“தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது”
1, 2. (எ) கிறிஸ்தவர்களாக மாறுகிறவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டுபண்ணுவது என்ன? (பி) பைபிள் எத்தனை ஆழமாக ஒரு நபரின் மீது செல்வாக்கு செலுத்தமுடியும்?
பொ.ச. முதல் நூற்றாண்டின் மத்தியில் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அதில் மெய் கிறிஸ்தவர்கள் மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம் என்ற தேவையை உயர்த்திக் காண்பித்தான். அவன் சொன்னான்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் சிந்திக்கும் முறையையே மாற்றி அவர்களை மறுரூபமாக்குவது எது? அடிப்படையில், அது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் வல்லமையாகும்.
2 பைபிள் எத்தனை ஆழமாக நம்மீது செல்வாக்குச் செலுத்தமுடியும் என்பதைப் பின்வருமாறு எழுதுகையில் பவுல் காண்பித்தான்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஆம், மக்களில் இப்படிப்பட்ட மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய பைபிளின் அசாதாரணமான வல்லமைதானே, இது வெறுமென மனிதனின் வார்த்தையைவிட அதிகமானது என்பதற்கு நம்பத்தக்க அத்தாட்சியாக இருக்கிறது.
3, 4. கிறிஸ்தவர்களின் ஆள்தன்மைகள் எந்தளவுக்கு மாற்றமடைகின்றன?
3 ரோமர் 12:2-ல் “மறுரூபமாகுங்கள்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை மெட்டமார்ஃபோவிலிருந்து வருகிறது. ஒரு கம்பளிப்பூச்சு வண்ணாத்திப்பூச்சாக உருமாற்றமடைவது போல முழுமையான ஒரு மாற்றத்தை அது குறிப்பிடுகிறது. அது அத்தனை முழுமையாக இருப்பதன் காரணமாக அதைப் பைபிள் ஆளுமையில் அல்லது ஆள்தன்மையில் ஒரு மாற்றமாகப் பேசுகிறது. மற்றொரு வேதவசனத்தில் நாம் வாசிப்பதாவது: “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படிக்கு புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.”—கொலோசெயர் 3:9, 10.
4 கொரிந்து சபைக்கு எழுதுகையில், முதல் நூற்றாண்டில் எந்தளவுக்கு ஆள்தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைப் பவுல் காண்பித்தான். அவன் சொன்னான்: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்.” (1 கொரிந்தியர் 6:9–11) ஆம் ஒழுக்கங்கெட்ட நடத்தையுள்ளோரும் சண்டை பிடிக்கிறவர்களும் திருடரும் குடிவெறியரும் முன்மாதிரியான கிறிஸ்தவ நடத்தையுள்ளவர்களாக மாறியிருந்தார்கள்.
இன்று ஆள்தன்மை மாற்றங்கள்
5, 6. பைபிளின் வல்லமையினால் ஓர் இளம் மனிதனின் ஆள்தன்மை எவ்விதமாக முழுமையாக மாற்றப்பட்டது?
5 இதேப்போன்ற ஆள்தன்மையில் மாற்றங்கள் இன்று காணப்படுகின்றன. உதாரணமாக, தென் அமெரிக்காவில் ஓர் இளம் பையன் ஒன்பது வயதில் அனாதையானான். பெற்றோரின் வழிநடத்துதல் இல்லாமல் வளர்ந்த அவன் மோசமான ஆள்தன்மைப் பிரச்னைகளை வளர்த்துக்கொண்டிருந்தான். அவன் சொல்லுகிறான்: “எனக்கு 18 வயதாவதற்குள், நான் போதை வஸ்துக்களுக்கு முழுவதுமாக அடிமையாகிவிட்டிருந்தேன், அப்பழக்கத்தைத் தொடர திருடியதற்காக நான் ஏற்கெனவே சிறையில் இருந்திருக்கிறேன்.” ஆனால் அவளுடைய அத்தையோ யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருந்தாள், கடைசியாக அவளால் அவனுக்கு உதவி செய்ய முடிந்தது.
