விவாகமின்றி இருத்தல் ஆனால் கடவுளுடைய சேவைக்கு நிறைவாயிருத்தல்
“தன் கன்னிகையை விவாகம் பண்ணிக்கொடுக்கிறவன் செய்வது நன்றாம் கொடாதவன் செய்வதும் அதிக நன்றாம்.”—1 கொரிந்தியர் 7:38, தி.மொ.
முதல் மனிதன் தனிமையாக இருக்க வேண்டும் என்பது யெகோவாவின் எதிர்பார்ப்பு அல்ல. மாறாகக் கடவுள் ஆதாமுக்கு ஒரு விவாக துணையை உண்டாக்கினார், இப்படியாக அவன் மனித குலத்துக்கே முதல் தகப்பனானான். (ஆதியாகமம் 2:20-24; அப்போஸ்தலர் 17:26) விவாகம் எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதமாக நிரூபித்தது! அது அவனுக்கு ஒரு தோழமையை ஏற்படுத்தியது. பரஸ்பர உதவிக்கு வழிவகுத்தது, பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கு கனமுள்ள ஓர் ஏற்பாடாக இருந்தது, மற்றும் மனிதனின் மகிழ்ச்சியில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. ஏன், பணம் பெற்றுதர இயலாத ஒன்றை—விவாக அன்பை ஏழை எளியோரும் அனுபவிக்க முடிகிறது!—உன்னதப்பாட்டு 8:6, 7.
2 என்றபோதிலும் சிலர் விவாகத்தை வித்தியாசமாக நோக்குகின்றனர். ஒரு மத பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது: “மனத்துறவு என்பது மேற்கத்திய சர்ச்சில் குருக்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு மத சட்டம். விவாகமானவர்கள் குருவாக நியமிக்கப்படுவதிலிருந்தும், புனித சேவையிலிருந்தவர்களை விவாகம் செய்துகொள்வதிலிருந்தும் அது தடை செய்தது. பொருத்தனையின் கீழ் பூரண கற்பைக் காத்துக்கொள்ளும் கடமையை அது உட்படுத்துகிறது. இதற்குக் காரணங்கள்: நியமிக்கப்பட்டவர்கள் ஒரே நோக்கமுடையவர்களாய் கடவுளைச் சேவிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:32) மற்றும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் அவர்கள் கன்னிமை நிலையைக் கடைபிடிக்கிறார்கள். இது விவாகத்தைக் காட்டிலும் புனிதமானதும் உயர்வானதுமாகும். புதிய ஏற்பாட்டில் மனத்துறவு அல்லது கன்னிமை நிலை விவாகமானவர்களைவிட ஓர் உயர்ந்த அழைப்பையுடைய நிலைக்கு உயர்த்தப்படுகிறது.”—ராபர்ட் C. பிராடரிக் தொகுத்த கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா.
3 வற்புறுத்தப்பட்ட மனத்துறவு “விவாகத்தைக் காட்டிலும் புனிதமானதும் உயர்வானதுமாக” இருக்க முடியுமா? “புதிய ஏற்பாடு” பிரகாரம் அப்படி இல்லை. கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு கூறுகிறது: “ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை மறுத்துவிடுவர். பேய்க்குரியவன் என மனச்சாட்சியில் சூடிடப்பட்ட பொய்யர்களின் போலிப் பேச்சுகளால் கவரப்படுவர். அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சில உணவுகளைத் தவிர்க்கவேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிகூறித் துய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார்?” (1 தீமோத்தேயு 4:1-3) உண்மையில் விவாகம் கடவுளுடைய ஓர் ஈவு, அது நல்லது.—ரூத் 1:9.
4 விவாகம் கடவுளுடைய ஓர் ஈவாக இருக்கிறபோதிலும் பவுல் பின்வருமாறு எழுதினான்: “தன் கன்னியை விவாகம்பண்ணிக்கொடுக்கிறவன் செய்வதும் நன்றாம், கொடாதவன் செய்வதும் அதிக நன்றாம்.” (1 கொரிந்தியர் 7:38, தி.மொ.) விவாகமின்றி இருப்பது நல்லது என்று ஏன் பவுல் குறிப்பிட்டான்? விவாகமின்றி இருக்கும் ஒரு நபர் தன்னை நிறைவற்றவராக உணரவேண்டுமா? விவாகமின்றி இருப்பது நற்பலன்களையுடையதாய் இருக்கக்கூடுமா?
கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம்
5 நாம் விவாகமாகாதிருந்தாலும் விவாகமானவர்களாயிருந்தாலும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம் யெகோவாவை சேவிப்பது என்பதாக இருக்க வேண்டும். கடவுளுக்குச் செய்யப்படும் பரிசுத்த சேவை மகிழ்ச்சியோடு செய்யப்படுவதானது, சர்வலோக பேரரசராக அவரோடு நமக்கு இருக்கும் நெருங்கிய பிணைப்புக்கு அத்தாட்சி அளிக்கிறது. முழு இருதயத்துடன்கூடிய கீழ்ப்படிதலும் கிறிஸ்தவ ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொள்வதும் அந்தப் பிணைப்பை வெளிப்படுத்தும் வழிகளாகும். (1 யோவான் 5:2, 3; 1 கொரிந்தியர் 9:16) ஓருவர் விவாகமின்றி இருந்தால் ஊழியமும் தெய்வீக சித்தத்துக்கு இசைவான மற்ற கீழ்ப்படிதலுள்ள செயல்களும் இரண்டும் அவரால் நிறைவேற்றப்பட முடியும்.
6 சுவிசேஷகர்கள் இன்று ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை யெகோவாவுக்கு மகிமை கொண்டுவரும் விதத்தில் செய்து வருகிறார்கள். நாம் விவாகமானவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடைய தனிப்பட்ட பொருள் மற்றும் செயல் வளங்களைக் கடவுளுடைய சேவையின் பேரில் செலுத்துவதற்கு நம்முடைய வைராக்கியமுள்ள ஊழியம் ஒரு வாய்ப்பைத் தருகிறது. ஆனால் ஊழியம் நம்முடைய வாழ்க்கையின் மைய இடத்தைப் வகிப்பதிலிருந்து குறைந்த முக்கியத்துவமுடைய இடத்தைப் பெற்றுவிடாதபடிக்கு நம்முடைய சூழ்நிலைகளை நாம் அமைத்துக்கொண்டு அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு வைத்துகொள்ள வேண்டும். நாம் ‘ராஜ்யத்தை முதலாவதாக தேட’ வேண்டும். (மத்தேயு 6:33) தனிப்பட்ட அக்கறைகளில் மட்டும் கவனஞ்செலுத்துவதைவிட தெய்வீக அக்கறைகளில் கவனஞ் செலுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு.
ஊழியத்துக்கு நிறைவாயிருத்தல்
7 விவாகமானவர்களாயிருந்தாலுஞ்சரி, விவாகமாகாதவர்களாயிருந்தாலுஞ்சரி, கிறிஸ்தவர்கள் தங்களை நிறைவாய் வைத்துக்கொள்ளலாம். எனவே விவாகமின்றி இருக்கும் நிலை ஓர் அஸ்திபாரம், ஒரு மாற்றத்தை உட்படுத்தும் ஒன்றாயிருக்க வேண்டியதில்லை. (1 கொரிந்தியர் 7:24, 27 ஒப்பிடவும்.) ஒரு மனிதன் விவாகமாகியிருந்தாலொழிய தன்னுடைய முழு நிலையை அடைவதில்லை என்ற சில குலத்தவரின் கருத்தைக் கடவுளுடைய வார்த்தை ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கிறிஸ்து விவாகமாகாதவராக மரித்தார், மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு யெகோவா பரலோகத்தில் ஒரே ஒரு ஆவிக்குரிய மனவாட்டியைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:2, 9) என்றபோதிலும், கடவுளுடைய குமாரன், மனிதனாக இருந்தபோது விவாகமாகாதவராக இருந்தாலும், ஊழியத்துக்காக நிறைவாயிருந்த ஒரு நபராய்ச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.
8 உண்மையில், விவாகமின்றி இருப்பது ஊழியத்துக்காகக் கூடுதலான தனிப்பட்ட சுதந்தரத்தையும் நேரத்தையும் அனுமதிக்கிறது. விவாகமின்றி இருப்பதை சிபாரிசு செய்கிறவராய் பவுல் பின்வருமாறு சொன்னான்: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். . . . அதுபோல விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி கர்த்தருக்குரியவைகளுக்குக் கவலைப்படுகிறாள்.” (1 கொரிந்தியர் 7:32-34) இது விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும், ஒரு சமயத்தில் விவாகமானவர்களாயிருந்து, சூழ்நிலைகளின் மாற்றத்தால் விவாகமின்றி இருக்கும் நிலைக்கு வந்துவிட்டவர்களுக்கும் பொருந்துகிறது.—மத்தேயு 19:9; ரோமர் 7:2, 3.
