அதிகாரம் ஐந்து
மீட்கும்பொருள் — கடவுள் தந்த மாபெரும் பரிசு
மீட்கும்பொருள் என்றால் என்ன?
அது எவ்வாறு அளிக்கப்பட்டது?
அதிலிருந்து நீங்கள் என்ன நன்மைகளைப் பெறலாம்?
மீட்கும்பொருளுக்கு நீங்கள் எவ்வாறு நன்றி காட்டலாம்?
1, 2. (அ) ஒரு பரிசு எப்போது உங்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்கும்? (ஆ) எந்தப் பரிசையும்விட மீட்கும்பொருள்தான் மிக மிக விலையேறப்பெற்ற பரிசு என நாம் ஏன் சொல்லலாம்?
இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகளிலேயே எதை மிகச் சிறந்த பரிசு என்பீர்கள்? ஒரு பரிசு முக்கியமானதாக இருப்பதற்கு அது விலை உயர்ந்ததாய் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆம், ஒரு பரிசு உண்மையிலேயே மதிப்புமிக்கதா இல்லையா என்பதை அதன் விலையை வைத்துச் சொல்லிவிட முடியாது. மாறாக, ஒரு பரிசு எப்போது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறதோ, உங்கள் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை ஒன்றைப் பூர்த்தி செய்கிறதோ அப்போதுதான் அது உங்களுக்கு மதிப்புமிக்க ஒரு பரிசாக இருக்கும்.
2 நீங்கள் எத்தனையோ பரிசுகளுக்காக இதுவரை ஆசைப்பட்டிருக்கலாம், இனியும் ஆசைப்படலாம்; ஆனால் ஒரு பரிசு மட்டும் மற்ற எல்லாப் பரிசுகளையும்விட மிக மிக உயர்ந்தது. மனிதகுலத்திற்குக் கடவுள் தந்துள்ள பரிசு அது. யெகோவா நமக்கு எத்தனையோ பரிசுகளைத் தந்திருக்கிறார், ஆனால் அவர் நமக்குத் தந்திருப்பவற்றிலேயே மாபெரும் பரிசு அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை மீட்கும்பொருளாகக் கொடுத்ததாகும். (மத்தேயு 20:28) இந்த அதிகாரத்தில் பார்க்கப் போகிறபடி, மீட்கும்பொருள்தான் எந்தப் பரிசையும்விட மிக மிக விலையேறப்பெற்ற பரிசாகும்; ஏனென்றால் அது உங்களுக்கு அளவிலா ஆனந்தத்தைத் தரும், அதோடு, உங்களுடைய அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்யும். உண்மையிலேயே, மீட்கும்பொருள் என்பது யெகோவா உங்கள் மீது வைத்துள்ள அன்பின் மிகச் சிறந்த ஒரு வெளிக்காட்டாக இருக்கிறது.
மீட்கும்பொருள் என்றால் என்ன?
3. மீட்கும்பொருள் என்றால் என்ன, இந்தப் பரிசு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை அறிய முதலாவது நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
3 எளிய வார்த்தைகளில் சொன்னால், மீட்கும்பொருள் என்பது மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கான, அதாவது காப்பாற்றுவதற்கான யெகோவாவின் ஏற்பாடாகும். (எபேசியர் 1:7) இந்த பைபிள் போதனையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஏதேன் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஆதாம் பாவம் செய்தபோது எதை இழந்தான் என்பதை முதலாவது நாம் புரிந்துகொண்டால்தான் மீட்கும்பொருள் எவ்வளவு விலையேறப்பெற்ற பரிசு என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
4. ஆதாம் பரிபூரணமாய் இருந்ததால் என்னென்ன நன்மைகளை அனுபவித்தான்?
4 ஆதாமைப் படைத்தபோது அவனுக்கு யெகோவா மதிப்புமிக்க ஒன்றைத் தந்தார், அதாவது பரிபூரண உயிரைத் தந்தார். அதனால் என்னென்ன நன்மைகளை அவன் அனுபவித்தான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உடலும் உள்ளமும் பரிபூரணமாகப் படைக்கப்பட்டிருந்ததால் அவனுக்கு ஒருபோதும் வியாதி வராது, முதுமை வராது, சாவும் வராது. பரிபூரண மனிதனான அவனுக்கு யெகோவாவிடம் ஒரு விசேஷ உறவு இருந்தது. ஆதாம் ‘கடவுளுடைய மகனாக’ இருந்தான் என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 3:38, பொ.மொ.) எனவே, அன்பான அப்பாவிடம் ஒரு மகனுக்கு எப்படி நெருங்கிய பந்தம் இருக்குமோ அப்படியே யெகோவா தேவனோடு ஆதாமுக்கு நெருங்கிய பந்தம் இருந்தது. தமது பூமிக்குரிய மகனான ஆதாமிடம் யெகோவா பேச்சுத்தொடர்பு வைத்திருந்தார், திருப்தி தரும் வேலைகளை அவனுக்குக் கொடுத்திருந்தார், அவனிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் அவனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.—ஆதியாகமம் 1:28-30; 2:16, 17.
