அதிகாரம் 13
இயல்புணர்வு—பிறப்பிற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஞானம்
டார்வின் இவ்வாறு எழுதினார்: “பெரும்பாலான இயல்புணர்வுகள் அவ்வளவு அற்புதமானவை ஆதலால் அவை தாமாகவே வளர்ந்ததை நம்புவது எந்தவொரு வாசகருக்கும் கடினமானதாக தோன்றும். அது அந்தளவு கடினமாக தோன்றுவதால் என்னுடைய முழு கொள்கையுமே தரைமட்டம் ஆகலாம்.” இயல்புணர்வு என்பது பதிலளிக்க முடியாத கேள்வி என அவர் நினைத்தார் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்த வரியில் அவர் இவ்வாறு கூறினார்: “உயிரின் ஆரம்பம் பற்றி நான் விளக்காதது போலவே மானசீக திறமைகளின் ஆரம்பம் பற்றியும் நான் விளக்கவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன்.”1
2 இன்றுள்ள விஞ்ஞானிகளாலும்கூட டார்வினைவிட சிறந்த முறையில் இயல்புணர்வைப் பற்றி விளக்க முடியவில்லை. பரிணாமவாதி ஒருவர் கூறுகிறார்: “திட்டவட்டமான நடத்தை முறைகளை மரபணு அமைப்பு எவ்வாறு கடத்துகிறது என்பதைப் பற்றி துளிகூட தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை. . . . இயல்புணர்வு எவ்வாறு முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் வழி வழியாக தொடர்கிறது என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொண்டால் நமக்கு எந்தப் பதிலுமே கிடைப்பதில்லை.”2
3 ஆனால் பறவைகள் பற்றிய ஒரு புத்தகம், டார்வினையோ மற்ற பரிணாமவாதிகளையோ போலில்லை. இடப்பெயர்ச்சியோடு தொடர்புடைய மிகவும் அதிசயமான இயல்புணர்வைப் பற்றி கூறுகையில் எந்தச் சங்கோஜமும் இல்லாமல் அது பின்வருமாறு கூறுகிறது: “இந்தச் செய்முறை பரிணாமத்தால்தான் தோன்றியது என்பதைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. உஷ்ணமான சுற்றுச்சூழலில் தோன்றிய பறவைகள் உணவைத் தேடி பல இடங்களுக்கு பரவலாக சென்றிருக்கலாம்.”3
4 ஆனால் இந்த எளிய பதிலால் இடப்பெயர்ச்சி வல்லுனர்களின் வீரதீர செயல்களுக்கு விளக்கமளிக்க முடியுமா? பறவைகள் உணவிற்காக அலைந்து திரிவதும் அவை கற்றுக்கொண்ட நடத்தைகளும் மரபணு குறியீட்டில் பதிவாவதில்லை, ஆதலால் அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதில்லை என்பதை விஞ்ஞானிகள் நன்றாக அறிந்துள்ளனர். இடப்பெயர்ச்சியோ இயல்புணர்வு சார்ந்ததே எனவும் “முற்கால அனுபவத்தைச் சார்ந்ததில்லை”4 எனவும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. சில உதாரணங்களை கவனியுங்கள்.
இடப்பெயர்ச்சி வல்லுனர்களின் வீரதீர செயல்கள்
5 வெகு தூரம் பிரயாணம் செய்வதில் ஆர்க்டிக் டர்ன்களே (arctic terns) கில்லாடிகள். ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே வசிக்கும் இவை கோடைகால முடிவில், தென் துருவத்திற்கு அருகிலுள்ள பனிக்கட்டிகளில் கோடைகாலத்தைக் கழிப்பதற்காக அன்டார்க்டிக்கா நோக்கி பயணம் செய்கின்றன. ஆர்க்டிக் பகுதிக்கு திரும்புவதற்கு முன்பு அவை அன்டார்க்டிக் கண்டம் முழுவதையும் வலம் வரலாம். இவ்வாறு அவற்றின் வருடாந்திர இடப்பெயர்ச்சி சுமார் 35,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்குகிறது. இரண்டு துருவப் பிரதேசங்களிலுமே ஏராளமான உணவு மலிந்துகிடப்பதால் ஒரு விஞ்ஞானி பின்வரும் கேள்வியை எழுப்புகிறார்: “இப்படிப்பட்ட உணவு மூலங்கள் இவ்வளவு தொலைவில் அமைந்திருப்பதை அவை எப்படித்தான் கண்டுபிடித்தன?”5 பரிணாமத்தால் பதிலளிக்க முடியவில்லை.
