து கடைசியில் ஒப்புக்கொண்டேன்.
மாலை ஆறு மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் அதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட ஆற்றை நாங்கள் கடந்துவிட வேண்டும் என்றார்கள். எப்படியும் ஆறு மணிக்குள் ஆற்றை கடந்துவிட முயற்சித்தோம். ஆனால் ரோடு மிகவும் மோசமாக இருந்ததால் லேட் ஆகிவிட்டது. ஆறு மணிக்கு மேல், ஆற்றின் இந்தப் பக்கத்தில் யார் இருந்தாலும் கண்டதும் சுடும்படியான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த விஷயம் எங்களுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆற்றை நோக்கி நாங்கள் செல்கையில் படகு அந்தப் பக்கம் கடந்துவிட்டது. திரும்பி வந்து எங்களை அழைத்துச் செல்லும்படி சகோதரர் லீக்வீட் படகுக்காரனை அழைத்தார். படகு திரும்பி வந்தது. ஆனால் அதிலிருந்த ஒரு சிப்பாய் இவ்வாறு சீறினான்: “அந்த வெள்ளைக்காரனை நான் சுட்டாகனும்!”
அந்தச் சிப்பாய் பூச்சாண்டி காட்டுகிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் படகு அருகில் வந்தபோது காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் நிற்கும்படி அந்தச் சிப்பாய் என்னிடம் கட்டளையிட்டான். அந்தச் சமயத்தில்தான் என்னுடைய ஆப்பிரிக்க நண்பன் எனக்கு முன்பாக நின்றுகொண்டு, எனக்கு பதிலாக தன்னைச் சுடும்படி சிப்பாயிடம் வேண்டினார். அவர் எனக்காக உயிரைக்கொடுக்க தயாராய் இருந்தது அந்தச் சிப்பாயின் நெஞ்சைத் தொட்டது போலும். ஆகவே அவன் சுடவில்லை. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன். (யோவான் 15:13) லின்டாவின் பேச்சைக்கேட்டு அந்த அன்பான சகோதரரை என்னுடன் கூட்டிக்கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று! இல்லையென்றால் என்னால் உயிர் பிழைத்திருக்க முடியுமா என்ன?
அடுத்த நாள், பிளான்டையருக்கு செல்லும் ரோட்டில் சில இளைஞர் மறியல் செய்தனர். அரசியல் அடையாள அட்டையைக் காட்டும்படி சகோதரர் லீக்வீட்டிடம் அவர்கள் கேட்டனர். அந்தக் கும்பலுக்கிடையே காரை வேகமாக செலுத்தினால் மட்டுமே நாங்கள் உயிர்தப்ப முடியும் என்ற நிலை. என்ன செய்வது? கியரைப்போட்டு வண்டியை திடீரென்று வேகமாக ஓட்டினேன். அதனால் பயந்துபோன அவர்கள் எங்கள் வழியிலிருந்து நகர்ந்துவிட்டனர். நாங்கள் சுலபமாக தப்பினோம். அந்தக் கும்பல் சகோதரர் லீக்வீட்டை பிடித்திருந்தால் அவர் கதி அதோகதிதான்! கிளை அலுவலகத்திற்கு திரும்பிவந்த பிறகும் நாங்கள் இருவரும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தோம். ஆனாலும் யெகோவாவின் பாதுகாப்பான கரத்திற்காக நன்றியுள்ளவர்களாய் இருந்தோம்.
விசுவாசத்திற்காக சிறைவாசம்
அக்டோபர் 1967-ல் மலாவியில் எங்கள் வேலை அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது. அப்போது அந்நாட்டில் சுமார் 18,000 சாட்சிகள் இருந்தனர். இரண்டு வாரம் கழித்து, தலைநகர் லிலோங்வியில் 3,000 சாட்சிகள் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டோம். தலைநகர் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அன்று இரவே அங்கு செல்ல தீர்மானித்தோம். அந்தச் சகோதரர்களுக்கு எங்களால் வேறு உதவிசெய்ய முடியாவிட்டாலும் கொஞ்சம் பக்கபலமாகவாவது இருக்கலாமே என்று நினைத்தோம். காவற்கோபுர பிரசுரங்களைக் காரில் அள்ளிப்போட்டுக் கொண்டு கிளம்பினோம். யெகோவாவின் உதவியினால் சோதிக்கப்படாமலேயே செக்-போஸ்ட்டுகளை எல்லாம் கடந்தோம். போகும் வழியில் எல்லாம் ஒவ்வொரு சபையிலும் காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவைக் கொடுத்துக்கொண்டே சென்றோம்.
