பைபிளின் கருத்து
திருமணத்தை ஏன் புனிதமாக கருத வேண்டும்?
திருமணத்தை புனிதமாய் கருதுவதாக இன்றைக்கு பெரும்பாலோர் சொல்லிக்கொள்ளலாம். அப்படியானால், ஏன் அநேக திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன? ஏனென்றால் கலியாணம் என்பது காதல் வயப்பட்டு செய்யப்படுகிற ஒரு வாக்குறுதியாகத்தான், ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாகத்தான் கருதப்படுகிறது. அது வெறுமனே வாக்குறுதியாக இருப்பதால் அதை எந்த நேரமும் முறித்துவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி கருதுபவர்கள் ஏதாவது பிரச்சினை வரும்போது திருமண பந்தத்தை சட்டென்று துண்டித்து விடுகிறார்கள்.
திருமண ஏற்பாட்டை கடவுள் எப்படி கருதுகிறார்? இதற்குரிய பதில் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் எபிரெயர் 13:4-ல் காணப்படுகிறது. ‘விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாய் இருப்பதாக’ என அது சொல்கிறது. ‘கனமுள்ளதாய்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை மிக உயர்வாக கருதப்படுகிற மதிப்புமிக்க ஒன்றைக் குறிக்கிறது. நாம் ஒன்றை மதிப்புமிக்கதாக கருதினால், அதைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்துகிறோம், எதிர்பாராமல்கூட அதைத் தவறவிடுவதில்லை. திருமண ஏற்பாட்டையும் இப்படித்தான் கருத வேண்டும். கிறிஸ்தவர்கள் அதை கனமுள்ளதாக—பத்திரமாய் வைத்திருக்க விரும்பும் மதிப்புமிக்க ஒன்றாக—கருத வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள ஒரு புனித ஏற்பாடாகவே திருமணத்தை யெகோவா தேவன் உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திருமணத்தைப் பற்றிய அவருடைய நோக்குநிலைதான் நமக்கும் இருக்கிறது என நாம் எப்படி காட்டலாம்?
அன்பும் மரியாதையும்
திருமண ஏற்பாட்டை கனமுள்ளதாக கருதுவதற்கு இருவரும் ஒருவரையொருவர் உயர்வாக மதிக்க வேண்டும். (ரோமர் 12:10) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.”—எபேசியர் 5:33.
உண்மைதான், சிலசமயங்களில் கணவனோ மனைவியோ அன்பான அல்லது மரியாதைக்குரிய முறையில் நடக்காமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் அன்பையும் மரியாதையையும் கண்டிப்பாக காட்ட வேண்டும். “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என பவுல் எழுதினார்.—கொலோசெயர் 3:13.
நேரமும் கவனிப்பும்
திருமண பந்தத்தை புனிதமாக கருதும் தம்பதியினர் ஒவ்வொருவரும் பிறருடைய உடல் ரீதியிலான மற்றும் உணர்ச்சி ரீதியிலான தேவைகளைப் பூர்த்தி செய்ய நேரம் செலவிடுகிறார்கள். தாம்பத்திய உறவும் இதில் உட்படுகிறது. “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்” என பைபிள் கூறுகிறது.—1 கொரிந்தியர் 7:3.
ஆனால், அதிக பணம் சம்பாதிப்பதற்காக கணவன் வேறு இடத்தில் வாழ வேண்டியதன் அவசியத்தை சில தம்பதியினர் உணர்ந்திருக்கிறார்கள். சில சமயங்களில் எதிர்பாராத விதமாக கணவனும் மனைவியும் நீண்ட காலம் பிரிந்திருக்கிறார்கள். இப்படி பிரிந்திருப்பது பெரும்பாலும் மண வாழ்க்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது, சில சமயங்களில் விபச்சாரத்திற்கும் விவாகரத்திற்கும் வழிநடத்தியிருக்கிறது. (1 கொரிந்தியர் 7:2, 5) இதனால், கிறிஸ்தவ தம்பதியினர் அநேகர் தாங்கள் புனிதமாய் கருதும் திருமண பந்தத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பொருளாதார ஆதாயத்தை விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.
பிரச்சினைகள் தலைதூக்குகையில்
பிரச்சினைகள் தலைதூக்கும்போது, திருமணத்தை கனமுள்ளதாக கருதும் கிறிஸ்தவர்கள் அவசரப்பட்டு பிரிந்து விடுவதில்லை அல்லது விவாகரத்து செய்துகொள்வதில்லை. (மல்கியா 2:16; 1 கொரிந்தியர் 7:10, 11) இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” (மத்தேயு 5:32) வேதப்பூர்வ ஆதாரமில்லாமல், ஒரு தம்பதியர் பிரிந்துபோகவோ விவாகரத்து செய்யவோ தீர்மானித்தால் அது திருமணத்தை கனவீனப்படுத்துவதாக இருக்கும்.
