முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களைத் தடுப்பது என்ன?
“இதோ! தண்ணீர் நிறைந்து நிற்கிறது; ழுமுக்காட்டப்படுவதிலிருந்து என்னைத் தடுப்பதென்ன?”—அப்போஸ்தலர் 8:36, NW
யெகோவாவின் தூதன் பேசினார், எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வனாந்தரபாதையில் கவனிக்கத்தக்க ஒன்று நடந்துகொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருக்கும் இரதத்தில் ஓர் எத்தியோப்பியன் உட்கார்ந்து வேத எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருந்தான். சீக்கிரத்தில் மற்றொரு மனிதன் அந்த ஊர்தியின் பக்கமாக அதோடு ஓடினான். “நீர் வாசிக்கிறீரே, அது உமக்கு விளங்குகிறதா?” என்று அவன் கேட்டான். அதற்கு அந்த எத்தியோப்பியன்: “ஒருவன் எனக்கு வழிகாட்டிச் சொன்னாலன்றி அது எப்படி விளங்கும்?” என்று பதிலுரைத்தான். தேவதூதனால் அனுப்பப்பட்டிருந்த, சுவிசேஷகனாகிய பிலிப்பு அந்த வழிநடத்துதலைக் கொடுத்தான். இரதத்தில் ஏறினவுடன், பிலிப்பு ஏசாயா எழுதின தீர்க்கதரிசனத்தோடு தொடங்கி ‘இயேசுவைப் பற்றிய நற்செய்தியை’ அறிவித்தான்.
2 அந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் எத்தியோப்பியன் பின்வருமாறு ஊக்கத்துடன் கூறினான்: “இதோ தண்ணீர், நான் [பாப்டிஸம்] ஞானஸ்நானம் பெறத் [முழுக்காட்டப்பட] தடையென்ன?” எனவே, இரதத்தை நிறுத்தும்படி கட்டளையிட்டான். இருவரும் தண்ணீருக்குள் சென்றனர் பிலிப்பு அவனை முழுக்காட்டினான். பின்பு யெகோவாவின் ஆவி அந்தச் சுவிசேஷகனை வேறு எங்கேயோ வழிநடத்திவிட்டது, அந்த எத்தியோப்பியன் மகிழ்ச்சி நிறைந்தவனாய்த் தன் வழியே சென்றான்.—அப்போஸ்தலர் 8:26-39.
3 நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்கிறீர்கள் ஆனால் இன்னும் முழுக்காட்டப்படவில்லையென்றால், இந்தச் சம்பவங்கள் பின்வருமாறு கேட்கும்படி உங்களைத் தூண்டுவிக்கலாம்: அந்த எத்தியோப்பியன் ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் முழுக்காட்டப்பட்டான்? முழுக்காட்டுதலை [பாப்டிஸம்] எவ்வாறு நடப்பிக்கவேண்டும்? அது எதற்கு அடையாளம்? முழுக்காட்டப்படுவதிலிருந்து என்னைத் தடுப்பது என்ன?
வெகு சீக்கிரம் முழுக்காட்டப்படவில்லை
4 அந்த எத்தியோப்பியன் “பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்குப்” போயிருந்ததால், அவன் யூதமதம் மாறிய விருத்தசேதனஞ் செய்யப்பட்டவன். அவன் ஓர் “அண்ணகன்” ஆனால் மாம்சப்பிரகாரமான கருத்தில் அல்ல, ஏனெனில் பாலுறுப்புக் குறைக்கப்பட்ட ஆண்கள் இஸ்ரவேல் சபையிலிருந்து விலக்கப்பட்டனர். (உபாகமம் 23:1) இவன் காரியத்தில், “அண்ணகன்” என்பது ஓர் அதிகாரி எனக் குறித்தது, ஏனெனில் அவன் “எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் [அதிகாரம் வகித்திருந்தவன், தி.மொ.] அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியன்.”—அப்போஸ்தலர் 8:27.
5 இந்த எத்தியோப்பியன் புறஜாதியான். எனினும், அவன் யூத மதத்துக்கு மாறியிருந்ததால், பொ.ச. 36-ல் கொர்நேலியுவைப்போன்ற விருத்தசேதனஞ்செய்யப்படாத புறஜாதியாருக்கு ராஜ்ய செய்தி செல்வதற்கு முன்னால் அவன் கிறிஸ்துவின் சீஷனாக முழுக்காட்டப்பட முடிந்தது. இந்த எத்தியோப்பியனுக்கு ஆவிக்குரிய உதவி தேவைப்பட்டபோதிலும், யூத மதம் மாறியவனாகக் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் பற்றி அறிந்திருந்தான், ஆகவே இவனுக்குப் பிரசங்கிக்கும்படி பிலிப்பு வழிநடத்தப்பட்டான், மேலும் புறஜாதியாருக்கு நற்செய்தி செல்வதற்கு முன்னால் அவனை முழுக்காட்டவும் முடிந்தது.
