அதிகாரம் 9
“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
“பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.”—கொலோசெயர் 3:5.
1, 2. யெகோவாவின் மக்களுக்குக் கெடுதல் செய்ய பிலேயாம் என்ன வழியைக் கண்டுபிடித்தான்?
மீனவர் ஒருவர், குறிப்பிட்ட ஒருவகை மீனைப் பிடிப்பதற்காக அந்த மீன் அதிகமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போகிறார். எந்த இரையைப் போட்டால் அந்த மீன் தூண்டிலில் சிக்குமோ அந்த இரையைக் கொக்கியில் மாட்டி தூண்டில் போடுகிறார். பிறகு, பொறுமையாகக் காத்திருக்கிறார். கொக்கியில் மீன் மாட்டிய உடனேயே தூண்டிலை மேலே இழுக்கிறார்.
2 இதே போல் மக்களையும் சிக்க வைக்க முடியும். இஸ்ரவேலர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் பக்கத்திலுள்ள மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டிருந்தார்கள். அப்போது மோவாப் தேசத்து ராஜா, இஸ்ரவேலர்களைச் சபிப்பதற்காக பிலேயாம் என்ற ஒருவனை அழைத்தான். அவர்களைச் சபித்தால், அவனுக்கு நிறைய பணம் கொடுப்பதாகச் சொன்னான். இஸ்ரவேலர்கள் தங்களுக்கு தாங்களே சாபத்தை வரவழைத்துக்கொள்வதற்காக பிலேயாம் ஒரு வழியைக் கண்டுபிடித்தான். அவர்களைச் சிக்க வைப்பதற்கு ஏற்ற ‘இரையை’ கவனமாகத் தேர்ந்தெடுத்தான். இஸ்ரவேல் ஆண்களை வசீகரிப்பதற்காக அவர்களுடைய முகாமுக்கு இளம் மோவாபியப் பெண்களை அனுப்பினான்.—எண்ணாகமம் 22:1-7; 31:15, 16; வெளிப்படுத்துதல் 2:14.
3. பிலேயாம் போட்ட ‘இரை’ இஸ்ரவேலர்களை எப்படிக் கவர்ந்தது?
3 பிலேயாம் போட்ட ‘இரை’ இஸ்ரவேலர்களைக் கவர்ந்ததா? ஆம். ஆயிரக்கணக்கான இஸ்ரவேல் ஆண்கள் ‘மோவாபியப் பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார்கள்.’ அவர்கள் அருவருப்பான காம தெய்வமான பாகால் பேயோரையும் மற்ற பொய் தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லையில் 24,000 இஸ்ரவேலர்கள் செத்துப்போனார்கள்.—எண்ணாகமம் 25:1-9.
4. ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்கள் ஏன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார்கள்?
4 பிலேயாமின் சதித்திட்டத்தில் ஏன் இத்தனை இஸ்ரவேலர்கள் சிக்கிக்கொண்டார்கள்? ஏனென்றால், அவர்கள் தங்களுடைய சுயநல ஆசைகளைத் திருப்தி செய்வதைப் பற்றியே நினைத்தார்கள்; தங்களுக்காக யெகோவா செய்த எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை யெகோவா விடுதலை செய்தார்; வனாந்தரத்தில் அவர்களுக்கு உணவு கொடுத்தார்; வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லைவரை அவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தார். இப்படி, கடவுளுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்கு நிறைய காரணங்கள் இருந்தன. (எபிரெயர் 3:12) அப்படியிருந்தும், பாலியல் முறைகேடு என்னும் கண்ணியில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “சிலர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால் . . . செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்போமாக.”—1 கொரிந்தியர் 10:8.
5, 6. மோவாப் பாலைநிலத்தில் நடந்த சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 ஒரு விதத்தில் நாமும், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லையில் இருந்த இஸ்ரவேலர்களைப் போல்தான் இருக்கிறோம். புதிய உலகம் சீக்கிரத்தில் வரப்போகிறது. (1 கொரிந்தியர் 10:11) மோவாபியர்களைவிட இன்றைய உலகில் வாழும் மக்கள் இன்னும் அதிகமாக காம வெறி பிடித்து அலைகிறார்கள். யெகோவாவின் மக்களும் அவர்களைப் போல ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. சொல்லப்போனால், பாலியல் முறைகேடு என்னும் ‘இரையைத்தான்’ சாத்தான் மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தி வருகிறான்.—எண்ணாகமம் 25:6, 14; 2 கொரிந்தியர் 2:11; யூதா 4.