காலையில் சிறைச்சாலைக்கு சென்றோம். சகோதரர்கள் இருந்த பரிதாபகரமான நிலை நெஞ்சை உருக்கியது! வேலியிட்ட திறந்தவெளியிலேயே நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இரவு முழுவதும் பெய்த மழையில் அவர்கள் தொப்பை தொப்பையாக நனைந்திருந்தனர். சிலர் தங்கள் கம்பளங்களை வேலியில் உலர்த்திக் கொண்டிருந்தனர். வேலிக்கு வெளியில் நின்றபடியே அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்று மதியம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொண்டு அநேகர் சாட்சிக்கூண்டில் வந்து நின்றனர். அவர்களை நேருக்கு நேர் பார்த்து கண்களால் உற்சாகப்படுத்த முயற்சித்தோம்; ஆனால் அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. கூண்டில் நின்ற அவர்கள் அனைவருமே தங்கள் விசுவாசத்தை மறுதலித்தது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது! ஆனால் யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொண்ட அவர்களில் ஒருவரைக்கூட தங்களுக்கு தெரியாது என உள்ளூர் சாட்சிகள் என்னிடம் கூறினார்கள். உண்மையான சாட்சிகளை ஊக்கமிழக்க செய்வதற்காக அவர்கள் நடத்திய போலி நாடகம்தான் அது.
இதற்கிடையில் எங்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிளான்டையரிலிருந்த எங்கள் கிளை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அங்கிருந்த மிஷனரிகள் நாட்டைவிட்டு வெளியேற 24 மணிநேர கெடு கொடுத்தார்கள். நாங்கள் வீடு திரும்பியபோது ஒரு போலீஸ்காரர் எங்கள் வீட்டு கதவை திறந்துவிட்டது பெரும் வியப்பாக இருந்தது! அடுத்த நாள் மதியம் ஒரு போலீஸ்காரர் வந்து கொஞ்சம் வருத்தத்தோடே எங்களைக் கைதுசெய்து விமானநிலையத்திற்கு அழைத்து சென்றார்.
நவம்பர் 8, 1967-ல் நாங்கள் மலாவியைவிட்டுச் சென்றோம். ஆனால் அங்கிருந்த எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் கடுமையான சோதனைகளை எதிர்ப்படுவார்கள் என்று அறிந்திருந்தோம். அவர்களில் அநேகர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலை, வீடு, உடைமை ஆகியவற்றை இழந்தனர். அவர்களை நினைக்கையில் எங்கள் நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லாரும் தங்கள் உத்தமத்தைக் காத்துக் கொண்டனர்.
புதிய நியமிப்புகள்
இவ்வளவு கஷ்டங்கள் இருந்தபோதிலும் மிஷனரி ஊழியத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. எனவே, கென்யாவில் ஒரு புதிய நியமிப்பை ஏற்றுக்கொண்டோம். அங்கே கண்களுக்கு விருந்துபடைக்கும் விதவிதமான இயற்கைக் காட்சிகளையும் பல்வேறு மக்களையும் காணமுடியும். அங்கிருந்த மசாய் இன மக்களை லின்டாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தச் சமயத்தில் மசாய் இன மக்களில் ஒருவரும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லை. பிறகு டார்க்கஸ் என்ற மசாய் இனப் பெண்ணை லின்டா சந்தித்து அவளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள்.
கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால் தன் திருமணத்தைச் சட்டப்படி பதிவுசெய்ய வேண்டும் என்று டார்க்கஸ் அறிந்துகொண்டாள். ஆனால் அவளோடு வாழ்ந்து வந்தவர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆகவே டார்க்கஸ் தன் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தனியே வாழ ஆரம்பித்தாள். இதைப் பார்த்தவுடன் அவருக்கு சாட்சிகள் மீது கடுங்கோபம் வந்தது. ஆனாலும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க அவருக்கு மனதில்லை. கடைசியில் டார்க்கஸ் அவரைக் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் அவரும் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்துகொண்டார். டார்க்கஸை சட்டப்படி திருமணம் செய்துகொண்டு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார். டார்க்கஸ் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கணவரும் மூத்த மகனும் இப்போது சபை மூப்பர்களாக சேவிக்கின்றனர்.
