பயனியர் ஆவி பிலிப்பைன்ஸின் அறுவடை வேகத்தை அதிகரிக்கிறது
நீங்கள் 1935-ல் மனிலாவில் வாழ்ந்திருந்து யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ள விரும்பியிருந்தால், 1134 ரிஸால் அவன்யூவில் ஒரு சிறிய தனி அறையைத் தேடிக்கொண்டு போக வேண்டியதாக இருந்திருக்கும். அங்கே பைபிளைப் படிப்பதற்காகச் சுமார் 20 பேர் ஒழுங்காகக் கூடிவந்தார்கள். அந்தத் தனி அறையே பிலிப்பைன்ஸில் உவாட்ச்டவர் சொஸையட்டியின் முதல் கிளைக்காரியாலயமாக இருந்தது.
இன்று மனிலா தலைநகரப் பகுதியில், 9000-க்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட 103 யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இருக்கின்றன! அதே விதமாகவே 40 ஆண்டுகளுக்கு முன்னர், பிலிப்பைன்ஸுக்குத் தொலைவில் தெற்கே தவாவ் நகரில் சாட்சிகள் ஒருவரும் இல்லை. இப்பொழுது அந்த நகரிலுள்ள 41 சபைகளில் 2800-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கிறார்கள்.
ஆரம்பகால சாட்சிகள் தங்கள் பெயருக்கு ஏற்ப வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு இவ்விரு பெரிய நகரங்களில் காணப்படும் அதிகரிப்பு அத்தாட்சியாக இருக்கிறது. (ஏசாயா 43:10-12) அவர்கள் பிலிப்பைன்ஸிலுள்ள எல்லா பகுதிகளிலும் பிரசங்கித்துப் போதித்து வந்திருக்கிறார்கள். இதோடு இணைந்து வரும் புள்ளிவிவர அட்டவணையை ஆராய்வதன் மூலம், கடந்த அரை நூற்றாண்டின்போது கிறிஸ்தவ சீஷராக்கும் வேலையின் கனிகளை நீங்கள் காணமுடியும். பிலிப்பைன்ஸில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பது என்ன?
பயனியர் ஆவி வளர்ச்சிக்கு உதவி செய்கிறது
ஆரம்ப காலத்திலிருந்து பிலிப்பினோ சாட்சிகளுக்கு வைராக்கியமுள்ள பயனியர் ஆவி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால், நற்செய்தி நூற்றுக்கணக்கான தீவுகளைச் சென்றெட்டுவது கூடாத காரியமாக இருந்திருக்கும். அந்த ஆவி இன்னும் உயிருள்ளதாகவே இருக்கிறது. உதாரணமாக பிலிப்பைன்ஸ் முழுவதிலுமாக ஊழியஞ்செய்து வரும் 758 விசேஷ பயனியர்களோடுகூட 9090 ஒழுங்கான பயனியர்கள் இருப்பதை 1986 பிப்ரவரி அறிக்கை காண்பித்தது. இரண்டே ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்ட அறிக்கையைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது! ஏப்ரல் 1985-ல் 26,630 பேர்—தேசத்திலுள்ள சாட்சிகளில் மூன்றில் ஒரு பங்கு சாட்சிகள் ஏதாவது ஒருவிதமான முழு நேர பிரசங்க வேலையில் ஈடுபட்டார்கள்.
ஆம், பிலிப்பைன்ஸிலுள்ள யெகோவாவின் ஜனங்கள் காலங்களின் அவசரத்தன்மையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களுடைய அயலகத்தாருக்குக் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் எவ்வளவு அதிகமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அவ்வளவு அதிகமான நேரத்தைச் செலவிடுவதை அனுமதிக்கிறது. முழு நேர ஊழியத்தை எடுத்துக்கொள்வதற்காக எவ்விதமாகச் சிலரால் தங்களுடைய காரியங்களைச் சரி செய்துகொள்ள முடிகிறது என்பதையும் அவர்கள் அனுபவித்துக் களிக்கும் சிறந்த அனுபவங்களைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள அக்கறையுள்ளவர்களாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பயனியர் ஊழியஞ் செய்வதற்கு தங்கள் காரியங்களை மாற்றியமைத்துக்கொள்ளுதல்
பங்காஸினனிலுள்ள பினேலோனானில் பிலிப்பி வென்தூரா என்பவர், விவாகம் செய்து குடும்பஸ்தனாவதற்கு முன்பாக தனது வாலிபப்பிராயத்தின் 13 வருடங்களை முழுநேர ஊழியத்தில் செலவிட்டார். பிள்ளைகள் வளர்ந்துவிட்ட பின்பு அவர் மறுபடியுமாக பயனியர் ஊழியத்துக்குத் திரும்ப விரும்பினார். ஆனால் சர்க்கரை வியாதியின் காரணமாக அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். பின்னர் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக அவர் முழுமையாகப் பார்வையை இழந்தார். இதன் மத்தியிலும் அவரால் குடும்பத்தைப் பராமரிக்க ஒரு சிறிய வியாபாரத்தை நடத்தவும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் உதவியோடு மறுபடியுமாக ஏப்ரல் 1, 1985-ல் பயனியர் ஊழியத்தை எடுத்துக் கொள்வதற்கு தன்னுடைய நேரத்தை அதற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடிந்தது. ஊனமுள்ள இந்த நிலையிலும் அவரால் தன்னுடைய மகனின் உதவியோடு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட முடிகிறது, அவருடைய மகன் இவருக்காக வேதவசனங்களை வாசிக்கிறான். சகோதரர் வென்தூரா அநேக வீட்டு வேதப்படிப்புகளை நடத்துகிறார். அவர் சபையில் நியமிக்கப்பட்ட மூப்பராகவும் இருக்கிறார். அவருடைய ஒரு மகன் இவரோடு ஒழுங்கான பயனியர் ஊழியஞ் செய்கிறான். அவருடைய மகள் அவ்வப்போது துணைப்பயனியர் ஊழியஞ் செய்கிறாள்.
