சவாலுக்குச் சமாதி
அமைதி தவழும் உலகினிலே!
கடவுளுடைய அரசாங்கம், சீக்கிரத்தில் உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும்; அப்போது மனிதர்கள் எல்லாரும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள். அந்த அரசாங்கத்தில் “மிகுந்த சமாதானம் இருக்கும்” என்று சங்கீதம் 72:7 உறுதியளிக்கிறது. ஆனால், அது எப்போது வரும்? அது எப்படி ஆட்சியைப் பிடிக்கும்? அந்த ஆட்சியில் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும்?
கடவுளுடைய அரசாங்கம் வருவதற்கு முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்குமென்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருக்கிறது. போர், பஞ்சம், நோய்நொடி, பூமியதிர்ச்சி, அக்கிரமம் போன்றவை அதிகமாகும் என்று அது சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் கடவுளுடைய அரசாங்கம் வரப்போவதற்கு ‘அடையாளமாக’ இருக்கின்றன.—மத்தேயு 24:3, 7, 12; லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:2-8.
“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, . . . தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள் என்றும் பைபிள் முன்கூட்டியே சொல்லியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-4) இப்படிப்பட்ட சிலர் எப்போதுமே உலகத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால், இந்தக் கடைசி காலத்தில் எங்கு பார்த்தாலும் இப்படிப்பட்டவர்கள்தான் இருக்கிறார்கள்.
பைபிள் முன்கூட்டியே சொன்ன சம்பவங்கள் 1914-ஆம் வருஷத்திலிருந்து நிறைவேற ஆரம்பித்தன. சொல்லப்போனால், அந்த வருஷத்திலிருந்து உலகம் மாறிவிட்டதாகச் சரித்திராசிரியர்களும், அரசியல் மேதைகளும், எழுத்தாளர்களும் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, பீட்டர் மன்ச் என்ற டேனிஷ் சரித்திராசிரியர் இப்படி எழுதினார்: “1914-ல் நடந்த போர்தான், மனித சரித்திரத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய திருப்புமுனை. அதுவரை உலகம் முன்னேற்றப் பாதையில் போய்க்கொண்டே இருந்தது . . . ஆனால் அதற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் பகை, திகில், அழிவு என்றாகிவிட்டது.”
ஆனாலும், ஒரு ஆறுதலான விஷயம்! புயலுக்குப் பின் அமைதி என்று சொல்லப்படுவதுபோல், இந்தக் கெட்ட நிலைமைகள் முடிவுக்கு வந்த பிறகு ஒரு நல்ல நிலைமை வரப்போகிறது. சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கம் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யப்போகிறது. உலக முடிவுக்கு அடையாளமாக இந்த நல்ல விஷயம்கூட நடக்கும் என்று இயேசு சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
இந்த நல்ல செய்தியைப் பற்றித்தான் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். அவர்களுடைய முக்கியமான பத்திரிகையின் பெயரே, காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதுதான். கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களுக்காக என்னென்ன அற்புதங்களைச் செய்யப்போகிறது, இந்தப் பூமியை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது என்பதை அந்தப் பத்திரிகை விளக்குகிறது.
கடவுளுடைய அரசாங்கம் எப்படி ஆட்சியைப் பிடிக்கும்?
இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, நான்கு முக்கியமான விஷயங்களைக் கவனியுங்கள்:
கடவுளுடைய அரசாங்கம், இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தி இந்தப் பூமியை ஆட்சி செய்யாது.
இன்றுள்ள அரசியல் தலைவர்கள், பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் முட்டாள்தனமாகக் கடவுளுடைய அரசாங்கத்தை எதிர்ப்பார்கள்.—சங்கீதம் 2:2-9.
மனிதர்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைக்க விரும்பும் அரசாங்கங்களைக் கடவுளுடைய அரசாங்கம் அழிக்கும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:17-21) உலகம் முழுவதும் நடக்கப்போகும் அந்தக் கடைசிப் போரின் பெயர் அர்மகெதோன்.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
கடவுளுடைய ஆட்சியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள் அர்மகெதோனில் தப்பித்து, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்வார்கள். அவர்களை “திரள் கூட்டமான மக்கள்” என்று பைபிள் அழைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் அந்தத் திரள் கூட்டத்தில் இருப்பார்கள் என்று தெரிகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14.
கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நீங்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுளிடம் இயேசு ஜெபம் செய்தபோது, “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று சொன்னார்.—யோவான் 17:3.
கடவுளாகிய யெகோவாவைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால், உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். அவற்றில் இரண்டை மட்டும் இப்போது பார்க்கலாம். முதலாவதாக, யெகோவாவை நீங்கள் உறுதியாக நம்புவீர்கள். அதுவும், கண்மூடித்தனமாக இல்லாமல் தெளிவான அத்தாட்சியின் அடிப்படையில் அவரை நம்புவீர்கள். அதனால், கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதையும், அது சீக்கிரத்தில் இந்தப் பூமியை ஆட்சி செய்யும் என்பதையும் நம்புவீர்கள். (எபிரெயர் 11:1) இரண்டாவதாக, கடவுள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும். கடவுள்மேல் அன்பு அதிகமாகும்போது, மனப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். மற்றவர்கள்மேல் அன்பு அதிகமாகும்போது, இயேசு கொடுத்த இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிவீர்கள்: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக்கா 6:31.
நம்மைப் படைத்தவர், ஒரு அன்பான அப்பாவைப் போல் இருக்கிறார். அதனால், நமக்கு மிகச் சிறந்த வாழ்க்கையைக் கொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதுதான் ‘உண்மையான வாழ்க்கை’ என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:19) இன்று நாம் வாழ்வது ‘உண்மையான வாழ்க்கை’ கிடையாது. லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் பாடாக இருக்கிறது. ஆனால், ‘உண்மையான வாழ்க்கை’ எப்படி இருக்கும்? கடவுளுடைய அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்களைப் பொழியும்? அடுத்த பக்கத்தைப் பாருங்கள்...