பூர்வ கிறிஸ்தவ பாப்டிஸம்
6 இந்த எத்தியோப்பியன் எப்படி பாப்டிஸம் கொடுக்கப்பட்டான்? “பாப்டைஸ்” என்றச் சொல் “அமிழ்த்து, முழுக்கு,” என்று பொருள்படும் கிரேக்கப் பதமாகிய (ba․ptiʹzo) பாப்டிஸோ என்பதிலிருந்து வருகிறது. கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் 2 இராஜாக்கள் 5:14-ல் “முழுகு” என்பதற்கு அதே ஒரு சொல்லமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எத்தியோப்பியனும் பிலிப்பும் “தண்ணீர் நிறைந்துநின்ற” (NW) இடத்துக்கு வந்தபோது அவன் பாப்டிஸம் பெறும்படி கேட்டது கவனிக்கத்தக்கது. பாப்டிஸத்துக்காக, அவர்கள் “தண்ணீரில் இறங்கினார்கள்,” பின்பு “தண்ணீரிலிருந்து கரையேறி”னார்கள். (அப்போஸ்தலர் 8:36-39) ஆகையால், அந்த எத்தியோப்பிய அண்ணகன் தண்ணீரில் முழுக்கப்பட்டதன்மூலம் பாப்டிஸம் கொடுக்கப்பட்டான்.
7 இயேசுதாமே தண்ணீரில் முழுக்கப்பட்டு பாப்டிஸம் பெற்றார். இவ்வாறு யோர்தான் நதியில் தம்முடைய பாப்டிஸத்துக்குப் பின், அவர் “ஜலத்திலிருந்து கரையேறி”னார் என்று சொல்லியிருக்கிறது. (மத்தேயு 3:13, 16) உண்மையில், பாப்டிஸம் கொடுப்பதற்குத் தகுந்த இடமாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் யோர்தான் நதியில் சாலிமுக்கு அருகில் ஓர் இடத்தைத் தெரிந்திருந்தான். ஏன்? அங்கே “தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்,” என்று சொல்லியிருக்கிறது. (யோவான் 3:23) ஆகையால் நிறைந்துள்ள தண்ணீரில் பாப்டிஸம் கொடுக்கும்படி வேத எழுத்துக்கள் அதிகாரம் தருகின்றன.
8 பரிசேயரும் மற்ற யூதர்களும் கடைப்பிடித்தப் பழக்கவழக்கங்களை நாம் கவனித்தால் பாப்டிஸத்தைப் பற்றி நல்ல முடிவுகளுக்கு வர முடியும். சுவிசேஷ எழுத்தாளன் மாற்கு பின்வருமாறு கூறினான்: “கடையிலிருந்து வரும்போது தண்ணீர் தெளித்துக்கொள்ளாமல் [கிரேக்கில், ரான்டீஸோ] சாப்பிடமாட்டார்கள்; அப்படியே கிண்ணங்கள் ஜாடிகள் செப்புக்குடங்களைக் கழுவுகிறதுமல்லாமல் [முழுக்குவதுமல்லாமல், NW; கிரேக்கில், பாப்டிஸ்மஸ்] வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டு வருவார்கள்.” (மாற்கு 7:3,4, தி.மொ.) இவர்கள் கடைக்குச் சென்று திரும்பி வந்தவுடன் சாப்பிடுவதற்கு முன்னால் பரிசுத்தப் பகட்டுப் பாசாங்குடன் தங்கள்மீது தண்ணீர் தெளித்துக்கொண்டனர். ஆனால் சாப்பாட்டின்போது தாங்கள் பயன்படுத்தின பல்வேறு பாத்திரங்களைத் தண்ணீரில் பாப்டிஸம் செய்தனர் அதாவது முழுக்காட்டினர்.
