உலகின் மிகப் பெரிய துறைமுகங்கள் ஒன்றில் பிரசங்கிக்கும் சவால்
ஐரோப்பாவின் அதிக சுறுசுறுப்பாக இருக்கும் ரைன் நதி வட கடலோடு சேரும் இடத்தில் ராட்டர்டாம் அமைந்திருக்கிறது, உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒரு துறைமுகமாக இருக்கும் தனிச்சிறப்புத் தன்மையை அது அனுபவிக்கிறது. 500 வித்தியாசமான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த கப்பல்கள் இங்கு வருவதால், உலக முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ராட்டர்டாம் நேரடியான இணைப்புகளை கொண்டிருக்கிறது. இது உண்மையிலேயே ஒரு சர்வதேச துறைமுகமாக இருக்கிறது.
என்றபோதிலும், இந்த 650 வருட பழமையான டச் துறைமுகம் கப்பல் பாதைகள் குறுக்கிடுமிடமாக மட்டுமல்லாமல், ஜனங்கள் ஒன்றாக சேரும் இடமாகவும் இருக்கிறது. உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் திரள் திரளாக மாலுமிகள் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வந்து கொண்டேயிருக்கின்றனர். நெதர்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கவனத்திலிருந்து இந்த மாலுமிகள் மறைந்துவிடவில்லை. மற்ற இடங்களில் இருக்கும் சாட்சிகளைப் போல், மாலுமிகள் உட்பட எல்லா வகையான ஆட்களுக்கும் கடவுளுடைய ராஜ்யம் விரைவில் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் என்ற உலகின் மிகச் சிறந்த செய்தியை பிரசங்கிப்பதற்கு பல்வேறு வழிகளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.—தானியேல் 2:44; லூக்கா 23:43; 1 தீமோத்தேயு 4:10.
“தலைக்கீழான மிஷனரி நியமனம்”
ராட்டர்டாம் துறைமுகம் முழுவதும் ஒவ்வொரு கப்பல் கப்பலாக வேலை செய்யும்படி நெதர்லாந்தில் உள்ள காவற்கோபுர சங்கம் பல வருடங்களுக்கு முன்பு ஆறு முழு நேர ஊழியர்களை அல்லது பயனியர்களைக் கேட்டுக்கொண்டது. பயனியர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஆர்வத்தோடு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் துறைமுக அதிகாரிகளிடமிருந்து செய்திக் குறிப்புகளை சேகரித்துக் கொண்டு, துறைமுகங்களை மேற்பார்வையிட்டனர், சவால்மிகுந்த ஒரு நியமனம் இருந்ததாக அவர்கள் உணர்ந்தனர்.
“தலைக்கீழான மிஷனரி நியமனம் போல இது இருக்கிறது” என்று துறைமுக பிரசங்க வேலையை ஒத்திசைவிக்கும் மினார்டு என்பவர் சொல்கிறார். அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்? “ஜனங்களை சென்று பார்ப்பதற்கு பொதுவாக ஒரு மிஷனரி நீண்ட பயணம் செய்கிறார், ஆனால் எங்களுடைய விஷயத்தில் எங்களிடம் வருவதற்கு ஜனங்கள் நீண்ட பயணம் செய்கின்றனர்.” “நாங்கள் பிரசங்கம் செய்யும் பிராந்தியம் உண்மையில் சர்வதேச பிராந்தியத்தைப் போன்று இருக்கிறது” என்று அவர் கூடுதலாக சொல்கிறார். இந்த விசேஷ வேலையை பயனியர்கள் ஆரம்பித்த வருடமாகிய 1983-ல், 71 வித்தியாசமான தேசங்களிலிருந்து 30,820 கப்பல்கள் ராட்டர்டாம் துறைமுகத்துக்கு வந்தன என்று 1985-ம் ஆண்டு வருடாந்தர புத்தகமாகிய ராட்டர்டாம் யூரோபோர்ட் குறிப்பிட்டது. அது நிச்சயமாகவே சர்வதேசமாக இருக்கிறது!
மாலுமிகள் பயனியர்களை “துறைமுக மிஷனரிகள்” என்று அழைக்க ஆரம்பித்தது பொருத்தமாகவே இருந்தது—அவர்களும் பல தேசங்களிலிருந்து வந்தவர்கள். கெர்ட், பீட்டர், அவருடைய மனைவி கேரன் ஆலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்; டானியேல், மினார்டு இந்தோனீஷியாவிலிருந்து வந்தவர்கள்; சாலமொன் எத்தியோப்பியன். அவர்களுடைய ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க முன்னோர் வழிமரபு எட்டு மொழி தடைகளையும் தாண்டிச் செல்கிறது, ஆனால் இந்த வேலையில் வெற்றியடைவதற்கு, அவர்கள் சமாளிக்க வேண்டிய மற்ற தடைகளும் இருந்தன.