6 பிளாக்போல் வார்ப்ளரின் (blackpoll warbler) இடப்பெயர்ச்சியும் பரிணாமத்தால் பதிலளிக்க முடியாத மற்றொரு விஷயமாகும். அதன் எடை வெறும் 21 கிராம் மட்டுமே. இருந்தாலும், இலையுதிர் காலத்தில் அது அலாஸ்காவிலிருந்து கனடா அல்லது நியூ இங்கிலாந்தின் கிழக்கு கரைக்கு பயணிக்கிறது. அங்கே ஏராளமான உணவை விழுங்கி, கொழுப்பை சேர்த்துக் கொண்டு, குளிர்ந்த காற்றோட்டம் ஒன்றிற்காக காத்திருக்கிறது. அது வீசும்போது இப்பறவை அதோடு சேர்ந்துகொள்கிறது. இப்பறவை போய் சேரவேண்டிய இடமோ தென் அமெரிக்கா ஆனால் முதலில் ஆப்பிரிக்காவை நோக்கி பறக்கிறது. அட்லான்டிக் கடலுக்கு மேலே சுமார் 6,100 மீட்டர் உயரத்தில் செல்கையில் தென் அமெரிக்காவை நோக்கி வீசும் பருவக்காற்றோடு அது சேர்ந்துகொள்கிறது.
7 அந்தக் குளிர் காற்றோட்டத்திற்காக காத்திருக்க வேண்டும், அப்போதுதான் நல்ல வானிலையும் சாதகமான காற்றும் வீசும் என வார்ப்ளருக்கு எப்படி தெரியும்? வானத்தில் மேன்மேலும் உயர சென்று, குளிராக, அடர்த்தியின்றி, 50 சதவிகிதம் குறைவான ஆக்ஸிஜன் கொண்ட காற்றுள்ள உயரத்திற்கு பறக்க வேண்டும் என்று அதற்கு எப்படி தெரியும்? அதை தென் அமெரிக்காவிற்கு அலக்காக தூக்கிச் செல்லும் குறுக்குக் காற்று அந்த உயரத்தில்தான் வீசும் என்பதை அது எப்படி அறிய வந்தது? ஆப்பிரிக்காவை நோக்கி பறந்தால்தான் இந்தக் காற்றோட்டத்தின் தென்மேற்கு போக்கைப் பிடிக்க முடியும் என்பதை எவ்வாறு அறிந்தது? இவற்றில் எதைப் பற்றியுமே பிளாக்போலுக்கு தெரியாது. ஆனால், வழித்தடயங்களே இல்லாத கடலுக்கு மேல், இரவு பகலாக மூன்று அல்லது நான்கு நாட்கள் சுமார் 3,900 கிலோமீட்டர் பயணிக்கையில் அதற்கு வழிகாட்டியாக இருப்பது அதன் இயல்புணர்வு மட்டுமே.
8 கோடைகாலத்தை ஐரோப்பாவில் அனுபவிக்கும் வெள்ளை நாரைகள் (white storks) குளிர் காலத்தை தென் ஆப்பிரிக்காவில் கழிக்க 12,800 கிலோமீட்டர் பயணம் செய்கின்றன. கோல்டன் பிளோவர் (golden plover) என்ற பறவை, ஆர்க்டிக்கிலுள்ள தூந்திர பகுதியிலிருந்து அர்ஜன்டினாவிலுள்ள பாம்பாஸ் பகுதிக்கு பறக்கிறது. சில சான்டுபைப்பர்களோ (sandpipers) பாம்பாஸ் பகுதியையும் தாண்டி 1,600 கிலோமீட்டர் பயணம் செய்து தென் அமெரிக்காவின் முனைக்கே சென்றுவிடுகின்றன. பிரிஸில்-தைடு கர்லூஸ் (Bristle-thighed curlews) என்ற பறவை அலாஸ்காவிலிருந்து, திறந்தவெளி சமுத்திரத்தின் மேல் ஏறக்குறைய 10,000 கிலோமீட்டர் பறந்து சென்று தஹிட்டி மற்றும் பிற தீவுகளை அடைகிறது. இதோடு ஒப்பிட, சுமார் 1,000 கிலோமீட்டர் பறந்து மெக்ஸிகோ வளைகுடாவைக் கடக்கும் செங்கழுத்து ஹம்மிங் பறவையின் (ruby-throated hummingbird) இடப்பெயர்ச்சி ஒன்றுமே இல்லைதான். ஆனால் அதன் எடை வெறும் 3 கிராம் மட்டுமே என்பதைக் கருதுகையில் இதுவும்கூட மலைக்க வைப்பதுதான். இந்தப் பயணத்தின்போது அதன் சின்னஞ்சிறிய இறக்கைகளை நொடிக்கு 75 தடவை என்ற விகிதத்தில் 25 மணிநேரத்திற்கு தொடர்ந்து அடிக்கிறது. அதாவது, நிறுத்தாமல் 60 லட்சம் தடவைக்கும் மேல் தன் இறக்கைகளை அடிக்கிறது!