9 உடல், மனம் மற்றும் ஆவிக்குரிய முதிர்ச்சியை பெறுவது கடவுளுடைய ஊழியத்துக்கு நிறைவாயிருக்கச் செய்கிறது. கடவுளுடைய பிரதான ஊழியராக இருப்பதற்கும் மீட்கும் பொருளாக இருப்பதற்கும் நிறைவு பெற்றவராயிருப்பதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஓர் விவாக துணை தேவைப்படவில்லை. (மத்தேயு 20:28) விவாகமின்றி இருந்ததால் இயேசு ஊழியத்தில் தம்முடைய முழு வல்லமையையும் ஈடுபடுத்த சுயாதீனமுடையவராயிருந்தார். அவர் விவாகமின்றி இருந்தது யூதருடைய வழிமுறைக்கு வெகுவாக வித்தியாசப்பட்டிருந்தது. என்றாலும் இயேசு கடவுள் கொடுத்த வேலையை செய்துமுடிப்பதற்கு முழு திறமையுடையவராய் இருந்தார். (லூக்கா 3:23; யோவான் 17:3, 4) எனவே, விவாகமின்றி இருப்பது ஒருவரை கிறிஸ்தவ ஊழியத்துக்கு நிறைவற்றவராக்குவதில்லை.
விவாகமானவர்கள் ‘இருமனப்பட்டிருக்கிறார்கள்’
10 விவாகமின்றி இருப்பவர்களுக்கு மாறாக, விவாகமான கிறிஸ்தவர்கள் தங்களுடைய “ஒரே மாம்ச” பந்தத்தை உணர்ந்து ஊழியத்தைத் தொடர வேண்டும். (மத்தேயு 19:5, 6) அந்தப் பந்தத்தின் காரணத்தாலும் மற்றும் பல உத்தரவாதங்களின் காரணத்தாலும், பவுல், விவாகமான ஆட்கள் ‘இருமனப்பட்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டான். அவன் எழுதியதாவது: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன் விவாகமில்லாதவன் ஆண்டவருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாம் என்று ஆண்டவருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகஞ் செய்துகொண்டவனோ தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று உலகத்துக்குரியவைகளுக்காகக் கவலையுற்று இருமனப்பட்டிருக்கிறான். புருஷனில்லாத ஸ்திரீயும் கன்னிகையும் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி ஆண்டவருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். விவாகஞ்செய்து கொண்டவளோ தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை உங்கள் நன்மைக்கென்று சொல்லுகிறேன். உங்களைக் கண்ணிக்குள் அகப்படுத்தவேண்டுமென்று இதைச் சொல்லாமல் இது தகுதியென்றும் நீங்கள் கருத்துச் சிதறாமல் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்றுஞ் சொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:32-35.
11 தெளிவாகவே, அதிகப்படியான கவனஞ் சிதறாத ஒரு வாழ்க்கைக்குப் பவுல் விவாகமின்றி இருப்பதைச் சிபாரிசு செய்கிறான். அவன்தாமே துணைவி இழந்த ஒரு விதுரனாக, மறுவிவாகம் செய்து கொள்ளாதவனாக இருந்திருக்கக்கூடும். (1 கொரிந்தியர் 9:5) எப்படி இருந்தாலும், இந்த உலகத்தில் விவாக வாழ்க்கையுடன் கவலைகள் இணைந்திருக்கின்றன என்பதை அவன் அறிந்திருந்தான். விவாகமானவர்களோடு ஒப்பிடுகையில் விவாகமாகாத கிறிஸ்தவர்கள் அனுபவிக்கக்கூடிய சுதந்தரத்தையும் விவாகமான விசுவாசிகளின் அக்கறைகள் எப்படி சரீரத்துக்குரிய காரியங்களுக்கும் ஆவிக்குரிய காரியங்களுக்குமிடையே பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிப்பவனாயிருந்தான். விவாகமான ஆள் தங்களுடைய சரீரத்தின் பேரில் முழு அதிகாரத்தையுங் கொண்டவராயில்லை, ஏனென்றால் அவனுடைய துணைவி அவனோடு ஒரே மாம்சமாக இருக்கிறாள், எனவே அவனுடைய சரீரத்தில் உரிமை கொண்டாடுகிறாள். (1 கொரிந்தியர் 7:3-5) இந்தக் கருத்தில், பவுல் சரியாகவே, விவாகமாகாத கிறிஸ்தவன் பரிசுத்தமாயிருக்க முடிகிறது என்றான், அதாவது, சரீரத்திலும் ஆவியிலும் யெகோவா தேவனின் நேரடியான உபயோகத்திற்கு முழுவதுமாக ஒதுக்கீடு செய்யப்பட்டவனாக இருக்கிறான்.
