தன்னடக்கத்தின் கனியை வளர்த்தல்
“ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; [தன்னடக்கம், NW] இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” —கலாத்தியர் 5:22, 23.
1. வேதாகமத்தில் காணப்படுகிறபடி தன்னடக்கத்தில் யார் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்திருக்கிறார்?
யெகோவா தேவனும், இயேசு கிறிஸ்துவும் தன்னடக்கத்துக்கு நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருந்திருக்கிறார்கள். ஏதேன் தோட்டத்தில், மனிதன் கீழ்ப்படியாமல் போன சமயத்திலிருந்து, யெகோவா இந்தப் பண்பைத் தொடர்ந்து அப்பியாசித்து வந்திருக்கிறார். (ஏசாயா 42:14-ஐ ஒப்பிடவும்.) எபிரெய வேதாகமத்தில் ஒன்பது தடவைகள், அவர் “கோபிக்கிறதற்கு தாமதிக்கிறவர்” என்பதாக நாம் வாசிக்கிறோம். (யாத்திராகமம் 34:6, NW) இது தன்னடக்கத்தைத் தேவைப்படுத்துகிறது. நிச்சயமாகவே கடவுளுடைய குமாரன் மிகுதியாக தன்னடக்கத்தை அப்பியாசித்தார், ஏனென்றால், “அவர் வையப்படும்போது பதில் வையாமல்” இருந்தார். (1 பேதுரு 2:23) அந்தச் சமயத்தில் “பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரின்” உதவிக்காக இயேசு தம்முடைய பரம தகப்பனிடம் கேட்டிருக்க முடியும்.—மத்தேயு 26:53.
2. தன்னடக்கத்தை அப்பியாசித்த அபூரண மனிதர்களின் நேர்த்தியான என்ன வேதாகம முன்மாதிரிகள் நமக்கு இருக்கின்றன?
2 தன்னடக்கத்தை அப்பியாசித்த அபூரண மனிதர்களின் ஒருசில மிகச் சிறந்த முன்மாதிரிகளும்கூட நமக்கிருக்கிறது. உதாரணமாக, கோத்திர தகப்பனாகிய யாக்கோபின் மகன் யோசேப்பின் வாழ்க்கையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க ஒரு சம்பவத்தின் போது இந்தப் பண்பு வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. போத்திபாரின் மனைவி அவரை ஒழுக்கமற்ற நடத்தையில் ஈடுபடுத்த முயன்ற போது யோசேப்பு என்னே தன்னடக்கத்தை அப்பியாசித்தார்! (ஆதியாகமம் 39:7–9) மேலுமாக, மோசேயின் நியாயப்பிரமாண கட்டுப்பாடுகளின் காரணமாக பாபிலோனிய அரசனின் அருஞ்சுவை உணவை சாப்பிட மறுப்பதன் மூலம் தன்னடக்கத்தை அப்பியாசித்த நான்கு எபிரெய இளைஞர்களின் நேர்த்தியான முன்மாதிரியும்கூட இருக்கிறது.—தானியேல் 1:8–17.
3. தங்கள் நேர்த்தியான நடத்தைக்குப் பெயர் பெற்றவர்கள் யார்? என்ன அத்தாட்சியின்படி?
3 தன்னடக்கத்துக்கு நவீன நாளைய முன்மாதிரிகளுக்கு மொத்தமாக யெகோவாவின் சாட்சிகளை நாம் சுட்டிக் காண்பிக்க முடியும். “உலகிலேயே மிக நேர்த்தியான நடத்தையுள்ள ஒரு தொகுதி” என்பதாக நியு கேத்தலிக் என்சைக்ளோபீடியா கொடுத்த பாராட்டுக்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், “சாட்சிகள் வேதாகமத்திலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்களை மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிறார்கள்” என்பதாகச் சொன்னார். 1989-ல் வார்சாவில் நடைபெற்ற சாட்சிகளின் மாநாடு குறித்து, ஒரு போலந்து நாட்டு நிருபர் இவ்விதமாக எழுதினார்: “55,000 மக்கள் மூன்று நாட்களுக்கு ஒரு சிகரெட்டைகூட புகைக்கவில்லை! . . . மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டின் இந்தச் செயல், பக்தி கலந்த வியப்பில் என்னை ஆழ்த்தியது.”
