அவர்கள் உண்மையிலேயே மரித்தோருடன் பேசுகிறார்களா?
பிரேசில் நாட்டில் ஒரு உதை பந்தாட்ட குழு சில சமயங்களில் ஆவியுலக மத்தியஸ்தர்களின் உதவியை நாடியது ஏன்? தன்னை எதிர்த்து ஆடும் ஆட்டக்குழு ஜெயித்துவிடக்கூடும் என்ற பயத்தின் காரணமாக அறிவுரை கேட்க அப்படிச் செய்கிறது. ஒரு செய்தித் தாளின் பிரகாரம், “எல்லாவகையான பிரச்னைகளுக்கும் பரிகாரங்களை தேடுவதில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் நேரிடையான பேச்சு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு லட்சக்கணக்கான மக்கள் மீது பலமான செல்வாக்கை கொண்டிருக்கிறது.” சில நாடுகளில் உயர்-பதவியிலுள்ள அரசியல்வாதிகளும், ஓவியர்களும், தொழிலதிபர்களும் வழக்கமாக ஆவிகளிடம் குறி கேட்கிறார்கள். குணமடையவேண்டும் அல்லது பணப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்ற பிரயாசையில் அநேக ஆட்கள் அதிக பிரகாசமடைந்தவர்கள் என்று கருதப்படும் மரித்தோரிடம் குறிகேட்க முற்படுகின்றனர்.
ஆனால், மரித்தோரிடம் பேச முயற்சி செய்வது சரியானதா? அவ்வாறு செய்வது உண்மையிலேயே கூடிய காரியமா? அதில் அபாயங்கள் ஏதாகிலும் உட்பட்டிருக்கிறதா? பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை காண்பதில் நீங்கள் ஆச்சரியமடையக்கூடும்.
சவுலின் காரியத்தில் என்ன நிகழ்ந்தது?
பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த மெய்யான வாழ்க்கை சம்பவத்தை சற்று கவனியுங்கள்: பெலிஸ்திய எதிரிகளுக்கு பயந்து பண்டைய இஸ்ரவேல் அரசனாகிய சவுல் எந்தோரில் உள்ள ஒரு ஆவியுலக மத்தியஸ்தம் செய்யும் பெண்ணிடம் சென்றான். மரித்துப்போன சாமுவேலுடன் தொடர்பு கொள்ளும்படி அவளிடம் கேட்டான். சால்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிற முதிர்வயதான ஓர் மனிதனைப் பற்றி அவள் தந்த விவரிப்பை அவன் கேட்டபோது அந்த ஆவியுருவம் சாமுவேலாக இருக்க வேண்டும் என்று சவுல் யூகித்துக் கொண்டான். ஆனால் கொடுக்கப்பட்ட அந்தச் செய்தி என்ன? இஸ்ரவேலர் பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள், பின்பு மறுநாளன்று சவுலும் அவனுடைய குமாரரும் “சாமுவேலுடன்” இருப்பார்கள். அதாவது பெலிஸ்தியரோடு போர் செய்கையில் அவர்கள் மரித்துப் போவார்கள் என்பதை சுட்டிக் காட்டியது. (1 சாமுவேல் 28:4-19) அவ்வாறே நடந்ததா?
சரியாக அவ்வாறே நடக்கவில்லை. பெலிஸ்தியருடன் போர் செய்தபோது சவுல் பலத்த காயமடைந்தான். ஆனால் அவன் தற்கொலை மரணத்தை அடைந்தான். (1 சாமுவேல் 31:1-4) எல்லா சவுலின் குமாரரும் அவனோடேகூட செத்துப் போவார்கள் என்ற முன்னறிவிப்பிற்கு எதிர்மாறாக அவனுடைய குமாரன் இஸ்போசேத் தப்பிப்பிழைத்தான்.
ஆனால் முதலில் அந்த மரித்தோரிடம் குறிகேட்பது சரியான காரியமா? அல்ல, சரியான காரியமல்ல. வேதவசனங்கள் நமக்குச் சொல்லுவதாவது: “சவுல் . . . தன் துரோகத்தினிமித்தமும் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் (ஆவியுலக மத்தியஸ்தர்களை) கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.” (1 நாளாகமம் 10:13) இதிலிருந்து நாம் எதையாவது கற்றுக் கொள்ளக்கூடுமா? ஆம், சவுல் மரித்தவரிடம் குறிகேட்கும்படி ஆவியுலக மத்தியஸ்தரிடம் சென்றதன் காரணமாக செத்துப் போனான். ஏன்? இதைச் செய்ததன் காரணமாக அவன் தேவனுடைய திட்டவட்டமான கட்டளைக்குக் கீழ்ப்படியாமற் போனான்: “அஞ்சனம் பார்க்கிறவனும் [ஆவியுலக மத்தியஸ்தம் செய்பவனும்] சூனியக்காரனும் . . . செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12) மரித்தோரிடம் குறிகேட்பது ஏன் கடவுளுக்கு அருவருப்பானது. இந்தக் கேள்விக்கு விடைகாணும் முன், நாம் பின்வருமாறு கேட்கலாம்:
அது உண்மையிலேயே கூடியகாரியமா?