9 அநேக சமயங்களில், பெற்றோரின் உதவியில்லாமல் இளம் பறவைகளே முதல் முறையாக இடப்பெயர்ச்சி செய்கின்றன. நியூ ஜீலாந்தைச் சேர்ந்த நீண்ட வால் குக்கூவின் (long-tailed cuckoos) குஞ்சுகள் 6,400 கிலோமீட்டரைக் கடந்து பசிபிக் தீவுகளுக்கு பறந்து, ஏற்கெனவே அங்கு சென்றுள்ள அவற்றின் பெற்றோரோடு சேர்ந்துகொள்கின்றன. மான்க்ஸ் ஷியர்வாட்டர்ஸ் (manx shearwaters) அவற்றின் குஞ்சுகளை விட்டுவிட்டு, வேல்ஸிலிருந்து பிரேஸில் வந்து சேர்கின்றன; குஞ்சுகளால் பறக்க முடிந்ததும் அவை பின்தொடர்கின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு சராசரியாக 736 கிலோமீட்டர் என்ற கணக்கில் 16 நாட்களில் இந்தத் தூரத்தைக் கடந்தது. மான்க்ஸ் ஷியர்வாட்டர் ஒன்று, அதன் இயல்பான இடப்பெயர்ச்சி தடத்திலிருந்து வெகு தூரத்திற்கு அதாவது வேல்ஸிலிருந்து போஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் பன்னிரண்டரை நாட்களில், 5,100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேல்ஸிலிருக்கும் அதன் சொந்த கூட்டிற்கு திரும்பிச் சென்றது. வீடு திரும்பும் மாடப்புறாக்களை அவற்றின் கூட்டிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவு வரை எந்தத் திசையில் எடுத்துச் சென்றாலும் ஒரே நாளில் திரும்பிவிடுகின்றன.
10 பறக்க முடியாத ஆனால் நடக்கவும் நீந்தவும் முடிந்த பறவைகள் பற்றி கடைசியாக ஓர் உதாரணம். அடிலெய் பென்குவின்களைப் (Adélie penguins) பற்றி யோசித்துப் பாருங்கள். அவற்றின் வீடுகளிலிருந்து 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அவற்றை எடுத்துச் சென்று விட்டுவந்தால், அவை வெகு சீக்கிரத்தில் சுதாரித்துக்கொண்டு நேர் கோட்டில் திரும்பி நடக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் நேராக அவற்றின் வாழிடங்களுக்கு போகாமல், திறந்தவெளி கடலையும் உணவையும் தேடி செல்கின்றன. கடலிலிருந்து கடைசியாக அவற்றின் வீடுகளுக்கு திரும்புகின்றன. அவை, ஏறக்குறைய கும்மிருட்டாக உள்ள பனிக்காலம் முழுவதையும் கடலிலேயே செலவிடுகின்றன. ஆனாலும் இருட்டான பனிக்காலத்தின்போது அவை எங்கே இருக்கின்றன, எங்கே செல்ல வேண்டும் என்பதை அந்தப் பென்குவின்கள் எவ்வாறு அறிகின்றன? யாருக்குமே தெரியாது.
11 இந்தக் கடற்பிரயாண சாகசங்களை பறவைகள் எவ்வாறு நிகழ்த்துகின்றன? சூரியனும் நட்சத்திரங்களும் அவற்றின் ‘வழிகாட்டிகளாய்’ இருக்கலாம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த விண்கோள்களின் அசைவுகளை ஈடுகட்டும் தன்னகத்தே அமைந்த கடிகாரங்கள் அவற்றிற்கு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்தால் என்ன செய்வது? அந்தச் சமயங்களில் கைக்கொடுப்பதற்கு சில பறவைகளிலாவது தன்னகத்தே அமைந்த திசைக்காட்டிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கு திசைக்காட்டியின் வழிநடத்துதல் மட்டுமே போதாது. புறப்படும் இடமும் போய் சேரும் இடமும் குறிக்கப்பட்ட ஒரு “மேப்” அவற்றின் தலைக்குள் இருக்க வேண்டும். அந்த மேப்பில் அது செல்ல வேண்டிய வழித்தடமும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அது நேர் கோட்டில் செல்வதில்லை. ஆனால், மேப்பில் அவை எந்த இடத்தில் உள்ளன என்பதை அறியாவிட்டால் இவற்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை! மான்க்ஸ் ஷியர்வாட்டர் போஸ்டனில் விடுவிக்கப்பட்டபோது அது எங்கே இருக்கிறது என்பதை அறிந்தால்தான் வேல்ஸ் எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். வீடு திரும்பும் புறாக்கள் அவற்றின் கூடுகளுக்கு திரும்புவதற்கு முன் எங்கே கொண்டு விடுவிக்கப்பட்டன என்பதை அவை அறிந்திருக்க வேண்டும்.
12 பறவைகள் பெருமளவு இடப்பெயர்ச்சி செய்வது பற்றி மத்திப காலங்களிலும்கூட அநேகர் சந்தேகத்தைக் கிளப்பினர். ஆனால் அதைப் பற்றி பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே பைபிள் பின்வருமாறு கூறியது: “ஆகாயத்திலுள்ள நாரை இடப்பெயர்ச்சிக்கான தன் காலத்தை அறியும்; புறாவும், கொக்கும், மரங்கொத்தியும் அவை திரும்பி வருவதற்கான சமயத்தை அறியும்.” இன்று நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருந்தாலும் இன்னும் அநேக காரியங்கள் புரியாப் புதிராகவே உள்ளன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ பைபிள் சொல்வதுதான் உண்மை: “கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய உணர்வை அவர் மனிதருக்கு கொடுத்திருக்கிறார், ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான கடவுளுடைய செயலைப் புரிந்துகொள்ளும் திறமையைக் கொடுக்கவில்லை.”—எரேமியா 8:7; பிரசங்கி 3:11, த நியூ இங்கிலிஷ் பைபிள்.