திடீரென்று 1973-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை கென்யாவில் தடை செய்யப்பட்டது. ஆகவே நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். சில மாதங்களுக்குள் தடை நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக நாங்கள் மூன்றாவது நியமிப்பில் இருந்தோம். இந்தச் சமயம் காங்கோவிலுள்ள ப்ரேஜவில்லுக்கு அனுப்பப்பட்டோம். ஏப்ரல் 1974-ல் அங்குப் போய் சேர்ந்தோம். ஏறக்குறைய மூன்று வருடம் கழித்து, மிஷனரிகளை உளவாளிகள் என்று தவறாக குற்றம் சாட்டி எங்கள் வேலை தடைசெய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதால் ப்ரேஜவில்லில் கலவரம் வெடித்தது. மற்ற எல்லா மிஷனரிகளும் மற்ற நாடுகளில் சேவிக்கும்படி மாற்று நியமிப்புகளைப் பெற்றனர். ஆனால், எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் அங்கேயே இருக்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. காலையில் உயிரோடு இருப்போமோ என்ற சந்தேகத்துடன் நாங்கள் படுக்கைக்கு சென்றது ஒருநாள் இரண்டுநாள் அல்ல. ஆனாலும் யெகோவாவின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை வைத்ததால் நிம்மதியாக தூங்கினோம். கிளை அலுவலகத்தில் தனியாக இருந்த அந்தச் சில மாதங்களே, எங்கள் மிஷனரி ஊழியத்தில் நாங்கள் எதிர்ப்பட்ட மிகவும் விசேஷித்த காலமாகும். ஏனென்றால் எங்கள் விசுவாசம் மிக அதிகமாக சோதிக்கப்பட்டதும், மிக அதிகமாக பலப்படுத்தப்பட்டதும் அந்தச் சமயத்தில்தான்.
ஏப்ரல் 1977-ல் ப்ரேஜவில்லைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அப்போது எங்களுக்கு மிகப் பெரிய ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு புதிய கிளை அலுவலகத்தை நிறுவுவதற்காக ஈரானுக்கு அனுப்பப்பட்டோம். இங்கு, பெர்சிய மொழியான ஃபார்ஸியை கற்றுக்கொள்வதே எங்கள் முதல் பிரச்சினை. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொண்டிருந்ததால், கூட்டங்களில் சிறு பிள்ளைகள் சொல்வதைப் போல சின்ன சின்ன பதில்களை மட்டுமே எங்களால் சொல்ல முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால் 1978-ல் ஈரானில் கலகம் மூண்டது. மிகவும் பயங்கரமாக சண்டை நடந்துகொண்டிருந்த காலத்திலும் நாங்கள் அங்குதான் இருந்தோம். ஆனால் ஜூலை 1980-ல் எல்லா மிஷனரிகளும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டோம்.
ஐந்தாவது நியமிப்பாக மறுபடியும் ஆப்பிரிக்காவிற்கு வந்தோம். இப்போது காங்கோ மக்கள் குடியரசு என்றழைக்கப்படும் ஜயருக்கு அனுப்பப்பட்டோம். ஜயரில் 15 வருடம் சேவித்தோம். அங்கே சில காலம் ஊழியம் தடைசெய்யப்பட்டிருந்தது; அப்போதும் அங்கேயே இருந்து சேவித்துவந்தோம். நாங்கள் அந்நாட்டிற்குப் போன சமயத்தில் சுமார் 22,000 சாட்சிகளே இருந்தனர். இப்போதோ 1,00,000-க்கும் அதிகமானோர் இருக்கின்றனர்!
மீண்டும் மலாவிக்கே!
