திருவெளிப்பாடு—எப்பொழுது?
அது ஏறக்குறைய சமீபகாலத்து செய்தித்தாள்களை படிப்பதைப் போன்று இருக்கிறது—போர்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள், பஞ்சம், குற்றச்செயல், மற்றும் பயம்! இந்த எல்லா நிகழ்ச்சிகளும் மற்றும் இன்னுமதிகமான காரியங்களும் பைபிளில் முன்னுரைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அனைவரும் வாழக்கூடிய அந்தக் காலம் “கடைசி காலம்” என்பதை அவை மிக நுட்பமாக குறிப்பிடுகின்றன. அப்படியானால் இது அண்மையிலிருக்கக்கூடியதும் மற்றும் வாக்களிக்கப்பட்டிருப்பதுமான அந்தத் திருவெளிப்பாட்டிற்கு வழிநடத்தக்கூடிய சகாப்தம் என்பதைக் குறிக்கிறது. இதைக் குறித்து நீங்கள் எப்படி நிச்சயமாயிருக்கலாம்?
இன்று நீங்கள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். “நீங்கள் உண்மையை எதிர்ப்பட வேண்டும்” என்று பைபிள் சொல்லுகிறது. இந்த உலகத்தின் “இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும். அப்போது மக்கள் தன்னலப் பிரியர், பொருளாசைப்பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப் பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறக்கணிப்பவர், பரிவில்லாதவர். . . . நல்லதை வெறுப்பவர், . . . இறுமாப்புடையவர், கடவுளை நாடுவதைவிட சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர். பக்தியின் வெளித்தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள், ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5, கத்தோலிக்க தமிழ் மொழிபெயர்ப்பு) இதே நிலைமைகள்தாமே அனைவரிடத்திலும் இருப்பதை நீங்கள் காண்கிறதில்லையா?
இன்று உயிரோடிருக்கும் அநேகர், ஒருவேளை அது நீங்களாகவும் இருக்கலாம், இப்பொழுது இருப்பதைப்போன்று நிலைமைகள் அவ்வளவு மோசமாக இல்லாத காலத்தை நினைவுகூறக்கூடும். மக்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கரிசனையுள்ளவர்களாக இருந்தார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடத்திலும் பெரியவர்களிடத்திலும் அதிக மரியாதையுள்ளவர்களாக இருந்தார்கள். ஆண்களும், பெண்களும் மற்றும் பிள்ளைகளும் தெருக்களில் இரவிலுங்கூட நடமாடுவதற்கு பயமில்லாமலிருந்தனர். ஆனால் காலங்கள் தீவிரமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகளில் சில உங்கள் பிராந்தியத்தில் ஒருவேளை காணப்படாவிட்டாலும், மனிதனின் ஆதிக்கத்திற்காக இறுமாப்புள்ள வெறி நிச்சயமாக அணு ஆயுத போருக்கான சாத்தியம் நம் எல்லாரையும் பாதிக்கிறது.
ஆம், கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் இந்த உலகத்தின் “இறு நாட்களை” குறித்து மிகத் தெளிவாக முன்னுரைத்திருப்பதைப் போன்றே இந்தத் திருவெளிப்பாட்டின்—இயேசு தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு வரும் காலத்தைக் குறித்துங்கூட அவர் நமக்கு தகவல் அளித்திருக்கிறார்.
அநேகர் நினைப்பதைக் காட்டிலும் அண்மையிலிருக்கிறது
“புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்” என்று கடவுள் சொல்லுகிறார். “அவைகள் தோன்றாததற்கு முன்னே அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஏசாயா 42:9) ஆம், அந்தத் திருவெளிப்பாட்டிற்கு சற்று முன்பாக நிகழக்கூடிய அந்த முக்கிய நிகழ்ச்சிகளை அவர் நமக்காக பைபிளில் குறித்து வைத்திருக்கிறார்.