6 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கொஞ்சம் நேரத்துக்குக் கிடைக்கும் சந்தோஷத்துக்காக சுயநல ஆசைகளைத் திருப்தி செய்ய நினைக்கிறேனா, அல்லது புதிய உலகத்தில் என்றென்றும் சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேனா?’ “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்ற யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் வீண்போகாது!—1 கொரிந்தியர் 6:18.
பாலியல் முறைகேடு என்றால் என்ன?
7, 8. பாலியல் முறைகேடு என்றால் என்ன? அது ஏன் ரொம்ப ஆபத்தானது?
7 இன்று நிறைய பேருடைய மனதில் கேவலமான எண்ணங்கள் இருப்பதால் செக்ஸ் சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். சட்டப்படி திருமணம் செய்துகொள்ளாத ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதையே பாலியல் முறைகேடு என்று பைபிள் குறிப்பிடுகிறது. ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும், மிருகங்களோடு மனிதர்களும் செக்ஸ் வைத்துக்கொள்வதும் இதில் உட்பட்டிருக்கின்றன. வாய்வழி செக்ஸ், ஆசனவழி செக்ஸ், காம உணர்வோடு வேறொருவரின் பாலுறுப்புகளைத் தொடுதல் போன்றவையும் இதில் உட்பட்டிருக்கின்றன.—பின்குறிப்பு 23.
8 ஒருவர் தொடர்ந்து பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர் சபையின் அங்கத்தினராக இருக்க முடியாது என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9; வெளிப்படுத்துதல் 22:15) அதோடு, அவர் தன்னுடைய சுயமரியாதையையும் மற்றவர்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்துவிடுவார். ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு நிறைய பிரச்சினைகள்தான் வரும். குறுகுறுக்கும் மனசாட்சி, முறைதவறிய கர்ப்பம், மணவாழ்வில் விரிசல், நோய் போன்ற பிரச்சினைகளால் அவர்கள் அவதிப்படலாம்; அவர்களுக்கு மரணம்கூட வரலாம். (கலாத்தியர் 6:7, 8-ஐ வாசியுங்கள்.) ஒழுக்கக்கேட்டால் வரும் பின்விளைவுகளைப் பற்றி ஒருவர் ஆரம்பத்திலேயே யோசித்தார் என்றால், அவர் அதில் ஈடுபட மாட்டார். ஒழுக்கக்கேடான விஷயங்களில் ஈடுபடுவதற்கு முதல் படி ஆபாசத்தைப் பார்ப்பது. பொதுவாக, ஆபாசத்தைப் பார்க்கும் ஒருவர் தன்னுடைய சுயநல ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பார்.
ஆபாசம்—முதல் படி
9. ஆபாசத்தைப் பார்ப்பது ஏன் ஆபத்தானது?
9 நம்முடைய பாலியல் ஆசைகளைத் தூண்டிவிடுவதற்காகவே ஆபாசமான விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன. புத்தகங்கள், பத்திரிகைகள், பாடல்கள், டிவி நிகழ்ச்சிகள், இன்டர்நெட் என எல்லாவற்றிலும் ஆபாசம் இருக்கிறது. ஆபாசத்தைப் பார்ப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது ரொம்ப ஆபத்தானது. அது ஒருவரை செக்ஸ் வெறி பிடித்தவராக, தகாத பாலியல் ஆசை உள்ளவராக ஆக்கிவிடலாம். ஒருவர் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால், போகப் போக அவர் சுய இன்பப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடலாம். மணவாழ்வில் விரிசல் ஏற்படலாம், அது விவாகரத்தில் போய் முடியலாம்.—ரோமர் 1:24-27; எபேசியர் 4:19; பின்குறிப்பு 24.
10. யாக்கோபு 1:14, 15-லுள்ள நியமம் பாலியல் முறைகேட்டைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவும்?