லகுனாவிலுள்ள பின்னான் என்னும் இடத்தில் மூப்பரான க்ளாட்டுவால்டோ கோஹிலாகும் அவருடைய மனைவியும் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரையாக 1960-ம் ஆண்டுகளில் ஒரு பயனியராகவும் பிரயாண கண்காணியாகவும் இருந்தார்கள். ஆனால் அவர் சொல்லும் விதமாகவே: “முழு நேர ஊழியத்தின் சந்தோஷத்தை ஒரு முறை ருசித்துப் பார்த்து விட்டீர்களோயானால், அதற்கு எப்பொழுதும் உங்களுக்கு ஒரு வாஞ்சை இருந்து கொண்டே இருக்கும்.” ஆகவே அவர் வெற்றிகரமாக ஒரு வியாபாரத்தை நடத்தி தன்னுடைய மனைவியோடும் மகளோடும் வசதியான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்தபோதிலும் வாழ்க்கையில் இதை உண்மையான ஒரு நோக்கமாக அவர் கருதவில்லை. அவர் சொல்கிறார்: “முழு நேர ஊழியத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகவில்லையென்றால் என்னிடமுள்ள அனைத்தும் அர்த்தமற்றதாக இருக்கும்.” பயனியராக ஆவதற்காக, அவர் தன்னுடைய வியாபாரத்தை அரை நாளுக்கு குறைத்துக்கொண்டு காலை நேரத்தை வெளி ஊழியத்தில் பயன்படுத்திக்கொண்டார். 1984 அக்டோபர் 1-ம் தேதி, அவர் ஒழுங்கான பயனியராகச் சேவிக்க ஆரம்பித்தபோது அவர் கனவு நனவானது. அவருடைய வருமானம் பாதியாக குறைந்துவிட்ட போதிலும் அவருடைய செலவுகளுங்கூட குறைந்துவிட்டிருக்கின்றன. இப்பொழுது அவருடைய மனைவி அவரோடு ஒழுங்கான பயனியர் அணியைச் சேர்ந்து கொண்டிருக்கிறாள். அவ்வப்போது அவருடைய மகள் துணைப்பயனியர் ஊழியஞ் செய்து வருகிறாள்.
குருடாயிருந்தாலும் முழு நேரமாக ஊழியஞ்செய்தல்
செர்மானிய தட்டம்மையின் காரணமாக, மூன்று வயதிலேயே பான்டலியோன் டாட்டாய், பார்வை இழந்தார். 1972-ல் சத்தியத்தை முதல் முறையாக கேட்டு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். இது புகையிலை மற்றும் மதுபான பழக்கத்துக்கு அடிமையாயிருந்த இவரை அந்தப் பழக்கங்களை விட்டுவிட உதவி செய்தது. அவர் 1973 ஜூலை 29-ம் தேதி யெகோவாவுக்கு ஒப்புக் கொடுத்ததற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றார்.
பான்டலியான் தன்னுடைய அயலகத்தாருக்கு முதல் முதலாக பிரசங்கிக்க ஆரம்பித்தபோது அவருடைய மூத்த சகோதரி, “நீ குருடாயும், இரண்டே உடைகளை வைத்துக்கொண்டும் எவ்விதமாக ஒரு ஊழியனாக இருக்க முடியும்?” என்பதாகக் கண்டித்தாள். ஆனால் இது அவரை உற்சாகமிழக்கச் செய்துவிடவில்லை. அவருடைய வீட்டைச் சுற்றியுள்ள பிராந்தியம் நன்றாக பழக்கப்பட்டிருந்தபடியால் அவர் தனியாகச் சென்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்குச் சத்தியத்தைப் பிரசங்கித்தார். 1984-ல் அவருடைய உறவினரில் இருவர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும் சந்தோஷத்தைப் பெற்றார். அவர்கள் அந்த வருடம் செப்டம்பர் மாதம் முழுக்காட்டப்பட்டார்கள்.