ஒருவர் மரித்தோருடன் பேச வேண்டுமானால், அந்த செத்துப்போனவர் உண்மையில் உயிருடனிருக்க வேண்டும். அவர்களுக்கு அழியாத ஆத்துமா இருக்க வேண்டும். எனினும் பைபிள் சொல்வதாவது: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) ஆகையால் அந்த மனிதன் தானே ஆத்துமா. ஆகவே சரீரத்தின் மரணத்திற்கு பிற்பாடு தொடர்ந்து உயிர்வாழக்கூடிய ஓர் அழியாத ஆத்துமா அவனுக்கு கிடையாது. உண்மையில், வேதவசனங்கள் சொல்வதாவது: “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) கூடுதலாக, கடவுளுடைய வார்த்தை சொல்வதாவது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . நீ போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழியிலே] செய்கையும், வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
மரித்த ஆட்கள் பிரகாசடைந்தவர்களாக இருப்பதற்கு மாறாக சுய நினைவற்றவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்களுடன் பேசுவது நிச்சயமாகவே கூடாத காரியம். மரித்தோரிடம் குறிகேட்பதற்கு எதிராக உள்ள கடவுளுடைய சட்டத்திற்கு இணங்கி போவதானது ஏமாற்றப்படுவதிலிருந்து நம்மை பாதுகாக்கும். என்றாலும், ஆவியுலகத்திலிருந்து செய்திகள் வருவது கூடிய காரியம். அரசனாகிய சவுலின் அனுபவம் அதையே காட்டுகிறது.
ஆனால் அதன் ஊற்று மூலம் என்ன?
ஒரு காரியமென்னவெனில், மரித்தோரிடம் தொடர்பு கொள்வதாக உரிமை பாராட்டக்கூடியவர்கள் மத்தியில் மோசடி வேலைகள் சர்வ சாதாரணமாயிருக்கின்றன. தி உவர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா நமக்கு தெரிவிப்பதாவது: “ஆவித் தொடர்பு காட்சிக் குழுவினிடத்தில் ஆவிகள் உயிருள்ளோருடன் பேசக்கூடும் என்பதை நம்பும்படி செய்வதன் மூலம், இந்த ஆவியுலக மத்தியஸ்தர்கள் மக்களை ஏய்க்கிறார்கள் என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆவித் தொடர்புக் காட்சிக் குழுவில் பெரும்பாலும் என்ன நடக்கிறது என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் தருகிறார்கள். உதாரணமாக, சில ஆவியுலக மத்தியஸ்தர்கள் தங்கள் குரலைல்களை மாற்றி பேசுங் கலைஞர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் உதவியாட்களையும் பல்வேறு வகையான மோசடி சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் அறிதுயில் நிலையை (மயக்கி உறக்கத்தில் வைக்கப்பட்டநிலை) பயன்படுத்துகின்றனர். ஆவித்தொடர்பு காட்சிக் குழுவில் ஆஜராகக்கூடிய அநேக ஆட்கள் தங்கள் அன்பார்ந்த இறந்தோரிடம் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற ஒரு பலமான ஆசையுடைய ஆட்கள். இந்த ஆசை ஆவியுலக மத்தியஸ்தர்களால் சொல்லப்படும் செய்தி எதுவாயிருந்தாலும் அது ஆவியுலகத்திலிருந்தே வருகிறதென்று அவர்கள் நம்பும்படி செய்துவிடக்கூடும்.”
