சர்ச்சுகளின் கதி என்ன?
வடக்கே மெக்சிகோ முதல் தெற்கே சிலி வரையுள்ள லத்தீன் அமெரிக்கர்களின் கலாச்சாரம் பல அம்சங்களில் ஒரே விதமாக இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமே இருந்த காலத்தை வயதான லத்தீன் அமெரிக்கர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். 16-ஆம் நூற்றாண்டில், எல்லாரும் கத்தோலிக்கர்களாக மாற வேண்டுமென ஸ்பானிய வெற்றிவீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். அப்போது பிரேசிலில் காலனி ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகலும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. 400 வருடங்களாக அரசிடமிருந்து பெற்ற பொருளாதார ஆதரவுக்கும் தேசிய அங்கீகாரத்திற்கும் கைமாறாக, கத்தோலிக்க சர்ச், ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு அளித்தது.
என்றாலும், ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தைக் கத்தோலிக்க மதம் ஆதரிப்பதால் பொது மக்களின் ஆதரவு குறைவதைப் பாதிரிமார்கள் 1960-களில் உணர்ந்தார்கள். அதனால், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் விடுதலை இறையியல் என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்கள். லத்தீன் அமெரிக்காவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் அங்கு அநேக கத்தோலிக்கர்களே வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள்.
இப்படியெல்லாம் மத குருமார்கள் பிரபலமான அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு அரும்பாடு பட்டிருக்கிறபோதிலும், லட்சக்கணக்கானோர் கத்தோலிக்க மதத்தைவிட்டு விலகி வேறு சர்ச்சுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். கைதட்டி, உணர்ச்சிபொங்கும் பாடல்களைப் பாடி பூசைகள் நடத்தும் சபைகள் அல்லது ‘ராக்’ இசைக்குழுபோல் பூசைகள் நடத்தும் சபைகள் மளமளவென வளர்ந்து பெருகியிருக்கின்றன. “லத்தீன் அமெரிக்காவின் விவிலிய இயக்கம் எண்ணற்ற தனித்தனி சர்ச்சுகளாகப் பிரிந்திருக்கிறது. . . . பெரும்பாலும் அவை ஒரே ஒரு பாதிரியின் பொறுப்பின்கீழ் இருக்கின்றன. ஒரு சபை வளருகையில் பொதுவாக அது தனித்தனி சர்ச்சுகளாய் பிரிந்துவிடுகிறது” என்று டங்கன் கிரீன் என்பவர் லத்தீன் அமெரிக்காவின் பன்முகங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
சர்ச்சை நிராகரிக்கிற ஐரோப்பா
ஐரோப்பாவின் பெரும்பகுதியை, கிறிஸ்துவின் வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொண்ட அரசாங்கங்களே 1,600 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்திருக்கின்றன. நாம் வாழும் இந்த 21-வது நூற்றாண்டில், ஐரோப்பாவில் மதம் வளம்கொழிக்கிறதா? 2002-ல் சமுகவியலாளர், ஸ்டீவ் புரூஸ் என்பவர் கடவுள் மரித்துவிட்டார்—மேலைநாடுகளில் மதத்தின் மரணம் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில், பிரிட்டனைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “பத்தொன்பதாவது நூற்றாண்டில், கிட்டத்தட்ட எல்லா திருமணங்களும் மதச் சடங்கு முறையில் செய்யப்பட்டன.” என்றாலும், 1971-ல் 60 சதவிகித திருமணங்கள் மட்டுமே மதச் சடங்கு முறையில் செய்யப்பட்டன. 2000-ஆம் ஆண்டிலோ, இப்படிச் செய்யப்படுவது 31 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது.
