பைபிள் புத்தக எண் 55—2 தீமோத்தேயு
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 65
பவுல் மறுபடியும் ரோமில் கைதியாக இருந்தார். எனினும், இந்த இரண்டாவது சிறையிருப்பின் சூழ்நிலைமைகள் முதலில் இருந்ததைப் பார்க்கிலும் கடுமையாக இருந்தன. இது பொ.ச. 65 ஆக இருக்கலாம். பொ.ச. 64 ஜூலையில் ரோம் நகரமே தீப்பற்றி எரிந்து பெரிய நாசத்தை ஏற்படுத்தியது. அந்த நகரத்தின் 14 பிராந்தியங்களில் 10-ல் மிகுதியான சேதம் ஏற்பட்டிருந்தது. பேரரசன் நீரோவின், “கட்டளையால்தான் அந்தப் பெருந் தீ ஏற்பட்டது என்று பரவியிருந்த கெட்ட எண்ணத்தை அகற்ற முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு, பொது ஜனங்களால் அப்போது அருவருப்பாக கருதப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது குற்றப்பழியை நீரோ சுமத்தி கடுமையாக சித்திரவதை செய்தான். . . . நகரத்துக்குத் தீ வைத்த குற்றவாளிகளாக மட்டுமல்ல மனிதகுலத்தையே வெறுக்கும் ஆட்கள் என்பதாகவும் அநேகர் தீர்ப்பளிக்கப்பட்டனர். அவர்களுடைய மரண தண்டனையின்போது எல்லா வகையிலும் ஏளனம் செய்யப்பட்டனர். மிருகங்களின் தோல்கள் போர்த்தப்பட்டு, நாய்களால் கடித்திழுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலுவைகளில் அறையப்பட்டனர், அல்லது தீயில் எரிக்கப்பட்டனர். இரவில் வெளிச்சத்திற்காக எரிக்கப்பட்டனர். இந்தக் கொடுமைகளை நிறைவேற்ற நீரோ தன்னுடைய தோட்டங்களை கொடுத்தான் . . . ஓர் இரக்க உணர்ச்சி எழும்பிற்று. பொது ஜனங்களின் நன்மைக்காக அல்ல ஒரு மனிதனின் கொடூரத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர்” என்று ரோம சரித்திராசிரியனாகிய டாஸிட்டஸ் குறிப்பிடுகிறார்.”a
2 ரோமில் வன்முறையான இந்த துன்புறுத்துதல் நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான் பவுல் இரண்டாவது முறை கைதியாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சமயம் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். விடுதலை செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, முடிவான தீர்ப்புக்காகவும் மரண தண்டனைக்காகவும் காத்திருந்தார். மிகச் சிலரே பார்க்க வந்தனர். ஒருவன் தன்னை கிறிஸ்தவனாக வெளிப்படையாய் காட்டிக்கொண்டால் அப்போதே கைதுசெய்யப்பட்டு வதைத்துக் கொல்லப்படும் வாய்ப்பு இருந்தது. இதனால்தான், எபேசுவிலிருந்து பார்க்க வந்தவரைக் குறித்து நன்றியுணர்வோடு பவுல் எழுதினார்: “ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.” (2 தீ. 1:16, 17) மரணம் நெருங்கும் நிலைமையிலும் ‘கிறிஸ்து இயேசுவுக்குள்ளிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்கிசையக் கடவுளின் சித்தத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்’ என்று தன்னை குறிப்பிடுகிறார். (1:1, தி.மொ.) கிறிஸ்துவோடு வாழ்வதற்கான வாய்ப்பு தனக்கு காத்திருப்பதை பவுல் அறிந்திருந்தார். அக்காலத்தில் அறியப்பட்ட உலகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும், எருசலேமிலிருந்து ரோம் வரையாகவும், ஒருவேளை ஸ்பானியா வரையாகவுங்கூட அவர் பிரசங்கித்தார். (ரோ. 15:24, 28) இறுதி வரை உண்மையுடன் தன் ஓட்டத்தை ஓடி முடித்தார்.—2 தீ. 4:6-8.
