மணிக்கற்கள்—லூக்காவின் சுவிசேஷத்திலிருந்து
யெகோவாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து உருக்கமான இரக்கமுடையவராயிருப்பதற்காக நன்கு அறியப்பட்டிருக்கிறார். அப்படியென்றால், சுவிசேஷ எழுத்தாளனாகிய லூக்கா உருக்கத்துக்கும் இரக்கத்துக்கும் ஒத்துணர்வுக்கும் சொல்லழுத்தம் கொடுப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது! யூதர்கள், புறஜாதிகள் ஆகிய இருவருக்குமே அவன், இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றிய மெய்யாகவே இருதயத்துக்கு அனலூட்டும் ஒரு பதிவை எழுதினான்.
இந்தச் சுவிசேஷத்தின் ஒரு சில அம்சங்கள் ஆழ்ந்த புலமை வாய்ந்த ஒரு நபர் எழுதினார் என்பதை குறிப்பாகத் தெரிவிக்கின்றன. உதாரணமாக இதில் இலக்கிய நடை அறிமுகமும் விரிவான சொல் தொகுதியும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட குறிப்புகள், லூக்கா முறையே கல்வி பயின்ற ஒரு மருத்துவன் என்ற உண்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது. (கொலோசெயர் 4:14) இயேசுவின் மரணத்துக்குப் பின்வரையாக அவன் விசுவாசியாகாவிட்டாலும், பவுலோடு, அவன் அப்போஸ்தலனின் மூன்றாவது மிஷனரிப் பிரயாணத்துக்குப் பின்பு எருசலேமுக்குச் சென்றிருந்தான். ஆகவே பவுல் அங்கு கைது செய்யப்பட்டு செசரியாவில் சிறையில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவனமுள்ள இந்த ஆய்வாளர், நேரடி சாட்சிகளை பேட்டிக் காண்பதன் மூலமும் அரசாங்கப் பதிவுகளிலிருந்து தகவல் பெறுவதன் மூலமும் அதிகமான விஷயங்களைச் சேகரிக்கக்கூடியவனாக இருந்தான். (1:1–4; 3:1, 2) அவனுடைய சுவிசேஷம் செசரியாவில், அப்போஸ்தலனின் இரண்டு ஆண்டுகால சிறையிருப்பின் சமயத்தில், சுமார் பொ.ச. 56–58-ல் எழுதப்பட்டிருக்கலாம்.
தனித்தன்மை வாய்ந்த சில அம்சங்கள்
குறைந்த பட்சம் இயேசுவின் ஆறு அற்புதங்களாவது லூக்காவின் சுவிசேஷத்தில் தனித்தன்மைவாய்ந்தவை. அவை யாவன: அற்புதமாக மீன் பிடித்தது (5:1–6); நாயீனில் ஒரு விதவையின் மகனை எழுப்பியது (7:11–15); நிமிரக்கூடாத கூனியாயிருந்த ஒரு ஸ்திரீயைச் சுகப்படுத்தியது (13:11–13); நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷனை குணமாக்கியது (14:1–4); குஷ்டரோகமுள்ள பத்துப் பேரை சுத்தமாக்கியது (17:12–14); பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை மீண்டும் சொஸ்தமாக்கியது.—22:50, 51.
லூக்காவின் பதிவில் மேலும் தனித்தன்மை வாய்ந்தது இயேசுவின் சில உவமைகளாக இருக்கின்றன. இவற்றில் அடங்கியிருப்பவை: கடன்பட்டிருந்த இரண்டு பேர் (7:41–47); அயலானாயிருந்த சமாரியன் (10:30–35); கனிக் கொடாத அத்திமரம் (13:6–9); பெரிய விருந்து (14:16–24); கெட்ட குமாரன் (15:11–32); ஐசுவரியவானும் லாசருவும் (16:19–31); விதவையும் அநீதிமானாயிருந்த நியாயாதிபதியும்.—18:1–8.
உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள்
மருத்துவனான லூக்கா பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் வயதானவர்களுக்கும் அக்கறைக் காண்பித்தான். அவன் மாத்திரமே எலிசபெத்தின் மலட்டுத்தன்மைக் குறித்தும், அவள் கருவுற்றதையும், யோவானின் பிறப்பையும் பற்றி குறிப்பிடுகிறான். அவனுடைய சுவிசேஷம் மாத்திரமே, மரியாளுக்குக் காபிரியேல் தூதன் தோன்றியதைப் பற்றி தெரிவித்தது. மரியாள் எலிசபெத்திடம் பேசுகையில், அவளுடைய குழந்தை வயிற்றில் களிப்பாய்த் துள்ளிற்று என்பதாக சொல்ல லூக்கா தூண்டப்பட்டான். அவன் மாத்திரமே இயேசுவின் விருத்தசேதனம் பற்றியும், ஆலயத்தில் அவர் பிரவேசித்ததுப் பற்றியும் அங்கே வயது சென்றவனாயிருந்த சிமியோனாலும் அன்னாளாலும் காணப்பட்டது பற்றியும் சொன்னான். இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றியும் யோவான் ஸ்நானகனைப் பற்றியும் நாம் அறிந்திருப்பதற்கு நாம் லூக்கா சுவிசேஷத்துக்கே கடன்பட்டிருக்கிறோம்.—1:1–2:52.
தன் ஒரே மகனை மரணத்தில் இழந்து சஞ்சலத்திலிருந்த நாயீன் ஊர் விதவையைப் பற்றி லூக்கா எழுதிய போது, அவன் இயேசு “அவன் மேல் மனதுருகி” பின்னர் அந்த மனிதனை எழுப்பினார் என்று சொன்னான். (7:11–15) லூக்காவின் சுவிசேஷத்தில் மாத்திரமே அறிவிக்கப்பட்டும், இருதயத்துக்கு அனலூட்டுவதாயுமிருப்பது ஆயக்காரரின் தலைவனான சகேயு என்பவனை உட்படுத்தும் சம்பவமாகும். அவன் குள்ளனானபடியால், இயேசுவைக் காண ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொண்டான். இயேசு தாம் சகேயுவின் வீட்டிலே தங்கப் போவதாகச் சொன்னபோது என்னே ஆச்சரியம்! மகிழ்ச்சியோடு அவரைத் தங்க வைத்தவனுக்கு அவருடைய வருகை பெரும் ஆசீர்வாதமாக இருந்தது என்பதை லூக்கா காண்பிக்கிறான்.—19:1–10.
ஒரு மருத்துவனின் பேனாவிலிருந்து
இந்தச் சுவிசேஷம் மருத்துவ அர்த்தமுள்ள அல்லது முக்கியத்துவமுள்ள அநேக வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படவோ அல்லது மருத்துவக் கருத்தில் அவ்விதமாகச் செய்யப்படவோ இல்லை. ஆனால் ஒரு மருத்துவனின் பேனாவிலிருந்து நாம் மருத்துவ மொழியை எதிர்பார்க்கலாம்.
உதாரணமாக லூக்கா மாத்திரமே, பேதுருவின் மாமி “கடும் ஜுரமாய்க்” கிடந்தாள் என்று சொன்னான். (4:38) அவன் “குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷனைப்” பற்றியும் எழுதினான். (5:12) மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களுக்கு, குஷ்டரோகம் எனக் குறிப்பிடுவது போதுமானதாக இருந்தது. ஆனால் அந்த மனுஷனின் நோய் முற்றிவிட்ட கட்டத்திலிருந்ததை சுட்டிக்காட்டிய மருத்துவனான லூக்காவுக்கு அவ்விதமாக இல்லை.
