அதிகாரம் 5
மந்தையை மேய்க்கும் கண்காணிகள்
பூமியில் ஊழியம் செய்த சமயத்தில் இயேசு ஒரு ‘நல்ல மேய்ப்பராக’ இருந்தார். (யோவா. 10:11) மக்கள் கூட்டம் ஆர்வத்தோடு தன்னிடம் வந்ததைப் பார்த்தபோது “அவருடைய மனம் உருகியது; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.” (மத். 9:36) அந்த மக்களிடம் அவர் அன்பையும் அக்கறையையும் காட்டியதை பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் கவனித்தார்கள். இஸ்ரவேலில் இருந்த மேய்ப்பர்கள் தங்களுடைய ஆடுகளைக் கொஞ்சம்கூட கவனித்துக்கொள்ளவே இல்லை. அதனால், அந்த ஆடுகள் சிதறிப்போயின, பசியில் வாடின. (எசே. 34:7, 8) இயேசுவுக்கும் இஸ்ரவேலில் இருந்த போலி மேய்ப்பர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் அவர்கள்மேல் அக்கறை காட்டுவதிலும் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்தார். சொல்லப்போனால், அவர்களுக்காகத் தன்னுடைய உயிரையே கொடுத்தார். அவருடைய முன்மாதிரியைப் பார்த்த அப்போஸ்தலர்கள், “உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும்” இருக்கிற யெகோவாவிடம் திரும்பி வர விசுவாசமுள்ள மக்களுக்கு எப்படி உதவலாம் என்பதைக் கற்றுக்கொண்டார்கள்.—1 பே. 2:25.
2 ஒருசமயம், ஆடுகளுக்கு உணவு கொடுத்து அவற்றை மேய்ப்பது எவ்வளவு முக்கியம் என்று பேதுருவிடம் இயேசு சொன்னார். (யோவா. 21:15-17) இது பேதுருவின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால்தான், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்த மூப்பர்களுக்கு பிற்பாடு இப்படி அறிவுரை கொடுத்தார்: “உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள். கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும், அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல் ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள். கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மேல் ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.” (1 பே. 5:1-3) பேதுரு கொடுத்த அறிவுரை, இன்றுள்ள மூப்பர்களுக்கும் பொருந்துகிறது. இயேசுவைப் போலவே மூப்பர்களும், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருந்து, யெகோவாவின் சேவையை மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் செய்கிறார்கள்; சபையை முன்நின்று வழிநடத்துகிறார்கள்.—எபி. 13:7.
இயேசுவைப் போலவே மூப்பர்களும், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருந்து, மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் சேவை செய்கிறார்கள்; யெகோவாவின் சேவையில் முன்நின்று வழிநடத்துகிறார்கள்
3 கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்ட கண்காணிகள் சபையில் இருப்பதற்காக நாம் நன்றியோடு இருக்கிறோம். அவர்கள் நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்வதால் நிறைய நன்மைகள் அடைகிறோம். உதாரணத்துக்கு, சபையிலுள்ள எல்லாரையும் அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள், ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டுகிறார்கள். வாராவாரம் சபைக் கூட்டங்களைப் பொறுப்போடு தலைமைதாங்கி நடத்துவதன் மூலம், சபையாரின் விசுவாசம் பலப்படுவதற்கு உதவுகிறார்கள். (ரோ. 12:8) கெட்ட விஷயங்களிலிருந்தும் கெட்ட ஆட்களிடமிருந்தும் மந்தையைக் காப்பாற்ற அவர்கள் நடவடிக்கை எடுப்பதால் நமக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. (ஏசா. 32:2; தீத். 1:9-11) ஊழியத்தை அவர்கள் முன்நின்று வழிநடத்துவதால், ஒவ்வொரு மாதமும் பிரசங்க வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்வதற்கான உற்சாகம் நமக்குக் கிடைக்கிறது. (எபி. 13:15-17) சபையைப் பலப்படுத்துவதற்காக யெகோவா இந்த “மனிதர்களைப் பரிசுகளாகக்” கொடுத்திருக்கிறார்.—எபே. 4:8, 11, 12.
கண்காணிகளுக்கான தகுதிகள்
4 சபையை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றால், கண்காணிகளாக நியமிக்கப்படுகிற ஆண்களுக்குக் கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கிற தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் மட்டும்தான் அவர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியும். (அப். 20:28) கண்காணியாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது, அது ஒரு பெரிய பொறுப்பு. அதனால்தான், கிறிஸ்தவக் கண்காணிகளிடம் எதிர்பார்க்கப்படுகிற இந்தத் தகுதிகள் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், யாராலும் எட்ட முடியாத அளவுக்கு இவை உயர்ந்தவை கிடையாது. ஒருவருக்கு யெகோவாமீது உண்மையிலேயே அன்பு இருந்தால்... யெகோவா தன்னைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பினால்... கண்டிப்பாக இந்தத் தகுதிகளை அவரால் எட்ட முடியும். கண்காணிகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பைபிள் சொல்கிறபடி நடக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் பளிச்செனத் தெரிய வேண்டும்.
சபையை நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றால், கண்காணிகளாக நியமிக்கப்படுகிறவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கிற தகுதிகள் இருக்க வேண்டும்
5 தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்திலும் தீத்துவுக்கு எழுதிய கடிதத்திலும் கண்காணிகளுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அதைப் பற்றி 1 தீமோத்தேயு 3:1-7 இப்படிச் சொல்கிறது: “கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார். அதனால், கண்காணியாக இருப்பவர் குற்றம்சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை உடையவராகவும், பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவராகவும், தெளிந்த புத்தியுள்ளவராகவும், ஒழுங்குள்ளவராகவும், உபசரிக்கும் குணமுள்ளவராகவும், கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும் இருக்க வேண்டும்; குடிகாரராகவும், மூர்க்கமானவராகவும் இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நியாயமானவராகவும், தகராறு செய்யாதவராகவும், பண ஆசையில்லாதவராகவும், தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும், நல்ல நடத்தையும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளை உடையவராகவும் இருக்க வேண்டும். (ஒருவருக்குத் தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியவில்லை என்றால் கடவுளுடைய சபையை எப்படிக் கவனித்துக்கொள்வார்?) அதோடு, அவர் சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்கக் கூடாது. ஏனென்றால், அவருக்குத் தலைக்கனம் வந்துவிடலாம், இதனால் பிசாசுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை அவருக்கும் கிடைத்துவிடலாம். அதுமட்டுமல்ல, வெளியாட்களிடமும் நல்ல பெயர் எடுத்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர் பழிச்சொல்லுக்கு ஆளாகாமலும், பிசாசின் வலையில் விழாமலும் இருப்பார்.”
