கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதல் பெறுதல்
யெகோவா “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார் . . . சகல உபத்திரவங்களிலும் அவரே ஆறுதல் செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) ஆகையால் துயர் மிகுந்த காலங்களில் உண்மையான ஆறுதலையும் தேறுதலையும் பெற்றுக்கொள்வதற்கு அவரிடமும் அவருடைய வார்த்தையினிடமும் நாம் திரும்ப வேண்டும்.—ரோமர் 15:4.
நாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், அவர் ஒருபோதும் நம்மை கைவிடவும் மாட்டார், விட்டு விலகவும் மாட்டார்.’ மன உறுதியோடு நாம் பின்வருமாறு சொல்லலாம்: “யெகோவா எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (எபிரெயர் 13:5, 6; சங்கீதம் 37:39, 40; 145:20) எனவே நிச்சயமாகவே பெருந்துன்பங்களில் நாம் அவதியுறும் சமயத்தில் மனசோர்வடைய வேண்டிய அல்லது உற்சாகமிழக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய காலத்தில் தம்முடைய மிகப்பெரிய தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் ஒரு பாகமாக இயேசு சொன்தாவது: “பெற்றாராலும், சகோதரராலும் காட்டிக் கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். ஆனால் அதற்கு பின்பு இயேசு தொடர்ந்து கூறியதாவது: “ஆனாலும் உங்கள் தலை மயிரில் ஒன்றாகிலும் அழியாது.” (லூக்கா 21:16-18) அது எப்படி அவ்வாறு இருக்கக்கூடும்? உயிர்த்தெழுதலின் காரணமாகவே அது அவ்வாறு இருக்கக்கூடும். இந்த ஒரு நம்பிக்கைதானே பவுலை நிலைத்திருக்கச் செய்தது. (யோவான் 5:28, 29; 2 கொரிந்தியர் 1:9, 10) மரணமும்கூட, எதிர்காலத்துக்கான நமது மகத்தான நம்பிக்கையை பறித்துபோட முடியாது என்பதை அறிவதானது ஆறுதலளிப்பதாக இல்லையா?
சரீர சித்திரவதைகளை சகித்துகொண்டிருக்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கும் கொடுஞ் செயலின் காரணமாக ஊனமுற்றிருப்பவர்கள் மற்றும் முடமாக்கப்பட்டிருப்பவர்களுக்கும், கற்பழிக்கப்பட்டிருக்கும் தெய்வ பக்தியுள்ள பெண்களுக்கும், தங்கள் பிள்ளைகளிடமிருந்து பலவந்தமாய் பிரிக்கப்ட்டிருக்கும் பெற்றோர்களுக்கும் இந்த நம்பிக்கையும் கடவுளுடைய உதவியின் நிச்சயமும் கொடுக்கக்கூடிய ஆறுதலை சிந்தித்துப் பாருங்கள். ஆம், யெகோவாவின் வார்த்தையில் நாம் ஆறுதலையும் மற்றும் நிச்சயமான நம்பிக்கையையும் தரக்கூடிய அநேக கூற்றுகளை காண்கிறோம். இது உபத்திரவங்களில் களிகூரும்படியும் செய்யக்கூடும்.—மத்தேயு 5:10-12.
வெகுமதியை மனதில் கொண்டிருங்கள்
இன்னல்களையும் உபத்திரவங்களையும் அனுபவிக்கையில் மற்ற யெகோவாவின் ஊழியர்களுக்கு நிகழாத எந்த ஒரு காரியமும் நமக்கு நிகழ்வது இல்லை என்பதை நினைவிற் கொள்ளுங்கள். பேதுரு அப்போஸ்தலன் எதை ஊக்குவித்தானோ அதை நாம் செய்வோமானால் யெகோவாவை சேவிப்பதை நிறுத்தக்கூடிய பிசாசின் எந்த ஒரு முயற்சியையும் நாம் எதிர்த்து நிற்கக்கூடும்: “விசுவாசத்திலே உறுதியாயிருந்து அவனுக்கு [பிசாசுக்கு, NW] எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே [முழு சகோதர கூட்டத்தாரிடத்திலே, NW] அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. (1 பேதுரு 5:9) ஆம், மற்ற கிறிஸ்தவர்களும்கூட நற்செய்தியின் சார்பாக இதற்கொப்பான சோதனைகளை எந்த விதத்திலும் விட்டு கொடுக்காமல் சகிக்கின்றனர். நாமும் அதையே செய்யலாம்.
உறுதியுள்ளவர்களாக நின்றவர்களை மட்டுமல்ல, ஆனால் அவர்கள் அடைந்த வெகுமதியையும்கூட நாம் கவனிக்க வேண்டும். ஒரு எடுத்துக்காட்டாக யோபு யெகோவா தேவனை சுயநலக்காரணங்களுக்காக மட்டுமே சேவித்தான் என்பதை நிரூபிப்பதில் சாத்தான் விடாப்பிடியாக இருந்தான். இந்த கடவுளுடைய மனிதன் மீது ஒன்றன்பின் ஒன்றாக இடுக்கண்களை கொண்டுவந்தான். முதலில் அவனுடைய விலங்குகள் அழிக்கப்பட்டன. பின்பு அவனுடைய ஊழியக்காரர், மற்றும் இறுதியில் அவனுடைய பத்து பிள்ளைகளும் அழிக்கப்பட்டார்கள். அத்துடன் திருப்தியடையாதவனாய் சாத்தான் யோபுவை “உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.” (யோபு, அதிகாரங்கள் 1, 2) இந்த இடுக்கண்கள் காரணமாக கடவுளிடமிருந்த தன் உத்தமத்தை யோபு முறித்துக் கொண்டானா?
