அந்தரங்கம் பற்றிய நியாயமான நோக்கு
“[யெகோவாவின்] கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது.”—நீதிமொழிகள் 15:3.
தங்களுடைய ஒவ்வொரு அசைவுகளையும் இரகசியமான யோசனைகளையும் அடிமனதிலுள்ள ஆசைகளையும் வேறொருவர் உளவு பார்ப்பதை பெரும்பாலோர் வரவேற்க மாட்டார்கள். இருந்தாலும், கடவுளால் அதை செய்ய முடியும் என பைபிள் சொல்கிறது. “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13) இது உங்களுடைய அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதாக இல்லையா? இல்லவே இல்லை. ஏன்?
இதை இவ்வாறு விளக்கலாம்: நீங்கள் கரையோரத்தில் நீந்தி விளையாடும்போது உயிர் காப்பாளர் உங்களை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். இதை உங்களுடைய அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதாக கருத மாட்டீர்கள். சொல்லப்போனால், அவர் அங்கிருப்பதுதானே உங்களுக்கு பாதுகாப்புணர்வை அளிக்கிறது. உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படப்போவதாக தெரிந்தால், அவர் விரைந்து வந்து உங்களை காப்பாற்றுவார் என அறிவீர்கள். அது போலவே, ஒரு தாய் தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறாள். அப்படி செய்யவில்லையென்றால், அவள் அசட்டையாய் இருப்பதாக கருதப்படுவாள்.
இது போலவே, யெகோவா தேவனும் நம்முடைய நலனில் அக்கறை காட்டுவதால் நம் சிந்தைகளையும் செயல்களையும் கண்காணிக்கிறார். பைபிள் தீர்க்கதரிசி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.” (2 நாளாகமம் 16:9) ஆனால் நம்முடைய உள்ளான சிந்தைகளையும் செயல்களையும் எந்தளவுக்கு யெகோவா உண்மையில் பார்க்கிறார்? கடவுளுடைய குமாரனாகிய இயேசுவை பற்றிய பல்வேறு சம்பவங்கள் இதன் சம்பந்தமாக ஓரளவு உட்பார்வை அளிக்கிறது.
இருதயத்தையும் மனதையும் அறிந்துகொள்ளும் திறமை
பரிசேயன் ஒருவனுடைய வீட்டில் இயேசு உணவருந்திக் கொண்டிருந்தபோது, பாவியாக அறியப்பட்ட ஒரு பெண் இயேசுவின் பாதத்தருகில் வந்து முழங்காற்படியிட்டு அமர்ந்தாள். அவள் அழுதுகொண்டு, இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து தன் தலைமயிரால் துடைத்தாள். அந்தப் பதிவு இவ்வாறு கூறுகிறது: “அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.” அதற்கு இயேசுவின் பதில், அந்தப் பெண்ணின் பின்னணியை மட்டுமல்ல, அந்தப் பரிசேயன் ‘தனக்குள்ளே சொல்லிக் கொண்டதையும்’ அவர் அறிந்திருந்ததைக் காட்டியது.—லூக்கா 7:36-50.
மற்றொரு சந்தர்ப்பத்தில், தாம் அற்புதங்கள் செய்வதை எதிர்த்த ஒரு கூட்டத்தாரை இயேசு நேருக்கு நேர் சந்தித்தார். மத்தேயு 9:4-ல் உள்ள விவரப்பதிவு இவ்வாறு கூறுகிறது: “இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?” என்றார். மற்றவர்களின் எண்ணங்களை அறியும் இயேசுவின் திறமை வெறும் ஊகத்தின் அடிப்படையில் இருக்கவில்லை.
லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றிய விவரப் பதிவை ஆராய்ந்தால் இதில் இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பது தெரியும். இயேசுவின் நெருங்கிய நண்பனாகிய லாசரு இறந்து நான்கு நாட்களாகிவிட்டன. அவனுடைய யோசனைகள் அழிந்து அவனுடைய உடல் அழுக ஆரம்பித்தது. (சங்கீதம் 146:3, 4) லாசருவினுடைய கல்லறை நுழைவாயிலை திறக்கும்படி இயேசு கட்டளையிட்டபோது, “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே” என லாசருவின் சகோதரி மார்த்தாள் ஆட்சேபித்தாள். ஆனாலும், கடவுளுடைய வல்லமையின் உதவியால் லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பினார்; இறப்பதற்கு முன்பிருந்த அதே லாசருவை அவருடைய மனதிற்குள்ளிருந்த அந்தரங்கமான யோசனைகளோடு சேர்த்து மீண்டும் உயிருக்குக் கொண்டுவந்தார்.—யோவான் 11:38-44; 12:1, 2.
