மற்றவர்களிடம் நல்லதைப் பாருங்கள்
பிரச்சினைக்கு ஆணிவேர்
தற்பெருமை இருந்தால் பாகுபாடு நமக்குள் சுலபமாக வேர்விடும். தற்பெருமை உள்ளவர்கள் தங்களைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்வார்கள். மற்றவர்களை மட்டமாக பார்ப்பார்கள். இப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: “பெரும்பாலான கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள், மற்ற கலாச்சாரத்தைவிட தங்களுடைய வாழ்க்கை முறை, உணவு, உடை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள்தான் ரொம்பவே உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள்.” இந்தத் தவறான எண்ணத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
பைபிள் ஆலோசனை
“மனத்தாழ்மையினால் . . . மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”—பிலிப்பியர் 2:3.
இதன் அர்த்தம் என்ன? தற்பெருமையை விட்டொழிக்க வேண்டுமென்றால் மனத்தாழ்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு மனத்தாழ்மை இருந்தால், மற்றவர்கள் சில விஷயங்களில் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வோம். எந்தவொரு பிரிவினராலும் தங்களுக்குத்தான் எல்லா நல்ல குணங்களும் திறமைகளும் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
ஷ்டெஃபான் என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் வளர்ந்தவர். கம்யூனிஸ்ட் அல்லாத மற்ற நாட்டு மக்கள்மேல் இருந்த பாகுபாட்டை அவர் தூக்கியெறிந்தார். “நம்மளவிட மத்தவங்கள உயர்வா நெனச்சா பாகுபாட்ட தவிர்க்க முடியும்னு நான் நம்புறேன். எனக்கு எல்லாமே தெரியும்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தர் கிட்டயிருந்தும் என்னால சில விஷயங்கள கத்துக்க முடியும்” என்று அவர் சொல்கிறார்.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களைப் பற்றி எதார்த்தமாக யோசிக்க முயற்சி செய்யுங்கள். நீங்களும் தவறு செய்கிறவர்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடியாத சில விஷயங்களை மற்றவர்களால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி மக்களுக்கு இருக்கிற தவறான கருத்தை வைத்து, அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லாருமே அப்படிப்பட்டவர்கள்தான் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.
ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி தவறாக யோசிப்பதற்குப் பதிலாக உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
உங்களால் செய்ய முடியாததை மற்றவர்களால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்
‘எனக்குப் பிடிக்காத ஒரு குணம் அவர்கிட்ட இருக்குறதுனால, அத மோசமான குணம்னு சொல்வேனா, இல்லன்னா அத என்கிட்ட இல்லாத ஒரு வித்தியாசமான குணம்னு நினைப்பேனா?’
‘என்கிட்ட இருக்குற குறைகள அவர் பாத்தா எப்படியிருக்கும்?’
‘எந்தெந்த விஷயங்கள்ல அவர் என்னைவிட திறமைசாலியா இருக்குறாரு?’
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாக பதில் சொன்னால், அவர்மேல் உங்களுக்கு இருக்கிற பாகுபாட்டை விரட்டியடிக்க முடியும். அதோடு, அவரிடம் இருக்கிற அருமையான குணங்களையும் திறமைகளையும் கண்டுபிடிக்க முடியும்.