9 விசுவாசத் துரோகம் நுழைந்தப் பின்னும், சர்ச் பிரமுகன் டெர்ட்டுல்லியன் (c. பொ.ச. 160-230) பாப்டிஸத்தைக் குறித்துப் பின்வருமாறு சொன்னான்: “பலனில் அதற்கு வாக்குப்பண்ணப்பட்ட மகத்துவத்தோடு ஒப்பிடுகையில், இந்தச் செயலில் காணப்படும் தெய்வீகச் செயல்களின் எளிமையைப் பார்க்கிலும் மனிதனின் மனதை அதிகக் கடினமாக்குவது அங்கே முற்றிலும் எதுவும் இல்லை; இவ்வாறு, அவ்வளவு மிக எளிமையுடன், பகட்டாரவாரம் இல்லாமல், அதிகப் புதுமை தயாரிப்பு எதுவுமில்லாமல், கடைசியாய், செலவில்லாமல், ஒருவன் தண்ணீரில் அமிழ்த்தப்பட்டு, ஒருசில வார்த்தைகள் கூறப்படுவதோடு, தெளிக்கப்பட்டு, பின்பு மறுபடியும் எழும்புகிறான், முன்னிருந்ததைவிட அதிக எதுவும் (சற்றேனும்) சுத்தமாக அல்ல என்ற இந்த உண்மையிலிருந்து, பலனாக நித்தியத்தை அடைவது மேலுமதிகம் வியக்கத்தக்கதாய் மதிக்கப்படுகிறது.” “ஒருவன் தண்ணீரில் அமிழ்த்தப்பட்டு . . . பின்பு மறுபடியும் எழும்புகிறான்,” என்று டெர்ட்டுல்லியன் சொன்னதைக் கவனியுங்கள்.
10 தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் தண்ணீரில் ஆட்களை முழுவதும் முழுக்குவதனால் பாப்டிஸம் கொடுத்தார்களென அறிஞர்களும் காட்டுகின்றனர். பிரசித்திப் பெற்ற பிரெஞ்ச் கலைக்களஞ்சியம் ஒன்றில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தண்ணீர் இருந்த இடங்களிலெல்லாம் முழுக்காட்டுதலினால் முதல் கிறிஸ்தவர்கள் பாப்டிஸம் பெற்றார்கள்.” தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியாவில் கூறியிருப்பதாவது: “வழக்கமாய்ப் பயன்படுத்தப்பட்ட மிகப் பூர்வ முறை சந்தேகத்துக்கிடமின்றி முழுக்காட்டுதலே.”—புத்தகம் II, பக்கம் 261 (1907 பதிப்பு).
கற்பிப்பதும் முழுக்காட்டுவதும்
11 ஒருவர் முழுக்காட்டப்படுவதற்கு முன்னால், திருத்தமான அறிவை அடைந்து அதன்படி நடக்கவேண்டும். கிறிஸ்து தம்மைப் பின்பற்றினோருக்குப் பின்வருமாறு சொன்னபோது இதைத் தெளிவாக்கினார்: “ஆகையால் போய் சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுவரை சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20, NW.
12 ‘பிதாவின் பெயரில் முழுக்காட்டப்படுவது,’ முழுக்காட்டப்பட வந்தவர் கடவுளுடைய உன்னத நிலையையும் அதிகாரத்தையும் தெரிந்துணருகிறதைக் குறிக்கிறது. யெகோவா “பூமியனைத்தின்மேலும் மகா உன்னதமானவர்,” சிருஷ்டிகரும் சர்வலோகப் பேரரசருமானவரென ஒப்புக்கொள்கிறான். (சங்கீதம் 36:9; 83:17; 2 இராஜாக்கள் 19:15) இத்தகைய ஆள் யெகோவாவைத் தன்னுடைய நியாயாதிபதி, சட்டநிபுணர் மற்றும் அரசர் எனவும் ஏற்றுக்கொள்ளுகிறான்.—ஏசாயா 33:22; சங்கீதம் 119:102; வெளிப்படுத்துதல் 15:3, 4.
13 ‘குமாரனின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது கிறிஸ்துவின் பதவியையும் அதிகாரத்தையும் ஒப்புக்கொள்வதையும், அவர் மூலமே கடவுள் “ஈடான மீட்கும்பொருளை” ஏற்பாடு செய்தார் என அறிந்துணர்வதையும் குறிக்கிறது. (1 தீமோத்தேயு 2:5, 6, NW) உத்தமத்தைக் காத்தவராக இயேசு மரித்தப்பின், “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்,” முழுக்காட்டப்பட விரும்புவோர் கிறிஸ்துவை “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக . . . கர்த்தரென்று அறிக்கைபண்ண” வேண்டும். (பிலிப்பியர் 2:9-11) மேலும் இயேசுவை யெகோவாவின் “உண்மையுள்ள சாட்சி” என்றும் “ராஜாதி ராஜா” என்றும் ஏற்கவேண்டும்.—வெளிப்படுத்துதல் 1:5; 19:16.