உதாரணமாக, உலக முழுவதிலும் சொல்லப்பட வேண்டிய ஒரு செய்தியைக் குறித்து இயேசு பேசின பின்பு அதைத் திருவெளிப்பாட்டுடன் இணைத்தார். அவர் சொன்னதாவது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) அந்த “முடிவு” திருவெளிப்பாட்டை உட்படுத்துகிறது. இன்று யெகோவாவின் சாட்சிகள் அந்த ராஜ்ய செய்தியைப் பூமி முழுவதிலும் 200-ற்கும் அதிகமான நாடுகளில் வீடுவீடாகவும் மேலும் மற்ற சாத்தியமான வழிகளிலும் அறிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மணிநேரங்களை செலவழிக்கின்றனர்!
தம்மைப் பின்பற்றுகிறவர்களின் நன்மைக்காக, இயேசு முனைப்பாக ஒப்பீடு காட்டுபவராய், திருவெளிப்பாட்டிற்கு வழிநடத்தக்கூடிய அந்தக் காலத்தை ஜலப்பிரளயத்துக்கு முன்னான நோவாவின் காலத்திற்கு ஒப்பிட்டார். நோவாவின் நாட்களில் மக்கள் புசிப்பதிலும் குடிப்பதிலும் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதிலும் அவ்வளவு அதிகமாக மூழ்கிவிட்டப்படியால் தீவிரித்து வந்து கொண்டிருந்த அழிவு பற்றிய நோவாவின் செய்திக்குக் கவனம் செலுத்தவில்லை. “உணராதிருந்தார்கள்,” அவனுடைய எச்சரிக்கைகளுக்கு அலட்சியமாயிருந்தார்கள்.—மத்தேயு 24:37-39.
ஜலப்பிரளயத்திற்கு முன்பாக இருந்த அந்தச் சூழ்நிலைமைகளுக்கு நம்முடைய நாட்கள் ஆ, எவ்வளவு நெருக்கமாக ஒத்திருக்கிறது! மக்கள் தங்களுடைய அனுதின அலுவல்களில் அவ்வளவு அதிகமாக ஆழ்ந்துவிட்டபடியால் நெருங்கிவந்து கொண்டிருக்கும் திருவெளிப்பாட்டைக் குறித்த அந்த எச்சரிக்கைகளையும் மற்றும் அத்தாட்சிகளையும் அவர்கள் கவனிப்பது இல்லை.
இருந்தபோதிலும் அநேகர் நினைப்பதைக் காட்டிலும் திருவெளிப்பாடு அதிக அண்மையிலிருக்கிறது. கடைசி நாட்களின் அடையாளத்தைக் குறித்து இயேசு அறிவித்ததாவது: “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:34) எந்தச் சந்ததியைப் (தலைமுறையைப்) பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார்?
1914 தலைமுறை
மாக பிரிட்டனின் சமாதானம் மற்றும் செழுமையுடன் தொடர்புள்ள விக்டோரியன் சகாப்தத்தை குறிப்பிடுபவராய் முன்னாள் பிரதம மந்திரியான ஹெரால்ட் மாக்மில்லன், ‘தான் பிறந்துள்ள அந்த உலகம், “மேன்மேலும் மேம்பட்டதாக” ஆகும்’ என்று தான் கருதியதாக சொன்னார். “ஆனால் திடீரென்று எதிர்பாராத விதமாய், 1914-ன் ஒரு காலைப்பொழுதன்று முழு காரியமும் முடிவுக்கு வந்துவிட்டது.” அதனை “100 ஆண்டு கால சமாதானம் மற்றும் முன்னேற்றத்தின்” முடிவு என்ன அறிவித்துவிட்டது. இந்த முதல் உலக யுத்தம், எப்படி “ஒரு சகாப்தத்தின் முடிவையும்” மற்றும் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் குழப்பத்தின் ஆரம்பத்தையும்” அடையாளப்படுத்திக் காண்பித்தது என்பதை மாக்மில்லன் நினைவு கூர்ந்தார். முக்கியமாக 1914-ஆம் ஆண்டின்போது வாழ்ந்தவர்களும் இன்னமும் உயிரோடிருக்கக்கூடியவர்களுமான மற்ற அநேகருங்கூட இது உண்மை என்பதை அறிந்திருக்கின்றனர்.