இதுபற்றி, லண்டனின் டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாளுக்கு மதத் தகவல்களை அளிக்கும் நிருபர் ஒருவர் கருத்து தெரிவித்து இவ்வாறு எழுதினார்: “சர்ச் ஆஃப் இங்கிலாந்து மற்றும் ரோமன் கத்தோலிக்க சர்ச் முதல், மெத்தடிஸ்ட் மற்றும் யுனைட்டட் ரிஃபார்ம்ட் சர்ச் வரை எல்லா முக்கியப் பிரிவுகளும் நீண்ட காலமாகவே மக்களின் ஆதரவை இழந்து வந்திருக்கின்றன.” ஓர் அறிக்கையைக் குறித்து அவர் இவ்விதமாகக் கூறினார்: “2040-க்குள் பிரிட்டனிலுள்ள சர்ச்சுகள் படிப்படியாக மறையும், அப்போது இரண்டு சதவிகித மக்கள் மாத்திரமே ஞாயிறு பூசைகளில் கலந்துகொள்வார்கள்.” நெதர்லாந்திலுள்ள மதம் குறித்தும் இவ்விதமாகவே சொல்லப்பட்டது.
டச்சு சமூக மற்றும் கலாச்சார திட்ட அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, “சமீப பத்தாண்டுகளில் எங்கள் நாடு மிக அதிக அளவில் மதச்சார்பற்ற நாடாக ஆகியிருப்பதுபோல் தெரிகிறது. . . . 2020-ஆம் ஆண்டுக்குள் ஜனத்தொகையில் 72 சதவீதத்தினர் எந்தவொரு மதத்துடனும் சம்பந்தம் வைத்திருக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” ஜெர்மனியின் ஆன்-லைன் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “எண்ணற்ற ஜெர்மன் மக்கள் முன்பு சர்ச்சுகளிலும், வேலைகளிலும், குடும்பத்திலும் மன அமைதியைக் கண்டார்கள், இன்றோ அதற்காக பில்லி சூனியத்தையும் மாயமந்திரத்தையும் நாடுகிறார்கள். . . . மக்களின் ஆதரவு இல்லாததால் நாடெங்கும் உள்ள எல்லா சர்ச்சுகளையும் இழுத்து மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.”
ஐரோப்பாவில் இன்னும் சர்ச்சுக்குச் செல்பவர்கள் கடவுள் தங்களிடம் எதிர்பார்ப்பதைத் தெரிந்துகொள்வதற்காக அங்குச் செல்வதில்லை. இத்தாலியிலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “இத்தாலியர்கள் தங்கள் வாழ்க்கைப்பாணிக்கு ஏற்ப மதத்தை அமைத்துக்கொள்கிறார்கள்.” அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு சமுகவியலாளர் இவ்வாறு கூறுகிறார்: “போப் சொல்லும் விஷயங்களில் எங்களுக்குப் பிடித்ததை மட்டுமே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.” ஸ்பெயின் நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். அங்கு மதத்தின் இடத்தைப் பொருள்செல்வங்கள் பிடித்துவிட்டன. அதனால், மக்கள் செல்வச் செழிப்புள்ள பரதீஸை நாடுகிறார்கள். அதுவும், இன்றே, இப்பொழுதே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இந்தப் பாணிகள், கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் கற்பித்துக் கடைப்பிடித்த கிறிஸ்தவத்திற்கு நேர் எதிராக இருக்கின்றன. (விருந்தினர் தாங்களாகவே பரிமாறிக்கொள்ளும் “பஃபே” பாணி உணவைப் போன்று) உங்களுக்குப் பிடித்ததை மட்டும் எடுத்துக்கொண்டு, பிடிக்காததை உதறித்தள்ளும் ஒரு மதத்தை இயேசு அளிக்கவில்லை. அவர் சொன்னார்: “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் சுய தியாகமும் முயற்சியும் உட்பட்டிருப்பதாக இயேசு கற்பித்தார்.—லூக்கா 9:23.