மற்ற “மாலுமிகள்”
13 அலாஸ்காவிலுள்ள கரிபூ என்ற மான்வகை, குளிர்காலத்தின்போது தெற்கு நோக்கி சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து செல்கிறது. ஆர்க்டிக் பெருங்கடலிலுள்ள அநேக திமிங்கிலங்கள் 9,600 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பிரயாணம் செய்து திரும்புகின்றன. கடல்நாய்கள் 4,800 கிலோமீட்டர் இடைவெளி கொண்ட பிரிபிலாஃப் தீவுகளுக்கும் தென் கலிபோர்னியாவிற்கும் இடையே பயணம் செய்கின்றன. பச்சைக் கடலாமைகள் பிரேஸில் கடற்கரையிலிருந்து அட்லான்டிக் பெருங்கடலுக்குள் 2,250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய அசென்ஷன் தீவு வரை சென்று திரும்புகின்றன. சில நண்டுகளோ கடலின் தரையில் 240 கிலோமீட்டர் பயணிக்கின்றன. சால்மன் மீன்கள் அவை குஞ்சு பொரித்த ஆறுகளைவிட்டு கடலில் சில வருடங்கள் உலா வருகின்றன. பின்னர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணப்பட்டு “பிறந்த வீடான” அதே ஆறுகளுக்கு வந்து சேர்கின்றன. அட்லான்டிக் பெருங்கடலிலுள்ள சார்கோஸா கடலில் பிறந்த இளம் விலாங்கு மீன்கள், ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் உள்ள நன்னீர் ஆறுகளில் அவற்றின் வாழ்நாளின் பெரும்பகுதியை கழிக்கின்றன. ஆனால் முட்டையிடுவதற்காக சார்கோஸா கடலுக்கே திரும்புகின்றன.
14 மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள் இலையுதிர் காலத்தில் கனடாவைவிட்டு பறந்து கலிபோர்னியா அல்லது மெக்ஸிகோவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. அதற்காக சில சமயம் 3,200 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பறக்கின்றன, அதில் ஒரு வண்ணத்துப் பூச்சி ஒரே நாளில் 130 கிலோமீட்டர் பறந்தது. அவை பாதுகாப்பான மரங்களில் வந்தமர்கின்றன; ஒவ்வொரு வருடமும் அதே தோப்பில், அதே மரங்களுக்குக்கூட வந்து சேர்கின்றன. ஆனால் அதே வண்ணத்துப் பூச்சிகள் அல்ல என்பதுதான் ஆச்சரியம்! அவை வசந்த காலத்தில் திரும்பி வரும்போது மில்க்வீட் (milkweed) செடிகளில் முட்டையிடுகின்றன. இவ்வாறு ‘பிறந்த’ புதிய வண்ணத்துப் பூச்சிகள் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடருகின்றன; அடுத்த இலையுதிர் காலத்தின்போது அவற்றின் பெற்றோர் சென்ற அதே பாதையில் தெற்கு நோக்கி பயணிக்கின்றன. சுமார் 3,200 கிலோமீட்டர் பறந்து சென்று அதே தோப்பின் மரங்களில் மறுபடியும் வந்தமர்கின்றன. மகரந்தச் சேர்க்கையின் கதை (The Story of Pollination) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இலையுதிர் காலத்தில் தெற்கு நோக்கி வரும் வண்ணத்துப் பூச்சிகள் இந்தக் குளிர்கால ‘உறைவிடங்களை’ முன்பின் பார்த்திராத இளம் சந்ததியாகும். அவை எவ்வாறு இந்த இடங்களைக் கண்டுபிடிக்கின்றன? நமக்கு தண்ணீர்காட்டும் இயற்கையின் புரியாப் புதிர்களில் இதுவும் ஒன்றாகும்.”6
15 இயல்புணர்வு ஞானம் வெறுமனே இடப்பெயர்ச்சிக்கு மட்டுமே உதவுவது கிடையாது. விரைவான ஒரு கண்ணோட்டம் இதை நமக்கு புரியவைக்கும்.
லட்சக்கணக்கான குருட்டு கறையான்கள் அவற்றின் திறமைகளை ஒன்று சேர்த்து, சிக்கல் வாய்ந்த புற்றுகளைக் கட்டி, அவற்றைக் குளிரூட்ட முடிவது எப்படி? இயல்புணர்வு.
புதிய யூக்கா செடிகளும் புதிய அந்துப்பூச்சிகளும் உருவாவதற்கு யூக்கா பூவில் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழவேண்டும். அதில் உட்பட்டுள்ள பல படிகளை பிரோனுபா அந்துப்பூச்சி (pronuba moth) எவ்வாறு அறிந்தது? இயல்புணர்வு.
