எல்லா மெய் கிறிஸ்தவர்களும் சுவிசேஷகர்களாக இருக்க வேண்டும்
“சுவிசேஷகனுடைய (அல்லது மிஷனரி) வேலையைச் செய்.”—2 தீமோத்தேயு 4:5, அடிக்குறிப்பு.
1. முதல் நூற்றாண்டில் இருந்த சுவிசேஷகர்களால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி என்ன?
சுவிசேஷகனாக இருப்பது இன்று எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் ஒரு சுவிசேஷகனாக இருக்கிறீர்களா? “சுவிசேஷகன்” என்ற சொல் இயுயாஜலிஸ்டிஸ் (eu·ag·ge·li·stesʹ) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இது “நற்செய்தியை பிரசங்கிப்பவன்” என்று பொருள்படுகிறது. பொ.ச. 33-ல் கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட சமயத்திலிருந்து, கிறிஸ்தவ நற்செய்தி இரட்சிப்புக்கான கடவுளுடைய வழியை சிறப்பித்துக் காட்டியது. மனிதவர்க்கத்தின்மீது தம் ராஜ்ய ஆட்சியை ஆரம்பிப்பதற்கு இயேசு கிறிஸ்து பிற்பாடு ஒரு சமயம் திரும்ப வருவார் என்பதையும் அது அறிவித்தது.—மத்தேயு 25:31, 32; 2 தீமோத்தேயு 4:1; எபிரெயர் 10:12, 13.
2. (எ) நற்செய்தியில் உள்ள பொருளடக்கத்தின் மதிப்பு நம்முடைய நாளில் எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? (பி) எல்லா மெய் கிறிஸ்தவர்களுக்கும் இன்று என்ன கடமை இருக்கிறது?
2 இயேசு தம்முடைய வருகையைப் பற்றியும், காணக்கூடாத பிரசன்னத்தைப் பற்றியும் கொடுத்திருந்த அடையாளம் நிறைவேற்றமடைந்து கொண்டிருந்தது என்பதைக் குறித்து 1914-ம் ஆண்டு முதற்கொண்டு அத்தாட்சி அளவில் மிகுதியாக ஆக ஆரம்பித்தது. (மத்தேயு 24:3-13, 33) மறுபடியும், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,” என்ற சொற்றொடர் நற்செய்தியில் சேர்த்துக்கொள்ளப்படக்கூடும். (லூக்கா 21:7, 31; மாற்கு 1:14, 15) மத்தேயு 24:14-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் தீர்க்கதரிசனம் ஒரு மகத்தான நிறைவேற்றத்தை அடைவதற்கான காலம் உண்மையிலேயே வந்திருந்தது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” ஆகையால், ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு அது விரைவில் கொண்டு வரப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் வைராக்கியத்தோடு அறிவிப்பதை, நற்செய்தியை பிரசங்கிப்பது இப்போது உட்படுத்துகிறது. இவ்வேலையையும் “சீஷர்களை உண்டுபண்ணும்” வேலையையும் செய்யும்படி எல்லா கிறிஸ்தவர்களும் கட்டளையிடப்பட்டிருக்கின்றனர்.—மத்தேயு 28:19, 20; வெளிப்படுத்துதல் 22:17.
3. (எ) “சுவிசேஷகன்” என்ற சொல் என்ன கூடுதலான அர்த்தத்தை உடையதாயிருக்கிறது? (வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்), புத்தகம் 1, பக்கம் 770, பகுதி 2, பாரா 2 பார்க்கவும்.) (பி) இது என்ன கேள்விகளை எழுப்புகிறது?
3 பைபிள் நற்செய்தியை பொதுவாக பிரசங்கிப்பதைப் பற்றி சொல்வதோடு மட்டுமல்லாமல், நற்செய்தி இன்னும் பிரசங்கிக்கப்படாத இடங்களில் வேலை செய்வதற்கு தங்கள் பிறந்த இடங்களை விட்டு வருபவர்களைக் குறித்தும் “சுவிசேஷகன்” என்ற பதத்தை ஒரு விசேஷ கருத்தில் பைபிள் உபயோகிக்கிறது. பிலிப்பு, பவுல், பர்னபா, சீலா, தீமோத்தேயு போன்ற மிஷனரி சுவிசேஷகர்கள் அநேகர் முதல் நூற்றாண்டில் இருந்தனர். (அப்போஸ்தலர் 21:8; எபேசியர் 4:11) ஆனால் 1914 முதற்கொண்டு நம்முடைய விசேஷ காலத்தைப் பற்றியென்ன? மிஷனரி சுவிசேஷகர்களாகவும், உள்ளூர் சுவிசேஷகர்களாகவும் யெகோவாவின் ஜனங்கள் இன்று தங்களை அளித்திருக்கின்றனரா?