10 பாலியல் முறைகேடு எந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திழுக்க முடியும் என்பதை நாம் புரிந்திருக்க வேண்டும். யாக்கோபு 1:14, 15-ல் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த எச்சரிப்பைக் கவனியுங்கள்: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது.” அதனால், கெட்ட எண்ணங்கள் உங்கள் மனதுக்குள் வந்தால் உடனே அதை வேரோடு பிடிங்கியெறிந்துவிடுங்கள். எதேச்சையாக ஆபாசக் காட்சிகளை நீங்கள் பார்த்துவிட்டால் உடனே உங்கள் பார்வையை வேறு பக்கமாகத் திருப்புங்கள், அல்லது கம்ப்யூட்டரை அணைத்துவிடுங்கள், அல்லது டிவி சேனலை மாற்றுங்கள். கெட்ட ஆசைகள் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால், அது உங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும். அதைக் கட்டுப்படுத்துவது உங்களுக்குக் கஷ்டமாகிவிடும்.—மத்தேயு 5:29, 30-ஐ வாசியுங்கள்.
11. நமக்குள் கெட்ட எண்ணங்கள் இருந்தால், யெகோவா நமக்கு எப்படி உதவி செய்வார்?
11 நம்மைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பதைவிட யெகோவா நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால், கெட்ட ஆசைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் அவருக்குத் தெரியும். “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்” என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (கொலோசெயர் 3:5) அப்படிச் செய்வது அவ்வளவு சுலபம் இல்லைதான். ஆனாலும் யெகோவா நம்மிடம் பொறுமையாக இருக்கிறார். நமக்கு நிச்சயம் உதவி செய்வார். (சங்கீதம் 68:19) ஒரு இளம் சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கும் சுய இன்பப் பழக்கத்துக்கும் அவர் அடிமையாகிவிட்டார். பள்ளியில் அவரோடு படித்த நண்பர்கள் அந்தப் பழக்கங்களில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தார்கள். ஆனால், அவற்றில் ஈடுபட்டதால், “என் மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போனது; ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன்” என்று அந்தச் சகோதரர் சொன்னார். தன்னுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை அவர் புரிந்துகொண்டார். யெகோவாவின் உதவியோடு அந்தக் கெட்ட பழக்கங்களிலிருந்து அவரால் விடுபட முடிந்தது. உங்களுக்குள் கெட்ட எண்ணங்கள் இருந்தால், உங்களுடைய எண்ணங்களைச் சுத்தமானதாக வைத்துக்கொள்வதற்கு “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.—2 கொரிந்தியர் 4:7; 1 கொரிந்தியர் 9:27.
12. ‘நம் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது’ ஏன் முக்கியம்?
12 “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள். ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது” என்று சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 4:23) யெகோவா நம் இதயத்தைப் பார்க்கிறார். “இதயம்” என்று சொல்லும்போது நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. நாம் பார்க்கும் விஷயங்கள் நம்மை ரொம்பவே பாதிக்கலாம். கடவுளுக்கு உண்மையோடு இருந்த யோபு இப்படிச் சொன்னார்: “என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது, இன்னொரு பெண்ணை நான் எப்படிக் கெட்ட எண்ணத்தோடு பார்ப்பேன்?” (யோபு 31:1) பார்க்கும் விஷயங்களிலும் யோசிக்கும் விஷயங்களிலும் நாம் யோபுவைப் போல சுய கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அதோடு, சங்கீதக்காரனைப் போல “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று ஜெபம் செய்வதும் அவசியம்.—சங்கீதம் 119:37.
தீனாளின் தவறான தீர்மானம்
13. எப்படிப்பட்ட நண்பர்களை தீனாள் தேர்ந்தெடுத்தாள்?
