உலகை கவனித்தல்
◼ “மீடியாவில் சித்தரிக்கப்படும் வன்முறைக்கும் உண்மை வாழ்க்கையில் [டீனேஜருடைய] மூர்க்கத்தனத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு, புகைபிடித்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையேயுள்ள தொடர்பைப் போல அந்தளவு வலிமையானது.”—த மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரேலியா.
◼ ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சாப்பிடப்படும் பழந்தின்னி வெளவால்கள் “ஈபோலா வைரஸின் வளர்ச்சிக்கு உதவும் புகலிடமாக இருக்கக்கூடும்” என்ற கருத்துக்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.—மக்லேன்ஸ், கனடா.
◼ கடந்த 8 வருடங்களில் மெக்சிகோவில் குறைந்தது 1,30,000 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். எதற்காக? குழந்தைகளை பாலியல்ரீதியாக பயன்படுத்திக்கொள்வதற்கோ, கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்கோ, அல்லது அவர்களுடைய உறுப்புகளை வெட்டியெடுத்து விற்பதற்காகவோ கடத்துகிறார்கள். இத்தகவலை அந்நாட்டின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் தெரிவிக்கிறது.—மீலென்யோ, மெக்சிகோ.
பன்னிரண்டு வருட சிறைவாசம்—ஏன்?
எரிட்ரியா நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டிலுள்ள சாவா நகரில் யெகோவாவின் சாட்சிகள் மூவர் 12 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, ஒருமுறைகூட விசாரிக்கப்படவுமில்லை. குடும்பத்தார் உட்பட பார்வையாளர்கள் யாருமே அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. காரணமென்ன? அவர்கள் இராணுவத்தில் சேர மறுத்ததே. மனசாட்சியின் காரணமாக இராணுவத்தில் சேர மறுப்பதை எரிட்ரிய சட்டம் அனுமதிப்பதில்லை. இளைஞர்கள் கைதுசெய்யப்படுகையில், அவர்கள் இராணுவ முகாமில் அடைக்கப்பட்டு, அடிக்கடி கொடூரமாக அடிக்கப்படுகின்றனர், பலவிதமான சித்திரவதைகளையும் அனுபவிக்கின்றனர்.
இன்டர்நெட் விலங்குகளை அழிக்கிறதா?
“ஆப்பிரிக்க யானைகளின் அழிவை இன்டர்நெட் விரைவுபடுத்துகிறதா?” என்று த நியு யார்க் டைம்ஸ் கேட்கிறது. யானைகள் மட்டுமின்றி மற்ற இனங்கள் பலவும்கூட அழிந்துபோய்விடும் ஆபத்தில் இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆன்லைனில் சட்டவிரோதமாய் வணிகம் செய்வதற்கான வெப்சைட்கள் பெருகியிருக்கின்றன. மூன்று மாத காலமாக ஆங்கில வெப்சைட்களை அலசியதில் “சட்டவிரோதமான அல்லது சட்டவிரோதம் என்று சொல்லமுடிகிற 6,000-க்கும் அதிகமான விலங்குகளின் பாகங்கள் விற்பனைக்கு இருந்தன.” ஆமை ஓடுகள், யானை எலும்புகளால் செய்யப்பட்ட சிற்பங்கள், ஏன் உயிருள்ள கருஞ்சிறுத்தையும்கூட விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன!
சுற்றுச்சூழலை பாதிக்காத ஹீட்டர்
“ஒலிவக் கொட்டைகளைப் பயன்படுத்தி சூடுண்டாக்கும் சென்ட்ரல் ஹீட்டிங் சிஸ்டம்கள் தற்போது கிடைக்கின்றன” என எல் பாயீஸ் என்ற ஸ்பானிய செய்தித்தாள் கூறுகிறது. இதன் மூலம் மாட்ரிட் நகரில் குறைந்தது 300 வீடுகள் கதகதப்பாக்கப்படுகின்றன, வெந்நீரையும் பெறுகின்றன. ஒலிவக் கொட்டைகளை எரிபொருளாக பயன்படுத்துகையில் செலவு மிச்சமாகிறது. எப்படியெனில், இதன் விலை எண்ணெய்யைவிட 60 சதவீதமும் நிலக்கரியைவிட 20 சதவீதமும் குறைவாகும். அவை இயற்கையாகவே அழுகிப்போகும்போது வெளிவரும் கார்பன் டையாக்ஸைடின் அளவே அவை எரியும்போதும் வெளியாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. அவை எளிதாக கிடைப்பது மற்றொரு நன்மையாகும். ஒலிவப் பழங்களிலிருந்து எண்ணெய்யை எடுத்தபிறகு கொட்டைகள் மிச்சமாகின்றன. ஒலிவ எண்ணெய் தயாரிப்பதில் ஸ்பெயின் உலகத்திலேயே முதல் இடத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
நாலாயிரம் வருடப் பழமையான ‘நூடுல்ஸ்’
“இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான நூடுல்ஸை” தோண்டியெடுத்துவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என த நியு யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. அந்த நூடுல்ஸ் மெல்லியதாக, மஞ்சளாக, 50 சென்டிமீட்டர் நீளமுள்ளதாக இருந்தது. சீனாவில் விளையும் கம்பு தானியத்தால் அது செய்யப்பட்டிருந்தது. அது வடமேற்கு சீனாவிலுள்ள ஹ்வாங் நதியருகே 3 மீட்டர் ஆழ மண்படுகையில், மூடப்பட்ட ஒரு மண்பானையில் இருந்தது. அந்த இடம் சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னால் பூகம்பத்தாலும் “பயங்கரமான வெள்ளத்தாலும்” அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதாக இயற்கை என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது. நூடுல்ஸின் தாயகம் இத்தாலியா, மத்திய கிழக்கா, அல்லது கிழக்கத்திய நாடுகளா என்ற விவாதம் நிலவி வந்தது. “நூடுல்ஸின் தாயகம் சீனாதான் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்திவிட்டது” என்று அந்த ஆய்வாளர்களில் ஒருவரும் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்தவருமான ஹோயூயன் லூ அடித்துக் கூறுகிறார். இவருடைய கருத்தை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது.