இசை நாடகத்தில் தூள்கிளப்பும் பொம்மைகள்
ஆஸ்திரியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“இசையைக் கேட்கவே இனிமையாக இருந்தது, பொம்மலாட்ட சாகசங்களோ அதைவிட பிரமாதமாக இருந்தன. பொம்மைகளின் அங்க அசைவு அந்தளவு திறம்பட அமைந்திருந்தது. நானும் இதுவரை எத்தனையோ பொம்மலாட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தப் பொம்மைகளின் நடிப்பைப் போன்ற அசத்தலான ஒரு நடிப்பை வேறெந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியிலும் நான் பார்த்ததில்லை!”
இதைச் சொன்னவர், சிறு பிள்ளைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சியைப்பற்றி பேசுகிறாரா? இல்லை. நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, இசை நாடகத்திற்குச் சென்றுவந்த பெரியவர் ஒருவரின் உற்சாகம் ததும்பும் வார்த்தைகளே அவை. அசத்தலான இந்தப் பொம்மலாட்டம் எங்கு நடைபெறுகிறது? ஆஸ்திரியாவிலுள்ள சால்ஸ்பர்க் என்ற நகரத்தில் உள்ள பிரமாண்டமான இசை நாடக அரங்கத்தில் இது நடைபெறுகிறது. பிரபலமான இசை அமைப்பாளரான மோசார்ட் பிறந்தது இந்நகரில்தான்.
இசை நாடகங்களில், அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர்வரை உயரமுள்ள மர பொம்மைகள் நடிப்பதைக் குறித்து என்றைக்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சால்ஸ்பர்க் பொம்மலாட்ட அரங்கத்தில் இதுதான் நடக்கிறது. பின்னணியில் இதமான இசை ஒலிக்க, மேடையில் இந்தப் பொம்மைகள் நளினமாக நடனமாட ஆரம்பிக்கையில், பார்வையாளர்கள் தங்களையே மறந்து வேறொரு கற்பனை உலகிற்குச் சென்றுவிடுகிறார்கள்.
நிஜமும் கற்பனையும் சேர்ந்த கலவை
தொடக்க இசை ஆரம்பிக்கிறது, அதோடுகூட திரையும் மேலே எழும்புகிறது. முதல் காட்சியைப் பார்த்ததும் பார்வையாளர்கள் மனதில் ஓர் அதிர்ச்சி அலை பாய்கிறது. மேடைமீது தொம் தொம்மென்று நடைபோட்டு தாங்களே தனியாகப் பாடுவதுபோல் அங்கங்களை அசைப்பது உண்மையிலேயே மர பொம்மைகள்தானா? அவற்றின் தலைமீது மெல்லிய கயிறுகள் தெரிகிறதே? சிலர் இதைப் பார்த்து ரொம்பவே ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ‘அட, என்ன இது? கயிறுகள் இப்படிப் பளிச்சென தெரிகிறதே!’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இசைக் குழு உட்காரும் இடமும் காலியாக இருக்கிறது, இசைக் குழுவினர் யாரும் அங்குத் தென்படவுமில்லை. அதோடு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இசையை இயக்கிவிடுவதும் அவ்வளவு நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அடிக்கடி இசை நாடகத்திற்குச் செல்லும் பழக்கமுடையவர், ‘இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கொஞ்சமும் சகிக்கவில்லையே!’ என்று மனதிற்குள் சொல்லி கோபப்படலாம். ஆனால், கொஞ்சம் பொறுங்கள்! சினமடைந்த பார்வையாளர்கள் தங்களை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமாகிறார்கள்.
