மரணமே வாழ்க்கையின் முடிவா?
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.
சரி, அப்படியானால் இந்த விஷயத்தைக் குறித்து பைபிள் என்ன கற்பிக்கிறது? மரணம், மரணத்திற்குப் பின் வாழ்க்கை ஆகியவற்றைக் குறித்து பைபிள் கற்பிப்பதும்கூட குழப்பமூட்டுவதாக இருக்கிறதென சிலர் வாதாடலாம். உண்மை என்னவென்றால், அநேக மதங்கள், தெளிவாக உள்ள பைபிள் போதனைகளுடன் பொய்களையும் கட்டுக்கதைகளையும் சேர்ப்பதாலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. வழிவழியாக வந்த கோட்பாடுகளையும் கட்டுக்கதைகளையும் ஓரங்கட்டிவிட்டு பைபிள் உண்மையில் என்னதான் சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் பைபிளின் போதனை அர்த்தம் பொதிந்ததாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
பிறப்பதற்கு முன் உங்கள் நிலை
முந்தைய கட்டுரையில், சாலொமோன் ராஜா எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு பகுதிகளையும் இப்போது உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுவோம். மனிதர்களும் சரி மிருகங்களும் சரி, மரித்த பிறகு எதையும் அறிவதில்லை என்பதை அந்த வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. ஆக, பைபிள் சொல்கிறபடி பார்த்தால், மரித்தவர்களுக்கு எந்தச் செயல்பாடும், உணர்ச்சியும், உணர்வும், சிந்தனையும் இல்லை.—பிரசங்கி 9:5, 6, 10.
இதை நம்புவது கடினமாக இருக்கிறதா? அப்படியென்றால், இதைச் சற்று சிந்தியுங்கள்: மனிதன் பிறப்பதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தான்? உங்கள் பெற்றோரின் உயிரணுக்கள் ஒன்றுசேர்ந்து நீங்கள் உருவாவதற்கு முன்பு நீங்கள் எங்கிருந்தீர்கள்? மனிதன் இறந்த பிறகு அவன் உடலைவிட்டு ஏதோ ஒரு பாகம் பிரிந்து சென்று உயிர் வாழ்கிறது என்றால், அவன் பிறப்பதற்கு முன்பு அந்தப் பாகம் எங்கிருந்தது? நீங்கள் பிறப்பதற்கு முன்பு வாழ்ந்ததாக உங்களுக்கு நினைவு இருக்கிறதா? எப்படி இருக்கும்? நீங்கள்தான் வாழவே இல்லையே. ஆக, பிறப்பதற்கு முன்பு நீங்கள் எங்கும் இருக்கவில்லை என்பதே உண்மை!
எனவே, பிறப்பதற்கு முன்பு நமக்கு எப்படி எந்தவித உணர்வும் இருக்கவில்லையோ அதேபோல் நாம் இறந்த பிறகும் நமக்கு எந்தவித உணர்வும் இருக்காது. ஆதாம் கீழ்ப்படியாமற்போன பிறகு கடவுள் அவனிடம் சொன்ன அந்த நிலைக்கே நாமும் வந்துவிடுவோம். அவர் சொன்னதாவது: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) இப்படி மண்ணுக்குத் திரும்புகிற விஷயத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இறந்தவர்களின் நிலையைக் குறித்து பைபிள் சொல்வது உண்மையாக இருக்கிறது: “மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்.”—பிரசங்கி 3:19, 20.
அப்படியானால், சில ஆண்டுகள் மட்டுமே இருந்துவிட்டு நித்தியத்துக்கும் இல்லாமல் போய்விடுவதுதான் மனித வாழ்க்கையா? அல்லது இறந்தவர்களுக்கு வேறேதேனும் எதிர்காலம் காத்திருக்கிறதா? அதைக் குறித்து பின்வரும் பத்திகளில் கலந்தாராயலாம்.