நம்முடைய இருதயத்தின் யோசனைகளை யெகோவா தேவனால் அறிந்துகொள்ள முடியும் என்பதை ஜெபம் சம்பந்தமாக இயேசு சொன்ன குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. மாதிரி ஜெபத்தை கற்றுக்கொடுப்பதற்கு முன்பு இயேசு இவ்வாறு கூறினார்: “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” அதோடு, “நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” என்றும் இயேசு கூறினார்.—மத்தேயு 6:6, 8.
கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்பதை அறிவதால் வரும் பலன்கள்
கடவுள் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து “நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” என்பதால் நம்முடைய செயல்களை அது முடக்குகிறதா அல்லது நம்முடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறதா? (1 நாளாகமம் 28:9) இல்லை. மாறாக, கடவுளிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்திருப்பது நன்மை செய்வதற்கு நம்மைத் தூண்டும் மாபெரும் சக்தியாகவே விளங்குகிறது.
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட எலிசபெத் நேர்மையாக இருப்பதற்கு முக்கிய காரணம், தன்னுடைய வேலையை கேமராக்கள் கண்காணிப்பதால் அல்ல என கூறுகிறார். மாறாக, “யெகோவா என்னுடைய நடத்தையைப் பார்க்கிறார் என்பதை அறிந்திருக்கிறேன். வேலை செய்யாத சமயத்திலும்கூட, எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடப்பதற்கு இதுவே என்னை தூண்டுகிறது” என கூறுகிறார்.
ஜிம் என்பவரும் இது போலவே கூறுகிறார். தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாக திருடும் தொழிற்சாலை ஒன்றில் இவர் வேலை பார்க்கிறார். ஆனால் ஜிம் தன்னுடைய கம்பெனியிலிருந்து எதையும் திருடுவதில்லை. “உண்மைதான், கம்பெனியிலிருந்து திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் என்னால் தப்பிக்க முடியும், ஆனால் கடவுளுடன் கொண்டுள்ள உறவுதான் எனக்கு பெருசு. நான் செய்கிற எல்லாவற்றையும் அவர் பார்க்கிறார் என்பதும் எனக்கு தெரியும்” என கூறுகிறார்.
நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளுக்குமுன் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது என்பதை அறிவதும், அவருடன் நெருங்கிய உறவுக்குள் வரவேண்டும் என்ற ஆசையும் தன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்ய ஒருவரைத் தூண்டலாம். உதாரணமாக, டக் என்பவர் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து வந்தார், ஆனால் தன்னுடைய செயல்களைக் கடவுளால் பார்க்க முடியும் என்பதை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தன் குடும்பத்தாருடன் கூட்டங்களுக்கு ஆஜரானார், ஆனால் அதற்குப் பிறகு சாட்சிகளல்லாத தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை உபயோகித்தார். மோட்டார் சைக்கிள்கள் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை, அதனால் வன்முறைமிக்க மோட்டார் சைக்கிள் கும்பலோடு சேர்ந்துகொண்டார். அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற பயங்கரமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு டக் மீண்டும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். யெகோவா நிஜமான நபர், நம்முடைய செயல்களை அறிந்திருப்பவர், நம்முடைய செயல்கள் அவரை பாதிக்கின்றன என்பதை உணர ஆரம்பித்தார். அதனால் கடவுளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாக வாழ உந்துவிக்கப்பட்டார். யாராவது அந்தக் கும்பலைவிட்டுப் பிரிந்துபோனால் அவரை அடித்து நொறுக்குவது அந்தக் கும்பலின் வழக்கம். அப்படியிருந்த போதிலும், அந்தக் கும்பல் நடத்திய ஒரு கூட்டத்திற்குச் சென்று, தான் விலகிவிடுவதாக அவர்கள் அனைவர் முன்னிலையிலும் முறைப்படி தெரிவித்தார். அவர் சொல்கிறார்: “நான் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, என் இதயம் படபடத்தது. சிங்கக் கெபியில் இருந்த தானியேலைப் போல உணர்ந்தேன். ஆனால் மெளனமாக யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு நான் விலகுவதற்கான காரணத்தை அமைதலாக விளக்கினேன். அங்கிருந்து வெளியே வந்தபோது, ஒருவரைத் தவிர மற்ற எல்லாரும் எனக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். ‘உன் தேவனாயிருக்கிற யெகோவாவாகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்’ என்று ஏசாயா 41:13-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக கண்டேன்.” தன் வாழ்க்கையை மாற்றுவதற்குத் தேவையான பலத்தை யெகோவா தந்ததாக டக் உணருகிறார்.