6 அந்த இளம் மனிதன் விளக்குகிறான்: “என் அத்தை என்னோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். ஏழு மாதங்களுக்குப் பின்பு அந்தப் போதை வஸ்து பழக்கத்தை என்னால் விட்டுவிட முடிந்தது.” அவன் தன்னுடைய முந்தைய நண்பர்களையும்கூட விட்டுவிட்டு யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் புதிய நண்பர்களைக் கண்டடைந்தான். அவன் தொடர்ந்து சொல்வதாவது: “என்னுடைய ஒழுங்கான பைபிள் படிப்போடுகூட இந்தப் புதிய நண்பர்கள், நான் முன்னேறவும் கடைசியாக கடவுளை சேவிப்பதற்காக என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவும் உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.” ஆம், இந்த முன்னாள் போதை வஸ்து அடிமையும், திருடனும், இப்பொழுது சுறுசுறுப்புள்ள சுத்தமான வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவனாக இருக்கிறான். இப்பேர்ப்பட்ட தீவிரமான ஆளுமை மாற்றம் எவ்விதமாக தோற்றுவிக்கப்பட்டது? பைபிளின் வல்லமை கொண்டு.
7, 8. பைபிளின் உதவியோடு எவ்விதமாக ஒரு கடினமான ஆள்தன்மைப் பிரச்னை தீர்க்கப்பட்டது என்பதை விளக்கவும்.
7 மற்றொரு உதாரணம் தென் ஐரோப்பாவிலிருந்து வருகிறது. அங்கே, ஓர் இளம் மனிதன் கடினமான ஓர் ஆளுமைப் பிரச்னையோடு வளர்ந்து வந்தான்: உக்கிரமான கோபம். எப்போதும் அவன் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தான். ஒரு குடும்ப சண்டையில் அவன் தன்னுடைய தகப்பனையே அடித்து கீழே தள்ளி விட்டான்! ஆனால் கடைசியாக அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து ரோமர் புத்தகத்திலுள்ள கடவுளின் கட்டளையைக் கவனத்திற் கொண்டான்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, . . . நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17–19.
8 தன்னுடைய பலவீனம் எத்தனை மோசமானது என்பதைக் காண அந்த வார்த்தைகள் அவனுக்கு உதவியது. பைபிளைப் பற்றிய அதிகரித்து வந்த அறிவு அவனுடைய மனச்சாட்சியை பண்பட்டதாக்கியது, இது அவனுடைய முன்கோபத்தை அடக்க உதவியது. ஒருசமயம், அவனுடைய படிப்பில் அவன் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகையில் முன்பின் அறியாத ஒருவர், அவனிடம் அவமரியாதையாகக் கத்தினார். இந்த இளம் மனிதன் வழக்கம்போல் தனக்குள் கடுங்கோபம் ஊற்றெடுத்துவருவதை அவன் உணர்ந்தான். பின்னர் அவன் வேறு ஒன்றை உணர்ந்தான்: வெட்க உணர்வு; இது அவனுடைய கோபத்துக்கு இடங்கொடுப்பதிலிருந்து அவனை தடைசெய்தது. அவன் ஆவியின் முக்கியமான கனியாகிய தன்னடக்கத்தை வளர்த்துக்கொண்டிருந்தான். (கலாத்தியர் 5:22, 23) தேவனுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையின் காரணமாக, அவனுடைய ஆள்தன்மை இப்பொழுது வித்தியாசமாக இருந்தது.
9. பவுலின் பிரகாரம், எந்த ஏதுவின் மூலமாக நம்முடைய ஆள்தன்மை மாற்றப்படுகிறது?
9 ஆனால் பைபிள் எவ்விதமாக இப்பேர்ப்பட்ட வல்லமைவாய்ந்த பாதிப்பை உண்டுபண்ணுகிறது? கொலோசெயர் 3:10-ல், நம்முடைய ஆளுமை அல்லது ஆள்தன்மைகள் திருத்தமான அறிவின் மூலமாக மாற்றப்படுவதாய்ப் பவுல் சொன்னான். இந்த அறிவு பைபிளில் காணப்படுகிறது. ஆனால் அறிவு எவ்விதமாக ஆட்களை மாற்றுகிறது?
