பைபிளின் கருத்து
எந்த சிகிச்சையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமா?
வாழ்க்கை என்றாலே வியாதி, நோய், காயம் என்பதாக மாறிவிட்ட காலம் இது. இவை ஆரோக்கியத்தின் எதிரிகள். இந்த எதிரிகளை எதிர்த்து சமாளிப்பதற்கு மக்கள் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். சிகிச்சை எடுப்பதில் பலன் இருக்கிறது என்பதால்தான், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” என்று இயேசு குறிப்பிட்டார்.—லூக்கா 5:31.
பைபிளில் இந்த வார்த்தைகளை எழுதிய லூக்காவும் ஒரு மருத்துவராக பணிசெய்தார். (கொலோசெயர் 4:14) அப்போஸ்தலன் பவுல் லூக்காவோடு பயணம் செய்தபோது அவர் கையாண்ட சிகிச்சை முறைகளால் பயனடைந்திருக்கலாம். எனினும், கிறிஸ்தவர்கள் இந்த சிகிச்சையைத்தான் எடுக்கலாம், இதை எடுக்கக்கூடாது என்பதாக ஏதாவது கட்டுப்பாடுகளை பைபிளில் காண்கிறோமா? நீங்கள் எந்த சிகிச்சையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமா?
வேதம் காட்டும் வழி
ஒரு நபர் சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளலாமா என்பதைப் பற்றி ஞானமான தீர்மானம் எடுப்பதற்கு பைபிள் உதவியளிக்கும். உதாரணத்திற்கு உபாகமம் 18:10-12 வசனங்களில் குறிசொல்லுதல், மந்திரவாதம் போன்றவை யெகோவாவுக்கு ‘அருவருப்பானவை’ என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைப் போலவே, பவுல் எச்சரித்த “பில்லிசூனியம்” என்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 5:19-21) ஆகவே, உண்மை கிறிஸ்தவர்களும், வியாதியைக் கண்டுபிடித்து குணப்படுத்தும் எந்த முறையும் பில்லிசூனியத்தோடு சம்பந்தப்பட்டிருந்தால் அதைத் தவிர்த்துவிடுகின்றனர்.
உயிர், இரத்தம் போன்றவை புனிதமானவை என்பதையும் அவற்றிற்கு தேவன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதையும் பைபிள் வெளிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 9:3, 4) யெகோவாவின் சாட்சிகள் ‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்புகின்றனர்; எனவே, இரத்தமேற்றிக்கொள்ளுதல் போன்ற பைபிளின் சட்டத்திற்கு விரோதமான சிகிச்சை முறைகளை மறுக்கின்றனர். (அப்போஸ்தலர் 15:28, 29) இவ்வாறு மறுப்பதால், ஒட்டுமொத்தமாக எல்லா மருத்துவ சிகிச்சைகளையும் சாட்சிகள் வெறுக்கின்றனர் என்பதாக சொல்ல முடியாது. அதற்கு மாறாக அவர்கள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த சிகிச்சை முறைகளையே பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தங்களுடைய மத நம்பிக்கைகளோடு முரண்படாத சிகிச்சை முறைகளை தங்களுக்கு அளிக்குமாறு சிகிச்சை அளிப்போரைக் கேட்டுக்கொள்கின்றனர்.
தேர்ந்தெடுப்பது சரிதானா என்பதை கவனிக்கவும்
ராஜாவாகிய சாலொமோன் கொடுத்த எச்சரிக்கையை கவனிப்போமா: “பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.” (நீதிமொழிகள் 14:15, பொ.மொ.) பைபிள் நேரடியாக கண்டனம் செய்யாத மருத்துவ சிகிச்சையாக இருந்தாலும், ஒருவர் தான் செல்லும் வழி ‘நேர்வழிதானா’ என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா சிகிச்சை முறைகளும் பிரயோஜனமானவை அல்ல. ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை’ என்று இயேசு சொன்னார் என்றாலும், அப்போதிருந்த எந்த சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதாக அவர் சொல்லவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். சில மருத்துவச் சிகிச்சைகள் பிரயோஜனமானவை என்பதையும் சில போலியானவை என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.a
இதைப் போலவே இன்று இருக்கும் சில சிகிச்சை முறைகளும் பிரயோஜனமற்றவையாக அல்லது போலியானவையாக இருக்கலாம். ஒருவர் சரியானபடி கணிக்கவில்லை என்றால் தேவையில்லாத ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிகிச்சை முறை ஒருவருக்கு நன்மை அளித்தது என்பதற்காக அது மற்றவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று சொல்ல முடியாது; அது மற்றவருக்கு பலனளிக்காமல் போகலாம் அல்லது கேடும் விளைவிக்கலாம் என்பதை மறக்கக்கூடாது. நோய்க்கான மருத்துவ சிகிச்சையைப் பற்றி தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் ஒரு விவேகி ஞானமாக செயல்படுவார். நல்ல நண்பர்களாக இருந்தாலும், சொல்லப்படும் ‘எல்லா வார்த்தையையும் நம்புவது’ ஞானமற்றது என்பதை உணர்ந்து ஜாக்கிரதையாகத்தான் செயல்படுவார். அவர் நம்பத்தகுந்த விஷயங்களை தேடுவதன் மூலம் ‘தெளிந்த புத்தி’ இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவார்; அவற்றின் அடிப்படையில் அவரால் தீர்மானம் எடுக்க முடியும்.—தீத்து 2:12.
