அதிகாரம் 12
நீ தொடங்குகிறதைச் செய்து முடிக்கிறாயா?
மனிதருடைய மகிழ்ச்சியின் பெரும்பாகம் நிறைவேற்றத்தின் மூலமாக வருகிறது. உதாரணமாக, நீ கித்தாரை வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி தீர்மானித்து, அதை உன்னால் வாசிக்கக்கூடும் வரையில் விடாமல் பயின்று வந்தால், அப்பொழுது அதிலிருந்து மகிழ்ச்சியடைகிறாய். ஆனால், தொடங்கி பின் சீக்கிரத்திலேயே, கற்பதை நிறுத்தி விடுவாயானால், அதனால் வரும் இன்பத்தையும் மனத் திருப்தியையும் நீ ஒருபோதும் அடையமாட்டாய். ஒரு காலப்பகுதி நீடிக்கும் பழக்கமும் பயிற்சியும் தேவைப்படுகிற எந்தச் செயலைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது.
2 என்றபோதிலும், திட்டமிடும் வேலையைச் செய்து முடிக்கும்வரையில் அதை விட்டுவிடாமல் நிலைத்திருக்கும் இந்தக் காரியத்தில், ஒருவகை இயற்கைச் சாய்வுகளை நாம் எல்லாரும் நாளடைவில் விட்டொழிக்க அல்லது கீழடக்கி வெல்ல வேண்டியதாயிருக்கிறது.
உட்படும் பிரச்னைகள்
3 சிறு பிள்ளைகளுக்குத் தங்கள் கவனத்தை ஒன்றில் ஊன்ற வைக்கக்கூடிய கால அளவு வெகு குறுகியதாய் இருக்கிறதென்பது உனக்குத் தெரியும். விளையாட்டிலுங்கூட வெகு சீக்கிரத்தில் அவர்களுடைய கவனம் வேறு ஒன்றுக்கு எளிதாய்த் திருப்பப்படுகிறது அல்லது இழக்கச் செய்யப்படுகிறது. ஆனால் ஒருவன் வளரவளர அவனுடைய கவனத்தை ஒருமிக்க ஊன்ற வைக்கும் திறமைகள் வளர்ந்து விருத்தியாகின்றன. உன்னில் தானேயும் இதை நீ கவனித்திருக்கலாம். இந்தத் தன்மையை நீ பேரளவாய் முயற்சி செய்து வளர்க்க வேண்டியதாய் இருக்கிறது. என்றாலும் இது நிச்சயமாகவே பலனுள்ளது. ஏனென்றால் வாழ்க்கையை மிக நன்றாய் பயன்படுத்திக்கொள்ள இது உனக்கு உதவி செய்கிறது.
4 கவனத்தை ஒருமிக்க ஊன்ற வைக்க நீ மற்றொரு பொதுவான பண்பையும் கீழடக்கி வெல்ல வேண்டும். அதுவே பொறுமையின்மை அல்லது பதற்றமாகும். நீ சிறு பிள்ளையாக இருந்த காலத்தை எண்ணிப்பார். சிறு பிள்ளைகள் எப்பொழுதும் காரியங்கள் இப்பொழுதே! வேண்டும் என்று விரும்புவது உனக்கு நினைவிருக்கும். அநேக தடவைகளில் அவர்கள் எதையாவது செய்யமுயன்று ஒரு சில முயற்சிகளுக்குப் பின் தாங்கள் வெற்றியடையவில்லை என்றால் அதை அப்படியே விட்டுச் செல்ல ஆயத்தமாய் இருக்கிறார்கள். பருவவயதினர் பலர் இன்னும் அவ்வாறு இருப்பது ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் மிக அதிக பயனுள்ள காரியங்கள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு நேரமும் முயற்சியும், அவசியமாயிருப்பதை நீ மதித்துணருகிறாயென்றால், ஒன்றை எளிதில் விட்டுச் செல்லாமல் இருக்க அது உனக்கு உதவி செய்யும்.
5 பொறுமையற்ற ஒருவன் பொதுவாய்க் காரியங்களைப் பதற்றமாய் அல்லது திடீர் உணர்ச்சியின் பேரில் செய்ய மேற்கொள்ளுகிறான். ஒரு ஞானமான நீதிமொழி பின்வருமாறு சொல்லுகிறது: “ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” (நீதிமொழிகள் 21:5) ஆகவே ஏதோ ஒரு திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக அல்லது ஏதோ நியமிப்பை அல்லது வேலையை ஏற்பதற்கு முன்பாக, அது உண்மையில் பயனுள்ளதா என்பதை முதலாவதாக நிச்சயப்படுத்திக்கொள்.