திருத்தமான அறிவின் பங்கு
10, 11. (எ) நாம் பைபிளைப் படிக்கையில், விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத ஆளுமைப் பண்புகளைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (பி) நம்முடைய ஆள்தன்மையில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண அறிவோடுகூட என்ன அவசியமாயிருக்கிறது?
10 முதலாவதாக, பைபிள் களையப்பட வேண்டிய விரும்பத்தகாத ஆளுமைப் பண்புகளை அடையாளங் காட்டுகிறது. இவற்றில், “மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்” ஆகியவை அடங்கும். (நீதிமொழிகள் 6:16–19) இரண்டாவதாக, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” உட்பட நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய விரும்பத்தக்கப் பண்புகளை பைபிள் விவரிக்கிறது.—கலாத்தியர் 5:22, 23.
11 இப்படிப்பட்ட திருத்தமான அறிவு தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து, எந்த ஆளுமைப் பண்புகளை அவன் வளர்ப்பது அவசியம் என்பதையும் எவற்றைக் களைந்துபோட அவன் உழைக்க வேண்டும் என்பதையும் காண உண்மை மனதுள்ள ஒரு நபருக்கு உதவி செய்கிறது. (யாக்கோபு 1:25) என்றபோதிலும் அது வெறுமென ஓர் ஆரம்பமாக மாத்திரமே இருக்கிறது. அறிவோடுகூட, மாறுவதற்கு அவன் விருப்பமுள்ளவனாயிருப்பதற்கு அவனை தூண்டும் ஏதோ ஒன்று, ஓர் உள்ளானத் தூண்டுதல் அவசியமாயிருக்கிறது. மறுபடியும் இங்கு, பைபிளிலிருந்து திருத்தமான அறிவு அவனுக்கு அவசியமாக இருக்கிறது.
நல்லவர்களாக இருக்கத் தூண்டப்படுதல்
12. கடவுளுடைய ஆளுமைப் பண்பைப் பற்றிய அறிவு மாறுவதற்கு நமக்கு எவ்விதமாக உதவிசெய்கிறது?
12 விரும்பத்தக்க புதிய ஆள்தன்மை “சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்” உருக்கிவார்க்கப்படுவதாக பவுல் சொன்னான். (கொலோசெயர் 3:10) ஆகவே கிறிஸ்தவ ஆளுமை, கடவுளுடைய சொந்த ஆளுமைக்கு ஒப்பாக இருக்க வேண்டும். (எபேசியர் 5:1) கடவுளுடைய ஆளுமை பைபிளின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. மனிதவர்க்கத்தினிடமாக அவருடைய செயல்தொடர்புகளை நாம் காண்கிறோம், அன்பு, தயவு, நற்குணம், இரக்கம் மற்றும் நீதி போன்ற அவருடைய நேர்த்தியான குணங்களை நாம் கவனிக்கிறோம். இப்படிப்பட்ட அறிவு கடவுளை நேசிக்கவும் கடவுள் அங்கீகரிக்கும் விதமான ஓர் ஆளாக இருக்க விரும்பவும் நேர்மையான இருதயமுள்ள ஒரு நபரைத் தூண்டுகிறது. (மத்தேயு 22:37) அன்புள்ள பிள்ளைகளாக, நாம் நம்முடைய பரலோகத் தகப்பனை பிரியப்படுத்த விரும்புகிறோம். ஆகவே நம்முடைய பெலவீனமான, அபூரண நிலையில் நம்மால் முடிந்தவரை அவருடைய ஆளுமையை நாம் பின்பற்ற முயற்சி செய்கிறோம்.—எபேசியர் 5:1.
13. என்ன அறிவு ‘நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுப்பதற்கு’ நமக்கு போதிக்கிறது?