வாழ வேண்டுமென்ற இயல்பான ஆசை
உண்மையில் பார்த்தால், மரணத்தைப்பற்றி பேச்செடுத்தாலே அனைவரும் முகத்தை சுழிக்கிறார்கள். ஏன், அநேகர் தங்களுடைய மரணத்தைக் குறித்து பேச அல்லது யோசிக்கக்கூட தயங்குகிறார்கள். மறுபட்சத்தில், சாத்தியமான எல்லா விதங்களிலும் மக்கள் இறப்பதை, டிவியிலும் திரைப்படங்களிலும் பார்த்து பார்த்து அவர்கள் அலுத்துப்போகிறார்கள். நிஜ மரணங்களைக் குறித்த கதைகளும் படங்களும் மீடியாவில் குறைவில்லாமல் வாரிவழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் படித்து, பார்த்து அவர்கள் மனம் மரத்துப்போயிருக்கிறது.
இந்நிலையில், முன்பின் தெரியாத யாரோ ஒருவர் மரிக்கையில் அது அவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அவர்களுடைய உறவினர்கள் அல்லது அவர்களே இறக்க வேண்டிய நிலைமை வருகையில் அது சாதாரணமாகத் தோன்றுவதில்லை. காரணம், உயிர்வாழ வேண்டுமென்ற ஆசை மனிதர்களிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதோடு, காலம் கடந்து செல்வதை நுட்பமாக உணரும் தன்மையும் நித்தியமாக வாழவேண்டும் என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளன. ‘நித்திய கால நினைவையும் மனிதர்களின் உள்ளத்திலே [கடவுள்] வைத்திருக்கிறார்’ என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 3:11, NW) எந்தச் சச்சரவுமில்லாத, சுமூகமான ஒரு சூழலில் இருக்கையில், என்றென்றுமாக வாழவே நாம் விரும்புகிறோம். சாவதற்கென்று ஒரு தேதி குறிக்கப்படுவதை நாம் யாருமே விரும்புவதில்லை. மிருகங்களுக்கு அப்படிப்பட்ட எந்த உணர்வும் இருப்பதுபோல் தெரியவில்லை. அவை எதிர்காலத்தைக் குறித்து எதையும் யோசிப்பதில்லை.
மனிதனின் முன்னேற்றத்துக்கு முடிவேயில்லை
மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டுமென ஆசைப்படுவதோடு, காலமெல்லாம் சுறுசுறுப்பாக, செயல்திறன் மிக்கவர்களாக இருப்பதற்குத் தேவையான ஆற்றலையும் பெற்றிருக்கிறார்கள். ஒரு மனிதனின் கற்கும் திறனுக்கு எல்லையிருப்பதாகத் தெரியவில்லை. மனித மூளை மிகவும் சிக்கலான அமைப்பை உடையது, எந்தப் பாதிப்பிலிருந்தும் மீண்டு பழைய நிலைக்குத் திரும்பும் தன்மையையும் உடையது. இந்த அம்சங்களைப் பொறுத்தவரை, இயற்கையில் எந்தவொரு படைப்பும் மனித மூளையை மிஞ்சிவிட முடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மிருகங்களைப்போல் அல்லாமல், நமது மனம் ஆக்கப்பூர்வமாக யோசிக்கிறது. நம்மால் ஞானமாய் சிந்திக்க முடிகிறது, கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. மனித மூளையின் திறனைப்பற்றி விஞ்ஞானிகள் புரிந்துவைத்திருப்பது எள்ளளவு மட்டுமே.