1919 முதற்கொண்டு முன்னேற்றம்
4, 5. 1914-ஆம் ஆண்டுக்கு சிறிது காலத்துக்குப் பின் சுவிசேஷ வேலைக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன?
4 முதல் உலக யுத்தம் 1918-ல் முடிவுக்கு வந்தபோது, விசுவாச துரோகிகள், கிறிஸ்தவமண்டல குருமார், அவர்களுடைய அரசியல் நண்பர்கள் ஆகியோரிடமிருந்து கடவுளுடைய ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட எதிர்ப்பை அனுபவித்தனர். உண்மையில், உண்மையான கிறிஸ்தவ சுவிசேஷ வேலை ஜூன் 1918-ல் ஏறக்குறைய முழு-நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது ஐக்கிய மாகாணங்களில் இருந்த உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமைதாங்கி வழிநடத்திய அலுவலர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் காரணமாக 20 வருடங்கள் சிறையிலடைக்கப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டனர். நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில் கடவுளுடைய எதிரிகள் வெற்றியடைந்தனரா?
5 எதிர்பாராதவிதமாக, மார்ச் 1919-ல் சங்கத்தின் அலுவலர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்படுவதற்கு காரணமாய் இருந்த பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்தும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கடவுளுடைய ராஜ்யத்தில் உடன் ராஜாக்களாக தங்கள் பரலோக வெகுமதியை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவதற்குமுன், தாங்கள் புதிதாக கண்டடைந்த சுயாதீனத்தோடு செய்வதற்கு இன்னும் வேலை அதிகம் இருந்தது என்று இந்த அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் உணர்ந்தனர்.—ரோமர் 8:17; 2 தீமோத்தேயு 2:12; 4:18.
6. சுவிசேஷ வேலை எவ்வாறு 1919-ம் ஆண்டுக்கும் 1939-ம் ஆண்டுக்கும் இடையே முன்னேற்றமடைந்தது?
6 நற்செய்தியை பரவச்செய்வதில் 4,000-க்கும் குறைந்தவர்களே பங்கெடுத்ததாக 1919-ல் அறிக்கை செய்தனர். அடுத்த இரண்டு பத்தாண்டுகளின்போது அநேக ஆண்கள் மிஷனரி சுவிசேஷகர்களாக தங்களை அளித்தனர். அதில் சிலர் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற தேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். 1939-க்குள், 20 வருடங்களாக ராஜ்ய பிரசங்கிப்பைச் செய்த பின், யெகோவாவின் சாட்சிகள் 73,000-க்கும் மேல் அதிகரித்தனர். மிகுந்த துன்புறுத்தலின் மத்தியிலும் சாதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, கிறிஸ்தவ சபையின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்தவற்றுக்கு ஒப்பாக இருந்தது.—அப்போஸ்தலர் 6:7; 8:4, 14-17; 11:19-21.
7 எனினும், அந்தச் சமயத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பான்மையர் ஆங்கிலம் பேசும் புராட்டஸ்டன்ட் தேசங்களில் மிகுதியாக இருந்தனர். உண்மையில், 73,000 ராஜ்ய பிரஸ்தாபிகளில் 75 சதவீதத்திற்கும் மேலானோர் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய தேசங்களில் இருந்தனர். பொ.ச. 47-ல் இருந்தது போல, பூமியில் குறைவாக வேலை செய்யப்பட்டிருந்த தேசங்களுக்கு அதிக கவனம் செலுத்தும்படி சுவிசேஷகர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏதோவொரு காரியம் தேவைப்பட்டது.
8. கிலியட் பள்ளி 1992-ம் ஆண்டுக்குள் எதை சாதித்தது?