13 நல்ல ஆளுமைப் பண்புகளும் கெட்டவைகளும் எங்கே வழிநடத்துகின்றன என்பதைப் பற்றி பைபிள் கொடுக்கும் அறிவினால் நம்முடைய தூண்டுதல் பலப்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 14:1–5; 15:1–5; 18:20, 24) தாவீது அவனுடைய தேவபக்திக்காகவும், நீதியை நேசித்ததற்காகவும் ஆசீர்வதிக்கப்பட்டான் என்றும் தன்னடக்கத்தை இழந்தபோது அவன் துன்பப்பட்டான் என்றும் நாம் கற்றறிகிறோம். சாலொமோனின் நேர்த்தியான குணங்கள் அவனுடைய வயதான காலத்தில் சீர்கேடடைந்த போது ஏற்பட்ட வருத்தமான விளைவுகளை நாம் அறிந்திருக்கிறோம். யோசியா மற்றும் எசேக்கியாவின் உத்தம குணத்தினால் விளைவடைந்த ஆசீர்வாதங்கள், ஆகாபின் பெலவீனத்தினாலும் மனாசேயின் பிடிவாதமான விசுவாச துரோகத்தினாலும் ஏற்பட்ட துயரமான விளைவுகளோடு வேறுபடுத்திக் காண்பிக்கப்படுகிறது. (கலாத்தியர் 6:7) இவ்விதமாக நாம் ‘நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும்’ கற்றுக்கொள்கிறோம்.—எபிரெயர் 1:9; சங்கீதம் 45:7; 97:10.
14. உலகத்துக்கும் அதிலுள்ள தனிநபர்களுக்கும் யெகோவாவின் நோக்கங்கள் யாவை?
14 இந்தத் தூண்டுதலானது கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவினால் இன்னும் அதிகமாகப் பலப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட அறிவு, நம்முடைய யோசனைகளையும் செயல்களையும் தூண்டி இயக்கும் ஆவியாகிய ‘நமது மனங்களை ஏவுகின்ற சக்தியையே’ மாற்றுவதற்கு உதவிசெய்கிறது. (எபேசியர் 4:23, 24) பைபிளை நாம் படிக்கையில், யெகோவா தேவன் என்றைக்குமாக அக்கிரமத்தைப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதை நாம் கற்றறிகிறோம். சீக்கிரத்தில், அவர் அநீதி நிறைந்த இந்த உலகத்தை அழித்து, ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ கொண்டுவருவார். (2 பேதுரு 3:8–10, 13) யார் இந்தப் புதிய உலகில் வாழ்வார்கள்? “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.
15. யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் உண்மையில் நம்புவோமேயானால் ஆட்களாக இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
15 இந்த வாக்குறுதியை நாம் உண்மையில் நம்புவோமேயானால், நாம் சிந்திக்கும் முறை முழுமையுமாக பாதிக்கப்படும். பொல்லாப்பின் அழிவைப் பற்றி முன்னுரைத்தப் பின்பு அப்போஸ்தலனாகியப் பேதுரு சொல்கிறான்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.” (2 பேதுரு 3:11, 12) பொல்லாதவர்கள் அழிக்கப்படுகையில் மீந்துவிடப்படும் செவ்வையானவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையினால் நம்முடைய ஆளுமைகள் வார்த்து உருவாக்கப்பட வேண்டும்.
16. புதிய உலகில் எப்படிப்பட்ட ஆள்தன்மைகளுக்கு இடம் இருக்காது? இந்த அறிவு நம்மை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
16 வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வுலகத்தின் முடிவுக்குப் பின்பு செவ்வையானவர்களுக்கு இவ்விதமாக வாக்களிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” ஆனால் அது, “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர்” அனைவரும் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிப்பு செய்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4, 8) புதிய உலகில் கடவுள் அனுமதிக்க மறுக்கப் போகும் விரும்பத்தகாத குணாதிசயங்களைத் தவிர்ப்பது எத்தனை ஞானமுள்ளது!
வெளிப்புறத்திலிருந்து உதவி
17. என்னவிதமான உதவியை நாடும்படியாக பைபிள் நமக்கு புத்திசொல்லுகிறது?