வட அமெரிக்காவில் மதம் ஒரு வியாபாரம்
கனடா நாட்டில், மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஐக்கிய மாகாணங்களில் மக்கள் மதத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். மற்றவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்துகிற சில பெரிய நிறுவனங்களின் அறிக்கையின்படி, சுற்றாய்வு நடத்தப்பட்டவர்களில் சுமார் 40 சதவிகித மக்கள் வாராவாரம் சர்ச்சுக்குப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தினர் மட்டுமே உண்மையில் சர்ச்சுக்குச் செல்கிறார்கள். 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், பைபிளை கடவுளுடைய வார்த்தையென தாங்கள் நம்புவதாகக் கூறுகிறார்கள். என்றாலும், எந்தவொரு சர்ச்சின் மீதும் அவர்கள் வைத்துள்ள மதிப்பு சீக்கிரத்தில் மறைந்துவிடுகிறது. அமெரிக்காவில் சர்ச்சுக்குச் செல்வோர் மிக சுலபமாக மதம் மாறுகிறார்கள். ஒரு பிரசங்கிப்பாளரின் பேரும்புகழும் மங்கிவிட்டாலோ, பரவசப் பேச்சுத் திறன் குறைந்துவிட்டாலோ, சீக்கிரத்தில் அவர் தன் சபையினரையும் இழந்துவிடுவார். பெரும்பாலும் கணிசமான சம்பளத்தையும் இழந்துவிடுவார்!
சில சர்ச்சுகள் சிறந்த விதத்தில் மத ஆராதனைகளை “விநியோகிப்பது” எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வணிகத் திறமைகளைக் கற்றுக்கொள்கின்றன. சர்ச் குறித்து ஆலோசனை தரும் நிறுவனங்களின் உதவியைப் பெறுவதற்காக சர்ச்சுகள், ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவழிக்கின்றன. இப்படிப்பட்ட ஆலோசனை நிறுவனங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, ஒரு பாதிரி, “அதற்கு செலவிட்டது நிச்சயம் தகுந்ததே” என்று திருப்தி பொங்கக் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய மெகா சர்ச்சுகள் அந்தளவு செல்வச்செழிப்பில் மிதப்பதால் த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி எக்கானமிஸ்ட் போன்ற வணிகப் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த மெகா சர்ச்சுகள், “உடலுக்கும் உள்ளத்திற்கும் ‘ஒன் ஸ்டாப் ஷாப்பிங்’” போல் இருக்கின்றன என்பதாக இந்த வணிகப் பத்திரிகைகள் அறிக்கையிடுகின்றன. சர்ச் வளாகங்களில் ரெஸ்டாரன்ட்டுகளும், கஃபேக்களும், அழகு நிலையங்களும், நீராவிக் குளியல் ஸ்தலங்களும், விளையாடுவதற்குத் தேவையான வசதிகளும் இருக்கலாம். மக்களை ஈர்ப்பதற்காக தியேட்டரும் நவீன இசையும் இருக்கின்றன, பிரபலமானவர்களின் வருகைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்படியென்றால், அங்குள்ள பிரசங்கிப்பாளர்கள் எதைப்பற்றி போதிக்கிறார்கள்?
வேறொன்றும் இல்லை, ‘செல்வச்செழிப்பின் சுவிசேஷம்’ என்பதே அவர்களுடைய போதனையின் முக்கியப் பொருள். சர்ச்சுக்கு வருவோர் தாராளமாகக் காணிக்கை கொடுத்தால் அவர்களுக்குச் செல்வமும் ஆரோக்கியமும் கிடைக்குமெனச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கடவுள் பெரும்பாலும் சகித்துக்கொள்பவராகவே சித்தரிக்கப்படுகிறார். அதைக் குறித்து ஒரு சமுகவியலாளர் இவ்வாறு சொல்கிறார்: “அமெரிக்க சர்ச்சுகள் நியாயத்தீர்ப்பு அளிப்பவை அல்ல, நிம்மதி அளிப்பவையே.” வாழ்வில் வெற்றிபெறுவது சம்பந்தமாக ஆலோசனைகள் தருவதிலேயே பிரசித்தி பெற்ற மதங்கள் பொதுவாக கவனம் செலுத்துகின்றன. அநேகர் எந்தவொரு பிரிவுடனும் சம்பந்தப்படாத சர்ச்சுகளின் அங்கத்தினர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். ஏனென்றால், குழப்பமானவையாகக் கருதப்படுகிற கோட்பாடுகள் பற்றி அங்கு குறிப்பிடப்படுவதேயில்லை. என்றாலும், அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரும்பாலும் தெளிவாகவும் முக்கியமாகவும் பேசப்படுகின்றன. இந்த சர்ச்சுகள் சமீபத்தில் இவ்விதமாக அரசியலில் ஈடுபட்டிருப்பது சில குருமார்களை தலைகுனிய வைத்திருக்கிறது.