5. ஆதாம் “தேவ சாயலாக” படைக்கப்பட்டான் என்பதன் அர்த்தம் என்ன?
5 ஆதாம் “தேவ சாயலாக” படைக்கப்பட்டான். (ஆதியாகமம் 1:27) பார்ப்பதற்கு அவன் கடவுளைப் போல இருந்தானென இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏனெனில், கண்களால் பார்க்க முடியாத ஆவியாக யெகோவா இருக்கிறார் என்று இப்புத்தகத்தின் 1-ம் அதிகாரத்தில் நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்டோம். (யோவான் 4:24) ஆக, யெகோவாவுக்கு மாம்சமும் இரத்தமுமுள்ள உடல் கிடையாது. அப்படியானால் ஆதாம் தேவ சாயலாகப் படைக்கப்பட்டான் என்பதன் அர்த்தம் என்ன? தேவனுடைய பண்புகளாகிய அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகியவற்றோடு அவன் படைக்கப்பட்டான் என்பதே அதன் அர்த்தம். மற்றொரு முக்கியமான விதத்திலும் ஆதாம் தன் தந்தையைப் போலவே இருந்தான், ஆம், சுயமாகத் தெரிவுசெய்கிற சுதந்திரம் அவனுக்கு இருந்தது. எனவே, குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக உண்டாக்கப்பட்ட அல்லது புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மெஷினைப் போல ஆதாம் இருக்கவில்லை. மாறாக, நல்லது எது கெட்டது எது என்பதைத் தெரிவுசெய்து சொந்தத் தீர்மானங்களை அவனால் எடுக்க முடிந்தது. கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்க அவன் தீர்மானித்திருந்தால், பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ்கிற வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருக்கும்.
6. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது ஆதாம் எதை இழந்தான், அவனுடைய சந்ததி எவ்வாறு பாதிக்கப்பட்டது?
6 ஆனால், ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் மரணத் தீர்ப்பைப் பெற்றபோது, மதிப்புமிக்க ஒன்றை இழந்துபோனான். பாவம் செய்ததால் பரிபூரண உயிரையும் அதன் எல்லா நன்மைகளையும் அவன் இழந்துபோனான். (ஆதியாகமம் 3:17-19) வருத்தகரமாக அந்த அருமையான உயிரை, தான் இழந்தது மட்டுமல்லாமல் தன் எதிர்கால சந்ததியும் இழந்துபோகும்படி செய்தான். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, . . . எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆம், நாம் எல்லாருமே ஆதாமிடமிருந்து பாவத்தைப் பெற்றிருக்கிறோம். அதனால்தான், அவன் தன்னையும் தன் சந்ததியையும் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையாக ‘விற்றுப்’ போட்டான் என பைபிள் சொல்கிறது. (ரோமர் 7:14) ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் அவர்களுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லாமல் போனது. ஆனால், அவர்களுடைய சந்ததிக்கு? அந்தச் சந்ததியில் வந்த நமக்கு?
7, 8. மீட்கும்பொருள் என்பதற்குப் பொதுவாக என்ன இரண்டு அர்த்தங்கள் உள்ளன?
7 நம்பிக்கையிழந்து தவிக்கும் மனிதகுலத்தை விடுவிக்கவே மீட்கும்பொருள் ஏற்பாட்டை யெகோவா செய்தார். மீட்கும்பொருள் என்றால் என்ன? மீட்கும்பொருள் என்பதற்குப் பொதுவாக இரண்டு அர்த்தங்கள் உள்ளன. முதல் அர்த்தம்: ஒருவரை விடுவிப்பதற்காக அல்லது ஏதோவொன்றைத் திரும்ப வாங்குவதற்காகச் செலுத்தப்படுகிற தொகையாகும். போர்க் கைதிகளை விடுவிக்கச் செலுத்தப்படுகிற தொகைக்கு இதை ஒப்பிட்டுச் சொல்லலாம். இரண்டாவது அர்த்தம்: ஏதோவொன்றை ஈடுகட்டுவதற்காகச் செலுத்தப்படுகிற தொகையாகும். ஏதோவொரு சேதத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கொடுக்கப்படுகிற தொகைக்கு இதை ஒப்பிட்டுச் சொல்லலாம். உதாரணமாக, ஒரு விபத்திற்குக் காரணமானவர், அதற்கான சேதத்தை முழுமையாக ஈடுசெய்யும் விதத்தில் நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும்.