கடவுளுக்குப் பயந்து தீமையை வெறுத்தல்
4. தன்னடக்கத்தை அப்பியாசிப்பதில் மிகப் பெரிய உதவிகளில் ஒன்று என்ன?
4 தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்வதில் மிகப் பெரிய உதவிகளில் ஒன்று கடவுள் பயமாகும். நம்முடைய அன்புள்ள பரம தகப்பனை விசனப்படுத்திவிடுவோமோ என்ற ஆரோக்கியமான அச்சமாக இது இருக்கிறது. வேதாகமம் அதைப் பல தடவைகள் குறிப்பிடும் உண்மையிலிருந்து, பெரும் மதிப்புள்ள கடவுள் பயம் நமக்கு எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிட இருந்த அந்தச் சமயத்தில் கடவுள் இவ்விதமாகச் சொன்னார்: “பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” (ஆதியாகமம் 22:12) சந்தேகமின்றி அந்தச் சமயத்தில் உணர்ச்சிகளின் அழுத்தம் அதிகளவில் இருந்ததன் காரணமாக ஆபிரகாம் தன் அருமை மகனைக் கொலை செய்வதற்குக் கத்தியை உயர்த்தும் அளவுக்கு கடவுளுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவருடைய பங்கில் மிகுதியான தன்னடக்கம் தேவையாக இருந்திருக்கும். ஆம், கடவுள் பயம் தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்யும்.
5. தன்னடக்கத்தை நாம் அப்பியாசிப்பதில் தீமையை வெறுப்பது என்ன பங்கை உடையதாக இருக்கிறது?
5 கடவுள் பயத்தோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப்பது தீமையை வெறுப்பதாகும். நீதிமொழிகள் 8:13-ல் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, NW] பயப்படும் பயம்.” தீமையை வெறுப்பதும்கூட தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்கிறது. மறுபடியும் மறுபடியுமாக வேதவசனங்கள் தீமையை வெறுக்கும்படியாக ஆம், அருவருக்கும்படியாக நமக்குச் சொல்லுகின்றன. (சங்கீதம் 97:10; ஆமோஸ் 5:14, 15; ரோமர் 12:9) தீமையானது அநேகமாக மகிழ்ச்சி தருவதாக, அத்தனை கவர்ச்சியூட்டுவதாக, அத்தனை வஞ்சிப்பதாக இருப்பதால், அதற்கு எதிராக நம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காக நாம் அறவே அதை வெறுத்திட வேண்டும். இப்படியாக தீமையை வெறுப்பது, தன்னடக்கத்தை அப்பியாசிப்பதற்கு நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்தி நமக்கு ஒரு பாதுகாப்பாக சேவிக்கிறது.
தன்னடக்கம், ஞானமுள்ள ஒரு போக்கு
6. தன்னடக்கத்தைக் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய சுயநலமான மனச்சாய்வுகளைக் கட்டுப்படுத்துவது ஏன் ஞானமான போக்காகும்?
6 இந்தப் பண்பை வெளிப்படுத்துவதிலிருக்கும் ஞானத்தை மதித்துணருவது தன்னடக்கத்தை நாம் கடைபிடிப்பதற்கு மற்றொரு பெரிய உதவியாகும். யெகோவா நம்முடைய சொந்த நன்மைக்காகவே தன்னடக்கத்தை அப்பியாசிக்கும்படி நம்மைக் கேட்கிறார். (ஏசாயா 48:17, 18 ஒப்பிடவும்.) தன்னடக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய தன்னல மனச்சாய்வுகளைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு ஞானமானது என்பதை காண்பிக்கும் ஏராளமான புத்திமதி அவருடைய வார்த்தையில் இருக்கின்றது. கடவுளுடைய மாற்றமுடியாத சட்டங்களை நாம் வெறுமென தட்டிக் கழித்துவிட முடியாது. அவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, 8) சாப்பிடுவதில் மற்றும் குடிப்பதில் தெளிவான ஓர் உதாரணம் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ குடித்தாலோ அநேக நோய்கள் வருகின்றன. தன்நலத்துக்கு இப்படியாக உடன்பட்டுவிடுவது சுயமரியாதையை ஒருவரிடமிருந்து பறித்துக் கொள்கிறது. அதைவிடவும் மேலாக, ஒரு நபர் மற்றவர்களோடு தன் உறவையும் சேதப்படுத்திக் கொள்ளாமல் சுயநலத்துக்கு உடன்பட்டுவிடமுடியாது. எல்லாவற்றிலும் வினைமையானது, தன்னடக்கமின்மை நம்முடைய பரம தகப்பனோடு நம்முடைய உறவை சேதப்படுத்திவிடுகிறது.