6 தீத்துவுக்கு பவுல் இப்படி எழுதினார்: “தவறுகளை சரிசெய்வதற்காகவும், என் அறிவுரையின்படி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிப்பதற்காகவும் நான் உன்னை கிரேத்தா தீவில் விட்டுவந்தேன். அப்படி நியமிக்கப்படுகிறவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும், ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும்; அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். கண்காணியாக இருப்பவர் கடவுளால் நியமிக்கப்பட்ட நிர்வாகி என்பதால், அவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும்; தன்னுடைய இஷ்டப்படி நடக்கிறவராகவோ, முன்கோபக்காரராகவோ, குடிகாரராகவோ, மூர்க்கமானவராகவோ, அநியாய லாபம் சம்பாதிக்க அலைகிறவராகவோ இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, உபசரிக்கும் குணமுள்ளவராக, நல்ல காரியங்களை விரும்புகிறவராக, தெளிந்த புத்தியுள்ளவராக, நீதியுள்ளவராக, உண்மையுள்ளவராக, சுயக்கட்டுப்பாடுள்ளவராக இருக்க வேண்டும். அதோடு, கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தும்போது சத்திய வார்த்தையை உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்கிறவராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், பயனுள்ள போதனைகளின் மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும், அந்தப் போதனைகளுக்கு முரணாகப் பேசுகிறவர்களைக் கண்டிக்கவும் அவரால் முடியும்.”—தீத்து 1:5-9.
7 கண்காணிகளிடம் எதிர்பார்க்கப்படுகிற இந்தத் தகுதிகளைப் பற்றிப் படிக்கும்போது, ‘இவ்வளவு தகுதிகளா?!’ என்று நாம் நினைக்கலாம். ஆனாலும், கண்காணியாவதற்கு முயற்சி செய்ய கிறிஸ்தவ ஆண்கள் தயங்கக் கூடாது. கண்காணிகள் தங்களிடம் எதிர்பார்க்கப்படுகிற நல்ல கிறிஸ்தவக் குணங்களைக் காட்டும்போது, சபையிலுள்ள மற்றவர்களும் அதே குணங்களைக் காட்டுவதற்குத் தூண்டப்படுவார்கள். இப்படிப்பட்ட “மனிதர்களைப் பரிசுகளாக” கடவுள் கொடுத்ததற்கான காரணத்தை பவுல் இப்படி எழுதினார்: “பரிசுத்தவான்களைச் சரிப்படுத்துவதற்காகவும், ஊழியம் சம்பந்தமான வேலைகளைச் செய்வதற்காகவும், கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்காகவும் அவர்களைக் கொடுத்தார். நாம் எல்லாரும் விசுவாசத்திலும் கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவிலும் ஒன்றுபட்டு இருப்பதற்காகவும், கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி அடைவதற்காகவும் அவர்களைக் கொடுத்தார்.”—எபே. 4:8, 12, 13.
8 ஒரு கண்காணி, வயதுவராத பையனாக அல்லது சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவமுள்ளவராக இருப்பார். பைபிளைப் பற்றி நன்றாகத் தெரிந்தவராகவும், வசனங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும், சபைமீது உண்மையான அன்பு காட்டுகிறவராகவும் இருப்பார். யாராவது தவறு செய்தால் அதைப் பற்றித் தைரியமாகப் பேசி, அவர்களைச் சரிசெய்வார். இப்படிச் செய்வதன் மூலம் சுயநலத்துக்காக ஆடுகளைத் தவறாகப் பயன்படுத்துகிற ஆட்களிடமிருந்து மந்தையைப் பாதுகாப்பார். (ஏசா. 32:2) கண்காணிகள் ஆன்மீக விதத்தில் முதிர்ச்சி உள்ளவர்கள் என்பதும், கடவுளுடைய மந்தைமீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதும் சபையிலுள்ள எல்லாருக்கும் பளிச்செனத் தெரியும்.
9 கண்காணிகளாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஞானமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்வார்கள். ஒரு கண்காணி திருமணமானவராக இருந்தால், மணவாழ்க்கை சம்பந்தமாக பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை அவர் கடைப்பிடிப்பார். அதாவது, ஒரே மனைவியை உடையவராகவும் தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும் இருப்பார். அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், நல்ல நடத்தையும் கீழ்ப்படிதலும் உள்ளவர்களாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்கும்போது, சபையிலுள்ளவர்களால் தங்களுடைய குடும்ப விஷயங்களையும் மற்ற விஷயங்களையும் பற்றி அவரிடம் நம்பிக்கையோடு ஆலோசனை கேட்க முடியும். அதுமட்டுமல்ல, ஒரு கண்காணி, குற்றம்சாட்டப்படாதவராக... வெளியாட்களிடமும் நல்ல பெயர் எடுத்தவராக... இருப்பார். சபையின் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு அவருடைய நடத்தைமீது எந்தவொரு நியாயமான குற்றச்சாட்டும் வந்துவிடக் கூடாது. படுமோசமான தவறு செய்ததற்காக சமீபத்தில் கண்டிக்கப்பட்டவராகவும் அவர் இருக்கக் கூடாது. அப்போதுதான், சபையிலுள்ள மற்றவர்கள் அவருடைய நல்ல நடத்தையைப் பின்பற்றத் தூண்டப்படுவார்கள், அவர்கள் தரும் ஆன்மீக வழிநடத்துதலை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள்.—1 கொ. 11:1; 16:15, 16.
10 இஸ்ரவேலில் இருந்த “ஞானமும் விவேகமும் அனுபவமும்” உள்ள மூப்பர்கள் செய்ததைப் போன்ற ஒரு சேவையை, தகுதியுள்ள இந்த ஆண்களும் கிறிஸ்தவ சபையில் செய்கிறார்கள். (உபா. 1:13) மூப்பர்கள் பாவ இயல்புள்ளவர்கள்தான். ஆனாலும், நேர்மையானவர்கள், கடவுள்பயம் உள்ளவர்கள் என சபையிலும் வெளியிலும் பெயரெடுத்தவர்களாக இருப்பார்கள். பைபிள் நியமங்களின்படி நடக்கிறவர்கள் என்பதைப் போதுமான காலத்துக்கு நிரூபித்துக் காட்டியிருப்பார்கள். அவர்கள் குற்றமற்றவர்களாக இருப்பதால், சபையில் தயக்கமின்றி தைரியமாக அவர்களால் பேச முடியும்.—ரோ. 3:23.
11 கண்காணிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் தங்களுடைய பழக்கவழக்கங்களிலும் அளவுக்குமீறி போகாதவர்களாக இருப்பார்கள். எதிலுமே வெறித்தனமாக இருக்க மாட்டார்கள். எல்லா விஷயங்களிலும் சமநிலையாகவும் சுயக்கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்வார்கள். சாப்பிடுவது, குடிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, விருப்ப வேலைகளைச் செய்வது (Hobby) போன்றவற்றில் அளவோடு இருப்பார்கள். மதுபானத்தைக் குடிப்பதாக இருந்தால், நிதானம் இழக்குமளவுக்குக் குடித்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்களாக இருப்பார்கள்; குடிகாரர் என்று பெயர் எடுக்காதவர்களாகவும் இருப்பார்கள். குடிபோதை ஒருவருடைய உணர்வுகளை மழுங்கிப்போக வைப்பதால் அவர் எளிதில் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிடுவார். அதனால் சபைப் பொறுப்புகளை அவரால் கவனிக்க முடியாது.
12 சபையில் கண்காணிக்கும் பொறுப்பைச் செய்பவர், ஒழுங்குள்ளவராக இருக்க வேண்டும். அவருக்கு நல்ல பழக்கங்கள் இருப்பது, அவருடைய தோற்றத்திலும், வீட்டை வைத்திருக்கும் விதத்திலும், தினமும் செய்கிற விஷயங்களிலும் பளிச்செனத் தெரியும். வேலைகளை அவர் தள்ளிப்போட மாட்டார். அதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க திட்டம் போடுவார். எப்போதும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பார்.