14 ‘பரிசுத்த ஆவியின் பெயரிலும்’ ஒருவன் முழுக்காட்டப்படவேண்டும். பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி, படைப்பதற்கும், பைபிள் எழுத்தாளர்களை ஏவுவதற்கும், இன்னும் மற்றவற்றைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதென அவன் தெளிவாக உணரவேண்டும். (ஆதியாகமம் 1:2; 2 சாமுவேல் 23:1, 2; 2 பேதுரு 1:21) “கடவுளின் ஆழமான காரியங்களை” நாம் புரிந்துகொள்ளவும் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய தெய்வீகக் கனிகளைக் காட்டவும் வேண்டுமென்றால் யெகோவாவின் ஆவி இன்றியமையாததென அறிந்துணரவேண்டும். (1 கொரிந்தியர் 2:10, NW; கலாத்தியர் 5:22, 23) மேலும் ராஜ்ய-பிரசங்க வேலையை தொடர்ந்து நிறைவேற்றிவர கடவுளுடைய ஆவி தேவை எனவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.—யோவேல் 2:28, 29.
முழுக்காட்டுதல் அடையாளப்படுத்துவது
15 பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டே முழுக்காட்டுபவனான யோவான் ஆட்களை முழுக்காட்டினான். (அப்போஸ்தலர் 13:24) அவர்களுடைய பாவங்களைக் கழுவிபோடுவதற்கு அல்ல, அவர்கள் மனந்திரும்பினதன் அடையாளமாகவே அவன் அவர்களை முழுக்காட்டினான். (அப்போஸ்தலர் 19:4) யோவான் இயேசுவையும் முழுக்காட்டினான், அவர் “பாவஞ்செய்யவில்லை.” (1 பேதுரு 2:22) மேலும் அனனியா தர்சு பட்டணத்தானான சவுலைப் பின்வருமாறு ஊக்கப்படுத்தினான்: “எழும்பு, முழுக்காட்டப்படு [இயேசுவின்] பெயரில் நீ வேண்டிக்கொள்வதனால் உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு.” (அப்போஸ்தலர் 22:12-16, NW) ஆகையால், கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு பாவங்களைக் கழுவி நீக்குவதில்லை. முழுக்காட்டுதல் அல்ல ஆனால் இயேசுவின் இரத்தம் ஊற்றப்பட்டதும் “அவருடைய பெயரில் வேண்டிக்கொள்வது”மே மன்னிப்பு பெறக் கூடியதாக்குகின்றன.—எபிரெயர் 9:22; 1 யோவான் 1:7.
16 கிறிஸ்தவ முழுக்காட்டுதல் பாவங்களை நீக்கிக் கழுவுவதில்லையென்றாலும், தண்ணீரில் முழுக்காட்டப்படுகிற அந்த ஆள் இயேசு கிறிஸ்துவின்மூலம் யெகோவா தேவனுக்கு நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலைச் செய்திருக்கிறான் என்று குறித்துக் காட்டும் ஓர் அடையாளமாயிருக்கிறது. (மத்தேயு 16:24-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஒப்புக்கொடுத்தல் என்றால் “அறிவித்தல், உறுதிசெய்தல், முழுவதும் ஈடுபடுத்துதல்” எனப் பொருள்படுகிறது. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலானது கிறிஸ்துவின்மூலம் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் செய்வதால் ஒருவன் எத்தகைய விதிவிலக்குமில்லாமல் தன்னைத் தனியே ஒதுக்கிவைக்கும் அந்தச் செயலைக் குறிப்பிடுகிறது. முழுக்காட்டப்பட வந்தவன், அடையாளமாகத் தற்காலிகமாய்த் தண்ணீருக்குள் “அடக்கம்பண்ணப்பட்டு” பின்பு அதிலிருந்து வெளியே தூக்கிவிடப்படுகையில், தன் முந்தின போக்குக்கு மரித்து, யெகோவாவின் சித்தத்தை விதிவிலக்கு எதுவுமில்லாமல் செய்யும்படி, ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு எழுப்பப்படுகிறான்.—ரோமர் 6:4-6-ஐ ஒத்துப் பாருங்கள்.
