அதிகாரம் 1
வெளிப்படுத்துதல்—அதன் சந்தோஷகரமான உச்சக்கட்டம்!
1. நாம் சந்தோஷமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்—பைபிளின் இந்தக் கிளர்ச்சியூட்டும் புத்தகம் தெய்வீகப் பதிவை ஒரு சந்தோஷகரமான உச்சக்கட்டத்திற்குக் கொண்டுவருகிறது. ஏன் நாம் “சந்தோஷகரமான” என்று சொல்கிறோம்? ஆம், பைபிளின் ஆசிரியர் ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ விவரிக்கப்படுகிறார். தம்மில் அன்புகூருகிறவர்களிடம் “மகிமையான சுவிசேஷத்தை” இவர் ஒப்படைக்கிறார். நாமுங்கூட சந்தோஷமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே வெளிப்படுத்துதல் புத்தகம் ஆரம்பிக்கையில் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: ‘இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கிறவன் சந்தோஷமுள்ளவன்.’ அதனுடைய கடைசி அதிகாரம் இப்படியாக நமக்கு சொல்லுகிறது: “இந்தப் புஸ்தகச் சுருளிலுள்ள, தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் . . . சந்தோஷமுள்ளவன்.”—1 தீமோத்தேயு 1:11, NW; வெளிப்படுத்துதல் 1:3, NW; 22:7, NW.
2. வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மூலமாக சந்தோஷத்தைக் கண்டடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
2 வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மூலமாக நாம் எப்படி சந்தோஷத்தைக் கண்டடைகிறோம்? அதில் உள்ள உயிர்ப்புள்ள அடையாளங்களுடைய அல்லது அறிகுறிகளுடைய பொருளைக் கண்டாராய்ந்து அதற்கிணங்க நடப்பதன் மூலமே நாம் அப்படிச் செய்கிறோம். கடவுளும் இயேசு கிறிஸ்துவும் தற்போதுள்ள பொல்லாத ஒழுங்குமுறையின்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி, அதை “இனி மரணமுமில்”லாமற்போகும் ‘ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும்’ கொண்ட ஒழுங்குமுறையாக மாற்றியமைக்கும்போது, கொந்தளிக்கும் மனிதவர்க்க சரித்திரம் விரைவில் அழிவுக்குரிய உச்சக்கட்டத்தை அடையும். (வெளிப்படுத்துதல் 21:1, 4, NW) அப்படிப்பட்ட ஒரு புதிய உலகில் மெய் சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கு நாம் எல்லோருமே விரும்புவோம் அல்லவா? நாம் கடவுளுடைய வார்த்தையை, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள இந்தக் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனத்தோடு சேர்த்து படிப்பதன் மூலம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவோமானால், அதில் நாமும் வாழக்கூடும்.
திருவெளிப்பாடு—அது என்ன?
3. அநேகர், திருவெளிப்பாடும் அர்மகெதோனும் எதை அர்த்தப்படுத்துவதாக நினைக்கிறார்கள்?
3 வெளிப்படுத்துதல் (ரெவெலேஷன், ஆங்கிலம்) புத்தகம் திருவெளிப்பாடு என்றும் அழைக்கப்படுகிறதல்லவா? இதேனெனில் “ரெவெலேஷன்” என்பது கிரேக்க மூல வார்த்தையாகிய அபோகலிப்சிஸ் (a·po·kaʹly·psis) என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். அநேகர் திருவெளிப்பாடு என்பதை அணு ஆயுத யுத்தத்தின் மூலம் உலகம் அழிக்கப்படுவதோடு இணைத்துப் பேசுகிறார்கள். அ.ஐ.மா.-வில் அதிக அளவில் அணுயுத்த தளவாடங்கள் உற்பத்திச் செய்யப்படும் டெக்ஸஸ் என்ற ஒரு நகரத்தில் வாழும் மதப்பற்றுமிக்க ஆட்கள், “நாங்களே முதலில் அழிந்துவிடுவோம்,” என்று ஒருகாலத்தில் சொல்லிவந்தனர். அப்பகுதியிலுள்ள மத குருமார்கள் “அர்மகெதோன் நிச்சயமாக நிகழவிருக்கிறதோடு, வெகு சமீபத்திலிருக்கிறது என்பதிலும், நன்மை, தீமை சக்திகளுக்கிடையே, கடவுளுக்கும் சாத்தானுக்குமிடையே நடக்கப்போகும் கடைசி யுத்தமானது ஓர் அணு ஆயுதப் பேரழிவாக இருக்கும் என்பதிலும் நிச்சயமாயிருந்”துவந்ததாக அறிவிக்கப்பட்டது.a
4. உண்மையில் “திருவெளிப்பாடு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, மேலும் பைபிளின் கடைசி புத்தகம் “வெளிப்படுத்தின விசேஷம்” என்று ஏன் பொருத்தமாகப் பெயரளிக்கப்பட்டிருக்கிறது?
