தண்ணீர் சிவப்பாக மாறும்போது
பிலிப்பீன்ஸிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்
கதிரவனுக்கு முன்பே கண்விழித்து, வழக்கம் போலவே வலைகளையும் படகுகளையும் தயார்படுத்துவதற்கு மீனவர்கள் கடற்கரையில் கால்பதித்துச் செல்வதை கற்பனை செய்துகொள்ளுங்கள். என்றைக்கும் போலவே அன்றைக்கும் “கடல் அன்னை” தங்களுக்கு படியளப்பாள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இப்பொழுது, இன்னும் உறக்க மயக்கத்தில் இருக்கும் அவர்களுடைய கண்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் காட்சி. கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் சடலங்களாக கிடக்கின்றன.இந்தப் பேரழிவுக்கு காரணம்? சிவப்பு அலைகள்!
சிவப்பு அலைகள் (Red Tides) என்பது உலகளவில் நடைபெறும் ஓர் அதிசய நிகழ்ச்சி. ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கனடாவின் அட்லாண்டிக், பசிபிக் கரையோரங்களில் இவை நிகழ்ந்திருக்கின்றன. ஆஸ்திரேலியா, ப்ரூனி, வடமேற்கு ஐரோப்பா, ஜப்பான், மலேசியா, பாப்புவா நியூ கினீ, பிலிப்பீன்ஸ் மற்றும் பிற இடங்களிலும் இவை சம்பவித்திருக்கின்றன. அநேகர் அவற்றை பற்றி அறியாதபோதிலும், சிவப்பு அலைகள் ஒன்றும் புதிதல்ல.
பிலிப்பீன்ஸில் 1908-ம் ஆண்டில் பட்டான் என்ற மாகாணத்தில் முதலாவதாக சிவப்பு அலையை மக்கள் பார்த்தார்கள். 1983-ல், ஸமர் கடலிலும் மக்கேடா, பீல்யாரேயால் வளைகுடாக்களிலும் மீன்களையும் சிப்பி மீன்களையும் சிவப்பு அலைகள் நச்சுப்படுத்தின. அதுமுதல், பல கடற்கரைகளில் சிவப்பு அலைகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள். பிலிப்பீன்ஸ் தேசிய சிவப்பு அலை பணித் துறையைச் சேர்ந்த செனைடா ஆபூஸோ என்பவர் விழித்தெழு! எழுத்தாளரிடம் இவ்வாறு சொன்னார்: “மீன்களை சாகடிப்பதோடு மட்டுமல்லாமல், சிவப்பு அலைகளால் சிப்பி மீன்கள் நச்சுப்படுத்தப்பட்டதற்கும் பிலிப்பீன்ஸின் மீன் மற்றும் நீர்வாழ் வளத் துறை 1,926 அத்தாட்சிகளை அளித்திருக்கின்றன.a ஆனால் உண்மையிலேயே இந்தக் கோர நிகழ்ச்சிதான் என்ன?
அவை என்ன?
“சிவப்பு அலை” என்ற பதம், பெருங்கடலின் அல்லது கடலின் சில பகுதிகளில் சில சமயங்களில் தண்ணீரின் நிறம் மாறுபடுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் நிறம் சிவப்பாக இருக்கிறபோதிலும், அது பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இருக்கலாம். “நிறம் மாறிய பகுதிகள் சில சதுர கஜங்கள் அல்லது மீட்டர் முதல் 1,000 சதுர மைல் (2,600 சதுர கிலோமீட்டர்) என்ற பரப்பளவில் காணப்படலாம்” என த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
இப்படி நிறம் மாறுவதற்கு காரணம் என்ன? பொதுவாக, டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் எனப்படும் பல்வகை நுண்ணுயிரிகளான ஒரு செல் பாசி வகைகளால் அல்லது புரோட்டோசோவாக்களால் சிவப்பு அலைகள் ஏற்படுகின்றன. இந்த மிகச் சிறிய உயிரினங்களுக்கு ஃப்ளஜில்லா எனப்படும் மயிர் போன்ற இழைகள் சாட்டை போல் நீட்டிக்கொண்டிருக்கின்றன; தண்ணீரில் முன்னோக்கி உந்திச் செல்வதற்கு இவற்றை பயன்படுத்துகின்றன. சுமார் 2,000 வகை டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் இருக்கின்றன, அவற்றில் 30 வகைகளில் நச்சுப்பொருட்கள் இருக்கின்றன. பொதுவாக, அதிக உப்பாக இருக்கும் வெதுவெதுப்பான நீரில் இந்த மிகச் சிறிய உயிரிகள் காணப்படுகின்றன.