8 பெரிய அதிகரிப்புக்காக தயார் செய்ய தம் ஊழியர்களை உந்துவிப்பதற்கு யெகோவாவின் வல்லமையான பரிசுத்த ஆவியை போர்க்கால தடைகளும், துன்புறுத்துதல்களும் நிறுத்த முடியவில்லை. இரண்டாம் உலக யுத்தம் 1943-ல் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, நற்செய்தியை அதிக விரிவாக பரவச்செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு கடவுளுடைய அமைப்பு உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளியை நிறுவியது. மார்ச் 1992-க்குள், இப்பள்ளி 6,517 மிஷனரிகளை 171 வித்தியாசமான தேசங்களுக்கு அனுப்பியிருந்தது. கூடுதலாக, அயல்நாடுகளில் இருந்த உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயங்களை கவனித்துக்கொள்வதற்கு ஆட்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். 1992-ல் உள்ளபடி 97 கிளைக்காரியாலய சேவைக் குழு ஒத்திசைவாளர்களில், 75 பேர் கிலியட் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
9. சுவிசேஷ வேலையின் முன்னேற்றத்திலும், சீஷரை உண்டுபண்ணும் வேலையின் வளர்ச்சியிலும் என்ன பயிற்சித் திட்டங்கள் ஒரு பங்கை வகித்திருக்கின்றன?
9 தங்கள் சுவிசேஷ வேலையை விரிவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் கிலியட் பள்ளி மட்டுமன்றி மற்ற பயிற்சி திட்டங்களும் யெகோவாவின் ஜனங்களை தகுதியாக்கியிருக்கின்றன. உதாரணமாக, தேவராஜ்ய ஊழியப் பள்ளி உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடைபெறுகிறது. பொது ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருப்பதற்கு இந்த ஏற்பாடும், அதோடு வாராந்தர ஊழியக்கூட்டமும் ஆயிரக்கணக்கான ராஜ்ய பிரஸ்தாபிகளை பயிற்றுவித்திருக்கின்றன. ராஜ்ய ஊழியப்பள்ளியும்கூட இருக்கிறது. இது வளர்ந்துவரும் சபைகளை நன்றாக கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் பெருமதிப்புவாய்ந்த பயிற்சி அளிக்கிறது. அநேக முழு-நேர சுவிசேஷகர்கள் தங்கள் பிரசங்க வேலையில் அதிக திறம்பட்டவர்களாக ஆவதற்கு பயனியர் சேவை பள்ளி உதவியிருக்கிறது. நவீன-நாளைய தீமோத்தேயுக்களாக ஆவதற்கு திருமணமாகாத மூப்பர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் உதவி செய்ய சமீபத்தில் ஊழிய பயிற்சி பள்ளி வித்தியாசமான தேசங்களில் நடைபெற்றது.
10. கடவுளுடைய அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட எல்லா சிறந்த பயிற்சியின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? (பெட்டியில் உள்ள தகவலை சேர்த்துகொள்ளுங்கள்.)
10 இந்த எல்லா பயிற்சியின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? 1991-ல் யெகோவாவின் சாட்சிகள் 212 தேசங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ராஜ்ய அறிவிப்பாளர்கள் என்ற உச்சநிலையை அடைந்தனர். 1939-ல் இருந்த நிலைமையைப் போன்று இல்லாமல், இவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், ஆங்கிலம் முக்கிய மொழியாக இல்லாத கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், கிறிஸ்தவமல்லாத அல்லது மற்ற தேசங்களில் வாழ்பவர்கள்.—“1939 முதற்கொண்டு அதிகரிப்பு” என்ற பெட்டியைப் பாருங்கள்.
வெற்றி ஏன்
11. ஓர் ஊழியனாக தன்னுடைய வெற்றியை அப்போஸ்தலனாகிய பவுல் யாருக்கு கொடுத்தார்?
11 இந்த அதிகரிப்புக்கு புகழை யெகோவாவின் சாட்சிகள் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, அப்போஸ்தலனாகிய பவுல் நோக்கினவிதமாகவே அவர்கள் தங்கள் வேலையை நோக்குகின்றனர். இதைப் பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதின தன் கடிதத்தில் விளக்கினார். “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர் தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 3:5-7, 9.
12. (எ) வெற்றிகரமான கிறிஸ்தவ சுவிசேஷ வேலையில் கடவுளுடைய வார்த்தை என்ன பங்கை வகிக்கிறது? (பி) கிறிஸ்தவ சபையின் தலைவராக யார் நியமிக்கப்பட்டிருக்கிறார், அவருடைய தலைமை ஸ்தானத்துக்கு நம்முடைய கீழ்ப்படிதலை வெளிக்காட்ட ஒரு முக்கியமான வழி என்ன?
