வில்லோ வித்தியாசங்கள் நிறைந்த தாவரக் குடும்பம்
செக் குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
நெடுநெடுவென மெலிந்து, நிமிர்ந்து நிற்பவை ஒருவகை. வளைந்து, தலைகுனிந்து நிற்பவை மற்றொரு வகை. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நின்றாலும், இவை நிஜத்தில் நெருங்கிய சொந்தங்கள். இவை என்ன? மரங்கள்—பாப்புலர் மரங்களும், வீப்பிங் வில்லோ மரங்களும்தான். இவை இரண்டுமே வில்லோ குடும்பத்தைச் சேர்ந்தவை.
வில்லோ மரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகள், ஆழமற்ற நீரோடைகள் ஆகியவற்றின் ஓரங்களில் காணப்படுகின்றன. செக் குடியரசின் சதுப்புநிலங்களில் இவை செழிப்பாக வளருகின்றன; அங்கு, சின்னஞ்சிறு கிளைகளிலிருந்தும்கூட விரைவாக துளிர்க்கின்றன. வில்லோ மரங்கள் 30 மீட்டருக்கும் மேல் ஓங்கி வளரக்கூடியவை. நீண்ட, ஒடிசலான கிளைகளில் நளினமாக தொங்குகிற அவற்றின் இலைகள் மெல்லியதாக இருக்கும்; அல்லது ஷைனிங் வில்லோ, புஸ்ஸி வில்லோ மரங்களில் இருப்பதைப்போல அகலமாக இருக்கும்.
வில்லோ மற்றும் பாப்புலர் மரங்களில் 350-க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன; அவற்றில் குறிப்பாக வீப்பிங் வில்லோ, “என்னைப் பார், என் அழகைப் பார்” என்பதுபோல வசீகரமாய் நிற்கிறது. மற்றொரு வகையான கோட் வில்லோவில் மென்மயிர்களாலான வளைந்த மலர்க்கொம்புகள் இருக்கின்றன; இலைகள் துளிர்ப்பதற்கு முன்னரே இவை உருவாகின்றன. இந்தக் குட்டிக்குட்டி மலர்க்கொம்புகள் பூக்க ஆரம்பித்தால், அது வசந்தகாலத்தின் வருகையை அறிவிப்பதாகச் சொல்லப்படுகிறது.
வில்லோவின் “சொந்தபந்தங்கள்”
செக் நாட்டின் தலைநகரான ப்ராக் அமைந்துள்ள பொஹிமியா பகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பாப்புலர் மரங்கள்தான். அங்கே, குறைந்தபட்சம் 35 வகை பாப்புலர் மரங்கள் உள்ளன; அனைத்துமே வில்லோ குடும்பத்தைச் சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக பிளாக் பாப்புலர் மரம் பொஹிமியாவில் சர்வ சாதாரணமாக வளருகிறது; அங்குள்ள நீரோடைகளின் ஓரங்களிலும் ஈரப்பதமுள்ள காடுகளிலும் இது காணப்படுகிறது. இதன் ஒருவகை லொம்பார்டி அல்லது இத்தாலியன் பாப்புலர் என்றழைக்கப்படுகிறது; இதன் ஒடிசலான அடிமரத்திலிருந்து கிளைகள் மேல்நோக்கி, செங்குத்தாக வளருகின்றன. இந்த அழகிய மரம் 35 மீட்டர் உயரத்திற்கு, சொல்லப்போனால், 11 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு வளருகிறது! இத்தாலியன் பாப்புலர் மரங்கள் பல சாலைகளில் இருபுறமும் ஒய்யாரமாய் நிற்கின்றன; அதிலும், இலையுதிர் காலத்தில் இவற்றின் இலைகள் பொன்னிறமாக மாறும்போது, அந்தச் சுற்றுப்புறமே ஜொலிஜொலிக்கிறது.
ஆஸ்பென் என்பதும் ஒருவகை பாப்புலர் மரங்களாகும். இவை உயர்ந்தோங்கி வளருவதில்லை; அதோடு இவற்றின் உச்சி ஓரளவு மெலிந்து காணப்படுகிறது. ஆஸ்பென் மரங்களுக்கு மற்றொரு தனிச்சிறப்பு உண்டு. லேசாகக் காற்று அடித்தாலே போதும், இவற்றின் இலைகள் சலசலவென்று ஒலி எழுப்பும்.
பைபிளில் வில்லோ மரங்களா?
பாப்புலர் மரங்கள் தெற்கே உள்ள மத்தியக் கிழக்கு நாடுகளில் வளருமென்பதை நீங்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டீர்கள். இருந்தாலும், இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தபோது தங்களுடைய யாழ்களை பாப்புலர் மரங்களில் தொங்கவிட்டிருந்தார்கள் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 137:2, NW) அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? கடவுளைப் புகழ்ந்து பாட யாழ் பயன்படுத்தப்பட்ட போதிலும், சோகமே உருவான இஸ்ரவேலர் அந்தத் துன்ப காலத்தில் அதை வாசிக்க மனமில்லாதிருந்தார்கள். (ஏசாயா 24:8, 9) சேர்ப்புக்காலப் பண்டிகையின்போது கூடாரங்களை அமைக்க எந்தெந்த மரக்கிளைகளைப் பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது; அச்சமயத்தில் பாப்புலர் மரக்கிளைகள் பயன்படுத்தப்பட்டதாக பைபிள் குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 23:40, ஈஸி டு ரீட் வர்ஷன்) எதற்கும் அஞ்சா நீர்யானை நீரோடைகளில் குடியிருப்பதாகவும், ‘ஓடையின் அருகிலிருக்கும் வில்லோ மரங்கள் [மற்ற மொழிபெயர்ப்புகளின்படி, பாப்புலர் மரங்கள்] அதற்கு நிழல் தருவதாகவும்’ பைபிள் புத்தகமாகிய யோபு விவரிக்கிறது.—யோபு 40:22, த ஜெருசலேம் பைபிள்.
இன்று விதவிதமான விற்பனைப் பொருள்களைச் செய்வதற்கு பாப்புலர் மரங்களும் வில்லோ மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மெல்லிய மரப்பலகை, ஒட்டுப்பலகை, பிரப்பங்கூடைகள், அட்டைப் பெட்டிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் பேப்பரிலிருந்து வேறு பல பொருள்களைத் தயாரிப்பதற்கும் பாப்புலர் மரங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. வில்லோ மரங்களும் பல விதங்களில் பிரயோஜனமாக இருக்கின்றன. கைவினைஞர்கள் மிளாறுக்கூடைகளையும் மரச் சாமான்களையும் இவற்றின் வளைந்துகொடுக்கும் கிளைகளிலிருந்து தயாரிக்கிறார்கள். வில்லோ உண்மையிலேயே பல்வகைப் பயனுடைய தாவரக் குடும்பம்தான்!
[பக்கம் 10-ன் படம்]
ஆஸ்பென் இலைகள்
[பக்கம் 10-ன் படம்]
வீப்பிங் வில்லோ
[பக்கம் 10-ன் படம்]
லொம்பார்டி பாப்புலர்
[பக்கம் 10-ன் படம்]
கோட் வில்லோ
[பக்கம் 10-ன் படம்]
பிளாக் பாப்புலர்