3 பவுல் இரத்த சாட்சியாய் மரிப்பதற்கு சற்றுமுன்பு, சுமார் பொ.ச. 65-ல் இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கலாம். தீமோத்தேயு இன்னும் எபேசுவில்தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அங்கிருக்கும்படி பவுல் அவரை ஊக்கப்படுத்தியிருந்தார். (1 தீ. 1:4) சீக்கிரமாய் வரும்படி பவுல் தீமோத்தேயுவை இருமுறை அவசரப்படுத்துகிறார்; அவரோடு மாற்குவை அழைத்துவரும்படியும், துரோவாவில் தான் விட்டுவந்திருந்த மேலங்கியையும் புத்தக சுருள்களையும் கொண்டுவரும்படியும் கேட்கிறார். (2 தீ. 4:9, 11, 13, 21) மிகவும் நெருக்கடியான சமயத்தில் எழுதப்பட்ட இந்த நிருபம் தீமோத்தேயுவை மிகச் சிறந்த முறையில் உற்சாகப்படுத்தியது. அது முதற்கொண்டு வாழ்ந்த எல்லா உண்மை கிறிஸ்தவர்களுக்கும் பயனுள்ள உற்சாகத்தை தொடர்ந்து அளித்துவந்திருக்கிறது.
4 இரண்டு தீமோத்தேயு நம்பத்தக்கது மற்றும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது. இதற்கு ஒன்று தீமோத்தேயு புத்தகத்திற்காக கொடுக்கப்பட்ட காரணங்களே போதுமானது. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாலிக்கார்ப் போன்ற ஆரம்ப கால எழுத்தாளர்களாலும் உரையாசிரியர்களாலும் இது அங்கீகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டது.
இரண்டு தீமோத்தேயுவின் பொருளடக்கம்
5 ‘ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை பற்றியிருத்தல்’ (1:1–3:17). தீமோத்தேயுவை ஜெபங்களில் ஒருபோதும் மறப்பதில்லையென்றும் அவரைக் காண ஆவலாக இருப்பதாகவும் பவுல் குறிப்பிடுகிறார். முதலாவது அவருடைய பாட்டியாகிய லோவிசாள் ஏற்றுக்கொண்டதும் அதன்பின் அவருடைய தாயாகிய ஐனிக்கேயாள் ஏற்றுக்கொண்டதுமான ‘மாயமற்ற விசுவாசம்’ தீமோத்தேயுவிற்கும் இருப்பதை அவர் நினைவுகூருகிறார். தீமோத்தேயு தன்னிடம் இருக்கும் வரத்தை தீயைப்போல் அனல்மூட்டி காத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ‘தேவன் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்தார்.’ ஆகையால் பிரசங்கிப்பதிலும் நற்செய்தியினிமித்தமாக தீங்கனுபவிப்பதிலும் அவர் வெட்கப்படக் கூடாது. ஏனெனில் கடவுளுடைய தகுதியற்ற தயவு இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் வெளிப்படுதலின் மூலம் தெளிவாக தெரிகிறது. பவுலிடமிருந்து கேட்ட “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை” தீமோத்தேயு ‘விடாது பற்றியிருக்க வேண்டும்.’ அதை ஒப்புவிக்கப்பட்ட சிறந்த பொறுப்பாக காத்துக்கொள்ள வேண்டும்.—1:5, 7, 13, தி.மொ.
