36 யோசியா
யெகோவாவிடம் திரும்பிவர மக்களுக்கு உதவினார்
யோசியாவுக்கு ஆறு வயதாக இருந்தபோதே அவருடைய தாத்தா மனாசே இறந்துவிட்டார். மனாசே தன்னைத் திருத்திக்கொண்டு யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்த விஷயம் யோசியாவுக்குத் தெரிந்திருக்கும். மனாசே காட்டிய தைரியத்தை யோசியா தன் வாழ்க்கையில் மறந்திருக்கவே மாட்டார். மனாசே இறந்த பிறகு யோசியாவின் அப்பா ஆமோன் ராஜாவானார். ஆனால், அவர் ரொம்ப மோசமானவர். மறுபடியும் கெட்ட விஷயங்களைச் செய்யவும் சிலைகளை வணங்கவும் மக்களை அவர் தூண்டிவிட்டார். அவர் இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்த பிறகு கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, எட்டு வயதில் யோசியா ராஜாவானார்.
யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள தீர்க்கதரிசிகளான செப்பனியாவும், எரேமியாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாளும், தலைமைக் குரு இல்க்கியாவும் யோசியாவுக்கு உதவியிருக்கலாம். யோசியா “இன்னும் சின்னப் பையனாக இருந்தபோதே [கிட்டத்தட்ட 16 வயதிலேயே], தன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்” என்று பைபிள் சொல்கிறது. கிட்டத்தட்ட 20 வயதில் அவர் யூதாவில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார். சிலை வழிபாட்டையும் அக்கிரமங்களையும் ஒழித்துக்கட்ட இந்தத் துடிப்பான, தைரியமான இளம் ராஜாவை யெகோவா பயன்படுத்தினார்.
இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் ஒருகாலத்தில் வாழ்ந்த வடக்குப் பகுதிக்கும் யோசியா போனார். அங்கிருந்த இஸ்ரவேலர்களில் பெரும்பாலானவர்களை அசீரியர்கள் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்தார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள்தான் அங்கே அதிகமாக இருந்தார்கள். ஆனாலும், அங்கிருந்த பலிபீடங்களையும் சிலைகளையும்கூட யோசியா நொறுக்கிப்போட்டார்.
யோசியா இளம் ராஜாவாக இருந்தார்; ஆனாலும், தைரியமாகச் சிலைகளை ஒழித்துக்கட்டி, யெகோவாவை உண்மையோடு வணங்க மக்களுக்கு உதவினார்
கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்குப் பிறகு, யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி யோசியா கட்டளை போட்டார். அப்போது, தலைமைக் குரு இல்க்கியா அற்புதமான ஒன்றைக் கண்டுபிடித்தார்! அதுதான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யெகோவா தந்திருந்த திருச்சட்டத்தின் சுருள். மோசே தன் கையாலேயே எழுதிய சுருளாக அது இருந்திருக்கலாம். யோசியாவின் செயலாளர் அதை யோசியாவிடம் எடுத்து வந்து சத்தமாக வாசித்தபோது, யோசியா அதை ரொம்பக் கவனமாகக் கேட்டார். உடனே, அவருடைய மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டது! கடவுளுடைய சட்டங்களைவிட்டு மக்கள் எவ்வளவு தூரம் விலகிப்போயிருந்தார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. யெகோவாவின் கோபம் மக்கள்மேல் பற்றியெரிந்ததை அவர் தெரிந்துகொண்டார். அப்போது யோசியா என்ன செய்தார்?
உடனே, இந்த விஷயத்தைப் பற்றி யெகோவாவிடம் விசாரிக்கச் சொல்லி யோசியா தன் ஆட்களில் ஐந்து பேரை அனுப்பினார். அவர்கள் பெண் தீர்க்கதரிசியான உல்தாளிடம் போனார்கள். யூதாவில் இருந்த மக்கள் ரொம்பக் காலமாக மோசமான பாவங்களைச் செய்துவந்ததால் யெகோவா அவர்கள்மேல் கோபமாக இருப்பதாகவும்... யூதாவுக்கும் எருசலேமுக்கும் அழிவு வரப்போவதாகவும்... உல்தாள் சொன்னாள். அதேசமயத்தில், யோசியாவின் நல்ல மனதையும் அவர் தைரியமாக எடுத்திருந்த நடவடிக்கைகளையும் யெகோவா கவனித்திருந்ததால் அவருடைய வாழ்நாளில் அந்த அழிவு வராது என்றும் உல்தாள் சொன்னாள்.
ஆனாலும், யெகோவாவிடம் திரும்பிவர மக்களுக்குத் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் யோசியா செய்தார். திருச்சட்ட புத்தகத்தில் இருந்த சட்டங்களையெல்லாம் கடைப்பிடிப்பதாக அவரும் மக்களும் ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு, சிலை வழிபாட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட யோசியா தீவிரமாக முயற்சி எடுத்தார். அதன்பின், உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காக பஸ்கா பண்டிகையைப் பெரியளவில் கொண்டாட ஏற்பாடு செய்தார். அவரும் அவருடைய அதிகாரிகளும் யெகோவாவுக்குப் பலிகொடுக்க ஆயிரக்கணக்கான ஆடுமாடுகளை நன்கொடையாகக் கொடுத்தார்கள். பாடகர்கள் யெகோவாவைப் புகழ்ந்து பாடல்களைப் பாடினார்கள். கடவுளுடைய மக்கள் ரொம்பப் பிரமாண்டமாகக் கொண்டாடிய பஸ்கா பண்டிகைகளில் இதுவும் ஒன்று.