ஒரு நியாயமான நோக்கு
விஷயங்களை கடவுளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கலாம் என நினைப்பது கொஞ்சம்கூட நியாயமில்லை. “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்” என பைபிள் வெளிப்படையாக குறிப்பிடுகிறது. (சங்கீதம் 14:1) முந்தைய கட்டுரைகள் சிறப்பித்துக் காண்பித்தபடி, ஒரு கூட்டத்தில் ஒருவருடைய முகத்தை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளும் கேமராக்களை மனிதர்கள் உண்டாக்கியிருக்கிறார்கள். தொலைபேசி கருவிகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோரில் குறிப்பிட்ட ஒருவருடைய குரலை மட்டும் இரகசியமாக ஒட்டுக்கேட்கும் கருவிகளையும் தயாரித்திருக்கிறார்கள். அப்படியானால், மனித மூளையைப் படைத்த படைப்பாளரால் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் எந்தவொரு நபரின் சிந்தனை ஓட்டங்களையும் ஆராய முடியும்.
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துகொள்ளும் உரிமை நம்முடைய படைப்பாளருக்கு இருக்கிறது, ஆனால் மனிதருக்கு அந்த உரிமை இல்லை. கடவுளுடைய தயவைப் பெற விரும்புகிறவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: ‘பிறர் காரியங்களில் தலையிடுபவராக இருக்கக்கூடாது.’ (1 பேதுரு 4:15, பொது மொழிபெயர்ப்பு) “பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாக” இருக்கக்கூடாது என்று அப்போஸ்தலன் பவுலும் எச்சரித்தார்.—1 தீமோத்தேயு 5:13, பொ.மொ.
சில நாடுகளில் மற்றவர்களை உளவு பார்ப்பதற்கு குட்டி ஆடியோ அல்லது வீடியோ கருவிகளைப் பயன்படுத்தி அந்தரங்க வாழ்க்கையை கண்டுபிடிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. ஜனங்கள் இன்றைக்கு ‘பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும்’ ‘பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும்’ இருக்கிறார்கள், இது ஓர் எல்லைமீறிய செயலாகும். உதாரணமாக ஜப்பானில், சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை நாயோக்கோ டாக்காஹாஷி தன்னுடைய குளியல் அறையில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் தனக்குத் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தார். அது ஒரு வீடியோவாக தயாரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான காப்பிகள் சட்ட விரோதமாக விற்கப்பட்டிருக்கின்றன.
பிறர் அடையாளத்தை திருடுவது அல்லது மோசடி செய்வது, அதாவது தனிப்பட்டவருடைய விவரங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருடுவது பரவலாக காணப்படுகிறது. அதிகாரமில்லாதவர்கள் உங்கள் அந்தரங்க வாழ்க்கையை ஆராய்வதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பது சரியே.a பைபிள் இவ்வாறு கூறுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 22:3.
அந்தரங்க செயல்கள் —வெளியரங்கமாக கணக்கு ஒப்புவித்தல்
குற்றச்செயல், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இன்றைக்கு எங்கு பார்த்தாலும் தலைவிரித்தாடுகின்றன; அதனால் அரசாங்கங்கள் தங்களுடைய குடிமக்களை முன்னொருபோதும் இல்லாத அளவில் உன்னிப்பாக கண்காணிக்கின்றன. ஆனால் கண்காணிப்பு கேமராக்களோ டேப்களோ அவசியமில்லாத ஒரு காலம் விரைவில் வரப்போகிறது. தங்களுடைய வெளியரங்கமான மற்றும் அந்தரங்கமான செயல்களுக்காக எல்லா மனிதரிடமும் யெகோவா தேவன் கணக்கு கேட்கும் காலம் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—யோபு 34:21, 22.