7. பைபிள் வாக்கியங்களில் காண்பிக்கப்பட்டபடி, நீதிமொழிகள் புத்தகத்தின் முக்கிய பொருள் என்ன?
7 ஆகவே, தன்னலம் தன்னையே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது என்பதை நமக்கு நாமே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். தன்னலம் பயனளிப்பதில்லை மற்றும் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது ஞானமுள்ள காரியம் என்பதே சுய–கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நீதிமொழிகள் புத்தகத்தின் முதன்மையான பொருளாகும். (நீதிமொழிகள் 14:29, 16:32) தீமையை வெறுமென தவிர்ப்பதைக் காட்டிலும் சுய கட்டுப்பாட்டில் அதிகம் உட்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும். சுயக்கட்டுப்பாடு அல்லது தன்னடக்கம், செய்வதற்கு கடினமாக இருக்கக்கூடிய சரியானதைச் செய்வதற்கும்கூட தேவைப்படுகிறது, ஏனென்றால் இது நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளுக்கு எதிராகச் செல்கிறது.
8. தன்னடக்கத்தை அப்பியாசிப்பது ஞானமான காரியம் என்பதை எந்த அனுபவம் உயர்த்திக் காண்பிக்கிறது?
8 வங்கி ஒன்றில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த யெகோவாவின் சாட்சியை, ஒரு மனிதன் தள்ளிக்கொண்டு முன்சென்றபோது நடந்த சம்பவம் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது ஞானமான காரியம் என்பதை விளக்குகிறது. சாட்சிக்கு அது சற்று எரிச்சலாக இருந்தபோதிலும் அவர் தன்னடக்கத்தை அப்பியாசித்தார். அதே நாளில் தானே, ஒரு சில ராஜ்ய மன்ற திட்டங்களுக்கு கையொப்பம் ஒன்றை பெறுவதற்காக அவர் ஒரு பொறியாளரிடம் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பொறியாளர் யாராக இருந்தார்? ஏன், வங்கியில் இவரை தள்ளிக்கொண்டு முன்சென்ற அதே மனிதன்! பொறியாளர் இவரை மிகவும் அன்பாக நடத்தியது மட்டுமல்லாமல் வழக்கமான கட்டணத்தில் பத்தில் ஒன்றுக்கும் குறைவாகவே விதித்தார். அந்த நாளின் ஆரம்பத்தில், தன்னடக்கத்தை அப்பியாசித்து எரிச்சலூட்டப்பட தன்னை அனுமதியாதிருந்தமைக்காக அந்தச் சாட்சி எவ்வளவு சந்தோஷமாயிருந்தார்!
9. ஊழியத்தில் தூஷணமான பிரதிபலிப்புகளை நாம் சந்திக்கையில் ஞானமான போக்கு என்ன?
9 மறுபடியும் மறுபடியுமாக நாம் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டு வீட்டுக்கு வீடு செல்கையிலோ அல்லது கடந்து செல்பவர்களை நம்முடைய செய்தியில் அக்கறைக் கொள்ளச் செய்யும் முயற்சியில் தெருவில் நின்றுக்கொண்டோ இருக்கையில், நாம் தூஷணமான பேச்சை எதிர்ப்படுகிறோம். ஞானமான போக்கு என்ன? இந்த ஞானமுள்ள கூற்று நீதிமொழிகள் 15:1-ல் கொடுக்கப்பட்டுள்ளது: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.” வேறு வார்த்தைகளில், சொன்னால், நாம் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது அவசியமாகும். இது உண்மையாக இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்ல, மற்றவர்களும்கூட கண்டிருக்கிறார்கள். தன்னடக்கத்திற்கு இருக்கும் சுகமளிக்கும் மதிப்பு மருத்துவ துறையினால் அதிகமதிகமாக மதித்துணரப்பட்டு வருகிறது.
தன்னலமற்ற அன்பு உதவுகிறது
10, 11. தன்னடக்கத்தை அப்பியாசிப்பதில் ஏன் அன்பு உண்மையான உதவியாக இருக்கிறது?