இந்த நுண்ணுயிரிகளாகிய டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் திடீரென வேகமாக அதிகரிக்கும்போது சிவப்பு அலைகள் ஏற்படுகின்றன. ஒரு லிட்டருக்கு 5,00,00,000 என்ற அளவில் இந்த உயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்! இது ஏன் சம்பவிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் முழுமையாக புரிந்துகொள்ளாதபோதிலும், ஒரே சமயத்தில் தண்ணீரை சில சூழ்நிலைமைகள் பாதிக்கும்போது டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் அதிகரிக்கின்றன என அறியப்பட்டுள்ளது. இயல்புமீறிய சீதோஷ்ணம், மிக அதிக வெப்பநிலை, தண்ணீரில் மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்கள், அதிகமான சூரிய ஒளி, சாதகமான நீரோட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். அடைமழை பெய்யும்போது, தாதுக்களும் வேறுசில ஊட்டச்சத்துக்களும் நிலப்பகுதியிலிருந்து கடலோர நீருக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊட்டச் சத்துக்கள் டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். விளைவு? சிவப்பு அலைகள்!
இந்த அதிசய நிகழ்ச்சியை மனிதர் சிலசமயங்களில் இன்னும் மோசமாக்குவதாக தெரிகிறது. தொழிற்சாலைகள் மற்றும் மனிதர்கள் வெளியேற்றும் கழிவுப்பொருட்கள் பெருமளவில் தண்ணீரில் கலக்கும்போது, சில ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கலாம். இதனால் டைனோ ஃப்ளஜில்லேட்டுகளின் எண்ணிக்கை பேரளவுக்கு அதிகரிக்கலாம். தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் விரைவில் குறைந்து விடுகிறது, அதனால் பெரிய பெரிய மீன்கள் செத்து மடிகின்றன.
வெதுவெதுப்பான கடல்களிலும் கொந்தளிப்பில்லாத கடற்கரை தண்ணீரிலும் சிவப்பு அலைகள் ஏற்படுகின்றன. இவை பொதுவாக கோடை காலத்தின் இறுதிக்கும் மழைக் காலத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் நிகழ்கின்றன. அந்தப் பகுதியில் காணப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து, இவை சில மணிநேரம் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கலாம்.
பலிக்கடாக்கள்
பெரும்பாலான சிவப்பு அலைகள் தீங்கற்றவை; ஆனால் சில மிகவும் தீங்கிழைப்பவை. டைனோ ஃப்ளஜில்லேட்டுகளில் சில வகைகள் தண்ணீருக்குள் நச்சுப் பொருட்களை உமிழ்வதால் மீன்களையும் கடல்வாழ் உயிரினங்கள் பிறவற்றையும் செயலிழக்கச் செய்து சாகடிக்கின்றன. சில சிவப்பு அலைகள் டைனோ ஃப்ளஜில்லேட்டுகளை உண்ணும் மீன்களையும், மஸ்ஸெல் சிப்பிகளையும், முத்துச் சிப்பிகளையும், கிளிஞ்சல்களையும், கணவாய் மீன்களையும், கூனிறால்களையும், நண்டுகளையும் பேரளவில் இழக்கும்படி செய்திருக்கின்றன. தீங்கிழைக்கும் சிவப்பு அலைகள் தாக்கும்போது, தண்ணீரில் மீன்கள் பேரளவில் செத்து மிதப்பதை காணலாம், பிறகு அவை கடற்கரைகளில் பல கிலோமீட்டருக்கு குவிந்து கிடக்கலாம்.