1914-ம் ஆண்டு தலைமுறையே இயேசு பேசின அந்தத் தலைமுறை என்பதற்கு அத்தாட்சிகள் சுட்டிக் காட்டுகின்றனவென்று இந்தப் பத்திரிகை அதன் வாசகர்களுக்கு பல ஆண்டுகளாக காண்பித்து வந்திருக்கிறது.a எனவே, “இவைகளெல்லாம் [திருவெளிப்பாடு உட்பட] சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி [தலைமுறை] ஒழிந்துபோகாது.”
1914-ஆம் ஆண்டு முதற்கொண்டு, 70-ற்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டப் போதிலும் அந்தச் சகாப்தத்தினூடே வாழ்ந்துவரும் ஆட்கள் இன்னமும் இருக்கின்றனர். தி அமெரிக்கன் லீஜன் பத்திரிகை (The American Legion Magazine) டிசம்பர் 1984-ற்குரியது சொல்லுகிற பிரகாரம் ஐக்கிய மாகாணத்தில் மட்டும், முதல் உலகப் போரை கண்ணாரக்கண்ட சுமார் 2,72,000 முதிர் வயதானோர் இன்னமும் உயிரோடிருக்கின்றனர். அவ்வாறே மற்ற நாடுகளிலும் இருக்கிறது இருந்தபோதிலும் அந்த எண்ணிக்கை தீவிரமாக குறைந்துவருகிறது. எனவே முதல் உலகப் போர் அனுபவமடைந்த முதிர்வயதானவர்களில் கடைசியானவர் இந்த வரலாற்றில் நடமாடும் வரையில் எவ்வளவு காலமிருக்கும்?
இந்தப் புள்ளிவிவரங்கள் 1914-ம் தலைமுறையின் இறுதிக் கட்டத்திற்கு நம்முடைய கவனத்தை ஈர்க்கக்கூடும் என்றாலும், அந்தத் திருவெளிப்பாட்டின் சரியான காலத்தைக் குறித்து நாம் எவ்வளவு திட்டவட்டமாக இருக்கக்கூடும்?
“இரவிலே திருடன்”
பைபிள் முன் எச்சரிப்பதாவது: “இவைகள் நடக்கும் காலங்களையும் சமயங்களையும் குறித்ததில் . . . இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:1, 2) ஒரு திருடன் எப்பொழுது உங்கள் வீட்டில் புகுந்து திருடப் போகிறான் என்பதைத் தெரிவிக்க ஒரு தந்தி அனுப்பும்படி நீங்கள் நியாயமாகவே எதிர்ப்பார்ப்பீர்களா?
எனவே, பொருத்தமாகவே, அந்தச் சரியான காலத்தைக் குறித்து இயேசு நமக்கு அறிவுரைக் கொடுப்பதாவது: “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.” (மாற்கு 13: 32-37) அப்படியிருந்தபோதிலும் 1914-ம் தலைமுறையை மிக நுட்பமாக குறிப்பிடக்கூடிய பல்வேறு சம்பவங்களை இயேசு வவரித்ததை நாம் கவனித்தோம். அண்மையிலிருக்கக்கூடிய அந்தத் திருவெளிப்படுதலை அடையாளப்படுத்தக்கூடிய எதிர்கால நிகழ்ச்சிகளையும் பைபிள் குறிப்பிடுகிறது. நாம் என்ன எதிர்ப்பார்க்கலாம்?
சம்பவங்களின் ஒரு மாற்றம்
அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதாவது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும், அவர்கள் தப்பிப் போவதில்லை.” எனவே நாம் “கடைசி நாட்களின்” இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்லுகையில்” சமாதானம் மற்றும் பாதுகாப்பு!” ஆகியவற்றிற்கு ஏதோ முனைப்பான கவனம் செலுத்தும்படி நாம் எதிர்ப்பார்க்கலாம். அதன் பின்பு என்ன?