6 சில காரியங்களில் நீ தொடங்குவதை முடிக்காமல் இருப்பது ஞானமாய் இருக்கிறது. இது எப்படி? எப்படியென்றால் அது ஒருவேளை தொடக்கத்திலிருந்தே ஒரு கெட்ட திட்டமாய் இருந்திருக்கலாம். அதன் இலக்கு தவறானதாக, சரியான நியமங்களுக்கு ஒத்திராத ஒன்றாய் இருக்கலாம். அல்லது, அது உனக்கு நல்லதல்லாததாக இருக்கலாம். அதன் இலக்கை அடைவதற்கு நீ செலவிட வேண்டிய நேரத்திற்கும் முயற்சிக்கும் அது தகுந்ததாய் இருக்கிறதா? அதை நீ அடையக் கூடும் என்று நம்புவதற்கு உனக்கு நல்ல காரணம் இருக்கிறதா?
7 முதலாவதாகச் செலவைக் கணக்கிட்டு, தான் அதைத் தாங்கக்கூடுமா இல்லையா என்று பார்க்காமல் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்குகிற மனிதனைப் பற்றி இயேசு சொன்னார். அவர் சொன்ன பிரகாரம், அந்த மனிதன் ஒருவேளை அஸ்திபாரத்தைப் போடலாம், பின்பு அதற்குமேல் தொடர்ந்து கட்ட தனக்குத் திராணியில்லை என்பதாகக் காணக்கூடும், இது, பார்க்கிறவர்கள் சிரித்து: “இந்த மனுஷன் கட்டத் தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான்,” என்று சொல்ல வைக்கும். (லூக்கா 14:28-30) ஆகையால், நீ தொடங்குவதைச் செய்து முடிக்க விரும்புகிறாயென்றால், முன்னதாகவே செலவைக் கணக்கிட்டுப்பார்.
8 அனுகூலங்களைப் பிரதிகூலங்களுக்கு எதிராக நிறுத்துப்பார். மற்றவர்களிடம், முக்கியமாய் உன் பெற்றோரிடம் அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டுப்பார். அவர்களுடைய அனுபவத்திலிருந்து பலனடைந்துகொள்; அவர்கள் தவறுகளைச் செய்திருக்கின்றனர், அவற்றிலிருந்து உன்னைத் தூர விலகிச் செல்லும்படி அவர்கள் வழிநடத்தக்கூடும். பைபிளானது ஞானமுள்ள நடைமுறையான ஆலோசனைக்கு ஊற்று மூலமாய் இருக்கிறது. இது கடவுளால் கொடுக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தக் காலப் பகுதியில் மக்கள் கற்றறிந்த பாடங்கள் அதில் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வெறும் பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களில் இன்பத்தைத் தேடுவதில் ஒரு மனிதன் செய்யக்கூடிய ஏறக்குறைய எல்லாவற்றையும் அரசனாகிய சாலொமோன் செய்தான். இதன் பலன் வெறும் “காற்றை வேட்டையாடுவதே,” என்று அவன் நமக்குச் சொல்லுகிறான். ஆகையால் இதைப் போன்ற பயனற்றதை ஏன் நாடித் தொடரவேண்டும்?—பிரசங்கி 2:3-11.
விட்டுச் செல்கிறவனாவதைத் தவிர்ப்பாயாக
9 உன் இலக்கு உண்மையில் பயனுள்ளது என்று நீ திடமாய் நம்பின பின்பு, அதை அடைவது எப்படியென்று திட்டமிடுவதும் மிக முக்கியமானது. இளைஞர் பலர் தாங்கள் தொடங்குவதைச் செய்து முடிக்கத் தவறுகின்றனர், ஏனென்றால் அவர்கள் மனந்தளர்வடைந்தவர்களாகிறார்கள். எதிர்பாராத ஏதோ பிரச்னைகள் அல்லது தடைகள் எழும்பக்கூடும். அல்லது தாங்கள் செய்ய மேற்கொண்டது தாங்கள் நினைத்ததைப் பார்க்கிலும் கடினமாய் இருப்பதாக அவர்கள் காண்கிறார்கள். இப்பொழுது என்ன செய்வது?