மனிதர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீன் பிடிப்பதே வருமானத்திற்கு வழியாக இருக்கும் இடங்களில், சிவப்பு அலைகள் மீனவர்களுடைய பிழைப்பில் மண்ணை தூவிவிட்டன. இதைவிட கொடுமை என்னவென்றால், மனித உயிர்களையும் சிவப்பு அலைகள் பாதித்திருக்கின்றன.
சிவப்பு அலை நச்சு
சில டைனோ ஃப்ளஜில்லேட்டுகள் வெளிவிடும் நச்சுப்பொருள் ஸாக்ஸிடாக்ஸின் (saxitoxin) என அழைக்கப்படுகிறது. இது தண்ணீரில் கரையக்கூடிய ஓர் உப்பு, இது மனிதருடைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இதனால் நியூரோடாக்ஸின் (neurotoxin) என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு அறிவிக்கிறது: “தண்ணீருக்குள் வெளிவிடப்படும் நச்சுப் பொருட்கள் மனித சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.” அலை அடிக்கும்போது சிவப்பு அலை நச்சுப் பொருட்கள் காற்றில் வெளிவிடப்படுவதால் கடற்கரையோர பகுதி சுற்றுலா மையங்களை மூட வேண்டியதாயிருக்கிறது.
சிப்பி வகைகளையோ மற்ற கடல் உணவையோ நீங்கள் சாப்பிடுவதில் அதிக ஆர்வமுடையவரா? டைனோ ஃப்ளஜில்லேட்டுகளை உட்கொள்ளும் சிப்பிகளை சிவப்பு அலைகள் நச்சுப்படுத்திவிடலாம். இன்ஃபாமேப்பர் என்ற பத்திரிகை சொல்கிறது: ‘முத்துச் சிப்பிகளும், மஸ்ஸெல் சிப்பிகளும், கிளிஞ்சல்களும், மற்ற ஈரிதழ் சிப்பிகளும் அதிக ஆபத்தை உண்டாக்கும், ஏனென்றால் இவை நுண்ணிய உயிரினங்களை ஃபில்டர் முறையில் உட்கொண்டு விடுகின்றன, மேலும் மீன்களைவிட அதிக நச்சுப் பொருட்களை உறிஞ்சிக்கொள்கின்றன.’ என்றபோதிலும், “மீன்கள், கணவாய் மீன்கள், கூனிறால்கள், நண்டுகள் . . . ஆகியவை மனிதர் சாப்பிடுவதற்கு ஏற்றவையே.” காரணம்? சிவப்பு அலை நச்சுப் பொருட்கள் இந்த உயிரிகளின் குடல்களில் சேர்ந்துவிடுகின்றன, சமைக்கும்போது பொதுவாக இவை நீக்கப்பட்டுவிடுகின்றன.
என்றாலும், சிவப்பு அலைகளால் மாசுபடுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கடல் உணவை—முக்கியமாக சிப்பி வகைகளை—சாப்பிடும் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட அலைகள் செயலிழக்க வைக்கும் சிப்பி நச்சு (paralytic shellfish poisoning [PSP]) என்ற ஒரு நிலைமையை உண்டாக்கலாம். சிவப்பு அலை நச்சுக்கள் உங்களுடைய வயிற்றிற்குள் சென்றிருந்தால், முப்பது நிமிடங்களுக்குள் உங்களுக்கு அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகளில் சிலவற்றை இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை காட்டுகிறது. தகுந்த சிகிச்சை பெறவில்லையென்றால், சுவாச மண்டலம் பாதிக்கப்படும், கடைசியில் அது மரணத்திற்கு வழிநடத்தலாம்.
