தேன் மனிதனுக்கு தேனீ தரும் பரிசு
மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
காட்டுப் பகுதியில் களைப்போடு சென்றுகொண்டிருந்த ஓர் இஸ்ரவேல் படைவீரன், ஒழுகிக்கொண்டிருந்த ஒரு தேன்கூட்டை எதேச்சையாக பார்க்க, அதைத் தன் கோலினால் குத்தி கொஞ்சம் தேனை எடுத்துச் சாப்பிட்டான். உடனே ‘அவன் கண்கள் தெளிந்தது,’ களைப்பெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோனது. (1 சாமுவேல் 14:25-30) தேனை உபயோகிப்பதால் மனிதனுக்குக் கிடைக்கும் பல நன்மைகளில் ஒன்றை இந்த பைபிள் பதிவு எடுத்துக் காட்டுகிறது. தேனில் சுமார் 82 சதவீதம் மாவுச்சத்து இருப்பதால் இது உடலுக்கு உடனடி சக்தியைத் தருகிறது. வெறும் 30 கிராம் தேனிலிருந்து கிடைக்கும் சக்தியைக் கொண்டு ஒரு தேனீயால் உலகத்தையே சுற்றி வர முடியும் என்று சொல்லப்படுகிறது!
தேனீக்கள் மனிதனுக்காக மட்டும்தான் தேனைத் தயாரிக்கின்றனவா? இல்லை, அதை தனக்காக தயாரிக்கின்றன, அவற்றின் உணவே தேன்தான். சராசரி அளவு தேன்கூட்டிலுள்ள தேனீக்களுக்குக் குளிர்காலத்தின்போது 10 முதல் 15 கிலோ தேன் தேவைப்படுகிறது. ஆனால் சாதகமான காலத்தின்போது 25 கிலோ தேனை தயாரிக்க முடிகிறது. இதனால் மீதமுள்ள தேனை மனிதர்களால் சேகரித்து, ருசிக்க முடிகிறது; அதுமட்டுமல்ல, கரடிகள், ராக்கூன் கரடிகள் போன்ற மிருகங்களாலும் ருசிக்க முடிகிறது.
தேனீக்கள் தேனை எப்படித் தயாரிக்கின்றன? தேனீக்கள் சுற்றித் திரிந்து பூக்களிலுள்ள நெக்டர் என்ற தேனமுதை குழாய் போன்ற தங்கள் நாவுகளால் உறிஞ்சிக்கொள்கின்றன. பிறகு இரண்டு வயிறுகளில் ஒன்றில் அதைச் சேகரித்துக்கொண்டு தங்கள் கூட்டுக்கு எடுத்துச் செல்கின்றன. கூட்டில் இருக்கும் தேனீக்களுக்குத் தேனைக் கொடுக்கின்றன. அவை அதை அரை மணி நேரமாவது நன்கு ‘மென்று,’ வாயிலிருந்து சுரக்கும் என்ஸைம்களுடன் சேர்த்துக் கலக்குகின்றன. பிறகு தேன்மெழுகால் செய்யப்பட்ட அறுகோண வடிவ சிற்றறைகளில் அந்தத் தேனை வைத்து, தங்கள் இறக்கைகளை விசிறி போல ஆட்டி தேனிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்கின்றன.a அதன் ஈரப்பதம் 18 சதவீதத்திற்கும் குறைவாக ஆன பிறகு இந்தச் சிற்றறைகளை மெல்லிய மெழுகால் மூடுகின்றன. இப்படி மெழுகால் மூடப்பட்ட தேன் எத்தனை வருடங்களானாலும் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கிறது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பார்வோனின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட தேன், இப்போதும்கூட சாப்பிடும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது!
தேனின் மருத்துவக் குணங்கள்
தேன் அருமையான சத்துணவாக இருப்பதோடு—அதாவது, ‘பி’ விட்டமின்கள், கனிமங்கள், மேலும் ஆண்டிஆக்ஸிடன்டுகளின் களஞ்சியமாக இருப்பதோடு—அன்றிலிருந்து இன்றுவரை உபயோகப்படுத்தப்படும் பிரசித்திப்பெற்ற மருந்துகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.b அ.ஐ.மா.-வின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநரான டாக்டர் மே பெரன்பாம் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “காயம், தீப்புண், கண் புரை, தோல் புண், வடு போன்ற பலதரப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பல நூற்றாண்டுகளாகத் தேன் அருமருந்தாக இருந்து வருகிறது.”
மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் தற்போது பிரபலமாகிவரும் தேனைப் பற்றி CNN செய்தி நிறுவனம் குறிப்பிடுவது என்னவென்றால்: “முன்பெல்லாம் காயங்களுக்குத் தேனை உபயோகித்து கட்டுப்போட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆண்டிபயாட்டிக்கை உபயோகித்து கட்டுப்போடும் சிகிச்சை பிரபலமானதால் தேன் அதன் மவுசை இழந்தது. இருந்தாலும், புதிய ஆராய்ச்சிகளாலும் ஆண்டிபயாட்டிக்கை எதிர்க்கும் பாக்டீரியாக்களின் அதிகரிப்பாலும் பூர்வ காலங்களில் உபயோகிக்கப்பட்ட தேன் அதன் மதிப்பை மீண்டும் பெற்று வருகிறது.” உதாரணமாக, ஓர் ஆராய்ச்சியில், தீக்காயங்களுக்குத் தேன் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட சிகிச்சை பெற்றவர்களுக்கு, காயம் சீக்கிரத்தில் ஆறியதோடு குறைந்த வலியும் லேசான வடுவும்தான் ஏற்பட்டது.