பழக்கவழக்கங்களினுள் உட்பார்வை
இயேசுவின் பிறப்புக்குப் பின்பு, மரியாள் “பிள்ளையைத் துணிகளில் சுற்றினாள்” என்று லூக்கா சொன்னான். (2:7) புதிதாகப் பிறந்த சிசுவை கழுவி, ஒருவேளை தோலைக் காய வைத்து அதை உறுதியாக்க உப்பு தேய்ப்பது வழக்கமாயிருந்தது. பின்னர் குழந்தை ஏறக்குறைய பதனம் செய்யப்பட்ட உடலைப் போல துணியினால் வரிந்து சுற்றிப் போர்த்து வைக்கப்பட்டது. இவ்விதமாக வரிந்துக் கட்டுவது உடலை வளையாமல் நேராகவும் உஷ்ணமாகவும் வைத்தது. முகவாய்க்கட்டைக்கு கீழே அதைச் சுற்றி தலைக்கு மேலாகச் சுற்றிக் கட்டுவது மூக்கின் வழியாக சுவாசிக்க குழந்தையை பயிற்றுவித்தது. இப்படியாக துணியினால் வரிந்து சுற்றி போர்த்தும் பழக்கங்கள் பற்றிய ஒரு 19-வது நூற்றாண்டு அறிக்கை, பெத்லகேமுக்குச் சென்றிருந்த ஒரு பார்வையாளர் இவ்விதமாகச் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறது: “நான் அந்தச் சிசுவை என் கையிலெடுத்தேன். அவனுடைய உடல் விறைப்பாகவும் உறுதியாகவும் இருந்தது, அது அவ்வளவு இறுக்கமாக வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற துணியால் சுற்றி கட்டப்பட்டிருந்தது. அவனுடைய கைகளும் கால்களும் முழுவதும் கட்டப்பட்டு, அவனுடைய தலை சிறிய மென்மையான சிவப்பு சால்வையால் அவனுடைய முகவாய்க்கட்டைக்குக் கீழும் அவனுடைய நெற்றியில் குறுக்காகவும் சிறிய மடிப்புகளால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.”
லூக்காவின் சுவிசேஷம் முதல் நூற்றாண்டு சவ அடக்கப் பழக்கங்களினுள்ளும் உட்பார்வையை நமக்குக் கொடுக்கிறது. இயேசு நாயீன் ஊரின் வாசலுக்கு அருகே இருக்கையில் “மரித்துப் போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.” (7:11, 12) சவ அடக்கம் பொதுவாக ஊருக்கு வெளியே செய்யப்பட்டது. மரித்துப் போனவனின் உறவினர்கள் கல்லறைக்கு உடன் சென்றார்கள். பாடை, நோயாளிகளுக்கான தூக்குகட்டிலாக, பிரம்பு வேலைப்பாட்டினால் செய்யப்பட்டதாக, ஊர்வலம் சவ அடக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் செல்கையில் நான்கு மனிதர்கள் தங்கள் தோள்களின் மீது சுமந்து செல்வதை அனுமதிக்கும் வகையில் அதன் மூலைகளிலிருந்து கொம்புகள் நீட்டிக் கொண்டிருந்தன.
லூக்கா பதிவு செய்த மற்றொரு உவமையில், இயேசு கள்ளர்களால் அடித்துக் காயப்பட்ட ஒரு மனுஷனைப் பற்றிப் பேசினார். அயலானாக இருந்த ஒரு சமாரியன் “அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி”னான். (10:34) காயங்களை ஆற்றுவதற்கு இது வழக்கமாகச் செய்யப்பட்ட பழக்கமாக இருந்தது. ஒலிவ எண்ணெய் காயங்களை மென்மைப்படுத்தி வேதனையைத் தணிக்கிறது. (ஏசாயா 1:6) ஆனால் திராட்சரசத்தைப் பற்றி என்ன? அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகை (The Journal of the American Medical Association) சொன்னதாவது: “திராட்சரசம் கிரீஸில் முக்கிய மருந்தாக இருந்தது. . . . மருத்துவ தந்தைமார்கள் (பொ.ச. 460–370) திராட்சரசத்தை விரிவாகப் பயன்படுத்தி, காயங்கள் கட்டுவதற்கு, ஜுரத்தை தணிப்பதற்கு, மலமிளக்கியாக, சிறுநீர்க்கழிவினைத் தூண்டும் மருந்தாக அதைச் சீட்டில் குறித்துக் கொடுத்தார்கள்.” இயேசுவின் உவமை, திராட்சரசத்தின் நோய் நுண்மத்தடை மற்றும் தொற்றுத்தடை தன்மைகளையும், காயங்களை ஆற்றுவதில் உதவியாக ஒலிவ எண்ணெயின் பயனையும் குறிப்பிட்டது. நிச்சயமாகவே உவமையின் குறிப்பானது, உண்மையான அயலான் இரக்கத்தோடு நடந்துகொள்கிறான் என்பதே. இவ்விதமாகவே நாம் மற்றவர்களோடு நடந்துகொள்ள வேண்டும்.—10:36, 37.