“சைக்கிள் சர்ச்”
“நீங்கள் நேராக கப்பல்தளத்துக்கு நடந்துசென்று, பலகை-இணைப்பின் மீது ஏறி ஒரு கப்பலுக்குள் சென்றுவிட முடியாது” என்று 32-வயது பீட்டர் என்ற முன்னாள் மாலுமி சொல்கிறார். “பிராந்திய அனுமதி சீட்டு உங்களுக்கு தேவை.” கப்பல் தளத்துக்குள் நுழைவதற்கும், கப்பலுக்குள் செல்வதற்கும் அனுமதி சீட்டு தேவை என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. “விதிகளை அதிக கடுமையாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.” “ஆனால் எங்களுடைய போட்டோக்கள், அலுவலக முத்திரைகள் ஆகியவற்றைக் கொண்ட எட்டு அனுமதிச் சீட்டுகளை நாங்கள் பெற்ற பின்பு, எல்லாரும் வெளியே செல்வதற்கு தயாராக இருந்தோம்” என்று பீட்டர் சொல்கிறார். 37 கிலோமீட்டர் நீளமான துறைமுகத் தளங்களை மூன்று பகுதிகளாக அவர்கள் பிரித்தனர், ஒவ்வொரு பகுதியையும் இரண்டு பயனியர்கள் கவனித்துக்கொண்டனர்.
அநேக தேசங்களிலிருந்து வரும் மாலுமிகளால் பேசப்படும் ஏராளமான மொழிகளை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? 30 மொழிகளில் பைபிள் பிரசுரங்களை தங்களால் முடிந்த அளவு சைக்கிள்களில் பயனியர்கள் எடுத்துச் சென்றாலும் எப்போதுமே அது போதுமானதாக இருந்ததில்லை. “எந்த மொழி உங்களுக்கு தேவைப்படும் என்று ஒருபோதும் நிச்சயமாக தெரியாது” என்று 30 வயது சாலமோன் ஒரு புன்முறுவலோடு விவரமாக சொல்கிறார். “நீங்கள் கொண்டுவராத மொழியில் உள்ள புத்தகங்களை தான் மாலுமிகள் அடிக்கடி கேட்பார்கள், பிறகு அவர்களுடைய கப்பல் மூன்று மணிநேரங்களுக்குள் புறப்பட்டுவிடும் என்றும் சொல்வார்கள்.” மாலுமிகள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என்பதற்காக பயனியர்களில் ஒருவர் அவசரமாக சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து ஆர்வமுள்ள மாலுமிகளிடம் கொடுப்பார். “சைக்கிளில் மூன்று மணிநேரம் செல்லும் அளவுக்கு தூரமாயிருந்த சில துறைமுகப் பகுதிகளில் நாங்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்த போதும்கூட அதே பிரச்னை எழும்பியது. ஆகையால் இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கு மற்றொரு வழி எங்களுக்குத் தேவைப்பட்டது என்பது தெளிவாக இருந்தது” என்று பீட்டர் சொல்கிறார்.
துறைமுகப் பிராந்தியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற சில சாட்சிகள் ஒரு நாள் பயனியர்களை வியப்புக்குள் ஆழ்த்தினர். சைக்கிள் இழுத்துச் செல்லக்கூடிய இரண்டு வண்டிகளை அவர்களுக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு வண்டியும் ஓர் அலம்பும் தொட்டி அளவு இருந்தது. பயனியர்கள் கிடைக்கக்கூடிய மொழிகளில் உள்ள எல்லா பிரசுரங்களையும் வண்டிகளில் நிரப்பி, அவைகளை அவர்களுடைய சைக்கிள்களோடு கொக்கிகளைக் கொண்டு மாட்டி பின்னர் துறைமுகத்துக்குச் சென்றனர். விரைவில் அந்த வண்டிகள் பழக்கப்பட்ட காட்சியாக ஆகிவிட்டன. “நாங்கள் அங்கு இருக்கிறோம் என்பதைக் காட்டும் அடையாளமாக அவைகள் ஆகிவிட்டன” என்று பயனியர்களில் ஒருவர் சொல்கிறார். “வாசல் காவலன் நாங்கள் வருவதைக் கண்டால் தகவைத் திறந்து, உள்ளே செல்லலாம் என்பதைச் சொல்வதற்கு சைகைகள் காட்டி ‘அதோ செல்கிறது சைக்கிள் சர்ச்!’ என்று உரத்த குரலில் சொல்வான். மற்ற சமயங்களில் அவனுடைய பாதை வழியாக “சைக்கிள் சர்ச்” வருவதைக் காவலன் கவனித்தால், கதவைத் திறந்து, “இரண்டு போலந்து கப்பல்களும், ஒரு சீன கப்பலும் துறைமுகத்துக்கு வந்தொதுங்கியிருக்கின்றன!” என்று சொல்லுவான். இப்படிப்பட்ட உதவியான குறிப்புகள் சரியான மொழிகளில் பிரசுரங்களை கப்பலுக்குள் எடுத்துச் செல்வதற்கு பயனியர்களுக்கு உதவியது. ஆனால் அவர்கள் சரியான நேரத்திலும்கூட செல்ல வேண்டும். ஏன்?