10 1 கொரிந்தியர் 13:4–8-ல் அன்பைப் பற்றிய பவுலின் விவரிப்பு, அதனுடைய வல்லமை தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவக்கூடும் என்பதைக் காட்டுகிறது. “அன்பு நீடிய சாந்தமுள்ளது.” நீடிய சாந்தமாயிருக்க, தன்னடக்கம் தேவைப்படுகிறது. “அன்புக்கு பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.” அன்பு என்ற பண்பு நம்முடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவும் பொறாமைக்கொள்ள, தன்னையே புகழ்ந்துக்கொள்ள அல்லது இறுமாப்பாயிருப்பதற்கான எந்த மனச்சாய்வையும் கட்டுப்படுத்திடவும் நமக்கு உதவி செய்கிறது. அன்பு அதற்கு எதிர்மாறாக இயேசு இருந்தது போல மனத்தாழ்மையுள்ளவர்களாகவும், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களாகவும் இருக்க நம்மை உந்துவிக்கிறது.—மத்தேயு 11:28-30.
11 அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது” [பண்பற்ற விதத்தில் நடந்து கொள்ளாது, NW] என்று பவுல் தொடர்ந்து சொல்கிறார். எல்லாச் சமயங்களிலும் பண்போடு நடந்துகொள்வதற்கும்கூட தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. அன்பு என்ற பண்பு பேராசையிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது, ‘நம்முடைய சொந்த அக்கறைகளை மட்டுமே நாடிக்கொண்டிராதபடி’ செய்கிறது. அன்பு “சினமடையாது.” மற்றவர்கள் சொல்லும் அல்லது செய்யும் காரியங்களால் சினமடைவது எத்தனை எளிதாக இருக்கிறது! ஆனால் தன்னடக்கத்தை அப்பியாசிக்கவும், நாம் பின்னால் மனஸ்தாபப்படக்கூடிய காரியங்களைச் சொல்லாமலும் அல்லது செய்யாமலும் இருக்க அன்பு நமக்கு உதவி செய்யும். அன்பு “தீங்கு நினையாது.” மனித இயல்பு மனவெறுப்புக்கு இடங்கொடுக்கும் அல்லது வன்மத்தை பேணி வளர்க்கும் மனச்சாய்வுடையது. ஆனால் அன்பு இப்படிப்பட்ட எண்ணங்களை நம்முடைய மனங்களிலிருந்து அகற்றிவிட நமக்கு உதவி செய்யும். அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாது.” ஆபாசமான இலக்கியம் அல்லது கீழ்த்தரமான தொலைக்காட்சி வர்த்தக நிகழ்ச்சிநிரல்கள் போன்ற அநியாயமான காரியங்களில் இன்பம் காணாதிருப்பதற்கு தன்னடக்கம் தேவைப்படுகிறது. அன்பு “சகலத்தையும் தாங்கும்.” அது “சகலத்தையும் சகிக்கும்.” காரியங்களைப் பொறுத்துக்கொண்டிருக்கவும், கடுஞ்சோதனையான அல்லது பாரமான காரியங்களை சகித்துக் கொண்டு அவைகள் நம்மைச் சோர்வடையச்செய்யவோ, அதேவிதமாக பழிவாங்கும்படி செய்விக்கவோ அல்லது யெகோவாவைச் சேவிப்பதை கைவிட விரும்பவோ செய்விக்க அனுமதியாதிருப்பதற்கு தன்னடக்கம் தேவையாகும்.
12. யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்குச் செய்திருக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் நம்முடைய போற்றுதலைக் காண்பிக்க ஒரு வழி என்ன?
12 நாம் உண்மையில் நம்முடைய பரம தகப்பனை நேசித்து, அவருடைய மகத்தான குணாதிசயங்களையும் அவர் நமக்காக செய்திருக்கும் அனைத்துக் காரியங்களையும் நாம் போற்றுவதாக இருந்தால், எல்லாச் சமயங்களிலும் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதன் மூலம் நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்புவோம். மேலுமாக, நம்முடைய ஆண்டவரும் எஜமானருமாகிய இயேசு கிறிஸ்துவை நாம் உண்மையில் நேசித்து அவர் நமக்காக செய்திருக்கும் அனைத்துக் காரியங்களையும் போற்றுவதாக இருந்தால், ‘நம்முடைய வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து பின்பற்றிக்’கொண்டிருக்கும்படியாக அவர் கொடுத்த கட்டளைக்கு நாம் செவிசாய்ப்போம். (மாற்கு 8:34) அது நிச்சயமாகவே நாம் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதைத் தேவைப்படுத்துகிறது. நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமாக நம்முடைய அன்பும்கூட, ஏதோ ஒரு தன்னலமான போக்கை மேற்கொள்வதன் மூலம் அவர்களைப் புண்படுத்துவதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும்.