10 இப்படிப்பட்ட சந்தர்ப்ப நிலைமைகள் நீ உண்மையில் எதால் ஆக்கப்பட்டிருக்கிறாய் என்பதை வெளிப்படுத்துகிறது. துன்பங்கள் உன்னை எதிர்மறையான தோல்வி மனப்பான்மைக்குரிய எண்ணங்களால் நிரப்ப அனுமதிப்பாயானால், தொடர்ந்து முன்னேறுவதற்கான பலத்தை இது கொள்ளையிட்டுவிடும். இது, பின்வரும் பைபிள் நீதிமொழி சொல்லுகிற பிரகாரமே இருக்கிறது: “குறையுள்ள நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் குறைந்துவிடும்.” (நீதிமொழிகள் 24:10, தி.மொ.) ஆகையால், அதற்குப் பதிலாக அந்தச் சந்தர்ப்ப நிலைமையை ஒரு சவாலாக நோக்கு. கூடுதலான முயற்சியுடன்—கூடுதலான யோசனை, சக்தி, நேரம் ஆகிவற்றுடன்—அதை எதிர்ப்பட எழும்பு. சவால்களை விட்டு நீ ஓடாமல் இருப்பாயானால் அவை வாழ்க்கையை உற்சாகமுள்ளதாக்கக்கூடும். அவற்றை வெற்றிகரமாய் மேற்கொள்வதன் மூலம், நீ திட நம்பிக்கையிலும் நுண்ணிய திறமைகளிலும் வளருவாய். அப்பொழுது நீ எதிர்கால வேலைகளை மேலுமதிக உறுதியான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சி உணர்ச்சியுடனும் ஏற்று நிறைவேற்றக்கூடும்.
11 ஆகையால் கடினமாகிக் கொண்டு வருகிறதென்று இந்த வெறுங் காரணத்தினிமித்தமாக விட்டுச் செல்லும் இந்தப் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வதைத் தவிர்ப்பாயாக. மற்றப்படி, அடுத்தத் தடவை காரியங்கள் கடினமாகையில் அதையே செய்யும்படி அதாவது, “விசிறி எறிந்து விட்டு விலகிச் செல்லும்படி” மனம் சாயும். இந்தப் பழக்கம் தொடங்குவதற்கு இடங்கொடாமல் இருப்பதன்மூலம், உன் வாழ்க்கை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் வெறும் தோல்விகளும் செய்து முடிக்கப்படாதத் திட்டங்களுமாக ஆகிவிடாதபடி நீ அதைக் காத்து வைத்துக் கொள்ளலாம்.
12 நீ எளிதில் விட்டுவிடுகிறவனோ, விலகிச் செல்கிறவனோ அல்ல என்று நிரூபிப்பாயானால், மற்றவர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் சம்பாதித்துக்கொள்வாய். பூர்வ கிறிஸ்தவனாகிய தீமோத்தேயு இளைஞனாக இருக்கையிலேயே, வெவ்வேறுபட்ட இரண்டு பட்டணங்களில் “சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.” (அப்போஸ்தலர் 16:2) இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் அவனைத் தன்னுடைய பயணத் தோழனாகத் தெரிந்தெடுத்தார். ரோமப் பேரரசு முழுவதிலும் பல பாகங்களுக்கு இந்த அப்போஸ்தலனோடு செல்லும் தனி சிலாக்கியங்களைத் தீமோத்தேயு பெற்றிருந்தான். இவ்வாறு, சில சமயங்களில் அபாயகரமான சந்தர்ப்ப நிலைமைகளிலுங்கூட ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் உண்மையுடன் சேவை செய்தபின்பு முக்கியமான பொறுப்பு அவன் கையில் ஒப்படைக்கப்பட்டது, தான் அவ்வளவு நல்ல சுகமுள்ளவனாக இராதபோதிலும், இதை அவன் நன்றாய் நிறைவேற்றினான். ஆம், தீமோத்தேயு தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் நிலைத்திருந்து அதை முற்று முடிய செய்து முடிப்பவனென்று நம்பக்கூடியவனாய் இருந்தான். அவன் நம்பிக்கைக்குரிய மனிதனாக இருந்தான். ஆனால் நம்பத்தகுந்தவனாய் தன்னை நிரூபித்துக்காட்ட நேரமும் விடா முயற்சியும் எடுத்தது.