காலத்திற்கேற்ற செய்தியோடு காலத்திற்கேற்ற சந்திப்புகள்
காலையிலும் மாலையிலும் காப்பி குடிப்பதற்கும், மதிய உணவு உண்பதற்கும் கப்பலோட்டிகளுக்கு இருக்கும் இடைவேளையில் தான் பயனியர்கள் அவர்களிடம் பேச முடியும். சமையல் செய்பவருக்கு வித்தியாசமான வேலை நேரங்கள் இருக்கும். கப்பற்குழு முதல்வரும் மற்ற அலுவலர்களும் பகல்நேரம் முழுவதும் இருப்பர். ராட்டர்டாமில் நங்கூரமிட்டு நிறுத்தும் பிரிட்டிஷ் கப்பல்கள் பிரிட்டிஷ் நேரத்தை கடைப்பிடிக்கும். (ஆலந்து நாட்டு நேரத்துக்கு ஒரு மணிநேர வித்தியாசம்) பிரிட்டிஷ் கப்பலோட்டிகள் அல்லாத மற்றவர்கள் வேலைக்குத் திரும்பும் போது, பிரிட்டிஷ் கப்பலோட்டிகள் உணவருந்தும் அறைக்குச் செல்வார். ஒரு துறைமுகப் பயனியருக்கு நம்பத்தக்க ஒரு கடிகாரம் தேவை என்பது தெளிவாக இருக்கிறது.
பைபிள் கலந்தாலோசிப்புகளுக்காக தங்கள் ஓய்வு நேரங்களை பயன்படுத்த மாலுமிகள் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனரா? “ராஜ்ய செய்தியினிடமாக அவர்கள் திறந்த மனமுள்ளவர்களாயிருக்கின்றனர்” என்று 31 வயது கெர்ட் சொல்கிறார். “மனித அரசாங்கங்களின் தோல்வியை அவர்கள் நேரடியாக பார்ப்பதன் காரணமாக இருக்கலாம்.” உதாரணமாக, பஞ்சத்தால் வாடிக்கொண்டிருக்கும் எத்தியோப்பியர்களுக்காக அவர்கள் கொண்டுவந்து இறக்கிய தானியங்கள் குவியல் குவியலாக இன்னும் அங்கேயே கிடந்தன. பல மாதங்களுக்குப் பின்பு அதே துறைமுகத்துக்கு அவர்கள் சென்ற போது தானியங்கள் கெட்டுப் போய், எலிகள் அவற்றில் இருப்பதையும் அவர்கள் கண்டதாக சில மாலுமிகள் கெர்ட்-யிடம் சொன்னார்கள். “அநேக மாலுமிகள் அரசியலில் நம்பிக்கையிழந்திருப்பது ஆச்சரியமாயில்லை” என்று கெர்ட் குறிப்பிடுகிறார். “ஆகையால் எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரே அரசாங்கம் என்ற பைபிளின் வாக்கு அவர்களுக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.”
