ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
அன்பு குடும்பங்களை ஐக்கியப்படுத்துகிறது
சுயநலமற்ற தன்மையால் வழிநடத்தப்படும் அன்பை விவாகம் ஆதாரமாகக் கொண்டிருக்கும்போது மாத்திரமே குடும்ப ஐக்கியத்தை முயன்றுபெறக்கூடும். இப்படிப்பட்ட அன்பு, அன்பின் கடவுளாகிய யெகோவாவிடமிருந்து ஊற்றெடுத்து வருவதன் காரணமாக இது கடவுளுடைய ஆவியின் கனியாக இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23; 1 யோவான் 4:8) பைபிள் அறிவை அடிப்படையாகக் கொண்ட அன்பு எவ்விதமாகக் குடும்பங்களை ஐக்கியப்படுத்துகிறது என்பதைப் பின்வரும் அனுபவங்கள் விளக்குகின்றன.
ஹாங் காங்
◻ ஹாங் காங்கில், பயனியர் ஒருவர் ஒரு குடும்பத்தலைவியோடும் அவளுடைய இரண்டு பெண் பிள்ளைகளோடும் ஒரு வீட்டு வேதப்படிப்பை ஆரம்பித்தாள். கணவன், அவள் ஒரு தீவிரவாத மதத் தொகுதியில் தன்னை உட்படுத்திக்கொள்ளக்கூடும் என்பதாகக் கவலை தெரிவித்தார். கணவனைப் படிப்பில் உட்காரும்படி அழைக்கும்படியும், அவர்தானே அதைத் தீர்மானிக்கலாம் என்றும் பயனியர் மனைவியிடம் யோசனை தெரிவித்தாள். அவரும் அப்படியே செய்தார். இதற்கிடையில், மனைவி கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள். ஆனால் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் அவளுக்கு பிரச்னை இருந்தது. அவள் எப்போதும் மூத்தப் பெண்ணைத் திட்டியும் இளையவளை செல்லம் கொடுத்து கெடுத்தும் வந்தாள். பின்னர் அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் பிரச்னைகள் இருந்தது தெரியவந்தது. அவர்களுடைய பிரச்னை அடிக்கடி வன்முறையாக வெடித்தது. பல சமயங்களில் காவல் துறையினர் அழைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தங்கள் விவாகத்தில் எவ்விதமாகத் தெய்வீக அன்பை வெளிக்காட்டுவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கப் பயனியர் கடவுளுடைய வல்லமை வாய்ந்த வார்த்தையைப் பயன்படுத்தினாள். சீக்கிரத்தில் பழைய வழிகளும் பழக்க வழக்கங்களும் மாற ஆரம்பித்தன. இருவரும் ஒழுங்காகக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். வீட்டில் அதிக மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. கணவன் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டு, இப்பொழுது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சேர்ந்துகொண்டிருக்கிறார். மனைவி இப்பொழுது முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபியாக இருக்கிறாள்.
கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒன்றாகிய அன்பைச் செயல்முறையில் காட்டுவதன் மூலம் குடும்ப ஐக்கியம் நிலைநாட்டப்பட்டது.