விசுவாசமும் மனத்தாழ்மையும் உதவியாக
13. விசுவாசம் எவ்விதமாக தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்யக்கூடும்?
13 தன்னடக்கத்தை அப்பியாசிப்பதில் மற்றொரு பெரிய உதவி கடவுளிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் விசுவாசம் வைப்பதாகும். விசுவாசம், யெகோவாவை நம்பியிருக்கவும், காரியங்களைச் சரிசெய்ய அவருடைய உரிய காலத்துக்காக காத்திருக்கவும் நமக்கு உதவி செய்யும். ரோமர் 12:19-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதே குறிப்பைத் தான் இவ்விதமாகச் சொல்கிறார்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.” இந்த விஷயத்தில் மனத்தாழ்மையும்கூட நமக்கு உதவி செய்யும். நாம் மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருந்தால் கற்பனையான அல்லது உண்மையான தீங்கிழைப்பு குறித்து நாம் உடனடியாக கோபங் கொள்ளமாட்டோம். சொல்லப்போனால், துணிச்சலோடு சட்டத்தை நம்முடைய கையில் எடுத்துக்கொள்ள மாட்டோம், ஆனால், தன்னடக்கத்தை அப்பியாசித்து யெகோவாவுக்குக் காத்திருக்க நாம் மனமுள்ளவர்களாயிருப்போம்.—சங்கீதம் 37:1, 8 ஒப்பிடவும்.
14. தன்னடக்கம் வெகுவாக குறைவுபடுகிறவர்களாலும்கூட அது முயன்று அடையப்பெறலாம் என்பதை என்ன அனுபவம் காண்பிக்கிறது?
14 தன்னடக்கத்தை அப்பியாசிக்க நாம் கற்றுக்கொள்ளக்கூடும் என்பது முரட்டு சுபாவமுடைய ஒரு மனிதனை உட்படுத்திய ஓர் அனுபவத்தில் ஆழமாக மனதில் பதிய வைக்கப்பட்டது. ஏன், அவனும் அவனுடைய அப்பாவும், ஏற்படுத்திய கலகத்தின் காரணமாக போலீஸார் அழைக்கப்பட்ட போது, மற்றவர்கள் அவனைப் பிடிப்பதற்கு முன்பாக, அவன் மூன்று போலீஸாரை அடித்து வீழ்த்தி விட்டான். என்றபோதிலும், காலப்போக்கில், அவனுக்கு யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு ஏற்பட்டது, அவன் கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒன்றாகிய தன்னடக்கத்தை அப்பியாசிக்க கற்றுக்கொண்டான். (கலாத்தியர் 5:22, 23) இன்று 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த மனிதன் இன்னும் யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருகிறான்.
குடும்ப வட்டாரத்துக்குள் தன்னடக்கம்
15, 16. (எ) தன்னடக்கத்தை அப்பியாசிக்க ஒரு கணவனுக்கு எது உதவி செய்யும்? (பி) தன்னடக்கம் என்ன நிலைமையில் விசேஷமாக தேவைப்படுகிறது, என்ன அனுபவத்தில் இது தெரிகிறது? (சி) தன்னடக்கம் ஏன் ஒரு மனைவிக்கு அவசியமாயிருக்கிறது?
15 குடும்ப வட்டாரத்துக்குள் தன்னடக்கம் நிச்சயமாகவே தேவைப்படுகிறது. ஒரு கணவன் தன்னை நேசிப்பது போல தன் மனைவியை நேசிப்பது, அவன் தன் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களின் மீது அதிகமாக தன்னடக்கத்தை அப்பியாசிப்பதை தேவைப்படுத்தும். (எபேசியர் 5:28, 29) ஆம், கணவன்மார்கள் 1 பேதுரு 3:7-லுள்ள அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க தன்னடக்கம் தேவையாக உள்ளது: “அந்தப்படி புருஷர்களே, அறிவின்படி அவர்களோடே கூட வாழ்ந்து” வாருங்கள். விசேஷமாக தன் மனைவி விசுவாசியாக இல்லாத போது விசுவாசியான கணவன் தன்னடக்கத்தை அப்பியாசிப்பது அவசியமாக இருக்கும்.