13 ஒரு கண்காணி, நியாயமானவராக இருக்க வேண்டும். மூப்பர் குழுவில் இருக்கிற மற்றவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்பவராகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறவராக இருக்கக் கூடாது. அவர் தன்னை உயர்வாக நினைக்க மாட்டார். நியாயமான ஒரு மூப்பர், தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதமாக இருக்க மாட்டார், மற்ற மூப்பர்களுடைய கருத்துகளைவிடத் தன்னுடைய கருத்துதான் உயர்ந்தது என நினைக்க மாட்டார். ஏனென்றால், அவரிடம் இல்லாத சில குணங்களோ திறமைகளோ மற்றவர்களிடம் இருக்கலாம் என்பதைப் புரிந்து வைத்திருப்பார். நியாயமான ஒரு மூப்பர், பைபிளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பவராகவும், இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றக் கடினமாக முயற்சி செய்பவராகவும் இருப்பார். (பிலி. 2:2-8) ஒரு மூப்பர் தகராறு செய்கிறவராகவோ மூர்க்கமானவராகவோ இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களைத் தன்னைவிட உயர்ந்தவர்களாக நினைப்பார். அவர் தன்னுடைய இஷ்டப்படி நடக்க மாட்டார். அதாவது, தான் சொல்கிறபடிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்றோ, தன்னுடைய கருத்தைத்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ எப்போதும் வற்புறுத்துகிறவராக இருக்க மாட்டார். அவர் முன்கோபக்காரராக இருக்க மாட்டார், மற்றவர்களோடு சமாதானமாக நடந்துகொள்வார்.
14 சபையில் கண்காணியாகச் சேவை செய்வதற்குத் தகுதிபெறுகிறவர் தெளிந்த புத்தியுள்ளவராகவும் இருப்பார். அதாவது, அவசரப்படாமல் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார். யெகோவாவின் நியமங்களையும் அவற்றை எப்படிப் பொருத்தலாம் என்பதையும் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பார். தெளிந்த புத்தியுள்ள ஒருவர், தனக்குக் கொடுக்கப்படும் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்வார். அவர் வெளிவேஷம் போட மாட்டார்.
15 ஒரு கண்காணி நல்ல காரியங்களை விரும்புகிறவராக இருப்பார் என தீத்துவுக்கு பவுல் ஞாபகப்படுத்தினார். அவர் நீதியுள்ளவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தக் குணங்கள், மற்றவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதத்தில் பளிச்செனத் தெரியும். எது சரியோ, எது நல்லதோ அதற்கு அவர் முழு ஆதரவு கொடுப்பார். யெகோவாமீது எப்போதும் பயபக்தியுள்ளவராக இருப்பார். கடவுளுடைய நீதிநெறிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார். ரகசியத்தைக் காப்பவராக இருப்பார். உபசரிக்கும் குணமுள்ளவராகவும் இருப்பார். மற்றவர்களுக்காகத் தன் நேரத்தையும் சக்தியையும் உடைமைகளையும் தாராளமாகக் கொடுக்கிறவராக இருப்பார்.—அப். 20:33-35.
16 ஒரு கண்காணி திறமையாகச் சேவை செய்ய வேண்டுமென்றால், அவர் கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். தீத்துவுக்கு பவுல் சொன்னபடி ஒரு கண்காணி, “கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தும்போது சத்திய வார்த்தையை உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்கிறவராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், பயனுள்ள போதனைகளின் மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும், அந்தப் போதனைகளுக்கு முரணாகப் பேசுகிறவர்களைக் கண்டிக்கவும் அவரால் முடியும்.” (தீத். 1:9) திறமையாகக் கற்பிக்கும் கண்காணியால் நியாயங்காட்டிப் பேசவும், ஆதாரங்களை எடுத்துக்காட்டவும், எதிர்த்துக் கேள்வி கேட்கிறவர்களைச் சமாளிக்கவும் முடியும்; அதோடு, மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும் விதத்திலும் வசனங்களைப் பொருத்திக்காட்ட முடியும். (2 தீ. 4:2) தவறு செய்த ஒருவரைச் சாந்தமாகக் கண்டிப்பதற்குத் தேவையான பொறுமை ஒரு கண்காணிக்கு இருக்கும். அதேபோல், சந்தேகப்படுகிற ஒருவரின் விசுவாசத்தைப் பலப்படுத்தி, நல்ல செயல்கள் செய்ய அவரைத் தூண்டுவதற்குத் தேவையான பொறுமையும் அவருக்கு இருக்கும். கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராக இருப்பது, கண்காணிகளுக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதி. மேடையிலிருந்து பேசும்போது அல்லது தனி நபர்களிடம் பேசும்போது அவர்கள் கற்பிக்கும் கலையைப் பயன்படுத்த வேண்டும்; இந்த இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்றில் திறமை இருந்தாலும், கண்காணியாக இருப்பதற்கு அவர்கள் தகுதி பெறுவார்கள்.
17 மூப்பர்கள் அதிக ஆர்வத்தோடு ஊழியம் செய்வது முக்கியம். ஊழியத்துக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், இயேசுவைப் பின்பற்ற அவர்கள் கடினமாக முயற்சி செய்வது தெளிவாகத் தெரிய வேண்டும். இயேசு தன்னுடைய சீஷர்கள்மீது அக்கறை காட்டி, ஊழியத்தைத் திறமையாகச் செய்யக் கற்றுக்கொடுத்தார். (மாற். 1:38; லூக். 8:1) மூப்பர்கள் பல வேலைகள் மத்தியிலும் ஊழியத்தில் கலந்துகொள்ளத் தீர்மானமாக இருப்பதைச் சபையார் பார்க்கும்போது, அவர்களும் ஊழியத்தை மும்முரமாகச் செய்யத் தூண்டப்படுவார்கள். மூப்பர்கள் தங்களுடைய குடும்பத்தாரோடும் சபையிலுள்ள மற்றவர்களோடும் சேர்ந்து ஊழியம் செய்யும்போது ‘ஒருவருக்கொருவர் உற்சாகம் பெறுவார்கள்.’—ரோ. 1:11, 12.
18 இந்த எல்லா தகுதிகளையும் பார்க்கும்போது, ஒரு கண்காணியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுவது போலத் தோன்றலாம். பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த உயர்ந்த தகுதிகளை எந்தவொரு கண்காணியாலும் நூறு சதவீதம் முழுமையாக எட்ட முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், ஒரு பெரிய குறையாக தெரியுமளவுக்கு, இந்தத் தகுதிகளில் ஏதாவது ஒன்றில்கூட ரொம்பவும் குறைவுபடக் கூடாது. மூப்பர்கள் சிலரிடம் ஒருசில நல்ல குணங்கள் பளிச்சென்று தெரியலாம். மற்ற மூப்பர்களிடம் வேறுசில நல்ல குணங்கள் பளிச்சென்று தெரியலாம். இவர்கள் ஒன்றுசேர்ந்து செயல்படும்போது, கடவுளுடைய சபையை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான எல்லா குணங்களும் அந்த மூப்பர் குழுவுக்கு இருக்கும்.