17 என்றபோதிலும், மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள், பொதுவாக மாற்றங்களைச் செய்வதற்கு தகவலோடும் தூண்டுதலோடும்கூட ஏதோ ஒன்று அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அவர்களுக்குத் தனிப்பட்ட உதவி தேவைப்படுகிறது, இந்த உதவியை நாம் எங்கே கண்டடையலாம் என்பதை பைபிள் நமக்குக் காண்பிக்கிறது. உதாரணமாக அது சொல்வதாவது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) அதேவிதமாகவே, நாம் வளர்க்க விரும்பும் குணங்களை வெளிப்படுத்தும் ஆட்களோடு நாம் கூட்டுறவுக் கொள்வோமேயானால் அதிகமாக அவர்களைப் போலாவதற்கு நாம் வெகுவாக உதவப்படுவோம்.—ஆதியாகமம் 6:9; நீதிமொழிகள் 2:20; 1 கொரிந்தியர் 15:33.
18, 19. நம்முடைய மனங்களையும் இருதயங்களையும் கடவுளுடைய ஆவிக்குத் திறந்து வைக்க நாம் என்ன செய்ய வேண்டியது அவசியமாகும்?
18 மேலுமாக, யெகோவாதாமே பரிசுத்த ஆவியின் உருவில்—பூர்வ காலங்களில் அற்புதங்களை நடப்பிக்க அவர் பயன்படுத்திய அதே ஆவியின் உருவில் உதவியை அளிக்கிறார். ஆம், மிக உயர்வாக விரும்பப்படுகின்ற குணங்களாகிய “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவை “ஆவியின் கனிகள்” என்றழைக்கப்படுகின்றன. (கலாத்தியர் 5:22, 23) பரிசுத்த ஆவியின் உதவியை நாம் எவ்விதமாகப் பெற்றுக்கொள்ள முடியும்? பைபிள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டதால், நாம் அதை வாசிக்கையில் அல்லது அதைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகையில் நாம் அந்த ஆவியின் தூண்டுகின்ற சக்திக்கு நமது மனதையும் இருதயத்தையும் திறந்து வைக்கிறோம். (2 தீமோத்தேயு 3:16) ஆம், நாம் நம்முடைய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகையில் அந்த ஆவியின் நேரடியான செயலை நாம் அனுபவிக்கமுடியும் என்பதாக இயேசு வாக்களித்தார்.—மத்தேயு 10:18–20.
19 மேலுமாக பைபிள் பரிந்துரை செய்வது: “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.” (ரோமர் 12:12) ஜெபத்தின் மூலமாக நாம் யெகோவாவிடம் பேசுகிறோம், அவரைத் துதிக்கிறோம், அவருக்கு நன்றி செலுத்துகிறோம், மேலும் அவருடைய உதவிக்காகக் கேட்கிறோம். கோபம், பிடிவாதம், பொறுமையின்மை, அல்லது பெருமை போன்ற விரும்பத்தகாத ஆளுமைக் குணங்களை மேற்கொள்ள நாம் உதவிக்காக அவரைக் கேட்போமேயானால், அந்த ஜெபத்திற்கிசைவாக நாம் செய்யும் எந்த முயற்சிக்கும் கடவுளுடைய ஆவி உறுதுணையாய் இருக்கும்.—யோவான் 14:13, 14; யாக்கோபு 1:5; 1 யோவான் 5:14.
20. புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் ஏன் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
20 பவுல், “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்பதாக எழுதிய போது, அவன் முழுக்காட்டப்பட்ட, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் ஒரு சபைக்கு எழுதிக்கொண்டிருந்தான். (ரோமர் 1:7; 12:2) மேலும் மூல கிரேக்குவில் இடைவிடாத செயலை அர்த்தப்படுத்தும் ஒரு வினைவடிவத்தை அவன் பயன்படுத்தினான். இது, பைபிளிலிருந்து வரும் திருத்தமான அறிவினால் நம்மில் ஏற்படும் இந்த மறுரூபமாதல் படிப்படியாக முன்னோக்கிச் செல்வதை குறிப்பதாயிருக்கிறது. நாம் இன்று—பவுலின் நாட்களிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே, சீர்கேடான செல்வாக்குகள் மிகுந்த ஓர் உலகினால் சூழப்பட்டிருக்கிறோம். நாம்—அவர்களைப் போலவே அபூரணராக, தவறு செய்யும் மனச்சாய்வுடையவர்களாக இருக்கிறோம். (ஆதியாகமம் 8:21) ஆகவே, அவர்கள் செய்ததுபோலவே, பழைய தன்னலமான ஆள்தன்மையை மேற்கொள்வதிலும் புதிய ஒன்றைத் தரித்துக்கொள்வதிலும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். பூர்வ கிறிஸ்தவர்கள் அவர்களைச் சுற்றியிருந்த உலகிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்களாக தனியே தெரியும் அளவுக்கு அவர்கள் அதில் வெற்றிபெற்றார்கள். கிறிஸ்தவர்கள் இன்று அதையேச் செய்கிறார்கள்.
“யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கும்” ஒரு ஜனம்
21. இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய மக்கள் மீது நிறைவேறும் ஒருசில தீர்க்கதரிசனங்கள் யாவை?
21 ஆம், கடவுளுடைய ஆவி இன்று தனிநபர்களின் மீது மாத்திரமல்ல, ஆனால் எண்ணிக்கையில் பல இலட்சக்கணக்காக இருக்கும் ஒரு முழு கிறிஸ்தவ அமைப்பின் மீதும் கிரியை செய்கிறது. இந்த அமைப்பின் மீது ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறுகின்றன: “திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: ‘நாம் கர்த்தரின் (யெகோவாவின், NW) பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்’” (ஏசாயா 2:3) ஏசாயாவின் இன்னுமொரு தீர்க்கதரிசனமும்கூட அவர்களுடைய விஷயத்தில் நிறைவேறியிருக்கிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் (யெகோவாவால், NW) போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 54:13) யெகோவாவினால் போதிக்கப்படுவதால் சமாதானத்தை அனுபவித்து மகிழும் இவர்கள் யார்?
22. (எ) இன்று யெகோவாவால் போதிக்கப்பட்டு வருவது யார்? (பி) யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசமானவர்கள் என்பதை வெளியே இருப்பவர்கள் ஒப்புக்கொள்வதைக் காண்பிப்பதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
22 நியு ஹேவன் ரிஜிஸ்டர் என்ற வட அமெரிக்க செய்திதாளுக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதியைக் கவனியுங்கள்: “அவர்கள் செய்யும் மதமாற்ற வேலையினால் உங்களுக்கு எனக்கு ஏற்படுவதுபோன்ற ஆத்திரமோ அல்லது கோபமோ வந்தாலும் சரி, நீங்கள் கட்டாயமாகவே அவர்களுடைய இருதயப்பூர்வமான ஒப்புக்கொடுத்தல், அவர்களுடைய ஆரோக்கியத்தன்மை, மனித நடத்தையில் அவர்களுடைய குறிப்பிடத்தக்க முன்மாதிரி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பாராட்டியேத் தீரவேண்டும்.” எழுத்தாளர் யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்? ஆர்ஜென்டினாவிலுள்ள போனஸ் அயர்ஸ் ஹெரால்ட் பத்திரிகை பின்வருமாறு சொன்னபோது குறிப்பிட்ட அதே தொகுதியைப் பற்றியே. அது சொன்னதாவது: “யெகோவாவின் சாட்சிகள், பல வருடங்களாக, கடினமாக உழைக்கும், அமைதியான, சிக்கனமான, மற்றும் கடவுள் பயமுள்ள குடிமக்களாகத் தங்களை நிரூபித்துவந்திருக்கிறார்கள்.” அதேவிதமாகவே, லா ஸ்டாம்ப்பா என்ற இத்தாலிய செய்தித்தாள் சொன்னதாவது: “அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதோ, தங்களுடைய சொந்த இலாபத்துக்காக அசெளகரியமான சட்டங்களை ஏமாற்ற நாடுவதோ கிடையாது. அயலான் மீது அன்பு, அதிகாரம் செய்ய மறுப்பது, வன்முறையின்மை, தனிப்பட்ட நாணயம் என்ற ஒழுக்க இலட்சியங்கள் . . . அவர்களுடைய ‘அன்றாட’ வாழ்க்கையின் பாகமாக இருப்பதில் நுழைந்து செல்கிறது.”
23. ஓர் அமைப்பாக யெகோவாவின் மக்கள் ஏன் வித்தியாசமானவர்களாகத் தனித்து நிற்கிறார்கள்?