13 நம் நண்பர்கள் நம்மை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ ஆக்கிவிட வாய்ப்பிருக்கிறது. கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுகிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால், நாமும் அதே நெறிமுறைகளைப் பின்பற்ற அவர்கள் நமக்கு உதவுவார்கள். (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33-ஐ வாசியுங்கள்.) நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தீனாளின் உதாரணம் காட்டுகிறது. அவள் யாக்கோபின் மகள்களில் ஒருத்தி; அவள் யெகோவாவை வழிபட்ட குடும்பத்தில் வளர்ந்தாள். அவள் ஒரு ஒழுக்கங்கெட்ட பெண் அல்ல. ஆனால், யெகோவாவை வணங்காத கானானிய பெண்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாள். செக்ஸ் விஷயத்தில் கானானியர்களுக்கும் கடவுளுடைய மக்களுக்கும் முற்றிலும் வித்தியாசமான கருத்து இருந்தது. கானானியர்கள் ஒழுக்கங்கெட்ட நடத்தைக்குப் பேர் போனவர்களாக இருந்தார்கள். (லேவியராகமம் 18:6-25) ஒருசமயம், தீனாள் அவளுடைய நண்பர்களோடு இருந்தபோது, சீகேம் என்ற ஒரு கானானியனைச் சந்தித்தாள். அவனுக்கு அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. அவனுடைய குடும்பத்தில் அவன் “அதிக மதிப்பும் மரியாதையும்” உள்ளவனாக இருந்தான். ஆனால் அவன் யெகோவாவை வணங்காதவன்.—ஆதியாகமம் 34:18, 19.
14. தீனாளுக்கு என்ன நடந்தது?
14 சீகேமுக்கு தீனாளை ரொம்பவே பிடித்துவிட்டதால், அவன் “அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.” அப்படிச் செய்வது அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை, ஒரு சாதாரண விஷயமாகத்தான் தோன்றியது. (ஆதியாகமம் 34:1-4-ஐ வாசியுங்கள்.) அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தீனாளுக்கும் அவளுடைய குடும்பத்தாருக்கும், அடுத்தடுத்து பல சோகமான விஷயங்கள் நடந்தன.—ஆதியாகமம் 34:7, 25-31; கலாத்தியர் 6:7, 8.
15, 16. நாம் எப்படி ஞானமுள்ளவர்களாக ஆக முடியும்?
15 யெகோவா ஏற்படுத்திய ஒழுக்க நெறிகளை மீறினால் என்ன நடக்கும் என்பதை தீனாளைப் போல நாமும் அனுபவப்பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) அதனால், “நல்ல வழிகள் எல்லாவற்றையும்” தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது, தேவையில்லாத மனவேதனையையும் கஷ்டத்தையும் உங்களால் தவிர்க்க முடியும்.—நீதிமொழிகள் 2:6-9; சங்கீதம் 1:1-3.
16 நாம் ஞானமுள்ளவர்களாக ஆவதற்கு, கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும். தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் ஜெபம் செய்ய வேண்டும். உண்மையும் விவேகமும் உள்ள அடிமை தரும் நல்ல ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 24:45; யாக்கோபு 1:5) எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள் என்றும் பலவீனமானவர்கள் என்றும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். (எரேமியா 17:9) அதனால், நீங்கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒருவர் உங்களை எச்சரித்தால், நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? நீங்கள் புண்பட்டுவிடுவீர்களா அல்லது அவர் சொன்னதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்வீர்களா?—2 ராஜாக்கள் 22:18, 19.
17. சக கிறிஸ்தவர் ஒருவர் கொடுக்கும் அறிவுரை நமக்கு எப்படி உதவியாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.
17 இந்தச் சூழ்நிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வேலைபார்க்கும் இடத்தில், ஒரு சகோதரிமீது ஒருவர் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார். தன்னோடு தனியாக நேரம் செலவிட அந்தச் சகோதரியை அவர் அழைக்கிறார். அவர் யெகோவாவை வணங்காதவர். ஆனால், ரொம்ப நல்லவர், அன்பானவர். அவர்கள் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிற இன்னொரு சகோதரி, அந்தச் சகோதரியை எச்சரிக்க நினைக்கிறார். அதை அந்தச் சகோதரி எப்படி எடுத்துக்கொள்வார்? தன்னுடைய நடத்தையில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்வாரா, அல்லது, அந்த எச்சரிப்பு எவ்வளவு ஞானமானது என்பதைப் புரிந்துகொள்வாரா? அந்தச் சகோதரிக்கு யெகோவாமீது ரொம்ப அன்பு இருக்கலாம்; சரியானதைச் செய்ய அவருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால், அந்த நபரோடு வெளியே போவது அந்தச் சகோதரிக்குப் பழக்கமாகிவிட்டால், ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுகிறார்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் தன்னுடைய சொந்த ‘இதயத்தையே நம்புகிறார்’ என்றுதானே சொல்ல முடியும்?—நீதிமொழிகள் 22:3; 28:26; மத்தேயு 6:13; 26:41.