நமக்கு வயதானாலும் நம் மூளையின் திறன் அவ்வளவாக குறைவதில்லை. முதுமையடைந்து வருகையிலும் மூளையின் பெரும்பாலான செயல்பாடுகள் பாதிக்கப்படாமலேயே இருப்பதாக நரம்பியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஃபிராங்க்லன் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியல் முன்னேற்ற ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “மனித மூளையால், சூழலுக்கேற்ப தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்ள முடியும், புதுப்புது நரம்பு இணைப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும், முதிர்வயதின்போதும் புதிய நரம்பணுக்களை உருவாக்க முடியும். புத்தி பெருமளவில் மங்கிப்போவதற்கு பொதுவாக வியாதியே காரணமாக இருக்கிறது. ஆனால், முதிர்வயதில் ஞாபக மறதி ஏற்படுவதற்கும் உடல் அங்கங்கள் ஒத்திசைந்து செயல்பட மறுப்பதற்கும் காரணம், மூளைக்கும் கைகால்களுக்கும் நாம் பொதுவாக, அந்தளவுக்கு வேலை கொடுக்காததே.”
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், எப்போதும் நம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு, வியாதி ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் அது சதாகாலமும் இயங்கிக்கொண்டே இருக்க வாய்ப்பிருக்கிறது. டிஎன்ஏ-வின் அடிப்படை அமைப்பைக் கண்டுபிடித்த குழுவைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட்ஸன் என்ற மூலக்கூறு உயிரியல் நிபுணர் இவ்வாறு கூறுகிறார்: “‘பிரபஞ்சத்தில் இதுவரை நாம் கண்டுபிடித்திருப்பவற்றிலேயே மூளைதான் மிகச் சிக்கலான தன்மையை உடையது.’” ஜெரல்ட் எடல்மன் என்ற நரம்பியல் விஞ்ஞானி சொல்கிறபடி, மூளையின், தீக்குச்சி தலையளவான ஒரு பாகத்தில் “கோடிக்கணக்கான நரம்பு இணைப்புகள் உள்ளன. அவற்றின் மத்தியில் ஏற்படும் இணைப்புகளின் எண்ணிக்கையை விளக்க வேண்டுமென்றால் எண்கள் போதாது. அப்படியே விளக்கினாலும் சராசரியாகப் 10-க்கு பக்கத்தில் பலகோடி பூஜ்யங்களைச் சேர்க்க வேண்டியிருக்கலாம்.”
இந்தளவு திறம்படைத்த மூளையைப் பெற்றிருக்கும் மனிதர்கள் கொஞ்ச காலம் மட்டுமே உயிர்வாழ்வது எந்த விதத்தில் நியாயம்? இது எப்படி இருக்கிறது என்றால், ஒரே ஒரு மண் துகளை சில சென்டிமீட்டர் தூரம் வரை எடுத்துச்செல்ல சக்திவாய்ந்த என்ஜினால் இயக்கப்படும் பல பெட்டிகள் பொருத்தப்பட்ட ஒரு நீண்ட ரயிலைப் பயன்படுத்துவதுபோல் இருக்கிறது! அப்படியானால், மனிதனின் கற்கும் திறனும் சிந்திக்கும் திறனும் ஏன் எல்லையற்றதாய் இருக்கின்றன? ஒருவேளை, மிருகங்களைப்போல் சாவதற்காக அல்லாமல் சதா காலம் உயிர்வாழவே மனிதன் படைக்கப்பட்டானா?
உயிரைப் படைத்தவர் தரும் நம்பிக்கை
வாழ வேண்டுமென்ற இயல்பான ஆசையையும் எல்லையில்லா கற்கும் திறனையும் நாம் பெற்றிருப்பதிலிருந்து ஒரு நியாயமான முடிவுக்கு வர முடிகிறது: மனிதர்கள் வெறுமனே 70 அல்லது 80 வருடங்களுக்கு மட்டுமே வாழ அல்ல, மாறாக, அதைவிட பன்மடங்கு அதிகமான காலம் வாழவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த உண்மை, ஒரு வடிவமைப்பாளர் அல்லது ஒரு சிருஷ்டிகர் அல்லது ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர நம்மை வழிநடத்துகிறது. பிரபஞ்சத்திலுள்ள என்றும் மாறாத இயற்கை விதிகள், பூமியிலுள்ள எண்ணற்ற உயிரினங்களின் சிக்கலான தன்மை ஆகியவற்றைப் பார்க்கையில் படைப்பாளர் ஒருவர் இருப்பது ஊர்ஜிதமாகிறது.