பொய் வணக்கத்தை எதிர்த்துப் போராடியபோது யோசியா நிறைய தைரியத்தையும் விசுவாசத்தையும் காட்டினார். பெத்தேல் நகரத்தில், பொய் வணக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பலிபீடத்தில் அவர் மனித எலும்புகளைச் சுட்டெரித்து, அந்தப் பலிபீடத்தை அழித்துப்போட்டார்; இப்படி, 300 வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். (1 ரா. 13:2) அதோடு, சாலொமோன் ராஜா யெகோவாவைவிட்டு விலகிய பிறகு யூதாவில் கட்டப்பட்ட ஆராதனை மேடுகளைக்கூட யோசியா அழித்துப்போட்டார். ஆனாலும் ஒருசமயம், அவர் தப்பான ஒரு முடிவை எடுத்துவிட்டார். எகிப்தின் ராஜா நேகோவோடு அவர் போர் செய்யப் போனார். ஆனால், தன்னோடு போர் செய்தால் யோசியா இறந்துவிடுவார் என்றும், அதை யெகோவாவே தன்னிடம் சொன்னதாகவும் நேகோ சொன்னான். உண்மையிலேயே யெகோவாதான் அதைச் சொன்னாரா என்று அவருடைய தீர்க்கதரிசிகளிடம் கேட்டு யோசியா உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், யோசியா அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, போர் செய்ய ஆரம்பித்தார். அவ்வளவு பெரிய படைக்கு எதிராக அவர் போர் செய்யப் போனது ரொம்ப தைரியமான விஷயமாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் உண்மையில் அவர் முன்பின் யோசிக்காமல் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். அதனால், அந்தப் போரில் அவருடைய உயிரே போய்விட்டது. அப்போது அவருக்கு வெறும் 39 வயதுதான்.
யோசியா செய்திருந்த நல்ல விஷயங்களையெல்லாம் யெகோவா மறந்துவிட்டாரா? இல்லவே இல்லை! எப்படிச் சொல்லலாம்? யோசியா செய்த நல்ல விஷயங்களையெல்லாம் சொல்லி எரேமியா தீர்க்கதரிசி ஒரு புலம்பல் பாட்டைப் பாடினார். நிறைய தலைமுறைகளாக கடவுளுடைய மக்கள் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள். புதிய உலகத்தில் யோசியா உயிரோடு வரும்போது, தன்னைப் பற்றி பைபிளில் எழுதப்பட்ட விஷயங்களையும், தன்னைப் புகழ்ந்து எரேமியா பாடிய பாட்டையும் ஒருவேளை படித்துப் பார்ப்பார். நிச்சயமாகவே, யோசியாவை யெகோவா ரொம்ப நேசித்தார், அவர் காட்டிய விசுவாசத்தையும் தைரியத்தையும் மறக்கவே இல்லை.
பைபிளில் பாருங்கள்:
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
யோசியா எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டினார்?
ஆராய்ந்து பாருங்கள்
1. யோசியாவின் செயலாளரும் நகல் எடுப்பவருமான சாப்பானைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? (w02 12/15 பக். 19 பாரா. 2-6)
2. திருச்சட்டப் புத்தகம் வாசிக்கப்பட்டபோது யோசியா ஏன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார்? (w14 4/15 பக். 32)
3. எகிப்தின் ராஜா நேகோ உண்மையிலேயே வாழ்ந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? (2 நா. 35:22; it “நேகோ” பாரா 2-wcgr) படம் A
StockStudio/Alamy Stock Photo
படம் A: எகிப்தின் ராஜா நேகோவோடு யோசியா சண்டை போட்ட இடமான மெகிதோ
படம் A: எகிப்தின் ராஜா நேகோவோடு யோசியா சண்டை போட்ட இடமான மெகிதோ
StockStudio/Alamy Stock Photo
4. யோசியா ‘நல்லடக்கம் செய்யப்படுவார்,’ அதாவது சமாதானத்தோடு அடக்கம் செய்யப்படுவார் என்று உல்தாள் சொன்னாள். ஆனால், யோசியா போரில் கொல்லப்பட்டார். அப்படியென்றால், இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (2 ரா. 22:20; w00 9/15 பக். 30 பாரா. 2-3)
பாடங்களை யோசியுங்கள்
யோசியாவின் அப்பா யெகோவாவை வணங்கவில்லை. யெகோவாவை வணங்காத பெற்றோரின் எதிர்ப்பை நீங்கள் சமாளிக்க வேண்டியிருந்தால் யோசியாவிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
வேதவசனங்களைப் புரிந்துகொள்ள யோசியா முயற்சி எடுத்தார். (2 நா. 34:21) நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்? படம் B
படம் B
யோசியாவைப் போல நீங்கள் வேறு எப்படியெல்லாம் தைரியத்தைக் காட்டலாம்?
இன்னும் பெரிய விஷயங்களை யோசியுங்கள்
இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்தப் பதிவு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
யோசியா உயிரோடு வரும்போது அவரிடம் நான் என்ன கேட்பேன்?
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
யோசியாவும் இன்னும் இரண்டு இளம் ராஜாக்களும் எடுத்த முடிவுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
“இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?” (w23.09 பக். 8-13)
யோசியா தன்னுடைய சொந்த பலத்தால் பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டினாரா? பதிலைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
யோசியா: யெகோவாவை நேசித்தார்; கெட்டதை வெறுத்தார் —பகுதி 2—சில காட்சிகள் (3:43)