“மகா பாபிலோன்” என்று விவரிக்கப்பட்டிருக்கும் உலக மதங்கள் பூமிக்குரிய அரசியல் சக்திகளால் திடீரென்று தாக்கப்பட்டு சடிதியான முடிவுக்கு வரும்! என்ற பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக் காட்டுகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 17:5, 16; 18:10, 17) இதுதானே “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தின்” ஆரம்பத்தைக் குறிக்கும் (மத்தேயு 24:21) ஆனால் விழிப்புணர்வோடு இருந்து திருவெளிப்பாட்டிற்காக காத்துக் கொண்டிருந்தவர்களை இது எவ்வாறு பாதிக்கும்?
யெகோவா அவர்களை இரட்சிப்பார் என்று உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடிருக்கலாம். (2 பேதுரு 2:9) ஆம், யெகோவா தேவனை அறிந்து சுயநலமின்றி அவரைச் சேவிக்கும் வரையில் கடவுளும் கிறிஸ்துவும் அர்மகெதோன் போர் புரிய வரும்போது அவர்கள் பயப்படுவதற்கு எந்த ஒரு காரணமுமில்லை.—வெளிப்படுத்தின விசேஷம் 11:17, 18; 16:14, 16.
அடுத்தப்படியாக, இந்தத் திருவெளிப்பாடு பிசாசாகிய சாத்தானும் அவனுடைய காணக்கூடாத சேனைகளும் மனிதவர்க்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனியே வைக்கப்பவதற்கு வழிநடத்தும். (வெளிப்படுத்தின விசேஷம் 20:2, 3) ஆம், வந்து கொண்டிருக்கும் கோபாக்கினை கடவுளை சேவிப்பதற்கு மனவிருப்பமற்றவர்களாயிருக்கும் ஆட்களை ஒழித்துக் கட்டுவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்யும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய பொல்லாத ஆவிகளுங்கூட அகற்றப்படும். (2 தெச. 1:6-9) அப்படியானால், இது அந்தத் திருவெளிப்பாட்டை உயிர்த்தப்பிப் பிழைத்திருக்கும் ஆட்களுக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் குறிக்கும்.
திருவெளிப்பாடு பரதீஸுக்கு முன்னோடி
பூமியின் குடிமக்களைக் குறித்து, வெளிப்படுத்துதல் (திருவெளிப்பாடு, டூவே பைபிள்) புத்தகம் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, வருத்தமுமில்லை. முந்தினவைகள் (பழைய ஒழுங்குமுறைக்குரிய காரியங்கள் அனைத்தும்) ஒழிந்து போயின.” (வெளிப்படுத்தின விசேஷம் 21:4) திருவெளிப்பாட்டிற்கு பிற்பாடு, இருண்டதோர் எதிர்காலமிருப்பதற்கு மாறாக, மனிதன் ஒரு பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு தகுதியுள்ள நிலையிலிருப்பான் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது.—சங்கீதம் 37:9-11, 29.
பரதீஸா? பூமியில் நித்திய வாழ்க்கையா? சற்று கற்பனைச் செய்து பாருங்கள். பூரண ஆரோக்கியம், எல்லா குலத்திலிருந்தும் வரும் ஆட்கள் நிறைவான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றனர்! ‘இது எவ்வாறு ஓர் திருவெளிப்பாட்டின் நற்பலனாக இருக்கக்கூடும்?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். கடவுள் தாமே இந்த வாக்கைக் கொடுத்திருக்கிறார். இஸ்ரவேலருடன் கடவுள் செயல் தொடர்பு கொண்டபோது இருந்ததைப் போன்று அது இருக்கும். அதாவது “யெகோவா சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”—யோசுவா 21:45.
எனவே அந்தத் திருவெளிப்பாடு நிகழும் அந்தச் சரியான நாள் மற்றும் மணிநேரத்தை குறித்து எவரும் அறியார்கள். ஆனால், நாம் திருவெளிப்பாட்டின் சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. அது தாக்குகையில் நாம் “விழித்திருக்கிறவர்களாக” காணப்படுவோமாக. ஏனெனில் “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—மாற்கு 13:33, 37; 1 யோவான் 2:17; மத்தேயு 24:36. (w86 2/15)
[அடிக்குறிப்புகள்]
a 1914 பற்றிய கூடுதலான விவரங்களுக்கு உவாட்ச் டவர் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தில் அதிகாரம் 14-ல் பார்க்கவும்.