பீட்டர் ஒத்துக்கொள்கிறார். “பத்து வருடங்களுக்கு முன்பு அவருடைய கப்பலோட்டிகள் என்னை கப்பலிலிருந்து வெளியேற்றியிருப்பார்கள், ஆனால் மாறிக்கொண்டேயிருக்கும் இன்றைய உலக நிலைமைகள் பைபிளிள் காலத்துக்குப் பொருத்தமான செய்தியில் அவர்களுடைய அக்கறையை தூண்டியிருக்கிறது என்று ஒரு ஜெர்மன் கப்பற்குழு முதல்வர் சொன்னார்.” ஒரு கொரியா கப்பலின் சமையல்காரர் இரான்-ஈராக் போரின் போது, அவர் வேலைசெய்துகொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் பெர்சிய வளைகுடாவில் ஏவுகணையால் தாக்கப்பட்டு கொழுந்துவிட்டு எறிய ஆரம்பித்தது என்று சொன்னார். தான் உயிரோடு இருந்தால் கடவுளுக்காக தேடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர் தப்பிப் பிழைத்தார். பயனியர்கள் பின்னர் அவரை ராட்டர்டாமில் சந்தித்த போது கொரியா மொழி பிரசுரங்கள் எல்லாவற்றையும் அவருக்குக் கொண்டுவரும்படியாக கேட்டுக்கொண்டார்.
அநேக கப்பல்கள் துறைமுகத்தில் பல நாட்கள் இருக்கும். வேலை நேரம் முடிந்த பின்பு, இரண்டு, மூன்று அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் பயனியர்கள் திரும்பவும் வந்து தங்கள் பைபிள் கலந்தாலோசிப்புகளை தொடர்ந்து செய்யும்படி இது அனுமதிக்கிறது. ஒரு கப்பலுக்கு இயந்திரக் கோளாறு இருந்தால், அது மூன்று வாரங்களுக்கு நங்கூரமிடப்பட்டு அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும். “அந்த நிறுவனத்துக்கு அது பாதகமானதாக இருக்கும், ஆனால் நம்முடைய வேலைக்கு அது நல்லது” என்று சிரித்துக் கொண்டே ஒரு பயனியர் குறிப்பிடுகிறார். பைபிள் கலந்தாலோசிப்புகளை தொடருவது மட்டுமல்லாமல், சங்கத்தின் ஸ்லைடு நிகழ்ச்சி ஒன்றையும் காண்பிக்க பயனியர்கள் உணவருந்தும் அறையில் ஏற்பாடு செய்கின்றனர், “பைபிள்—இந்தச் சந்ததிக்கான ஒரு புத்தகம்.” ராட்டர்டாமில் யெகோவாவின் சாட்சிகளின் அநேக அந்நிய நாட்டு-மொழி தொகுதிகளின் கூட்டங்களுக்கும்கூட சில மாலுமிகள் வருகின்றனர். கப்பல் இயந்திரங்கள் பழுதுபார்க்கப்படும் வரைதான் அவர்கள் கூட்டங்களுக்கு வருகின்றனர். பிறகு பைபிள்களை மூடிவிட வேண்டும். கப்பல் தளத்தோடு சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறுகள் கப்பல் செல்வதற்காக அவிழ்த்துவிடப்படுகின்றன, பிறகு கப்பல் துறைமுகத்திலிருந்து மறைந்துவிடுகிறது—ஆனால் பயனியர்களின் மனங்களிலிருந்து அல்ல.
உற்சாகமூட்டும் மாலுமி கதைகள்
செய்தித்தாள் பட்டியல்கள் அல்லது துறைமுக அதிகாரிகளின் பொது கம்ப்யூட்டர் அமைப்பு ஆகியவற்றின் மூலம் துறைமுகப் பயனியர்கள் அவர்கள் சென்று சந்தித்திருந்த கப்பல்கள் வருவதையும் போவதையும் குறித்த விவரங்களை தெரிந்து வைத்திருப்பர். அதில் ஒரு கப்பல் மறுபடியும் வந்தவுடனேயே, கடந்த சந்திப்பின் சமயத்திலிருந்து என்ன நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க பயனியர்கள் மாலுமிகளை திரும்பச் சென்று சந்திப்பதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர். என்னே உற்சாகமூட்டும் கதைகளை மாலுமிகள் சொல்கிறார்கள்!
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் பிரதிகளை ஒரு மாலுமி தன்னோடு கப்பலில் உடன்வேலை செய்யும் ஐந்து பேர்களிடம் அவருடைய கப்பல் கடலுக்குள் செல்ல ஆரம்பித்த பிறகு கொடுத்தார். அந்த ஆறு பேரும் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருந்தனர். குடும்ப வாழ்க்கையைப் பற்றிய அதிகாரத்தை அவர் ஆடியோ கேசட்டில் பதிவுசெய்து கப்பலோட்டிகள் அனைவரின் நன்மைக்காக உணவருந்தும் அறையில் அதை அவர் போட்டுக் காண்பித்தார். மற்றொரு கப்பலுக்குள், அருகாமையில் இருந்த அன்ட்வெர்ப் துறைமுகம் ராஜ்ய மன்றத்துக்கு சென்றிருந்த ஒரு மாலுமி உணவருந்தும் அறையின் சுவற்றில் “யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றம்” என்று பெரிய எழுத்துக்களில் விளம்பரப் பட்டிகையில் எழுதி வைத்திருந்தார். பின்பு அவர் பைபிள் கூட்டத்தை நடத்திய போது கப்பலோட்டிகளை அங்கு வரும்படி அழைத்தார். அந்த விளம்பர பட்டிகையை எடுப்பதற்கு முன் அடுத்த கூட்டத்துக்கு வரும்படி கப்பலோட்டிகளை அழைத்தார். அடுத்த வாரம் விளம்பரப் பட்டிகையும் கப்பலோட்டிகளும் அதே இடத்துக்கு வந்தனர்.