ஒரு குறிப்பிட்ட சிலந்தி, நீருக்கடியில் அதன் ‘டைவ் அடிக்கும் பெல்லுக்குள்’ வசிக்கிறது. அதற்குள் ஆக்ஸிஜன் தீர்ந்துபோன பிறகு, நீருக்கடியில் உள்ள அந்த பெல்லில் ஒரு ஓட்டைப் போட்டு, நாள்பட்ட அந்தக் காற்றை விடுவித்துவிட்டு, அந்த ஓட்டையை அடைத்து, மறுபடியும் சுத்தமான காற்றை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என அதற்கு எப்படி தெரியும்? இயல்புணர்வு.
மைமோசா வளைய வண்டு (mimosa girdler beetle), மைமோசா மரக் கிளையின் பட்டைக்கு கீழே அதன் முட்டைகளை இடுகிறது. பசு மரக் கிளையில் அந்த முட்டைகளைப் பொரிக்க முடியாதாகையால் அது அடிமரத்தை நோக்கி சுமார் 30 சென்டிமீட்டர் நகர்ந்து, சுற்றிலும் உள்ள பட்டையை வெட்டிவிடுகிறது. அப்போதுதான் அந்தக் கிளை காய்ந்துவிடும் அல்லவா? இவை எல்லாம் அதற்கு எப்படி தெரிய வந்தன? இயல்புணர்வு.
மொச்சைக் கொட்டை அளவு மட்டுமே உள்ள கங்காரு குட்டி குருடாகவும் வளர்ச்சியற்ற நிலையிலும் பிறக்கிறது. அது உயிர்வாழ வேண்டுமென்றால் தன் தாயின் மென்மயிரை பிடித்துக்கொண்டு, தானாகவே போராடி, மேலே ஏறி, அவளுடைய வயிற்றுப் பகுதியிலுள்ள மதலைப்பைக்குள் (pouch) சென்று, அவளுடைய முலைகளில் ஒன்றைக் கவ்விக்கொள்ள வேண்டும் என அதற்கு எப்படி தெரியும்? இயல்புணர்வு.
நடனமாடும் ஒரு தேனீ, தேன் எங்கே உள்ளது, எவ்வளவு உள்ளது, எவ்வளவு தூரத்தில் உள்ளது, எந்தத் திசையில் உள்ளது, என்ன வகையான பூவில் உள்ளது என்பதை எல்லாம் மற்ற தேனீக்களுக்கு எப்படி தெரிவிக்கிறது? இயல்புணர்வு.
16 இப்படிப்பட்ட கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால் ஒரு புத்தகத்தையே நிரப்பிவிடலாம். ஆனாலும் இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: “அவை இயல்புணர்வு ஞானமிக்கவை.” (நீதிமொழிகள் 30:24, NW) “இப்பேர்ப்பட்ட சிக்கலான இயல்புணர்வு ஞானம் எவ்வாறு ஆரம்பித்து, அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது?”7 என ஓர் ஆராய்ச்சியாளர் ஆச்சரியப்படுகிறார். மனிதர்களால் இதை விளக்கவே முடியாது. பரிணாமத்தாலும் அது முடியாது. ஆனால் அப்படிப்பட்ட அறிவுத்திறமைக்கு புத்திக்கூர்மையான ஆரம்பம் அவசியம். அப்பேர்ப்பட்ட ஞானத்திற்கு ஞானத்தின் பிறப்பிடம் தேவை. புத்திக்கூர்மையுள்ள, ஞானமான ஒரு சிருஷ்டிகர் தேவை என்பதை இவையெல்லாம் நிரூபிக்கவில்லையா?
17 ஆனாலும் பரிணாமத்தை நம்புகிறவர்களில் அநேகர், சிருஷ்டிப்பிற்கான இப்படிப்பட்ட அத்தாட்சிகளைக் கண்ணை மூடிக்கொண்டு உதறித் தள்ளிவிடுகின்றனர். இதுபோன்ற காரியங்கள் அறிவியல்பூர்வ ஆராய்ச்சிக்கு ஏற்றவை அல்ல என்று கூறிவிடுகின்றனர். ஆனால் இந்தக் குறுகலான மனப்பான்மை, அத்தாட்சியை ஆராய்ந்து பார்ப்பதிலிருந்து உங்களைத் தடைசெய்ய அனுமதியாதீர்கள். அடுத்த அதிகாரத்தில் இன்னும் ஏராளமான அத்தாட்சிகள் தொடர்கின்றன.
[கேள்விகள்]
1. இயல்புணர்வு பற்றி டார்வின் என்ன கூறினார்?
2. இன்றுள்ள சில விஞ்ஞானிகள் இயல்புணர்வை எவ்வாறு நோக்குகின்றனர்?
3, 4. இடப்பெயர்ச்சி செய்வதற்கான இயல்புணர்வு எவ்வாறு ஆரம்பித்ததென ஒரு புத்தகம் கூறுகிறது, அந்த விளக்கம் ஏன் பொருத்தமாக இல்லை?