நியாயமாகவும் சமநிலையோடும் செயல்படுவது
தன்னுடைய ஆரோக்கியத்தைப் பற்றி ஒருவர் அக்கறையாக இருப்பது நியாயமே. அவர் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சமநிலையான அபிப்பிராயத்தை வைத்திருந்தார் என்றால் உயிர் என்ற பரிசையும் அது தெய்வீக ஊற்றுமூலத்தை உடையது என்பதையும் போற்றுவதை வெளிக்காட்டுகிறார். (சங்கீதம் 36:9) சரியான மருத்துவ சிகிச்சைகளை கிறிஸ்தவர்கள் நாடுகின்றனர் என்றாலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சமநிலையான மனப்பான்மையை கொண்டிருக்க விரும்புகின்றனர். ஓரளவு நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் நபர் சதா ஆரோக்கியத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பாரென்றால் அவர் “அதிக முக்கியமான விஷயங்களுக்கு” கவனம் செலுத்த தவறலாம்.—பிலிப்பியர் 1:10; 2:3, 4; NW.
இயேசுவின் காலத்தில் நோயுற்ற ஒரு பெண் வாழ்ந்தாள்; நோய் குணமாவதற்காக பல மருத்துவர்களை நாடினாள், அதற்காக ‘தன்னிடமிருந்த எல்லாவற்றையும் செலவழித்தாள்.’ நோய் குணமானதா? இல்லை. குணமாவதற்கு பதில் அவள் நிலை மோசமானதால் அவள் நொந்துபோனாள். (மாற்கு 5:25, 26) தன்னால் முடிந்தளவு முயற்சி எடுத்த பிறகும் தன்னுடைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த காலத்தில் இருந்த மருத்துவத்தின் வரம்பை அவளுடைய அனுபவம் காட்டுகிறது. இன்று மருத்துவ ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும் அதிகம் முன்னேறியிருந்தாலும் அநேகர் அந்தப் பெண்ணுடைய நிலையில்தான் இருக்கின்றனர். ஆகவே, மருத்துவத்துறை எந்தளவு நன்மையளிக்கும் என்பதைப் பற்றி நமக்கு அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. தற்போது, முழுமையான ஆரோக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. கடவுள் ‘தேசத்தாரை குணமாக்குவது’ எதிர்காலத்தில்தான் நடக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 22:1, 2, NW) எனவே மருத்துவ சிகிச்சை எந்தளவிற்கு பலனளிக்கும் என்பதைப் பற்றிய சமநிலையான எண்ணத்தை வளர்ப்பது அவசியம்.—பிலிப்பியர் 4:5, NW.
நாம் தேர்ந்தெடுக்கும் காரியம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே, மருத்துவம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்படலாம். அந்தத் தீர்மானம் நல் ஆரோக்கியத்தை நாம் பெற விரும்புகிறோம் என்பதையும் கடவுளோடு சுமுகமான உறவை காத்துக்கொள்ள விரும்புகிறோம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். நாம் அவ்வாறு செய்வோமென்றால் புதிய உலகத்தைப் பற்றிய யெகோவா தேவனுடைய பின்வரும் வாக்குறுதி நிறைவேறும் என்பதில் நம்பிக்கையை காட்டுகிறோம். அங்கு “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.”—எசாயா 33:24, பொ.மொ.
(g01 1/08)
[அடிக்குறிப்பு]
a உதாரணமாக, முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட டையோஸ்கொரைடஸின் என்ஸைக்ளோப்பீடியாவில் மஞ்சள் காமாலைக்காக பரிந்துரைக்கப்படும் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். அதில், ஆட்டுப்புளுக்கையை திராட்ச ரசத்தில் கலந்து இந்நோய்க்கு மருந்தாக கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது! இப்படிப்பட்ட சிகிச்சை குணமளிப்பதற்கு பதில் நோயாளியின் வேதனையை இன்னும் அதிகமாக்கியிருக்கும் என்பதை இப்போது நாம் அறிவோம்.
[பக்கம் 18-ன் படங்கள்]
1891-ல் சர் லூக் ஃபில்டஸ் வரைந்த “த டாக்டர்” ஓவியம்
[படத்திற்கான நன்றி]
Tate Gallery, London/Art Resource, NY