12 யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி கடவுளுடைய ஆசீர்வாதத்தினால்தான் என்பதில் சந்தேகமில்லை. இது கடவுளுடைய வேலை. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக படிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். தங்கள் சுவிசேஷ வேலையில் கற்பிக்கும் எல்லாக் காரியங்களையும் பைபிளை அடிப்படையாக வைத்து போதிக்கின்றனர். (1 கொரிந்தியர் 4:6; 2 தீமோத்தேயு 3:16) சபையின் தலைவராக கடவுள் நியமித்திருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் முழுவதுமாக அங்கீகரிப்பது, அவர்கள் வெற்றிகரமாக சுவிசேஷ வேலையை செய்வதற்கு மற்றொரு திறவுகோலாகும். (எபேசியர் 5:23) இயேசு நியமித்த அப்போஸ்தலர்களோடு ஒத்துழைப்பதன் மூலம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதைக் காண்பித்தனர். அந்த அப்போஸ்தலர்களும், எருசலேம் சபையில் இருந்த மற்ற மூப்பர்களும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ ஆளும் குழுவில் அடங்கியிருந்தனர். விவாதங்களை தீர்ப்பதற்கும், சுவிசேஷ வேலைக்கு வழிநடத்துதல் கொடுப்பதற்கும் இந்த முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் அடங்கிய தொகுதியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து உபயோகித்தார். இந்தத் தெய்வீக ஏற்பாட்டோடு பவுல் வைராக்கியமாய் ஒத்துழைத்தது, அவர் விஜயம் செய்த சபைகளில் அதிகரிப்பு ஏற்படுவதில் விளைவடைந்தது. (அப்போஸ்தலர் 16:4, 5; கலாத்தியர் 2:9) அதே போல் இன்று, கடவுளுடைய வார்த்தையை இறுகப் பற்றிக்கொண்டிருப்பதன் மூலமும், ஆளும் குழுவிலிருந்து வரும் வழிநடத்துதலோடு வைராக்கியமாய் ஒத்துழைப்பதன் மூலமும் கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் தங்கள் ஊழியத்தில் வெற்றியடைவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றனர்.—தீத்து 1:9; எபிரெயர் 13:17.
மற்றவர்களை மேன்மையானவர்களாக கருதுதல்
13, 14. (எ) பிலிப்பியர் 2:1-4-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி அப்போஸ்தலனாகிய பவுல் என்ன புத்திமதியைக் கொடுத்தார்? (பி) சுவிசேஷ வேலையில் பங்குகொள்கையில் இந்தப் புத்திமதியை நினைவில் வைப்பது ஏன் முக்கியமானது?
13 சத்தியத்தை தேடுவோர்மீது அப்போஸ்தலனாகிய பவுல் உண்மையான அன்பைக் காண்பித்தார். அவர் மேட்டிமையான மனநிலையையோ இன வேறுபாட்டுணர்ச்சி மனநிலையையோ காண்பிக்கவில்லை. எனவே, ‘மற்றவர்களை மேன்மையானவர்களாக எண்ணும்படி’ அவர் தன் உடன் விசுவாசிகளுக்கு புத்திமதி கொடுக்க முடிந்தது.—பிலிப்பியர் 2:1-4.
14 அதே போன்று, வித்தியாசமான இனங்கள், பின்னணிகளையுடைய ஜனங்களோடு தொடர்புகொள்ளும்போது, இன்றிருக்கும் மெய் கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் தங்களைக் குறித்து உயர்வான எண்ணம் உடையவர்களாயில்லை. ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாக வேலை செய்யும்படி அனுப்பப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் மேன்மையானவர்கள் அல்ல என்பதை நான் அறிந்திருக்கிறேன். நம்மிடம் அதிக பணமும், வழக்கமான கல்வியும் ஒருவேளை இருக்கலாம். ஆனால் நம்முடைய பண்புகளைக் காட்டிலும் அதிக மேம்பட்ட குணங்களை அவர்கள் [உள்ளூர் ஜனங்கள்] உடையவர்களாயிருக்கின்றனர்.”