19 ஒரு சகோதரரைக் கண்காணியாக நியமிப்பதற்கு சிபாரிசு செய்யும்போது, அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகளை மூப்பர் குழு மனதில் வைக்க வேண்டும். “உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல், அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற விசுவாசத்தின்படியே எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும்” என்று அவர் சொன்னார். (ரோ. 12:3) ஒவ்வொரு மூப்பரும் தன்னை மற்றவர்களைவிடத் தாழ்ந்தவராக நினைக்க வேண்டும். ஒருவருடைய தகுதிகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது மூப்பர்கள் யாருமே தங்களை ‘பெரிய நீதிமான்போல்’ காட்டிக்கொள்ளக் கூடாது. (பிர. 7:16) மூப்பர் குழு ஒரு சகோதரரை நியமிப்பதற்கு முன்பு, கண்காணிகளுக்கான தகுதிகளைப் பற்றி பைபிள் சொல்வதை மனதில் வைக்க வேண்டும். அந்தச் சகோதரருக்கு அந்தத் தகுதிகள் நியாயமான அளவுக்கு இருக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். மனிதர்கள் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை மனதில் வைத்து, பாரபட்சமில்லாமலும் போலித்தனம் இல்லாமலும் சிபாரிசு செய்ய வேண்டும். யெகோவாவின் நீதிநெறிகளுக்கு மதிப்புக் காட்டும் விதத்திலும் சபைக்கு நன்மை தரும் விதத்திலும் அதைச் செய்ய வேண்டும். ஒரு சகோதரரைக் கண்காணியாக சிபாரிசு செய்வதற்கு முன், மூப்பர்கள் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்வார்கள். அதற்குப் பிறகுதான், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகள் அவருக்கு இருக்கின்றனவா என்பதைக் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பார்கள். இது அவர்களுடைய முக்கியமான பொறுப்புகளில் ஒன்று. அதனால், “யாரையும் அவசரப்பட்டு நியமித்துவிடாதே” என்று பவுல் கொடுத்த அறிவுரைக்கு ஏற்றபடி அதை அவர்கள் செய்ய வேண்டும்.—1 தீ. 5:21, 22.
கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்
20 ஆன்மீகத் தகுதிகளைப் பெற்ற ஆண்கள், தாங்கள் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதைச் செயலில் காட்டுவார்கள். கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் காட்டுவார்கள். பவுல் பட்டியலிட்ட அந்த ஒன்பது குணங்கள் இவைதான்: “அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு.” (கலா. 5:22, 23) இந்தக் குணங்களைக் காட்டும் கண்காணிகள், சபையிலுள்ள சகோதரர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறார்கள், ஒற்றுமையாகப் பரிசுத்த சேவை செய்ய சபையாருக்கு உதவுகிறார்கள். அவர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்களுடைய நடத்தையும் உழைப்பின் பலன்களும் காட்டுகின்றன.—அப். 20:28.
ஒற்றுமைக்கு வழிசெய்கிறவர்கள்
21 சபையின் ஒற்றுமைக்காக மூப்பர்கள் ஒன்றுசேர்ந்து உழைப்பது முக்கியம். அவர்கள் ஒவ்வொருவருடைய சுபாவமும் வித்தியாசப்பட்டதாக இருக்கலாம். அதோடு, கலந்துபேசுகிற எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும், ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்புக் கொடுத்து அதைக் கவனமாகக் கேட்பதன் மூலம் சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறார்கள். எந்தவொரு பைபிள் நியமமும் மீறப்படாதவரை, ஒவ்வொரு மூப்பரும் வளைந்துகொடுத்து, மூப்பர் குழுவாக எடுக்கும் முடிவுக்கு ஆதரவு கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இப்படி வளைந்துகொடுக்கும்போது, ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம்’ வழிநடத்துகிறபடி ‘சமாதானம் பண்ணுகிறவர்களாக, நியாயமானவர்களாக’ இருப்பதைக் காட்ட முடியும். (யாக். 3:17, 18) எந்தவொரு மூப்பரும் மற்ற மூப்பர்களைவிடத் தன்னை உயர்ந்தவராக நினைக்கவோ அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது. சபையின் நன்மைக்காக மூப்பர்கள் ஒரு குழுவாக ஒத்துழைக்கும்போது உண்மையில் அவர்கள் யெகோவாவோடு ஒத்துழைக்கிறார்கள்.—1 கொ., அதி. 12; கொலோ. 2:19.
கண்காணியாவதற்கு முயற்சி செய்வது
22 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஆண்கள் கண்காணிகளாக ஆவதற்கு விரும்ப வேண்டும். (1 தீ. 3:1) ஆனால், மூப்பராகச் சேவை செய்வதற்கு உழைப்பும் சுயதியாகமும் தேவை. அப்படியென்றால், சகோதரர்களுடைய ஆன்மீகத் தேவைகளைக் கவனித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மூப்பராக ஆவதற்கு முயற்சி செய்கிற ஒருவர், பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை எட்ட கடுமையாக உழைக்க வேண்டும்.
தனிப்பட்ட சூழ்நிலைகள் மாறலாம்
23 பல காலமாக உண்மையோடு சேவை செய்துவந்த ஒரு சகோதரருக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சினை வந்துவிடலாம் அல்லது முன்புபோல் அவரால் சேவை செய்ய முடியாமல் போகலாம். ஒருவேளை வயதாகிவிட்டதால், கண்காணிக்கும் பொறுப்புகளை இனியும் கவனிக்க முடியாமல் போகலாம். ஆனாலும், அவர் தொடர்ந்து ஒரு மூப்பராக இருப்பதால், அவருக்கு மதிப்பு மரியாதை கொடுக்க வேண்டும். முன்புபோல் எல்லாவற்றையும் செய்ய முடியாததால், அவர் தன்னுடைய பொறுப்பைவிட்டு விலக வேண்டியதில்லை. மந்தையை மேய்ப்பதற்குத் தங்களுடைய திறமைகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்தி கடினமாக உழைக்கிற எல்லா மூப்பர்களுக்கும் கொடுக்க வேண்டிய இரட்டிப்பான மதிப்பைப் பெற இவரும் தகுதியுள்ளவர்தான்.
24 ஆனால், தன்னுடைய சூழ்நிலை மாறிவிட்டதால் முன்புபோல் சேவை செய்ய முடியாமல் போகும்போது பொறுப்பிலிருந்து விலகிவிடுவதுதான் நல்லது என ஒரு சகோதரர் நினைத்தால் அவர் விலகிவிடலாம். (1 பே. 5:2) இருந்தாலும், அவருக்குத் தொடர்ந்து மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், மூப்பர்களுக்குக் கொடுக்கப்படுகிற நியமிப்புகளையோ வேலைகளையோ அவர் இனி செய்யாவிட்டாலும், மற்ற விதங்களில் சபைக்கு மிகவும் பிரயோஜனமானவராகவே இருப்பார்.
சபையில் பல்வேறு பொறுப்புகள்
25 சபையில் மூப்பர்களுக்கு வித்தியாசப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக... செயலராக... ஊழியக் கண்காணியாக... காவற்கோபுர படிப்பு நடத்துபவராக... அல்லது வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணியாக... அவர்கள் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மூப்பர்கள் நிறைய பேர் தொகுதிக் கண்காணிகளாகச் சேவை செய்கிறார்கள். இந்த மூப்பர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் இந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், ஒரு சகோதரர் வேறு இடத்துக்குக் குடிமாறிப்போய்விடலாம்; அல்லது, உடல்நலப் பிரச்சினை காரணமாகத் தன்னுடைய பொறுப்பைச் செய்ய முடியாமல் போகலாம். அல்லது, பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளை இழந்துவிடுவதால் இந்தப் பொறுப்புக்குத் தகுதியற்றவராக ஆகிவிடலாம். அப்போது, அந்தப் பொறுப்பைச் செய்ய இன்னொரு மூப்பர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூப்பர்கள் அதிகமாக இல்லாத சபைகளில், புதிய மூப்பர்கள் நியமிக்கப்படும்வரை ஒரு சகோதரர் ஒன்றுக்கும் அதிகமான பொறுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கலாம்.