பிரிட்டன்
◻ தன் மனைவியோடு தனக்கு இருக்கும் செயல்தொடர்பில் அன்பையும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் காண்பிக்கும் ஒரு கணவனை யெகோவா எவ்விதமாக ஆசீர்வதிக்கிறார் என்பதை பிரிட்டனிலிருந்து வரும் ஓர் அனுபவம் விளக்குகிறது. கணவன் 12 ஆண்டுகளுக்கு முன்பாக சத்தியத்துக்குள் வந்துகொண்டிருந்த போது, அவருடைய மனைவியின் கசப்பான எதிர்ப்பு, சட்டப்பூர்வமான விவாகரத்தை அவள் பெறுவதற்கு வழிநடத்தியது. என்றபோதிலும் கணவன் தொடர்ந்து அவளுக்குத் தயவு காண்பித்து, பொருளாதாரத் தேவைகள் நிறைவுசெய்யப்படுவதை நிச்சயப்படுத்திக்கொண்டு, ஒழுங்கான ரீதியில் சிறுசிறு வேலைகளை அவளுக்குச் செய்துகொண்டிருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், முன்னர் அவள் காண்பித்த எதிர்ப்பின் மத்தியிலும் அவர் மறுபடியுமாக ஒருமுறை சத்தியத்தைப் பற்றி பேச தீர்மானித்தார். ஒரு சகோதரி அவளோடு பைபிளைப் படிக்க வேண்டும் என்பதாக அவர் யோசனை கூறியபோது அவர் ஆச்சரியப்படும்விதமாக அவள் அதை ஏற்றுக்கொண்டாள். கடைசியாக அவள் சத்தியத்துக்காக தன் நிலைநிற்கையை எடுத்து முழுக்காட்டப்பட்டாள்! கணவன் அவளிடமாகத் தனக்கிருந்த அன்பை ஒருபோதும் இழந்துபோகவில்லை. அவள் சத்தியத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதை அவள் நிரூபித்தபோது, தன்னை மறுபடியுமாக விவாகம் செய்துகொள்ளுமாறு அவர் அவளிடம் கேட்டார். அவள் வெகுவாகக் கிளர்ச்சியடைந்தாள். அவளுடைய முந்தைய மோசமான மனநிலையின் நிமித்தமாக அவர் இதைச் செய்ய அவள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அவர்கள் மறுமணம் செய்துகொண்டு ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாகின்றன. இருவருமே சத்தியத்தில் நன்றாக முன்னேறி வருகிறார்கள்.
தென் பசிபிக்
◻ 20 ஆண்டுகளுக்கு முன்பாக தென் பசிபிக்கில் துவலுவிலுள்ள ஒரு தீவில் வாழ்ந்த ஓர் இளம் மனிதன் காவற்கோபுரம் சங்கத்துக்கு இலக்கியங்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டு எழுதினார். தீவில் அந்தச் சமயத்தில் சாட்சிகள் எவரும் இருக்கவில்லை. என்றபோதிலும் அவர் தாமாகவே இலக்கியங்களை வாசித்து, அதுவே சத்தியம் என்பதை உணர்ந்துகொண்டார். ஆனால் அவருடைய மனைவி அவருடைய புதிய விசுவாசத்துக்குத் தீவிரமாக எதிர்ப்புக் காண்பித்தாள். ஆகவே அதை அவர் கைவிட்டுவிட்டார்.
அண்மையில் துவலுவன் மொழியில் பிரசுரங்கள் கிடைக்கக்கூடியதான போது, மனைவி ஒருசில பிரசுரங்களை வாங்கி தானாகவே அவற்றை வாசித்தாள். இப்பொழுது அவள் சத்தியத்தைக் கண்டுணர்ந்து கொண்டு தன் கணவனிடம் பின்வருமாறு குறைபட்டுக்கொண்டாள்: “இத்தனை வருடங்களாக நீங்கள் விளக்கைக் கொண்டிருந்தபோதிலும் அதை நீங்கள் உயர்த்திப் பிடிக்கவில்லை. சாட்சிகள் சொல்வது சரியே என்பதை நீங்கள் ஏன் நம்பினீர்கள் என்று குறைந்தபட்சம் ஏன் நீங்கள் என்னிடம் விளக்கவில்லை?” இப்பொழுது பைபிள் சத்தியத்தில் ஐக்கியப்பட்டவர்களாக இந்தத் தம்பதி சாட்சிகளோடு கூட்டுறவுக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஃபிஜியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்களுடைய இரண்டு மகள்கள் வீடு திரும்பியபோது, பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளாக மாற தாங்கள் தீர்மானித்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார்கள். பைபிள் படிப்பில் தங்களோடு சேர்ந்துகொள்ளுமாறு பெண்களை அவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் ஃபிஜியில் இப்பெண்கள் ஏற்கெனவே கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருந்தது இவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. குடும்பம் ஒன்றாகச் சேர்ந்து சத்தியத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர், அப்பாவும், அம்மாவும், ஒரு மகளும் ராஜ்ய பிரஸ்தாபிகளாகிவிட்டனர்.
பைபிள் சத்தியமும் அன்பும் உலக முழுவதிலுமுள்ள குடும்பங்களை ஐக்கியப்படுத்துவதைக் காண்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. (w 89 4/1)