சில மாலுமிகள் தங்கள் புத்தகங்களை ஒருபுறமாக வைத்துவிடவில்லை என்பதையும் பயனியர்கள் கண்டுபிடித்தனர். “மேற்கு ஆப்பிரிக்க வானொலி அலுவலராக இருந்த ஐசக்கின் கப்பலறைக்குள் நாங்கள் சென்றபோது, ஓர் இருக்கையை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது” என்று மினார்டு சொல்கிறார். “சங்கத்தின் பத்திரிகைகள், புத்தகங்கள், கன்கார்டென்ஸ் எல்லா இடங்களிலும் காணப்பட்டன—அவைகள் திறந்தும் வைக்கப்பட்டிருந்தன.” பயனியர்களின் மறுசந்திப்புக்காக ஐசக் காத்திருந்ததன் காரணமாக பைபிள் கேள்விகள் பட்டியல் ஒன்றையும் அவர் தயாராக வைத்திருந்தார்.
சில மாலுமிகள் பயனியர்கள் அவர்களை வந்து சந்திக்கும் வரை காத்திருப்பதில்லை. ஒரு நாள் இரவு கெர்ட்டின் தொலைபேசி மணி அவர் உறங்குவதற்கு சென்ற பின்பு அடித்தது.
“இது யாராக இருக்கும்?” என்று சொல்லிக்கொண்டே அதை எடுப்பதற்காக கெர்ட் தட்டித் தடவிச் சென்றார்.
“ஹலோ, இது உங்களுடைய நண்பன்!” என்று ஒரு மகிழ்ச்சியான குரல் அறிவித்தது.
இது யாராக இருக்கக்கூடும் என்று கெர்ட் நினைவுபடுத்திப் பார்க்க முயற்சி செய்தார்.
“கப்பலிலிருந்து உங்களுடைய நண்பன்” என்று அந்தக் குரல் மறுபடியும் சொன்னது.
“இப்போது காலை மூன்று மணி!” என்று கெர்ட் சொன்னார்.
“ஆமாம், என்னுடைய கப்பல் ராட்டர்டாமுக்கு மறுபடியும் வந்தவுடனேயே உங்களிடம் தொடர்பு கொள்ளும்படி நீங்கள் சொன்னீர்கள். நான் இங்கு வந்துவிட்டேன்!” இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு, கடவுளுடைய வார்த்தையில் அக்கறை காண்பித்த இந்த நண்பனை சந்திக்க கெர்ட் புறப்பட்டார்.
‘உன் ஆகாரத்தை போடு’
கப்பலோட்டிகள் பயனியர்களுக்கு எழுதிய கடிதங்களிலும்கூட பைபிள் பிரசுரங்களுக்கான போற்றுதல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்கடிதங்களிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு:
‘நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். . . . முன்பு நான் புரிந்துகொள்ளாதிருந்த அநேக காரியங்களை நான் இப்போது புரிந்து கொள்கிறேன். எங்களுடைய கப்பல் ராட்டர்டாமுக்கு திரும்பி வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.’—ஆன்ஜலோ.
‘நான் புத்தகத்தை வாசித்தேன். உங்களுடைய கடிதங்களில் நீங்கள் பதிலளிப்பதற்காக நான் உங்களுக்கு கேள்விகளை அனுப்புகிறேன்.’—ஆல்பெர்டா.
‘நான் இப்போது பைபிளை தினமும் வாசிக்கிறேன். உங்களுடைய நண்பனாக இருப்பதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். என்னை கடவுளிடமாக வழிநடத்துகின்ற நண்பர்களை அடைந்திருப்பதுதானே என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிகச்சிறந்த காரியமாகும்.’—நிக்கி.