26 மூப்பர் குழு நடத்துகிற கூட்டங்களுக்கு மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேர்மனாக இருப்பார். அதுமட்டுமல்ல, கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வதில், மற்ற மூப்பர்களோடு சேர்ந்து தாழ்மையாக உழைப்பார். (ரோ. 12:10; 1 பே. 5:2, 3) அவர் நல்ல விதத்தில் ஒழுங்கமைக்கிறவராகவும் ஊக்கம் தளராமல் தலைமை தாங்குகிறவராகவும் இருக்க வேண்டும்.—ரோ. 12:8.
27 சபையின் ரெக்கார்டுகளை செயலர் கவனித்துக்கொள்வார். அதோடு, மூப்பர் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கியமான கடிதங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவார். தேவைப்பட்டால், அவருக்கு உதவ இன்னொரு மூப்பரோ தகுதியுள்ள ஒரு உதவி ஊழியரோ நியமிக்கப்படலாம்.
28 ஊழியக் கண்காணி, வெளி ஊழிய ஏற்பாடுகளையும் ஊழியம் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் கவனித்துக்கொள்வார். எல்லா வெளி ஊழியத் தொகுதிகளையும் தவறாமல் சந்திப்பதற்காக அவர் அட்டவணை போடுவார். அதன்படி ஒவ்வொரு மாதத்திலும் ஒரு வாரயிறுதியில் ஒரு தொகுதியைச் சந்திப்பார். சிறிய சபைகளில் சில தொகுதிகள் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு தொகுதியையும் வருஷத்துக்கு இரண்டு முறை அவர் சந்திக்கலாம். அப்படிச் சந்திக்கும்போது அவர் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவார், அந்தத் தொகுதியிலுள்ள சகோதர சகோதரிகளோடு ஊழியம் செய்வார், மறுசந்திப்பு செய்யவும் பைபிள் படிப்பு நடத்தவும் பிரஸ்தாபிகளுக்கு உதவுவார்.
தொகுதிக் கண்காணிகள்
29 சபையில் தொகுதிக் கண்காணியாகச் சேவை செய்வது ஒரு விசேஷ வாய்ப்பு. (1) வெளி ஊழியத் தொகுதியில் இருக்கிற ஒவ்வொரு நபரின் ஆன்மீகத் தேவைகளில் அதிக அக்கறை காட்டுவது, (2) தொகுதியிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமலும் ஆர்வத்தோடும் சந்தோஷமாகவும் ஊழியத்தில் ஈடுபட உதவுவது, (3) சபைப் பொறுப்புகளைச் செய்வதற்குத் தகுதிபெற தொகுதியிலுள்ள உதவி ஊழியர்களுக்கு உதவுவது, பயிற்சி அளிப்பது ஆகியவை அவருடைய பொறுப்புகளில் அடங்கும். இந்த எல்லா பொறுப்புகளையும் சரிவரச் செய்வதற்குத் தகுதிபெற்ற சகோதரர்கள் யார் என்பதை மூப்பர் குழு தீர்மானிக்கும்.
30 இத்தனை வேலைகள் இதில் உட்பட்டிருப்பதால், முடிந்தவரை மூப்பர்களே தொகுதிக் கண்காணிகளாக இருக்க வேண்டும். அல்லது, ஒரு மூப்பர் நியமிக்கப்படும்வரை தகுதியுள்ள ஒரு உதவி ஊழியர் அந்தப் பொறுப்பைச் செய்யலாம். அந்தப் பொறுப்பைச் செய்கிற உதவி ஊழியர், சபையின் கண்காணியாக இல்லாததால் அவர் தொகுதி ஊழியர் என அழைக்கப்படுவார். மூப்பர்கள் கொடுக்கிற ஆலோசனைப்படி அவர் தன்னுடைய பொறுப்பைச் செய்வார்.
31 ஊழியத்தில் முன்நின்று வழிநடத்துவதுதான் தொகுதிக் கண்காணியின் முக்கியமான வேலை. அவர் தவறாமலும், ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் ஊழியத்தில் ஈடுபடுவதைப் பார்த்து தொகுதியிலுள்ள சகோதர சகோதரிகளும் உற்சாகம் அடைவார்கள். தொகுதியாக ஊழியம் செய்யும்போது பிரஸ்தாபிகளுக்கு உற்சாகமும் உதவியும் கிடைப்பதால், தொகுதியிலுள்ள பெரும்பாலோருக்கு வசதியான நேரத்தில் ஊழியம் செய்ய அட்டவணை போடுவது நல்லது. (லூக். 10:1-16) ஊழியம் செய்வதற்குப் போதுமான இடம் இருக்கிறதா என்பதைத் தொகுதிக் கண்காணி எப்போதுமே உறுதிசெய்ய வேண்டும். பொதுவாக அவர்தான் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவார். பிறகு, பிரஸ்தாபிகளை ஊழியத்துக்கு அனுப்புவார். அவரால் வர முடியாதபோது, வேறொரு மூப்பரையோ உதவி ஊழியரையோ அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்களும் இல்லாத பட்சத்தில், தகுதியுள்ள ஒரு பிரஸ்தாபியை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான், பிரஸ்தாபிகளுக்குத் தேவையான வழிநடத்துதலைக் கொடுக்க முடியும்.
32 ஊழியக் கண்காணியின் சந்திப்புக்காக தொகுதிக் கண்காணி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஊழியக் கண்காணி சந்திக்கப் போவதைப் பற்றித் தன்னுடைய தொகுதியிலுள்ள சகோதர சகோதரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கப் போவதைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும். இந்த ஏற்பாட்டைப் பற்றி தொகுதியிலுள்ள எல்லாருக்கும் தெரிந்திருக்கும்போது அவர்களால் உற்சாகமாக அதற்கு ஆதரவு கொடுக்க முடியும்.
33 ஒவ்வொரு வெளி ஊழியத் தொகுதியும் சிறியதாக இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அப்படிச் சிறியதாக இருந்தால்தான், அதில் நியமிக்கப்பட்டிருக்கிற எல்லாரையும் பற்றித் தொகுதிக் கண்காணியால் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். அன்பான ஒரு மேய்ப்பனைப் போல அவர் ஒவ்வொருவரிடமும் அதிக அக்கறை காட்டுகிறார். ஊழியத்தில் கலந்துகொள்ளவும், சபைக் கூட்டங்களை ஆதரிக்கவும் அவர் ஒவ்வொருவருக்கும் உதவுகிறார், தேவையான உற்சாகத்தையும் தருகிறார். கடவுளோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் என்னென்ன உதவி தேவைப்படுகிறதோ அதைச் செய்யவும் அவர் பாடுபடுகிறார். உடம்பு முடியாதவர்களையும் மனச்சோர்வால் வாடுகிறவர்களையும் அவர் சந்திக்கும்போது அவர்கள் பயனடைகிறார்கள். சபையிலுள்ள சிலர், அவர் சொல்கிற நல்ல ஆலோசனையையோ அறிவுரையையோ கேட்டு, கூடுதல் பொறுப்புகளைப் பெற முயற்சி செய்யத் தூண்டப்படலாம். அப்படிப் பொறுப்புகளைப் பெறும்போது மற்ற சகோதரர்களுக்கு அவர்கள் ரொம்ப உதவியாக இருப்பார்கள். பெரும்பாலும், ஒரு தொகுதிக் கண்காணி தன்னுடைய தொகுதியில் உள்ளவர்களுக்கு உதவவே முயற்சி செய்வார். ஆனாலும், ஒரு மூப்பராகவும் மேய்ப்பராகவும் அவர் சபையிலுள்ள எல்லாரிடமுமே அன்பும் அக்கறையும் காட்டுவார். யாராக இருந்தாலும் உதவத் தயாராக இருப்பார்.—அப். 20:17, 28.