மனத்தாழ்மையில் பாடங்கள்
ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதைப் பார்த்த போது, இயேசு சொன்ன உவமையை லூக்கா மாத்திரமே எடுத்துரைக்கிறான். விருந்துகளின் போது, விருந்தாளிகள் ஒரு மேசையின் மூன்று பக்கங்களிலும் மேசைகளில் பந்தியிருந்தார்கள். பரிமாறுகிறவர்களுக்கு நான்காவது பக்கத்தில் வழிவிடப்பட்டிருந்தது. ஒரு மேசையில் மூன்று ஆட்கள், ஒவ்வொருவரும் மேசையைப் பார்த்த வண்ணம், உட்கார்ந்து இடது முழங்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் சாப்பிடுவது வழக்கம். மேசையில் மூன்று ஸ்தானங்களும் ஒரு நபர் உயர்ந்த, இடைநிலை அல்லது தாழ்ந்த இடத்தில் இருந்ததைக் காண்பித்தது. மூன்றாவதாக, மேசையில் கீழான ஸ்தானத்தில் இருப்பவர், போஜனத்தின் போது மிகவும் தாழ்வான ஓர் இடத்தை உடையவராக இருந்தார். இயேசு சொன்னார்: “நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.” (14:7–10) ஆம், நாம் மனத்தாழ்மையுடனே மற்றவர்களை நமக்கு முன்பாக வைப்போமாக. உண்மையில் உவமையைப் பொருத்துகையில் இயேசு சொன்னதாவது: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—14:11.
மனத்தாழ்மையை வலியுறுத்துவதாயும் லூக்காவின் சுவிசேஷத்தில் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பது, ஆலயத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்த ஓர் ஆயக்காரனையும் ஒரு பரிசேயனையும் பற்றிய இயேசுவின் உவமையாகும். மற்றக் காரியங்களோடுக்கூட பரிசேயன் “வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்” என்று சொன்னான். (18:9–14) நியாயப்பிரமாணம் ஆண்டுக்கு ஒரு முறை மாத்திரமே உபவாசிப்பதைக் கேட்டது. (லேவியராகமம் 16:29) ஆனால் பரிசேயர்கள் உபவாசித்தலை மிதமிஞ்சிய அளவுக்குக் கொண்டு சென்றார்கள். உவமையிலுள்ள ஒருவன் வாரத்தின் இரண்டாம் நாளில் உபவாசித்தான். ஏனென்றால் மோசே சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்று கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளைப் பெற்றுக் கொண்ட சமயமாக அது கருதப்பட்டது. அவன் வாரத்தின் ஐந்தாம் நாளிலே மலையிலிருந்து இறங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. (யாத்திராகமம் 31:18; 32:15–20) பரிசேயன் வாரத்துக்கு இருமுறை உபவாசிப்பதை தன்னுடைய கடவுள் பக்திக்குச் சான்றாக எடுத்துக் கூறினான். ஆனால் இந்த உவமை, சுயநீதியுள்ளவர்களாக அல்ல, ஆனால் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்க நம்மைத் தூண்ட வேண்டும்.
லூக்கா சுவிசேஷத்திலுள்ள இந்த மணிக் கற்கள் இது தனித்தன்மை வாய்ந்ததும் போதனை நிறைந்ததுமாயிருப்பதை நிரூபிக்கின்றன. பதிவில் கூறப்பட்ட சம்பவங்கள், இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டிப் பார்க்க நமக்கு உதவி செய்கிறது. ஒரு சில பழக்க வழக்கங்களைப் பற்றிய பின்னணித் தகவலிலிருந்தும்கூட நாம் நன்மையடைகிறோம். ஆனால் பிரியமான மருத்துவனான லூக்காவினால் இந்தச் சுவிசேஷத்தில் மிக நேர்த்தியாக கற்பிக்கப்பட்டிருக்கும் இரக்கத்தையும் மனத்தாழ்மையையும் குறித்தப் பாடங்களை நாம் பொருத்திப் பிரயோகிப்போமேயானால், விசேஷமாக ஆசீர்வதிக்கப்படுவோம். (w89 11⁄15)