8 அப்படியானால், ஆதாம் நம் எல்லாருக்கும் ஏற்படுத்தியுள்ள மாபெரும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது? பாவத்திலும் மரணத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம்மை எப்படி விடுவிப்பது? அதற்காக யெகோவா ஏற்பாடு செய்துள்ள மீட்கும்பொருளைப் பற்றியும் அதிலிருந்து என்ன நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் இப்போது சிந்தித்துப் பார்க்கலாம்.
யெகோவா மீட்கும்பொருளை அளித்தது எப்படி
9. எத்தகைய மீட்கும்பொருள் தேவைப்பட்டது?
9 இழக்கப்பட்டது ஒரு பரிபூரண மனித உயிராக இருந்ததால், எந்தவொரு அபூரண மனித உயிராலும் அதைத் திரும்ப மீட்க முடியாது. (சங்கீதம் 49:7, 8) எது இழக்கப்பட்டதோ அதற்குச் சரிசமமான ஒரு மீட்கும்பொருள்தான் தேவை. இது, பரிபூரண நீதியென்ற பைபிள் நியமத்திற்கு, அதாவது “உயிருக்கு உயிர்” கொடுக்கப்பட வேண்டுமென்ற நியமத்திற்கு இசைவாக இருக்கிறது. (உபாகமம் [இணைச் சட்டம்] 19:21, பொ.மொ.) அப்படியானால், ஆதாம் இழந்த பரிபூரண மனித உயிரை ஈடுகட்ட எது தேவைப்பட்டது? அதற்குச் சமமான மற்றொரு பரிபூரண மனித உயிர் “மீட்கும்பொருளாக” தேவைப்பட்டது.—1 தீமோத்தேயு 2:6.
10. யெகோவா மீட்கும்பொருளை எப்படி அளித்தார்?
10 யெகோவா மீட்கும்பொருளை எப்படி அளித்தார்? தம்முடைய பரிபூரண ஆவி குமாரர்களில் ஒருவரை பூமிக்கு அனுப்பி அதை அளித்தார். ஆனால் ஏதோவொரு ஆவி குமாரனை அனுப்பாமல், தமது பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய அருமை குமாரனையே, ஆம், தம்முடைய ஒரேபேறான குமாரனையே அவர் அனுப்பினார். (1 யோவான் 4:9, 10) இந்தக் குமாரனும் மனமுவந்து தம்முடைய பரலோக இருப்பிடத்தைவிட்டு பூமிக்கு வந்தார். (பிலிப்பியர் 2:7) சென்ற அதிகாரத்தில் நாம் பார்த்த விதமாக, அவருடைய உயிரை அற்புதகரமாய் பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்கு யெகோவா மாற்றினார். இவ்வாறு, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு ஒரு பரிபூரண மனிதனாகப் பிறந்தார், அதனால் பாவத்தின் விளைவுகளை எதிர்ப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.—லூக்கா 1:35.
11. கோடிக்கணக்கானோருக்கு எப்படி ஒரேவொரு மனிதர் மீட்கும்பொருளாக இருக்க முடியும்?
11 ஏராளமான மனிதர்களுக்கு, சொல்லப்போனால் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு எப்படி ஒரேவொரு மனிதர் மீட்கும்பொருளாக இருக்க முடியும்? முதலாவதாக, கோடிக்கணக்கான மனிதர்கள் எப்படிப் பாவிகளாக ஆனார்கள்? ஆதாம் பாவம் செய்ததால் மதிப்புமிக்க தன் பரிபூரண உயிரை இழந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எனவே, அந்தப் பரிபூரண உயிரை தன்னுடைய சந்ததிக்கு அவனால் கடத்த முடியவில்லை. அதற்குப் பதிலாக, பாவத்தையும் மரணத்தையும்தான் அவனால் கடத்த முடிந்தது. “பிந்தின ஆதாம்” என பைபிளில் அழைக்கப்படுகிற இயேசுவோ பரிபூரணமானவராக இருந்தார், அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை. (1 கொரிந்தியர் 15:45) நம்மை இரட்சிப்பதற்காக ஆதாமின் ஸ்தானத்தை அவர் ஏற்றார் என்று ஒரு விதத்தில் சொல்லலாம். அவர் கடைசிவரை கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து தம்முடைய பரிபூரண உயிரைப் பலியாக அளித்தார், இதன் மூலம் ஆதாம் செய்த பாவத்திற்கான விலையைக் கொடுத்தார். இவ்வாறு ஆதாமின் சந்ததிக்கு எதிர்கால நம்பிக்கை அளித்தார்.—ரோமர் 5:19; 1 கொரிந்தியர் 15:21, 22.
