விசுவாசத்தில் ஆரோக்கியமாய் நிலைத்திரு!
தீத்துவிலிருந்து முக்கிய குறிப்புகள்
மத்தியதரைக் கடலிலுள்ள கிரேத்தா தீவிலிருந்த கிறிஸ்தவ சபைகளுக்கு ஆவிக்குரிய கவனிப்பு தேவைப்பட்டது. யார் அவர்களுக்கு உதவிசெய்ய முடியும்? அப்போஸ்தலன் பவுலின் உடன் ஊழியனான தீத்து உதவிசெய்யமுடியும்! இவன் தைரியமுள்ளவனும், போதிப்பதற்குத் தகுதிபெற்றவனும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவனும், விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவனுமாயிருந்தான்.
பவுல் ரோமில் தன் முதல் மற்றும் இரண்டாவது சிறையிருப்புக்கு இடையில் கிரேத்தா தீவுக்குச் சென்றிருந்தான். சில காரியங்களைத் திருத்தி ஒழுங்குபடுத்தவும் சபை மூப்பர்களை நியமிக்கவும் அவன் தீத்துவை அந்தத் தீவில் விட்டு வந்தான். மேலும் தீத்து, பொய்ப் போதகர்களைக் கடிந்துகொள்ளவும் சிறந்த முன்மாதிரியை வைக்கவும் வேண்டியதிருக்கும். இந்த எல்லாம் தீத்துவுக்கு எழுதின பவுலின் நிருபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது, இது பெரும்பாலும் பொ.ச. 61-க்கும் 64-க்கும் இடையில் மக்கெதோனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம். அப்போஸ்தலனின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவது இந்நாளைய கண்காணிகளும் உடன் விசுவாசிகளும் தைரியமாயும், பக்திவைராக்கியத்துடனும், ஆவிக்குரிய ஆரோக்கியத்துடனும் இருக்கும்படி உதவிசெய்யக்கூடும்.
கண்காணிகளிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன?
கண்காணிகளை நியமிக்கவும் வினைமையான சில பிரச்னைகளைக் கையாளவும் வேண்டியிருந்தது. (1:1-16) கண்காணியாக நியமிப்பதற்கு, ஒருவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், தன்னைக் குறித்தவரையிலும் மற்றும் தன் குடும்ப வாழ்க்கையிலும் முன்மாதிரியாயும், உபசரிக்கிறவனும், சமநிலையானவனும், தன்னடக்கமுள்ளவனுமாக இருக்கவேண்டும். அவன் சத்தியத்தைக் கற்பிக்கவேண்டும் முரணான கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு அறிவுரை கூறி கடிந்துகொள்ளவும் வேண்டும். சபைகளில் அடங்காது நடக்கும் ஆட்களின் வாயை அடக்கவேண்டியிருந்ததால் தைரியம் தேவைப்பட்டது. முக்கியமாய் விருத்தசேதனத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தோரின் காரியத்தில் இவ்வாறு இருந்தது, ஏனெனில் அவர்கள் முழு குடும்பங்களையும் கவிழ்த்துவிட்டிருந்தார்கள். அந்தச் சபைகள் ஆவிக்குரியபிரகாரம் ஆரோக்கியத்துடன் நிலைத்திருக்கவேண்டுமெனில் கடுங்கண்டிப்பான கடிந்துகொள்ளுதல் தேவையாயிருக்கும். இன்றும், கிறிஸ்தவ கண்காணிகள் சபையை முன்னேற்றுவிக்கும் நோக்கத்துடன் கடிந்துகொள்ளுதலையும் அறிவுரையையும் கொடுக்க அவர்களுக்குத் தைரியம் தேவைப்படுகிறது.