தொடக்கத்தில், பார்வையாளர்கள் மனதில் பல சந்தேகங்கள் எழுந்த போதிலும் போகப் போக பொம்மைகளின் அசத்தலான நடிப்பில் தங்கள் நெஞ்சங்களைப் பறிகொடுத்துவிடுகிறார்கள். நிஜத்துடன் கற்பனையும் சேர்ந்து சுவாரஸ்யமான ஒரு கலவையாக மாறுகிறது. பொம்மைகளுக்கு உயிர்கொடுக்கும் பட்டு நூல்கள் பார்வையாளர்களின் பார்வையிலிருந்து மறைந்துவிடுகின்றன. பொம்மைகளின் நடிப்பைப் பார்த்து பார்வையாளர்கள் திகைத்துப் போகிறார்கள்; அதோடு, சிறியதோர் இசை நாடக அரங்கத்தில் மர பொம்மைகளை நடிக்க வைக்கும் எண்ணத்தைக் கண்டும் வியக்கிறார்கள். முதலில் இந்த எண்ணத்தை விசித்திரமாகக் கருதியவர்கள் இப்போது சுவாரஸ்யமாகக் கருதுகிறார்கள். தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது உயிரில்லாத மர பொம்மைகள் என்பதையே அவர்கள் சீக்கிரத்தில் மறந்துவிடுகிறார்கள். ஆம், சந்தேகத்தோடு அமர்ந்திருந்த பார்வையாளர்களையும் தங்கள் வசம் இழுத்து, அவற்றுக்கே உரிய கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும் அபார சக்தி இந்தப் பொம்மைகளுக்கு இருக்கிறது.
மேடையிலும் மேடைக்குப் பின்னும்
மேடை காட்சிகளைப் போலவே மேடைக்குப் பின் நடக்கும் காரியங்களும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் உண்மையான நடிகர்கள் யார் என்றால் மேடைக்குப் பின் இருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேடைக்கு மேலிருந்து இந்தப் பொம்மைகளை இயக்குகிறவர்களே. மேடைக்கு மேல் உள்ள பாலம் போன்ற ஓர் அமைப்பில் நின்றுகொண்டு, இவர்கள் தங்களுடைய கைகளை அப்படியும் இப்படியுமாக அசைக்கையில், ஏதோ ஒருவித சைகை மொழியைப் பேசுவதுபோல் தெரிகிறது. அப்போது இந்தப் பொம்மைகள் பாடுகின்றன, அழுகின்றன, வாய்ச் சண்டை போடுகின்றன ஏன், முழங்காலை வளைத்து பணிவாக வந்தனம்கூட செய்கின்றன. இவற்றின் நடிப்பு, நிஜ இசை நாடக பாடகர்களின் நடிப்புக்கு இணையாக இருக்கிறது.
இந்தக் கலை இத்தனை சுவாரஸ்யமாக இருப்பதற்கான காரணத்தை த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் ஒருமுறை இவ்வாறு விளக்கியது: “மேடைக்குப் பின்னால் இருக்கையில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க மக்கள் தயங்க வேண்டியதில்லை. அந்தக் கதாபாத்திரம் எந்த வயதினராக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கவலையே இல்லாமல் நடிக்க தயாராக இருக்கலாம். மேடைக்குப் பின் இருந்து நடிக்கும் இவர்களுக்குத் தேவையானதெல்லாம்: திறமை மட்டுமே, அதுவும், அபாரத் திறமை.” சால்ஸ்பர்க் அரங்கத்தில் பொம்மைகளை உயிர்பெற செய்கிறவர்களின் திறமை உண்மையிலேயே வியக்கத்தக்க விதத்தில் இருக்கிறது.
உயிரில்லா உருவங்களுக்குப் பதிலாக பரவசமூட்டும் பொம்மைகள்
1913-ஆம் வருடம் சால்ஸ்பர்க் பொம்மலாட்ட அரங்கத்தில், மோசார்ட்டின் இசை நாடகம் ஒன்று பொம்மலாட்ட வடிவில் நடைபெற்றது. இப்போது 90-க்கும் அதிகமான வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், இந்த அரங்கத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த அரங்கத்தை நிறுவியவர் ஆன்டோன் ஐகா என்ற ஒரு சிற்பி. பொம்மைகளை உருவாக்குவது எப்படி என்பதை இவர் மியூனிச்சில் கற்றுக்கொண்டார். பிறகு, குறிப்பிடத்தக்க விதத்தில் அங்க அசைவுகளைத் துல்லியமாகச் செய்யக்கூடிய பொம்மைகளை உருவாக்கினார். இருந்த இடத்தைவிட்டு நகராத கோயில் சிலைகளை உருவாக்குவதைவிட பரவசமூட்டும் பொம்மைகளை உருவாக்குவதில் அதிக திருப்தி கிடைப்பதை அவர் விரைவில் உணர்ந்தார்.