17 தெளிவாகவே, முழுக்காட்டுதல் பயபக்தியோடு மேற்கொள்ளவேண்டிய ஒரு நடவடிக்கை. குழந்தைக்குப் பாப்டிஸம் கொடுப்பது தவறு ஏனெனில் குழந்தை புரிந்துகொள்ளவும், தீர்மானம் செய்யவும், சீஷனாகவும் முடியாது. (மத்தேயு 28:19, 20) சமாரியாவில் பிலிப்புவின் ஊழியகாலத்தின்போது முழுக்காட்டப்பட்டவர்கள் குழந்தைகளல்லர், “புருஷரும் ஸ்திரீகளும்” ஆவர். (அப்போஸ்தலர் 8:4-8, 12) கற்பதற்கும், நம்புவதற்கும், விசுவாசத்தைச் செயலில் காட்டுவதற்கும் போதிய வயதானவர்களுக்கே முழுக்காட்டுதல் (பாப்டிஸம்) உரியது. (யோவான் 17:3; அப்போஸ்தலர் 5:14; 18:8; எபிரெயர் 11:6) இதன் சம்பந்தமாக சரித்திராசிரியன் அகஸ்டஸ் நியான்டர் பின்வருமாறு எழுதினான்: “விசுவாசமும் பாப்டிஸமும் எப்பொழுதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன; இவ்வாறு . . . [பொ. ச. முதல் நூற்றாண்டில்] குழந்தைக்குப் பாப்டிஸம் கொடுக்கும் பழக்கம் அறியப்படவில்லை என்பது மிக உச்ச அளவில் உண்மையாய் இருக்கக்கூடியதே. . . . மூன்றாம் நூற்றாண்டின் போக்கில் இது அப்போஸ்தல பாரம்பரியமாக முதல் அங்கீகரிக்கப்பட்டதானது அது அப்போஸ்தல தொடக்கத்தைக் கொண்டதென ஏற்பதற்குச் சார்பான அல்ல அதற்கு எதிர்ப்பான அத்தாட்சியாகவே இருக்கிறது.”—History of the Planting and Training of the Christian Church by the Apostles (நியு யார்க், 1864), பக்கம் 162.
18 விசுவாசிகள் முழுக்காட்டப்படுவதைக் குறித்து வேத எழுத்துக்கள் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகின்றன. (அப்போஸ்தலர் 4:4; 5:14; 8:13; 16:27-34; 18:8; 19:1-7) அப்படியானால், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்கு, ஓர் ஆள் விசுவாசியாக—விசுவாசத்தைச் செயலில் காட்டி முழுக்காட்டப்படுபவராக இருக்கவேண்டும். முழுக்காட்டப்படுவதற்கு முன்பேயும், அத்தகைய விசுவாசம் தெய்வீக நடத்தையிலும், யெகோவாவில் நம்பிக்கை வைப்பதிலும், ராஜ்ய-பிரசங்க வேலையில் பங்குகொள்வதிலும், இயேசுவின் மீட்பு-கிரய பலியை ஏற்பதிலும் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. மீட்கும்பொருளில் விசுவாசம் வைக்கவேண்டியது முழுக்காட்டப்பட வருவோருக்கு, அறிவுறுத்தப்படுகிறது, எப்படியெனில் பேச்சாளர் அவர்களைக் கேட்கும் இரண்டில் முதல் கேள்வி பின்வருமாறு: “இயேசு கிறிஸ்துவின் பலியின் ஆதாரத்தின்பேரில் நீ உன் பாவங்களை விட்டு மனந்திரும்பி யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உன்னை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறாயா?” அந்த நபர் ஆம் என்று பதிலளித்து, மேலும் தன் ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டப்படுதலும் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படும் அமைப்போடு இணைந்துள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகத் தன்னை அடையாளங்காட்டுகின்றனவென புரிந்துகொண்டால் மாத்திரமே அவன் ஏற்கத்தகுந்தவண்ணம் தண்ணீர் முழுக்காட்டுக்குட்பட முடியும்.
ஜெபத்தில் ஒப்புக்கொடுத்தல்
19 முழுக்காட்டுதலுக்கு உட்படுவோர் கடவுளிலும் கிறிஸ்துவிலும் விசுவாசம் கொண்டிருக்கவேண்டும். ஆனால் ஒப்புக்கொடுத்தலை ஜெபத்தில் செய்யவேண்டுமென யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்லுகின்றனர்? ஏனெனில் யெகோவாவுக்கே தகுதியான அந்தத் தனிப்பட்ட பக்தியை அவருக்குக் கொடுக்க நாம் செய்துள்ள தீர்மானத்தை ஜெபத்தில் அவருக்கு வெளிப்படுத்திக் கூறுவது தகுந்தது. (உபாகமம் 5:8, 9; 1 நாளாகமம் 29:10-13) இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனுக்கே தனிப்பட்டவண்ணம் பரிசுத்த சேவையைச் செலுத்த விரும்பின தம் ஆவலை ஜெபத்தில் தெரியப்படுத்தினாரென தெளிவாய்த் தெரிகிறது. (எபிரெயர் 10:7-9) தாம் முழுக்காட்டப்படுகையிலும் இயேசு “ஜெபம்பண்ணி”க்கொண்டிருந்தார்! (லூக்கா 3:21, 22) ஆகவே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலை ஜெபத்தில் செய்யவேண்டும்.