4 ஆனால் உண்மையில் திருவெளிப்பாடு என்றால் என்ன? “அண்மையில் நிகழவிருக்கிற ஒரு பூகோள பேரழிவு” போன்ற பதங்களைப் பயன்படுத்தி அகராதிகள் அதை விளக்கியபோதிலும், கிரேக்கில் உள்ள அபோகலிப்சிஸ் என்பது அடிப்படையில் “திறப்பது” அல்லது “வெளிப்படுத்துவது” என்று பொருள்படுகிறது. எனவே பைபிளில் உள்ள கடைசிப் புத்தகமானது “வெளிப்படுத்தின விசேஷம்” என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் அழிவுபற்றிய ஏதோ ஒரு சாவுக்குரிய செய்தியை நாம் காணாமல், தெய்வீகச் சத்தியங்கள் வெளிப்படுத்தப்படுவதையே காண்கிறோம். இது, ஒரு பிரகாசமான நம்பிக்கையையும் அசைக்கமுடியாத விசுவாசத்தையும் நம்முடைய உள்ளத்தில் வளர்க்க வேண்டும்.
5. (அ) அர்மகெதோனில் யார் அழிக்கப்படுவர், யார் தப்பிப்பிழைப்பர்? (ஆ) அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கு என்ன மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது?
5 பைபிளின் கடைசிப் புத்தகத்தில் அர்மகெதோன், “சர்வவல்ல கடவுளுடைய மகாநாளின் யுத்த”மாக விவரிக்கப்பட்டுள்ளது உண்மையே. (வெளிப்படுத்துதல் 16:14, 16, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆனால் அணு ஆயுதப் பேரழிவிலிருந்து இது வெகு வித்தியாசப்பட்டதாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒரு பேரழிவானது அநேகமாக பூமியில் உள்ள எல்லா உயிர்களும் நிர்மூலமாக்கப்படுவதையே குறிக்கும். இதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தை, அவரை எதிர்க்கும் பொல்லாத ஆட்கள் மட்டுமே அவருடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள சேனைகள் மூலமாக அழிக்கப்படுவர் என்ற சந்தோஷமான உறுதியைக் கொடுக்கிறது. (சங்கீதம் 37:9, 10; 145:20) அர்மகெதோனில், தெய்வீக நியாயத்தீர்ப்பின் உச்சக்கட்டத்தை, சகல தேசங்களிலிருந்து வரும் ஒரு திரள் கூட்டமான மானிடர் தப்பிப் பிழைப்பர். இதற்குப் பின்பு கிறிஸ்து இயேசு இவர்களை மேய்த்து, பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்க நடத்துவார். அவர்களில் ஒருவராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா? சந்தோஷத்துக்குரியதாய், நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது!—வெளிப்படுத்துதல் 7:9, 14, 17.
தெய்வீக இரகசியங்களைக் கண்டாராய்தல்
6. வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றிய வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்ய கடந்த ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகள் என்ன புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்?
6 உவாட்ச் டவர் சொஸையிட்டி 1917-ஆம் ஆண்டிலேயே, நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை வெளியிட்டது. இது, பைபிள் புத்தகங்களாகிய எசேக்கியேலிலும் வெளிப்படுத்துதலிலுமுள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கவுரையை அளித்தது. பின்பு பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றமாகத் தொடர்ந்து உலக சம்பவங்கள் வெளியரங்கமானபோது சமயோசிதமாய், வெளிச்சம் (ஆங்கிலம்) என்று பெயரிடப்பட்ட இரண்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு 1930-ல் வெளியிடப்பட்டன. இவை வெளிப்படுத்துதல் புத்தகம் பற்றிய திருத்தப்பட்ட புதுக்கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஒளியானது தொடர்ந்து ‘நீதிமானுக்குப் பிரகாசித்ததன்’ காரணமாக 1963-ல் “மகா பாபிலோன் விழுந்தது!” கடவுளுடைய ராஜ்யம் ஆளுகிறது! (ஆங்கிலம்) என்ற 704 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டார்கள். பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறித்த சரித்திரம் இதில் அதிகமாக விளக்கப்பட்டது, மேலும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள இறுதி ஒன்பது அதிகாரங்களுடைய ஆராய்ச்சி இதன் உச்சக்கட்டமாக அமைந்தது. ‘நீதிமான்களுடைய பாதை’ குறிப்பாக சபையின் நடவடிக்கைகள் சம்பந்தமாக ‘மேன்மேலும் பிரகாசமடைகையில்,’ 1969-ல் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் 13 அதிகாரங்களுடைய ஆராய்ச்சியை உள்ளடக்கிய 384 பக்கங்கள்கொண்ட புத்தகம் “அப்போது தெய்வ இரகசியம் நிறைவேறித்தீர்ந்தது” (ஆங்கிலம்) வெளியிடப்பட்டது.—சங்கீதம் 97:11; நீதிமொழிகள் 4:18.
7. (அ) வெளிப்படுத்துதல் புத்தகம் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் ஏன் இந்தப் புத்தகத்தைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள்? (ஆ) வாசகர் பயன்பெற, படிக்க உதவும் என்ன அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன?