சீக்கிரத்தில், ஐகாவின் குடும்பத்தினருக்கும் இந்தக் கலையில் ஈடுபாடு ஏற்பட்டது. பொம்மைகளுக்குத் தேவையான உடைகளைத் தைப்பது, நாடகத்திற்கு இசை மீட்டுவது, பாடல்களைப் பாடுவது, வசனம் பேசுவது ஆகிய அனைத்து அம்சங்களிலும் இவர்கள் ஆர்வத்துடன் உதவினார்கள். இத்துறையில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்ததால் இன்னும் பல இசை நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றினார்கள். 1927 முதல் வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. தற்போது ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் போன்ற பல நாடுகளில் மரபொம்மைகள் அடிக்கடி மேடையில் காட்சியளிக்கின்றன. பார்க்கப்போனால், எல்லா கலாச்சாரங்களிலுமே பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சியை நீங்கள் விரும்புகிறீர்களா?
‘இசைக்கு அமைக்கப்பட்ட ஒரு நாடகத்தில், பொதுவாக கதைக்கேற்ற பிரத்தியேக உடையை அணிந்த பாடகர்கள் வாத்திய இசையுடன் சேர்ந்து பாடுவதுதான்’ இசை நாடகம். (த கன்ஸைஸ் ஆக்ஸ்ஃபர்ட் டிக்ஷ்னரி ஆஃப் ம்யூசிக்) இசை நாடகத்தின் வசனங்கள் அல்லது கதைச்சுருக்கம், புராணக்கதைகளையோ சரித்திரத்தையோ பைபிள் பதிவுகளையோ கற்பனைக் கதைகளையோ அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவை துயரக் கதைகளாக அல்லது காதல் கதைகளாக அல்லது நகைச்சுவைக் கதைகளாகக்கூட இருக்கலாம். இந்தப் பொம்மலாட்ட அரங்கத்தில் நடைபெறும் நாடகங்கள் பொதுவாக ஜெர்மன் மொழியில் அல்லது இத்தாலிய மொழியில் இருக்கின்றன. எனவே, முதலில் அந்தக் கதைச்சுருக்கத்தின் மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு அது உங்கள் ரசனைக்கு ஏற்றதாய் இருக்குமா என்பதைத் தீர்மானிப்பது ஞானமானச் செயல்.
குறிப்பிட்ட ஓர் இசை நாடகத்தை ஒரு கிறிஸ்தவர் பார்க்கலாமா கூடாதா என்பதை அவர் எப்படித் தீர்மானிக்கலாம்? அதில் பங்கேற்கும் பாடகர்கள் எந்தளவு பிரபலமானவர்கள் என்பதை வைத்து அவர் தீர்மானிக்கலாமா? அல்லது அதன் இசை நயத்தை வைத்து தீர்மானிக்கலாமா? அல்லது கதையின் கருப்பொருளை வைத்து தீர்மானிக்கலாமா?
மற்ற எல்லா பொழுதுபோக்குகளைப் போலவே இந்த இசை நாடகங்களைக் கேட்பது அல்லது பார்ப்பது சரியா என்பதைத் தீர்மானிப்பதற்கான சிறந்த வழி, அந்தக் கதைச் சுருக்கத்தையும் அப்போஸ்தலன் பவுல் கூறிய நியமத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும். பவுல் சொன்னதாவது: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8. (g 1/08)
[பக்கம் 8-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரியா
வியன்னா
சால்ஸ்பர்க்
[பக்கம் 8-ன் படம்]
பல்வேறு இசை நாடகங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கும் பொம்மை கூட்டங்கள்
[பக்கம் 9-ன் படம்]
சால்ஸ்பர்க் பொம்மலாட்ட அரங்கம்
[பக்கம் 10-ன் படம்]
ஆன்டோன் ஐகா, நிறுவியவர்
[படத்திற்கான நன்றி]
நன்றி: Salzburg Marionette Theatre
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 8, 9-ல் உள்ள படங்கள் அனைத்துமே: By courtesy of the Salzburg Marionette Theatre