20 பூர்வ கிறிஸ்தவர்கள், ஜெபத்தில் ஒப்புக்கொடுத்தலைச் செய்யும்படி புதிய சீஷர்களுக்கு அறிவுரை கூறினதாகத் தெரிகிறது, ஏனெனில் பிற்காலத்திலும் டெர்ட்டுல்லியன் பின்வருமாறு கூறினான்: “அப்போதுதானே பாப்டிஸத்துக்குட்பட இருப்பவர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் விண்ணப்பங்களுடனும், உபவாசங்களுடனும், முழந்தாள்படியிடுதல்களுடனும் ஜெபிக்கவேண்டும்.” அதற்கு முன்னால். ஜஸ்டின் மார்ட்டிர் (c. பொ.ச. 100-165) பின்வருமாறு எழுதினான்: “கிறிஸ்துவின்மூலம் நாங்கள் புதிதாக்கப்பட்டபோது கடவுளுக்கு எங்களை நாங்கள் ஒப்புக்கொடுத்த நடைப்பாங்கையும் நான் கூறுவேன் . . . நாங்கள் கற்பிப்பதும் சொல்லுவதும் சத்தியமென அறிவுறுத்தப்பட்டு நம்பி, அதன்படி வாழக்கூடும்படி ஒப்புக்கொள்கிறவர்கள் அத்தனைபேரும், தங்கள் கடந்தக் கால பாவங்களின் மன்னிப்புக்காக, உபவாசத்தோடு கடவுளிடம் ஜெபிக்கவும் மன்றாடவும் போதிக்கப்படுகின்றனர், நாங்களும் அவர்களோடு ஜெபித்து உபவாசிக்கிறோம்.”
21 பல ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முழுக்காட்டப்பட்டபோது ஜெபத்தில் ஒப்புக்கொடுத்தலைச் செய்வது அழுத்திக் கூறப்படவில்லையென்றால், அது உங்கள் முழுக்காட்டுதலைச் செல்லாததாக்குவதில்லை. 40-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் தான் இன்னும் சிறுவனாயிருக்கையில் முழந்தாள்படியிட்டு ஊக்கமான ஜெபத்தில் யெகோவாவுக்குத் தன் ஒப்புக்கொடுத்தலைச் செய்ததை உயிர்ப்புள்ளவண்ணம் நினைவுபடுத்திக் காணும் ஒருவரைப்போல் அந்நாட்களிலுங்கூட, சந்தேகமில்லாமல் பலர் இருந்தனர். மேலும் அக்காலத்தில், முழுக்காட்டுதலுக்கு முன்னால் முறைப்படியான ஜெபத்தில் ஒப்புக்கொடுத்தலைச் செய்திராவிடினும், முழுக்காட்டப்பட வந்தவர்களும் மற்றவர்களும் அவர் முழுக்காட்டப்பட்ட நாளில் முழுக்காட்டுக்கான பேச்சு கொடுக்கப்பட்டபின் ஒன்றாக ஜெபிக்கையில் அவர் நிச்சயமாகவே அதை ஜெபத்துக்குரிய காரியமாக்கினார்.
சிலர் ஏன் தயங்குகின்றனர்
22 யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சியாயிருப்பது அப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமான சிலாக்கியமாயிருக்கையில், முழுக்காட்டப்பட சிலர் தயங்குவதேன்? கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவின் வழிநடத்துதலைப் பின்தொடர்ந்து முழுக்காட்டப்பட சிலர் தவறுவதன் ஒரு காரணம் உண்மையான அன்பு குறைவுபடுவதேயாகும். (1 யோவான் 5:3) முழுக்காட்டப்படாத ஆட்கள் நிச்சயமாகவே, தாங்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற அல்லது கடவுளுக்குக் கீழ்ப்படிய போவதில்லையென பொதுவாய்ச் சொல்லுகிறதில்லை. அதைப் பார்க்கிலும், அவர்கள் உலக விவகாரங்களில் தங்கள் மனதை அவ்வளவு அதிகமாய்ச் சிக்கவைத்திருப்பதால் ஆவிக்குரிய முயற்சிகளில் செலவிட அவர்களுக்கு அதிக நேரமில்லாமற் போகிறது. இது ஒருவேளை உங்களுடைய பிரச்னையென்றால், உங்களுடைய ஆசைகளையும், அக்கறைகளையும், ஆர்வங்களையும் மாற்றிக்கொள்வது ஞானமாயிருக்கும் அல்லவா? கடவுளை உண்மையில் நேசிக்கிறவர்கள் இவ்வுலகத்தையும் நேசிக்க முடியாது. (1 யோவான் 2:15-17) “ஐசுவரியத்தின் வஞ்சக” சக்தியின்மூலம் பொய்யான பாதுகாப்பு உணர்ச்சிக்குள் தூங்கவைக்கப்பட உங்களை அனுமதியாதேயுங்கள். (மத்தேயு 13:22, தி.மொ.) யெகோவா தேவனுடன் கொண்டுள்ள ஒப்புக்கொடுத்த உறவில் மாத்திரமே உண்மையான பாதுகாப்பு இருக்கிறது.—சங்கீதம் 4:8.