இருதயத்துக்கு அனலூட்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் பிரசங்கி 11:1-ல் பைபிள் சொல்லும் காரியத்தை பயனியர்களுக்கு நினைப்பூட்டுகிறது: “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.” சில மாலுமிகள் யெகோவாவுக்காக தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ளுகையில் விசேஷமாக அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
உதாரணமாக, ஸ்டானிஸ்லாவ் என்ற போலந்து நாட்டைச் சேர்ந்த மாலுமி சங்கத்தின் புத்தகங்களிலிருந்து அவர் கற்றறிந்து கொண்ட காரியங்களைக் குறித்து கிளர்ச்சியடைந்தார். அவர் விரைவாக பைபிள் பிரசுரங்கள் அடங்கிய ஒரு சிறிய நூலகத்தை முயன்று பெற்றுக்கொண்டார், கடலில் இருக்கும் போது அதில் ஒவ்வொன்றையும் படித்தார். “அவரிடமிருந்து திரும்பவும் நாங்கள் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட போது அவர் முழுக்காட்டுதல் பெற்று விட்டதாக எழுதியிருந்தார்,” என்று மினார்டு சொல்கிறார்.
ஃபோக்கர்ட் என்ற உள்நாட்டு கப்பல்தலைவன் ராட்டர்டாமில் ராஜ்ய செய்தியை முதலாவதாக கேள்விப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவர் துறைமுகத்துக்குத் திரும்ப வருவார், ஏழு நாட்கள் தொடர்ந்து பைபிளை படித்தார். மற்றொரு இரண்டு-மாத பயணத்துக்குப் புறப்படுவதற்கு முன்பு, அவருடைய கப்பல் செல்லும் மார்க்கத்திலிருக்கும் ராஜ்ய மன்றங்களின் விலாசங்களை பயனியர்கள் அவரிடம் கொடுத்தார்கள். ஃபோக்கர்ட் ராஜ்ய மன்றங்களுக்குச் சென்றார், அவர் பெற்றுக்கொண்ட அனலான வரவேற்பால் அவர் கவரப்பட்டார். அதற்குப் பிறகு விரைவில் இந்தத் தலைவன் முழுக்காட்டப்பட்டு, இப்போது யெகோவாவை வைராக்கியத்துடன் சேவித்து வருகிறார்.
மிக் என்ற பிரிட்டிஷ் கப்பற்படை அதிகாரிக்கு யெகோவாவின் சாட்சிகளோடு கொஞ்சம் தொடர்பு இருந்தது, அவர் கடலில் இருக்கும் போது பைபிளை படித்து வந்தார். ஒரு சமயம் அவருடைய போர்க்கப்பல் ராட்டர்டாமில் நிறுத்தப்பட்டிருந்த போது, அவர் தன்னுடைய மடக்கு சைக்கிளை ராஜ்யமன்றத்துக்குச் செல்ல உபயோகித்தார். அன்பையும் ஐக்கியத்தையும் அங்கே அவர் கண்ட போது அதிகமாக கவரப்பட்டார், தன்னுடைய வேலையைவிட்டு விடப்போவதாக தன் நண்பர்களிடம் சொன்னார். பெரும் தொகையான ஓய்வு ஊதியம் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும், அவர் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார், பின்னர் முழுக்காட்டப்பட்டார்.
மினார்டு சொல்கிறார்: “மிக், ஸ்டான்ஸ்லாவ், ஃபோக்கர்ட் மற்றும் அநேகரின் யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற ஆர்வம், அவர்களைப் போன்ற மாலுமிகளை துறைமுகம் முழுவதும் தொடர்ந்து தேட வேண்டும் என்று எங்களை உந்துவிக்கிறது.”
நீங்கள் ஒரு பங்கை கொண்டிருக்கக்கூடுமா?
உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றில் ஏறக்குறைய பத்தாண்டுகளாக பிரசங்கித்ததை சிந்தித்துப் பார்க்கையில், ஆறு “துறைமுக மிஷனரிகள்” இருதயப்பூர்வமாக இவ்வாறு ஒத்துக்கொள்கின்றனர்—வேலை பெரும் சவாலாக இருந்தது, என்றாலும் பலனளிக்கக்கூடியதாக இருந்தது. “ஒவ்வொரு நாளும் பிரசங்க வேலையை முடித்துவிட்ட பிறகு எங்களுடைய வருகைக்காக அந்த மாலுமிகளில் சிலர் காத்திருந்தனர் என்ற உணர்வோடு சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பி செல்வோம்,” என தொகுத்துக் கூறுகிறார் மினார்டு.