6 பவுலிடமிருந்து கற்றவற்றை, “மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில்” தீமோத்தேயு ஒப்புவிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்ச் சேவகனாக தீமோத்தேயு நிரூபிக்க வேண்டும். ஒரு போர்ச் சேவகன் வியாபார விஷயங்களில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கிறான். அதைப்போல விளையாட்டுப் போட்டிகளில் முடிசூட்டப்படுபவன் போட்டிக்கான விதிமுறைகளின்படி போட்டியிடுகிறான். தெளிந்துணர்வை அடைய வேண்டுமானால், தீமோத்தேயு தொடர்ந்து பவுலின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். ‘இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார், அவர் தாவீதின் வித்து’ என்பது நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம். அதைப்போல், இரட்சிப்படைவதும், கிறிஸ்துவோடு ஐக்கியமாக அவரோடு நித்திய மகிமையில் பங்கு பெறுவதும், அரசர்களாக ஆளுவதும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சகித்திருப்பதற்கான பரிசுகள். இவை நினைவில் வைப்பதற்கும் மற்றவர்களுக்கு நினைப்பூட்டுவதற்குமான முக்கியமான காரியங்கள். கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட வேலையாளாக தீமோத்தேயு நிரூபிப்பதற்கு தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பரிசுத்தமானதைக் கெடுக்கும் வீண்பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்; அவை உடலில் தசையழுகலைப் போல் படரும். ஒரு பெரிய வீட்டில் மதிப்புக்குரிய ஒரு பாத்திரம் மதிப்பற்ற ஒன்றிலிருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, தீமோத்தேயு, ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாட’ வேண்டும் என பவுல் புத்திமதி கூறுகிறார். கர்த்தரின் அடிமை எல்லாரிடமும் அமைதலோடு பழகுகிறவனாகவும், கற்பிப்பதற்குத் தகுதி பெற்றவனாகவும் சாந்தத்தோடு போதிக்கிறவனாகவும் இருக்க வேண்டும்.—2:2, 8, 22.
7 “கடைசி நாட்களில்” கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள் வரும். ஆட்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொள்வர், ஆனால் பொய்யராக நிரூபிப்பார்கள். ‘எப்போதும் கற்போராயும், சத்தியத்தின் திருத்தமான அறிவை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதோராகவும்’ இருப்பர். ஆனால் தீமோத்தேயுவோ, பவுலின் போதகத்தையும் அவருடைய வாழ்க்கைப் பாணியையும் அவருடைய துன்புறுத்துதல்களையும் நெருங்க பின்பற்றியிருக்கிறார், இவற்றிலிருந்து கர்த்தர் அவரை விடுவித்திருக்கிறார். “அன்றியும், கிறிஸ்து இயேசுவுக்குள் தெய்வபக்தியாய் ஜீவிக்க விரும்புகிற யாவரும் இம்சைக்குள்ளாவார்கள்” என்றும் அவர் கூறுகிறார். எனினும், தீமோத்தேயு சிசுப்பருவம் முதல் தான் கற்றவற்றில் தொடர்ந்திருக்க வேண்டும்; அவை அவரை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவராக்க வல்லவை. ஏனெனில் ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது.’—3:1, 7, NW, 12, தி.மொ., 16, NW.
8 ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுதல் (4:1-22). அவசரத் தன்மையுடன் ‘வார்த்தையைப் பிரசங்கிக்கும்படி’ பவுல் தீமோத்தேயுவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். (4:2, NW) ஜனங்கள் ஆரோக்கியமான போதகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்ப் போதகர்களிடமாக திரும்பும் காலம் வரும். ஆனால் தீமோத்தேயு மனத்தெளிவுடன் இருந்து, ‘சுவிசேஷகனுடைய வேலையைச் செய்து, ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.’ தன் மரணம் அருகில் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த பவுல், தான் நல்ல போராட்டத்தைப் போராடியதாகவும், ஓட்டத்தை ஓடி முடித்து விசுவாசத்தைக் காத்துக் கொண்டதாகவும் சொல்லி மகிழ்ச்சியடைகிறார். இப்போது ‘நீதியின் கிரீடமாகிய’ பரிசுக்காக நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறார்.—4:5, 8, தி.மொ.