மண வாழ்க்கையில் பயங்கரமான பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கு ஆலோசனை கொடுக்கையிலும்கூட நாம் திருமணத்தை எப்படி கருதுகிறோமென காட்டுகிறோம். பிரிந்துபோவதற்கோ விவாகரத்து செய்துகொள்வதற்கோ நாம் அவசரப்பட்டு பரிந்துரை செய்கிறோமா? சில சமயங்களில் பிரிந்து போவதற்கு தகுந்த காரணங்கள் இருப்பது உண்மையே. உதாரணமாக, பயங்கரமாக கொடுமைப்படுத்தப்படலாம் அல்லது வேண்டுமென்றே எவ்வித ஆதரவும் அளிக்காதிருக்கலாம்.a அதுமட்டுமல்ல, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஒருவரது துணை வேசித்தனத்தில் ஈடுபட்டால் மட்டுமே விவாகரத்து செய்துகொள்ள பைபிள் அனுமதிக்கிறது. இருந்தாலும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பிறருடைய தீர்மானத்தில் கிறிஸ்தவர்கள் தேவையின்றி தலையிடக் கூடாது. ஏனென்றால் அந்தத் தீர்மானத்தின் விளைவுகளை சந்திக்கப் போகிறவர், திருமண வாழ்க்கையில் பிரச்சினையை சந்திப்பவரே, ஆலோசனை கொடுப்பவர் அல்ல.—கலாத்தியர் 6:5, 7.
அலட்சியமாக கருதாதீர்கள்
சில இடங்களில், மற்றொரு நாட்டில் வாழ சட்டப்பூர்வ குடியுரிமையைப் பெறுவதற்காக திருமணம் செய்துகொள்வது சாதாரண விஷயமாக இருக்கிறது. பொதுவாக, தங்களை திருமணம் செய்துகொள்வதற்காக அந்நாட்டின் குடிமகனுக்கு பணத்தை செலுத்துவதாக ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்தத் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டாலும், பெரும்பாலும் தனியாகவே வாழ்கிறார்கள், அவர்களுக்கு இடையே சிநேகப்பான்மையான உறவும்கூட இருப்பதில்லை. சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றதும் அவர்கள் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். தங்கள் திருமணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
திருமணத்தை இப்படி அலட்சியமாக கருதுவதை பைபிள் ஆதரிப்பதில்லை. அவர்களுடைய உள்நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், மணமுடிப்பவர்கள் ஒரு புனித ஏற்பாட்டிற்குள் வருகிறார்கள்; வாழ்நாள் முழுவதும் கட்டுப்பட்டிருக்க வேண்டிய ஒரு பந்தமாக அதைக் கடவுள் கருதுகிறார். அந்த ஒப்பந்தத்திற்குள் வருபவர்கள் கணவனும் மனைவியுமாக ஒன்றுபட்டிருக்கிறார்கள், வேதப்பூர்வ ஆதாரமின்றி விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்துகொள்ள முடியாது.—மத்தேயு 19:5, 6, 9.
பயனுள்ள எந்தவொரு முயற்சியையும் போலவே, வெற்றிகரமான மணவாழ்வுக்கு உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம். இதன் புனிதத்தன்மையை மதிக்கத் தவறுகிறவர்கள் சட்டென்று உறவை துண்டித்துக்கொள்கிறார்கள். அல்லது வேண்டா வெறுப்பாக சந்தோஷமில்லாத மணவாழ்க்கை நடத்துகிறார்கள். மறுபட்சத்தில், திருமணத்தை புனிதமாக கருதுபவர்களோ தாங்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வதையே கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 2:24) தங்களுடைய மணவாழ்க்கையை சுமூகமாக நடத்துவதன் மூலம் திருமண ஏற்பாட்டை உருவாக்கியவருக்கு மரியாதை சேர்ப்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:31) இத்தகைய நோக்கு தங்களுடைய திருமணத்தை வெற்றிகரமாக்குவதற்கு உழைக்கவும் வேண்டிய தூண்டுதலை தருகிறது. (g04 5/8)
[அடிக்குறிப்பு]
a ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1988, பக்கங்கள் 22-3-ஐக் காண்க.