ஆனால் நாம் இதை இந்த ஒரு முறையில் மட்டுமே யோசனை செய்ய வேண்டுமா? இல்லை, மரித்தோரிடம் குறிகேட்க வேண்டாம் என்ற கடவுளுடைய சட்டத்தைக் கடைபிடிப்பதானது கூடுதலாக இதைக் காட்டிலும் இன்னும் அதிக குறிப்பிடத்தக்க வகையில் நம்மை பாதுகாக்கிறது. ஆவியுலகத்திலிருந்து செய்திகள் வருவது உண்மையே, ஆனால் மனிதவர்க்கத்தை தவறாக வழிநடத்த முயலக்கூடிய சக்திவாய்ந்த சிருஷ்டிகளிடமிருந்தே இவை வருகின்றன. பைபிள் அவற்றை “பொல்லாத ஆவியின் சேனைகள்” என்று அடையாளங் காட்டுகிறது. பிசாசாகிய சாத்தானும் கீழ்ப்படியாமற்போன தூதர்களும் பேய்கள் என்று அறியப்பட்டிருக்கின்றனர். (எபேசியர் 6:12) எந்தோரில் உள்ள ஆவியுலக மத்தியஸ்த பெண்ணிடம் அரசனாகிய சவுல் சென்றபோது சாமுவேலை போன்ற ஒரு பொய் தோற்றத்தை காட்டியது ஒரு பிசாசே.
சவுலின் காரியத்தில் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளபடி இந்தப் பேய்களிடம் நமக்கு தெரிவிக்கத்தக்க நன்மையான காரியங்கள் எதுவுமில்லை. அவை உதவி செய்வதாக கருதப்பட்டாலும்கூட அவை குறுகிய காலத்திற்குரியதே. தங்கள் தலைவனாகிய பிசாசை போன்றே அவை பொய் பேசக்கூடியவை. (மாற்கு 3:22; யோவான் 8:44) இவ்விஷயத்தில் மறைந்துபோன ஒரு பிரிட்டிஷ் ஆவியுலகு சார்ந்த ஆராய்ச்சியாளர் சர் ஆர்த்தர் கோனன் டோய்லி எழுதினதாவது: “பொல்லாத அல்லது குறும்புத்தனமான அறிவாற்றல்களால் முற்று முழுக்க வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்களை நாங்கள் வருத்தத்துடன் கையாள வேண்டியதாயிருக்கிறது. இந்த விஷயங்களை ஆராய்ந்து பார்த்த ஒவ்வொருவரும், எப்போதாவது ஒரு முறை நல்லதும் உண்மையானதுமான தொடர்புகளுடன் குழப்பிவிடக்கூடிய வேண்டுமென்றே செய்யப்படும் மோசடிகளின் முன்மாதிரிகளை எதிர்பட்டிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.” (தி நியு ரெவலேஷன், பக்கம் 72) உண்மையில், நீங்கள் அவ்வாறு ஏமாற்றப்பட விரும்பமாட்டீர்கள் அல்லவா?
இப்பொழுது இதைக் கவனியுங்கள்: சரித்திரமானது இந்த அடிமைத் தொழில் பற்றியும் அத்துடன் இணைந்த தொல்லைகள் பற்றியும் நமக்கு சொல்லுகிறது. எவராவது இப்படிப்பட்ட இன்னல்களையும் அவமானத்தையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள விரும்புவார்களா? உண்மையில் விரும்பமாட்டார்கள், அப்படியானால் பொல்லாத ஆவிகளுக்கு அடிமைகளாவதை நாம் ஏன் அனுமதிக்கவேண்டும்? அவை பொய் பேசுவது மட்டுமின்றி அவை மக்களின் சுதந்தரத்தை பறித்து கொள்கின்றன அவை அவர்களை வன்முறை செயலுக்கும் கொலைக்கும்கூட வழிநடத்தக்கூடும். உதாரணமாக, பெர்னாம்புக்கோ, பிரேசில் நாட்டின் 29-வயது ஜோஸ் சொன்னதாவது ‘தனக்குள் ஒரு ஆவி பிரவேசித்து தன்னுடைய ஒரு வயது மகளைக் கொல்லும்படி அவனை பலவந்தப்படுத்தியதாம்.’ ஆம், பொல்லாத ஆவிகளுடன் தொடர்பு கொள்வது இப்படிப்பட்ட அடிமைத்தனத்திற்கு வழி நடத்தக்கூடும். அப்படியானால் கடந்த காலங்களிலிருந்த துயரமனுபவித்த அடிமைகள் எவ்வாறு விடுதலையடைய ஏங்கிறார்களோ அவ்வாறே இன்று பேய்களின் அடிமைத்தனத்திலிருப்பவர்களும் விடுதலையடைய விரும்ப வேண்டும். இந்த விடுதலையை அடைவதற்கு ஒரு வழியானது ஆவியுலக மத்தியஸ்தர்களிடம் குறிகேட்டு மரித்தோருடன் பேச முயற்சி செய்வதிலிருந்து விலகியிருப்பதன் மூலமாகும். இதற்காக . . .