12 விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவனின் ஆவி அல்லது மனப்பான்மை, கவனம் சிதறாத சுறுசுறுப்பான ராஜ்ய சேவைக்கு அவனைத் தூண்டுகிறது. தன்னுடைய சரீரத்தின்மீது அதிகாரஞ் செலுத்துவதற்கு ஒரு துணை இல்லாதிருக்க, அவன் தன்னுடைய மனதின் மற்றும் இருதயத்தின் ஆவியை அல்லது ஆசையைப் பின்பற்ற முடியும். சரீரத்தையும் மனதையும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் அவன் யெகோவாவின் சேவையில் திறம்பட்டவனாகலாம். எனவே விவாகமாகாத ஓர் ஆண் அல்லது பெண் மிகுந்த தனிப்பட்ட சுதந்தரத்தோடு ஆண்டவரை மட்டும் பிரியப்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கலாம். பவுல் சொன்னதை விலக்கிவிட முடியாது, ஏனென்றால் அது நமக்குப் போதனையாக இருக்கும்படி யெகோவா அதைப் பதிவு செய்வதைத் தகுதியாகக் கண்டிருக்கிறார்.
விவாகமான ஒருவர் நிறைவற்றவரா?
13 கடவுளுடைய சேவையில் தாங்கள் அதிகத்தைச் செய்ய முடியும் என்ற தவறான எண்ணத்தில் விவாகமான சில கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் விவாகத்திற்கு அற்பமான ஓர் இடத்தைக் கொடுக்கக்கூடும். உதாரணமாக தற்பெருமைக்குரிய வழிகளில் கணவனை சாராமல் சுதந்தரமாக செயல்பட ஆரம்பிக்கக்கூடும். கணவன் எப்பொழுதும் சபைக் காரியங்களில் ஈடுபட்டவராக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் தாங்கள் யெகோவாவின் சேவையில் நன்றாகச் செய்வதாக நினைக்கக்கூடும். என்றபோதிலும் உண்மை என்னவெனில், “ஒரே மாம்ச” பந்தத்தை அவமதிக்கும் ஒரு போக்கை அவர்கள் மேற்கொண்டவர்களாக இருக்கக்கூடும். அப்படியிருக்குமென்றால் அது யெகோவாவுக்குப் பிரியமாயிருக்காது.
14 உண்மையில் பார்க்கப்போனால், “ஒரே மாம்ச” பந்தத்தை அவமதிப்பது விவாகமான ஒருவரைக் கிறிஸ்தவ ஊழியத்துக்கு நிறைவற்றவராக்கிவிடும். விவாகம் ஊழிய நிறைவைக் கூட்டுவதாயில்லை. ஆனால், ஊழியத்துக்குக் கொடுக்கப்படக்கூடிய தனிப்பட்ட கவனத்தைக் குறைப்பதாயிருக்கிறது. (லூக்கா 14:16, 17, 20-ஐ ஒப்பிடவும்.) என்றாலும், விவாகமானவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமானால், அவருடைய ஊழியர்களாக நிறைவாயிருக்க வேண்டுமானால், தங்களுடைய விவாக கடமைகளுக்கு உட்பட்டு வாழ்கிறவர்களாயிருக்க வேண்டும்.