34 தன்னுடைய தொகுதியிலுள்ள சகோதர சகோதரிகளிடமிருந்து வெளி ஊழிய அறிக்கைகளை வாங்குவது தொகுதிக் கண்காணியின் பொறுப்பு. அந்த அறிக்கைகளை அவர் செயலரிடம் கொடுப்பார். பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெளி ஊழிய அறிக்கைகளைத் தொகுதிக் கண்காணியிடம் உடனுக்குடன் கொடுப்பதன் மூலம் அவருக்கு உதவலாம். ஒவ்வொரு மாதத்தின் கடைசியிலும் தங்களுடைய அறிக்கைகளை நேரடியாக தொகுதிக் கண்காணியிடம் கொடுக்கலாம் அல்லது ராஜ்ய மன்றத்தில் வெளி ஊழிய அறிக்கைகளைப் போடுவதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.
சபையின் ஊழியக் குழு
35 இந்தக் குழுவில், மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர், செயலர், மற்றும் ஊழியக் கண்காணி இருப்பார்கள். இந்தக் குழு குறிப்பிட்ட சில வேலைகளைக் கவனித்துக்கொள்கிறது. உதாரணத்துக்கு, திருமணத்தையும் சவ அடக்க நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த இந்தக் குழு அனுமதி தருகிறது. பிரஸ்தாபிகளை அந்தந்த வெளி ஊழியத் தொகுதிகளில் நியமிக்கும் பொறுப்பும் இந்தக் குழுவுக்கு இருக்கிறது. ஒழுங்கான பயனியர் மற்றும் துணைப் பயனியர் சேவைக்கும் மற்ற சேவைகளுக்கும் கொடுக்கப்படுகிற விண்ணப்பங்களுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கிறது. இந்த ஊழியக் குழு, மூப்பர் குழுவின் அறிவுரைப்படி செயல்படுகிறது.
36 இந்தச் சகோதரர்களும், காவற்கோபுர படிப்பை நடத்துபவர், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி, மற்றும் மூப்பர் குழுவிலுள்ள சகோதரர்களும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலைகளைப் பற்றிக் கிளை அலுவலகம் தெரியப்படுத்துகிறது.
37 ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவும் சபையின் ஆன்மீக முன்னேற்றம் சம்பந்தமான விஷயங்களைக் கலந்துபேச அவ்வப்போது ஒன்றுகூடும். வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது நடக்கும் மூப்பர்களுடைய கூட்டத்தைத் தவிர, வட்டாரக் கண்காணியின் சந்திப்புக்குப் பிறகு சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் இன்னொரு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அது தவிர, தேவைக்கு ஏற்றபடி எந்தச் சமயத்திலும் மூப்பர்கள் கூடிவரலாம்.
அடிபணிந்து நடங்கள்
38 கண்காணிகள் பாவ இயல்புள்ளவர்கள். இருந்தாலும், சபையார் எல்லாருமே அவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். ஏனென்றால், இது யெகோவாவின் ஏற்பாடு. கண்காணிகள் தங்களுடைய செயல்களுக்கு அவரிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் யெகோவாவின் சார்பாகவும் அவருடைய ஆட்சியின் சார்பாகவும் சேவை செய்கிறார்கள். எபிரெயர் 13:17 இப்படிச் சொல்கிறது: “உங்களை வழிநடத்துகிறவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைப் பாதுகாத்து வருகிறார்கள்; அதனால், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்; அப்போது, அவர்கள் இதை வருத்தத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதை வருத்தத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.” யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி ஒரு சகோதரரைக் கண்காணியாக நியமிக்கிறார். ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை அவர் காட்டாதபோது... பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளின்படி அவர் தொடர்ந்து வாழாதபோது... யெகோவா அதே சக்தியைப் பயன்படுத்தி அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவார்.
39 சபைக் கண்காணிகளின் கடின உழைப்பையும் அவர்களுடைய நல்ல முன்மாதிரியையும் நாம் உண்மையிலேயே மதிக்கிறோம், இல்லையா? தெசலோனிக்கேயாவில் இருந்த சபைக்கு பவுல் இப்படி எழுதினார்: “சகோதரர்களே, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, நம் எஜமானுடைய சேவையில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திசொல்கிற சகோதரர்களுக்கு மரியாதை காட்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.” (1 தெ. 5:12, 13) சபைக் கண்காணிகள் கடினமாக உழைப்பதால்தான் நம்மால் சுலபமாகவும் ரொம்ப சந்தோஷமாகவும் கடவுளுக்குச் சேவை செய்ய முடிகிறது. அதுமட்டுமல்ல, சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு கண்காணிகள்மீது இருக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றி தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார்: “சபையை நல்ல விதத்தில் நடத்துகிற மூப்பர்கள், அதுவும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கடுமையாக உழைக்கிற மூப்பர்கள், இரட்டிப்பான மதிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும்.”—1 தீ. 5:17.
அமைப்பிலுள்ள மற்ற பொறுப்புகள்
40 சில சமயங்களில், குறிப்பிட்ட சில மூப்பர்கள் நோயாளி சந்திப்புக் குழுக்களில் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர், மருத்துவமனைத் தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் சேவை செய்கிறார்கள். இரத்தத்தைப் பயன்படுத்தாமல் யெகோவாவின் சாட்சிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் சொல்வதற்கும், இரத்தமில்லா மாற்று சிகிச்சைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் இவர்கள் மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள். இன்னும் சில கண்காணிகள், ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் ஈடுபடுகிறார்கள்; அல்லது, மாநாட்டு குழுக்களில் சேவை செய்கிறார்கள். இப்படி, யெகோவாவின் சேவையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடினமாக உழைப்பதற்காகவும், தங்களையே மனப்பூர்வமாக அளிப்பதற்காகவும் அமைப்பிலுள்ள எல்லாருமே அவர்களைப் பாராட்டுகிறார்கள். சொல்லப்போனால், இப்படிப்பட்ட ‘சகோதரர்களை நாம் உயர்வாக மதிக்கிறோம்.’—பிலி. 2:29.
வட்டாரக் கண்காணி
41 தகுதிபெற்ற மூப்பர்களை வட்டாரக் கண்காணிகளாக நியமிப்பதற்கு ஆளும் குழு ஏற்பாடு செய்கிறது. தங்களுடைய வட்டாரங்களிலுள்ள சபைகளைச் சந்திக்க கிளை அலுவலகம் இவர்களை அனுப்புகிறது; இவர்கள் பொதுவாக வருஷத்துக்கு இரண்டு தடவை அந்தச் சபைகளைச் சந்திக்கிறார்கள். ஒதுக்குப்புறமான இடங்களில் சேவை செய்கிற பயனியர்களையும் அவ்வப்போது சந்திக்கிறார்கள். வட்டார சந்திப்புக்குத் திட்டம்போட்டு அதை முன்கூட்டியே ஒவ்வொரு சபைக்கும் தெரிவிக்கிறார்கள். வட்டாரக் கண்காணியின் சந்திப்பிலிருந்து சபையார் அதிக நன்மை அடைய இது உதவுகிறது.