அந்தக் காலம் முதற்கொண்டு, மனிதரை தொல்லைப்படுத்துகிற வன்முறையிலிருந்தும் பகைமையிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் இந்தப் பூமி விடுதலை பெற்றிருக்கும். இது எப்படி சாத்தியம்? உயிரோடிருக்கும் அனைவரையும் யெகோவா அன்யோன்யமாக அறிந்திருப்பது மட்டுமல்ல, உயிரோடிருக்கும் அனைவரும் யெகோவாவை அன்யோன்யமாக அறிந்திருப்பார்கள். “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” என்ற ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிஜமாகும்.—ஏசாயா 11:9. (g03 1/22)
[அடிக்குறிப்பு]
a “ஜாக்கிரதை!” என்ற பெட்டியைக் காண்க.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
கடவுளிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்திருப்பது நன்மை செய்வதற்கு நம்மைத் தூண்டும் மாபெரும் சக்தியாகவே விளங்குகிறது
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
ஜாக்கிரதை!
அந்தரங்கமும் ஆன்லைன் வேலைவாய்ப்பு சைட்டுகளும்: வேலை தேடி ஆன்லைனில் தங்கள் பயோ-டேட்டாவைக் கொடுப்பவர்கள் தங்களுடைய அந்தரங்கத்துக்கு அதிக அச்சுறுத்தலை எதிர்ப்படுகிறார்கள். இந்த பயோ-டேட்டாக்கள் ஆன்லைன் வேலைவாய்ப்பு சைட்டுகளில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படலாம், அது ஒருவரின் அடையாளம் திருட்டு போவதற்கும் காரணமாகி விடலாம். சில வேலைவாய்ப்பு சைட்டுகள் பெயர், விலாசம், வயது, அனுபவம் ஆகிய தனிப்பட்ட தகவல்களை வேலை தேடுவோரிடமிருந்து பெற்று அவற்றை விளம்பரதாரர் போன்ற சம்பந்தப்படாத மூன்றாம் நபருக்கு அளிக்கின்றன.
அந்தரங்கமும் மொபைல் பேச்சுத்தொடர்புகளும்: கார்ட்லஸ் போனாக இருந்தாலும் சரி செல்லுலார் போனாக இருந்தாலும் சரி, தற்போது அந்தரங்கத்துக்கு அவை உத்தரவாதம் அளிப்பதில்லை. நீங்கள் தனிப்பட்ட விஷயத்தை பேசுகிறீர்கள் என்றால் பழம்பாணி முறையில் வயர் இணைக்கப்பட்ட டெலிபோனை பயன்படுத்துவதே பாதுகாப்பானது. போனில் பேசுகிற இருவருமே இதே மாதிரியான போனைத்தான் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். அநேக கார்ட்லஸ் போன்களின் சமிக்ஞைகளை ரேடியோ ஸ்கேனர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது; மற்ற கார்ட்லஸ் போன்கள் அல்லது பேபி மானிட்டர்களும்கூட சில சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. நீங்கள் போன் மூலமாக ஏதாவது பொருளை வாங்கியபின், உங்களுடைய கிரெடிட் கார்டின் எண்ணையும் அது முடிவுறும் தேதியையும் கொடுக்கும் போது கார்ட்லஸ் அல்லது செல்லுலார் போன் மூலமாக நீங்கள் பேசுவதை யாராவது ஒட்டுக்கேட்டு உங்களை மோசடி செய்துவிடலாம்.b
[அடிக்குறிப்பு]
b ப்ரைவஸி ரைட்ஸ் க்ளியரிங்ஹவுஸ் வெப் சைட் தகவலை தழுவி எழுதப்பட்டது.
[பக்கம் 9-ன் படம்]
உயிர் காப்பாளர் உங்களை கண்காணிப்பது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடுவதாக ஆகாது
[பக்கம் 10-ன் படங்கள்]
நம் செயல்களை கடவுள் நன்கு அறிவார் என்பதை தெரிந்திருப்பது வாழ்க்கையில் மாற்றங்களை செய்ய டக் என்பவரை தூண்டியது