12. இயேசு வேதனைகளை அனுபவித்தது எதை நிரூபித்தது?
12 மரிப்பதற்கு முன் இயேசு என்னென்ன வேதனைகளைச் சகித்தார் என்பதை பைபிள் விவரமாக விளக்குகிறது. சாட்டையால் கொடூரமாக அடிக்கப்பட்டார், மூர்க்கத்தனமாய் ஆணிகளால் அறையப்பட்டார், இம்சைப்படுத்தப்பட்டு கழுமரத்தில் கொல்லப்பட்டார். (யோவான் 19:1, 16-18, 30; பக்கங்கள் 204-6-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.) இயேசு ஏன் இந்தளவு வேதனைப்பட வேண்டியிருந்தது? இப்புத்தகத்தின் மற்றொரு அதிகாரத்தில் நாம் பார்க்கப் போகிறபடி, யெகோவாவின் எந்த ஊழியக்காரனும் சோதனையின் மத்தியில் அவருக்கு உண்மையுடன் நிலைத்திருக்க மாட்டான் என்று சாத்தான் சவால்விட்டிருந்தான். எனவே, கடும் வேதனையிலும் இயேசு உண்மையுடன் சகித்திருந்து சாத்தானின் சவாலுக்கு மிகச் சரியான பதிலடியைக் கொடுத்தார். பிசாசு என்னதான் முயன்றாலும், சுயமாகத் தெரிவுசெய்கிற சுதந்திரமுள்ள ஒரு பரிபூரண மனிதனால் கடவுளுக்கு உத்தமமாய்த் தொடர்ந்து இருக்க முடியும் என்பதை இயேசு நிரூபித்துக் காட்டினார். தமது அருமை குமாரனின் உண்மைத்தன்மையைப் பார்த்து யெகோவா மனமகிழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை!—நீதிமொழிகள் 27:11.
13. மீட்கும்பொருள் எவ்வாறு அளிக்கப்பட்டது?
13 மீட்கும்பொருள் எவ்வாறு அளிக்கப்பட்டது? பரிபூரணரும் பாவமற்றவருமான தம்முடைய குமாரன் பொ.ச. 33-ம் வருடம், நிசான் என்ற யூத மாதத்தின் 14-ம் தேதியன்று கொல்லப்படுவதற்கு யெகோவா அனுமதித்தார். இவ்வாறு இயேசு தமது பரிபூரண மனித உயிரை “ஒரேதரம்” பலியாகக் கொடுத்தார். (எபிரெயர் 10:10) மரித்த மூன்றாம் நாளில், அவரை யெகோவா திரும்பவும் ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுப்பினார். இயேசு பரலோகத்திற்குச் சென்றதும், தம்முடைய பரிபூரண மனித உயிரின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:24) பாவத்திலும் மரணத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கிற மனிதகுலத்தை விடுவிப்பதற்கான மீட்கும்பொருளாக யெகோவா அதை ஏற்றுக்கொண்டார்.—ரோமர் 3:23, 24.
மீட்கும்பொருளினால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
14, 15. நம்முடைய ‘பாவங்களுக்கான மன்னிப்பைப்’ பெற என்ன செய்ய வேண்டும்?
14 நாம் அபூரணராக இருந்தாலும், மீட்கும்பொருள் அளிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். கடவுள் தந்திருக்கும் இந்த மாபெரும் பரிசு நமக்கு இப்போதும் நன்மைகளை அளிக்கிறது, எதிர்காலத்திலும் அளிக்கப் போகிறது; அவற்றில் சில நன்மைகளை நாம் சிந்திக்கலாம்.