தேனமுது, தேனீயின் வாயிலுள்ள ஓர் என்ஸைமுடன் கலப்பதால்தான் தேனுக்கு ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபயாட்டிக்கின் தன்மை வருகிறதென்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. இந்த என்ஸைம் ஹைட்ரஜன் பெராக்ஸைடை உற்பத்தி செய்வதால் தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது.c அதுமட்டுமல்ல, தேனை புண்ணின் மீது தடவும்போது, வீக்கம் குறைந்து ஆரோக்கியமான தசைகள் வளருகின்றன. “பாரம்பரிய வைத்தியர்கள் தேனை புகழ்பெற்ற, சக்திவாய்ந்த மருந்தாக இப்போது ஏற்றுக்கொள்கின்றனர்” என்று நியுஜிலாந்தைச் சேர்ந்த உயிர் வேதியியல் வல்லுநரான டாக்டர் பீட்டர் மோலன் சொல்கிறார். மேலும், ஆஸ்திரேலியன் தெரப்யூட்டிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற அமைப்பு தேனை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று அங்கீகரித்துள்ளது. அதனால், அது அந்த நாட்டின் எல்லாக் கடைகளிலும் காயங்களுக்குக் கட்டுப்போடும் மருந்தாகக் கிடைக்கிறது.
இவ்வளவு சத்தும் சுவையும் மருத்துவக் குணங்களும் நிறைந்த வேறெந்த உணவாவது இருக்கிறதா என்ன! அதனால்தான், முன்பெல்லாம் தேனீக்களையும் தேனீ வளர்ப்பவர்களையும் பாதுகாக்க விசேஷ சட்டங்கள் வகுக்கப்பட்டன! தேன் கூட்டையோ தேன்கூடு இருக்கும் மரத்தையோ சேதப்படுத்துபவர்களுக்குப் பெரும் அபராதம் விதிக்கப்பட்டது, சில நேரங்களில் மரண தண்டனைகூட வழங்கப்பட்டது. உண்மையில் தேன், மனிதனுக்கு கிடைத்த விலைமதிப்புள்ள ஒரு பரிசு, கடவுளுக்குக் கனம் சேர்க்கும் ஒரு படைப்பு. (g05 8/8)
[அடிக்குறிப்புகள்]
a தேனீக்கள் தங்களுடைய உடலில் உள்ள விசேஷ சுரப்பிகள் சுரக்கக்கூடிய ஒரு வகையான மெழுகினைக் கொண்டே இந்தத் தேன்கூடுகளை அமைக்கின்றன. அதன் சிற்றறைகள் அறுகோண வடிவில் உள்ளதால் தேன்கூட்டின் மெல்லிய சுவர்களால் அதிக எடையைத் தாங்க முடிகிறது; அதாவது, வெறும் 1/3 மில்லிமீட்டர் பருமனுள்ள அந்தச் சுவர்களால் அதைவிட 30 மடங்கு எடையைத் தாங்க முடிகிறது. உண்மையில் தேன்கூடு பொறியியல் ரீதியில் ஓர் அதிசயமே!
b சிறு குழந்தைகளுக்கு உணவு நஞ்சு (botulism) ஏற்படும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்குத் தேன் தருவது நல்லதல்ல.
c தேனிலுள்ள என்ஸைம்கள், சூடு படும்போதும் வெளிச்சம் படும்போதும் அழிந்துவிடுவதால், பதப்படுத்தப்படாத சுத்தத் தேன்தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
சமையலுக்குச் சில டிப்ஸ்
சர்க்கரையைவிட தேன் ரொம்ப தித்திப்பாக இருக்கும். அதனால் எந்த அளவு சர்க்கரையை உபயோகிக்கிறோமோ அதைவிட பாதி அல்லது முக்கால் அளவு தேனை உபயோகித்தால் போதும். அதோடு, தேனில் 18 சதவீதம் தண்ணீர் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு தண்ணீரின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம். தண்ணீரை உபயோகிக்காமல் தயாரிக்கும் உணவாக இருந்தால் ஒரு கப் தேனுக்கு இரண்டு தேக்கரண்டி மாவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பேக்கரி உணவாக இருந்தால் ஒரு கப் தேனுக்கு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து உங்கள் அடுப்பின் சூட்டை 15 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.
[படத்திற்கான நன்றி]
National Honey Board
[பக்கம் 16-ன் படம்]
தேனமுதைத் தேடி அலையும் தேனீ
[பக்கம் 16, 17-ன் படம்]
தேன்கூடு
[பக்கம் 17-ன் படம்]
ஒரே கூட்டில் ஒற்றுமையாக வாழும் தேனீக்கள்
[பக்கம் 17-ன் படம்]
தேனீ வளர்ப்பவர் தேன்கூட்டின் ஓர் அடுக்கை பார்வையிடுகிறார்