9 தீமோத்தேயு சீக்கிரமாய் வரும்படி பவுல் குறிப்பிட்டு பயணத்தைக் குறித்த விவரங்களைக் கொடுக்கிறார். பவுல் முதன் முறை வழக்காடியபோது எல்லாரும் அவரைக் கைவிட்டனர். ஆனால், புறஜாதிகளிடம் பிரசங்கிப்பு முழுமையாக நிறைவேறுவதற்காக கர்த்தர் அவருக்கு சக்தியை அளித்தார். ஆகையால் கர்த்தர் தன்னை எல்லா தீமையினின்றும் விடுவித்து தம்முடைய பரலோக ராஜ்யத்துக்காக காப்பாற்றுவார் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஏன் பயனுள்ளது
10 ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது.’ எதற்குப் பயனுள்ளது? பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில் சொல்கிறார்: “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (3:16, 17) ‘உபதேசத்தின்’ பயன் இந்த நிருபத்தில் வலியுறுத்தப்படுகிறது. இன்று நீதியை நேசிக்கும் அனைவரும் கடவுளுடைய வார்த்தையின் நல்ல போதகராவதற்கு இந்தக் கடிதத்தின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ‘சத்திய வசனத்தை திருத்தமாக போதித்து’ கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட வேலையாளாய் நிரூபிப்பதற்கு தங்களாலான எல்லாவற்றையும் செய்ய இயலும். தீமோத்தேயுவின் காலத்தில் எபேசுவில் இருந்ததைப்போல் இந்த நவீன யுகத்திலும் “முட்டாள்தனமான அறிவற்ற கேள்விகளை” கேட்பதிலேயே உழன்றுகொண்டு இருக்கின்றனர். அவர்கள் ‘எப்போதும் கற்போராயும், சத்தியத்தின் திருத்தமான அறிவை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதோராகவும்’ இருக்கின்றனர். அவர்கள் தன்னல விருப்பத்திற்காக தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைப் பேசும் போதகர்களை விரும்பி “ஆரோக்கியமான உபதேசத்தை” நிராகரிக்கின்றனர். (2:15, 23; 3:7; NW; 4:3, 4) இப்படிப்பட்ட கறைபடுத்தும் உலக செல்வாக்கைத் தவிர்ப்பதற்கு விசுவாசத்திலும் அன்பிலும் “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை” விடாது பற்றியிருப்பது அவசியம். மேலும், ‘கடவுளின் மனிதனாகிய’ தீமோத்தேயுவைப்போல் அநேகர் சபைக்குள்ளும் வெளியிலும் ‘போதிக்க வேண்டிய தகுதிபெறுவதற்கான’ அவசரத் தேவை இருக்கிறது. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘சாந்தத்தோடு போதிக்கத் தகுதிபெற்று,’ ‘நீடிய பொறுமையோடும் கற்பிக்கும் கலையோடும்’ வார்த்தையைப் பிரசங்கிப்போர் மகிழ்ச்சியுள்ளவர்கள்!—1:13, தி.மொ.; 2:2, 24, 25; 4:2; NW.
11 தீமோத்தேயு ‘சிசுப் பருவத்திலிருந்து’ பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருந்தார்; ஏனெனில் லோவிசாளும் ஐனிக்கேயாளும் அன்புடன் அவருக்கு சொல்லிக்கொடுத்தனர் என்று பவுல் குறிப்பிட்டார். ‘சிசுப் பருவம்’ என்று குறிப்பிட்டதிலிருந்து, பிள்ளைகள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போதே பைபிள் போதனையை ஆரம்பிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறோம். ஆனால், பிள்ளைகள் வளர்ந்தபின் நெருப்பைப் போன்ற ஆரம்பகால வைராக்கியம் குறைந்துவிட்டால் என்ன செய்வது? மாயமற்ற விசுவாசத்துடன் ‘பலத்தோடும் அன்போடும் தெளிந்த புத்தியோடும்’ அந்தத் தணலை மறுபடியுமாக அனல்மூட்டி எழுப்ப வேண்டுமென்பதே பவுலின் அறிவுரை. “கடைசி நாட்களில்,” கொடிய காலங்கள் வரும்; துன்மார்க்கமும் பொய்ப் போதகங்களும் இருக்கும் என பவுல் சொன்னார். ஆகவே, ‘எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளோராக இருந்து தங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றும்’ பொறுப்பு குறிப்பாக இளைஞர்களுக்கும், ஏன் அனைவருக்குமே இருக்கிறது.—3:15, NW; 1:5-7; 3:1-5; 4:5, தி.மொ.