5. ஆர்க்டிக் டர்ன்களே வெகு தூரம் இடப்பெயர்ச்சி செய்யும் வீரர்கள் என்பதை எது காட்டுகிறது, ஒரு விஞ்ஞானி என்ன கேள்வியை எழுப்புகிறார்?
6, 7. பிளாக்போல் வார்ப்ளரின் இடப்பெயர்ச்சியை வினோதமாக தோன்றச் செய்வது எது, அதன் செயல் எந்தளவு பிரமாண்டமானது என்பதை உணர என்ன கேள்விகள் நமக்கு உதவுகின்றன?
8. இடப்பெயர்ச்சி பற்றி கூடுதலான என்ன வீரதீர செயல்கள் இங்கே கூறப்பட்டுள்ளன?
9. (அ) இடப்பெயர்ச்சி செய்யும் திறமைகள் கற்றுக்கொள்ளப்படுவதில்லை மாறாக பிறப்பிற்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் என்பதை எது காட்டுகிறது? (ஆ) ஒரு மான்க்ஸ் ஷியர்வாட்டர் மற்றும் வீடு திரும்பும் மாடப்புறாக்கள், கைத்தேர்ந்த கடல்வழி பிரயாணிகள் என்பதை என்ன ஆராய்ச்சிகள் காட்டுகின்றன?
10. எந்த ஆராய்ச்சி, அடிலெய் பென்குவின்களின் கடல் பிரயாண திறமைகளைக் காட்டியது?
11. இவ்வளவு அருமையான கடற்பயண சாகசங்களை நிகழ்த்த பறவைகளுக்கு எது அவசியம்?
12. (அ) இடப்பெயர்ச்சி பற்றி எரேமியா என்ன சொன்னார், எப்போது சொன்னார், அது ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) இடப்பெயர்ச்சி பற்றிய முழு விவரங்களையும் நம்மால் ஏன் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம்?
13. பறவைகளைத் தவிர மற்ற எந்த மிருகங்களும் இடப்பெயர்ச்சி செய்கின்றன?
14. மோனார்க் வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்ச்சி பற்றிய எது வியப்பூட்டுகிறது, எந்தப் புரியாப் புதிருக்கு விளக்கமில்லை?
15. மிருகங்களின் ஞானம் பற்றிய பல கேள்விகளுக்கு எந்த ஒரே வார்த்தை பதிலளிக்கிறது?
16. மிருகங்களின் செயல்பாடுகளுக்கு காரணமான ஞானத்திற்கு என்ன தேவைப்படுகிறது?
17. அநேக பரிணாமவாதிகளின் எந்த நியாயவிவாதத்தை தவிர்ப்பது ஞானமானது?
[பக்கம் 160-ன் சிறு குறிப்பு]
டார்வின்: “மானசீக திறமைகளின் ஆரம்பம் பற்றி . . . நான் விளக்கவில்லை”
[பக்கம் 160-ன் சிறு குறிப்பு]
இயல்புணர்வு எவ்வாறு ஆரம்பித்து, வழி வழியாக தொடர்கிறது என்பதற்கு “நமக்கு எந்தப் பதிலுமே கிடைப்பதில்லை”
[பக்கம் 167-ன் சிறு குறிப்பு]
“அவை இயல்புணர்வு ஞானமிக்கவை”
[பக்கம் 164, 165-ன் பெட்டி/படங்கள்]
கூடு கட்டுதலும் இயல்புணர்வும்
மரபணு அமைப்பு பற்றி அறிவியல் எழுத்தாளர் ஜீ. ஆர். டைலர் இவ்வாறு கூறினார்: “கூடு கட்டுவதில் உட்பட்டுள்ள படிப்படியான செயல்கள் போன்ற குறிப்பிட்ட ஒரு வகை நடத்தையை அது எவ்வாறு கடத்துகிறது என்பதைப் பற்றி துளிகூட புரிந்துகொள்ள முடியவில்லை.”a இருந்தாலும், கூடு கட்டுவதற்கான இயல்புணர்வு ஞானம் கடத்தப்படுகிறதே ஒழிய போதிக்கப்படுகிறதில்லை. சில உதாரணங்களை சிந்தித்துப் பாருங்களேன்.
ஹார்ன்பில்கள் (Hornbills) என்பவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பறவைகள். உள்ளே காலியாக இருக்கும் ஒரு மரத்திலுள்ள பொந்தின் ஓரங்களைப் பெண் பறவை களிமண்ணால் அடைத்து, தான் உள்ளே நுழைவதற்கு போதுமான அளவு மட்டுமே திறப்பை விட்டுவைக்கிறாள். பிறகு ஆண் இன்னும் அதிக மண் கொண்டுவருகிறான். உள்ளே இருக்கும் பெண் அந்தப் பொந்தை ஏறக்குறைய முழுமையாக மூடிவிட்டு ஒரு சிறிய துவாரம் மட்டுமே விட்டுவைக்கிறாள். ஆண் அந்தத் துவாரம் வழியாக பெண்ணுக்கும் பின்னர் பொரித்து வரும் குஞ்சுகளுக்கும் உணவளிக்கிறான். எல்லாருக்கும் தேவையான உணவை அவனால் கொண்டுவர முடியாத நிலை ஏற்படும்போது கூட்டை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகிறாள். இப்போது உடைந்த அந்த இடத்தை உள்ளே இருக்கும் குஞ்சுகளே பழுது பார்க்கின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து அவற்றிற்கு தேவையான உணவைக் கொண்டு வருகின்றன. பல வாரங்கள் கழித்து, குஞ்சுகள் அந்தச் சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறுகின்றன. அதுமட்டுமா, பெண் பறவை பறக்காமல் கூட்டிற்குள் அடைபட்டு கிடக்கும் சமயத்தில் தன் இறகுகளை எல்லாம் உதிர்த்துவிட்டு புதிய இறகுகளை வளர்ப்பது, அது நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியைக் கொடுக்கவில்லையா?