15 பாவங்களுக்கான மன்னிப்பு. அபூரணத்தின் காரணமாக, சரியானதைச் செய்ய நாம் ரொம்பவே போராட வேண்டியிருக்கிறது. சொல்லிலும் செயலிலும் நாம் அனைவருமே பாவம் செய்கிறோம். ஆனால், இயேசுவின் மீட்கும்பொருள் மூலம் நம்முடைய ‘பாவங்களுக்கான மன்னிப்பை’ நாம் பெற்றுக்கொள்ள முடியும். (கொலோசெயர் 1:13, 14) என்றாலும், அந்த மன்னிப்பு கிடைப்பதற்கு நாம் உள்ளப்பூர்வமாக மனந்திரும்ப வேண்டும். அதோடு, யெகோவாவிடம் தாழ்மையோடு மன்றாடி, அவருடைய குமாரனான இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.—1 யோவான் 1:8, 9.
16. நாம் சுத்தமான மனசாட்சியுடன் கடவுளை வணங்க எது வழி செய்கிறது, அத்தகைய மனசாட்சியால் விளையும் நன்மைகள் யாவை?
16 கடவுளுக்கு முன் சுத்தமான மனசாட்சி. குற்றமுள்ள மனசாட்சி நமக்குள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தால், வெகு சீக்கிரத்தில் நம்பிக்கையை இழந்துவிடுவோம்; அதுமட்டுமல்ல, எதற்கும் உதவாதவன்(ள்) என நம்மை நாமே மட்டமாக நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், மீட்கும் பலியின் அடிப்படையில் யெகோவா நமக்கு மன்னிப்பு வழங்கி, நம்முடைய அபூரணத்தின் மத்தியிலும் சுத்தமான மனசாட்சியுடன் அவரை வணங்குவதற்கு அன்புடன் வழி செய்திருக்கிறார். (எபிரெயர் 9:13, 14) இதனால் தைரியமாக நாம் யெகோவாவுடன் பேச முடிகிறது. ஜெபத்தில் அவரைத் தாராளமாக அணுக முடிகிறது. (எபிரெயர் 4:14-16) அதுமட்டுமல்ல, சுத்தமான மனசாட்சி மனநிம்மதியை அளிக்கிறது, சுயகெளரவத்தைக் கூட்டுகிறது, சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
17. இயேசு நமக்காக இறந்ததால் என்னென்ன ஆசீர்வாதங்கள் சாத்தியமாகி இருக்கின்றன?
17 பரதீஸ் பூமியில் நித்தியமாக வாழும் நம்பிக்கை. “பாவத்தின் சம்பளம் மரணம்” என ரோமர் 6:23 சொல்கிறது. ஆனால், அதே வசனம் “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” என்றும் சொல்கிறது. வரவிருக்கும் பரதீஸ் பூமியின் ஆசீர்வாதங்களைப் பற்றி இப்புத்தகத்தின் 3-ம் அதிகாரத்தில் கலந்தாலோசித்தோம். (வெளிப்படுத்துதல் 21:3, 4) பூரண ஆரோக்கியத்துடன் நித்தியமாக வாழும் ஆசீர்வாதமும், எதிர்காலத்தில் கிடைக்கும் மற்றெல்லா ஆசீர்வாதங்களும் இயேசு நமக்காக இறந்ததால்தான் சாத்தியமாகி இருக்கின்றன. இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள மீட்கும்பொருள் என்ற பரிசுக்கு நாம் நன்றி காட்ட வேண்டும்.
உங்கள் நன்றியை எப்படிக் காட்டலாம்?
18. மீட்கும்பொருள் என்ற பரிசுக்காக நாம் ஏன் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
18 மீட்கும்பொருளுக்காக நாம் ஏன் யெகோவாவுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? உதாரணத்திற்கு, ஒருவர் தன் நேரம், முயற்சி, பணம் ஆகியவற்றைத் தியாகம் செய்து ஒரு பரிசை வாங்கிக் கொடுக்கிறார் என்றால், அதை உண்மையிலேயே அரும்பெரும் பரிசாகக் கருதுவோம். பரிசைக் கொடுப்பவர் நம்மீதான உள்ளப்பூர்வ அன்பின் காரணமாக அந்தப் பரிசைக் கொடுக்கிறார் என்பதை அறியும்போது நாம் அப்படியே நெகிழ்ந்து போகிறோம். எல்லாப் பரிசுகளையும்விட மீட்கும்பொருள்தான் மிக மிக அருமையான பரிசு, ஏனெனில் அதைக் கொடுப்பதற்காக, கடவுள் மாபெரும் தியாகத்தைச் செய்தார். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை . . . தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என யோவான் 3:16 சொல்கிறது. யெகோவாவுக்கு நம்மீது உள்ள அன்பின் மிகச் சிறந்த அத்தாட்சிதான் மீட்கும்பொருளாகும். இயேசுவின் அன்பிற்கும் இது அத்தாட்சி அளிக்கிறது, ஏனெனில் அவர் நமக்காக தம்முடைய உயிரை மனமுவந்து கொடுத்தார். (யோவான் 15:13) அதனால், யெகோவாவும் அவருடைய குமாரனும் நம் ஒவ்வொருவரையுமே நேசிக்கிறார்கள் என்பதை மீட்கும்பொருள் என்ற பரிசு நமக்கு உறுதிப்படுத்துகிறது.—கலாத்தியர் 2:20.