23 பூர்வ கிறிஸ்தவர்களைப் போன்று ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் ஏன் வித்தியாசமானவர்களாகத் தனித்து நிற்கிறார்கள்? அநேக அம்சங்களில், அவர்கள் மற்ற எல்லாரையும் போலவே இருக்கிறார்கள். அவர்கள் அதே மனித அபூரணத்தோடு பிறந்தவர்களாய், அதே பொருளாதாரப் பிரச்னைகளையும் அடிப்படைத் தேவைகளையும் உடையவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும், உலகளாவிய ஒரு சபையாக, அவர்கள் கடவுளுடைய வார்த்தை தங்கள் வாழ்க்கையில் வல்லமையாகக் கிரியைச் செய்ய அவர்கள் அனுமதிக்கிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் உண்மைக் கிறிஸ்தவர்களாலான சர்வதேசிய சகோதரத்துவம், பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை என்பதற்கு வல்லமைவாய்ந்த அத்தாட்சியாக இருக்கிறது.—சங்கீதம் 133:1.
பைபிள் ஆவியால் ஏவப்பட்டது
24. இன்னும் அநேக ஆட்களின் சார்பாக நம்முடைய ஜெபம் எதுவாக இருக்கிறது?
24 இந்த இரண்டு கட்டுரைகளில், பைபிள் மனிதனுடையது அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தை என்பதைக் காண்பிக்க வெறும் இரண்டு அத்தாட்சிகளை மட்டுமே நாம் சிந்தித்தோம். உண்மை மனதுள்ள ஆட்கள், பைபிளில் காணப்படும் ஒப்பற்ற ஞானத்தையோ அல்லது மக்களை மாற்றுவதற்கு அதற்கிருக்கும் வல்லமையையோ—அல்லது அதை ஈடிணையற்றதாகச் செய்யும் மற்ற அநேகக் காரியங்களைச் சிந்தித்துப் பார்த்தாலும் சரி, அது கட்டாயமாகவே கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைக் காண தவறமாட்டார்கள். கிறிஸ்தவர்களாக, இன்னும் அநேகர் இந்தச் சத்தியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறோம். அப்பொழுது அவர்களும்கூட சங்கீதக்காரனின் சந்தோஷமான வார்த்தைகளை எதிரொலிக்கிறவர்களாக இருப்பர்: “இதோ, உம்முடைய கட்டளைகளை ஆசிக்கிறேன், யெகோவா, உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பித்தருளும். உமது வார்த்தையின் சாராம்சம் சத்தியம், உமது நீதியுள்ள நியாயத்தீர்ப்பு ஒவ்வொன்றும் நித்தியமே.”—சங்கீதம் 119:159, 160, தி.மொ. (w90 4/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மெய் கிறிஸ்தவர்கள் மீது பைபிள் என்ன பாதிப்பை உடையதாக இருக்கிறது?
◻ திருத்தமான அறிவு எவ்விதமாக நாம் மறுரூபமாவதற்கு உதவி செய்கிறது?
◻ நல்ல குணாதிசயங்களை வளர்க்கவும் கெட்டவற்றை மேற்கொள்ளவும் பைபிளின் உதவி எவ்விதமாக நம்மைத் தூண்டுகிறது?
◻ தெய்வீக குணாதிசயங்களை வளர்ப்பதில் என்ன உதவி கிடைக்கக்கூடியதாக இருக்கிறது?
◻ பைபிள் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதற்கு யெகோவாவின் மக்கள் மத்தியில் என்ன அத்தாட்சி காணப்படுகிறது?
[பக்கம் 25-ன் படம்]
சாலொமோன் அவனுடைய வயதான காலத்தில் உண்மையற்றவனாய் மாறியதால் ஏற்பட்ட துயரமான விளைவுகள், நம்மை நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும் தூண்ட வேண்டும்
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவிடம் நாம் உதவியைக் கேட்டால், அவருடைய ஆவி தவறான குணங்களை மேற்கொள்வதற்கு நாம் செய்யும் எந்த முயற்சிகளுக்கும் வலுவூட்டுவதாக இருக்கும்