ஸ்விஃப்ட்ஸ் (Swifts). இதில் ஒருவகை, உமிழ்நீரை உபயோகித்து கூடு கட்டுகிறது. முட்டையிடும் பருவம் ஆரம்பிக்கும் முன்பு அப்பறவையின் உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கி, குழகுழப்பான சளிபோன்ற ஒரு திரவத்தைச் சுரக்கின்றன. அது தோன்றும்போதே அதை வைத்து என்ன செய்யவேண்டும் என்ற இயல்புணர்வும் தோன்றுகிறது. அதை ஒரு பாறை முகப்பில் பூசுகிறது; அது கெட்டியான பிறகு கூடுதலான அடுக்குகளை அதன் மேல் சேர்க்கிறது. இவ்வாறு கிண்ணம் வடிவான கூடு ரெடி. ஸ்விஃப்ட்டில் மற்றொரு வகை, தேக்கரண்டி அளவிலான கூடுகளைக் கட்டி, அவற்றைப் பனை மர இலைகளில் ஒட்ட வைத்து, பின்னர் முட்டைகளைக் அக்கூட்டிற்குள் ஒட்டவைக்கிறது.
எம்பெரர் பென்குவின்கள் (Emperor Penguins) அவற்றின் கூடுகளைத் தூக்கிக்கொண்டே செல்கின்றன. அன்டார்க்டிகாவின் பனிக்காலத்தின்போது பெண் பறவை ஒரு முட்டையிட்ட பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ‘ஹாயாக’ மீன்பிடிக்க சென்றுவிடுகிறாள். ஆண் பறவை அந்த முட்டையை, ஏராளமான இரத்த நாளங்கள் நிறைந்த தன் கால்களுக்கு இடையில் வைத்துக்கொள்கிறான். பிறகு தன் அடிவயிற்றிலிருந்து தொங்கும் அடைகாக்கும் பையினால் அந்த முட்டையை மூடுகிறான். தாயானவள், அப்பாவையும் பிள்ளையையும் மறக்கவில்லை. முட்டை பொரித்த பிறகு சீக்கிரத்திலேயே அவள் திரும்புகிறாள். அவள் வயிறுமுட்ட சாப்பிட்டு வந்திருக்கும் உணவை தன் குழந்தைக்காக திரும்பவும் வெளியே கொண்டுவருகிறாள். பிறகு ஆண் மீன்பிடிக்க சென்று விடுகிறான். அந்தச் சமயம், தாய் தன் குஞ்சை கால்களுக்கு நடுவே வைத்துக்கொண்டு, அதன் மீது தன் அடைகாக்கும் பையைத் தொங்கவிடுகிறாள்.
தூக்கணாங்குருவிகள் (Weaverbirds). ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவை, புற்களையும் மற்ற நார்களையும் உபயோகித்து, தொங்கும் கூடுகளைக் கட்டுகின்றன. இயல்புணர்வின் காரணமாக அவை விதவிதமான பின்னல் வடிவங்களையும் பல்வேறு வகையான முடிச்சுகளையும் உபயோகிக்கின்றன. கூடிவாழும் தூக்கணாங்குருவிகள் அப்பார்ட்மென்ட் வீடுகள் போன்றவற்றைக் கட்டுகின்றன. உறுதியான மரக்கிளைகளில் சுமார் நாலரை மீட்டர் விட்டமுள்ள கூரையை அவை கட்டுகின்றன. இதற்கு கீழே அநேக ஜோடிகள் அவற்றின் கூடுகளை சேர்த்துக்கொள்கின்றன. இவ்வாறு ஒரே கூரையில் நூற்றுக்கும் அதிகமான கூடுகள் சேர்க்கப்படும் வரை புதிய கூடுகள் சேர்ந்துகொண்டே இருக்கும்.