விடாமுயற்சிக்கு ஆதாரம்
13 ஏதோ ஒன்றை, அது சரியானது என்பதனால் அல்லது கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையினால் செய்ய நாடுகிறாய் என்றால், அப்பொழுது அதைச் செய்து முடிக்க அவர் உனக்கு உதவி செய்வார். உதாரணமாக, நோவாவைக் கவனித்துப் பார். அவரும் அவருடைய குமாரரும் கட்டின அந்தப் பேழை மூன்று மாடிகளைக் கொண்ட நானூறு அடிகளுக்கு (122 மீட்டர்கள்) மேற்பட்ட நீளத்தையுடைய பெட்டியைப் போன்ற அமைப்பாக இருந்தது. இது ஏதோ ஓய்வு நேரத்தில் “ஒரு சில நாட்களில்” செய்து முடிக்கும் ஒரு வேலையல்ல. என்றாலும் அதை முற்று முடிய செய்து முடிக்கும்படி அவர் பார்த்துக் கொண்டதனால், நோவாவும் அவருடைய குடும்பமும் ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தனர். அவருடைய சந்ததியாராக நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.
14 மறுபடியுமாக, அப்போஸ்தலனாகிய பவுலைக் கவனித்துப் பார். காரியங்கள் கடினமாகையில் விட்டு சென்றுவிடாதிருந்த ஓர் உண்மையான முன்மாதிரியாக அவர் இருந்தார். தன்னுடைய குறிப்பிட்ட ஊழிய நியமிப்பை அதன் முடிவு வரையாக விடாமல் நிறைவேற்றுவதற்காக எல்லா வகையான கடின அனுபவங்களையும் சகித்து நிலைத்திருப்பது தகுதியானதென்று அவர் எண்ணினார். அடிகளையும், கல்லெறியப்படுதலையும், காவலில் வைக்கப்படுதலையும், கடினமான உழைப்பையும், தூக்கமில்லா இரவுகளையும், தாகம், பசி, குளிரோடு போதிய உடை இல்லாமையும், சத்தியத்தின் பகைஞரிடமிருந்தும் தீயச் செயல்களில் ஈடுபடுபவரிடமிருந்தும், மேலும் மூர்க்க மிருகங்களிடமிருந்தும், தரையிலும் சமுத்திரத்திலும் பயணஞ் செய்கையில் இயற்கை சக்திகளிடமிருந்தும் வந்த அபாயங்களையும் அனுபவிக்க அவர் மனமுள்ளவராக இருந்தார். அவர் விட்டுச் சென்று விடாதவராக இருந்ததனால், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்,” என்று உண்மையாகச் சொல்லக்கூடியவராக இருந்தார். எந்த ஆதாரத்தின் பேரில்? தன்னம்பிக்கையின் காரணமாக அல்ல, ஆனால் பவுல் தாமே சொன்ன பிரகாரம்: “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு வல்லமையுண்டு.” மேலும் அவர் எழுதினதாவது: “நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” (2 தீமோத்தேயு 4:6-8; பிலிப்பியர் 4:13; ரோமர் 8:35-39) பார்த்துப் பின்பற்றுவதற்குத் தகுந்தவராக அவர் இருந்தாரென்று நீ சொல்வாயல்லவா?
15 வாழ்க்கையில் சந்தோஷமனுபவிக்க மற்றவர்களோடு ஒத்து வாழக்கூடியவர்களாகவும், அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுகிறவனாகவும், அவர்கள் மரியாதையைச் சம்பாதிக்கக்கூடியவனாகவும், நீ இருக்கவேண்டும். நீ ஆட்களை விரைவில் “விட்டுச் செல்”கிறவனாக இருக்கிறாயென்றால், அதாவது நட்பைத் தொடங்கி, பின்பு கருத்து வேறுபாடு தோன்றும் முதல் அறிகுறியிலேயே அவர்கள் நட்பை விட்டுவிடுகிறவனாக இருக்கிறாயென்றால் இதை நீ செய்ய முடியாது. உன்னை நீயே சோதித்துப் பார். மற்றவர்களோடு உனக்கு இருக்கும் உறவைச் சில சமயங்களில் நல்ல முறையில் கையாளாமற் போகிறாயா, இவ்வாறு அவர்கள் உணர்ச்சி புண்படுத்தப்பட்டு உன்னை எதிர்ப்பதற்குக் காரணமளிக்கிறாயா? இது முயலாமல் “விட்டுச் செல்”லும்படி உன்னைச் செய்விக்கிறாயா? அப்படியானால் மற்றவர்கள் சில சமயங்களில் மனக்கசப்பூட்டக்கூடுமென்ற காரணத்தால் ஏன் அவர்களில் கோபமடைய அல்லது அக்கறை இழக்க விரைவுபடுகிறாய்? பொறுமையுடன், தேவைப்படும் நேரமெடுத்து பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழிவகையைத் தேடு. பின்வரும் இந்த நீதிமொழியின் ஞானத்தைக் காணமுடியாமல் யார் இருக்கமுடியும்: “நீடிய சாந்தமுள்ளவன் மகா புத்திமான் [தெளிர்ந்துணர்வுள்ளவன், NW] முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்”?—நீதிமொழிகள் 14:29.