42 அந்தச் சந்திப்பின் மூலம் சபையார் எல்லாருமே ஆன்மீகப் புத்துணர்ச்சி பெற மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று செய்வார். (ரோ. 1:11, 12) சந்திப்பைப் பற்றிய கடிதமும் வட்டாரக் கண்காணி மற்றும் (திருமணமானவராக இருந்தால்) அவருடைய மனைவியின் தேவைகளைப் பற்றிய விவரங்களும் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளருக்குக் கிடைத்த பிறகு, தங்கும் வசதிக்கும், தேவையான மற்ற விஷயங்களுக்கும் வெவ்வேறு சகோதரர்கள் மூலம் அவர் ஏற்பாடு செய்வார். இந்த ஏற்பாடுகளைப் பற்றி வட்டாரக் கண்காணிக்கும் மற்ற எல்லாருக்கும் அவர் தெரியப்படுத்துவார்.
43 வெளி ஊழியக் கூட்டம் உட்பட எல்லா கூட்டங்களின் அட்டவணையையும் பற்றி மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் வட்டாரக் கண்காணி கேட்டுத் தெரிந்துகொள்வார். இந்தக் கூட்டங்கள், வட்டாரக் கண்காணியின் ஆலோசனைப்படியும் கிளை அலுவலகத்தின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்படும். சபைக் கூட்டங்கள், பயனியர்களுக்கான கூட்டம், மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கான கூட்டம், வெளி ஊழியக் கூட்டம் ஆகியவை நடக்கப்போகும் நேரத்தையும் இடத்தையும் பற்றி எல்லாருக்கும் முன்னதாகவே தெரியப்படுத்த வேண்டும்.
44 பிரஸ்தாபி அட்டைகள், கூட்டத்துக்கு வருபவர்களுடைய எண்ணிக்கைப் பதிவுகள், ஊழியப் பகுதிகளின் பதிவுகள், கணக்குகள் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை மதியம் வட்டாரக் கண்காணி பார்ப்பார். இப்படிச் செய்யும்போது, சபையின் தேவைகளைப் பற்றியும் இந்தப் பதிவுகளைக் கவனித்து வருபவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் அவரால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். வட்டாரக் கண்காணி இந்தப் பதிவுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
45 வட்டாரக் கண்காணி தன்னுடைய சந்திப்பின்போது கூட்டங்களில், வெளி ஊழியத்தில், சாப்பாட்டு வேளைகளில், அல்லது மற்ற சமயங்களில் சகோதர சகோதரிகளிடம் தனித்தனியாகப் பேச முயற்சி செய்வார். அதுமட்டுமல்ல, மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் சந்தித்து பொருத்தமான பைபிள் அறிவுரையையும் ஆலோசனையையும் உற்சாகத்தையும் கொடுப்பார். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மந்தையை மேய்க்கும் பொறுப்பை நன்றாகச் செய்ய அது அவர்களுக்கு உதவும். (நீதி. 27:23; அப். 20:26-32; 1 தீ. 4:11-16) அவர் பயனியர்களையும் சந்தித்துப் பேசுவார். அவர்களுடைய வேலையை நன்றாகச் செய்வதற்கு உற்சாகம் தருவார். ஊழியத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவார்.
46 சபையில் வேறு ஏதாவது பிரச்சினை இருந்தால், அதைக் கையாள முடிந்தவரை அந்த வாரத்திலேயே மூப்பர்களுக்கு வட்டாரக் கண்காணி உதவுவார். அந்தப் பிரச்சினையை அந்த வாரத்திலேயே தீர்க்க முடியவில்லை என்றால், அது சம்பந்தப்பட்ட பொருத்தமான பைபிள் ஆலோசனையைத் தேடிக் கண்டுபிடிக்க அந்த மூப்பர்களுக்கோ சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ அவர் உதவுவார். கிளை அலுவலகம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், அவரும் அந்த மூப்பர்களும் அந்த விஷயத்தைப் பற்றிய விளக்கமான அறிக்கையைக் கிளை அலுவலகத்துக்கு அனுப்புவார்கள்.
47 வட்டாரக் கண்காணி சபையைச் சந்திக்கும்போது, வழக்கமாக நடக்கும் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வார். கிளை அலுவலகம் கொடுக்கிற ஆலோசனைப்படி அவ்வப்போது இந்தக் கூட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படலாம். சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் பலப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுரை கொடுக்கவும் அவர் பேச்சுகளைக் கொடுப்பார். யெகோவாமீதும், இயேசுமீதும், அமைப்புமீதும் சபையாருக்கு இருக்கிற அன்பை அதிகரிக்க முயற்சி செய்வார்.
48 வட்டாரக் கண்காணி சபைகளைச் சந்திப்பதற்கான நோக்கங்களில் ஒன்று, ஊழியத்தில் ஆர்வத்தோடு ஈடுபட உற்சாகப்படுத்துவதும் நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுப்பதும்தான். அந்த வாரத்தில், தங்களுடைய அட்டவணையில் கொஞ்சம் மாற்றம் செய்தால் சபையிலுள்ள நிறைய பேரால் ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபட முடியும். ஒருவேளை அந்த மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கும் திட்டம் போட முடியும். வட்டாரக் கண்காணியோடு அல்லது அவருடைய மனைவியோடு ஊழியம் செய்ய யாராவது விரும்பினால் முன்கூட்டியே அதைத் தெரியப்படுத்தலாம். வட்டாரக் கண்காணியை அல்லது அவருடைய மனைவியை பைபிள் படிப்புகளுக்கும் மறுசந்திப்புகளுக்கும் கூட்டிக்கொண்டு போனால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இதற்கு முழு ஆதரவு கொடுக்க நீங்கள் எடுக்கிற கூடுதல் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறோம்.—நீதி. 27:17.