ஒருவேளை, நாம் என்றென்றும் வாழவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார் என்றால் நாம் ஏன் சாகிறோம்? மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? மரித்தவர்களை மீண்டும் உயிர்பெறச் செய்வது கடவுளுடைய நோக்கமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஞானமும் சக்தியும் ஒருசேர பெற்ற கடவுளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதுதானே நியாயம், அவற்றுக்கான பதிலை அவர் அளித்தும் இருக்கிறார். ஒவ்வொன்றாகக் கலந்தாலோசிக்கலாம் வாருங்கள்.
◼ மனிதன் சாக வேண்டுமென்பது கடவுளுடைய ஆதி நோக்கமல்ல. பைபிளில் மரணத்தைப்பற்றி முதன்முதலாக சொல்லப்பட்டிருக்கும் பதிவைக் கவனித்தால், மனிதர்கள் இறப்பது கடவுளுடைய ஆதி நோக்கமல்ல என்பது தெரிகிறது. முதல் மானிட ஜோடியான ஆதாம் ஏவாள் தங்களுடைய அன்பையும் உத்தம தன்மையையும் தம்மிடம் வெளிக்காட்ட வாய்ப்பளிப்பதற்காக கடவுள் அவர்களுக்கு ஒரு சிறிய பரிட்சையை வைத்தார் என்பதாக பைபிளின் ஆதியாகமப் புத்தகம் விளக்குகிறது. அது வேறொன்றுமில்லை, குறிப்பிட்ட ஒரு மரத்தின் பழத்தை சாப்பிடக்கூடாது என்ற தடைதான். “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:17) எனவே, ஆதாம் ஏவாள் அந்தத் தடையை மீறி பரிட்சையில் தோற்று போனால்தான் அவர்கள் சாக நேரிட்டிருக்கும். அவர்கள் கடவுளிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்ளாததால் இறந்துவிட்டதாக பைபிள் பதிவு சொல்கிறது. இப்படித்தான் அபூரணமும், மரணமும் மனித குலத்தில் நுழைந்தன.
◼ மரணத்தைத் தூக்கத்துடன் ஒப்பிடுகிறது பைபிள். ‘மரண நித்திரையைக்’ குறித்து பைபிள் பேசுகிறது. (சங்கீதம் 13:3) தமது நண்பனாகிய லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பு இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் பின்வருமாறு விளக்கினார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” அவர் சொன்னபடியே செய்தார்! அவர் அழைத்தபோது “மரித்தவன் வெளியே வந்தான்” என்று பைபிள் சொல்கிறது. ஆம், லாசரு ‘கல்லறையிலிருந்து’ எழுந்து மீண்டும் உயிரோடு வந்தார்!—யோவான் 11:11, 38-44.
மரணத்தை ஏன் நித்திரையுடன் அல்லது தூக்கத்துடன் ஒப்பிட்டார் இயேசு? ஏனென்றால், தூங்குகிற ஒரு நபர் செயலற்ற நிலையில் இருக்கிறார். ஒருவர் அயர்ந்து தூங்குகையில், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதிருக்கிறார். நேரம் கழிவதையும் உணராதிருக்கிறார். அவருக்கு வலியோ வேதனையோ இருப்பதில்லை. அதேபோலத்தான், இறந்துபோன ஒருவரும் செயலற்ற நிலையில் இருக்கிறார், அவருக்கு எந்தவித உணர்வும் இருப்பதில்லை. தூக்கத்துக்கும் மரணத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை இத்துடன் முடிவதில்லை, இன்னும் தொடர்கிறது. தூங்கச் செல்லும் ஒரு நபர் நிச்சயம் கண் விழிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுபோலவே, இறந்துபோன ஒருவரும் நிச்சயம் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது.