15. அயல்நாடுகளில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டிருப்பவர்கள் எதிர்கால சீஷர்களிடம் உண்மையான மரியாதையை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
15 நற்செய்தியை நாம் பகிர்ந்துகொள்பவர்களோடு உண்மையான மரியாதையைக் காண்பிப்பதன் மூலம், பைபிளின் செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் அதை சுலபமாக்குவோம். உதவி செய்வதற்கென்று தான் நாடிச் சென்றிருக்கும் ஜனங்கள் மத்தியில் வாழ்வதற்கு தான் சந்தோஷப்படுகிறார் என்பதை ஒரு மிஷனரி சுவிசேஷகர் காண்பிப்பதும்கூட உதவியாயிருக்கும். ஆப்பிரிக்காவில் கடந்த 38 வருடங்களை செலவழித்த ஒரு வெற்றிகரமான மிஷனரி இவ்வாறு விளக்குகிறார்: “இது என்னுடைய வீடு என்பதை நான் எனக்குள் ஆழமாக உணருகிறேன். நான் அனுப்பப்பட்டிருக்கும் சபையில் உள்ளவர்கள் என்னுடைய சகோதரர்களும், சகோதரிகளும் ஆவர். விடுமுறைக்காக நான் கனடா திரும்பி சென்றபோது நான் என் வீட்டில் இருப்பதைப் போன்று உணரவில்லை. கனடாவில் இருந்த கடைசி வாரத்தின்போது நான் அனுப்பப்பட்டிருந்த இடத்துக்கு திரும்பி வருவதற்கு ஆவலுள்ளவனாய் இருந்தேன். நான் எப்போதும் அவ்வாறே உணருகிறேன். மறுபடியும் திரும்பி வந்ததற்கு நான் சந்தோஷப்படுகிறேன் என்று நான் என் பைபிள் மாணாக்கர்களிடத்திலும், சகோதர, சகோதரிகளிடத்திலும் சொல்வேன். நான் அவர்களோடு இருக்க விரும்புகிறேன் என்பதை அவர்கள் போற்றுகிறார்கள்.”—1 தெசலோனிக்கேயர் 2:8.
16, 17. (எ) அநேக மிஷனரிகளும், உள்ளூர் சுவிசேஷகர்களும் தங்கள் ஊழியத்தில் அதிக திறம்பட்டவர்களாக இருப்பதற்கு என்ன சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்? (பி) உள்ளூர் மொழியில் பேசியதன் காரணமாக ஒரு மிஷனரி என்ன அனுபவத்தைக் கொண்டிருந்தார்?
16 தங்கள் உள்ளூர் பிராந்தியங்களில் பிற மொழி பேசும் பெரும் பகுதியை அவர்கள் கண்டுபிடித்தால், அம்மொழியை கற்றுக்கொள்வதற்கு சிலர் முயற்சி செய்திருக்கின்றனர். மற்றவர்களை அவர்கள் மேன்மையானவர்களாக கருதுகின்றனர் என்பதை இதன் மூலம் அவர்கள் காண்பிக்கின்றனர். “தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க பின்னணியை உடைய ஜனங்களுக்கும் ஐரோப்பிய பின்னணியை உடைய ஜனங்களுக்கும் இடையே சில சமயங்களில் அவநம்பிக்கையான உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நாங்கள் உள்ளூர் மொழியில் பேசுவது இவ்வுணர்ச்சியை விரைவாக நீக்கிவிடுகிறது,” என்று ஒரு மிஷனரி சொல்கிறார். நற்செய்தியை நாம் பகிர்ந்துகொள்ளும் ஜனங்களிடம் அவர்களின் மொழியை பேசுவது, அவர்களுடைய இருதயங்களை சென்றெட்டுவதற்கு ஒரு பெரும் உதவியாய் இருக்கிறது. அது கடின உழைப்பையும், மனத்தாழ்மையோடு தொடர்ந்து உறுதியாக இருப்பதையும் தேவைப்படுத்துகிறது. ஓர் ஆசிய தேசத்தில் இருக்கும் ஒரு மிஷனரி இவ்வாறு விளக்குகிறார்: “தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டும், அத்தவறுகளை பார்த்து மற்றவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டு இருப்பதையும் தாங்கிக்கொள்வது ஒரு பரீட்சையாக இருக்கலாம். அதை விட்டு போய் விடுவது சுலபமானதாக தோன்றலாம்.” என்றாலும், கடவுள்பேரிலும் அயலான்பேரிலும் இருக்கும் அன்பு இந்த மிஷனரி விடாமுயற்சியுடன் இருப்பதற்கு உதவி செய்தது.—மாற்கு 12:30, 31.