வட அமெரிக்காவில் மதம் மீண்டும் தலைதூக்குகிறதா? “காட்டுக்கூச்சல் போட்டு, மயங்கிவிழச் செய்யும் பாட்டுகளைப் பாடி, தொம்தொம்-என்று காலால் தாளமும்போட்டு நடத்தப்படும் ஆராதனைகள்” அதோடு மதத்தின் மற்ற நடவடிக்கைகளும் பிரபலமாக இருப்பது பற்றி நியூஸ்வீக் பத்திரிகை 2005-ல் அறிக்கையிட்டது. “ஆனால், இவையெல்லாம் இருந்தும் சர்ச்சுகள் நிரம்பிவழிவதில்லை” என்பதை அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியது. தாங்கள் “எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல” என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுற்றாய்வுகள் காட்டுகின்றன. சில சபைகளின் செழிப்புக்குக் காரணம், மற்ற சபைகளின் சரிவே. “எண்ணற்ற” மக்கள், வழிவழியாக தாங்கள் பின்பற்றி வந்த மதத்தையும், அதன் பூசைகளையும், இசைகளையும், நீண்ட அங்கி அணிந்த பாதிரிமார்களையும் புறக்கணிக்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சுருக்கமான கலந்தாலோசிப்பில், லத்தீன் அமெரிக்காவில் சர்ச்சுகள் தனித்தனியாகப் பிரிந்துசெல்வதையும், ஐரோப்பாவில் சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும், அமெரிக்காவில் மக்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதற்காக பொழுதுபோக்கு, ஆரவாரம் போன்றவற்றை சர்ச்சுகள் அளிப்பதையும் பார்த்தோம். அநேக சர்ச்சுகள் இந்தப் பாணிகளைப் பின்பற்றாமல் இருக்கலாம், ஆனால், மொத்தத்தில் சர்ச்சுகள் அவற்றின் செல்வாக்கை அல்லது மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள போராடுகின்றன. அப்படியென்றால் கிறிஸ்தவம் அதன் மதிப்பை இழந்து வருகிறதா?
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
“மத சூப்பர் மார்க்கெட்”
பிரான்சு நாட்டு கத்தோலிக்க சர்ச்சின் தேசிய சமூகத்தொண்டின் நிர்வாகி சொன்னது இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது: “மத சூப்பர் மார்க்கெட்டை நாங்கள் கண்ணாரக் காண்கிறோம். சர்ச் அளிப்பதையெல்லாம் மக்கள் பெற்றுக்கொள்கிறார்கள்; ஆனால், தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் கிடைக்காதபோது வேறு சர்ச்சுக்குச் சென்றுவிடுகிறார்கள்.” ஐரோப்பிய மதங்களைக் குறித்து ஆராய்ந்ததில் பிரிட்டனின் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், கிரேஸ் டேவி இவ்வாறு சொன்னார்: “இருக்கிற எல்லா விதமான மதங்களையும் மக்கள் தேர்ந்தெடுத்துக் கதம்பக் கலவையாக்கிவிடுகிறார்கள். மற்ற பொருள்களைப் போலவே மதத்தையும் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறும், விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.”
[பக்கம் 4, 5-ன் படம்]
இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் சர்ச் வாசலில் காணப்படும் ஸ்லோகன்கள்
[படத்திற்கான நன்றி]
©Doug Scott/age fotostock
[பக்கம் 4, 5-ன் படம்]
மெக்சிகோவில் அநேகர் கத்தோலிக்க மதத்தை விட்டு விலகியிருக்கிறார்கள்