இதற்காக மரித்தோருடன் பேச வேண்டிய அவசியம் இருக்கிறதா?
இல்லை, ஏனெனில் நாம் உதவியில்லாமல் விடப்படவில்லை. தங்கள் தகப்பனை நம்பக்கூடிய பிள்ளைகளைப் போன்று, நாம் பரம தகப்பனிடம் தாராளமாக உதவியை கேட்கலாம். அவரும்கூட நேர்மை இருதயமுள்ளோருக்கு உதவி செய்ய பிரியமாயிருக்கிறார். (லூக்கா 11:9-13) தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினதாவது: “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டிய தல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்.”—ஏசாயா 8:19, 20.
ஆம், நாம் அவருடைய சித்தத்தை செய்து பொல்லாத ஆவிகளுடன் எந்த ஒரு தொடர்புமில்லாமலிருந்தால் யெகோவா தேவனில் நம்பிக்கை வைப்பதற்கு பலமான ஆதாரம் இருக்கிறது. கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு எழுதினதாவது: “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படித்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7) யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தபின்பு 28 ஆண்டுகளாக ஆவியுலக தொடர்பை அனுசரித்து வந்த ஒரு மனிதன் குறிப்பிட்டதாவது: “ஆவியுலக தொடர்பு சார்ந்த பழக்க வழக்கங்களை கைவிடக்கூடிய ஆட்கள் பிசாசு என்ன செய்யக்கூடும் என்பதை குறித்து ஒருபோதும் பயப்படக்கூடாது ஆனால் மாறாக யெகோவாவை உறுதியாக நம்ப வேண்டும்.”
கடவுளுடைய வார்த்தையின் சத்திய வசனங்களால் மனதை நிரப்புவதும் பின்பு அதன்படி செயல்படுவதும் “தேவனுடைய (ஆவிக்குரிய) சர்வாயுதவர்க்கத்தை தரித்து கொள்வதற்கு” உதவி செய்யும். அப்பொழுது நாம் பொல்லாத ஆவி சேனைகளுக்கு அடிமையாகாமல் “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து [உறுதியாய்] நிற்கத்” திராணியுள்ளவர்களாயிருப்போம். (எபேசியர் 6:11) கூடுதலாக, யெகோவா தேவனிடம் ஒழுங்காக ஜெபம் செய்வது பேய்களின் தாக்குதல்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தற்காப்பை கொடுக்கும்.—நீதிமொழிகள் 18:10.
மரித்தோரின் நிலைமைப்பற்றிய சத்தியங்களைக் குறித்து அறிவது ஆ எவ்வளவு ஆறுதல் தருவதாயிருக்கிறது! மரணம் ஓர் மிக ஆழ்ந்த தூக்கத்தைப் போன்றிருக்கிறது. (யோவான் 11:11) மேலும் மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்றும் இயேசு உறுதியளித்தார்.—யோவான் 5:28, 29.
ஆவியுலக தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து எவரும் மரித்தோருடனோ அல்லது மரித்தோரைப் போன்று நடித்துக்காட்டும் ஒருவருடனோ பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை வேத வசனங்களிலிருந்து கற்றுக்கொண்டான். இந்தக் குடும்பத்தாரைப்போன்றும் மேலும் உலக முழுவதிலுமுள்ள மற்ற அநேகரைப் போன்றும் நீங்களும் கூட ஆவிக்குரிய விடுதலையை அனுபவித்து மகிழலாம். (யோவான் 8:32) மரித்தோரைப் பற்றியதும் மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய நோக்கங்கள் பற்றியதுமான சத்தியங்களை கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் யெகோவாவினுடைய புதிய ஒழுங்குமுறைக்காக எதிர்பார்க்கலாம், அங்கே உயிர்த்தெழுப்பப்பட்ட உங்கள் அன்பார்ந்தவர்களுடன் நீங்கள் பேசலாம். மேலும், சமாதானமுள்ள சூழ்நிலைமைகளின் கீழ் நித்திய ஜீவனையும் அனுபவித்து மகிழலாம்.—ஏசாயா 25:8. (w88 1⁄15)
[பக்கம் 4-ன் படம்]
மரித்துபோன சாமுவேல் தீர்க்கதரிசியிடமிருந்து ஒரு செய்திக்காக சவுல் ராஜா கேட்டபோது உண்மையில் பேசியது யார்?