சிருஷ்டிகர் தாமே பின்வரும் வாக்குறுதியை அளிக்கிறார்: “அவர்களை நான் பாதாளத்தின் [பொதுப் பிரேதக்குழி] வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?” (ஓசியா 13:14) கடவுள் ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்’ என்று பைபிளின் இன்னொரு தீர்க்கதரிசனம் சொல்கிறது. (ஏசாயா 25:8) இறந்தவர்களை இப்படி மீண்டும் உயிருக்கு கொண்டுவரும் செயலுக்குப் பெயர்தான் உயிர்த்தெழுதல்.
◼ உயிர்த்தெழுப்பப்படும் மக்கள் எங்கு வாழ்வார்கள்? நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, என்றென்றுமாக வாழவேண்டுமென்ற ஆசை மனிதர்களின் மனதில் இயல்பாகவே இருக்கிறது. எந்த இடத்தில் நீங்கள் நித்தியமாக வாழ ஆசைப்படுவீர்கள்? சில மதங்கள் கற்பிப்பதுபோல், நீங்கள் இறந்த பிறகு பிரபஞ்சத்தில் ஓர் உயிர்சக்தியாக அலைந்து திரிவதில் உங்களுக்குச் சந்தோஷமா? அல்லது, நீங்கள் இறப்பதற்கு முன்பு நடந்த எல்லாவற்றையும் மறந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு நபராக வாழ நீங்கள் ஆசைப்படுவீர்களா? அல்லது, ஒரு மரமாகவோ மிருகமாகவோ பிறக்க விரும்புவீர்களா? உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களிடம் சொல்லப்பட்டால், மனிதனாய் பிறப்பதிலுள்ள சந்தோஷங்கள் ஏதுமில்லாத ஒரு வாழ்வை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா, என்ன?
சந்தோஷம் குடிகொண்டிருக்கும் ஒரு பூங்காவனமாக மாறப்போகும் பூமியில் நீங்கள் வாழ ஆசைப்படுவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கையைத்தான் பைபிள் அளிக்கிறது. ஆம், பூமியிலேயே மனிதர்கள் நித்தியத்துக்கும் வாழ்வார்கள் என்று அது உறுதியளிக்கிறது. கடவுள், இந்த நோக்கத்தை மனதில் வைத்துதான் பூமியைப் படைத்தார். அவரை நேசித்து, சந்தோஷத்துடன் என்றென்றைக்கும் அவரை சேவிக்கிற மக்களால் இந்தப் பூமி நிறைந்திருக்க வேண்டுமென அவர் விரும்பினார். அதனால்தான் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29; ஏசாயா 45:18; 65:21-24.
◼ உயிர்த்தெழுதல் எப்போது நடைபெறும்? மரணம், தூக்கத்துடன் ஒப்பிடப்படுவதால், பொதுவாக ஒருவர் மரித்த உடனேயே உயிர்த்தெழுப்பப்படமாட்டார் என்பது தெளிவாகிறது. இறந்துபோன ஒருவர் உயிர்த்தெழுப்பப்படும்வரை அவர் “நித்திரையில்” இருக்கிறார். பைபிளில், யோபு என்ற மனிதர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” அதற்கான பதிலை அவரே அளித்தார்: ‘எனக்கு மாறுதல் வரும்வரை [பிரேதக் குழியில்] நான் காத்திருக்கிறேன். [கடவுள்] என்னைக் கூப்பிடுவார், அப்பொழுது நான் உத்தரவு சொல்லுவேன்.’ (யோபு 14:14, 15) மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து தங்கள் அன்பானவர்களுடன் ஒன்று சேருவதைக் காண்கையில் அது எவ்வளவு சந்தோஷமான ஒரு சமயமாக இருக்கும்!