யோசேப்பின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
18, 19. பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓட யோசேப்பு என்ன செய்தார் என்பதை விளக்குங்கள்.
18 யோசேப்பு தன்னுடைய வாலிப வயதில், எகிப்தில் ஒரு அடிமையாக இருந்தார். அவருடைய எஜமானின் மனைவி தன்னோடு செக்ஸ் வைத்துக்கொள்ளும்படி தினமும் அவருக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தாள். ஆனால், அது தவறு என்று யோசேப்புக்குத் தெரிந்திருந்தது. யோசேப்புக்கு யெகோவாமீது அன்பு இருந்ததால் அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள விரும்பினார். அதனால், ஒவ்வொரு முறை அந்தப் பெண் தன்னுடைய ஆசை வலையில் அவரைச் சிக்க வைக்க முயற்சி செய்தபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். அவர் ஒரு அடிமையாக இருந்ததால் தன்னுடைய எஜமானைவிட்டுப் போவதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கவில்லை. ஒருநாள் அவருடைய எஜமானின் மனைவி செக்ஸ் வைத்துக்கொள்ள அவரைக் கட்டாயப்படுத்தினாள். அப்போது அவர் அங்கிருந்து “வெளியே ஓடிப்போனார்.”—ஆதியாகமம் 39:7-12-ஐ வாசியுங்கள்.
19 ஒருவேளை, எஜமானின் மனைவியைப் பற்றி யோசேப்பு பகல் கனவு கண்டிருந்தாலோ, ஒழுக்கங்கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுத்திருந்தாலோ, அவரால் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்திருக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும்விட யெகோவாவோடுள்ள பந்தத்தை அவர் உயர்வாக நினைத்தார். அதனால் அந்தப் பெண்ணிடம், “என் எஜமான் . . . எதையுமே . . . எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?” என்று சொன்னார்.—ஆதியாகமம் 39:8, 9.
20. யோசேப்பைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
20 யோசேப்பு தன்னுடைய குடும்பத்தை விட்டு ரொம்பத் தூரத்தில் இருந்தாலும் அவர் எப்போதும் கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 41:39-49) யோசேப்பு உண்மையுள்ளவராக இருந்ததைப் பார்த்து யெகோவா ரொம்பவே சந்தோஷப்பட்டார். (நீதிமொழிகள் 27:11) ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியிருப்பது கடினமாக இருக்கலாம். அதனால் இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள். தனக்கு உண்மையாக இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 97:10.
21. ஒரு இளம் சகோதரர் எப்படி யோசேப்பைப் போல நடந்துகொண்டார்?
21 யெகோவாவின் மக்கள், ‘கெட்டதை வெறுப்பதையும்’ ‘நல்லதை நேசிப்பதையும்’ ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையில் தைரியமாக வெளிக்காட்டுகிறார்கள். (ஆமோஸ் 5:15) நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, உங்களால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். உதாரணத்துக்கு பள்ளியில், ஒரு இளம் சகோதரரின் விசுவாசத்துக்கு என்ன சோதனை வந்தது என்று கவனியுங்கள். அவரோடு படிக்கும் ஒரு பெண், கணக்குப் பரீட்சையில் பாஸ் ஆவதற்கு அவர் உதவி செய்தால் அவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வதாகச் சொன்னாள். அந்தச் சகோதரர் என்ன செய்தார்? அவர் யோசேப்பின் உதாரணத்தைப் பின்பற்றினார். “அவள் சொன்னதை நான் உடனே மறுத்துவிட்டேன். இப்படி உத்தமத்தைக் காட்டியதால் என்னுடைய மதிப்பு மரியாதையை என்னால் காப்பாற்ற முடிந்தது” என்று அவர் சொல்கிறார். ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதால் கிடைக்கும் ‘தற்காலிகச் சந்தோஷத்தால்’ வலியும் வேதனையும்தான் மிஞ்சும். (எபிரெயர் 11:25) ஆனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் நாம் என்றென்றும் சந்தோஷமாக இருப்போம்.—நீதிமொழிகள் 10:22.
யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்
22, 23. நாம் மோசமான பாவத்தைச் செய்திருந்தாலும் யெகோவா நமக்கு எப்படி உதவுவார்?
22 பாலியல் முறைகேட்டைப் பயன்படுத்தி சாத்தான் நம்மைச் சிக்க வைக்க முயற்சி செய்வான். அதை எதிர்த்துப் போராடுவது ஒரு பெரிய சவால்தான். நம் எல்லாருக்குமே அவ்வப்போது கெட்ட எண்ணங்கள் வரலாம். (ரோமர் 7:21-25) இதை யெகோவா புரிந்துவைத்திருக்கிறார்; “நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” (சங்கீதம் 103:14) அப்படியானால், ஒரு கிறிஸ்தவர் பாலியல் முறைகேடு என்னும் மோசமான பாவத்தைச் செய்திருந்தால் அவருக்கு மன்னிப்பு கிடைக்குமா? அவர் உண்மையிலேயே மனம் திருந்தினால் யெகோவா அவருக்கு நிச்சயம் உதவி செய்வார். கடவுள் “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 86:5; யாக்கோபு 5:16; நீதிமொழிகள் 28:13-ஐ வாசியுங்கள்.
23 அதோடு, நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் அன்பான மூப்பர்களை நமக்கு “பரிசுகளாக” யெகோவா கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8, 12; யாக்கோபு 5:14, 15) அவரோடு இருக்கும் நம் பந்தத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய மூப்பர்கள் உதவுவார்கள்.—நீதிமொழிகள் 15:32.
“நல்ல புத்தியை” பயன்படுத்துங்கள்
24, 25. ‘நல்ல புத்தியோடு’ நடந்துகொள்வது, ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க எப்படி உதவும்?
24 சரியான தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றால் யெகோவாவுடைய சட்டங்களைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமொழிகள் 7:6-23-ல் சொல்லப்பட்டிருக்கும் வாலிபனைப் போல் இருக்க நாம் விரும்புவதில்லை. அவன் ‘புத்தியில்லாமல்’ நடந்துகொண்டதால் பாலியல் முறைகேடு என்னும் கண்ணியில் சிக்கிக்கொண்டான். நல்ல புத்தியோடு நடப்பது என்பது புத்திசாலித்தனத்தை மட்டும் குறிப்பதில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ முயற்சி செய்வதையும் அது குறிக்கிறது. “நல்ல புத்தியைச் சம்பாதிப்பவன் தன்னை நேசிக்கிறான். பகுத்தறிவைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவன் வெற்றி பெறுவான்” என்ற ஞானமான வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்.—நீதிமொழிகள் 19:8.
25 கடவுளுடைய நெறிமுறைகள் சரியானவை என்று நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா? அதன்படி நடந்தால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதை உண்மையிலேயே நம்புகிறீர்களா? (சங்கீதம் 19:7-10; ஏசாயா 48:17, 18) அதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் யெகோவா உங்களுக்காகச் செய்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களையும் யோசித்துப் பாருங்கள். “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.” (சங்கீதம் 34:8) எந்தளவுக்கு ருசித்துப் பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு அவர்மீது உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும். அவர் நேசிப்பதை நேசியுங்கள்; அவர் வெறுப்பதை வெறுத்திடுங்கள். நல்ல எண்ணங்களால், அதாவது உண்மையான... நீதியான... சுத்தமான... விரும்பத்தக்க... ஒழுக்கமான... எண்ணங்களால் உங்கள் மனதை நிரப்புங்கள். (பிலிப்பியர் 4:8, 9) யோசேப்பு யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்ததுபோல் நம்மாலும் நடந்துகொள்ள முடியும்.—ஏசாயா 64:8.
26. அடுத்த இரண்டு அதிகாரங்களில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
26 நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகாதவராக இருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து மகிழ வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களைப் பற்றி அடுத்த இரண்டு அதிகாரங்களில் பார்ப்போம்.