ஆரோக்கியமான போதகத்தைப் பொருத்திப் பயன்படுத்துங்கள்
தீத்து ஆவிக்குரியபிரகாரமாய் ஆரோக்கியமான போதகத்தை அளிக்கவேண்டும். (2:1-15) முதிர்வயதுள்ள ஆண்கள் நிதான புத்தியிலும், பொறுப்புணர்ச்சியுடனிருப்பதிலும், தெளிந்த மனதிலும், விசுவாசம், அன்பு, மற்றும் சகிப்புத்தன்மையிலும் முன்மாதிரியாயிருக்க வேண்டும். முதிர்வயதான பெண்கள் “ஒழுக்கத்தில் பயபக்தியுள்ளவர்க”ளாய் இருக்கவேண்டும். (தி.மொ.) “நற்காரியங்களைப் போதிக்கிறவர்களாய்” அவர்கள், பாலிய பெண்களுக்கு மனைவிகளாகவும் தாய்மாராகவும் தங்கள் கடமைகளைக் குறித்துச் சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க உதவிசெய்யலாம். இளைஞரான ஆண்களும் தெளிந்த புத்தியுடனிருக்கவேண்டும், அடிமைகள் கடவுளின் போதகத்தை அலங்கரிக்கத்தக்க முறையில் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். எல்லாக் கிறிஸ்தவர்களும், கடவுளின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மகிமையான வெளிப்படுத்துதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் தெய்வபக்தியற்றத் தன்மையை வெறுத்தொதுக்கி தெளிந்த மனதுடன் வாழவேண்டும். இயேசு கிறிஸ்து “நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” இத்தகைய ஆரோக்கியமான அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவதன்மூலம், நாமும் ‘கடவுளின் போதகத்தை அலங்கரிப்போமாக.’
பவுலின் முடிவான அறிவுரை ஆவிக்குரிய ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்கிறது. (3:1-15) ஆளும் அதிகாரிகளுக்குத் தக்கக் கீழ்ப்படிதலைக் காட்டவும் நியாயமான நடத்தைக்குரிய தன்மையை வளர்க்கவும் வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு நித்திய ஜீவனின் நம்பிக்கை உண்டு, மேலும் நற்கிரியைகளின்மீது தங்கள் மனதைத் தொடர்ந்து ஊன்றவைக்கும்படி அவர்களை ஊக்குவிக்கப் பவுலின் வார்த்தைகள் அழுத்திக் கூறப்படவேண்டும். நியாயப்பிரமாணத்தின்பேரில் புத்தியீனமான கேள்விகளையும் சண்டைகளையும் தவிர்க்கவேண்டும், வேதப்புரட்டனை இருமுறை எச்சரித்தப் பின் விலக்கிவிடவேண்டும். இன்று மூப்பர்கள் இத்தகைய அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துகையில், அவர்களும் அவர்களுடைய உடன் விசுவாசிகளும் விசுவாசத்தில் ஆரோக்கியமாய் நிலைத்திருப்பார்கள். (w91 2⁄15)
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
மதுபானத்துக்கு அடிமைப்படாதிருத்தல்: சபையில் பெண்கள் ஆண்களுக்குப் போதகஞ்செய்யக்கூடாது, எனினும் முதிய சகோதரிகள் இளைய பெண்களுக்குத் தனிமையில் போதனை கொடுக்கலாம். ஆனால் இதைப் பலன்தரத்தக்கமுறையில் செய்ய, முதியோரான பெண்கள் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும்: “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே ஒழுக்கத்தில் பயபக்தியுள்ளவர்களும் அவதூறுபண்ணாதவர்களும் மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களும் நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவேண்டும்.” (தீத்து 2:1-5, தி.மொ.; 1 தீமோத்தேயு 2:11-14) குடிப்பதன் விளைவுகளைப்பற்றிக் கவலையுள்ளோராய், கண்காணிகளும், உதவி ஊழியர்களும், முதிர்வயதான பெண்களும் மிதமாயிருக்கவேண்டும், மிகுதியான மதுபானத்துக்குத் தங்களை அடிமைப்படுத்தக்கூடாது. (1 தீமோத்தேயு 3:2, 3, 8, 11) கிறிஸ்தவர்கள் எல்லாரும் குடிவெறியைத் தவிர்க்கவேண்டும் மேலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் “பரிசுத்த ஊழியம்” செய்கையில் மதுபானங்கள் குடிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும்.—ரோமர் 15:15; நீதிமொழிகள் 23:20, 21.