இல்லை, அவன் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் அந்த வெகுமதியை பற்றியதென்ன? சரிதான், யெகோவா யோபின் உடல் நலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தார். அவனுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றிற்கும் “இரட்டத்தனையாய்” அவர் அவனுக்கு கொடுத்தார். நீடித்த திருப்திகரமான வாழ்க்கையையும் அருளினார். (யோபு 42:10-17) இந்த வெகுமதிகளோடுகூட, உயிர்த்தெழுதலை அடைந்து, பரதீசிய பூமியில் நித்திய ஜீவனை அடையும் மிகப் பெரியதோர் எதிர்பார்ப்பு ஒன்று இருந்திருக்கிறது. (யோபு 14:13-15) நிச்சயமாகவே இன்று வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு யோபினுடைய அனுபவம் ஆறுதலையும் பலத்தையும் கொடுக்கிறது.
“யெகோவா உதவுகிறார்”
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியின் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் பல ஆண்டுகளாக துன்பங்களை சகித்து வந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணின் காரியத்தை கவனியுங்கள். பயங்கரமான சூழ்நிலைமைகளோடுகூட மிருகத்தனமான துன்புறுத்தலும் மற்றும் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு பலவந்தமாய் பிரிக்கப்பட்ட தனிமைநிலை. அவர்களுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியாத நிலைமை. இறுதியில் ஐந்து ஆண்டு காலமாக அவள் உண்மையுடன் சகித்த பிற்பாடு அவள் தன்னுடைய கணவனுடனும் பிள்ளையுடனும் மீண்டுமாக ஒன்று சேர்க்கப்பட்டாள். அது முதற்கொண்டு அவர்கள் மூவரும் யெகோவாவை உண்மையோடு சேவித்து வருகின்றனர். தன்னுடைய அனுபவத்தை குறித்த அவளுடைய குறிப்பை கவனியுங்கள்.
“ஜெர்மன் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் நான் செலவிட்ட ஆண்டுகள் ஓர் மேன்மையான பாடத்தை எனக்கு கற்பித்தது. நீங்கள் கடும் நெருக்கடிகளிலிருக்கையில் யெகோவாவின் ஆவி எவ்வளவு மிகுதியாய் உங்களை பலப்படுத்தக்கூடும் என்பதே அந்த பாடம்! நான் கைது செய்யப்படும் முன்பு, ஒரு சகோதரியின் கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் நீங்கள் கடும் நெருக்கடிகளிலிருக்கும்போது யெகோவாவின் ஆவியானது உங்கள் மீது ஒரு மெல்லமைதி உண்டாகும்படி செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இதை அவள் சற்று மிகைப்படுத்தி கூறியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் நானே சுயமாக அந்த சோதனைகளை அனுபவித்தபோது அவள் என்ன சொன்னாளோ அது உண்மையென்பதை அறிந்துகொண்டேன். உண்மையில் அது அவ்வாறே நிகழ்கிறது. நீங்கள் அதை அனுபவித்திராவிட்டால் அதை கற்பனை செய்து பார்ப்பது கடினம். எனினும் அது உண்மையிலே எனக்கு கிடைத்தது. யெகோவா உதவுகிறார்.”
இந்த கூற்றுகளினால் நீங்கள் ஆறுதலையும் பலத்தையும் அடைகிறதில்லையா? சோதனைகளின்போது தன் உத்தமத்தை உறுதியாய் பற்றிக்கொண்டதன் காரணமாக இந்த கிறிஸ்தவ பெண், தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து நித்திய ஜீவனுக்காக தனது நம்பிக்கையை அடைவதற்கு எதிர்நோக்கியிருக்கிறாள். (எபிரெயர் 10:39) உண்மையுடனிருப்பதற்கு என்னே ஒரு மகத்தான வெகுமதி!
பல ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்த பிற்பாடு நம்முடைய அருமை சகோதரனாகிய பவுல் எவ்வாறு உணர்ந்தான்? சோர்வடைந்துவிட்டாரா? இதயம் நொடிந்து போய்விட்டாரா? மனமுறிவடைந்துவிட்டாரா? இல்லவே இல்லை. அவர் திடநம்பிக்கையுள்ளவராகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்தவராகவும் அவர் அதை சகித்ததற்காக மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார். “நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தை காத்துக்கொண்டேன்,” என்று பவுல் சொன்னான். “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்.” (2 தீமோத்தேயு 4:7, 8) பவுல் தன்னுடைய போக்கை மனவுறுதியோடு பற்றியிருந்தான். ஆகவே அவன் பரலோக பரிசை பெற்றுக்கொண்டான். (பிலிப்பியர் 3:4-14) இப்படிப்பட்டதோர் சிறந்த முன்மாதிரியினால் ஆறுதலடையாதவர்கள் யார்? அதே போன்று நாமும் இன்னல்களை சகிப்போமாக, வேத வசனங்களிலிருந்து ஆறுதலை பெற்றுக்கொண்டு நம்முடைய அன்பார்ந்த கடவுளாகிய யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருங்கள். (w85 9/15)
[பக்கம் 7-ன் படம்]
யோபின் அனுபவம் இன்று துன்பப்படும் கிறிஸ்தவர்களுக்கு பலத்தை கொடுக்கிறது