பயப்படவேண்டிய அவசியமில்லை
பைபிள் அளிக்கும் நம்பிக்கை மரணத்துடன் சம்பந்தப்பட்ட எல்லா விதமான பயத்தையும் நீக்கிவிடும் என்று சொல்ல முடியாதுதான். சில சமயங்களில் வலியையும் வேதனையையும் அனுபவித்து மரிக்க நேரிடுவதை நினைத்து பயப்படுவது இயற்கையே. உங்கள் அன்பானவர் மரித்துவிடுவாரோ என்று நீங்கள் பயப்படுவதும் இயல்பானதுதான். ஒருவேளை நீங்களே இறக்க நேர்ந்தால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் படக்கூடிய கஷ்டத்தை எண்ணி நீங்கள் பயப்படுவதும் இயற்கைதான்.
என்றாலும், மரித்தவர்களின் உண்மையான நிலையை விளக்குவதன்மூலம் மரணத்தைக் குறித்து நமக்கு இருக்கும் எந்தவித அநாவசியமான பயத்திலிருந்தும் வெளிவர பைபிள் நமக்கு உதவுகிறது. மரணத்திற்குப் பிறகு மனிதன் தகதகவென எரிந்துகொண்டிருக்கும் நரகத்தில் பேய்களால் வதைக்கப்படுகிறான் என்று பயப்படத் தேவையில்லை. பேய்களின் இருண்ட உலகில் இறந்தவர்களின் ஆவிகள் அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றன என்றும் பயப்படத் தேவையில்லை. மரித்த பிறகு எங்குமே இல்லாமல் போய்விடுவோமோ என்று எண்ணியும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஏன்? ஏனெனில், எல்லையற்ற ஞாபகத் திறனைக் கொண்டுள்ள கடவுள் தம் நினைவில் உள்ள அனைவரையும் பூமியிலேயே உயிர்த்தெழுப்பப் போவதாக வாக்குறுதியளிக்கிறார். “நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—சங்கீதம் 68:20.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” —ஆதியாகமம் 3:19
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘நித்திய கால நினைவையும் மனிதர்களின் உள்ளத்திலே [கடவுள்] வைத்திருக்கிறார்.’ —பிரசங்கி 3:11, NW
[பக்கம் -ன் பெட்டி/படம்] 8]
மரணத்தைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள்
மரணத்தைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் முந்தைய கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படாத இன்னும் பல கேள்விகள் இருப்பது உண்மைதான். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைக் கவனமாகப் படிப்பதன்மூலம் அநேகர் அந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களைப் பெற்றிருக்கிறார்கள். நீங்களும் அவ்வாறு செய்யும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். அவ்வாறு பதில் கிடைக்கும் கேள்விகளில் சில கீழே:
◼ பைபிளில் குறிப்பிடப்படும் ‘நரகம்’ மற்றும் ‘அக்கினிக்கடல்’ எதைக் குறிக்கின்றன?
◼ எரி நரகமே இல்லையென்றால் கெட்ட ஜனங்கள் எப்படித் தண்டிக்கப்படுவார்கள்?
◼ மரிக்கையில் உடலைவிட்டு ஆவி வெளியேறுகிறது என பைபிள் சொல்கிறது, அந்த ஆவி எதைக் குறிக்கிறது?
◼ இறந்தவர்களுடன் பேசியதாக பலர் சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன?
◼ பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் “ஆத்துமா” எதைக் குறிக்கிறது?
◼ பூங்காவனமாக மாறப்போகும் பூமியில் மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படும் வாக்குறுதி எப்போது நிஜமாகும்?
◼ மக்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும் சரி, அவர்கள் மரித்தபிறகு உயிர்த்தெழுப்பப்படுவார்களா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் அடிப்படையிலான தெளிவான பதில்களைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரிகையின் பின்பக்கத்தைப் பாருங்கள்.
[பக்கம் -ன் படம்] 7]
லாசருவை ‘நித்திரையிலிருந்து எழுப்பப்போவதாக’ இயேசு கூறினார்
[பக்கம் -ன் படம்] 8, 9]
இறந்துபோன அன்பானவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!