12 பரிசைப் பெற போராடுவது தகுதியானதே. (2:3-7) பவுல் இதன் தொடர்பாக ராஜ்ய வித்திற்கு கவனத்தை திருப்புகிறார்: “இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் என்பதை மறக்க வேண்டாம்; சுவிசேஷத்தின்படி அவர் தாவீதின் வித்து.” அந்த வித்துடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பதே பவுலின் நம்பிக்கை. அதன் பின்னர் அவருடைய மரணத்தீர்ப்பைக் குறித்து வெற்றி வாகைசூடும் வார்த்தைகளில் இவ்வாறு பேசுகிறார்: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” (2:8, NW; 4:8) பல ஆண்டுகளாக உண்மையுடன் ஊழியம் செய்ததை நினைத்துப் பார்த்து இதேவிதமாக சொல்வோர் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்கள்! எனினும் உத்தமத்துடன் இப்போது சேவிப்பதையும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலை ஆவலுடன் எதிர்பார்ப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது; மேலும் பவுல் வைத்திருந்த அதே நம்பிக்கையை நடைமுறையில் செய்து காட்டுவதையும் அவசியப்படுத்துகிறது. அவர் சொன்னார்: “கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.”—4:18.
[அடிக்குறிப்பு]
a த கம்ப்லீட் உவர்க்ஸ் ஆஃப் டாஸிட்டஸ் 1942, மோசஸ் ஹாடஸ் பதிப்பித்தது, பக்கங்கள் 380-1.
[கேள்விகள்]
1. ஏறக்குறைய பொ.ச. 64-ல் ரோமில் என்ன துன்புறுத்துதல் எழும்பியது, என்ன காரணத்திற்காக?
2. இரண்டு தீமோத்தேயுவை எந்த சூழ்நிலையில் பவுல் எழுதினார், ஏன் ஒநேசிப்போருவைப் பற்றி நன்றியுணர்வோடு பேசுகிறார்?
3. இரண்டு தீமோத்தேயு எப்போது எழுதப்பட்டது, அதுமுதல் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அது எவ்வாறு பயனளித்திருக்கிறது?
4. இரண்டு தீமோத்தேயு நம்பத்தக்கது, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதை எது நிரூபிக்கிறது?
5. தீமோத்தேயுவின் விசுவாசம் எப்படிப்பட்டது, அவர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
6. போதிப்பதைக் குறித்து பவுல் என்ன அறிவுரை அளிக்கிறார், தீமோத்தேயு எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வேலையாளாகவும் மதிப்புக்குரிய ஒரு பாத்திரமாகவும் இருக்க முடியும்?
7. தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் “கடைசி நாட்களில்” ஏன் பயனுள்ளவை?
8. என்ன செய்யும்படி தீமோத்தேயுவிடம் பவுல் சொல்கிறார், இதன் சம்பந்தமாக பவுல் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறார்?
9. கர்த்தருடைய வல்லமையைப் பற்றி எப்படிப்பட்ட நம்பிக்கையை பவுல் வெளிப்படுத்துகிறார்?
10. (அ) இரண்டு தீமோத்தேயுவில் ‘வேதாகமம் முழுவதையும்’ பற்றி என்ன குறிப்பிட்ட பயன் அறிவுறுத்தப்படுகிறது, கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க முயற்சிக்க வேண்டும்? (ஆ) என்ன செல்வாக்கைத் தவிர்க்க வேண்டும், இதை எவ்வாறு செய்யலாம்? (இ) என்ன அவசரத் தேவை இருக்கிறது?
11. இளைஞரைக் குறித்து என்ன அறிவுரை அளிக்கப்படுகிறது?
12. (அ) பவுல் எவ்வாறு ராஜ்ய வித்துக்குக் கவனத்தை திருப்புகிறார், அவர் என்ன நம்பிக்கையை வெளிப்படுத்தினார்? (ஆ) பவுலுக்கிருந்த அதே மனப்பான்மையை கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு காட்டலாம்?