17 அயல்நாட்டவர் ஒருவர் தங்களுடைய மொழியில் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கையில் ஜனங்களின் உணர்ச்சிகள் நல்ல விதத்தில் பாதிக்கப்படுகின்றன என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. சில சமயங்களில் அது எதிர்பாராத ஆசீர்வாதங்களில் விளைவடைகிறது. லெசோத்தோ என்ற ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு மிஷனரி சோத்தோ மொழியில் ஒரு திரைச்சீலை கடையில் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். வேறொரு ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வந்த ஓர் அரசாங்க மந்திரி அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நடைபெற்றுக்கொண்டிருந்த உரையாடலை தற்செயலாகக் கேட்டார். பின்பு அவர் அந்த மிஷனரியிடம் வந்து அவரை பாராட்டினார். அப்போது அந்த மிஷனரி அரசாங்க மந்திரியிடம் அவருடைய சொந்த மொழியிலேயே பேச ஆரம்பித்தார். “உங்களுக்கு ஸ்வாஹிலியும் தெரிந்திருப்பதால் நீங்கள் ஏன் [என் தேசத்துக்கு] வந்து எங்களுடைய ஜனங்கள் மத்தியில் வேலை செய்யக்கூடாது?” என்று அவர் கேட்டார். சாதுரியமாக அந்த மிஷனரி பதிலளித்தார்: “அது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் நான் ஒரு யெகோவாவின் சாட்சி. இப்போது எங்களுடைய வேலை உங்களுடைய தேசத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.” மந்திரி சொன்னார்: “நாங்கள் அனைவரும் உங்களுடைய வேலையை எதிர்க்கிறோம் என்று தயவுசெய்து எண்ணாதீர்கள். எங்களில் அநேகர் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறோம். என்றாவது ஒரு நாள் நீங்கள் எங்களுடைய ஜனங்கள் மத்தியில் எவ்வித தடையுமின்றி கற்பிக்க முடியும்.” அதற்கு சிறிது காலத்துக்குப் பின்னர், அந்தத் தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு வணக்க சுயாதீனம் அளிக்கப்பட்டதைக் கேட்டபோது அந்த மிஷனரி கிளர்ச்சியடைந்தார்.
உரிமைகளை விட்டுக்கொடுக்க விருப்பமுள்ளவர்களாய் இருத்தல்
18, 19. (எ) பவுல் தன் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை என்ன முக்கியமான வழியில் பார்த்து பின்பற்ற முயற்சி செய்தார்? (பி) நற்செய்தியை நாம் பகிர்ந்துகொள்ளும் ஆட்கள் இடறலடையச் செய்யும் எந்தக் காரணத்தையும் தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் காண்பிப்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள். (பாராவில் உள்ள அனுபவத்தையாவது அல்லது உங்களுடைய சொந்த அனுபவத்தையாவது சொல்லுங்கள்.)
18 “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபோது, மற்றவர்களை இடறலடையச் செய்வதை தவிர்க்கவேண்டிய அவசியத்தைக் குறித்து அவர் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறது போல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.”—1 கொரிந்தியர் 10:31-33; 11:1.
19 பவுலைப் போன்ற சுவிசேஷகர்கள், தாங்கள் பிரசங்கிக்கும் ஜனங்களின் நன்மைக்காக தியாகங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருப்பதால் ஆசீர்வாதங்களை பெறுகின்றனர். உதாரணமாக, ஓர் ஆப்பிரிக்க தேசத்திலே ஒரு மிஷனரி தம்பதி தங்கள் திருமண ஆண்டு நிறைவுநாளை கொண்டாடுவதற்கு ஓர் உள்ளூர் ஹோட்டலுக்கு விருந்துண்ணச் சென்றனர். மிதமாக மதுபானம் உபயோகிப்பது பைபிளில் கண்டனம் செய்யப்பட்டில்லாததால், முதலில் அவர்கள் உணவோடு மது கொண்டு வரும்படி சொல்லலாம் என்று நினைத்தனர். (சங்கீதம் 104:15) ஆனால் அவ்வாறு செய்வது உள்ளூர் ஜனங்களின் உணர்ச்சிகளை புண்படுத்திவிடுமோ என்பதனால் அது வேண்டாம் என்று இந்தத் தம்பதி தீர்மானித்தனர். “அதற்குப் பின்னால் ஒரு சமயம் நாங்கள் அந்த ஹோட்டலில் தலைமைச் சமையற்காரனாக இருந்த ஒரு மனிதனை சந்தித்து அவரோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம்,” என்று கணவர் நினைவுபடுத்திக் கூறுகிறார். “அதிக காலம் கழித்து அவர் எங்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘விருந்துண்பதற்காக எங்கள் ஹோட்டலுக்கு நீங்கள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாங்கள் அனைவரும் சமயலறை கதவுக்குப் பின்னாலிருந்து உங்களை கவனித்துக் கொண்டிருந்தோம். மதுபானம் அருந்துவது தவறு என்று சர்ச் மிஷனரிகள் எங்களிடம் சொல்லியிருந்தார்கள். இருந்தாலும், அவர்கள் ஹோட்டலுக்கு வரும்போது தாராளமாக மதுபானம் கொண்டு வரும்படி சொல்வார்கள். ஆகையால் நீங்கள் ஏதாவது மதுபானம் கொண்டு வரும்படி சொன்னால், பிரசங்கிப்பதற்காக எங்களிடம் நீங்கள் வரும்போது உங்களுக்கு நாங்கள் செவிகொடுக்க மாட்டோம் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம்.” இன்று அந்த தலைமைச் சமையற்காரரும், அந்த ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த மற்ற சிலரும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாய் இருக்கின்றனர்.
செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது
20. வைராக்கியமுள்ள சுவிசேஷகர்களாக நாம் சகித்திருப்பது ஏன் முக்கியமானது, என்ன சந்தோஷமான சிலாக்கியத்தை அநேகர் ஆவலுடன் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்?
20 இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு விரைவாக நெருங்கி வந்து கொண்டிருக்கையில், நற்செய்தியை கேட்பதற்கு இன்னும் அநேகர் அதிக ஆர்வமாயிருக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவனும் உண்மையுள்ள சுவிசேஷகனாக சகித்திருப்பது எப்போதும் இருந்ததைவிட அதிக அவசரமானதாய் இருக்கிறது. (மத்தேயு 24:13) பிலிப்பு, பவுல், பர்னபா, சீலா, தீமோத்தேயு ஆகியோரைப் போன்று ஒரு விசேஷித்த விதத்தில் சுவிசேஷகனாக ஆவதன் மூலம் நீங்கள் இந்த வேலையில் உங்களுடைய பங்கை அதிகரிக்க முடியுமா? பயனியர்களின் அணியில் சேர்ந்துகொள்வதன் மூலமும், தேவை அதிகமாயிருக்கும் இடங்களில் சேவை செய்வதற்கு தங்களை அளிப்பதன் மூலமும் அநேகர் அதே போன்று செய்கின்றனர்.
21. எந்த விதத்தில் “பெரிதும் அநுகூலமுமான கதவு” யெகோவாவின் ஜனங்களுக்கு திறக்கப்பட்டிருக்கிறது?
21 யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை முன்பு தடை செய்யப்பட்டிருந்த ஆப்பிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா ஆகிய தேசங்களில் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக பெரிய பிராந்தியங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுலின் விஷயத்தில் இருந்தது போல, “பெரிதும் அநுகூலமுமான கதவு” யெகோவாவின் ஜனங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 16:9) உதாரணமாக, சமீபத்தில் மொசாம்பிக் என்ற ஆப்பிரிக்க தேசத்துக்கு வந்திருக்கும் மிஷனரி சுவிசேஷகர்களுக்கு எல்லா ஜனங்களோடும் பைபிளைப் படிப்பதற்கு நேரம் போதுமானதாய் இல்லை. அந்தத் தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை பிப்ரவரி 11, 1991-ல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதைக் குறித்து நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்!
22. நம்முடைய உள்ளூர் பிராந்தியம் நன்றாக வேலை செய்யப்பட்டிருந்தாலும் அல்லது செய்யப்படாமலிருந்தாலும் என்ன செய்ய நாம் அனைவரும் தீர்மானமாயிருக்க வேண்டும்?
22 வணக்க சுயாதீனம் நமக்கு எப்போதுமே இருந்திருக்கும் தேசங்களிலும்கூட நம்முடைய சகோதரர்கள் தொடர்ந்து அதிகரிப்புகளை அனுபவித்து வருகின்றனர். ஆம், நாம் எங்கே வாழ்ந்துகொண்டிருந்தாலும் “கர்த்தருடைய கிரியையிலே செய்வதற்கு அதிகம்,” இன்னும் இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:58) நிலைமை அவ்வாறு இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் ‘சுவிசேஷகனுடைய வேலையைச் செய்து, ஊழியத்தை நிறைவேற்றுகையில்’ எஞ்சியிருக்கும் காலத்தைத் தொடர்ந்து ஞானமாக உபயோகிப்போமாக.—2 தீமோத்தேயு 4:5; எபேசியர் 5:15, 16.
நீங்கள் விளக்க முடியுமா?
◻ சுவிசேஷகன் என்பவர் யார்?
◻ நற்செய்தியில் உள்ள பொருளடக்கத்தின் மதிப்பு 1914-க்குப் பிறகு எவ்வாறு உயர்த்தப்பட்டது?
◻ சுவிசேஷ வேலை 1919 முதற்கொண்டு எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது?
◻ சுவிசேஷ வேலையின் வெற்றிக்கு என்ன முக்கிய காரணக்கூறுகள் உதவியளித்திருக்கின்றன?