16 விடாமுயற்சியின் பலன்கள் மிகுதியானவையும் முயற்சிக்கு ஏற்றவையுமாக இருக்கின்றன. காரியங்களை முற்றுமுடிய செய்து முடிப்பவனாக உன்னை நிரூபிப்பதன் மூலம் நீ பல சிலாக்கியங்களையும் பலன்களையும் அடைவாய். தம்மைப் பின்பற்றுவோரைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) கிறிஸ்தவர்களாக, நாம் ஓர் ஓட்டப் பந்தயத்தில் இருக்கிறோம். மகத்தான பரிசு நித்திய ஜீவன். பிரச்னைகளின் அல்லது துன்பங்களின் மத்தியிலும் விடாமுயற்சியின் திறமையை நீ படிப்படியாய் வளர்த்துக் கொண்டும், எடுத்த செயலை விடாமல் முற்றுமுடிய செய்து முடித்தும் வந்தால் மாத்திரமே அந்தப் பரிசை நீ அடைவாய்.
[கேள்விகள்]
1, 2. நிறைவேற்றத்தின் மூலமாக மனத்திருப்தியை அடைய உன் பங்கில் என்ன வேண்டியதாய் இருக்கிறது?
3-8. (எ) பொறுமையின்மையை கீழடக்கி வெல்ல ஒருவனுக்கு எது உதவி செய்யக்கூடும்? (பி) ஒரு செயல் திட்டத்தைத் தொடங்குவதற்குமுன்பாகவே என்ன செய்வது ஞானமான காரியம்? இதைத் தீர்மானிப்பதில் யாருடைய ஆலோசனை உனக்கு நன்மை தரும்? (சி) எந்தச் சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் நீ தொடங்கினதை முடிக்காமலிருப்பது நலமாயிருக்கும்?
9-12. (எ) ஓர் இலக்கை நீ தெரிந்தெடுத்துவிட்டாயென்றால், அதை எவ்வாறு அடைய போகிறாய் என்பதைத் திட்டமிடுவது ஏன் நல்லது (பி) பிரச்னைகளை நீ எதிர்ப்படுகையில் அவற்றை எவ்வாறு கருதவேண்டும்? (சி) விட்டு விலகிச் செல்பவனாயிருக்கும் இந்தப் பழக்கத்திற்கு உட்படாமல் இருப்பது ஏன் முக்கியம்? (லூக்கா 9:62)
13, 14. (எ) பேழையைக் கட்டுவதில் நோவாவின் விடாமுயற்சியிலிருந்து நாம் எப்படி பயனடைந்திருக்கிறோம்? (பி) விடாமுயற்சியில் அப்போஸ்தலனாகிய பவுல் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? (2 தீமோத்தேயு 4:16, 17)
15. (எ) நாமெல்லாரும் ஏன் மற்றவர்களோடு ஒத்து வாழக்கூடியவர்களாக இருக்கவேண்டும்? (பி) மற்றவர்கள் உனக்கு ஏதோ மனக்கசப்பு உண்டாக்குகையில் அவர்களை “விட்டுச் செல்ல” விரைவுபடுவதைத் தவிர்க்க எது நமக்கு உதவி செய்யும்?
16. நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் நிறைவேற்றத்தை அடைவதில் நாம் விடாமுயற்சியை வளர்த்துவருவது எப்படி உட்பட்டிருக்கிறது?