ராஜ்யத்தினிமித்தம் விவாகமின்றி இருத்தல்
15 விவாகமான யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய விவாக கடமைகளை நிறைவேற்றுகிறவர்களாக வாழ வேண்டியிருக்க, விவாகமாகாத கிறிஸ்தவர்கள் விவாகமின்றி இருப்பதன் நிறைவில் திருப்தியாயிருக்கும் தன்மையை வளர்க்க வேண்டும். பவுல் பின்வருமாறு சொன்னான்: “விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல் இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே. நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.” (1 கொரிந்தியர் 7:8, 27) விவாகமில்லாத ஒருவராக கடவுள் கூடிய காரியமாக்கிடும் வாழ்வில் நிலையான தன்மையை வளர்த்திடுங்கள். வாழ்க்கை நிலையில் எந்த ஒரு மாற்றமும் கைவிடப்பட்ட ஒரு முடிவாக, சம்பிரதாயமாக அல்லது சக நண்பர்களின் அழுத்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடாது. மாறாக, வேதப்பூர்வ தேவையின் அடிப்படையில் ஏற்படவேண்டும், ஏனென்றால் பவுல் பின்வருமாறு சொன்னான்: “ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம் பண்ணுவது அவசியம் என்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன். அது பாவமல்ல, விவாகம் பண்ணட்டும். ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும் சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்க வேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மை செய்கிறான்.”—1 கொரிந்தியர் 7:36, 37.
16 இப்படியாக ஒரு நபர் தன்னுடைய கற்புக்குத் தகுதியற்ற நடத்தைப் போக்கு உடையவராக இருந்தால், அவர் விவாகம் செய்துகொள்வது தவறு அல்ல என்று பவுல் காண்பித்தான், என்றபோதிலும், பவுல் இங்கு சந்தேகமின்றி வினைமையான பாவச் செயல் உட்பட்ட நடத்தைக் குறித்து பேசவில்லை. அவன் முன்னதாகக் கூறினதுபோல “வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்.” (1 கொரிந்தியர் 7:9) ஆம், ஒருவன் “கன்னிகைக் பருவம் கடந்து போனதினாலே,” காம உணர்ச்சி வேகம் மிகுந்து காணப்படும் அந்த ஆரம்பப் பருவம் கடந்து போனதினாலே ஏற்படும் சூழ்நிலைகளின் கீழ் விவாகம் செய்துகொள்வதைக் குறிப்பிடுகிறான். முதிர்ச்சியுள்ள ஒருவன் “சுய சித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து” விவாகமின்றி இருப்பதைத் தன் இருதயத்தில் உறுதியாய்த் தீர்மானித்திருந்தால், அவன் நன்மை செய்கிறான். விவாகமின்றி இருப்பதில் வெற்றி, விவாகத்துக்கும் குடும்ப வாழ்க்கைக்குமிருக்கும் நச்சரித்துக்கொண்டும் உங்களை மேற்கொள்ளக்கூடியதுமான பலமான ஆசையை அடக்கிவைப்பதைக் குறிக்காது. மாறாக, விவாகமாகாமல் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவன், விவாகமின்றிருப்பதைக் காத்துக்கொள்வது தன்னுடைய காரியத்தில் சரியானது என்று தன் இருதயத்தில் முழுமையாக நம்பி, அந்த நிலையைக் கற்புடன் காத்துக்கொள்வதற்குத் தன் பாகத்தில் தேவைப்படும் சகல முயற்சியையும் எடுப்பதற்கு மனமுள்ளவராக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் கிறிஸ்தவனை திசைமாறச் செய்யும் காரியங்கள் அதிகமிருக்காது, மற்றும் ஆண்டவரை சேவிப்பதற்குக் கூடுதலான சுதந்திரமும் இருக்கும்.
17 விவாகமாகாத கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிந்தையை விருத்திசெய்வார்களானால், அவர்கள் விவாகமின்றி இருக்கும் நிலையைக் காத்துக்கொள்ள உதவியாயிருக்கும். விவாகத்தை வற்புறுத்தும் சமுதாயக் கலாச்சாரத்தில் இயேசு விவாகமின்றி இருந்தபோதிலும், அவர் தம்முடைய நேரத்தையும் ஈவுகளையும் திரும்பச் செய்யப்படாத ஊழியத்தில் செலவு செய்தார். இயேசுவைப் போல விவாகமாகாத ஒரு கிறிஸ்தவன் விவாகமின்றி இருக்க இடமளிப்பவர்களுக்கு கடவுள் அளிக்கும் விவாகமில்லாமலிருக்கும் வரத்தில் மகிழ்ச்சி காணலாம். இதைக் குறித்து இயேசு பின்வருமாறு சொன்னார்: “வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்.”—மத்தேயு 19:11, 12.