23 மற்றவர்கள், கடவுளை நேசிப்பதாக உரிமை பாராட்டுகிறார்கள் ஆனால் ஒப்புக்கொடுத்தலைச் செய்ய தயங்குகிறார்கள், ஏனெனில் இவ்வாறு தாங்கள் பொறுப்பைத் தவிர்க்கலாமெனவும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லையெனவும் உணருகின்றனர். அவர்களுக்குப் பரதீஸில் வாழ விருப்பம், ஆனால் இதுவரை அவர்கள் அதைப்பற்றி அதிகம் எதுவும் அல்லது ஒன்றுமே செய்யவில்லை. (நீதிமொழிகள் 13:4) இத்தகைய நபர்கள் கணக்கு ஒப்புவிப்பதைத் தவிர்க்க முடியாது ஏனெனில் யெகோவாவின் வார்த்தையை அவர்கள் கேட்டபோதே பொறுப்பு அவர்கள்மேல் வந்தது. (எசேக்கியேல் 33:7-9) அவர்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்தால், கடவுளுடைய வார்த்தையைத் தாங்கள் விளங்கிக்கொண்டதையும் அதைச் செய்ய தாங்கள் மிக ஆவலுடன் இருப்பதையும் வெளிப்படுத்திக் காட்டுவார்கள். இத்தகைய கீழ்ப்படிதல், மேலுமதிகக் கனமான சுமையை அவர்கள்மீது வைப்பதற்குப் பதில், யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் மகிழ்ச்சியில் பலன்தரும் ஏனெனில் தாங்கள் அவரை நேசிக்கிறார்களென்ற தங்கள் உரிமைபாராட்டுதலை நடைமுறைவாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
24 தாங்கள் வேத எழுத்துக்களை விளக்கிச் சொல்வதற்குப் போதியளவு தெரிந்தில்லை என்ற உணர்ச்சி முழுக்காட்டுதலைத் தவிர்க்கும்படி இன்னும் சிலரைச் செய்விக்கிறது. ஆனால் அந்த எத்தியோப்பிய மந்திரி இரதத்தில் செல்கையில் பிலிப்புவுடன் கலந்து பேசியபின் கடவுளுக்குத் தன் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்துவதற்கு ஆயத்தமாயிருந்தான். நிச்சயமாகவே, அந்த எத்தியோப்பியன் தான் சத்தியத்தைப் பற்றிப் பேசின ஆட்களின் எல்லாக் கேள்விகளுக்கும் முதன்முதல் பதில் சொல்ல முடியாதிருந்தான். ஆனால் அவனுடைய இருதயம் தான் செவிகொடுத்துக் கேட்டவற்றிற்காக நன்றியுணர்வுடன் பொங்கியது, அவன் பயத்தில் தயங்கவில்லை. “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்.” (1 யோவான் 4:18) பதில்கள் நிறைந்த தலை அல்ல அன்பு நிறைந்த இருதயமே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்து முழுக்காட்டப்படும்படி ஒருவனைத் தூண்டி செயல்படவைக்கிறது.—லூக்கா 10:25-28.
25 நீங்கள் இன்னும் முழுக்காட்டப்படவில்லையென்றால், உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: கடவுள், தம்மை நேசிப்பதாகச் சொல்லும் ஆட்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? அவருக்குத் தனிப்பட்ட பக்தியே வேண்டும், தம்மை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கும் ஆட்களுக்காக அவர் தேடுகிறார். (யோவான் 4:23, 24; யாத்திராகமம் 20:4, 5; லூக்கா 4:8) அந்த எத்தியோப்பிய மந்திரி இவ்வகையான வணக்கத்தையே செலுத்தினான், முழுக்காட்டப்படுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது அவன் தாமதிக்கவில்லை. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதை நீங்கள் இப்பொழுதே ஊக்கமான ஜெபத்தின் முக்கியபொருளாக்கி உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமல்லவா: “முழுக்காட்டப்படுவதிலிருந்து என்னைத் தடுப்பது என்ன?” (w89 1⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ அந்த எத்தியோப்பிய மந்திரியை ஏன் அவ்வளவு சீக்கிரம் முழுக்காட்ட முடிந்தது?