19, 20. கடவுளுடைய பரிசான மீட்கும்பொருளுக்கு எந்தெந்த வழிகளில் நீங்கள் நன்றி காட்டலாம்?
19 அப்படியானால், கடவுளுடைய பரிசான மீட்கும்பொருளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்? முதலாவதாக, மாபெரும் கொடைவள்ளலான யெகோவா தேவனைப் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். (யோவான் 17:3) இந்தப் பிரசுரத்தின் உதவியோடு பைபிளைப் படிப்பது யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்குத் துணைபுரியும். யெகோவாவைப் பற்றிய அறிவிலே நீங்கள் வளர வளர, அவர் மீதுள்ள உங்கள் அன்பும் அதிகரிக்கும். அந்த அன்பு யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள உங்களைத் தூண்டும்.—1 யோவான் 5:3.
20 இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசத்தைக் காட்டுங்கள். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என்று இயேசுவைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (யோவான் 3:36) இயேசுவின் மீது நமக்கு விசுவாசம் இருப்பதை எப்படிக் காட்டலாம்? அத்தகைய விசுவாசம் வெறும் வார்த்தைகளால் காட்டப்படுவதில்லை. ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ என யாக்கோபு 2:26 சொல்கிறது. ஆம், உண்மையான விசுவாசம் “கிரியைகளில்,” அதாவது நம்முடைய செயல்களில் வெளிக்காட்டப்படுகிறது. இயேசுவில் விசுவாசம் இருப்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி, நம் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் முடிந்தமட்டும் அவரது மாதிரியைப் பின்பற்றுவதாகும்.—யோவான் 13:15.
21, 22. (அ) வருடாவருடம் நடைபெறுகிற கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? (ஆ) 6, 7 அதிகாரங்களில் எது விளக்கப்படும்?
21 கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பில் வருடாவருடம் கலந்துகொள்ளுங்கள். பொ.ச. 33-ம் வருடம், நிசான் 14 அன்று சாயங்கால வேளையில், ஒரு விசேஷ ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தார்; பைபிள் அதை “கர்த்தருடைய இராப்போஜனம்” என்று அழைக்கிறது. (1 கொரிந்தியர் 11:21; மத்தேயு 26:26-28) இந்த ஆசரிப்பு, இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பரிபூரண மனிதனாக மரித்ததன் மூலம் இயேசு தம் உயிரை மீட்கும்பொருளாகக் கொடுத்தார் என்பதை அப்போஸ்தலர்களும் அவர்களுக்குப் பின் வந்த மெய்க் கிறிஸ்தவர்களும் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இந்த ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற கட்டளையையும் கொடுத்தார். (லூக்கா 22:19) மீட்கும்பொருள் சம்பந்தமாக யெகோவாவும் இயேசுவும் காண்பித்த மாபெரும் அன்பை இந்த நினைவுநாள் ஆசரிப்பு நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆக, இயேசுவின் வருடாந்தர நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்வதன் மூலம் மீட்கும்பொருளுக்கு நம் நன்றியைக் காட்டலாம்.a
22 யெகோவா நமக்குத் தந்திருக்கிற மீட்கும்பொருள் உண்மையிலேயே விலையேறப்பெற்ற ஒரு பரிசுதான். (2 கொரிந்தியர் 9:14, 15) இந்தப் பரிசு இறந்தவர்களுக்கும்கூட நன்மையளிக்கும். எப்படி? 6, 7 அதிகாரங்களில் அது விளக்கப்படும்.
a கர்த்தருடைய இராப்போஜனத்தின் அர்த்தத்தைப் பற்றிய கூடுதலான தகவல்களுக்கு, பக்கங்கள் 206-8-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.