உங்களுடைய பிராந்தியத்தில் இருக்கும் துறைமுகத்தில் உங்களுடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் மாலுமிகள் யாராவது இருப்பார்களா? உங்களுடைய சபையில் இருக்கும் மூப்பர்கள் ஒருவேளை ஏற்பாடு செய்யலாம், அப்போது நீங்கள் இந்தச் சவால்மிகுந்த ஆனால் பலன்தரும் வேலையில் பங்குகொள்ளலாம். (w92 4/15)
[பக்கம் 20-ன் பெட்டி]
தடைசெய்யப்பட்ட பிராந்தியங்களைச் சென்றெட்டுதல்
ஒரு சமீப ஆண்டில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டிருக்கும் தேசங்களிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ராட்டர்டாமில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுக பயனியர்கள் பைபிள் செய்தியை இந்தப் பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இதை கருதினர்.
அவர்கள் விஜயம் செய்த ஆசிய கப்பல்களில் ஒன்றில், பயனியர்கள் மொத்தமாக கொண்டுவந்திருந்த 23 புத்தகங்களையும் அளித்துவிட, ஒரு சில கப்பலோட்டிகள் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்ள இயலாமல் ஏமாற்றமடைந்தார்கள். மற்றொரு ஆசிய கப்பலில் சமையலறையில் வேலை செய்யும் ஒரு பையன் அதிக ஜாக்கிரதையாயிருந்தான். பயனியரிடமிருந்து ஒரு புத்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு, அதை ஒரு பேப்பரில் சுற்றி ஒரு விலாசத்தோடு திருப்பிக்கொடுத்துவிட்டான். பயனியர் புரிந்துகொண்டார். புத்தகத்தை அவனோடு எடுத்துச்செல்வது அதிக ஆபத்தானதாக இருந்தது. அதே நாளில் அது தூர கிழக்குக்கு தபாலில் அனுப்பப்பட்டது.
ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு கப்பலில் ஒரு மாலுமி, அங்கே தேவைப்பட்ட புத்தகங்களின் ஒரு பட்டியலோடு வந்தார். அப்போது முதற்கொண்டு, ஒவ்வொரு சமயமும் மாலுமி வீடு திரும்பும் போது அவருடைய பெட்டியில் புத்தகங்கள் திணிக்கப்பட்டிருக்கும். மற்றொரு ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வரும் ஒரு மாலுமி, அவருக்குப் படிப்பு நடத்திக்கொண்டிருந்த பயனியரால் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தின் மூன்று பிரதிகளை மாத்திரமே கொடுக்க முடிந்தது குறித்து மிகவும் ஏமாற்றமடைந்தார். “அது ஒன்றுமேயில்லை!” என்பதாக நம்பிக்கையிழந்த மாலுமி தன் கைகளை தூக்கினார். “அங்குள்ள சகோதரர்களுக்கு 1,000 புத்தகங்கள் தேவை!” அவருடைய சொந்த பாதுகாப்புக்காக ஒரு சமயத்தில் 20 பிரதிகள் மாத்திரமே எடுத்துச் செல்லும்படி சொல்லி பயனியர்கள் அவரை இணங்கவைத்தார்கள்.
சாட்சிகள் அவர்களுடைய நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தப்பட்டு, அநேகர் தங்களுடைய வேலைகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டிருந்த ஒரு தேசத்திலிருந்து ஒரு கப்பல் வந்திருப்பதை பயனியர்கள் அறிந்தது தான் அதிகமாக நெகிழ வைக்கும் ஒரு சமயமாக இருந்தது. கப்பலிலிருந்த உணவுப்பொருள் துறை மேலாளர் ஒரு சாட்சி என்பதை அவர்கள் அறிந்துகொண்டபோது, அவர்கள் கப்பற்குழு முதல்வரை அழைத்து கப்பலில் நிவாரண உதவியை அனுப்ப அனுமதி கேட்டனர். கப்பற்குழு முதல்வர் ஒப்புக்கொண்டார், ஒரு சில நாட்களுக்குப் பின், துணிமணிகளும், காலணிகளும், மற்ற பொருட்களும் அடங்கிய நூறு பெரிய பைகள் அந்தத் தேசத்திலுள்ள சாட்சிகளுக்கு அனுப்பப்பட்டது.