தற்பொழுது சிவப்பு அலை நச்சுக்கு மாற்று மருந்து கிடையாது. ஆனால், சில அவசர சிகிச்சை முறைகள் ஓரளவுக்கு வெற்றி தந்திருக்கின்றன. நோயாளியை வாந்தியெடுக்க வைப்பதன் மூலம் சிவப்பு அலை நச்சுக்களை அவருடைய வயிற்றிலிருந்து எடுக்க முடியும். வயிற்றிலுள்ள நச்சுப்பொருட்கள் வயிற்றுக் குழாய் (stomach tube) மூலமும் கழுவி எடுக்கப்படுகின்றன. சிலருடைய விஷயத்தில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர் சீக்கிரமாக குணமடைவதற்கு பனங்கற்கண்டு சேர்த்த தேங்காய் பாலை குடிப்பது உதவியளிப்பதாக பிலிப்பீன்ஸ் நாட்டவர் சிலர் கருதுகின்றனர்.
பரிகாரம்
தற்சமயம், சிவப்பு அலைகள் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறைந்தளவு ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தினால் சிவப்பு அலைகள் என்ற பிரச்சினையை குறைக்க முடியும் என அநேகர் நம்புகின்றனர். இதனால் கடலுக்குள் இவை அடித்துச் செல்லப்பட வாய்ப்பில்லை. தொழிற்சாலைகள் மற்றும் மனிதர்கள் வெளியேற்றும் கழிவுப் பொருட்கள் கடலுக்குள் கலப்பதை தடை செய்வதும் பயனளிக்கும். டைனோ ஃப்ளஜில்லேட்டுகளை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களின் ஊற்றுமூலங்கள் எவையாவது இருந்தால் அவற்றை கடற்கரையிலிருந்து நீக்குவது மற்றொரு அணுகுமுறையாகும்.
இதற்கிடையில், இந்தச் சூழ்நிலைமையை சில அரசாங்கங்கள் கவனமாக கவனித்து வருகின்றன. உதாரணமாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பயன்படுத்துவதற்கு சிப்பிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிலிப்பீன்ஸில் ஓர் அரசாங்க நிறுவனம் அவற்றை தவறாமல் பரிசோதிக்கிறது. ஆனால், தண்ணீர் சிவப்பாக மாறும்போது மனிதருக்கு ஏற்படும் தீய விளைவுகளை படைப்பாளர் மட்டுமே அடியோடு ஒழிக்க முடியும்.(g01 6/8)
[அடிக்குறிப்பு]
a பிலிப்பீன்ஸில் சிப்பி மீன்கள் நச்சுப்படுத்தப்பட்டதற்கு சிவப்பு அலைகளே நேரடி காரணமாக இருந்தாலும், மற்றெல்லா நாடுகளிலும் இப்பிரச்சினைக்கு இந்த அலைகளே காரணம் என சொல்ல முடியாது என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
[பக்கம் 24-ன் பெட்டி]
சிவப்பு அலை நச்சின் அறிகுறிகள்
1. உதடுகளிலும் ஈறுகளிலும் நாக்கிலும் அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வு
2. மரத்துப்போதல், முகத்தில் உறுத்தல் ஏற்படுகிறது, இது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது
3. தலைவலி, தலைசுற்றல்
4. பயங்கர தாகம், உமிழ்நீர் அதிகமாக சுரத்தல்
5. குமட்டல், வாந்தி, பேதி
6. சுவாசிக்கவும் பேசவும் விழுங்கவும் கஷ்டப்படுதல்
7. மூட்டு வலி, கிறுகிறுப்பு
8. இதயம் படபடத்தல்
9. தசை பலகீனம், சமநிலையிழத்தல்
10. உடல் செயலிழந்து போதல்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
சிவப்பு அலைகளுக்கு காரணமான உயிரிகள்
பைரோடினியம் பஹாமென்ஸ்
ஜிம்னோடினியம் கேடெனேடம்
கேம்பியர்டிஸ்கஸ் டாக்ஸிகஸ்
[படங்களுக்கான நன்றி]
Courtesy of Dr. Rhodora V. Azanza, University of the Philippines
Courtesy of Dr. Haruyoshi Takayama
ASEAN-Canada Cooperative Programme on Marine Science
[பக்கம் 25-ன் படங்கள்]
சிவப்பு அலையின் விளைவுகள்
[படங்களுக்கான நன்றி]
Grant Pitcher/Courtesy WHOI
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
Peter J. S. Franks, Scripps Institution of Oceanography
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Scripps Institution of Oceanography