உங்கள் நம்பிக்கை—கடவுளா அல்லது செல்வங்களா?
“பாதுகாப்பாக பூட்டப்பட்ட இரண்டு இருப்பு வாயில் கதவுகளும், சங்கிலியால் இணைக்கப்பட்ட வேலியும் சித்திர வேலைபாடுள்ள தன் வீட்டைச் சுற்றி இருக்க, அவள் பல ஆண்டுகளாக அதில் பதுங்கி வாழ்ந்து வந்தாள்.”
திருடர்கள் கைகளில் உயிரிழந்த அந்தப் பணக்கார விதவையை ஒரு செய்தி அறிக்கை இவ்விதமாகவே விவரித்தது. அவளுடைய நகைகளையும் அவளுடைய வீட்டிலிருந்து 1 கோடி 30 இலட்சம் ரூபாய் பணத்தையும் அவர்கள் திருடிவிட்டிருந்தார்கள். அவளுடைய சடலத்தைக் கண்டு பிடித்தப் பின்பு, அவளுடைய வீட்டிலிருந்து இன்னும் 5 கோடி 150 இலட்சம் ரூபாய் பணத்தை வெளியே எடுத்து வர, மளிகைச் சமான்களை ஏற்றிச் செல்லும் ஒரு வண்டியை காவல் துறையினர் பயன்படுத்தினார்கள். “இயேசு கிறிஸ்துவுக்கு” “தேவனுக்கு” என்பதாக முகவரியிடப்பட்ட அட்டைகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான “பிறந்த நாள் பரிசு” பொருட்களையும் கூட காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
மிகப் பெரிய பணக்காரியாக இருந்த இந்தப் பெண்ணுக்கு நண்பர்கள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. அவள் எப்பொழுதும் பயத்திலேயே வாழ்ந்து வந்தாள். அவள் இத்தனை உயர்வாக மதித்திருந்த இலட்சக்கணக்கான பணம் உண்மையில் எவ்வளவு மதிப்புள்ளதாக இருந்தது? மேலுமாக அவள் கடவுளிடமாக எவ்வளவு ஐசுவரியமுள்ளவளாக இருந்தாள்? “பிறந்த நாள் பரிசு” பொருட்களைக் கொண்டு கடவுளை வாங்கிவிட முடியாது என்பதையும் செல்வத்தை உடைமையாக பெற்றிருப்பதால் தேவ சமாதானம் வருவதில்லை என்பதையும் நீங்கள் நிச்சயமாகவே அறிந்திருக்கிறீர்கள். நாம் ‘நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கிறோம்’ என்ற பைபிளின் புத்திமதியிலிருந்து இதை நாம் காண முடியும்.—1 தீமோத்தேயு 6:17.
ஐசுவரியங்கள் ஏன் அவ்வளவு நிலையற்றதாக இருக்கின்றன? ஆம், இயேசுவின் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவையாக இருக்கின்றன என்பது ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.” (மத்தேயு 6:19) தீயினால் ஒரு வீடு அழிக்கப்படும் அபாயம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சில ஆட்கள் தங்களுடைய விலைமதிப்புள்ள பொருட்களை வங்கிகளில் பாதுகாப்புக்காக வைக்கிறார்கள். ஆனால் திருடர்கள் இவைகளையும் கூட கொள்ளையடிப்பதில்லையா? புத்தம் புதிய ஒரு மோட்டார் வண்டியும் கூட துருப்பிடித்து விடுகிறது.
தேசங்களின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன? அநேக தேசங்களில் பணவீக்கம் ஒரு திருடனைப் போல இருக்கிறது; அது ஒரு நபரின் ஆஸ்திகளை அழித்துவிடுகிறது. “1920 களின் முற்பகுதியில் ஜெர்மனியில் அளவுக்கு அதிகமான பணவீக்கம் ஏற்பட்டபோது, கடைக்காரர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்க கூடை கூடையாக பணம் தேவைப்பட்டது . . . ஆகஸ்ட் 1921 முதல் நவம்பர் 1923 வரையாக ஜெர்மனியில் விலைவாசிகள் ஒரு நூறாயிரக்கோடி மடங்குக்கும் அதிகமானது” (தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா) பணத்தில் நம்பிக்கை வைப்பது எத்தனை ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இருக்கக்கூடும்!
