கிறிஸ்து திரும்பிவருதல்
சொற்பொருள் விளக்கம்: இந்தப் பூமியை விட்டுச் செல்வதற்கு முன், இயேசு கிறிஸ்து தாம் திரும்பிவருவாரென வாக்குக் கொடுத்தார். கடவுளுடைய ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்ட கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் அந்த வாக்குடன் இணைந்துள்ளன. வருகைக்கும் வந்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பதைக் கவனிக்கவேண்டும். இவ்வாறு, ஒருவரின் வருகை (அவர் வந்துசேருதல் அல்லது திரும்பிவருதலோடு சம்பந்தப்பட்டுள்ளது) குறிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் நடக்கிறது, அதன்பின் அவர் வந்திருத்தல் பல ஆண்டுகளடங்கிய காலப்பகுதிக்கு நீடித்திருக்கலாம். பைபிளில் (“வருகை” எனப் பொருள்படுகிற) கிரேக்கச்சொல் எர்க்கோமய் (er’kho.mai) இயேசு தாம் வந்திருத்தலின்போது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு முக்கியமான வேலைக்கு, உதாரணமாக, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய அந்த மகா நாளின் போரில் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் தம்முடைய வேலைக்கு அவர் தம்முடைய கவனத்தைச் செலுத்துவது சம்பந்தமாகவும் பயன்படுத்தியுள்ளது.
கிறிஸ்துவின் வந்திருத்தலோடு இணைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகச் சுருக்கமான காலத்தில் நடைபெறுகின்றனவா அல்லது பல ஆண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியில் நடைபெறுகின்றனவா?
மத். 24:37-39: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் [“வரும்,” RS, TEV; “வந்திருக்கும்,” NW, Yg, Ro, ED; கிரேக்கில், பரொசீயா (pa.rou.si’a)] காலத்திலும் நடக்கும். எப்படியெனில் ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் [வந்திருக்கும்போதும், NW] நடக்கும்.” (இங்கே விவரித்துள்ள “நோவாவின் காலத்தில்” நடந்த சம்பவங்கள் பல ஆண்டுகளடங்கிய காலப்பகுதியில் நடந்தேறின, அக்காலத்தில் நடந்ததை இயேசு தம்முடைய வந்திருக்கும் காலத்தோடு ஒப்பிட்டார்.)
மத்தேயு 24:37-ல் கிரேக்கச் சொல்லாகிய பரொசீயா (pa.rou.si’a) பயன்படுத்தப்பட்டுள்ளது. சொல்லின் நேர்ப்பொருளில் அது “பக்கத்தில் இருப்பது,” என்பதாகும். விட்டலும் ஸ்கட்ஸும் இயற்றிய கிரேக்கு-ஆங்கில அகராதி (ஆக்ஸ்ஃபர்ட், 1968) பரொசீயாவின் முதல் பொருள்விளக்கமாக “ஆட்களின், வந்திருக்கை” எனக் கொடுக்கிறது. இந்தச் சொல்லின் உட்கருத்து பிலிப்பியர் 2:12-ல் (NW) தெளிவாய்க் காட்டப்பட்டுள்ளது, அங்கே பவுல் தான் அங்கு இருப்பதை (pa.rou.si’a) தான் அங்கு இராமையோடு (a.pou.si’a) வேறுபடுத்துகிறான். மறுபட்சத்தில், யெகோவா அளித்தத் தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றுபவராக அர்மகெதோன் போரில் “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைக்” குறித்துக் கூறும் மத்தேயு 24:30-ல், கிரேக்கச் சொல் எர்க்கோமீனன் (er.kho’me’non) பயன்படுத்தியுள்ளது. சில மொழிபெயர்ப்பாளர்கள் இரண்டு கிரேக்கச் சொற்களுக்கும் ‘வருகை’ என்பதையே பயன்படுத்துகிறார்கள், ஆனால் மிகக் கவனமுள்ளவர்கள் இந்த இரண்டுக்குமுள்ள வேறுபாட்டைத் தெரிவிக்கிறார்கள்.
மனிதக் கண்களுக்குக் காணக்கூடிய முறையில் கிறிஸ்து திரும்பி வருவாரா?
யோவான் 14:19: “இன்னுங்கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ [இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்] என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். (இயேசு, தாம் திரும்பவும் வந்து அவர்கள் தம்முடன் இருக்கும்படி அவர்களைப் பரலோகத்துக்குக் கொண்டுசெல்வாரென தம்முடைய அப்போஸ்தலருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். அவர்கள் அவரைக் காண முடியும் ஏனெனில் அவர்கள் அவர் இருப்பதுபோல் ஆவி சிருஷ்டிகளாயிருப்பார்கள். ஆனால் உலகம் அவரை மறுபடியும் காணாது. 1 தீமோத்தேயு 6:16-ஐ ஒத்துப்பாருங்கள்.)