16 இதை விளக்க: ஒரு மூப்பருக்கு மிகவும் சீறி விழுகிற சுபாவமுள்ள அவிசுவாசியான மனைவி இருந்தாள். என்றபோதிலும் அவர் தன்னடக்கத்தை அப்பியாசித்தார். இது அவருக்கு அவ்வளவு பிரயோஜனமாக இருந்ததன் காரணமாக அவருடைய மருத்துவர் அவரிடமாக இப்படியாகச் சொன்னார்: “ஜான், இயற்கையிலேயே நீங்கள் மிக மிக பொறுமையுள்ள மனிதனாக இருக்க வேண்டும். அல்லது உங்களுக்கு சக்திவாய்ந்த ஒரு மதம் இருக்க வேண்டும்.” நிச்சயமாகவே நமக்கு சக்திவாய்ந்த ஒரு மதம் இருக்கிறது, ஏனென்றால், “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2 தீமோத்தேயு 1:7) மேலுமாக, கணவன் விசுவாசியாக இல்லாதபோது, மனைவி அவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க அவளுடைய பங்கில் தன்னடக்கம் தேவையாக இருக்கிறது.—1 பேதுரு 3:1–4.
17. பெற்றோர்–பிள்ளை உறவில் ஏன் தன்னடக்கம் முக்கியமாயிருக்கிறது?
17 பெற்றோர்–பிள்ளை உறவிலும்கூட தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. தன்னடக்கமுள்ள பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கு பெற்றோர் தாமே முதலாவதாக ஒரு நல்ல முன்மாதிரியை வைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையான சிட்சை தேவைப்படும் போது அது எப்போதும் அமைதியோடும், அன்பிலும் கொடுக்கப்பட வேண்டும், இது மெய்யான தன்னடக்கத்தை தேவைப்படுத்துகிறது. (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21) மேலும், பிள்ளைகள் தாங்கள் தங்கள் பெற்றோரை உண்மையில் நேசிப்பதை காண்பிப்பதற்குக் கீழ்ப்படிதல் தேவைப்படுகிறது, கீழ்ப்படிவதற்கு நிச்சயமாகவே தன்னடக்கம் தேவையாகும்.—எபேசியர் 6:1–3; 1 யோவான் 5:3 ஒப்பிடவும்.
கடவுள் அருளும் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்
18–20. தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்யும் குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வதற்கு நாம் என்ன மூன்று ஆவிக்குரிய ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக் கொள்ள வேண்டும்?
18 கடவுள் பயத்திலும், தன்னலமற்ற அன்பிலும், விசுவாசத்திலும், தீமையை வெறுப்பதிலும், தன்னடக்கத்திலும் வளருவதற்கு, யெகோவா தேவன் அருளிச் செய்திருக்கும் எல்லா உதவிகளையும் நாம் அனுகூலப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்யக்கூடிய மூன்று ஆவிக்குரிய ஏற்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, ஜெபத்தின் விலையேறப்பெற்ற சிலாக்கியம் இருக்கிறது. ஜெபம் செய்ய முடியாதபடி நாம் அதிக வேலையுள்ளவர்களாக இருக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம். ஆம், நாம் “இடைவிடாமல் ஜெபம் பண்ண”வும், “ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்க”வும் விரும்ப வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:17; ரோமர் 12:12) தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்வதை ஒரு ஜெபத்தின் விஷயமாக ஆக்கிக்கொள்வோமாக. ஆனால் தன்னடக்கத்தை அப்பியாசிக்கத் தவறும்போது, மன்னிப்புக்காக நம்முடைய பரம தகப்பனிடம் மனம் வருந்தி வேண்டிக்கொள்வோமாக.