ஆகஸ்ட் 12, 1993-ல் மலாவியில் யெகோவாவின் சாட்சிகளின் மீதான தடை நீக்கப்பட்டது. இரண்டு வருடம் கழித்து லின்டாவும் நானும் மறுபடியும் மலாவிக்கே அனுப்பப்பட்டோம். அழகிய, நட்புறவான நாடாகிய அது ஆப்பிரிக்காவின் கனிவான இதயம் என்று அழைக்கப்படுகிறது. அங்கேதானே எங்களுடைய ஊழியத்தை முதன்முதலாக ஆரம்பித்தோம்! ஜனவரி 1996 முதல் மலாவியின் அன்பான, அமைதியான மக்கள் மத்தியில் சேவிக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறோம். முப்பது ஆண்டுகளாக துன்புறுத்தல்களைச் சகித்த, மலாவியைச் சேர்ந்த உண்மையுள்ள சகோதரர்களுடன் மறுபடியும் சேவிப்பதற்கு எங்களுக்கு கிடைத்த சிலாக்கியத்தை பெரிதும் போற்றுகிறோம். எங்களுடைய ஆப்பிரிக்க சகோதரர்கள் ஊக்கத்தின் ஊற்றுமூலமாக இருந்திருக்கின்றனர்; ஆகவே அவர்களை அதிகம் நேசிக்கிறோம். “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டு[ம்]” என்ற பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். (அப்போஸ்தலர் 14:22) இப்போது மலாவியில் இருக்கும் ஏறக்குறைய 41,000 சாட்சிகளும் தடையின்றி போதிக்கவும், பெரிய மாநாடுகளை நடத்தவும் சுயாதீனம் பெற்றிருக்கிறார்கள்.
எங்களுடைய எல்லா ஊழிய நியமிப்புகளையும் மகிழ்ந்து அனுபவித்திருக்கிறோம். “கர்த்தருக்குள் மகிழ்ச்சி”யைக் காத்துக்கொண்டால், எத்தகைய சோதனை நிறைந்த அனுபவமும் நம்மை இன்னும் சிறந்த மனிதர்களாக ஆக்கும் என்ற பாடத்தை நானும் லின்டாவும் கற்றுக்கொண்டோம். (நெகேமியா 8:10) ஊழிய நியமிப்புகள் மாறும்போது அதற்கேற்றவாறு அட்ஜஸ்ட் செய்வது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கிறது. ஆனால் எதையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் லின்டாவின் குணமும், முக்கியமாக யெகோவாவில் அவள் வைத்திருந்த உறுதியான விசுவாசமும் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றன. “நல்ல மனைவி” கிடைத்ததால் வந்த ஆசீர்வாதங்களை நினைத்து என் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கிறது.—நீதிமொழிகள் 18:22, NW.
மகிழ்ச்சியான, அதே சமயத்தில் விறுவிறுப்பான வாழ்க்கையை அனுபவித்திருக்கிறோம்! யெகோவா எங்களை அரவணைத்து பாதுகாத்து வருவதற்காக நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். (ரோமர் 8:31) முழுநேர ஊழியத்தின் ஆசீர்வாதங்கள் பற்றிய அந்தப் பேச்சைக் கொடுத்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நாங்கள் ‘யெகோவாவைச் சோதித்துப் பார்த்து, அவர் நல்லவர் என்பதை ருசித்து’ அறிந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! (சங்கீதம் 34:8; மல்கியா 3:10) ‘எங்களுக்காக உயிர்வாழாமல்’ இருப்பதே மிகவும் சிறந்த வாழ்க்கை என்பதில் எங்களுக்கு துளிகூட சந்தேகமில்லை!
[பக்கம் 24-ன் வரைப்படம்/படம்]
நாங்கள் ஊழியம் செய்த நாடுகள்
ஈரான்
காங்கோ குடியரசு
காங்கோ மக்கள் குடியரசு
கென்யா
மலாவி
[பக்கம் 21-ன் படம்]
தென் ஆப்பிரிக்கா, கேப் டௌன் வழியாக மலாவிக்கு செல்லும் வழியில்
[பக்கம் 23-ன் படம்]
கைது செய்யப்பட்டு, மலாவியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது
[பக்கம் 25-ன் படம்]
மசாய் இன பெண்ணான டார்க்கஸ், தன் கணவனுடன்