அப். 13:34: “இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை [இயேசுவை] மரித்தோரிலிருந்து [கடவுள்] எழுப்பினார்.” (மனித உடல்கள் இயல்பாய் அழியக்கூடியவை. “இதன்காரணமாக 1 கொரிந்தியர் 15:42, 44-ல் “அழிவுள்ளது” என்றச் சொல் “ஜென்ம சரீரம்,” என்பதோடு இசைவு பொருத்தமான அமைப்பில் பயன்படுத்தியுள்ளது. இயேசு இனி ஒருபோதும் அத்தகைய உடலைக் கொண்டிரார்.)
யோவான் 6:51: “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.” (அதைக் கொடுத்துவிட்டதால், இயேசு அதை மறுபடியும் எடுத்துக்கொள்கிறதில்லை. இவ்வாறு மனிதவர்க்கம் தம்முடைய பரிபூரண மனித உயிர்ப் பலியின் நன்மைகளை இழக்கச் செய்கிறதில்லை.)
மேலும் பக்கங்கள் 313, 314-ல், “பரவசம்” என்பதன்கீழ்ப் பாருங்கள்.
இயேசு தாம் பரலோகத்துக்கு ஏறிப்போன “அவ்விதமாகவே” திரும்பிவருவதன் பொருளென்ன?
அப். 1:9-11, தி.மொ.: “அவர்கள் [இயேசுவின் அப்போஸ்தலர்கள்] பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, அவர் உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; ஒரு மேகம் அவர்கள் கண்களுக்கு அவரை மறைத்து எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் அண்ணாந்து வானத்தைக்கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ வெண் வஸ்திரந்தரித்த இருவர் அவர்களருகே நின்று: கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? உங்களிடத்திலிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு எவ்விதமாக வானத்துக்குள்போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார் என்றார்கள்.” (“அவ்விதமாகவே,” என்று சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், அதே உடலில் என்றல்ல. அவர் ஏறிப்போன “விதம்” என்ன? 9-ம் வசனத்தில் காட்டியுள்ளபடி, அவர் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்துபோனார், அவர் சென்றதை அவருடைய சீஷர்கள் மாத்திரமே கூர்ந்து கவனித்தார்கள். நடந்ததைப் பொதுவில் உலகம் அறியவில்லை. கிறிஸ்து திரும்பிவருகையில் அவ்வாறே இருக்கும்.)
‘அவர் மேகங்களில் வருவது’ மற்றும் ‘கண்கள் யாவும் அவரைக் காண்பது’ என்பவற்றின் பொருளென்ன?
வெளி. 1:7: “இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.” (மேலும் மத்தேயு 24:30; மாற்கு 13:26; லூக்கா 21:27)
“மேகங்கள்” குறித்துக்காட்டுவதென்ன? கண்ணுக்குப் புலப்படாமையாகும். ஓர் ஆகாயவிமானம் அடர்த்தியான மேகத்தில் அல்லது மேகங்களுக்கு மேற்புறத்தில் இருக்கையில், தரையிலுள்ள ஜனங்கள் அதன் இயந்திரங்களின் இரைச்சலைக் கேட்டாலும், பொதுவாய் அதைக் காணமுடியாது. யெகோவா மோசயினிடம்: “நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன்” என்று சொன்னார். மோச கடவுளைப் பார்க்கவில்லை, ஆனால் அந்த மேகம் யெகோவாவின் காணக்கூடாத வந்திருக்கையைக் குறிப்பிட்டது. (யாத். 19:9; மேலும் லேவியராகமம் 16:2; எண்ணாகமம் 11:25 ஆகியவற்றையும் பாருங்கள்.) கிறிஸ்து வானங்களில் காணக்கூடியவராகத் தோன்றினால், நிச்சயமாகவே “கண்கள் யாவும்” அவரைக் காணமுடியாது. உதாரணமாக, அவர் ஆஸ்திரேலியாவுக்குமேல் தோன்றினால், ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும், வட தென் அமெரிக்காக்களிலும் அவரைக் காணமுடியாதல்லவா?