[பக்கம் 21-ன் பெட்டி]
கப்பலுக்கு கப்பல் பிரசங்கித்தல்—ஒரு பெண்ணின் கருத்து
“மாலுமிகள் அநேகமாக முரடர்களாகவும் குடிவெறியர்களாகவும் இருப்பதைப் பற்றிய கதைகளை நான் கேள்விப்பட்டிருப்பதால் முதலில் நான் பீட்டரோடு செல்ல தயங்கினேன்,” என்று பயனியர்களின் மத்தியில் ஒரே பெண்ணாக இருந்த கேரன் நினைவுபடுத்தி சொல்கிறாள். “என்றபோதிலும், பெரும்பாலானவர்கள் அதிக மரியாதையாக இருப்பது இப்பொழுது எனக்குத் தெரிகிறது. அநேகமாக, நாங்கள் விவாகமான தம்பதி என்பதை ஒரு மாலுமி அறிய வந்தபின், அவர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படமொன்றை எடுத்து தன் குடும்பத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார். அவ்விதமாக, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தின் அநேக பிரதிகளை நாங்கள் அளித்துள்ளோம்.”
கணவன் மனைவியாக கப்பல்களுக்குள் செல்வது, கப்பலோட்டிகளின் மனைவிகளையும் சில சமயங்களில் செவிலியராக வேலைசெய்யும் மற்ற பெண்களையும் சந்திப்பதை எளிதாக்குகிறது. “பொதுவாக அவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் ஒதுங்கியே இருப்பார்கள்,” என்று கேரன் சொல்கிறாள். “ஆனால் என்னை அவர்கள் கவனிக்கும் போது, சம்பாஷணையில் ஈடுபட அதிக விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.”
அவளுடைய வேலையில் மிகப் பெரிய சவாலாக இருந்தது என்ன? “கயிற்றேணி,” என்று கேரன் பதிலளிக்கிறாள். “உறுதியில்லாத இந்தப் பொருட்களை நான் வெறுத்தேன்.” அவள் தன் பயத்தை மேற்கொண்டாளா? “ஆம். ஒரு சமயம் நான் ஏறத் தயங்கிய போது, பாரகுவேயிலிருந்து வந்த சில மாலுமிகள், ‘உங்களால் முடியும். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து ஏறுங்கள்,’ என்று சப்தமாக சொன்னார்கள். “அதற்கு மேலும் மேலே ஏறுவதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை,” என்று கேரன் சிரித்துக்கொண்டே சொல்கிறாள். அவளைப் பார்த்து பெருமைப்படும் அவள் கணவன் சொல்கிறார்: “நான்கு ஆண்டுகளாக பல கயிற்றேணிகளை ஏறிய பின்பு, அவள் இப்பொழுது ஒரு மாலுமியைப் போல அவற்றில் ஏறுகிறாள்.”
கேரனும் அவள் கணவன் பீட்டரும், ஐக்கிய மாகாணங்களில் 89-வது காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளிக்கு வந்திருந்தனர். 1990, செப்டம்பர் 28-ம் தேதி அவர்கள் துறைமுகத்தைக் கொண்ட ஒரு தேசமாகிய ஈக்குவடாருக்கு தங்கள் புதிய நியமனத்தோடு புறப்பட்டுச் சென்றார்கள். அது அவர்களுக்குப் பழக்கப்பட்ட சூழலாக இருக்கவேண்டும்.
[பக்கம் 22-ன் பெட்டி]
நீங்கள் ஒரு மாலுமியா?
உங்கள் கப்பல் உலகின் மிகப் பெரிய துறைமுகங்கள் ஒன்றில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆங்கில-மொழி கூட்டத்தில் ஆஜராயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் ராஜ்ய மன்ற விலாசங்களையும் கூட்டங்களின் நேரங்களையும் கொண்ட இந்தப் பட்டியலை கைவசம் வைத்திருங்கள்:
Hamburg, Schellingstr. 7-9; Saturday, 4:00 p.m.; phone: 040-4208413
Hong Kong, 26 Leighton Road; Sunday, 9:00 a.m.; phone: 5774159
Marseilles, 5 Bis, rue Antoine Maille; Sunday, 10:00 a.m.; phone: 91 79 27 89
Naples, Castel Volturno (40 km north of Naples), Via Napoli, corner of Via Salerno, Parco Campania; Sunday, 2:45 p.m.; phone: 081/5097292
New York, 512 W. 20 Street; Sunday, 10:00 a.m.; phone: 212-627-2873
Rotterdam, Putsestraat 20; Sunday, 10:00 a.m.; phone: 010-41 65 653
Tokyo, 5-5-8 Mita, Minato-ku; Sunday, 4:00 p.m.; phone: 03-3453-0404
Vancouver, 1526 Robson Street; Sunday, 10:00 a.m.; phone: 604-689-9796