7. கிறிஸ்தவ சுவிசேஷ வேலையைக் குறித்ததில் பொ.ச. 47-லும், 1939-லும் என்ன ஒரேமாதிரியான நிலைமை இருந்தது?
[பக்கம் 19-ன் பெட்டி]
1939 முதற்கொண்டு அதிகரிப்பு
கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகள் அனுப்பப்பட்டிருக்கும் மூன்று கண்டங்களிலிருந்து வரும் உதாரணங்களை சிந்தித்துப் பாருங்கள். 1939-ல் 636 ராஜ்ய பிரஸ்தாபிகள் மட்டுமே மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அறிக்கை செய்தனர். 1991-க்குள் இந்த எண்ணிக்கை மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் 12 தேசங்களில் 2,00,000-க்கும் மேல் அதிகரித்தது. தெற்கு அமெரிக்க தேசங்களில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளுக்கும்கூட மிஷனரிகள் பங்களித்திருக்கின்றனர். அவற்றில் ஒரு தேசம் பிரேசில். அங்கு 1939-ல் 114 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தனர். ஏப்ரல் 1992-ல் 3,35,039 பிரஸ்தாபிகளாக அதிகரித்தனர். ஆசியாவில் இருந்த நாடுகளிலும் அதே போன்ற வளர்ச்சி மிஷனரிகள் வந்ததை பின்தொடர்ந்து ஏற்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, ஜப்பானில் இருந்த சிறு எண்ணிக்கையான யெகோவாவின் சாட்சிகள் அதிக கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். அவர்களுடைய வேலை ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. பின்னர், 1949-ல் 13 மிஷனரிகள் வேலையை மறுபடியும் ஒழுங்கமைப்பதற்கு உதவி செய்ய வந்து சேர்ந்தனர். அந்த ஊழிய ஆண்டில் ஜப்பான் முழுவதிலும் குறைந்தபட்சம் பத்து உள்ளூர் பிரஸ்தாபிகள் வெளி ஊழிய அறிக்கை செய்தனர். ஆனால் ஏப்ரல் 1992-ல் பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை 1,67,370 ஆக உயர்ந்தது.
[பக்கம் 21-ன் பெட்டி]
கிறிஸ்தவமண்டலமும் மொழி பிரச்னையும்
கிறிஸ்தவமண்டல மிஷனரிகளில் சிலர் ஓர் அயல்நாட்டு மொழியை கற்றுக்கொள்வதற்கு ஊக்கமாக முயற்சி செய்தனர். ஆனால் அநேகர் தங்கள் ஐரோப்பிய மொழியை உள்ளூர் ஜனங்கள் பேசவேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஜியாஃபிரி மூர்ஹவுஸ் என்பவர் மிஷனரிகள் (The Missionaries) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு விளக்குகிறார்:
“அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வது வேதவசனங்களை மொழிபெயர்ப்பதற்கு என உணரப்பட்டதே பிரச்னையாக உள்ளது. அந்நிய தேசத்தவரோடு புரிந்துகொள்ளும் விதத்தில் சரளமாக ஒரு மிஷனரி பேசக் கற்றுக்கொள்ளும்படி தனிப்பட்ட மிஷனரிகளோ, அவர்களை அனுப்பிய சங்கங்களோ முயற்சி அதிகம் செய்யவில்லை. ஒவ்வொரு மிஷனரியும் அந்நிய மொழியில் ஒரு சில பதங்களைக் கற்றுக்கொள்வார் . . . அதற்கு மேற்பட்ட பேச்செல்லாம் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளின் மூலம் நகைப்புக்கு இடமளிக்கும் விதத்தில் சரளமாக சொல்லப்பட்டது. உள்நாட்டில் வாழும் ஆப்பிரிக்கர் ஆங்கில மிஷனரியின் முறைகளுக்கு தன்னை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதுவும் உயர்ந்த இனத்தவராக கருதிக்கொண்டவர்களின் உணர்ச்சியின் வெளிக்காட்டு.”
லண்டனில் இருக்கும் கீழைநாடுகள் மற்றும் கல்வி பள்ளி 1922-ல் மொழி பிரச்னையின்பேரில் ஓர் அறிக்கையை பிரசுரித்தது. “உள்ளூர் மொழியில் மிஷனரிகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் . . . வருந்தத்தக்க விதத்திலும் மேலும் ஆபத்தான விதத்திலும் மோசமாக இருக்கிறது என்பது எங்களுடைய கருத்து.”
உவாட்ச் டவர் சங்கத்தின் மிஷனரிகள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று என்று எப்போதும் கருதி வந்திருக்கின்றனர்.