இயேசு ஞானமாக பின்வரும் ஆலோசனையைக் கொடுத்தார்: “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.” (மத்தேயு 6:20) இந்தப் பொக்கிஷங்கள் யாவை? அவை நம்முடைய சொந்த நற்கிரியைகளின் பதிவாகவும் நாம் கடவுளிடமாக ஐசுவரியமுள்ளவர்களாயிருப்பதைக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். “நன்மை செய்யவும் நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும் தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களாயிருக்கவும் வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:18
மற்றவர்களோடு ஆவிக்குரிய மற்றும் பொருளாதார காரியங்களைப் பகிர்ந்து கொள்வது குறிப்பாக பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் சீஷராக்கும் வேலையிலும் ஈடுபடுவதன் மூலம், ராஜ்ய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்கள் கற்றறிய உதவி செய்வது—யெகோவாவின் அங்கீகாரத்தையுடைய நற்கிரியைகள் என்பதையும் அது மெய்யான மனநிறைவைக் கொண்டு வருகிறது என்பதையும் பூமி முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளால் உண்மையில் உறுதியாகச் சொல்ல முடியும். இவ்விதமாக பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்போது மரணமும்கூட இதற்குரிய பலன்களைப் பெற்றுக் கொள்வதை பறித்து விட முடியாது. ஏன் அப்படி? இயேசு பின்வருமாறு வாக்களித்திருக்கிறார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”—யோவான் 11:25.
நாம் இப்பொழுது அனுபவிக்கக்கூடிய விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்
நாம் “தேவன் மேல்” நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பவுல் சொன்ன பிறகு, ‘நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்கிறவர் அவரே’ என்பதாக தொடர்ந்து சொல்கிறான். (1 தீமோத்தேயு 6:17) தினசரி வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதோடு கூட மகா உன்னதமானவர், அவர் அங்கீகரிக்கும் ஆட்களுக்கு அன்பாக விலைமதிப்பில்லா பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். இந்தப் பொக்கிஷங்கள் யாவை?
நீதிமொழிகள் 3:13-18 என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தையைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும் அதின் ஆதாயம் பசும் பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப் பார்க்கிலும் அது விலையேறப் பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல, அதின் வலது கையில் தீர்க்காயுசும் அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது . . . அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம், அதைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.” ஆகவே மதிப்பில் உலகிலுள்ள ஐசுவரியங்கள் அனைத்தையும் மிஞ்சிவிடும் பொக்கிஷம் “ஞானமாக” இருக்கிறது.
ஞானம் என்பது அறிவை சரியான விதத்தில் பிரயோகிப்பதாக இருக்கிறது. பிரச்னைகளைத் தீர்க்க, ஆபத்துக்களைத் தவிர்க்க அல்லது தடுக்க, குறிப்பிட்ட சில இலக்குகளை அடைய அல்லது அவ்விதமாக மற்றவர்கள் செய்வதற்கு உதவி செய்ய அறிவையும் புரிந்து கொள்ளுதலையும் வெற்றிகரமாக பயன்படுத்தும் ஒரு திறமையாக அது இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை வெற்றிகரமாக சமாளிக்கவும் கடவுளோடு ஒரு நல்ல நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கும் இன்று நமக்கு இப்படிப்பட்ட ஞானம் அவசியமாயிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களல்லவா?
ஞானத்தை விவரிக்கையில் நீதிமொழிகள் 3:3-18 மகிழ்ச்சியை உயர்த்திக் காண்பிக்கிறது. மகிழ்ச்சி என்பது நாம் அனைவருமே விரும்பும் ஒரு பொக்கிஷமாக இருக்கிறதல்லவா? தெய்வீக ஞானம் நமக்கு இந்த மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஏனென்றால் மெய்யான சந்தோஷம், அதன் ஊற்றாகிய யெகோவா தேவனிடமிருந்து மாத்திரமே வர முடியும். மகா உன்னதமானவருக்குக் கீழ்ப்படிவதையும் அவருடைய ஆவி கிரியை செய்வதை அனுமதிப்பதையும் தள்ளிவிடாமல், மெய்யான சந்தோஷத்தை அடைய முடியாது என்பதை அனுபவப்பூர்வமாக நாம் கண்டிருக்கிறோம். பைபிளில் வாக்களிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சி நம்முடைய பரமத் தகப்பனோடு நம்முடைய சரியான உறவின் பேரில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையின் பேரில் சார்ந்ததாக இருக்கிறது. (மத்தேயு 5:3-10) ஆகவே பைபிளைப் படிக்கும்போது நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் நாம் “பரத்திலிருந்து வருகிற ஞானத்தை” விளங்கப் பண்ணுவோம். உலகிலுள்ள எல்லா ஐசுவரியங்களும் பெற்று தர முடியாத சந்தோஷத்தை இது நமக்குக் கொடுக்கும்.