18 விவாகமின்றி இருப்பவன் விவாகமான ஒருவனைவிட உயர்ந்தவன் என்று இயேசு சொல்லவில்லை. கவலையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காக விவாகமின்றி இருப்பதை அவர் துரிதப்படுத்தவில்லை மற்றும் விவாகமாகாத ஓர் ஆண் அல்லது பெண் தன்னுடைய கவனத்தை ஏராளமான எதிர்பாலரிடமாகத் திருப்பிடுவதற்காக அதை அவர் நிச்சயமாய் சிபாரிசு செய்யவில்லை. ஆனால் ராஜ்யத்தினிமித்தம் தங்களை “அண்ணகர்களாக” ஆக்கிக்கொள்கிறவர்கள் ஒழுக்கப் பிரகாரமாய் நீதியுள்ள ஆட்கள், இதற்காக தங்களுடைய இருதயங்களில் இடங்கொடுத்தவர்கள். அவர்களை விவாகமாகாமலிருக்கச் செய்வது என்ன? சரீர ஊனம் அல்ல, ஆனால் கடவுளுடைய சேவையில் கூடுமானவரை முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற பலமான ஆசை. கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாலும், அழிவுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வேகமாக வந்துவிடுவதற்கு முன்பு “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி” பூலோகமெங்கும்” பிரசங்கிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தாலும் இந்தச் சேவை இன்று விசேஷ முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறது.—மத்தேயு 24:14.
விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவர்களைப் போற்றுங்கள்
19 ராஜ்யத்தினிமித்தம் விவாகமாகாதிருப்பவர்களை எல்லா கிறிஸ்தவர்களும் போற்றி உற்சாகப்படுத்த வேண்டும். ஆம், விவாகமின்றி இருப்பது “கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருப்பதைக்” குறிக்கிறது. (1 கொரிந்தியர் 7:35) விவாகமாகாமலிருக்கும் நிலை குறித்தும், யெகோவாவின் சேவையில் அதன் பயன்களைக் குறித்தும் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது நல்லது. விவாகமாகாதிருக்கும் நம்முடைய உடன் விசுவாசிகளை நாம் எல்லாருமே உற்சாகப்படுத்தலாம் மற்றும் ராஜ்யத்தினிமித்தம் விவாகம் செய்துகொள்ளக்கூடாது என்ற அவர்களுடைய தீர்மானத்தை நாம் எந்தச் சமயத்திலும் பலவீனப்படுத்திவிடக்கூடாது.
20 விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய நிறைவான ஊழியர்களாகக் களிகூரலாம். உச்சநிலையடைந்துவிட்ட இந்தக் காலங்களில், ராஜ்ய பிரசங்கிப்பின் இந்த அவசர வேலையில் பங்குகொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனவே, நீங்கள் விவாகமின்றி இருப்பீர்களானால், யெகோவாவால் விவாகமாகாத நிறைவான கிறிஸ்தவ ஊழியராக பயன்படுத்தப்படுவதில் களிகூருங்கள். ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். (பிலிப்பியர் 2:12-16) யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச சகோதரத்துவத்தில் ஐக்கியமாய் நிலைநிற்கும் நீங்கள் ராஜ்ய அக்கறைகளில் கவனம் செலுத்துகிறவர்களாய் கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்றுங்கள். நாம் சிந்திக்கப் போகிறபடி, விவாகமாகாத ஒருவராக அப்படிச் செய்வது பலன்மிகுந்த ஒரு வாழ்க்கை வழி. (w87 11/15)
[கேள்விகள்]
1. விவாகம் எப்படி ஆசீர்வாதமாக நிரூபித்திருக்கிறது?
2, 3. (எ) மணத்துறவு மற்றும் விவாகம் குறித்து ஒரு மத பிரசுரம் என்ன நோக்குநிலையை வெளிப்படுத்தியது? (பி) வேதப்பூர்வமான விவாகம் எப்படி நோக்கப்படவேண்டும்?
4. ஒன்று கொரிந்தியர் 7:38-ன் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?
5. கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம் எதுவாக இருக்க வேண்டும்?
6. நாம் விவாகமானவர்களாயிருந்தாலும், விவகமாகாதவர்களாயிருந்தாலும், வைராக்கியமான ஓர் ஊழியம், நாம் என்ன செய்யும்படி செய்கிறது?
7. விவாகமாகாத கிறிஸ்தவன் ஊழியத்துக்கு நிறைவாயிருக்க முடியும் என்பதைக் காண்பிக்க என்ன உதாரணம் இருக்கிறது?
8. பவுல் காண்பிக்கிறபடி, விவாகமின்றி இருப்பது எதற்கு இடமளிக்கிறது?
9. விவாகமின்றி இருப்பது ஒருவரைக் கிறிஸ்தவ ஊழியத்துக்கு நிறைவற்றவராக்குவதில்லை என்பதை இயேசுவின் முன்மாதிரி எப்படிக் காண்பிக்கிறது?
10. ‘ஒரே மாம்ச’ பந்தத்தால், விவாகமின்றி இருப்பவர்களுடன் விவாகமானவர்களை ஒப்பிடுகையில், விவாகமானவர்களைக் குறித்து பவுல் என்ன சொன்னான்?
11. ஒன்று கொரிந்தியர் 7:32-35-ல் பவுல் காட்டிக்கொண்டிருந்தது என்ன?
12. விவாக துணை என்று ஒருவர் இல்லாதிருப்பதால் விவாகமாகாத நபர் என்ன செய்யக்கூடும்?
13, 14. எந்தத் தவறான போக்கு “ஒரே மாம்ச” பந்தத்தை அவமதிப்பதாயும், விவாகமான நபரைக் கிறிஸ்தவ ஊழியத்துக்கு நிறைவற்றவராயும் ஆக்கிவிடுகிறது?
15. (எ) விவாகமாகாத கிறிஸ்தவர்கள் என்ன குணத்தை வளர்க்க வேண்டும்? (பி) விவாகம் மற்றும் விவாகமின்றி இருப்பது குறித்து பவுல் 1 கொரிந்தியர் 7:36, 37-ல் என்ன அடிப்படைக் குறிப்பைக் கூறினான்?
16. (எ) “கன்னிகைப் பருவம் கடந்துபோனது” என்பதன் அர்த்தம் என்ன? (பி) விவாகமின்றி இருக்கும் கிறிஸ்தவன் எது குறித்து உறுதியாக இருக்கவேண்டும்?
17. இயேசுவின் பிரகாரம், ஏன் சிலர் விவாகமின்றி இருக்கின்றனர்?
18.. ராஜ்யத்தினிமித்தம் “அண்ணகர்காளயிருப்பவர்களை” எது விவாகம்செய்துகொள்ளாமலிருக்கச் செய்கிறது?
19. ராஜ்யத்தினிமித்தம் விவாகமின்றி இருப்பவர்களைக் குறித்ததில், எல்லா கிறிஸ்தவர்களும் என்ன செய்ய வேண்டும்?
20. நீங்கள் விவாகமாகாத ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்களானால், என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய பதில்கள் என்ன?
◻கிறிஸ்தவ வாழ்க்கையின் மையமாக எது இருக்க வேண்டும்?
◻யெகோவாவின் விவாகமாகாத ஊழியர்கள் ஏன் கிறிஸ்தவ ஊழியத்துக்கு நிறைவுள்ளவராய் இருக்க முடியும்?
◻விவாகமான ஒருவர் எவ்விதத்தில் நிறைவற்றவராய் இருக்கக்கூடும்?
◻ராஜ்யத்தினிமித்தம் “அண்ணகராயிருப்பது” எதை அர்த்தப்படுத்துகிறது?
◻விவாகமாகாத கிறிஸ்தவர்களை நாம் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
விவாகமின்றி இருந்தபோதிலும், அப்போஸ்தலனாகிய பவுல் நிறைவாயிருந்தான்
[பக்கம் 12-ன் படம்]
ஊழியத்துக்கு நிறைவாயிருந்ததில் இயேசு பிரதான முன்மாதிரியாயிருந்தார்
[பக்கம் 15-ன் படம்]
ராஜ்யத்தினிமித்தம் விவாகமின்றி இருப்பவர்களை நீங்கள் போற்றுகிறீர்களா?