19 கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதிலிருந்தும், வேதாகமத்தைப் புரிந்து கொள்ளவும் பொருத்தவும் உதவி செய்யும் பிரசுரங்களிலிருந்தும், உதவியைப் பெற்றுக்கொள்வது தன்னடக்கத்தை வெளிப்படுத்துவதில் நமக்கு கிடைக்கும் இரண்டாவது உதவியாகும். பரிசுத்த சேவையின் இந்தப் பாகத்தை அசட்டை செய்வது மிக எளிதாகும். நாம் தன்னடக்கத்தை அப்பியாசித்து பைபிளையும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளித்து வருகின்றவற்றையும் வாசிப்பதைவிட வாசிப்பதற்கு அதிக முக்கியமான வேறு எதுவும் இருக்க முடியாது என்பதாக நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறாக, இதற்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத்தேயு 24:45–47) வாழ்க்கை ஒருபோதும் இதுவும் மற்றும் அதுவுமாக இருப்பதில்லை, ஆனால் இது அல்லது அதுவாகவே இருக்கிறது என்பதாக சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் உண்மையில் ஆவிக்குரிய ஆண்களும் பெண்களுமாக இருக்கிறோமா? நாம் நம்முடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருந்தால், டெலிவிஷனை நிறுத்திவிட்டு நம்முடைய கூட்டங்களுக்குத் தயார் செய்ய அல்லது அப்போதுதானே தபாலில் வந்துசேர்ந்த காவற்கோபுரம் பத்திரிகையை வாசிக்க தேவையான தன்னடக்கத்தை அப்பியாசிப்போம்.
20 மூன்றாவது, நம்முடைய சபை கூட்டங்களுக்கும் பெரிய அசெம்பிளிகளுக்கும், மாநாடுகளுக்கும் தகுதியான போற்றுதலைக் காண்பிக்கும் விஷயம் இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் அனைத்தும் நமக்கு முழுமையாக அவசியமாயிருக்கின்றனவா? பங்கெடுக்க தயாராக வந்து சந்தர்ப்பம் கிடைக்கையில் அவ்விதமாக நாம் செய்கிறோமா? நாம் நம்முடைய கூட்டங்களுக்குத் தகுதியான போற்றுதலைக் காண்பிக்கும் அந்த அளவில் தானே எல்லா சூழ்நிலைமைகளின் கீழும் தன்னடக்கத்தை அப்பியாசிக்கும் நம்முடைய தீர்மானத்தில் பலப்படுத்ததப்பட்டவர்களாக நாம் இருப்போம்.
21. ஆவியின் கனியாகிய தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் அனுபவிக்கக்கூடிய ஒரு சில வெகுமதிகள் யாவை?
21 எல்லா சமயங்களிலும் தன்னடக்கத்தை அப்பியாசிக்க கடினமாக முயற்சி செய்வதற்கு என்ன வெகுமதிகளை நாம் எதிர்பார்க்கலாம்? ஒரு காரியமானது, நாம் சுயநலத்தின் கசப்பான கனிகளை ஒருபோதும் அறுவடை செய்யமாட்டோம். நாம் சுய மரியாதையையும் சுத்தமான மனச்சாட்சியையும் கொண்டிருப்போம். எத்தனையோ தொந்தரவுகளிலிருந்து நாம் நம்மை காத்துக்கொண்டு, ஜீவனுக்குப் போகும் வழியில் நிலைத்திருப்போம். மேலும் மற்றவர்களுக்குச் சாத்தியமான மிகப் பெரிய நன்மையைச் செய்கிறவர்களாக இருப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக, நீதிமொழிகள் 27:11-க்கு நாம் செவிசாய்த்துக் கொண்டிருப்போம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” இதுவே நமக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வெகுமதியாகும்—நம்முடைய அன்புள்ள பரம தகப்பனாகிய யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் சிலாக்கியம்! (w91 11/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻கடவுள் பயம் எவ்விதமாக தன்னடக்கத்தை அப்பியாசிக்க நமக்கு உதவி செய்கிறது?
◻தன்னடக்கத்தை அப்பியாசிக்க அன்பு ஏன் நமக்கு உதவி செய்கிறது?
◻குடும்ப உறவுகளில் தன்னடக்கம் எவ்வாறு உதவுகிறது?
◻தன்னடக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் என்ன ஏற்பாடுகளை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
யோசேப்பு தவறிழைக்க தூண்டப்பட்டபோது தன்னடக்கத்தை அப்பியாசித்தான்
[பக்கம் 17-ன் படம்]
பிள்ளைக்கு அமைதியோடும் அன்பிலும் சிட்சை கொடுப்பதற்கு மெய்யான தன்னடக்கம் தேவைப்படுகிறது