49 ஒவ்வொரு வட்டாரத்திலும் வருஷா வருஷம் இரண்டு வட்டார மாநாடுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தச் சமயங்களில் மாநாட்டு வேலைகளை ஒழுங்கமைப்பது வட்டாரக் கண்காணியின் பொறுப்பு. வட்டாரக் கண்காணி, மாநாட்டுக் கண்காணியையும் உதவி மாநாட்டுக் கண்காணியையும் நியமிப்பார். மாநாட்டை ஒழுங்கமைக்கும் வேலைகளைக் கவனிக்க வட்டாரக் கண்காணிக்கு அவர்கள் உதவ வேண்டும். அப்போதுதான், வட்டாரக் கண்காணியால் மாநாட்டு நிகழ்ச்சிக்கு முக்கியக் கவனம் செலுத்த முடியும். பல்வேறு இலாகாக்களைக் கவனிக்க தகுதியுள்ள மற்ற சகோதரர்களையும் வட்டாரக் கண்காணி நியமிப்பார். ஒவ்வொரு மாநாட்டுக்குப் பிறகும் வட்டாரத்தின் கணக்குகளைத் தணிக்கை (audit) செய்யவும் அவர் ஏற்பாடு செய்வார். ஒரு வருஷத்தில் நடக்கிற ஒரு வட்டார மாநாட்டில் மட்டும் கிளை அலுவலகப் பிரதிநிதி கலந்துகொள்வார். அவர் அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளராக இருப்பார். மாநாடு நடத்தப்படும் இடம் தூரமாக இருப்பதாலோ மாநாட்டு மன்றங்கள் சிறியவையாக இருப்பதாலோ சில வட்டாரங்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
50 வட்டாரக் கண்காணி ஒவ்வொரு மாதக் கடைசியிலும் தன்னுடைய வெளி ஊழிய அறிக்கையை நேரடியாக கிளை அலுவலகத்துக்கு அனுப்புவார். சிறிய செலவுகளை, உதாரணத்துக்கு போக்குவரத்து, உணவு, தங்கும் இடம், வட்டார சேவைக்குத் தேவைப்படுகிற மற்ற பொருள்கள் ஆகியவற்றுக்கான செலவுகளை அவர் சந்தித்த சபை கவனித்துக்கொள்ளவில்லை என்றால், அதை அவர் கிளை அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்கலாம். யெகோவாவின் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்தால் மற்ற தேவைகளைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று இயேசு கொடுத்த வாக்குறுதியை வட்டாரக் கண்காணிகள் உறுதியாக நம்புகிறார்கள். (லூக். 12:31) முழு ஈடுபாட்டுடன் தங்களுக்காக உழைக்கும் இந்த மூப்பர்களை உபசரிக்கும் பாக்கியம் தங்களுக்கு இருப்பதை சபையார் மறந்துவிடக் கூடாது.—3 யோ. 5-8.
கிளை அலுவலகக் குழு
51 உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும், ஆன்மீகத் தகுதிகளைப் பெற்ற முதிர்ச்சியுள்ள மூன்று அல்லது அதற்கும் அதிகமான சகோதரர்கள் கிளை அலுவலகக் குழுவாகச் சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கண்காணிப்பின் கீழுள்ள நாட்டில் அல்லது நாடுகளில் செய்யப்படுகிற பிரசங்க வேலையை மேற்பார்வை செய்கிறார்கள். அந்தக் குழுவிலுள்ள ஒரு சகோதரர் கிளை அலுவலகக் குழு ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
52 கிளை அலுவலகக் குழுவில் இருக்கிற சகோதரர்கள், கிளை அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களிலுள்ள எல்லா சபைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். கிளை அலுவலகத்தின் கண்காணிப்புக்குக் கீழுள்ள இடங்களில் செய்யப்படுகிற பிரசங்க வேலையை இந்தக் குழு மேற்பார்வை செய்கிறது. அதோடு, ஊழியம் செய்யப்படுகிற இடங்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான வழிநடத்துதலைக் கொடுப்பதற்கு சபைகளையும் வட்டாரங்களையும் ஒழுங்கமைக்கிறது. மிஷனரிகள், விசேஷப் பயனியர்கள், ஒழுங்கான பயனியர்கள், துணைப் பயனியர்கள் ஆகியோரின் ஊழிய வேலைகளை மேற்பார்வை செய்கிறது. வட்டார மாநாடுகளும் மண்டல மாநாடுகளும் நடக்கும்போது, ‘எல்லா காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடக்கும்’ விதத்தில் ஏற்பாடுகளைச் செய்கிறது, நியமிப்புகளைக் கொடுக்கிறது.—1 கொ. 14:40.
53 சில நாடுகள், வேறொரு நாட்டிலுள்ள கிளை அலுவலகக் குழுவுடைய மேற்பார்வையின் கீழ் வருகின்றன. அதனால், அந்த நாடுகளில் நடக்கும் வேலைகளைக் கவனித்துக்கொள்வதற்கு ‘நாட்டு ஆலோசனைக் குழு’ ஒன்று நியமிக்கப்படுகிறது. பெத்தேலில் நடக்கும் வேலைகளையும்... கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் சம்பந்தமான வேலைகளையும்... ஊழிய வேலைகளையும்... அந்தக் குழு கவனித்துக்கொள்கிறது. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை விரிவுபடுத்த கிளை அலுவலகக் குழுவோடு சேர்ந்து அது செயல்படுகிறது.
54 கிளை அலுவலகக் குழுக்களிலும் நாட்டு ஆலோசனைக் குழுக்களிலும் சேவை செய்கிறவர்களை ஆளும் குழுதான் நியமிக்கிறது.
தலைமை அலுவலகப் பிரதிநிதிகள்
55 அவ்வப்போது, உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களைத் சந்திப்பதற்கு தகுதிபெற்ற சகோதரர்களை ஆளும் குழு ஏற்பாடு செய்கிறது. இந்தச் சேவையைச் செய்கிற சகோதரர், தலைமை அலுவலகப் பிரதிநிதி என்று அழைக்கப்படுகிறார். பெத்தேல் குடும்பத்தாரை உற்சாகப்படுத்துவதும், ஊழிய வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் தீர்வுகாண கிளை அலுவலகக் குழுவுக்கு உதவுவதும்தான் இவருடைய முக்கியமான வேலை. குறிப்பிட்ட சில வட்டாரக் கண்காணிகளை இவர் சந்திப்பார். அதோடு, மிஷனரிகளையும் அவ்வப்போது சந்திப்பார். அப்படிச் சந்திக்கும்போது, அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் பற்றி அவர்களோடு பேசுவார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்து சீஷராக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்ய அவர்களுக்குத் தேவையான உற்சாகத்தையும் கொடுப்பார்.
56 கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழுள்ள இடங்களில் பிரசங்க வேலையும், சபை சம்பந்தப்பட்ட வேலைகளும் எப்படி நடக்கின்றன என்பதில் தலைமை அலுவலகப் பிரதிநிதி அதிக அக்கறை காட்டுவார். நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து அவர் அங்குள்ள மொழிபெயர்ப்பு அலுவலகங்களையும் சந்திக்கலாம். தலைமை அலுவலகப் பிரதிநிதி ஒரு கிளை அலுவலகத்தைச் சந்திக்கும்போது, முடிந்தவரை பிரசங்க வேலையிலும் ஈடுபடுவார்.
மந்தையை மேய்க்கும் பொறுப்பைப் பெற்றிருக்கிற கண்காணிகளுக்குத் தொடர்ந்து அடிபணிந்து நடக்கும்போது, சபையின் தலைவரான கிறிஸ்து இயேசுவோடு நாம் ஒத்துழைக்கிறோம் என்று அர்த்தம்
அன்பான கண்காணிப்பு
57 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ சகோதரர்களின் கடின உழைப்பாலும் அன்பான கவனிப்பாலும் நாம் ரொம்பவே நன்மை அடைகிறோம். மந்தையை மேய்க்கும் பொறுப்பைப் பெற்றிருக்கிற கண்காணிகளுக்குத் தொடர்ந்து அடிபணிந்து நடக்கும்போது, சபையின் தலைவரான கிறிஸ்து இயேசுவோடு நாம் ஒத்துழைக்கிறோம் என்று அர்த்தம். (1 கொ. 16:15-18; எபே. 1:22, 23) அப்படிச் செய்யும்போது, உலகம் முழுவதுமுள்ள சபைகளில் கடவுளுடைய சக்தி செயல்படும். பூமியெங்கும் இந்த வேலையைச் செய்ய கடவுளுடைய வார்த்தை வழிகாட்டும்.—சங். 119:105.