டெய்லர் பறவை (Tailorbird) தெற்கு ஆசியாவைச் சேர்ந்தது. பஞ்சு அல்லது மரப்பட்டை நார்கள் மற்றும் சிலந்தி வலையை உபயோகித்து இது நூல் நூற்கிறது. சிறிய துண்டுகளாக இருந்தால் அவற்றை ஒன்றாக இணைத்து பெரிய நூலாக்குகிறது. ஒரு பெரிய இலையின் இரண்டு ஓரங்களிலும் அதன் அலகினால் ஓட்டை போடுகிறது. பிறகு, அதன் அலகை ஊசிபோல உபயோகித்து, நூலின் துணையால் அந்த இலையின் இரண்டு ஓரங்களையும் ஒன்றாக இணைக்கிறது. நாம் ஷூ லேஸைக் கட்டுவோம் அல்லவா அதுபோலத்தான். நூலின் நுனிக்கு வந்துவிட்டால் என்ன செய்யும் தெரியுமா? அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக அதை முடிச்சு போட்டு வைக்கிறது அல்லது மற்றொரு துண்டை அதோடு இணைத்து தொடர்ந்து தைக்கிறது. இவ்வாறு டெய்லர் பறவை அந்தப் பெரிய இலையை ஒரு கிண்ணம் போல செய்து அதற்குள் தன் கூட்டைக் கட்டுகிறது.
பென்டுலைன் டிட் (Penduline Tit), மிருதுவான தாவர பொருட்களையும் புற்களையும் உபயோகித்து கட்டுவதால் அதன் தொங்கும் கூடுகள் ஒட்டுக்கம்பளம் போலவே ஆகின்றன. அக்கூட்டின் அடிப்படை அமைப்பானது, நீளமான புல் நார்களை குறுக்கும் நெடுக்குமாக பின்னுவதன் மூலம் உருவாகிறது. நார்களின் நுனிகளைத் தன் அலகினால் அந்தப் பின்னல் அமைப்பிற்குள் நுழைக்கிறது. பிறகு மிருதுவான பொருட்களின் சிறிய நார்களையும் அந்த பின்னலுக்குள் தள்ளுகிறது. இந்த முறையானது, கீழை நாடுகளிலுள்ள கம்பளம் பின்னுபவர்களின் உத்திபோலவே உள்ளது. இந்தக் கூடுகள் அவ்வளவு உறுதியாகவும் மிருதுவாகவும் இருப்பதால் அவற்றை பணப்பைகளாக அல்லது சிறு பிள்ளைகளின் காலணிகளாகக்கூட உபயோகித்துள்ளனர்.
ஹார்ன்டு கூட் (Horned Coot) என்ற பறவை தன் கூட்டைப் பொதுவாக சிறிய, சமதளமான தீவுகளில்தான் கட்டுகிறது. ஆனால் அது குடியிருக்கும் இடத்திலோ இப்படிப்பட்ட தீவுகளைக் காண்பதே அரிது. அதனால் என்ன, ஹார்ன்டு கூட் தனக்கு தேவையான தீவைத் தானே உண்டுபண்ணிக் கொள்கிறது! தண்ணீரில் பொருத்தமான இடத்தை முதலில் தேடுகிறது, பிறகு அந்த இடத்திற்கு கற்களைத் தன் அலகால் எடுத்துக்கொண்டு போகிறது. 60 முதல் 90 சென்டிமீட்டர் ஆழமுள்ள தண்ணீரில் கற்களைக் குவித்து ஒரு தீவை உண்டுபண்ணுகிறது. அதன் அடித்தளம் சுமார் நான்கு மீட்டர் விட்டம் இருக்கக்கூடும். அந்தக் கற்களின் எடை எவ்வளவு தெரியுமா? ஒரு டன்னுக்கும் அதிகமாக இருக்கலாம்! பிறகு, அதன் பெரிய கூட்டைக் கட்ட தேவையான தாவரங்களை அந்தக் கல் தீவுக்கு கொண்டுவருகிறது.
[பக்கம் 161-ன் படங்கள்]
ஆர்க்டிக் டர்ன் பறவை ஒவ்வொரு வருடமும் 35,000 கிலோமீட்டர் தூரம் இடப்பெயர்ச்சி செய்கிறது
பட்டாணி அளவே மூளை உடைய இந்த வார்ப்ளர், வானிலை பற்றியும் கடல்வழி பயணம் பற்றியும் இவ்வளவு அதிகத்தை எப்படி அறிந்தது?
[பக்கம் 162-ன் படங்கள்]
ஹம்மிங் பறவை இடப்பெயர்ச்சி செய்கையில் ஒரு நொடிக்கு 75 தடவை என்ற விகிதத்தில் 25 மணிநேரத்திற்கு அதன் இறக்கைகளை அடிக்கிறது
இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் தலைக்குள் ஒரு ‘மேப்போடு’ பிறக்கின்றன; அதன் உதவியால் அவை எங்கே உள்ளன எங்கே செல்கின்றன என்று அறிகின்றன
[பக்கம் 163-ன் படம்]
பென்குவின்கள் ஏறக்குறைய கும்மிருட்டாக உள்ள கடலில் பல மாதங்கள் செலவு செய்தாலும் அவற்றின் வாழிடங்களுக்கு தவறாமல் போய் சேர்ந்துவிடுகின்றன
[பக்கம் 166-ன் படங்கள்]
மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள், தெற்கே 3,200 கிலோமீட்டர் பிரயாணம் செய்த பிறகு அவற்றின் குளிர்கால வாசஸ்தலங்களில் தங்குகின்றன