◻ பூர்வ கிறிஸ்தவர்களுக்குள் பாப்டிஸம் எம்முறையில் கொடுக்கப்பட்டது?
◻ ‘பிதாவின், குமாரனின், பரிசுத்த ஆவியின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது குறிப்பதென்ன?
◻ கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்துகிறது?
◻ ஏன் ஜெபத்தில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யவேண்டும்?
◻ என்ன காரணங்களுக்காகச் சிலர் ஒப்புக்கொடுப்பதற்கும் முழுக்காட்டப்படுவதற்கும் தயங்குகின்றனர்?
[கேள்விகள்]
1. எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் பாதையில் என்ன நடந்துகொண்டிருந்தது?
2, 3. (எ) நற்செய்திக்கு அந்த எத்தியோப்பியன் எவ்வாறு பிரதிபலித்தான்? (பி) இந்தச் சம்பவம் என்ன கேள்விகளை எழுப்புகிறது?
4. அந்த எத்தியோப்பியன் யார்?
5. அந்த எத்தியோப்பிய அண்ணகனுக்கு ஏன் அவ்வளவு சீக்கிரம் பாப்டிஸம் கொடுக்க முடிந்தது?
6. அந்த எத்தியோப்பியன் எவ்வாறு பாப்டிஸம் கொடுக்கப்பட்டான், நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
7. தண்ணீர் முழுக்காட்டினால் பாப்டிஸம் பெறுவதற்கு என்ன முன்மாதிரி நிகழ்ச்சி இருந்தது?
8. பரிசேயரும் மற்ற யூதர்களும் கடைப்பிடித்தப் பழக்கவழக்கங்களிலிருந்து, பாப்டிஸத்தைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
9. பாப்டிஸத்தைப் பற்றி டெர்ட்டுல்லியன் என்ன சொன்னான்?
10. முதன்முதல் கிறிஸ்தவ பாப்டிஸம் கொடுக்கப்பட்ட முறையைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
11. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன வேலை பொறுப்பு அளித்தார்?
12. “பிதாவின் பெயரில்” முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது?
13. ‘குமாரனின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது குறிப்பதென்ன?
14. ‘பரிசுத்த ஆவியின் பெயரில்’ முழுக்காட்டப்படுவதற்கு என்ன தேவை?
15. கிறிஸ்தவ முழுக்காட்டுதல் ஏன் பாவங்களைக் கழுவி நீக்குவதில்லை?
16. (எ) முழுக்காட்டுதல் பாவங்களைக் கழுவி நீக்குவதில்லையாதலால், அது அடையாளப்படுத்துவது என்ன? (பி) அடையாளக் குறிப்பாய், ஒருவர் முழுக்காட்டப்படுகையில் என்ன நடக்கிறது?
17. குழந்தைக்குப் பாப்டிஸம் கொடுப்பது ஏன் சரியல்ல?
18. (எ) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்கு, வேதப்பூர்வமாய், என்ன தேவைப்படுகிறது? (பி) ஒருவர் முழுக்காட்டப்படலாமென விசுவாசத்தின் என்ன அத்தாட்சி காட்டும்? (சி) முழுக்காட்டப்பட வருகிறவர்களுக்கு மீட்கும்பொருளில் விசுவாசம் வைக்கவேண்டியது எவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது?
19. ஏன் ஜெபத்தில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யவேண்டும்?
20. பூர்வ கிறிஸ்தவர்கள், ஜெபத்தில் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யும்படி புதிய சீஷர்களை ஊக்கப்படுத்தினதாக ஏன் தெரிகிறது?
21. சில ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முழுக்காட்டப்படுகையில் ஜெபத்தில் ஒப்புக்கொடுத்தலைச் செய்வது அழுத்திக் கூறப்படவில்லையென்றாலும், எது உண்மையாயிருக்கலாம்?
22. முழுக்காட்டப்படுவதற்குச் சிலர் தயங்குவதேன்?
23. இன்னும் மற்றவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்து தண்ணீர் முழுக்காட்டினால் அதை அடையாளப்படுத்துவதைத் தவிர்ப்பதேன்?
24. என்ன காரணத்துக்காக இன்னும் மற்றவர்கள் முழுக்காட்டப்படுவதற்குத் தயங்குகின்றனர்?
25. தம்மை நேசிப்பதாகச் சொல்பவர்களிடம் யெகோவா தேவன் என்ன எதிர்பார்க்கிறார்?