என்ன கருத்தில் ‘கண்கள் யாவும் அவரைக் காணும்’? பூமியில் நடக்கும் சம்பவங்களிலிருந்து அவர் காணக்கூடாதவராய் வந்திருக்கிறாரென அவர்கள் தெளிவாய் உய்த்துணர்ந்துகொள்வார்கள். மேலும் மாம்ச கண்பார்வையல்லாததைக் குறிக்கிறது, யோவன் 9:41-ல் அறிவித்திருப்பதாவது: “இயேசு அவர்களை [பரிசேயரை] நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.” (ரோமர் 1:20-ஐ ஒத்துப்பாருங்கள்.) கிறிஸ்துவின் திரும்பிவருகையைப் பின்தொடர்ந்து, சிலர் விசுவாசங் காட்டுகிறார்கள்; அவர்கள் அவருடைய வந்திருத்தலின் அடையாளத்தைக் கண்டுணர்ந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் அந்த அத்தாட்சியை ஏற்க மறுத்துவிடுகின்றனர், ஆனால் கிறிஸ்து அக்கிரமக்காரர்மீது கடவுள் அளித்த மரணதண்டனையை நிறைவேற்றுபவராகச் செயல்படுகையில், அவர்களுங்கூட அவருடைய வல்லமையின் வெளிக்காட்டிலிருந்து அந்த அழிவு மனிதரிடமிருந்து அல்ல, பரலோகத்திலிருந்து வருகிறதென உய்த்துணர்ந்துகொள்வார்கள். அவர்களுக்கு முற்பட்டே எச்சரிக்கை கொடுத்திருப்பதால் நடப்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். எதிர்பாராது திடீரெனத் தங்கள்மீது வரும் அழிவினிமித்தம் அவர்கள் “மாரடித்துப் புலம்புவார்கள்.”—தி.மொ.
“அவரைக் குத்தினவர்கள்” யாவர்? சொல்லின் நேர்ப்பொருளில், இயேசுவைக் கொன்ற சமயத்தின்போது ரோமப் போர்ச்சேவகரே இதைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மரித்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஆகையால் இது, இந்தக் “கடைசி நாட்களின்”போது கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றுவோரை அவ்வாறு தகாமுறையில் நடத்தும், அல்லது ‘குத்தும்’ ஆட்களையே குறிப்பிடவேண்டும்.—மத். 25:40, 45.
ஒருவர் காணப்படாதிருந்தால் அவர் ‘வந்துவிட்டார்’ அல்லது ‘வந்திருக்கிறார்’ என்று உண்மையில் சொல்லலாமா?
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலிருந்த சபையோடு தான் “சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவன்,” எனப் பேசினான்.—1 கொரி. 5:3.
யெகோவா, பாபேல் கோபுரத்தைக் கட்டுவோரின் மொழியைத் தாறுமாறாக்கத் தாம் ‘இறங்கிப்போவதாகப்’ பேசினார். (ஆதி. 11:7) மேலும் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கத் தாம் ‘இறங்கினார்’ எனவும் கூறினார். மேலும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு இஸ்ரவேலரை வழிநடத்த “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்,” எனவும் கடவுள் மோசக்கு உறுதிகூறினார். (யாத். 3:8; 33:14) ஆனால் ஒரு மனிதனும் கடவுளை ஒருபோதும் காணவில்லை.—யாத். 33:20; யோவன் 1:18.
கிறிஸ்துவின் வந்திருத்தலோடு பைபிள் சம்பந்தப்படுத்தும் சம்பவங்களில் சில யாவை?
தானி. 7:13, 14: “இராத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் [இயேசு கிறிஸ்து] வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் [யெகோவா தேவன்] இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது.”
1 தெச. 4:15, 16: “கர்த்தருடைய [யெகோவாவின், NW] வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் [வந்திருத்தல்வரை] உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (ஆகவே, கிறிஸ்துவுடன் ஆளப்போகிறவர்கள் பரலோகத்தில் அவருடன் இருப்பதற்கு—முதலாவது முந்திய ஆண்டுகளில் மரித்தவர்களும் பின்பு கர்த்தர் திரும்பிவந்தப் பின்பு மரிக்கிறவர்களும்—உயிர்த்தெழுப்பப்படுவர்.)
மத். 25:31-33: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”
2 தெச. 1:6-10: “உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும் ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”
லூக்கா 23:42, 43, NW: “அவன் [இயேசுவுக்குப் பக்கத்தில் கழுமரத்தில் அறையப்பட்டிருந்த பரிவிரக்கமுள்ள அந்தத் தீயோன்] மேலும் தொடர்ந்து: ‘இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்துக்குள் வருகையில் என்னை நினைத்தருளும்,’ என்று சொன்னான். அவர் அவனிடம்: ‘மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,’ என்றார்.” (இயேசுவின் ஆட்சியின்போது, முழு பூமியும் ஒரு பரதீஸாகும்; கடவுளுடைய நினைவிலுள்ள மரித்தோர் பூமியில் என்றென்றும் பரிபூரண உயிரை அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்புடன் எழுப்பப்படுவார்கள்.)
மேலும் பக்கங்கள் 234-239-ல், “கடைசி நாட்கள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.