7 ஏன் இப்பொழுது, வெளிப்படுத்துதல் புத்தகம் சம்பந்தமாக மற்றொரு புத்தகம் வெளியிடப்பட்டு, மறுபதிப்பு செய்யப்பட்டது? ஏற்கெனவே நுணுக்கமாக விளக்கப்பட்டு வெளிவந்துள்ள அநேக விஷயங்களை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் அநேக மொழிகளில் வெளியிட முடியவில்லை. ஆகவே, அநேக மொழிகளில் உடனடியாக வெளியிடுவதற்கு ஒரு புத்தக வடிவில், வெளிப்படுத்துதல் சம்பந்தமாக வெறும் ஒரே புத்தகமாக வெளியிடுவது பொருத்தமானதாகக் காணப்பட்டது. மேலும், இந்தப் புத்தகத்தில் விளக்கப்படங்கள், வரைப்படங்கள், சுருக்கவுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் படிக்க உதவும் அம்சங்களைக் கொண்டிருப்பதற்கும் தக்க சமயம் எடுக்கப்பட்டிருக்கிறது.இவை மலைக்க வைக்கும் இந்தத் தீர்க்கதரிசனத்தின் கிளர்ச்சியூட்டும் உட்கருத்தைத் தெளிவாகக் கிரகித்துக்கொள்ள வாசகர்களுக்கு உதவ வேண்டும்.
8. இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிக பலமான காரணம் என்ன?
8 அதுமட்டுமல்லாமல் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிக பலமானக் காரணம் திருத்தப்பட்ட புதிய கருத்துக்களைக்கொண்ட சத்தியங்களைத் தெரிந்திருப்பதன் அவசியமே ஆகும். யெகோவா அவருடைய வார்த்தையிலுள்ள கருத்துக்கள்மீது இன்னும் அதிகமான வெளிச்சத்தைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்கிறார், மேலும் நாம் மிகுந்த உபத்திரவத்தை நெருங்கி வருகையில், மற்ற தீர்க்கதரிசனங்களோடுகூட வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றிய அறிவு கூர்மையாக்கப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம். (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 7:14) நாம் உண்மையை நன்கு அறிந்தவர்களாக இருப்பது முக்கியமானது. தெய்வீகத் தீர்க்கதரிசனத்தைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு எழுதினது போல்: “பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தை நீங்கள் கவனித்திருப்பது நலமாகும்.”—2 பேதுரு 1:19, தி.மொ.
9. (அ) மற்ற தீர்க்கதரிசனங்களோடுகூட வெளிப்படுத்துதல் புத்தகம் கடவுள் எவற்றைச் சிருஷ்டிப்பதாக எடுத்துக் காட்டுகிறது? (ஆ) புதிய உலகம் என்றால் என்ன, அதற்குள் போக நீங்கள் எப்படி தப்பிப்பிழைக்கலாம்?
9 யெகோவா தேவன் புதிய வானங்களையும் ஒரு புதிய பூமியையும் சிருஷ்டிக்க நோக்கமுள்ளவராயிருப்பதை எடுத்துக்காட்டும் பல்வேறு பைபிள் தீர்க்கதரிசனங்களோடு வெளிப்படுத்துதல் புத்தகமும் சாட்சிப் பகருகிறது. (ஏசாயா 65:17; 66:22; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-5) இதிலுள்ள செய்தி, புதிய வானங்களில் இயேசு தம்மோடு உடன் அரசர்களாக ஆவதற்கு அவருடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்ட அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக எழுதப்பட்டது. (வெளிப்படுத்துதல் 5:9, 10) இருந்தபோதிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின்கீழ் நித்திய ஜீவனை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் லட்சக்கணக்கானோருடைய விசுவாசத்தை, இந்தச் சுவிசேஷம் பலப்படுத்தும். இவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், வெளிப்படுத்துதல் புத்தகம் புதிய பூமியின் பாகமாகப் பரதீஸில் வாழ்வதற்கான உங்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும். அங்கு, மிகுந்த சமாதானத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், முடிவில்லாமல் எப்போதும் தேவைக்கு மேற்பட்டு அபரிமிதமாக அளிக்கப்படும் ஏற்பாடுகளையும் நாம் அனுபவிப்போம். (சங்கீதம் 37:11, 29, 34; 72:1, 7, 8, 16) அப்படிப்பட்ட ஒரு புதிய உலகிற்குள் போகும்படி தப்பிப்பிழைக்க நீங்கள் விரும்புவீர்களென்றால், இப்போது சமீபித்திருக்கும், திரும்புகட்டமான உச்சநிலையைக் குறித்த வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தெளிவான விவரிப்புக்கு நீங்கள் உடனடியாகவும், ஆம் கட்டாயமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.—செப்பனியா 2:3; யோவான் 13:17.
[அடிக்குறிப்பு]
a சியூடச்சி ஸிட்டுங் (Suddeutsche Zeitung), ஜனவரி 24, 1987—ஜெர்மனியிலுள்ள மியூனிச் என்ற நகரத்தில் வெளிவந்தப் பிரசுரம்.
[பக்கம் 7-ன் முழுபடம்]